சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள்

கால்நடைகளின் பல்வேறு பயன்பாடு காரணமாக, அவை பற்றிய நம்பிக்கைகள் மதம் மற்றும் சமூகங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. நேபாளம்,இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கால்நடைகளைக் கொல்ல தடை விதித்துள்ளது. அவற்றின் இறைச்சியை உண்ணுதல் பாவச்செயலாகவும் அப்பகுதிகளில் கருதப்படுகிறது.

இந்து மதம், சைன மதம், பௌத்தம் போன்ற மதங்களில் கால்நடைகள் புனிதமாக மதிக்கப்படுகிறது. இவை மட்டுமல்லாது பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம்,பண்டைய இஸ்ரேல், உரோம், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிலவிய ஆதி மதங்களிலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகித்தன.

இந்திய மதங்களில்

கால்நடைகளைக் கொலை செய்வதற்கு எதிரான சட்டம் இந்தியாவில் பல மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.[1]கேரளா, மேற்கு வங்கம், வடகிழக்குப் பகுதிகள் சிலவற்றில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.

இந்து மதம்

பல அறிஞர்கள் இந்து மதத்தில் நிலவும் பசு வழிபாட்டிற்குக் காரணம் பால்,உரமாகவும் எரிபொருளாகவும் பயன்படும் பசுவின் சாணம் மற்றும் விவசாயம் என்பவற்றைக் குறிப்பிடுகின்றனர்.[2] பண்டைய நூல்களான இருக்கு வேதம், புராணங்களில் கால்நடைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன.[2] எனினும் இப் பண்டையப் பசு வழிபாடு ஒரு விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. டி. என். ஷா வின் கூற்றுப்படி மாடு உட்பட எந்த கால்நடைகளும் புனிதமாக பின் நாட்களைப்போல் புராதன இந்தியாவில் கருதப்படவில்லை.[3] "கிரக சூத்திரம்", ஈமச்சடங்குகளின் பின் மாட்டிறைச்சி உண்பதை ஒரு சடங்காகக் குறிப்பிடுகிறது,.[4] ஆனால் அமெரிக்க மானிடவியலாளர் மார்வின் ஹரிஸின் கூற்றுப்படி வேத கால இலக்கியங்கள் முன்னுக்கு பின் முரணான செய்திகளைக் கூறுகிறது. சில நூல்கள் இறைச்சி உண்பதைச் சடங்காக வலியுறுத்தும் அதேசமயம், சில அதை பாவச்செயலாக வலியுறுத்துவதே இதற்குக் காரணம்.[5][6][7] சாந்தோக்கிய உபநிடதத்தில் (கி.மு800) அஹிம்சையை அதாவது உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருப்பதை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதலாம் நூற்றாண்டு நடுப்பகுதியில் இந்து மதம், பௌத்தம், சைனம் ஆகிய மதங்கள் முன் பிறவி மற்றும் மறு பிறவி கர்ம வினையை காரணம் காட்டி அஹிம்சையை வலியுறுத்தின. ஆய்வாளர் ஹாரிசின் கூற்றுப்படி பொ.கா200()ம் ஆண்டு காலப் பகுதிகளில் மிருகங்களைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல் போன்றன மத நம்பிக்கைகளுக்கும் உயிரினங்களுக்கும் எதிரானதாகக் கருதப்பட்டதுடன் அவை தடை செய்யப்பட்டும் இருந்தது.[5][8]

இருக்கு வேதம் பசுக்களை 'அக்ன்யா' அதாவது கொல்லப்படக்கூடாதது எனக் குறிப்பிடுகிறது.[9]

இந்து கடவுள் கிருஷ்ணன் பசுக்களுடன்.
இந்து மதத்தில் கன்று விடியலுடன் ஒப்பிடப்படுகிறது.

வேத காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் கால்நடைகள் மட்டுமல்லாது அனைத்து நான்கு கால் விலங்குகள் மீதும் வன்முறை பிரயோகிப்பதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, பசுவைக் கொல்வது மனிதர்களை, குறிப்பாக பிராமணர்களைக் கொல்வதற்குச் சமம் என வலியுறுத்துவதாக நந்திதா கிருஷ்ணா குறிப்பிடுகிறார்.[10] மேலும் அவர் அதர்வண வேத(~1200-1500 BCE) மந்திரம் 8.3.25, அனைத்து மனிதர்கள், கால் நடைகள், குதிரைகளைக் கொல்வதைக் கண்டிப்பதோடு அவ்வாறு கொலை செய்பவர்களைத் தண்டிக்க அக்னி தேவனிடம் வேண்டுவதாகவும் குறிப்பிடுகிறார்.[11][12]

பல பழங்கால மற்றும் இடைக்கால இந்து நூல்கள் உயினங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலை ஆகியவற்றைத் தடுக்க ஆரம்பப் படியாக பசுக்களைக் கொல்லாமை, புலாலுண்ணாமை அமையும் எனக் குறிப்பிடுகிறது.[13] ஆய்வாளர் ஹாரிஸின் கூற்றுப்படி கோ வழிபாடு முதலாம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் பொ.கா.1000 ஆண்டு காலப்பகுதிகளில் இந்து சமயத்தின் முக்கிய நடைமுறையாகவும் ஆனது.[5] இந்த நடைமுறை அனைத்து உயிர்களிலும் இறைவன் உள்ளான் எனும் இந்து மத நம்பிக்கைக்கு வழிவகுத்தது.[5][8] புலாலுண்ணாமை இந்து மதத்தின் ஒரு கலாச்சாரம். கடவுள் கிருஷ்ணன் மற்றும் அவரது யாதவ நண்பர்கள் பசுக்களோடு இருக்கிறமை புலாலுண்ணாமையை வலுவூட்டுகிறது.[5][8]

ஸ்மிருதிகள் மற்றும் இதர இந்து நூல்களில் குறிப்பிட்டுள்ள அஹிம்சை காரணமாகவே புலாலுண்ணாமை வழக்கத்திற்கு வந்ததாக லுட்விக் அல்ஸ்டோஃப் கூறுகிறார்.[14] என்றாலும் கால் நடைகளுக்கான ஆதரவு எல்லா இடங்களிலும் நிலவவில்லை. கிரிஸ்டோபர் புல்லரின் கூற்றுப்படி சில கிழக்கு பகுதிகளில் மிருகங்களைப் பலியிடும் நிகழ்வும் இடம்பெற்று வந்தது.[14][15] பெரும்பாலான தற்கால இந்துக்களின் பண்பாடாக கால்நடைகளை மதித்தல் மற்றும் கால் நடைகளைப் பாதுகாத்தல் உள்ளதோடு 'புலாலுண்ணாமை இல்லாமல் அகிம்சை இல்லை எனவும் நம்புகிறார்கள் என்று அல்ஸ்டோஃப் கூறுகிறார். .[14]

பசுக்களைக் கொல்வதற்கு எதிரான தடை, முழு சைவ உணவிற்கான முதல் படியாக அக்காலத்தில் கருதப்பட்டது.[16]

புராணங்கள்
பசு வடிவத்திலிருக்கும் பிருத்வியை துரத்தும் பிருது. இப்பசுவின் பாலைக் கொண்டே மனிதர்களுக்குத் தேவையான பயிர்களை விளைவித்தான் பிருது

பசு வடிவத்திலிருந்த பூமாதேவி பிருத்வியின் பாலிலிருந்தே மனிதர்களுக்குப் பயன்படக்கூடிய பொருட்கள் வந்துள்ளது. சக்கரவர்த்தி பிருது இப்பசுவின் பாலைக் கொண்டே மனிதர்களுக்குத் தேவையான பயிர்களை விளைவித்து பஞ்சத்திலிருந்து தேசத்தைக் காத்தான்.[17]

இந்து நம்பிக்கைகளின் படி பசுக்களின் தாயான காமதேனுவின் மூலமே செழிப்பு வருகிறது எனக் கருதப்படுகிறது.[18] 19-ஆம் நூற்றாண்டில், காமதேனுவின் ஒரு வரைபடம் சகல இந்து தெய்வங்களையும் உள்ளடக்கியதாக வரையப்பட்டு இருந்தது.[19][20]

வரலாற்று முக்கியத்துவம்

1893ல் பசுவதைக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு துண்டுபிரசுரம். அசுரனாக வரையப்பட்ட இறைச்சி உண்பவரிடம் ஒருவர் பசுக்களைக் கொல்ல வேண்டாமென்றும் அவையே உலகத்தின் ஆதாரமென்றும் கூறுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்துண்டு பிரசுரத்திலுள்ள அசுரன் தங்களைக் குறிப்பிடுகிறதென அக்காலத்து முஸ்லிம்கள் பிரித்தானிய இந்தியப் பேரரசிடம் முறையிட்டார்கள்.[21] ராஜா ரவி வர்மாவால் மீள வரையப்பட்டது.(சி. 1897).

இந்தப் பசுக்களுக்கு ஆதரவான நிலை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக இந்தியர்கள் 1857ல் முன்னெடுத்த சிப்பாய்க் கிளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியில் சிப்பாய்<களாக இருந்த இந்து மற்றும் முஸ்லிம்கள் தாங்கள் உபயோகிக்கும் வெடி மருந்து சுற்றியுள்ள காகிதத் தோட்டாக்கள் பன்றி மற்றும் பசுவின் கொழுப்பினால் மேற்பூச்சு பூசப்பட்டுள்ளதாக நம்பினர். பன்றியிறைச்சி உண்ணுதல் இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது. சிப்பாய் வீரர்கள் ஒவ்வொரு முறையும் துப்பாக்கியை மீள் நிரப்பும் போதும் இக்காகிதத் தோட்டாக்களின் முனையை கடிக்க வேண்டியிருந்தமை பிரித்தானியர் தங்கள் மத நம்பிக்கைகளை முனைப்பாகவே புண்படுத்துவதாக முஸ்லிம் சிப்பாய்கள் கருதினர்.[22]

1717க்கும் 1977க்குமிடைப்பட்ட காலப்பகுதியில் நடந்த 167 இனவாத கலவரங்களில், 22 கலவரங்கள், பசுவதை காரணமாக நடைபெற்றதென ஒரு கணக்கெடுப்பு.[23][24]

காந்தியின் போதனைகளில்

பசுக்களைப் பாதுகாத்தல் என்பது விலங்குகளின் உரிமைகள், அவற்றை கொல்லாதிருத்தல் ஆகியவற்றின் அடையாளமாக காந்தி நினைத்தார். அவர் பசுக்களை தெய்வமாகக் கருதினார். பசுக்களைக் கொல்லாதிருத்தல் அனைத்து உயிர்களுக்கெதிரான வன்முறைகளைப் தடுப்பதற்கான முதற்படி என அவர் தெரிவித்தார்.[25] மேலும் அவர் நான் பசுக்களை வணங்குகின்றேன். உலகமே எதிர்த்தாலும் அதை கைவிடப்போவதில்லை. பசுவின் பாதுகாப்பே இந்து மதத்தின் உயிர்நாடி என்றும் குறிப்பிட்டார்.[25] ஆனாலும் பசுக்களைக் கொல்வதற்கு எதிரான சட்டத்தை அவர் முன் மொழியவில்லையென அவர் கூறினார்,

"அவர்களாக முன் வராமல் நான் எப்படி பசுவைக் கொல்வதை நிறுத்தக் கட்டாயப்படுத்த முடியும். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர், கிறித்துவர், பார்சிக்கள் போன்ற ஏனைய மதத்தவர்களும் வாழுகிறார்கள்."

சமணம்

சமணம் கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கெதிரான வன்முறையை எதிர்க்கிறது. பிறரில் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுதல், பிறருக்கு தீங்கு விளைவிக்காதல் என மானிட தர்மங்களைச் சமண மதம் போதிக்கிறது.[26][27]

சமண மதத்தில் ஒரு துறவியோ அல்லது அம்மதத்தைப் பின்பற்றுகிறவர்களோ விலங்கு அறுப்பு இடங்களுக்குச் செல்லக் கூடாதெனப் பாரம்பரியம் உள்ளது.[28] சமணர்கள் தாவர உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களே மனிதருக்கு போதுமானதென நம்புகின்றனர். இதன் மூலம் மிருகவதையைத் தடுக்கலாமெனவும் சமணர்கள் கூறுகின்றனர்.[28] சில சமண அறிஞர்கள் கால்நடை அறுப்பு காரணமாக மனித உணவு உற்பத்தி நிலங்கள் குறைவடைவதாகவும், கால்நடை அறுப்பை 50 வீதத்தால் குறைத்தால் உலக பஞ்சத்தைத் தீர்க்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.[29]

பௌத்தம்

அகிம்சை பௌத்ததின் ஐந்து கட்டளைகளில் ஒன்றாகும்.[30] பசுவைக் கொல்லுதல் தடை செய்யப்பட்ட ஒன்றாக மட்டுமல்லாது பசுவைக் காத்தல் சகல உயிர்களையும் காப்பதற்கு சமமென பௌத்தம் கூறுகிறது. கால்நடை மனிதனின் மறுபிறப்பாக பிறவி சுழற்சியில் இடம்பெறுவது சில பௌத்த பிரிவுகளில் விளக்கப்படுகிறது. விலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் நற்கர்மாவாகவும் பதியப்பட்டுள்ளது.[30][31] மகாயான புத்த மதம் விலங்குகளைக் கொல்லுதல், உண்ணுதல் ஆகியவைகளைக் கண்டிப்பதோடு இறைச்சி விற்பனையையும் தடை செய்துள்ளது..[30][30][32] இந்திய புத்த நூல்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை ஆதரிக்கின்றன.[5][8]

கொலையிலிருந்து விலங்குகளை காத்தல் மறுபிறவிக்கு புண்ணியம் சேர்க்குமென பௌத்தம் தெரிவிக்கிறது .[31] ரிச்சர்ட் கொம்ப்ரிச்சின் கூற்றுப்படி பௌத்தம் சைவ உணவை ஆதரித்தாலும் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. மேலும் தேரவாத பௌத்ததில் பொதுவாக மற்ற விலங்கிறைச்சி உண்பதை விட மாட்டிறைச்சி உண்பது மிகவும் பாபகரமான செயல் எனவும் அறிவிக்கிறது.[30]{{refn|The protection of cattle and prevention of cattle slaughter is not limited to Buddhists in India, but found in other Theravada countries such as Sri Lanka, Myanmar and others.[30][33]

இறைச்சி உண்ணுதல் பௌத்தத்தில் ஒரு விவாதப் பொருளாக இருக்கிறது. பெரும்பாலான தேரவாத பௌத்தத்தில் அது ஆதரிக்கப்பட்டாலும் மகாயான பௌத்தம் அதை எதிர்க்கிறது. சில பழைய சூக்தங்கள் புத்தர் இறைச்சி உட்கொண்டதால் புத்த பிக்குகள் இறைச்சி உண்ண தடையில்லையெனக் குறிப்பிடுகின்றன. அவ்விறைச்சியும் கால் நடைகளைத் தவிர்த்து கோழி, மீன், பன்றி என மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.[34]

சொராட்டிரியம்

சொராட்டிரிய மதத்தில் geush urva எனும் சொல்லின் அர்த்தம் பசுவின் உயிர், அது பூமியின் உயிராக மொழிபெயர்க்கப்படுகிறது. அஹுனவைட்டி காதா எனும் நூலில், சோரோவஸ்டர் (அல்லது Zoroaster) பசுக்களை வதைக்கும் தன் சக மதத்தவர்களைச் சாடுகிறார்.[35] அஹூரா மஸ்டா சோரோவஸ்டரிடம் பசுக்களைப் பாதுகாக்குமாறு கட்டளையிடுகிறார் .[35]

யூதம்

யூத விவிலியப்படி ஆரோக்கியமான பசு யூத மத சடங்குகளின் முக்கிய பகுதியாகும். சடலத்தைத் தொட்ட ஒருவரின் தீட்டைப் போக்க கொன்று எரிக்கப்பட்ட பசுவின் சாம்பல் அடங்கிய நீரைத் தெளிப்பது ஒரு சடங்காக இருந்தது. இச்சடங்கு எண்ணாகமம் அத்தியாயம் 19, வசனம் 1-14ல் இடம்பெறுகிறது .[36]

யூதர்கள் ஒவ்வொரு கோடைக்கால ஆரம்பத்திலும் மேற்கூறிய பகுதியை வாசிக்கிறார்கள். இதை அவர்கள் சுகட் என்று அழைக்கின்றனர். யூத கோவில் நிறுவனம் பழங்கால சடங்குகளை உயிர்ப்பிக்க முயல்கிறது.[37] பாரம்பரிய யூதம் மாட்டிறைச்சியை அனுமதிக்கப்பட்ட உணவாக (கோஷர்) கொள்ளுகிறது.,[38][39]

இஸ்லாம்

யூத மதத்தை ஒற்றி இஸ்லாமும் மதச் சடங்குகளின் படி அறுக்கப்பட்ட பசுக்களின் இறைச்சியை அனுமதிக்கிறது.

இஸ்லாமியப் பெருநாளான ஹஜ்ஜு பெருநாளில் மாடு அறுத்தல் ஒரு முக்கியப் பங்கு வகித்தாலும் இந்தியாவை ஆண்ட பல முகலாய மன்னர்கள் தங்கள் ஆட்சியின் கீழ் வாழ்ந்த இந்துக்கள், சமணர்களை மதித்து மாடு அறுத்தல் சடங்கிற்குத் தடை விதித்திருந்தனர்.[40]

குரானின் இரண்டாம் மற்றும் நீண்ட அத்தியாயத்திற்கு 'பசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவ்வத்தியாயத்தின் 286 வசனங்களில் ஏழு பசுவைப் பற்றிக் குறிப்பிடுகிறது.[41][42] மோசேயின் கட்டளை காரணமாக அதாவது அந்நியர் ஒருவரால் கொல்லப்பட்ட உயிரை உயிர்ப்பிக்க பசு ஒன்றைத் தகன காணிக்கையாக்குங்கள் எனும் கட்டளை குரானின் இரண்டாம் அத்தியாயத்தின் பெயர்க்கு வழி வகுத்தது.[43] அப்பத்தியில் இசுரயேலர் எவ்வகையான பசுக்களைத் தகனக் காணிக்கையாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தது .[44]

பண்டைய எகிப்து

பண்டைய எகிப்தில் காளை மாடுகள் வீரத்திற்கும் ஆண்மைக்கும் சின்னமாகக் கருதப்பட்டதோடல்லாமல் உக்கிர தெய்வங்களான மொன்ட்டு மற்றும் மின் உடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சில நகரங்கள் காளை மாடுகளைத் தாவ் எனும் கடவுளின் வெளிப்பாடாகவும் தெய்வீக சக்திகளின் (மினேவிஸ் காளை, புகிஸ் காளை, அபிஸ் காளை) மறு உருவாகவும் கருதப்பட்டதால் காளை மாடுகள் எகிப்தில் ஒரு முக்கிய விலங்காக இருந்துள்ளன. பசு மாடுகள் தாய்மையுடனும் இனப்பெருக்கத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டன. ஒரு எகிப்திய புராணம் மூல நதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பசுக்கடவுளான மெஹெட் விரெட் ஆதியில் சூரியனுடன் உறவாடி குழந்தை பெற்ற தகவலைச் சொல்கிறது. வானம் சில இடங்களில் பசுவின் உருவிலிருக்கும் பெண்கடவுளாக கற்பனை செய்யப்பட்டது.ஆத்தோர், நியுட், நெய்ட் போன்ற பல பெண் தெய்வங்கள் விண்ணுலக பசுவிற்கு நிகர்படுத்தப்பட்டது.[45]

எகிப்தியர் அனைத்து கால்நடைகளையும் நேர் மறையாகக் கருதவில்லை. காட்டு எருதுகள் குழப்பத்தின் சின்னமாக கருதப்பட்டதுடன் அவற்றைக் வேட்டையாடிக் கொல்வதும் நிகழ்ந்தது.[46]

உசாத்துணைகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை