நீலப் பள்ளிவாசல், யெரெவான்

நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) (ஆர்மேனியன்: Կապույտ մզկիթ, Kapuyt mzkit; பாரசீகம்: مسجد کبود Masjed-e Kabud, அசர்பைசானி: Göy məscid) ஆர்மீனியாவின் தலைநகரமான யெரெவானில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும். சியா இசுலாம் பள்ளிவாசலான இதன் சேவைகள் சோவியத் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, யெரெவானின் வரலாற்று அருங்காட்சியகமாக இயங்கி வந்தது. ஆர்மீனியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. நாட்டில் வசிக்கும் பெரும்பாலான ஈரானியர்களுக்காக மீண்டும் ஒரு பள்ளிவாசலாக இயங்கத் தொடங்கியது. தற்போது ஆர்மீனியாவில் இப்பள்ளிவாசல் மட்டுமே ஒழுங்காக செயல்பட்டு வருகிறது[1].

நீலப் பள்ளிவாசல்
Blue Mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்12 மாசுதோட்சு அவென்யூ, யெரெவான்,ஆர்மீனியா
புவியியல் ஆள்கூறுகள்40°10′41″N 44°30′20″E / 40.1781°N 44.5056°E / 40.1781; 44.5056
சமயம்இசுலாம்
வழிபாட்டு முறைபன்னிரு சியாக்கள்
நிலைபள்ளிவாசல்

வரலாறு

பின்புலம்

14 ஆம் நூற்றாண்டில் தைமூர் ஊடுருவல் காலம் தொடங்கி யெரெவான் மண்டலம் பல்வேறு இசுலாம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட 1555 அமாசியா அமைதி உடன்படிக்கையில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை இடைவிடாமல் ஈரானின் ஒரு மாகாணமாக இருந்து வந்துள்ளது. சஃபாவித் அரச வம்சம், நாதிர் சா, கரீம் கான் சந்து மற்றும் ஈரானிய குவாயர் அரச வம்சம் போன்றவர்களால் அடுத்தடுத்து ஆளப்பட்டு வந்தது. 1826 முதல் 1828 [2]வரை நிகழ்ந்த உரூசோ-பாரசீகப் போரின் விளைவாக ஏற்பட்ட துருக்மென்சாய் உடன்படிக்கையைத் தொடர்ந்து யெரெவான் மண்டலம் உயர் அதிகார உருசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

பள்ளிவாசலின் கட்டுமானம் தொடர்பாக 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து பல்வேறு தேதிகள் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீலப் பள்ளிவாசல் ஈரானிய ஆட்சியாளர் நாதிர் சா ஆட்சிக் காலத்தில் (1736 -1747) உசைன் அலி கான் என்பவரல் கட்டப்பட்டதாக 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதப் பயணி எச்.எப்.பி இலிஞ்சு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.[3] பள்ளிவாசலின் புரவலர் உசைன் அலி கான் என்று ஈரானிய-அமெரிக்கப் பேராசிரியர் சியார்சு போர்ன்தியன் குறிப்பிடுகிறார். ஆனால் உசைன் அலி கானின் பேரரசு இருந்த காலம் 1762 முதல் 1783 வரையிலான காலமாகும்[4]. பள்ளிவாசல் கட்டும் பணி 1760 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1764 முதல் 1768[5][6]வரையிலான உசைன் அலி கான் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது என விளாடிமிர் எம் அருட்யுன்யான் தன் அறிக்கையில் தெரிவிக்கிறார்.

இப்பள்ளிவாசல் கட்டிடம் நகரத்தின் முக்கியமான பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும் இடமாக இருந்தது. 1826-1828 உருசோ- பாரசீகப் போரில் யெரெவானை உருசியா கைப்பற்றிய போது, அங்கு செயல்பட்டு வந்த எட்டு பள்ளிவாசல்களில் இதுவே பெரிய பள்ளிவாசலாக இருந்தது. பிரதானமான பிரார்த்தனைக் கூடம், ஒரு நூலகம், முற்றத்தைச் சுற்றிலும் 28 பிரிவுகள் கொண்ட மதராசா எனப்படும் கல்விச்சாலை ஆகியன பள்ளிவாசல் கட்டிடத்தில் இருந்தன. இவ்வளாகம் 7000 சதுரமீட்டர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. சமகாலத்திய பள்ளிவாசல்கள் போல இங்கும் உருளை வடிவ இசுலாமியக் கட்டிட அமைப்பு ஒன்று இருந்தது. பல உருளை அமைப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

சோவியத் காலம்

சோவியத் அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாக நீலப் பள்ளிவாசல் சேவைகள் நிறுத்தப்பட்டன. 1931-இல் இப்பள்ளிவாசல் யெரெவான் நகரத்தின் வரலாற்று அருங்காட்சியகத்திற்கான இல்லமாகப் பயன்படுத்தப்பட்டது[7]

சுதந்திர ஆர்மீனியா காலம்

1990 களின் பிற்பாதியில் ஈரான் நாடு வழங்கிய நிதியுதவியைக் கொண்டு பள்ளிவாசல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அமைப்பு வகையில் பள்ளிவாசலுக்கு இப்புணரமைப்பு தேவையானது என்றும் அழகியல் நோக்கில் இப்புணரமைப்பு தெளிவற்றது[8] என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஊழியர் மற்றும் வெளிநாட்டு சேவை அதிகாரி பிராடி கிசுலிங்கு கருத்து தெரிவித்திருந்தார். அசர்பைசானியக் குடியரசில் இருக்கும் சில அதிகாரிகள் மத்தியில் இப்புணரமைப்பு சில கவலைகளை தோற்றுவித்தது. ஆர்மீனியாவைச் சேர்ந்த அசர்பைசானி சமூகத்தின்[9] பாரம்பரியத்தைச் சேர்ந்த பள்ளிவாசலாக இது இருந்தாலும் ஈரானியப் பள்ளிவாசலாக காட்சிப்படுத்தப்படுகிறது என்பது இக்கவலைக்கான காரணமாகும். இசுலாமிய மத சேவைகள் இப்போது பள்ளிவாசலுக்கு உள்ளே மட்டும் நடைபெறுகின்றன. ஆர்மீனியாவில் இப்பள்ளிவாசல் மட்டுமே இயங்கும் பள்ளிவாசலாகத் திகழ்கிறது. யெரெவான் நாட்டு அருங்காட்சியம் தற்போது அதற்காகவே கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் செயற்பட்டு வருகிறது.

1995 ஆம் ஆண்டில் இப்பள்ளிவாசலின் உரிமையை யெரெவானிய அரசு ஈரானுக்கு அளித்தது[10]. அக்டோபர் 2015 இல் ஆர்மீனிய அரசாங்கம் இப்பள்ளிவாசலுக்கான உரிமையை ஈரானுக்கு மேலும் 99 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்தது[11]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

நூலடைவு

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்