பிள்ளையார் சுழி

விநாயகருக்குப் பயன்படுத்தப்படும் பண்டைய புனித எழுத்து சின்னம்

பிள்ளையார் சுழி என்பது சைவக் கடவுளான விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான தமிழ் எழுத்துச் சின்னமாகும். தமிழ் உயிர் எழுத்துக்களில் ஐந்தாவது எழுத்தாக உள்ள "உ" எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்துப் பல்வேறு கருத்துகள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் சிலர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேறு சிலர் "உ" என்று பிள்ளையார் சுழியை மட்டும் போட்டு எழுதத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த "உ" குறியீட்டை சிலர் நாளை (தேதி) க் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர். இரண்டு என்கிற எண்ணுக்கும் இதே எழுத்து, குறியீடாகவும் அமைந்துள்ளது.[1][2][3][4]

வேறுபட்ட பிள்ளையார் சுழிகள்

கருத்து ஒன்று

மாதா பிதா குரு தெய்வம். பிள்ளையார் தன் தாய் தந்தையாகிய உமையாள் உமையவனை துணையாகவும் முதன்மையாகவும் இருக்க சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார். பிள்ளையார் தடைகளை அகற்றுபவர். அதனால் பிள்ளையார் போட்ட சுழியையே நாமும் பின்பற்றி எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் பிள்ளையாரை நினைத்து எந்தத் தடையும் இல்லாமல் சுபமாக நடந்து முடிக்க வேண்டும் என்று வேண்டிச் செயலைத் தொடங்குகிறோம்.[5]

கருத்து இரண்டு

ஏட்டில் எழுதும் போது எழுதுகோலின் சீர்மையையும், ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது என்பது ஒரு கருத்து.[6][7]

கருத்து மூன்று

பிள்ளையாரின் முகத் தோற்றம் "ஓ" என்றும் "ஓம்" என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக "உ" என முன்னெழுதி ஏனையவற்றைப் பின் எழுதுவது சுவடி எழுதுவோரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம்; உகரம் சக்தி; மகரம் மலம்; நாதம் மாயை; விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை. பிள்ளையார் தடைகளை வில‌க்குப‌வ‌ர் என்பதால், நாம் தொடங்கும் எந்தச் செயலும் தடையில்லாமல் நடக்கப் பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி - உ போட்டுத் தொடங்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் பிள்ளையார் தனது தாய் தந்தையாகிய உமையாள்,உமையவனை முதன்மையாக வைத்துக் குறிப்பதற்காகச் சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார் என்பது ஒரு கருத்து.[6][8]

கருத்து நான்கு

திருமூலர் அகரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகரமாகிய உயிர் உகாரமாகிய இறைவனோடு இயைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழியாயிற்று என்கிறது ஒரு கருத்து.

கருத்து ஐந்து

திருமூலரே பின்னும் பிரணவத்தின் ஐந்து கூறுகளில் அகரத்திற்குப் பிரமனும், உகரத்திற்கு திருமாலும், மகரத்திற்கு உருத்திரனும், விந்துவிற்கு மகேசனும், நாதத்திற்கு சதாசிவனும் ஆதி தெய்வங்களாவர். எழுதத் தொடங்குவது என்பது இலக்கியப் படைப்பைக் குறிக்கும். அதற்கு முன் பிரமனை ஆதி தெய்வமாகக் கொண்ட அகரத்தின் கூறாகிய ஒற்றைக் கொம்புக் குறியையும், எழுதப் பெறும் இலக்கியம் நின்று நிலை பெற வேண்டுமென்று திருமாலை ஆதி தெய்வமாகக் கொண்ட உகரத்தின் கூறாகிய கோட்டுக்குறியையும் இணைத்து "உ" எனப் பிள்ளையார் சுழியாக எழுதினர் என்றும், அச்சுழி மூல மனுவாகிய பிரணவத்தின் சிதைந்த வடிவு என்றும் குறிப்பிடுகின்றனர்.[9]

கருத்து ஆறு

ஓலையை எழுத எடுத்ததும் அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும் கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இந்த முதல் சுழிதான் காலப்போக்கில் பிள்ளையார் சுழியென்று ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றாலும் இது நம் அறிவுப்பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை. தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்தும் சுழியையே அடிப்படையாகக் கொண்டவை. எனவே தமிழ் எழுத்துகளை எழுத வேண்டுமாயின் சுழிக்கக் கற்றுக் கொள் என்று முன்னோர்கள் இந்த முறையை அமைத்ததாக கி.ஆ.பெ.விசுவநாதம் குறிக்கின்றார்.[9]

கருத்து ஏழு

கடிதங்களில் க்ஷ என்று எழுதும் பழக்கம் பிள்ளையார் சுழி என்று இன்று அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் "தலைக்கீற்று" என்றும், "மேல்பதி" என்றும் அழைக்கப்பட்டதென்றும் இதன் உண்மை வடிவம் க்ஷ் என்று எழுதும் போது ஷ என்றாகியதென்றும் சங்கேத மொழியில் மேற்படி என்று பொருள் கொடுப்பதாகவும், கடிதத் தலைப்பில் பதிக்கப் பெற்ற "மேல்பதி" மருவி "மேற்படி" என்பதைக் குறிக்கும். சங்கேதமானது என்றோ, இன்ன சங்கேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அறிந்த பின் மேலே படிக்க முயலவும் என்றோ பொருள் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.[10]

கருத்து எட்டு

தமிழ் எழுத்துகள் இயற்கை வடிவமான வட்ட வடிவின என்றும், அவ்வட்டத்தை விரைந்தெழுதும் போது அதன் முடிவு நீளக்கோட்டில் முடியுமென்றும் எழுதத் தொடங்குவான். முதலில் வட்டமிட்டுப் பின் அதைக் கோடாக இழுத்ததால் பிள்ளையார் சுழி ஏற்பட்டதென்பது ஒரு கருத்து.[11]

செயலின் தொடக்கம்

ஓலைச்சுவடிகளின் தொடக்கத்தில் "அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே" என்று எழுதப்பட்ட நிலை சமயச் சார்புற்று "அரி ஓம் நன்றாக" என்று எழுதப்பட்ட காலத்தில் ஏட்டின் தொடக்கத்தில் பிள்ளையார் சுழி இடம் பெற்றதோடு மட்டுமின்றிப் பாட்டின் முடிவிலும் பாடல் எண்களை அடுத்தும் இடம் பெற்றுள்ளமை இங்குச் சுட்டத் தகுந்தது. இவ்வாறு, பிள்ளையார் சுழி பாடல் தொடக்கத்தையும், பாடல் முடிவையும், எண் முடிவையும் குறித்து நின்ற குறியீடாகப் பயன்படுத்தப்பட்டமையும் புலனாகிறது.

பிள்ளையார் வழிபாடு என்பதே தமிழகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. அதற்கு முன்பிருந்தே ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்து வந்தமை கண்கூடு, ஏட்டின் சேர்பதம் பார்க்கச் சுழித்துப் பார்த்த நிலையைச் சமயப் பார்வை மிகுந்த பிற்காலத்தில் "பிள்ளையார் சுழி" யாக்கி விட்டனர் எனபதே பொருந்துவதாகும்.

பிள்ளையார் சுழியின் பிறப்பு எவ்வாறு இருப்பினும் இன்று அது ஒரு செயலின் தொடக்கத்தைக் குறிப்பதாக மருவி வழங்கி வருகிறது.[12][13][14][15][16]

ஆதாரம்

  • முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) பக்கம் 90 முதல் 94 வரை.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிள்ளையார்_சுழி&oldid=3574119" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்