உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து
ஒரு வெள்ளை நிற பின்னணியில் சிவப்புச் சிலுவை
கொடி
குறிக்கோள்: 
நாட்டுப்பண்: 
அமைவிடம்: இங்கிலாந்து  (கரும் பச்சை) – in ஐரோப்பிய கண்டம்  (வெளிர் பச்சை & கரும் பச்சை) – in ஐக்கிய இராச்சியம்  (வெளிர் பச்சை)
அமைவிடம்: இங்கிலாந்து  (கரும் பச்சை)

– in ஐரோப்பிய கண்டம்  (வெளிர் பச்சை & கரும் பச்சை)
– in ஐக்கிய இராச்சியம்  (வெளிர் பச்சை)

தலைநகரம்இலண்டன்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (நடைமுறைப்படி)[nb 1]
பிராந்திய மொழிகள்கோர்னீசு
இனக் குழுகள்
(2011[3])
  • 85.5% வெள்ளையர்
  • 7.7% ஆசியர்
  • 3.4% கருப்பினத்தவர்
  • 2.2% கலப்பினத்தவர்
  • 1.0% பிற
மக்கள்ஆங்கிலேயர்
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சியுடன் கூடிய நிலையான அரசியலமைப்பு உடைய நாடு
மூன்றாம் சார்லசு
இரிசி சுனக்கு நா.உ
சட்டமன்றம்ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை
பரப்பு
• மொத்தம்
130,395 km2 (50,346 sq mi)
மக்கள் தொகை
• 2011 கணக்கெடுப்பு
53,013,000[4]
• அடர்த்தி
407/km2 (1,054.1/sq mi)
மொ.உ.உ. (பெயரளவு)2009 மதிப்பீடு
• மொத்தம்
$2.68 டிரிலியன் (௱௲௱௱௲)
• தலைவிகிதம்
$50,566
நாணயம்பிரித்தானிய பவுண்டு (£) (GBP)
நேர வலயம்ஒ.அ.நே0 (GMT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (BST)
திகதி அமைப்புdd/mm/yyyy (கி. பி)
வாகனம் செலுத்தல்left
அழைப்புக்குறி+44
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGB-ENG
இணையக் குறி.uk[nb 2]

இங்கிலாந்து (England) ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும்.[5][6][7] மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலைத் தென் மேற்கிலும் வடகடலைக் கிழக்கிலும் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது. பெரிய பிரித்தானியாவின் தென், நடுவண் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் சில்லி தீவுகள் போன்ற நூற்றுக்கும் மேலான சிறுசிறு தீவுகளையும் அடக்கி உள்ளது. ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும். இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது.

தற்போது இங்கிலாந்தாக அறியப்படும் பகுதியில் பிந்தைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இருப்பினும் ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இங்கு குடிபுகுந்த செருமானிய பழங்குடிகளில் ஒன்றான ஆங்கில்களைக் கொண்டே இது ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என அறியப்படலாயிற்று. இங்கிலாந்து முற்றிலுமாக கிபி 927இல் ஒன்றிணைக்கப்பட்டது; 15வது நூற்றாண்டிலிருந்து உலகெங்கும் சட்ட, பண்பாட்டு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[8] ஆங்கில மொழி, ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் ஆங்கிலச் சட்டம்—பல நாடுகளில் நடப்பில் இருக்கும் பொதுச் சட்டத்திற்கான சட்ட அடிப்படை—இங்குதான் உருவானது. இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறைமை உலகின் பலநாடுகளின் அரசியலமைப்புக்களில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[9] பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியால் உலகின் முதல் தொழில்மயமான நாடாக விளங்கியது.[10]

இங்கிலாந்தின் புவிப்பரப்பு பெரும்பாலும் சிறு குன்றுகளும் சமவெளிகளாகவும் உள்ளது. இருப்பினும் வடக்கிலும் தென்மேற்கிலும் சில உயரமான மலைப்பகுதிகளைக் காணலாம். இங்கிலாந்தின் முன்னாள் தலைநகரமாக வின்செஸ்டர் இருந்தது; 1066இல் தலைநகர் இலண்டனுக்கு மாற்றப்பட்டது. இன்றைய நாள் இலண்டன் ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கிலாந்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 53 மில்லியனாகும்; இது ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்தொகையில் 84% ஆகும்.

வேல்சு அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக இசுகாட்லாந்துடன் இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது.[11][12] 1801இல், பெரிய பிரித்தானியா அயர்லாந்து இராச்சியத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது. 1922இல், அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம் நிலைபெற்றது.

பெயர்க் காரணம்

இங்கிலாந்து "England" என்ற பெயர் பழைய ஆங்கிலத்தின் இங்கலாந்து (Englaland) என்பதில் இருந்து தோன்றியதாகும். இதற்கு ஆங்கில்களின் நிலம் என்று பொருள் [13]. ஆங்கில்கள் செருமானிய பழங்குடிகள் ஆவார்கள். இவர்கள் வரலாற்றின் இடைக்காலத்தின் போது இங்கு குடியேறினார்கள். ஆங்கில்கள் பால்டிக் கடல் பகுதியில் அமைந்த ஆங்கில் மூவலந்தீவின் இருந்து வந்தவர்கள் [14]. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலியின் படி இங்கிலாந்து என்ற சொல் முதலில் பிரிந்தானிய தீவின் தென் பகுதியை குறிக்க 897 ல் குறிபிடப்பட்டதாக தெரிகிறது.[15]

இங்கிலாந்திற்கு அல்பியன் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு. ஆரம்ப காலத்தில் அல்பியன் என்ற சொல் பிரித்தானிய தீவு முழுவதையும் குறிப்பதாக இருந்தது. கிமு 4ம் நூற்றாண்டில் அரிசுடோடலியன் கார்பசு முதலில் இச்சொல்லை குறித்துள்ளார் [16] . தற்பொழுது அல்பியன் என்பது கவிதைகளில் இங்கிலாந்தை குறிக்க பயன்படுகிறது [17].

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய காலம்

புதிய கற்காலநினைவுச் சின்னம் ஸ்டோன் ஹெஞ்ச்

.

780,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் இங்கிலாந்தில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் மண்டையோடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .[18]. தற்கால மனிதர்கள் கற்காலத்தின் இறுதியில் இங்கு இருந்தாலும் நிலையான குடியிறுப்புகள் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏற்பட்டன .[19][20]. கடைசி பனி யுகத்தின் பின்பு பெரிய உருவமுடைய மாமூத், காட்டெருது (பைசன்) முடியுடைய மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகள் மட்டும் தப்பி இருந்தன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் குறைவாக இருந்த பொழுது இங்கிலாந்து இருக்கும் பெரிய தீவான பிரிட்டனும், அயர்லாந்தும் ஐரோவாசியாவுடன் இணைந்திருந்தது.[21]. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்த பொழுது அயர்லாந்து தனி தீவாகவும் 8000 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தனி தீவாகவும் ஐரோவாசியாவில் இருந்து பிரிந்தன.

இப்பகுதியில் மிகுதியாக செப்பும் வெள்ளீயமும் கிடைத்தது அதைக்கொண்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கலக் காலத்தின் போது ஸ்டோன் ஹெஞ்ச் போன்றவை கட்டப்பட்டன.

இடைக்காலம்

ஐந்தாம் நூற்றாண்டில் "ஆங்கிள்கள்" எனப்படும் ஜெர்மானிக் பழங்குடிகள் தற்போதைய இங்கிலாந்தின் நடு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். இவர்களை ஒத்த சாக்சன்கள் எனப்படும் பிரிதொரு பழங்குடியினர் இங்கிலாந்தின் தென்பகுதியில் குடியேறினர். வரலாற்றின் இந்தக் காலகட்டம் "ஆங்க்லோ-சாக்சன்" காலகட்டம் எனப்படுகிறது. துவக்கத்தில் ஒரு ஒன்றிணைந்த நாடாக இல்லாது பல குறுமன்னர்களால் ஆளப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த காலகட்டத்தில் மெதுவே ஒன்றிணையத் தொடங்கியது.

இந்த ஒன்றிணைவு 937இல் நிறைவடைந்து முதல் இங்கிலாந்து மன்னராக ஏதெல்சுதான் ஆட்சி ஏற்றார். இவரது காலத்தில் டென்மார்க் நாட்டவர் படையெடுத்து கிழக்கிலும் வடக்கிலும் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு உருவாக்கினர். இப்பகுதியில் உள்ள பல ஊர்களும் நகரங்களும் இன்றும் டேனிசு பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. பல சண்டைகளுக்குப் பிறகு வெசெக்சின் மன்னர் ஆல்பிரெட் முழுமையான இங்கிலாந்தை மீண்டும் கையகப்படுத்தி இங்கிலாந்து மன்னரானார். பழைய குறுநாடுகள் எர்ல்கள் (Earldoms) என அழைக்கப்பட்டன. மன்னர் ஆல்பிரெட்டின் மறைவிற்கு பின்னர் டென்மார்க் மன்னர் இங்கிலாந்தை ஆண்டார்.

எட்வர்டு மன்னரின் மறைவிற்கு பின்னர் மீண்டும் வெசக்சின் மன்னர் ஹெரால்டு இங்கிலாந்தின் மன்னரானார். ஆனால் வடக்கு பிரான்சில் நார்மண்டியின் மன்னராக இருந்த வில்லியம் ஹெரால்டு தம்மை மன்னராக்குவதாக உறுதி கொடுத்ததை மீறியதாக அவர்மீது 1066இல் ஹேஸ்டிங்ஸ் சண்டையில் போரிட்டார். இதில் வெற்றி பெற்ற வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். அடுத்த 300 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பிரெஞ்சு பேசும் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. (அரசி, இரண்டாம் எலிசபெத் வில்லியமின் வழிவந்தவராக கருதப்படுகிறார்). 13வது நூற்றாண்டில் இங்கிலாந்து வேல்சு நாட்டை இணைத்துக் கொண்டது. இசுக்காட்லாந்தையும் கைப்பற்ற பல போர்கள் பிரான்சிற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே நிகழ்ந்தவண்ணம் இருந்தன.

இங்கிலாந்து உரோமன் கத்தோலிக்க கிறித்தவத்தை பின்பற்றி வந்தது. இங்கிலாந்திலிருந்த பல ஆயர்களும் திருத்தந்தையின் ஆணைகளைப் பின்பற்றினர். 1500இல் மன்னராக இருந்த ஹென்றி VIII மணமுறிவை வேண்டியபோது அதனை திருத்தந்தை மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னர் சீர்திருத்தத் திருச்சபையாக இங்கிலாந்து திருச்சபையை நிறுவி தமது மணமுறிவை நிறைவேற்றிக் கொண்டார். சீர்திருத்த கிறித்தவமே அலுவல்முறை சமயமாகவும் அறிவித்தார்.அடுத்த 200 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அரசர் (அரசி) உரோமன் கத்தோலிக்கராக இருக்க வேண்டுமா அல்லது சீர்திருத்த கிறித்தவராக இருக்க வேண்டுமா என்ற சண்டை இருந்து வந்தது.

முதலாம் எலிசபெத் ஹென்றியின் இரண்டாம் மகள். இவர் இங்கிலாந்தை 40 ஆண்டுகள் ஆண்டுவந்தார். இவருக்கு மக்கள் இல்லாமையால், இவர் மறைந்தபோது இசுக்காட்லாந்தின் ஜேம்ஸ் (இசுக்காட்லாந்து அரசி மேரியின் மகன்) 1603இல் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரே இருநாடுகளையும் அடங்கிய பகுதியை "பெரிய பிரித்தானியா" எனப் பெயரிட்டார். இவரது காலத்தில் இரு நாடுகளும் தங்களுக்கென தனித்தனி நாடாளுமன்றங்களுடனும் சட்டங்களுடனும் ஒரே மன்னரின் கீழ் தனித்தனி நாடுகளாக இருந்தன.

ஜேம்சின் மகன் சார்லசும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் பிணக்கு கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டன. இதில் இசுக்காட்லாந்தும் அயர்லாந்தும் பங்கேற்றன. நாடாளுமன்றப் படையின் தலைவராக பொறுப்பேற்ற ஆலிவர் கிராம்வெல் அரசப் படைகளை தோற்கடித்தார். 1649ஆம் ஆண்டில் முதலாம் சார்லசு மன்னரின் தலையைக் கொய்து தாம் ஆட்சியாளராக (பாதுகாப்பு பிரபு) அறிவித்துக் கொண்டார். இவரது மறைவின் பின்னர் இவரது மகன் ரிச்சர்டுக்கு ஆட்சி செய்ய திறன் இல்லாதமையால் கொலையுண்ட மன்னர் சார்லசின் மகன் இரண்டாம் சார்லசை இங்கிலாந்து மன்னராக முடிசூட அழைக்கப்பட்டார். 1660இல் இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரை அடுத்து இவரது உடன்பிறப்பு இரண்டாம் ஜேம்ஸ் முடி சூடினார். இவர் உரோமன் கத்தோலிக்கராக இருந்தது மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. நெதர்லாந்தின் குறும்பகுதி ஒன்றின் மன்னராக இருந்த வில்லியம் (மன்னர் ஜேம்சின் மகள் மேரியின் கணவர்) இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். இவர் ஒரு சீர்திருத்த கிறித்தவராக இருந்ததால் மக்கள் இவரை ஆதரித்தனர். இதனால் ஜேம்சு சண்டை எதுவும் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வில்லியத்தையும் மேரியையும் இணையாக அரசர் அரசியாக முடிசூட அழைத்தனர். மேரி இறந்தபிறகு வில்லியம் தனியே ஆண்டுவந்தார். அடுத்த மன்னராக மேரியின் உடன்பிறப்பு ஆன் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் 1707இல் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றாக சட்டப்படி இணைந்தன. இரண்டு நாடாளுமன்றங்களும் இணைந்து இலண்டனில் இருந்த நாடாளுமன்றம் பிரித்தானிய நாடாளுமன்றம் என அழைக்கப்பட்டது.

தற்காலம்

A stone factory stands against a vivid blue sky, its reflection mirrored in the waters below.
மேற்கு யார்க்சையரில் உள்ள சால்டையர் நகரம் தொழிற்புரட்சியின் அடையாளமாகவும் உலக பாரம்பரியக் களமாகவும் விளங்குகிறது.

புதியதாக உருவான பெரிய பிரித்தானிய இராச்சியத்தில் அறிவியலும் பொறியியலும் தழைத்தோங்கியது. இவை பிரித்தானியப் பேரரசை உருவாக்க உதவின. உள்நாட்டில் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் சமூகப்பொருளியல் மாற்றங்களும் பண்பாட்டு சீர்திருத்தங்களும் ஏற்பட்டன. வேளாண்மை, தயாரிப்பு, சுரங்கத்துறை தொழில்மயமாயின. சாலைகள், இருப்புப் பாதைகள், நீர்ப் போக்குவரத்து வசதிகள் கட்டமைக்கப்பட்டன.[22].[23][24] 1825இல் உலகின் முதல் பயணியர் நீராவி உந்து இழுத்த தொடர்வண்டி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[23]

பிரெஞ்சுப் புரட்சியின்போது இங்கிலாந்தில் அமைதி நிலவியது. நெப்போலியப் போர்களின்போது, நெப்போலியன் இங்கிலாந்தின் தென்கிழக்கில் படையெடுக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் இத்திட்டத்தை நிறைவேறவிடாது கடலில் பிரித்தானியக் கடற்படை நெல்சனின் தலைமையிலும் தரையில் வெல்லிங்டன் பிரபுவின் தலைமையிலும் முறியடித்தன. இப்போர்களினால் இசுக்காட்லாந்தியரும் வேல்சு மக்களும் இங்கிலாந்து மக்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து உண்மையான பிரித்தானிய நாட்டுப்பற்று உருவானது; அனைவரும் பிரித்தானியர்களாக தங்களை அடையாளப்படுத்தினர்.[25]

A cuboid granite cenotaph.
இரண்டு உலகப் போர்களிலும் இறந்த பிரித்தானிய ஆயுதப் படையினருக்காக எழுப்பப்பட்டுள்ள நடுகல், த செனடோஃப், வைட்ஹால்

விக்டோரியா அரசியார் காலத்தில் இலண்டன் உலகின் மக்கள்தொகை மிக்க நகரமாக வளர்ச்சியுற்றது; பிரித்தானிய பேரரசுக்குள் வணிகம் செய்வது மதிப்புமிக்கதாக இருந்தது.[26] சட்ட சீர்திருத்தங்களும் அனைவருக்கும் வாக்குரிமையும் உருவாகின.[27] கிழக்கு-நடுவண் ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளால் முதலாம் உலகப் போர் மூண்டது. இபோரில் பல்லாயிரம் பிரித்தானிய போர்வீரர்கள் மடிந்தனர்.[28]|group=nb}} இருபதாண்டுகள் கழித்து மீண்டும் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இந்தப் போரிலும் இங்கிலாந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இப்போர்களைத் தொடர்ந்து பிரித்தானியா தனது குடியேற்றப் பகுதிகளுக்கு விடுதலை வழங்கத் தொடங்கியது.

தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன; ஜெட் உந்துகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானது.[29] தனிநபர் தானுந்து பயன்பாட்டால் நகர அமைப்புக்கள் மாற்றங்களைக் காணத் தொடங்கின. 1948இல் தேசிய நலச் சேவை துவங்கப் பட்டது. இதன்மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிட்சை வழங்கப்படது.[30][31]

இருபதாம் நூற்றாண்டில் பிற பிரித்தானியத் தீவுகளிலிருந்தும் பொதுநலவாய நாடுகளிலிருந்தும், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தும், கணிசமான மக்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர்.[32] 1970களிலிருந்து தயாரிப்புத் தொழிலில் இருந்து விலகி சேவைத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.[33] ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சந்தைக் கொள்கையில் பங்கேற்கிறது. அதிகாரப் பரவல் கொள்கைகளின்படி இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டுள்ளது.[34] இருப்பினும் இங்கிலாந்தும் வேல்சும் ஒரே ஆள்புலமாக விளங்குகிறது.[35] இந்த அதிகாரப் பரவலினால் ஆங்கிலம் சார்ந்த அடையாளமும் நாட்டுப்பற்றும் வலியுறுத்தப்படுகின்றன.[36][37] ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் பெறும் மற்ற நாடுகளுக்கு தனி நாடாளுமன்றம், அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் இங்கிலாந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடி ஆட்சியிலேயே உள்ளது. மற்றவற்றைப் போன்ற உள்நாட்டு அமைப்புகளை உருவாக்கிட ஏற்பட்ட முயற்சிகள் பொது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.[38]

புவியியல்

Blue lake between green hills.
ஏரி மாவட்டத்தில் வாஸ்ட்வாட்டர்

புவியியல்படி இங்கிலாந்து பெரிய பிரித்தானியத் தீவின் மூன்றில் இரண்டு பங்கு மத்திய,தென்பகுதிகளை உள்ளடக்கியது. கடல்கடந்த பகுதிகளாக வைட்டுத் தீவு, சில்லி தீவுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக ஐக்கிய இராச்சியத்தின் மற்ற இரு நாடுகள், வடக்கில் இசுக்காட்லாந்தும் மேற்கில் வேல்சும், அமைந்துள்ளன. பிரித்தானியாவின் வேறெந்த பகுதியைவிட ஐரோப்பாவிற்கு இங்கிலாந்தே அண்மையில் உள்ளது. பிரான்சிலிருந்து 34-கிலோமீட்டர் (21 mi)[39] தொலைவுள்ள கடல்பிரிவால் பிரிக்கப்பட்டுள்ளது; தற்போது இருநாடுகளும் கால்வாய் சுரங்கத்தால் பிணைக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு ஐரிஷ் கடல், வடகடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் கடற்கரைகள் உள்ளன.

தேம்சு, மெர்சி மற்றும் டைன் ஆற்று பொங்குவடித வெள்ளத்தில் முறையே இலண்டன், லிவர்ப்பூல், நியூகாசில் துறைமுகங்கள் அமைந்துள்ளன. 354 கிலோமீட்டர்கள் (220 mi) நீளமுள்ள செவர்ன் ஆறு இங்கிலாந்தில் ஓடுகின்ற மிகநீளமான ஆறாகும்.[40] இந்த ஆறு பிரிஸ்டல் கால்வாயில் சேர்கிறது; இங்குள்ள செவர்ன் போர் பொங்குவடிதல் அலைகள் குறிப்பிடத்தக்கன. இவை 2 மீட்டர்கள் (6.6 அடி) வரை உயரக் கூடியவை.[41] ஆனால், இங்கிலாந்திற்குள்ளேயே ஓடும் மிக நீளமான ஆறாக தேம்சு 346 கிலோமீட்டர்கள் (215 mi) தொலைவு ஓடுகிறது. இங்கிலாந்தில் பல ஏரிகள் உள்ளன; ஏரி மாவட்டத்தில் உள்ள வின்டர்மேர் ஏரி மிகப் பெரியதாகும்.[42]

Green hills with trees in the foreground.
தேவானில் உள்ள டார்ட்மோர் புவிபரப்பு

புவியியல் கூற்றில், "இங்கிலாந்தின் முதுகெலும்பு" என அறியப்படும் பெனைன்சு மலைத்தொடர் நாட்டின் மிகத் தொன்மையான மலைகளாகும்; இவற்றின் துவக்கம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.[43] இவற்றின் புவியியல் கூறுகளாக மணற்கல், சுண்ணக்கல், மற்றும் நிலக்கரி உள்ளன. இத்தொடரில் மூன்று தேசியப் பூங்காக்கள், யார்க்சையர் டேல்சு, நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்கா, பீக் மாவட்டம் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரம் 978 மீட்டர்கள் (3,209 அடி) உயரமுள்ள இசுகாஃபெல் பைக் ஆகும்.[42] இங்கிலாந்திற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே எல்லையாக செவியட் மலைகள் உள்ளன.

பெனைன்சு மலைகளின் தெற்கே ஆங்கில தாழ்நிலங்களில் பசுமையான மலைக்குன்றுகள் உள்ளன. டோவரில் இவை கடலை சந்திக்குமிடத்தில் வெள்ளைநிற செங்குத்துப் பாறைகள் உள்ளன. தென்மேற்குத் தீபகற்பத்தில் உள்ள டார்ட்மோர் மற்றும் எக்சுமோர் தேசியப் பூங்காக்களாகும்.[44]

காலநிலை

இங்கிலாந்தில் கடலோர மிதமான காலநிலை நிலவுகிறது: வெப்பநிலை குளிர்காலத்தில் 0 °Cக்கு கீழே தாழ்ந்து செல்லாமலும் கோடைகாலத்தில் 32 °C (90 °F)க்கு மிகாமலும் உள்ளது.[45] காலநிலை ஈரப் பதத்துடன் அடிக்கடி மாறும் தன்மையுடையதாக உள்ளது.சனவரியும் பெப்ரவரியும் மிகவும் குளிர்ந்த மாதங்களாகவும் சூலை மிகவும் வெப்பமான மாதமாகவும் உள்ளன. மே, சூன்,செப்டம்பர் மற்றும் அக்டோபர் மிதமான காலநிலையுடன் உள்ளன.[45] ஆண்டு முழுவதும் பரவி மழை சமமாக பெய்கிறது.

இங்கிலாந்தின் காலநிலையில் அட்லாண்டிக் பெருங்கடல் அருகாமை, புவியின் வடக்குப் பகுதியில் அமைவு மற்றும் வளைகுடா ஓடையால் கடல் வெப்பமடைதல் ஆகியன தாக்கமேற்படுத்துகின்றன.[45] மழைப்பொழிவு மேற்கில் கூடுதலாக உள்ளது.[45] இதுவரையான மிகக்கூடுதலான வெப்பநிலை ஆகத்து 10, 2003இல் 38.5|°ஆக கென்ட்டில் பதிவாகியுள்ளது;[46] மிகவும் குறைந்த வெப்பநிலை சனவரி 10, 1982இல் 26.1 °Cஆக எட்ஜ்மோன்டில் பதிவாகியுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், இங்கிலாந்து
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)7
(45)
7
(45)
10
(50)
12
(54)
16
(61)
19
(66)
21
(70)
21
(70)
18
(64)
14
(57)
10
(50)
7
(45)
14
(57)
தாழ் சராசரி °C (°F)1
(34)
1
(34)
3
(37)
4
(39)
7
(45)
10
(50)
12
(54)
12
(54)
10
(50)
7
(45)
4
(39)
2
(36)
6
(43)
பொழிவு mm (inches)83
(3.27)
60
(2.36)
64
(2.52)
59
(2.32)
58
(2.28)
62
(2.44)
63
(2.48)
69
(2.72)
70
(2.76)
92
(3.62)
88
(3.46)
87
(3.43)
855
(33.66)
ஆதாரம்: வானிலையியல் அலுவலகம்[47]

அரசமைப்பு

அரசியல்

Photograph of rectangular floodlight building, reflected in water. The building has multiple towers including one at each end. The tower on the right includes an illuminated clock face.
ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை.

ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக உள்ள இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு நாடாளுமன்ற முறைமையும் அரசியலமைப்பின்படியான முடியாட்சியும் அடிப்படையாகக் கொண்டது.[48] வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவையான பொதுமக்கள் அவையில் மொத்தமுள்ள 650 இடங்களில் இங்கிலாந்திற்கு 532 இடங்கள் உள்ளன.[49] ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு இங்கிலாந்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு 55 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.[50]

2010இல் நடந்த பொதுத்தேர்தல்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இங்கிலாந்தில் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருந்தும் மக்கள் அவையில் பெரும்பான்மை பெறாததால் மூன்றாவதாக வந்த லிபரல் டெமக்கிராட்சுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் டேவிட் கேமரன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.[51]

Lines of men wearing large black bearskin hats and red tunics.
பிரித்தானிய அரசரின் அலுவல்முறை வசிப்பிடமான பக்கிங்காம் அரண்மனையில் காவலர் மாற்ற நிகழ்ச்சி.

இங்கிலாந்திற்கான தனி நாடாளுமன்றம் எதுவும் இல்லை; நேரடியாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஆளப்படுகிறது. அதிகாரப் பரவலிற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் மற்ற அங்க நாடுகளுக்கு—இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்து —தங்கள் உள்நாட்டுப் பிரசினைகளுக்கு தீர்வுகாண தனித்தனி சட்டப்பேரவைகள் உள்ளன.இங்கிலாந்தின் பல்வேறு மண்டலங்களுக்கு இத்தகைய அதிகார பரவலை வழங்க முன்மொழியப்பட்ட திட்டம் பொதுவாக்கெடுப்பில் வடகிழக்கு இங்கிலாந்து ஏற்காததால் கைவிடப்பட்டது.[38]

இதனால் இங்கிலாந்தின் உள்நாட்டு பிரச்சினைகளிலும் பிறநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; மாறாக அவர்களுடைய பிரச்சினைகளில் இங்கிலாந்தின் எம்பிக்கள் தலையிட முடியாது. இது மேற்கு லோத்தியன் வினா என குறிக்கப்படுகிறது.[52] குறிப்பாக இங்கிலாந்தில் புற்றுநோய்க்கு இலவச சிகிட்சை, முதியோருக்கு வீட்டுக் கவனிப்பு, பல்கலைக்கழக கட்டண சலுகைகள் போன்றவை இல்லாதநிலையில்[53] ஆங்கில தேசியம் வளர்ந்தோங்கி வருகிறது.[54]

சட்டம்

Ornate grey stone building.
அரச நீதி மன்றங்கள்

பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ள ஆங்கிலச் சட்ட முறைமையே பெரும்பான்மையான பொதுநல வாய நாடுகளிலும் [55]ஐக்கிய அமெரிக்காவிலும் (லூசியானா மட்டும் விலக்கு) நடைமுறையில் உள்ள பொதுச் சட்டத்திற்கு அடிப்படையானது.

இங்கிலாந்திலும் வேல்சிலும் உள்ள நீதிமன்றங்களுக்கு மேல்நிலையில் குடிமையியல் வழக்குகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உள்ளன; குற்றவியல் வழக்குகளுக்கு கிரௌன் நீதிமன்றம் உள்ளது.[56] ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் குடிமையியல், குற்றவியல் இருதரப்பட்ட வழக்குகளுக்கும் இவற்றிற்கெல்லாம் உயரிய நீதிமன்றமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த நீதிமன்றம் 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதற்கு முன்னதாக பிரபுக்கள் அவை இந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தது.[57] உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் கீழுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்; இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அவை ஏற்க வேண்டும்.[58]

1981க்கும் 1995க்கும் இடையே குற்றங்கள் மேலோங்கியபோதும் 1995-2006 பத்தாண்டுகளில் 42% குறைந்துள்ளன.[59] இந்தக் காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பாவில் மிகக் கூடுதலானோர் சிறையில் அடைக்கப்பட்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது.[60]

நிர்வாகம்

இங்கிலாந்தின் நிர்வாக பிரிவுகளின் கட்டமைப்பு

இங்கிலாந்து மத்திய காலத்தில் 39 கௌன்டிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. நகரமயமாக்கலை அடுத்து இவற்றின் பல இன்று சீரமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் இந்த மரபுவழி கௌன்டி பெயர்களை இன்றும் பயன்படுத்துகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்புக்களின்படி நாடு நான்கு நிர்வாக நிலைகளில் அமைந்துள்ளது. முதல்நிலையில் 9 மண்டலங்களாகவும் அடுத்த இரண்டாம் நிலையில் கௌன்டிகளாகவும் மூன்றாம் நிலையில் மாவட்டங்களாகவும் நான்காம் அடிமட்ட நிலையில் கோவிற்பற்றுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நகரமயமாக்கலை ஒட்டி நகர்ப்புற கௌன்டிகள் எனவும் நகர்புறமல்லா கௌன்டிகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் சில கௌன்டிகளில் கௌன்டி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒற்றை ஆள்புலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் நிலப்படம்:
  நகர்ப்புர பரோக்கள்
  இலண்டன் பரோக்கள்
  ஒற்றை ஆள்புலங்கள்
  ஈரடுக்கு நகர்புறமல்லா கௌன்டிகள்

ஆங்கிலத்தில் சிட்டி என்பதற்கும் டௌன் அல்லது டவுன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. சிட்டி என்பது அரசரால் பட்டியலிடப்பட்ட நகரமாகும். வரலாற்றுப்படி இங்கு ஒரு கதீட்ரல் அமைந்திருக்கும். மற்றவை டவுன் ஆகும். காட்டாக, 2000 பேரே உள்ள வேல்சின் செயின்ட்.டேவிட் ஒரு சிட்டி ஆகும்; ஆனால் 135,600 மக்கள் வாழும் இசுடாக்போர்ட் ஒரு டவுன் ஆகும்.

இங்கிலாந்தின் 200,000 மக்கள்தொகை கொண்ட பத்து பெரிய நகர்புற கௌன்டிகளாவன (2001 ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பின்படி):

பொருளாதாரம்

An aerial photograph of the City of London and its surrounding London boroughs.
இலண்டன் நகரம் உலகின் மிகப்பெரும் நிதிய மையமாகும்.[61][62]

சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி £22,907 அளவிலுள்ள இங்கிலாந்தின் பொருளாதாரம் உலகில் மிகப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும்.[63] கலப்புப் பொருளாதாரமாகக் கருதப்பட்டாலும் பல திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. மேம்பட்ட சமூகநல கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளது.[64] அலுவல் நாணயமாக பவுண்டு இசுடெர்லிங் விளங்குகிறது. ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் வரிவீதம் குறைவானதே; 2009இல் தனிநபர் வரிவீதம் £37,400 வருமானம் வரை 20%ஆகவும் இதற்கு கூடிய வருமானத்திற்கு 40% ஆகவும் உள்ளது.[65]

ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு இங்கிலாந்திற்கு உள்ளது.[63] இங்கிலாந்து வேதியியல்[66] மற்றும் மருந்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் முதன்மையான விண்வெளித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள்போன்றவற்றில் முன்னணியில் உள்ளது. மென்பொருள் துறையின் தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரும் பங்குச் சந்தையான இலண்டன் பங்குச் சந்தை உள்ள இலண்டன் இங்கிலாந்தின் மிகப்பெரும் நிதிய மையமாகும் — ஐரோப்பாவின் 500 பெரிய நிறுவனங்களில் 100 இலண்டனில் உள்ளன. இலண்டன் உலகின் மிகப்பெரும் நிதிய மையமாகவும் விளங்குகிறது.[67]

A blue coloured car.
பென்ட்லி முல்சான் தானுந்து. பென்ட்லி இங்கிலாந்தின் மிகவும் அறியப்பட்ட தானுந்து தயாரிப்பு நிறுவனமாகும்.

1694இல் இசுகாட்லாந்து வங்கியாளர் வில்லியம் பேட்டர்சன் நிறுவிய இங்கிலாந்து வங்கி ஐக்கிய இராச்சியத்தின் நடுவண் வங்கி ஆகும். இங்கிலாந்து அரசுக்கான தனியார் வங்கியாகத் துவக்கப்பட்ட இது 1946இல் தேசியமயமாக்கப்பட்டு அரசுத்துறை வங்கியாக உள்ளது.[68] இந்த வங்கியே இங்கிலாந்திலும் வேல்சிலும் நாணயத்தாள் அச்சடிக்க இயலும்; இருப்பினும் இந்த தனியுரிமை ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளுக்கு இல்லை. நாட்டின் நாணயக் கொள்கையை மேலாண்மை செய்யவும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கவும் வங்கியின் நாணயக் கொள்கை குழுவிற்கு பிரித்தானிய அரசு பொறுப்பு வழங்கி உள்ளது.[69]

இங்கிலாந்து மிக்க தொழில்மயமான பொருளாதாரமாக இருந்தபோதும் 1970களுக்குப் பிறகு வழக்கமான கனரக மற்றும் தயாரிப்பு தொழில்களில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. சேவைசார் தொழில்கள் வலுவடைந்து வருகின்றன.[33] சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க தொழிலாக இங்கிலாந்திற்கு ஆண்டுதோறும் பல மில்லியன் பயணிகளை ஈர்க்கிறது. மருந்துகள், தானுந்துகள், பாறை எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், வானூர்தி பொறிகள் மற்றும் மதுபான வகைகளை ஏற்றுமதி செய்கிறது. வேளாண்மை மிகவும் தானியங்கிமயமாக உள்ளது; 2% தொழிலாளர்களுடன் இத்துறை 60% உணவுத்தேவையை நிறைவு செய்கிறது.[70] வேளாண்மை உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு கால்நடைகளிலிருந்து பெறப்படுகிறது; மிகுதி பயிரிடப்படக்கூடிய தானியங்களிலிருந்து பெறப்படுகின்றன.[71]

அறிவியலும் தொழில்நுட்பமும்

இங்கிலாந்தை தாய்நாடாக கொண்ட விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமான சிலர் சர் ஐசக் நியூட்டன், ஜே. ஜே. தாம்சன், மைக்கேல் பாரடே, ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டார்வின், ஆலன் டியூரிங், டிம் பேர்னேர்ஸ்-லீ.

போக்குவரத்து

Planes congregate by a building.
உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விட இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் பன்னாட்டு பயணியர் போக்குவரத்து கூடுதலாக உள்ளது.[72]

அரசின் போக்குவரத்துத் துறை இங்கிலாந்தின் போக்குவரத்து தேவைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பின்னிப் பிணைக்கும் மோடார்வேக்களும் நெட்சாலைகளும் கட்டமைக்கப்பட்டு உள்ளன.[73] இங்கிலாந்தில் உள்ள மிக நீளமான விரைவுச் சாலை M6 ஆகும். இது வார்விக்சையரின் ரக்பியிலிருந்து வடகிழக்கு இங்கிலாந்து வழியாக ஆங்கிலோ-இசுகாட்டிஷ் எல்லை வரைச் செல்கிறது.[73] மற்ற விரைவுச்சாலைகள்:இலண்டன் – லீட்சு (எம் 1), இலண்டனைச் சுற்றியுள்ள எம்25, மான்செஸ்டரைச் சுற்றியுள்ள எம் 60, இலண்டனிலிருந்து தென் வேல்சிற்குச் செல்லும் எம்எம் 4, லிவர்பூல் – மான்செஸ்டர் – கிழக்கு யார்க் சையர் எம்62, பர்மிங்காம் – பிரிஸ்டல் எம் 5.

நாடெங்கும் பேருந்து போக்குவரத்து பரவியுள்ளது; முதன்மையான நிறுவனங்களாக தேசிய எக்ஸ்பிரெஸ், அர்ரைவா, கோ-அகெட் பேருந்து சேவைகளை இயக்குகின்றன. சிவப்பு வண்ண இரட்டை அடுக்கு பேருந்துகள் இலண்டனின் அடையாளமாகவே உள்ளன. இங்கிலாந்தின் இரண்டு நகரங்களில் விரைவு தொடர்வண்டி சேவைகள் நகர்ப்புறப் போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன; இலண்டன் அண்டர்கிரவுண்டு, டைன் அன்டு வியர் மெட்ரோ.[74] பல ஒற்றைத் தண்டூர்தி அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன:பிளாக்பூல் டிராம்வே, மான்செஸ்டர் மெட்ரோலிங்க், செபீல்டு சூப்பர்டிராம், மிட்லாந்து மெட்ரோ, மற்றும் தென் இலண்டனின் கிராய்டனை மையமாகக் கொண்ட டிராம்லிங்க்அவற்றில் சிலவாகும்.[74]

இங்கிலாந்திலுள்ள இருப்புப் பாதை போக்குவரத்து உலகின் மிகத் தொன்மையானதாகும். 1825இல் பயணியர் தொடர்வண்டி இங்கிலாந்தில் தொடங்கியது. பிரித்தானியாவிலுள்ள 16,116 கிலோமீட்டர்கள் (10,014 mi) இருப்புப் பாதைகளில் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே உள்ளன; இருப்பினும் இவற்றில் பல பாதைகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூடப்பட்டு விட்டன. பிரான்சிற்கும் பெல்ஜியத்திற்கும் 1994ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கால்வாய் சுரங்கம் மூலம் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துக்கான வான்வழித்தடங்கள் மிகவும் பரவலானவை. நாட்டின் பெரிய வானூர்தி நிலையமான இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விட பன்னாட்டு பயணியர் போக்குவரத்து கூடுதலாக உள்ள ஒன்றாகும்.[75] மற்ற பெரிய வானூர்தி நிலையங்கள்: மான்செஸ்டர் வானூர்தி நிலையம், இலண்டன் இசுடான்சுடெட் வானூர்தி நிலையம், லூட்டன் வானூர்தி நிலையம்மற்றும் பர்மிங்காம் வானூர்தி நிலையம்.[72] கடல்வழிப் போக்குவரத்தில், பெரும்படகுகள் உள்ளூர் மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பன்னாட்டுப் போக்குவரத்துக்காக இயக்கப்படுகின்றன.[76] இங்கிலாந்தில் மட்டும் 7,100 km (4,400 mi) தொலைவிற்கு நீர்வழிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.[76] இங்கிலாந்தின் தேம்ஸ் இங்கிலாந்தின் முக்கிய நீர்வழியாகும்; இதன் கழிமுகத்தில் அமைந்துள்ள தில்பரி துறைமுகம் இங்கிலாந்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் முதன்மையானதாகும்.[76]

மக்கள் தொகையியல்

Map of England with regions shaded in different shades of blue.
மக்கள்தொகைக்கேற்ப வண்ணமிடப்பட்டுள்ள இங்கிலாந்தின் பல்வேறு கௌன்டிகள்.

53 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட இங்கிலாந்தே ஐக்கிய இராச்சியத்தின் நாடுகளில் மிகவும் பெரியதாகும்; மொத்த மக்கள்தொகையில் இது 84% ஆகும.[4] இங்கிலாந்தை மட்டும் தனியாக கருத்தில்கொண்டால் மக்கள்தொகைப்படி இது ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது இடத்திலும் உலகளவில் 25ஆவது இடத்திலும் உள்ளது.[77] சதுர கிமீக்கு 407 நபர்கள் உள்ள இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் மக்கள் அடர்த்தி மிக்க நாடுகளில் மால்ட்டாவிற்கு அடுத்து இரண்டாவதாகும்.[78][79]

Pie chart with main body in blue and multiple smaller segments in other colours.
2009 மதிப்பீட்டின்படி இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள பல்வேறு இனக் குழுக்கள்

.

1086இல் இரண்டு மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை[80], 1801இல் 8.3 மில்லியனாகவும் 1901இல் 30.5 மில்லியனாகவும் வளர்ந்தது. குறிப்பாக தென்கிழக்கு இங்கிலாந்தில் பொருளாதார முன்னேற்றத்தினால் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறினர்.[81]

1950களிலிருந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளிலிருந்து புலம்பெயர் மக்கள் வரத் துவங்கினர். இங்கிலாந்தில் 6% மக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களாவர்.[82] மக்கள்தொகையில் 2.90% பேர் பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளாயிருந்த கரிபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த கருப்பின மக்களாவர்.[82] சீனர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.[82] 2007 துவக்கப்பள்ளி மாணவர்களில் 22% சிறுவர்கள் சிறுபான்மை இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும்.[83] 1991இலிருந்து 2001 வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தில் 50% புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் ஏற்பட்டதாகும். இதனால் புதிய குடியேற்றத்தை தடுக்கவேண்டும் என்ற அரசியல் கருத்தாக்கம் வலுவடைந்து வருகிறது.

கல்வி

இங்கிலாந்து கல்வி துறை 3 வயது முதல் 4 வயது வரை மழலை கல்வியும் பின்னர் 4 வயது முதல் 11 வயது வரை

கிங்க்ஸ் கல்லூரி சபெல் வெஸ்ட்

ஆரம்ப கல்வியும் 11 வயது முதல் 16 வயது வரை இடைநிலை கல்வியும் (ஆரம்ப கல்வியும் மற்றும் இடைநிலை கல்வியும் இங்கிலாந்து நாட்டில் கட்டைய கல்வியாகும்) கட்டைய கல்வியை முடித்த பின் 2 ஆண்டு வரை கல்வியை தொடர்ந்து ஜீ. சி. எஸ். ஈ பரீட்சைக்கு தோன்ற முடியும்.பரீட்சை முடிவுகளை தொடர்ந்து கல்லூரிகளில் அனுமதியினை பெறமுடியும்.இங்கிலாந்து நாட்டில் 90 மேற்பட்ட பல்கலைகழகங்கள் உள்ளன இவற்றில் உலக பிரபல்யம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி இங்கிலாந்து நாட்டில் தான் உள்ளது.

விளையாட்டு

The interior of an empty stadium as viewed from its upper tier of seating. The seats are a vivid red and the pitch is a vivid green. The pale grey sky is visible through an opening in the ceiling above the pitch.
வெம்ப்ளி விளையாட்டரங்கம், உலக அளவில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மைதானங்களில் ஒன்று[84]

பற்பல விளையாட்டுக்கள் இங்கிலாந்தில் காலாகாலமாக ஆடப்பட்டு வருகின்றன. இக்காலத்தில் உலகத்தில் விளையாடப்பெறும் பல விளையாட்டுக்கள் 19-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் இங்குதான் தோற்றுவிக்கப்பட்டு, விதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளினும் புகழ்பெற்று விளங்குவது கால்பந்து ஆகும். இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அணியின் மைதானமான வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் 1966-ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையை மேற்கு செருமனியை 4-2 என்ற இலக்கு கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது. அவ்வருடம் மட்டுமே இங்கிலாந்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தியுள்ளது, இங்கிலாந்தின் ஒரே கால்பந்து உலகக் கோப்பை வாகையும் அதுவேயாகும்.[85]

இங்கிலாந்தில் செஃபீல்டு கால்பந்துக் கழகம் 1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது(உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம்).[86] ஆகையால், ஃபிஃபாவினால் கழகக் கால்பந்தின் பிறப்பிடமாக இங்கிலாந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டமைப்பே உலகின் மிகப் பழமையான காலபந்துக் கூட்டமைப்பாகும். கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை மற்றும் கால்பந்துக் கூட்டிணைவு ஆகியவை முறையே உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கோப்பை மற்றும் கூட்டணைவுப் போட்டித் தொடர்களாகும். தற்போதைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் உலகின் கவர்ச்சிகரமான, புகழ்வாய்ந்த கால்பந்து கூட்டிணைவுத் தொடராகும்.[87] and amongst the elite.[88] ஐரோப்பியக் கோப்பையை (தற்போது யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு என்று அறியப்படுகின்றது) இங்கிலாந்தின் கால்பந்துக் கழகங்களான லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட், நாட்டிங்காம் ஃபாரஸ்ட், அஸ்டன் வில்லா, செல்சீ ஆகிய அணிகள் வென்றுள்ளன; மேலும் ஆர்சனல் லீட்சு யுனைடெட் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.[89]

Men in cricket whites play upon a green grass cricket field amidst a stadium.
லார்ட்சு மட்டைப்பந்து மைதானத்தில் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையாயான ஆஷஸ் போட்டியின்போது

துடுப்பாட்டத்தின் (மட்டைப்பந்து,கிரிக்கெட்) தாயகம் இங்கிலாந்து. மேலும் அந்நாட்டின் தேசிய விளையாட்டும் இதுவே. இங்கிலாந்து முதல் மூன்று துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளையும் (1975, 1979, 1983) அதன் பிறகு 1999-ம் ஆண்டும் நடத்தியது. பதுஅ உலக இருபது20 போட்டிகளை 2009இல் நடத்தியது. இதுவரை இங்கிலாந்து மூன்றுமுறை(1979, 1987, 1992) துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும் ஒருமுறை கூட வென்றதில்லை. இலண்டனிலுள்ள இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் "துடுப்பாட்டத்தின் மெக்கா"எனப்படுகிறது.[90]

இலண்டன் மூன்றுமுறை கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்களை 1908, 1948, 2012 ஆண்டுகளில் நடத்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டுக்களில் இங்கிலாந்து பங்கேற்கிறது. இங்கிலாந்தின் விளையாட்டுக்களை வழிநடத்தவும் நிதிகளை வழங்குவதற்கும் இசுபோர்ட் இங்கிலாந்து என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்டு பிரீ தானுந்து போட்டிகள் சில்வர்சுடோன் என்றவிடத்தில் நடத்தப்படுகின்றன.[91]

உலக ரக்பி யூனியன் கோப்பையை 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து வென்றது. 1991இல் இந்த போட்டிகளை ஏற்று நடத்திய இங்கிலாந்து மீண்டும் 2015இல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[92] ரக்பி கால்பந்து விளையாட்டின் மற்றொரு வடிவமான ரக்பி லீக் விளையாட்டு 1895இல் அட்டர்சுபீல்டில் பிறந்தது. ரக்பி லீக்கில் இங்கிலாந்தின் அணி உலகளவில் மூன்றாவது நிலையிலும் ஐரோப்பாவில் முதல்நிலையிலும் உள்ளது. பெரிய பிரித்தானியாவின் அணி மூன்று உலகக்கோப்பைகளை வென்றபிறகு ஓய்வுபெற்றநிலையில் இங்கிலாந்தின் அணியே 2008 முதல் நாட்டு அணியாக பங்கேற்கிறது. 2013இல் நடக்கவுள்ள ரக்பி லீக் உலக்க் கோப்பை போட்டிகளை ஐக்கிய இராச்சியம் ஏற்று நடத்த உள்ளது.

டென்னிசில், விம்பிள்டன் கோப்பை மிகவும் பழைமையான போட்டியாகவும் உலகின் மதிப்புமிக்க ஒன்றாகவும் விளங்குகிறது.[93][94]

இங்கிலாந்தின் குறிப்பிடத்தக்க மக்கள்

இங்கிலாந்தில் பலர் பெரும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருசிலர்:

குறிப்புகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கிலாந்து&oldid=3938775" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: Main PageSpecial:SearchWikipedia:Featured picturesYasukeHarrison ButkerRobert FicoBridgertonCleopatraDeaths in 2024Joyce VincentXXXTentacionHank AdamsIt Ends with UsYouTubeNew Caledonia2024 Indian general electionHeeramandiDarren DutchyshenSlovakiaKingdom of the Planet of the ApesAttempted assassination of Robert FicoLawrence WongBaby ReindeerXXX: Return of Xander CageThelma HoustonFuriosa: A Mad Max SagaMegalopolis (film)Richard GaddKepler's SupernovaWicked (musical)Sunil ChhetriXXX (2002 film)Ashley MadisonAnya Taylor-JoyPlanet of the ApesNava MauYoung SheldonPortal:Current eventsX-Men '97