உள்ளடக்கத்துக்குச் செல்

வாசிங்டன், டி. சி.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலம்பியா மாவட்டம்
கொலம்பியா மாவட்டம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கொலம்பியா மாவட்டம்
சின்னம்
அடைபெயர்(கள்): டிசி"
குறிக்கோளுரை: Justitia Omnibus (எல்லோருக்கும் நீதி)
வாசிங்டன் டிசி அமைவிடம்., மேரிலாந்துக்கும் வர்ஜீனியாவுக்கும் பக்கம்
வாசிங்டன் டிசி அமைவிடம்., மேரிலாந்துக்கும் வர்ஜீனியாவுக்கும் பக்கம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
கூட்டாட்சி மாவட்டம்கொலம்பியா மாவட்டம்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஏட்ரியன் ஃபென்ட்டி (D)
 • டி.சி. அவைதலைவர்: வின்சென்ட் சி. கிரே (D)
பரப்பளவு
 • நகரம்177.0 km2 (68.3 sq mi)
 • நிலம்159.0 km2 (61.4 sq mi)
 • நீர்18.0 km2 (6.9 sq mi)
ஏற்றம்
0–125 m (0–410 ft)
மக்கள்தொகை
 (2008)[1][2]
 • நகரம்5,88,292
 • அடர்த்தி3,481/km2 (9,015/sq mi)
 • பெருநகர்
5.30 மில்லியன்
நேர வலயம்ஒசநே-5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (EDT)
இணையதளம்http://www.dc.gov/

வாசிங்டன், டி. சி. (வாஷிங்டன் டி. சி; Washington, D.C.), முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் (Washington, District of Columbia) ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப்பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. அமெரிக்காவில் பல நகரங்கள் வாசிங்டன் என பெயரிடப்பட்டுள்ளதால் இதனைக் குறிக்க இந்த நகரத்தின் முந்தைய பெயரான கொலம்பியா மாவட்டம் (District Of Columbia) என்பதன் சுருக்க வடிவமாக (DC - டிசி) என்ற ஒட்டுடன் அறியப்படுகிறது. ஜார்ஜ் வாசிங்டன் அவர்களே இந்நகருக்கான நிலத்தை தேர்வு செய்தார்.

வாசிங்டன் டி.சி பொட்டாமக் நதியின் கரையில் அமைந்துள்ளது. வர்ஜீனியா & மேரிலாந்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிலங்களைக் கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது. எனினும் 1847 ல் பொட்டாமக் நதிக்கு தென்புறம் உள்ள வெர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வெர்ஜீனியா மீளப் பெற்றுக்கொண்டது. அவை ஆர்லிங்டன் கவுண்டி & அலெக்சாண்டரியா நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள வாசிங்டன் டி.சி மெரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. மேற்கில் வெர்ஜீனியா & கிழக்கு, தெற்கு, வடக்கில் மெரிலாந்து மாநிலம் எல்லையாக உள்ளது.

உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS) போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தலைமையிடங்கள் இங்கு உள்ளன.

வரலாறு

17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வரத்தொடங்கிய காலத்தில், தற்கால வாசிங்டனில் உள்ள அனகாஸ்தியா ஆற்றைச் சூழவுள்ள பகுதிகளில் அல்காங்குயிய இனத்தைச் சேர்ந்த நாகாட்ச்டாங் என அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர்[3]. ஆனாலும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அங்கு வாழ்ந்த பெரும்பாலான தாயக அமெரிக்க மக்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்[4]. 1751 ஆம் ஆண்டில் பொட்டோமாக் ஆற்றின் வடக்குக் கரையில் மேரிலாந்து மாகாணத்தினால் ஜார்ஜ்டவுன் நகரம் அமைக்கப்பட்டது. இந் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின் புதிதாக அமைக்கப்பட்ட நடுவண் அரசப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டது[5]. வர்ஜீனியாவின் அலெக்சாந்திரியா நகரமும் 1749 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[6]

1788 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வெளியான "ஃபெடரலிஸ்ட் எண்.43" என்னும் கட்டுரையில், நடுவண் அரசுக்குரிய பகுதியொன்றின் தேவை பற்றி ஜேம்ஸ் மடிசன் விளக்கினார். நடுவண் அரசைப் பேணுவதற்கும், அதன் பாதுகாப்புக்கும் தேசியத் தலை நகரம் மாநிலங்களிலிருந்து தனித்து இருக்கவேண்டும் என அவர் வாதிட்டார்[7]. 1783 ஆம் ஆண்டில் கோபமடைந்த போர்வீரர்களின் குழுவொன்று பிலடெல்பியாவில் இருந்த காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தியமை, நடுவண் அரசு தனது பாதுகாப்பைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டியது[8]. இதனால், நடுவண் அரசுக்குரிய தலைநகரப் பகுதியொன்றை நிறுவுவதற்கான அதிகாரம், ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 1 பிரிவு 8 இன் கீழ் வழங்கப்பட்டது. தொடர்புள்ள மாநிலங்களினதும், காங்கிரசினதும் சம்மதத்துடன் உருவாக்கப்படும் 10 மைல் சதுர அளவுக்கு மேற்படாத ஒரு பகுதி ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இருப்பிடமாக இருக்கும் என அது கூறுகிறது[9]. எனினும், புதிய தலைநகரத்தின் அமைவிடம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 1790 இன் இணக்கம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட ஏற்பாடு ஒன்றின்படி மடிசன், அலெக்சாண்டர் ஹமில்ட்டன், தாமஸ் ஜெபர்சன் ஆகியோர், புதிய தேசியத் தலைநகரம் தென்பகுதியில் அமைய வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில், போர்ச் செலவுகளை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

1800ல் இடம்பெற்ற வாசிங்டன் எரிப்புக்கு முன் ஐக்கிய அமெரிக்கத் தலைமையிடக் கட்டிடத்தின் தோற்றம்.

1790 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நடுவண் அரசுக்கான அமைவிடத்தைத் தெரிவு செய்வது தொடர்பான சட்டமூலம் ஒன்றின்படி, புதிய நிரந்தரமான தலைநகரமொன்றை போட்டோமாக் ஆற்றுப் பகுதியில் அமைப்பதெனவும், சரியான இடம் சனாதிபதி வாசிங்டனால் தெரிவுசெய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டபடி தொடக்கத்தில் தலைநகரப் பகுதி, ஒரு பக்கம் 10 மைல் நீளம் கொண்ட சதுர வடிவினதாக இருந்தது. 1791 - 92 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆண்ட்ரூ எல்லிகொட் என்பவரும் அவரது உதவியாளர்களும் மேரிலாந்து, வர்ஜீனியா என்பவற்றை உள்ளடக்கித் தலைநகரப் பகுதிக்கான இடத்தை அளந்து எல்லை குறித்தனர். இவர்கள் எல்லையில் ஒரு மைலுக்கு ஒன்றாக எல்லைக் கற்களை நட்டனர். இவற்றில் பல இன்றும் காணப்படுகின்றன[10]. புதிய நகரம் போட்டோமாக்கின் வட கரையில், ஏற்கெனவே இருந்த குடியேற்றமான ஜார்ஜ்டவுனுக்குக் கிழக்கே அமைக்கப்பட்டது. 1791 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் நாள் தலைநகரத்துக்கு, ஜார்ஜ் வாசிங்டனுக்கு மதிப்பளிப்பதற்காக அவரது பெயர் இடப்பட்டது. தலைநகரப் பகுதிக்கு கொலம்பியா என்ற பெயர் கொடுக்கப்பட்டது. புதிய தலைநகரில் அமெரிக்க காங்கிரசின் முதல் அமர்வு 1800 நவம்பர் 17 ஆம் நாள் இடம்பெற்றது[11].

1801 ஆம் ஆண்டின் சட்டமூலம் ஒன்றின்படி, வாசிங்டன், ஜார்ஜ்டவுன், அலெக்சாந்திரியா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய தலைநகரப் பகுதி முழுவதும் காங்கிரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நகரங்களுக்குள் அடக்கப்படாத தலைநகரப் பகுதியின் எஞ்சிய பகுதி இரண்டு கவுண்டிகளாக ஒழுங்கமைக்கப்பட்டன. போட்டோமாக் ஆற்றின் வட கரைப் பகுதிகள் வாசிங்டன் கவுண்டியாகவும், அவ்வாற்றின் தென்கரைப் பகுதிகள் அலெக்சாந்திரியா கவுண்டியாகவும் அமைந்தன[12].

1865ல் சனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட ஃபோர்ட் அரங்கு.

தற்போது டொரோண்டோ எனப்படும் அப்போதைய யோர்க் நகரம் எரிக்கப்பட்டதற்கு எதிர் நடவடிக்கையாக 1814 ஆகஸ்ட் 24-25 ஆம் தேதிகளில், பிரித்தானியப் படைகள், வாசிங்டன் எரிப்பு என அழைக்கபட்ட படையெடுப்பு மூலம் தலைநகரத்தைக் கைப்பற்றி எரித்தன. வெள்ளை மாளிகை உட்பட்ட பல அரசாங்கக் கட்டிடங்கள் எரிந்து அழிந்தன.[13] பெரும்பாலான அரச கட்டிடங்கள் உடனடியாகவே திருத்தப்பட்டன. எனினும் அப்போது கட்டட வேலைபாடுகளில் இருந்த காங்கிரசு கட்டடம் 1868 வரை கட்டி முடிக்கப்படாமல் இருந்தது [14].

1830களில் செசப்பீக் ஓஹியோ கால்வாயை அண்டி, உள்நாட்டில் அமைந்திருந்த ஜார்ஜ்டவுன் துறைமுகத்தினால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாகத் தென்பகுதி கவுண்டியான அலெக்சாந்திரியா கவுண்டி பொருளாதார வீழ்ச்சி கண்டது. அக்காலத்தில் அலெக்சாந்திரியா அமெரிக்க அடிமை வணிகத்துக்கான முக்கிய சந்தையாக இருந்தது, ஆனால் அடிமைமுறை ஒழிப்புக்காக வாதிடுபவர்கள் நாட்டின் தலைநகரில் அடிமைமுறையை ஒழித்துவிட முயல்வதாக வதந்திகள் உலாவின. லாபமீட்டிவந்த அடிமை வணிகம் நிறுத்தப்படுவதைத் தடுப்பதைப் பகுதி நோக்கமாகக் கொண்டு அலெக்சாந்திரியாவை வர்ஜீனியாவுக்கு மீண்டும் அளிக்குமாறு கோரி பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 1846 ஜூலை 9 ஆம் தேதி போட்டோமாக் ஆற்றுக்குத் தெற்கேயிருந்த தலைநகரப் பகுதி முழுவதையும் வர்ஜீனியா மாநிலத்துக்கே திருப்பிக் கொடுப்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகரப் பகுதியில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது. எனினும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லை[15].

1861 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கும்வரை வாசிங்டன் ஒரு சிறிய நகரமாகவே இருந்தது. போர் காரணமாக நடுவண் அரசு விரிவு பெற்றபோது நகரின் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்தது. அத்துடன் விடுதலையான அடிமைகளும் பெருமளவில் நகருக்குள் வந்தனர். 1870 ஆம் ஆண்டளவில், தலைநகரப் பகுதியின் மக்கள்தொகை சுமார் 132,000 ஐ எட்டியது[16] . நகரம் விரிவடைந்தபோதும், அழுக்கான தெருக்களும், அடிப்படை நலவியல் வசதிகள் இன்மையும் நகரில் இருந்தன. நிலைமை படுமோசமாக இருந்ததால் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைநகரை வேறிடத்துக்கு மாற்றும் எண்ணத்தையும் முன்வைத்தனர்[17].

1963 ஆம் ஆண்டின் வேலைக்கும் சுதந்திரத்துக்குமான நடைப் பயணத்தின் போது மக்கள் லிங்கன் நினைவகத் தெறிப்புத் தடாகத்தைச் சூழ்ந்திருக்கும் காட்சி.

1871ல் நிறைவேற்றிய சட்டமூலம் ஒன்றின்மூலம் தலைநகரப் பகுதி முழுவதற்குமான அரசு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது. இச் சட்ட மூலம், வாசிங்டன் நகரம், ஜார்ஜ்டவுண், வாசிங்டன் கவுண்டி என்பவற்றை உள்ளடக்கி ஒரு மாநகர சபையை ஏற்படுத்தியது. இது அதிகாரபூர்வமாகக் கொலம்பியா மாவட்டம் என அழைக்கப்பட்டது[18] . 1871 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாசிங்டன் என்னும் பெயர் சட்டப்படி இல்லாது போய்விட்டாலும், இப் பெயர் தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்ததுடன், முழு நகரமுமே வாசிங்டன் டி. சி. என அழைக்கப்பட்டது. 1871 ஆம் ஆண்டின் சட்டமூலத்தின் உதவியுடன், பொது வேலைகள் சபை ஒன்றை நிறுவி அதனிடம், நகரை நவீனமயப்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைத்தது[19]. 1873 ஆம் ஆண்டில் சனாதிபதி கிராண்ட் மேற்படி சபையின் செல்வாக்கு மிக்க உறுப்பினரான அலெக்சாண்டர் ஷெப்பேர்ட் என்பரைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஆளுனராகத் தெரிவு செய்தார். அந்த ஆண்டில் ஷெப்பேர்ட் 20 மில்லியன் டாலர்களைப் பொது வேலைகளுக்காகச் செலவு செய்தார். இது வாசிங்டனை நவீனமயப் படுத்தினாலும் அதனை பொருளாதார முறிவு நிலைக்குத் தள்ளியது. 1874ல் ஆளுனர் பதவி ஒழிக்கப்பட்டு நகரம் காங்கிரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் மக்மிலான் திட்டம் (McMillan Plan) நடைமுறைக்கு வரும்வரை வரை நகரைப் புதுப்பிக்கும் வேறெந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

1930ல் பெரும் பொருளாதாரத் தொய்வு ஏற்படும் வரை இம் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் நிலையாக இருந்தது. 1933 - 1936 காலத்தில் அதிபர் பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் நடைமுறைக்குக் கொண்டுவந்த பல பொருளாதாரத் திட்டங்களால் வாசிங்டனில் அதிகார அமைப்பு விரிவடைந்தது. இரண்டாம் உலகப் போர் அரசின் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கியது[20]. இவற்றினால் 1950 ஆம் ஆண்டளவில் நடுவண் அரசின் அலுவலர்களின் எண்ணிக்கை தலைநகரில் பெருமளவு அதிகரித்தது. மாவட்டத்தின் மக்கள்தொகை 802,178 ஆனது[21].

1968 ஏப்ரல் 4 ஆம் தேதி மக்கள் உரிமைத் தலைவரான இளைய மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. இவ் வன்முறை மூன்று நாட்களுக்கு நீடித்தது. பல வணிக நிறுவனங்களும், கட்டிடங்களும் எரிக்கப்பட்டன. இவற்றுட் பல 1990கள் வரை திருத்தப்படாமல் அழிபாடுகளாகவே இருந்தன[22].

1973 ஆம் ஆண்டில் காங்கிரஸ், கொலம்பியா மாவட்ட உள்ளாட்சிச் சட்டமூலம் என்னும் சட்டமூலத்தை நிறைவேற்றியது. இதன்படி இம்மாவட்டத்துக்கு ஒரு தெரிவு செய்யப்பட்ட மேயர் பதவி ஏற்பட்டதுடன் ஒரு நகர அவையும் அமைக்கப்பட்டது[23]. 1975 ஆம் ஆண்டில் வால்ட்டர் வாசிங்டன் என்பவர் நகரின் முதல் மேயராகவும், முதல் கறுப்பு இன மேயராகவும் ஆனார்[24]. எனினும், தொடர்ந்து வந்த நகராட்சி நிர்வாகங்களில் மேலாண்மைக் குறைபாடுகளும், வீண் செலவுகளும் மிகுந்திருந்ததாகக் குறை காணப்பட்டது. 1995ல், கொலம்பியா மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டுச் சபையை நிறுவிய காங்கிரஸ் மாநகராட்சியின் செலவுகளை மேற்பார்வையிடவும், நகரை மறுசீரமைக்கவும் வழி செய்தது[25]. 2001 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் தனது நிதி தொடர்பான கட்டுப்பாட்டை மீளவும் பெற்றதுடன் மேற்பார்வைச் சபையின் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன[26].

புவிஅமைவு

இதன் மொத்த பரப்பளவு 68.3 சதுர மைல்கள் (177 கிமீ2) இதில் 61.4 சதுர மைல்கள் நிலத்திலும் 6.9 சதுர மைல்கள் நீரிலும் அமைந்துள்ளது [27]. தற்போதய வாசிங்டன் டி.சி மேரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. 1847 ல் பொட்டாமக் ஆற்றுக்கு தென்புறம் உள்ள வர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வர்ஜீனியா மீளப்பெற்றுக்கொண்டது. தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு பகுதிகள் மேரிலாந்து மாநிலத்தாலும் தென்மேற்கு பகுதி வர்ஜீனியா மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. வாசிங்டன் மூன்று இயற்கையாக அமைந்த நீர்வழிகளை கொண்டுள்ளது. அவை பொட்டமாக் ஆறு, அதன் கிளைகளான அனகோச்டிகா ஆறு மற்றும் ராக் கிரீக் என அழைக்கப்படும் ராக் சிறுகுடாவும் ஆகும் [28][29].

பலரும் நினைப்பது போல் இந்நகரம் சதுப்புநிலத்தை மீளப்பெற்று கட்டப்பட்டதல்ல [30]. ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு இடைபட்ட பகுதி ஈரநிலமாக இருந்தபோதிலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களும் மரங்கள் அடர்ந்த மலைப்பகுதிகளும் ஆகும்[31]. கடல் மட்டத்தில் இருந்து 409 அடி (125 மீ) உயரத்திலுள்ள "பாய்ண்ட் ரேனோ" கொலம்பியா மாவட்டத்தின் (வாசிங்டன் டி சி) உயரமான பகுதியாகும். இது "டென்லேடவுன்" பகுதியிலுள்ள "போர்ட் ரேனோ" பூங்காவுக்கு அருகில் உள்ளது[32] . தாழ்வான பகுதி கடல் மட்ட அளவுள்ள பொட்டாமக் ஆறு ஆகும். வாசிங்டன் நகரின் புவிமையம் 4வது மற்றும் L தெருக்களின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது[32] .

தோராயமாக 19.4% வாசிங்டன், டி. சி யின் நிலம் புல்தரைக்காடு ஆகும். அதிக மக்கள் அடர்த்தி உடைய நகரங்களில் நியுயார்க் நகரம் இதே அளவு விழுக்காடு புல்தரைக்காடு கொண்டதாகும்.[33] ஐக்கிய மாநில தேசிய பூங்கா சேவையமைப்பு வாசிங்டன், டி. சி யின் பெரும்பாலான இயற்கை இருப்பிடங்களை கவனித்துக்கொள்கிறது. ராக் கிரீக் பூங்கா, செசபிக் மற்றும் ஒகியோ கால்வாய் தேசிய வரலாற்று பூங்கா, தியோடர் ரூச்வெல்ட் தீவு, அனகோச்டியா பூங்கா, நேசனல் மால் ஆகியவையும் அவற்றில் அடங்கும். பொட்டாமக் ஆற்றில் வாசிங்டன் நகரின் வடமேற்கில் கிரேட் அருவி உள்ளது. 19ம் நூற்றாண்டில் சார்ச் டவுனில் தொடங்கும் செசபிக் மற்றும் ஒகியோ கால்வாய் அருவியை தவிர்த்து படகு போக்குவரத்து நடைபெற பயன்பட்டது.

காலநிலை

வாசிங்டன், டி. சி ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும். வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமான வெப்பத்தையும் குறைந்த ஈரப்பதமும் கொண்டவை. குளிர் காலத்தில் வெப்பநிலையானது குறைவாக நீடித்து இருக்கும். ஆண்டு சராசரி பனிப்பொழிவு 16.6 அங்குலம் ஆகும். டிசம்பர் நடுவிலிருந்து பிப்ரவரி நடு வரை சராசரி குளிர் கால குறைந்த வெப்பநிலை 30 °F (-1 °C) ஆகும். நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பனிப்புயலானது வாசிங்டன் பகுதியை தாக்கும். கடும் மழை நார்ஈச்டர் என்று அழைக்கப்படும். இது பெருங்காற்று, பெரும்மழை மற்றும் அவ்வப்போது பனிப்பொழிவும் கொண்டது. இந்த கடும்மழையானது அமெரிக்காவின் பெரும்பாலான கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கும். கோடை காலத்தில் மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இருக்கும். சூலை ஆகஸ்ட் மாதங்களில் இதன் வெப்பம் சராசரியாக 80 °F அளவில் இருக்கும். மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இணைவதால் இங்கு அடிக்கடி இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யும். இந்த இடிமுழக்கம் சில நேரங்களில் சூறாவளியை இப்பகுதியில் உருவாக்கும். எப்பொழுதாவது புயல் இப்பகுதியை கடக்கும். எனினும் வாசிங்டன் கடற்கரையை ஒட்டி இல்லாமல் உள் இருப்பதால் புயல் வாசிங்டனை அடையும் முன்னர் வலு இழந்து விடும். எனினும் பொட்டாமக் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சொத்துகளுக்கு சேதாரம் விளைவித்துவிடும், குறிப்பாக ஜார்ஜ்டவுன் பகுதி அதிகமாக பாதிக்கப்படும் [34].

அதிகபட்ச வெப்பமானது 106 °F (41 °C), இது சூலை 20, 1930 & ஆகஸ்ட் 6, 1918 இல் பதிவு செய்யப்பட்டது. குறைந்தபட்ச வெப்பமானது −15 °F (−26.1 °C), இது பிப்ரவரி 11, 1899 ல் பதிவு செய்யப்பட்டது. ஓர்ஆண்டில் சராசரியாக 36.7 நாட்கள் வெப்பம் 90 °F (32 °C) யை விட அதிகமாகவும், 64.4 இரவுகள் வெப்பம் உறைநிலையை (32 °F (0 °C)) விட குறைவாகவும் இருக்கும்.

 வாசிங்டன், டி. சி.  - தட்பவெப்பச் சராசரி
மாதம்ஜனபெப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவடிசஆண்டு
உயர் பதிவு °F (°C)79
(26)
84
(29)
93
(34)
95
(35)
99
(37)
102
(39)
106
(41)
106
(41)
104
(40)
96
(36)
86
(30)
79
(26)
106
(41)
உயர் சராசரி °F (°C)42
(6)
47
(8)
56
(13)
66
(19)
75
(24)
84
(29)
88
(31)
86
(30)
79
(26)
68
(20)
57
(14)
47
(8)
66
(19)
தாழ் சராசரி °F (°C)27
(-3)
30
(-1)
37
(3)
46
(8)
56
(13)
65
(18)
70
(21)
69
(21)
62
(17)
50
(10)
40
(4)
32
(0)
49
(9)
தாழ் பதிவு °F (°C)-14
(-26)
-15
(-26)
4
(-16)
15
(-9)
33
(1)
43
(6)
52
(11)
49
(9)
36
(2)
26
(-3)
11
(-12)
-13
(-25)
−15
(−26)
மழைவீழ்ச்சி inches (mm)3.2
(81.3)
2.6
(66)
3.6
(91.4)
2.8
(71.1)
3.8
(96.5)
3.1
(78.7)
3.6
(91.4)
3.4
(86.4)
3.8
(96.5)
3.2
(81.3)
3.0
(76.2)
3.0
(76.2)
39.1
(993.1)
மூலம்: The Weather Channel[35] {{{accessdate}}}

நகரஅமைப்பு

வாசிங்டன், டி. சி திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகராகும். பிரெஞ்காரரும் கட்டடக்கலை நிபுணரும், பொறியாளரும் நகரவடிவமைப்பாளருமான சார்லஸ் எல்ஃபேன்ட் (Charles L’Enfant) வாசிங்டன் நகர வடிவமைப்பில் பெரும்பாங்காற்றியவர். அமெரிக்க புரட்சியின் போது இங்கு இராணுவ பொறியாளராக மேஜர் செனரல் லெஃபாயட்டெ (Lafayette) உடன் வந்தார். 1971 ல் அதிபர் வாசிங்டன் புதிய தலைநகருக்கான திட்ட வரைபடம் உருவாக்குமாறு எல்ஃபேன்ட் அவர்களை நியமித்தார். இவர் பரோகியு பாணியில் மாதிரியை அமைத்தார். அதன்படி அகன்ற சாலைகள் வட்டம் மற்றும் செவ்வக பகுதியில் இருந்து பிரிந்து செல்லும்[36].[37]. திட்டமிடுதலில் அணுக்க நிருவாக முறையை எல்ஃபேன்ட் வலியுறுத்தியதால், வாசிங்டன் அவரை இப்பொறுப்பிலிருந்து மார்ச், 1972 ல் நீக்கினார். எல்ஃபேன்டுடன் பணியாற்றிய ஆண்ரூ எலிகாட் என்பவரை இத்திட்டத்தை முடிக்க நியமித்தார். மூல திட்டத்திலிருந்து சிலவற்றை எலிகாட் மாற்றினாலும் வாசிங்டன் நகர வடிவமைப்புக்கான பெருமை எல்ஃபேன்ட் அவர்களையே சாரும் [38]. வாசிங்டன் நகரமானது தற்போதய புளோரிடா நிழற்சாலையை வடக்கிலும், ராக் கிரீக்கை மேற்கிலும் அனகோச்டிகா ஆற்றை கிழக்கிலும் எல்லைகளாக கொண்டிருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செனட்டர் ஜேம்சு மெக்மில்லன் தலைமையில் கூட்டு ஆணையம் வாசிங்டன் நகரை அழகுபடுத்த அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி சேரிகள் அப்புறப்படுத்தப்பட்டன, புதிய நடுவண் அரசு கட்டடங்களும், நினைவுச்சின்னங்களும் கட்டப்பட்டன, நகர பூங்கா அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக பணி அமர்த்தப்பட்ட வல்லுனர்கள் நகரின் மூல வரைபடத்தில் எந்த மாறுதலும் செய்யவில்லை. இவர்கள் லஃபாண்ட் அவர்களின் வடிவமைப்பை முழுமை செய்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

எல்பாண்டின் வரைபடம்

1899 ஆம் ஆண்டு 12மாடிகள் கொண்ட கெய்ரோ குடியிறுப்பு வளாகம் கட்டப்பட்ட பின் நகரின் எந்த கட்டடமும் காங்கிரசு கூடும் கேபிடல் கட்டடத்தை விட உயரமாக இருக்கக்கூடாது என்று சட்டமியற்றப்பட்டது. 1910-ல் இந்த சட்டம் கட்டடங்களின் உயரம் அடுத்துள்ள தெருக்களின் அகலத்தைவிட 20 அடி கூடுதலாக இருக்கலாம் என மாற்றப்பட்டது.[39] இதனால் இன்றும் வாசிங்டன் நினைவகமே உயரமானதாக உள்ளது. இந்த உயர கட்டுப்பாடில் இருந்து தப்பிக்க உயரமான கட்டடங்கள் விர்ஜீனியாவில் ரோசலின் பகுதியில் கட்டப்படுகின்றன.

நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்ட டிசியின் வரைபடம்

வாசிங்டன் டிசி சமமற்ற நான்கு பாகங்களாக (கால்வட்டம்) பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.இந்த கால்வட்டத்தின் எல்லைகள் அமெரிக்க கேபிடல் கட்டடத்தை அச்சாக கொண்டு தொடங்குகின்றன [40] . அனைத்து சாலைகளும் கால்வட்டத்தின் சுருக்க குறியீட்டை கொண்டுள்ளதால் அவற்றின் இருப்பிடத்தை தெளிவாக அறியலாம். நகரின் பெரும்பகுதி தெருக்கள் கம்பிவலை ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு-மேற்கு தெருக்கள் எழுத்துக்களாலும் (எகா: ஐ தெரு வகி), வடக்கு-தெற்கு தெருக்கள் எண்களாலும் (எகா: 4வது தெரு தெமே) குறிப்பிடப்படுகின்றன. போக்குவரத்து வட்டங்களில் இருந்து தொடங்கும் நிழற்சாலைகளுக்கு மாநிலங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 50மாநிலங்கள், போர்ட்ட ரிகோ பெயர்களும் நிழற்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.பென்சில்வேனியா நிழற்சாலை வெள்ளை மாளிகை, அமெரிக்க கேபிடல், கே தெரு போன்றவற்றை இணைக்கிறது. கே தெருவில் பல ஆதரவு திரட்டும் குழுக்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. வாசிங்டனில் 174வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. அவற்றில் 59 மாசேசூசெட்டசு நிழற்சாலையில் உள்ளன.

கட்டடக்கலை

மக்கள் தொகை

Historical Populations[d]
ஆண்டுமக்கள்தொகைமாற்றம்
18008,144-
181015,47190.0%
182023,33650.8%
183030,26129.7%
184033,74511.5%
185051,68753.2%
186075,08045.3%
1870131,70075.4%
1880177,62434.9%
1890230,39229.7%
1900278,71821.0%
1910331,06918.8%
1920437,57132.2%
1930486,86911.3%
1940663,09136.2%
1950802,17821.0%
1960763,956-4.8%
1970756,510-1.0%
1980638,333-15.6%
1990606,900-4.9%
2000572,059-5.7%
2008591,833[1]3.5%

2008ல் கொலம்பியா மாவட்டத்தில் 591,833 மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கணித்துள்ளது. வேலை நாட்களில் புறநகர்களில் இருந்து இங்கு பயணப்படுபவர்களின் எண்ணிக்கையால் மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 71.8% அதிகரித்திருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். பகல் வேலைகளில் இதன் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்கள்[41]. அருகிலுள்ள மேரிலாந்து, வர்ஜீனியா கவுண்டிகளை இணைத்த வாசிங்டன் பெருநகர பகுதியின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும், இது ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது பெரியதாகும்.

2007ல் மக்கள்தொகையில் 55.6% கறுப்பு இன மக்களும், 36.3% வெள்ளை இன மக்களும், 8.3% எசுப்பானிய (எல்லா இனமும்) மக்களும், 5% மற்றவர்களும் (அமெரிக்க பூர்வகுடிகள், அலாசுக்கா மக்கள், அவாய் மக்கள், பசிபிக் தீவு மக்கள் இதில் அடங்குவர்) 3.1% ஆசிய இன மக்களும், 1.6% கலப்பு இன மக்களும் வாழ்வதாக கணக்கிடப்பட்டனர். இங்கு 74,000 மக்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களாக கணிக்கப்பட்டுள்ளார்கள் [42].

வாசிங்டன் நகரின் உருவாக்கம் முதலே இங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வசித்து வருகிறார்கள். தனித்துவமாக மற்ற நகரங்களை விட இங்கு அதிக அளவு விழுக்காடு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். பின் சீராக கறுப்பு இன மக்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது இதற்கு முதன்மையான காரணம் பலர் வாசிங்டனின் புறநகரங்களில் குடியேறியது [43]. மேலும் பல வயதான மக்கள் குடும்பத் தொடர்பு மற்றும் குறைவான வீட்டுவிலை காரணமாக தென் மாநிலங்களுக்கு குடிபெயர்ந்ததும் ஆகும் [44]. அதேவேளை வெள்ளை இன மக்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது [43]. ஏழை கறுப்பின மக்களின் வெளியேற்றமும் அந்த பகுதிகளில் குடியேறிய வசதி படைத்த வெள்ளை இன மக்களின் எண்ணிக்கையும் இதற்கு காரணமாகும். 2000லிருந்து 7.3% குறைந்த கறுப்பினத்தவரின் தொகையும் 17.8% கூடிய வெள்ளை இனத்தவரின் தொகையும் இதற்கு சான்றாகும்.

2000ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 33,000 வயது வந்தோர் ஓரின சேர்க்கை உள்ளோர் என தெரிவித்துள்ளனர். இது நகரின் வயது வந்தோர் தொகையில் 8.1% ஆகும். ஒரினச்சேர்க்கை உடையோர் அதிகமிருந்தாலும் இங்கு ஒரினச்சேர்க்கை மணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதில்லை. 2000ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பாதிக்கு மேற்பட்டவர்கள் கிறுத்துவ சமயத்தை பின்பற்றுகிறார்கள். 21% கத்தோலிக பிரிவையும் 9.1% அமெரிக்க பாப்டிசுட் பிரிவையும் 6.8% தென் பாப்டிசுட் பிரிவையும், 1.3% கிழக்கு பழமைவாத பிரிவையும் 13% மக்கள் மற்ற பிரிவுகளையும் பின்பற்றுகின்றனர். 10.3% மக்கள் இசுலாத்தையும் 4.5% மக்கள் யூத மதத்தையும் 26.8% மக்கள் மற்ற மதங்களை பின்பற்றுவோராகவும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாதவார்களாகவும் உள்ளனர்.

குற்றம்

வன்முறை குற்றங்கள் மலிந்து இருந்த 1990ம் ஆண்டுகளில் வாசிங்டன் டிசி ஐக்கிய அமெரிக்காவின் கொலைக்குற்றங்களின் தலைநகரம் என அழைக்கப்பட்டது [45] . உச்சமாக 1991ல் 482 கொலைக்குற்றங்கள் நடந்தது. 1990களின் பின் பகுதியில் இவை வெகுவாக குறைந்தன. 2006ல் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 169ஆக குறைந்தது [46]. 1995லிருந்து 2007வரையான காலகட்டத்தில் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை 47% ஆக குறைந்தது. இதே காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் 48% குறைந்தது.[47][48]

மற்ற பெரிய நகரங்களை போல குற்றங்கள் போதை மருந்து மற்றும் போக்கிரி குழுக்கள் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் இடம்பெற்றன. வசதியுள்ளவர்கள் வாழும் வடமேற்கு வாசிங்டன் பகுதியில் குற்றங்கள் குறைவாக இடம்பெற்றன. ஆனால் கிழக்கே போக போக குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகியது. ஒரு காலத்தில் வன்முறைக்குற்றங்கள் மலிந்திருந்த கொலம்பியா ஹைட்ஸ் , டூபாண்ட் சர்க்கிள் போன்ற பகுதிகளில் வசதிமிக்கவர்கள் குடியேறியதால் அப்பகுதி பாதுகாப்பானதாகவும் பரபரப்பானதாகவும் மாறியது. இதன் காரணமாக வாசிங்டன் டிசி நகரின் குற்றங்கள் மேலும் கிழக்கே மேரிலாந்தின் பிரின்ஸ் வில்லியம் கவுண்டி பக்கமாக நகர்ந்தன.[49]

2006 ஜூன் 26 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கொலம்பியா மாவட்டத்துக்கும் கேளருக்கும் நடந்த வழக்கில் நகரின் 1976 கைத்துப்பாக்கி மீதான தடை துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை தொடர்பான 2 ஆவது சட்டதிருத்துக்கு எதிரானது என தீர்ப்பாகியது[50] . இருந்த போதிலும் அத்தீர்ப்பு எல்லா வகையான துப்பாக்கி கட்டுப்பாடுகளையும் தடை செய்யவில்லை [51].

பொருளாதாரம்

வாசிங்டன் டிசி வளரும் பன்முக தன்மை கொண்ட பொருளாதாரத்தை கொண்டது.[52] 2008ல் இதன் மொத்த உற்பத்தி 97.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் . 50 அமெரிக்க மாநிலங்களை ஒப்பிடும் போது இதன் நிலை 35 வது ஆகும் [53]. 2008ல் வாசிங்டன் டிசியின் வேலைவாய்ப்புகளில் அமெரிக்க நடுவண் அரசினுடையது 27% ஆகும் [54]. பொருளாதார பின்னடைவு காலங்களில் நடுவன் அரசு இயங்கும் என்பதால் தேசிய பொருளாதார சரிவு வாசிங்டன் டிசியை தாக்காது என்று நம்பப்பட்டது [55]. எனினும் 2007ல் கணக்கின் படி அமெரிக்க அரசு பணியாளர்களில், நடுவன் அரசின் 14% மட்டுமே இங்கு வசிக்கின்றார்கள் [56]. சட்ட நிறுவனங்கள், படைத்துறை மற்றும் பொதுத்துறை ஒப்பந்ததாரர்கள், லாபநோக்கில்லா அமைப்புகள், தொழிற் சங்கங்கள், தொழில் சார் வணிக குழுக்கள், அரசின் ஆதரவு பெற்று தரும் நிறுவனங்கள் போன்றவற்றின் தலைமையகங்கள் நடுவன் அரசுக்கு அருகாமையில் வாசிங்டன் டிசி மற்றும் அதன் சுற்றுபுறங்களில் அமைந்துள்ளன.[57].

ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் நுழைவு வாயில்

நிதி, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி போன்ற அரசாங்கத்துடன் நேரடி தொடர்பில்லாத தொழில்களும் இங்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஹோவர்ட் பல்கலைக்கழகம், வாசிங்டன் மருத்துவமனை மையம், ஃவேன்னி மே ஆகியவை அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கும் 5 நிறுவனங்களாகும் [58].

2006ல் வாசிங்டன் டிசி மக்களின் தனி நபர் ஆண்டு வருமானம் $55,755 அமெரிக்க டாலராகும், இது மற்ற 50 மாநிலங்களையும் விட அதிகமாகும் [59]. எனினும் 2005 ஆண்டு 19% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர், இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். மிசிசிப்பி மாநிலத்தில் மட்டுமே வாசிங்டன் டிசியை விட அதிக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இது நகர மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றதாழ்வை காட்டுகிறது[60].

பண்பாடு

தேசிய மால் என்பது நகரின் மையத்தில் அமைந்த பரந்த திறந்த வெளி பூங்காவாகும். மாலின் மையத்தில் வாசிங்டன் நினைவகம் அமைந்துள்ளது. மேலும் இதில் லிங்கன் நினைவகம், தேசிய இரண்டாம் உலகப்போர் நினைவகம், கொரிய போர் வீரர்கள் நினைவகம், வியட்னாம் வீரர்கள் நினைவகம், ஆல்பரட் ஐன்சுட்டின் நினைவகம் ஆகியவை அமைந்துள்ளன[61]. தேசிய பெட்டகத்தில் அமெரிக்க வரவாற்றை சார்ந்த ஆயிரக்கனக்கான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. விடுதலை சாற்றுதல், ஐக்கிய மாநிலங்கள் அரசியலமைப்பு, தனி நபர் உரிமை போன்ற பல புகழ்பெற்ற ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன[62].

மாலுக்கு தென் புறத்தில் டைடல் பேசின் அமைந்துள்ளது. டைடல் பேசினின் கரையை ஒட்டி யப்பான் நாடு அன்பளிப்பாக வழங்கிய செர்ரி மரங்கள் நடப்பட்டுள்ளன. பிராங்களின் ரூசுவெல்ட் நினைவகம், ஜெப்பர்சன் நினைவகம், கொலம்பியா மாவட்ட போர் நினைவகம் ஆகியவை டைடல் பேசினை சுற்றி அமைந்துள்ளன[63].

சுமித்சோனியன் நிறுவனம் கல்வி சார் நிறுவனமாக காங்கிரசால் 1849 தோற்றுவிக்கப்பட்டது. இது இந்நகரின் பெரும்பாலான அரசாங்க அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் நிர்வகிக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இந்நிறுவனத்துக்கு பகுதியளவு நிதியுதவி அளிப்பதால் இதன் அருங்காட்சியகங்கள் நுழைவு கட்டணம் இல்லாமல் பார்வையாளர்களை அனுமதிக்கின்றன[64] . தேசிய மாலை சுற்றி அமைந்துள்ள சுமித்சோனியன் அருங்காட்சியகங்கள்:- தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்; ஆப்பிரிக்க கலைகளுக்கான தேசிய அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க இந்தியன் அருங்காட்சியகம்; சாக்லர் பிரீர் காட்சியகம் கிரோசிமா அருங்காட்சியகம்; சிற்ப தோட்டம்; கலை மற்றும் தொழிலக கட்டடம்; தில்லான் ரிப்ளே மையம்; சுமித்சோனியனின் தலைமையகமாக செயல்படும் அரண்மனை என்றழைக்கப்படும் சுமித்சோனியன் நிறுவன கட்டடம்[65]

அமெரிக்க இந்தியர் அருங்காட்சியகம்

முன்பு தேசிய அமெரிக்க கலை அருங்காட்சியகம் என அறியப்பட்ட சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. , டோனல்ட் டபள்யு ரேநால்ட் மையம் வாசிங்டனின் சீனாடவுனுக்கு அருகில் அமைந்துள்ளது[66]. ரேநால்ட் மையம் பழைய காப்புரிமை அலுவலக கட்டடம் என்றும் அறியப்படுகிறது[67] . ரென்விக் காட்சியகம் சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகத்தின் பகுதியாக இருந்தபோதிலும் இது வெள்ளை மாளிகையை ஒட்டிய தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது. மற்ற சுமித்சோனியன் அருங்காட்சியகம் மற்றும் காட்சியகங்கள்: தென்கிழக்கு வாசிங்டனிலுள்ள அனகோச்டியா சமூக அருங்காட்சியகம், ; யூனியன் ஸ்டேசனிலுள்ள தேசிய அஞ்சலக அருங்காட்சியகம்; வுட்லி பார்க்கிலுள்ள தேசிய மிருக்காட்சி சாலை.தேசிய கலை காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் நவீன கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய கலை காட்சியகத்தின் கிழக்கு கட்டடம்

தேசிய கலை காட்சியகம் காப்பிடலுக்கு அருகிலுள்ள தேசிய மாலில் அமைந்துள்ளது, ஆனால் இது சுமித்சோனியன் நிறுவனத்துக்கு உட்பட்டதல்ல. இது அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்கத்துக்கு உரியது, அதனால் இதற்கும் நுழைவு கட்டணம் இல்லை. இக்காட்சியகத்தின் மேற்கு கட்டடத்தில் 19ம் நூற்றாண்டை சார்ந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன [68]. சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை தேசிய கலை காட்சியகம் என பலர் தவறாக கருதுகிறார்கள். தேசிய கலை காட்சியகம் சுமித்சோனியன் நிருவாகத்தின் கீழ் வருவததில்லை ஆனால் மற்ற இரண்டும் சுமித்சோனியன் நிறுவனத்தை சார்ந்தவை. ஜூடிசியர் சொகயர் அருகில் பழைய ஓய்வூதிய கட்டடத்தில் தேசிய கட்டட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. காங்கிரசால் இது தனியார் நிறுவனமாக பட்டயம் அளிக்கப்பட்டுள்ளது.

பல தனியார் கலை அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளன.தேசிய பெண்களின் கலை அருங்காட்சியகம்; கோர்கோரன் கலை காட்சியகம் இதுவே வாசிங்டன் பெரிய தனியார்அருங்காட்சியகம் ஆகும். டூபான்ட் சர்க்கலில் உள்ள பிலிப்பசு கலெக்சன், இது ஐக்கிய மாநிலங்களில் அமைந்த முதல் நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். வாசிங்டனில் மேலும் பல தனியார் அருங்காட்சியகங்கள் உள்ளன அவை நியுசியம், பன்னாட்டு வேவு அருங்காட்சியகம், தேசிய புவி சமூக அருங்காட்சியகம் மற்றும் மரியன் கோச்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம். ஐக்கிய மாநிலங்கள் ஹோலோகோஸ்ட் நினைவு அருங்காட்சியகம் தேசிய மாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஹோலோகோஸ்ட் தொடர்பான காட்சிகள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன [69].

ஊடகங்கள்

வாசிங்டன் டி சி உள்நாட்டு, பன்னாட்டு ஊடகங்களுக்கு முக்கியமான மையம் ஆகும். 1877ல் தி வாசிங்டன் போஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது.இதுவே பழைய மற்றும் வாசிங்டன் வட்டாரத்தில் அதிகம் வாசிக்கப்படும் உள்ளூர் செய்தித்தாளாகும் [70][71]. உள்நாட்டு, பன்னாட்டு அரசியல் செய்திகளை வெளியிட்டு அலசுவதில் இச்செய்தித்தாள் குறிப்பிடத்தக்கது. வாட்டர் கேட் இழிவை வெளிக்கொணர்ந்ததில் சிறப்பாக அறியப்பட்டது [72]. தி போஸ்ட் என அறியப்படும் இந்நாளிதழ் கொலம்பியா மாவட்டம், மேரிலாந்து & வர்ஜீனியா ஆகியவற்றுக்கு தனியான (மொத்தம் மூன்று) அச்சு பதிப்புகளை வெளியிடுகிறது. தனி தேசிய பதிப்புகள் இல்லாத போதும் 2008 செப்டம்பர் எடுக்கப்பட்ட கணக்கின் படி இந்நாளிதழ் நாட்டின் செய்தி இதழ் விற்பனையில் ஆறாவது இடத்தில் உள்ளது[73]. யுஎஸ்ஏ டுடே என்ற நாளிதழே அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் நாளிதழாகும். இதன் தலைமையகம் வாசிங்டனுக்கு அருகில் வர்ஜீனியாவில் மெக்லின் என்ற இடத்தில் உள்ளது [74].

தி வாசிங்டன் போஸ்ட் நிறுவனம் தி எக்சுபிரசு என்ற இலவச பயணிகள் செய்தித்தாளை வெளியிடுகிறது. இதில் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை சுருக்கமாக வெளியிடப்படுகின்றன. மேலும் எசுப்பானிய மொழி நாளிதழ் எல் டிம்போ லாட்டினோ என்பதையும் வெளியிடுகிறது. மற்றொரு உள்ளூர் நாளிதழான தி வாசிங்டன் டைம்சு, வாரமிரு முறை இதழான வாசிங்டன் சிட்டி பேப்பர் ஆகியவற்றுக்கு வாசிங்டன் பகுதியில் கணிசமான வாசகர்கள் உண்டு [75][76] . வாசிங்டன் பிளேடு, மெட்ரோ வீக்லி, வாசிங்டன் இன்பார்மர், வாசிங்டன் ஆப்ரோ அமெரிக்கன் ஆகியவை மற்ற சில இதழ்களாகும். தி ஹில் மற்றும் ரோல் கால் ஆகிய நாளிதழ்கள் காங்கிரசு மற்றும் நடுவண் அரசாங்கம் குறித்த செய்திகளுக்கு சிறப்புத்துவம் கொடுத்து வெளிவருகின்றன.

நேசனல் பப்ளிக் ரேடியோ தலைமையகம்

வாசிங்டன் பெருநகர பகுதியானது 2 மில்லியன் வீடுகளுடன் நாட்டின் ஒன்பதாவது பெரிய தொலைக்காட்சி ஊடக சந்தையாக உள்ளது [77]. சி-செபான் (C-SPAN), பிளாக் எண்டர்டெய்ன்மென்ட் டெலிவிசன் (BET); தி நேசனல் ஜியோகிராபிக் சானல், சுமித்சோனியன் நெட்வொர்க், டிராவல் சானல் (செவிசேசு, மேரிலாந்து); டிஸ்கவரி கம்யூனிகேசன்சு (சில்வர் ஸ்பிரிங், மேரிலாந்து) பப்ளிக் பிராட்காஸ்டிங் சர்வீசு (PBS) (ஆர்லிங்டன், வர்ஜீனியா) ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன. நேசனல் பப்ளிக் ரேடியோ (NPR), எக்ஸ்எம் சாட்டிலைட் ரேடியோ, அமெரிக்க அரசின் பன்னாட்டு வானொலி சேவையான வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஆகிய வானொலி நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன

விளையாட்டு

ஐந்து தொழில்முறை ஆடவர் அணிகள் வாசிங்டன் டி சியில் உள்ளன. கூடைபந்தாட்ட அணி வாசிங்டன் விசார்ட்ஸ் மற்றும் பனி வளைதடிப் பந்தாட்ட அணி வாசிங்டன் காபிடல்ஸ் ஆகிய இரண்டும் உள்ளூர் போட்டிகளை சைனா டவுனிலுள்ள வெரிசான் மையத்தில் விளையாடுகின்றன. புகழ்பெற்ற கூடைபந்தாட்ட வீரர் மைக்கல் ஜார்டன் வாசிங்டன் விசார்ட்ஸின் சிறிய பங்குதாரராகவும் அதன் தலைவராகவும் இருந்தார். அடிபந்தாட்ட அணி வாசிங்டன் நேசனல்ஸ் உள்ளூர் போட்டிகளை தென்கிழக்கு டிசியில் புதிதாக கட்டப்பட்ட நேசனல்ஸ் பார்க் என்ற இடத்தில் விளையாடுகிறது. கால்பந்தாட்ட அணி டிசி யுனைட்டட் உள்ளூர் போட்டிகளை ஆர்எப்கே திடலில் விளையாடுகிறது. அமெரிக்கக் காற்பந்தாட்ட அணி வாசிங்டன் ரெட்ஸ்கின்ஸ் உள்ளூர் போட்டிகளை வஃடக்ஸ் களத்தில்(லாண்ட்ஓவர், மேரிலாந்து) விளையாடுகிறது. இந்த அணி மூன்று முறை சூப்பர் போல் எனப்படும் கோப்பையை கைப்பற்றியுள்ளது [78].

வெரிசான் மையம்

மேலும் இங்கு இரண்டு தொழில் முறை பெண்கள் அணிகளும் உள்ளன. கூடைபந்தாட்ட அணி வாசிங்டன் மிஸ்டிக்ஸ் (WNBA) உள்ளூர் போட்டிகளை வெரிசான் மையத்திலும்; கால்பந்தாட்ட அணி வாசிங்டன் பிரீடம் உள்ளூர் போட்டிகளை ஜெர்மான்டவுன் (மேரிலாந்து) மற்றும் ஆர்எப்கே திடலிலும் விளையாடுகின்றன[79].

அரசாங்கம்

ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின் விதி ஒன்று பத்தி எட்டின்படி வாசிங்டன் டி சி மீதான உறுதியான முடிவான அதிகாரத்தை காங்கிரசிற்கு வழங்குகிறது. 1973 ஹோம் ரூல் சட்டம் நிறைவேற்றப்படும் வரை கொலம்பியா மாவட்டத்துக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நகர மன்றம் கிடையாது. அச்சட்டம் காங்கிரசின் சில அதிகாரங்களை உள்ளூர் அரசுக்கு வழங்குகிறது. உள்ளூர் அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர தந்தை மற்றும் 13உறுப்பினர்களை கொண்ட நகர் மன்றத்தால் நிருவகிக்கப்படுகிறது. எனினும், காங்கிரசு நகர்மன்றம் இயற்றும் சட்டங்களை மறு ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் அவற்றை நீக்கக்கூடிய அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது[80]. ஐக்கிய அமெரிக்க சட்டமன்றமே கொலம்பியா மாவட்டம் (வாசிங்டன் டிசி) தொடர்புடைய நிகழ்வுகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டது.

நகர தந்தை & நகர்மன்றம் அமைந்துள்ள வில்சன் கட்டடம்

நகர தந்தையும் நகர் மன்றமும் வரவு செலவு திட்டத்தை முடிவு செய்வார்கள் ஆனால் அது காங்கிரசால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். உள்ளூர் வருமானம், விற்பனை & சொத்து வரி 67% வருமானத்தை நகரஅரசாங்கத்துக்கு அளிக்கிறது. மற்ற 50மாநிலங்களைப்போலவே டிசிக்கும் நடுவண் அரசு பண உதவி செய்கிறது, அது இந்நகரின் வருவாயில் 26விழுக்காடு ஆகும். பாதுகாப்பு செலவினங்களை ஈடுகட்டுவதற்காக காங்கிரசு டிசி நகர அரசாங்கத்துக்கு பண உதவு செய்கிறது. 2007ல் பெறப்பட்ட தொகை $38 மில்லியன் ஆகும், அது நகர வரவு செலவு திட்டத்தில் 0.5% ஆகும் [81]. வாசிங்டனின் நீதித்துறையை நடுவண் அரசாங்கம் நிர்வகிக்கிறது[82]. நடுவண் அரசின் அனைத்து சட்டத்தை நிலைநிறுத்தும் அமைப்புகளுக்கும் இந்நகரத்தில் அதிகாரம் உண்டு, அவை நகரின் பாதுகாப்புக்கு உதவிசெய்கின்றன [83]. உள்ளூர் குற்றங்களின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்க அரசின் கொலம்பியா மாவட்ட வழக்குரைஞர் கவனிப்பார்[84].

காங்கிரசில் வாக்குரிமை

கொலம்பியா மாவட்ட குடிமக்களுக்கு அமெரிக்க காங்கிரசில் வாக்களிக்கும் உறுப்பினர் கிடையாது. கொலம்பியா மாவட்ட மக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர் காங்கிரசில் இருந்தாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. அவர் செயற்குழுக்களில் உறுப்பினராக கலந்து கொள்ளலாம், விவாதங்களில் கலந்துகொள்ளலாம், புதிய சட்ட வரைவுகளை அறிமுகப்படுத்தலாம், ஆனால் காங்கிரசின் அவையில் வாக்களிக்கமுடியாது. வாசிங்டன் டிசிக்கு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை எனப்படும் செனட்டிலும் உறுப்பினர் கிடையாது. அமெரிக்க ஆட்சிக்குட்பட்ட புவேர்ட்டோ ரிக்கோ, குவாம் ஆகியவற்றிற்கும் வாக்கு உரிமை இல்லாத காங்கிரசு உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் அப்பகுதிகளை போல் அல்லாமல் வாசிங்டன் டிசி மக்கள் நடுவண் அரசின் எல்லா வரிகளுக்கும் உட்பட்டவர்கள்[85]. 2007 நிதி ஆண்டில் வாசிங்டன் டிசி மக்கள் மற்றும் தொழில்கள் செலுத்திய நடுவண் அரசின் வரி $20.4 பில்லியன் ஆகும்.; இது 19 மாநிலங்களில் வசுலிக்கப்பட்ட வரியை விட அதிகமாகும்[86].

ஐக்கிய மாநிலங்களின் காங்கிரசு கட்டடம்

2005ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின்படி 78% அமெரிக்கர்களுக்கு வாசிங்டன் டிசி மக்களின் உறுப்பினருக்கு காங்கிரசில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது தெரியவில்லை[87]. இதைப்பற்றிய விழிப்புணர்வு உருவாக்க பரப்புரைகளை அடிமட்ட இயக்கங்கள் செயல்படுத்தின. இதன் ஒரு பகுதியாக வாசிங்டன் டிசியின் வாகன பதிவு பலகையில் "Taxation Without Representation" என்பதை அதிகாரபூர்வமற்ற குறிக்கோளுரையாக குறிப்பிடுகிறார்கள்[88] .

வாகன பதிவு பலகையிலுள்ள குறிக்கோளுரை

பல்வேறு கருத்து கணிப்புகள் 61 - 82% மக்கள் வாசிங்டன் டிசி க்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்[87][89]. மக்கள் ஆதரவு இருந்த போதிலும் வாசிங்டன் டிசிக்கு காங்கிரசில் வாக்குடன் உறுப்பினர், மாநில உரிமை போன்றவை இதுவரை வெற்றி பெறவில்லை.

வாசிங்டன் டிசி-க்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் கூடாது என்போர் நாட்டின் ஆரம்பகால தலைவர்கள் வாசிங்டன் டிசி மக்களுக்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் வேண்டும் என்பதை கருதவில்லை என்றும் அத்தகைய உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தே வரவேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார்கள். இந்நகருக்கு மாநில தரம் தரக்கூடாது என்போர் அது நாட்டிற்கு தனி தலைநகரம் என்ற கருத்தாக்கத்தை அழித்துவிடும் என்றும் மேலும் மாநில தரம் தருவது நியாயமற்ற முறையில் ஒரு நகரத்துக்கு மேலவையான செனட்டில் உறுப்பினர் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள் [90].

கல்வி & உடல்நலம்

ஜியார்ஜ் டவுன் விசிட்டேசன் பிரிபரேடரி மகளிர் உயர் நிலைப் பள்ளி 1799ல் தொடங்கப்பட்டது.

விசிட்டேசன் பள்ளி
விசிட்டேசன் பள்ளி

கொலம்பியா மாவட்ட பொது பள்ளிகள் (DCPS) என்ற அமைப்பு நகரின் அரசு சார்ந்த பள்ளிளை இயக்குகிறது. 167 பள்ளிகள் மற்றும் கற்கும் மையங்கள் இதில் அடங்கும்[91]. 1999ல் இருந்து நகர பொது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீராக குறைந்து கொண்டு வந்துள்ளது. நகர பொது பள்ளிகளை நிர்வகிக்க அதிக செலவு பிடித்தாலும் உள்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வி தரம் போன்றவற்றில் இதன் செயல்திறன் மிகக்குறைவாகும்[92]. நாட்டின் உயர் தர தனியார்பள்ளிகள் பல இங்கு உள்ளன. 2006ல் நகரின் 83 தனியார் பள்ளிகளில் தோராயமாக 18000 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள் [93].

குறிப்பிடத்தக்க பல தனியார் பல்கலைக்கழங்கள் இங்கு உள்ளன. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (GW), ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் (GU), அமெரிக்கன் பல்கலைக்கழகம் (AU), அமெரிக்க கத்தோலிக பல்கலைக்கழகம் CUA), ஹோவார்ட் பல்கலைக்கழகம், கல்லுடெட் (Galludet) பல்கலைக்கழகம் மற்றும் மேம்பட்ட பன்னாட்டு கல்விக்கான தி ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பள்ளி (SAIS) ஆகியவை சில.

இங்கு 16மருத்துவ மையங்களும் மருத்துவமனைகளும் உள்ளன. அதனால் இந்நகரை நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளின் தேசிய மையம் என்றழைக்கப்படுகிறது [94]. நேசனல் இன்ஸ்டிடுயூட் ஆப் ஹெல்த் பெத்தஸ்டாவில்(மேரிலாந்து) அமைந்துள்ளது. வாசிங்டன் மருத்துவமனை மையம் (WHC), இந்நகரின் பெரிய மருத்துவமனை வளாகமாகும். இதுவே இப்பகுதியின் பெரிய தனியார் மற்றும் லாபநோக்கற்ற மருத்துவமனை ஆகும். WHC க்கு அருகில் குழந்தைகளுக்கான தேசிய மருத்துவ மையம் அமைந்துள்ளது. யுஎஸ் நியுஸ் & வேர்ல்ட் அறிக்கையின் படி இது நாட்டிலேயே தலைசிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனையாகும் [95] . நகரின் பல பல்கலைக்கழகங்கள் குறிப்பாக ஜார்ஜ் வாசிங்டன், ஜார்ஜ்டவுன், ஹோவர்ட் ஆகியவை மருத்துவ கல்வி வழங்குவதுடன் மருத்துவமனைகளையும் நிர்வகித்து வருகின்றன. வால்ட்டர் ரீட் இராணுவ மருத்துவ மையம் வடமேற்கு வாசிங்டனில் அமைந்துள்ளது. இங்கு பணியிலுள்ள படையினருக்கும், ஓய்வு பெற்ற படையினருக்கும் அவர்களின் மனைவி&குழந்தைகள் போன்ற சார்ந்துள்ளளோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2009 அறிக்கை ஒன்று இந்நகரில் உள்ள மக்களில் 3% எச்ஐவி அல்லது எய்ட்சு கொண்டுள்ளார்கள் என தெரிவித்தது. சில மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை விட இங்கு எச்.ஐ.வி தாக்கம் அதிகம் என நகர அலுவலர்கள் சிலர் கூறுகிறார்கள் [96].

சுற்றுலா

அருங்காட்சியகம்

புகழ்பெற்ற சுமித்சோனியன் நிறுவனம் இங்குள்ளது. இது லாப நோக்கற்ற அமைப்பு, பல்வேறு அருங்காட்சியகங்களை இவ்வமைப்பு நடத்தி வருகின்றது. இவர்கள் எந்த அருங்காட்சியகத்துக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை.

ஜெர்மனியின் நாஜிக்களால் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விளக்கும் ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகம் இங்கு உள்ளது.

நினைவு மண்டபம்

தலைவர்கள் மற்றும் போர் நடவடிக்கைகளுக்கான நினைவு மண்டபங்கள் இங்கு உள்ளன.

  • அபரகாம் லிங்கன் நினைவகம்
  • தாமஸ் ஜெப்பர்சன் நினைவகம்
  • ஜார்ஜ் மேசன் நினைவகம்
  • பிராங்களின் ரூஸ்வெல்ட் நினைவகம்
  • கொரிய போர் வீரர்களுக்கான நினைவகம்
  • வியட்னாம் போர் வீரர்களுக்கான நினைவகம்
  • இரண்டாம் உலகப்போர் நினைவகம்
  • வாசிங்டன் நினைவு தூண்

போக்குவரத்து

மெட்ரோ ரயில் படம்

அருகில் உள்ள 3 விமான நிலையங்கள் மூலம் வாசிங்டன் பெருநகரத்தை அடையலாம்.

  1. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம். (IATA: DCA, ICAO: KDCA)
  2. வாசிங்டன் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையம். (IATA: IAD, ICAO: KIAD),
  3. பால்டிமோர்-வாசிங்டன் பன்னாட்டு தர்குட் மார்சல் விமான நிலையம். (IATA: BWI, ICAO: KBWI)
ரீகன் தேசிய விமான நிலையத்தின் B & C முனையங்கள்

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் வெர்ஜீனியாவில் பொட்டாமக் ஆற்றின் கரையில் வாசிங்டன் டி.சி எல்லையில் உள்ளது. மெட்ரோ ரயில் மூலம் இங்கு செல்லலாம். உள்நாட்டு விமானங்களே இங்கு அனுமதிக்கப்படுகின்றன. சத்தம் மற்றும் பாதுகாப்பு காரணமாக அதிக அளவு கட்டுப்பாடுகள் இங்குண்டு.

வெர்ஜீனியாவில் உள்ள வாசிங்டன் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையம் வாசிங்டன் டி.சி க்கு வரும் பன்னாட்டு விமானங்களை கையாளுகிறது. இது வாசிங்டன் டி.சி யிலிருந்து 42.3 கி.மீ (26.3 மைல்) தொலைவில் உள்ளது.

மெரிலாந்தில் பால்டிமோர் அருகில் பால்டிமோர்-வாசிங்டன் பன்னாட்டு தர்குட் மார்சல் விமான நிலையம் உள்ளது, இது வாசிங்டன் டி.சி யிலிருந்து 51 கி.மீ (31.7 மைல்) தொலைவில் உள்ளது.

மெட்ரோ சென்டர் நிலையம்

வாசிங்டன் மெட்ரோ பாலிட்டன் ஏரியா டிரான்ஸிட் அதாரிட்டி என்ற அமைப்பு மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ பேருந்துகளை வாசிங்டன் டி.சி மற்றும் சுற்றுப்புற கவுண்டிகளில் இயக்குகிறது. 1976 மார்ச் 27அன்று மெட்ரோரயில் தொடங்கப்பட்டது. தற்போது 86 நிலையங்களையும் 106.3 miles (171.1 km) நீள தடத்தையும் கொண்டுள்ளது. [177] 2009ல் வாரநாட்களில் சராசரியாக ஒரு மில்லியன் பயணங்களை மேற்கொண்டு நியுயார்க்கின் சப்வேவிற்கு அடுத்து நாட்டின் இரண்டாவது சுறுசுறுப்பான ரயில் நிறுவனமாக உள்ளது.[178]. மெட்ரோ ரயில் 4 வண்ணம் (சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, நீலம்) கொண்ட பாதைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்லும் வண்ண பாதை வண்டியில் ஏறிக்கொள்ள வேண்டும். நீங்கள் ஆரஞ்சு பாதையில் இருந்து பச்சை பாதையிலுள்ள இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆரஞ்சு பாதையில் வரும் வண்டியில் ஏறி ஆரஞ்சு & பச்சை பாதைகள் சந்திக்கும் இடத்தில் இறங்கி பச்சை பாதை வண்டியில் ஏற வேண்டும்.

ஆம்டிராக் என்னும் நெடுந்தொலைவு தொடர்வண்டி வாசிங்டன் நகரத்தை நாட்டின் பல பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிங்டன்,_டி._சி.&oldid=3915613" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: Main PageSpecial:SearchWikipedia:Featured picturesYasukeHarrison ButkerRobert FicoBridgertonCleopatraDeaths in 2024Joyce VincentXXXTentacionHank AdamsIt Ends with UsYouTubeNew Caledonia2024 Indian general electionHeeramandiDarren DutchyshenSlovakiaKingdom of the Planet of the ApesAttempted assassination of Robert FicoLawrence WongBaby ReindeerXXX: Return of Xander CageThelma HoustonFuriosa: A Mad Max SagaMegalopolis (film)Richard GaddKepler's SupernovaWicked (musical)Sunil ChhetriXXX (2002 film)Ashley MadisonAnya Taylor-JoyPlanet of the ApesNava MauYoung SheldonPortal:Current eventsX-Men '97