சென் தாமசுக் கோட்டை, தங்கசேரி

சென் தாமசுக் கோட்டை அல்லது தங்கசேரிக் கோட்டை என அழைக்கப்படும் இக்கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தங்கசேரி என்னும் கடற்கரை நகரில் அமைந்துள்ளது. தங்கசேரி கிரித்துவுக்குப் பின் முதல் ஆயிரவாண்டு காலப்பகுதியில் இருந்தே சீன வணிகத்துடன் தொடர்புபட்டிருந்தது. பின்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரும் வணிகத்தின் பொருட்டு ஒருவர் பின் ஒருவராக இப்பகுதிக்கு வந்தனர். வரலாற்றாளர்களின் கூற்றுப்படி வணிகத்தின் பொருட்டுக் குயிலோனுக்கு வந்த கப்டன் ரொட்ரிகசு இக்கோட்டையைக் கட்டினான். இக்கோட்டை முதலில் "சாவோ தோமே கோட்டை" என அழைக்கப்பட்டது. [1]

தங்கசேரிக் கோட்டை/சென் தாமசுக் கோட்டை
சென் தாமசுக் கோட்டையின் முன்பக்கத் தோற்றம்
அமைவிடம்தங்கசேரி, கொல்லம், கேரளா, இந்தியா
கட்டப்பட்டது16ம் நூற்றாண்டு
கட்டிடக்கலைஞர்போர்த்துக்கேயர்
கட்டிட முறைமணற்கல், சுண்ணச் சாந்து
சென் தாமசுக் கோட்டை, தங்கசேரி is located in கேரளம்
சென் தாமசுக் கோட்டை, தங்கசேரி
கேரளம் இல் தங்கசேரிக் கோட்டை/சென் தாமசுக் கோட்டை அமைவிடம்

வரலாறு

பின்னணி

சென் தாமசுக் கோட்டை. போர்த்துக்கேயர் கால நிலப்படம்

கிபி 1500 ஆம் ஆண்டிலேயே கொச்சியில் போர்த்துக்கேயர் ஒரு வணிக நிலையத்தை நிறுவியிருந்தனர். அக்காலத்தில் அப்பகுதியில் மிளகு மற்றும் பிற வாசனைத் திரவியங்களின் வணிகத்தில் ஈடுபட்டிருந்த சீனர், அரேபியர் போன்றோரிலும் கூடுதலான விலைகளைப் போர்த்துக்கேயர் வழங்குவதாக அறிந்த கொல்லத்தின் இராணி போர்த்துக்கேயரைத் தனது நாட்டுடனும் வணிகத்தில் ஈடுபடுமாறு அழைத்தார். முதலில் அதற்கு மறுத்துவிட்ட போர்த்துக்கேயர் 1502 ஆம் ஆண்டில் அதற்கு இணங்கினர். தொடர்ந்து அமைவிட முக்கியத்துவம் வாய்ந்த தங்கசேரி நிலப்பகுதியை இராணியிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றுக்கொண்ட போர்த்துக்கேயர் அதில் ஒரு வணிக நிலையத்தை நிறுவினர்.[2]

1505 ஆம் ஆண்டில் அராபிய வணிகர்களுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையிலான போட்டி வலுத்ததைத் தொடர்ந்து போர்த்துக்கேயர் அராபிய வணிகர்களின் கப்பல்களைப் பிடித்துக் கொல்லத்தின் வணிக நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இதை அறிந்த கொல்லம் இராணி அராபிய வணிகர்களுடன் சேர்ந்து போர்த்துக்கேயரின் வணிக நிலையத்தைத் தாக்கி அதனை அழித்ததுடன் அங்கிருந்த 13 போர்த்துக்கேயரையும் கொன்றனர். இதற்குப் பழிவாங்குவதற்காக வந்த போர்த்துக்கேயர் கொல்லம் துறைமுகத்தில் நின்ற கப்பல்களை அழித்தனர். இதனால் கொல்லம் இராணி போர்த்துக்கேயருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. இது போர்த்துக்கேயருக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தது.[3]

கோட்டை கட்டியமை

1517ல், இந்தியாவில் இருந்த போர்த்துக்கேய ஆளுனரின் ஆணைப்படி கொல்லம் இராணியிடம் இருந்து ஒப்பந்தப்படியான நிலுவைத் தொகைகளை அறவிடுவதற்காக வந்த போர்த்துக்கேயத் தளபதி கப்பித்தான் ரொட்ரிகசு தங்கசேரிப் பகுதியில் ஒரு வீடு கட்டிக்கொள்ள அனுமதி பெற்றுக்கொண்டான். ஆளுனர் கட்டளைப்படி வீடுகட்டும் சாக்கில் ரொட்ரிகசு இரகசியமாக ஒரு கோட்டையைக் கட்டினான். இதையறிந்த கொல்லம் படைகள் கோட்டை கட்டுவதைத் தடுக்க முயன்றனவாயினும் போர்த்துகேயரின் எதிர்த் தாக்குதலால் முயற்சி கைகூடவில்லை. 1519 ஆம் ஆண்டில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து கொத்தளங்களைக் கொண்ட பெரிய கோட்டையாக இது இருந்தது. பின்னர் ஒரு அகழியையும் அவர்கள் அமைத்தனர். 1520ல் மீண்டும் இராணியின் படைகள் கோட்டையைத் தாக்கினவெனினும் தோல்வியையே சந்தித்தன. இதைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் போர்த்துக்கேயர் தமது கட்டுப்பாட்டை இப்பகுதியில் மேலும் வலுப்படுத்திக்கொண்டனர்.[4]

1661 ஆம் ஆண்டில் இக்கோட்டையும் அதை அண்டிய நகரும் ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்தர் இதை ஒல்லாந்த மலபாரின் தலைநகராக்கினர். நீண்ட காலம் இக்கோட்டையைத் தம்மிடம் வைத்திருந்த ஒல்லாந்தர் 1795 ஆம் ஆண்டில் இதனைப் பிரித்தானியரிடம் இழந்தனர். 1823 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசு இதனைப் பிரித்தானியரிடம் இருந்து 20 ஆண்டுக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டது.

தற்போதைய நிலை

சென் தாமசுக் கோட்டை 20 அடி உயரம் கொண்டது. இன்று இக்கோட்டை அழிபாடுகளாகக் காணப்படுகிறது. இக்கோட்டையைத் தன்வசம் எடுத்துக்கொண்ட இந்திய அரசு இதை ஒரு வரலாற்றுச் சின்னம் ஆக்கியுள்ளது. இப்பொழுது இதை இந்தியத் தொல்லியல் ஆய்வுப் பகுதி பொறுப்பெடுத்து நிர்வகித்து வருகிறது.

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

மேலும் படங்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்