மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகள்

இந்தியா மீது 1290-1399இல் நடைபெற்ற படையெடுப்பு முயற்சிகள்

1221 முதல் 1327 வரை மங்கோலியப் பேரரசு பல்வேறு படையெடுப்புகளை இந்தியத் துணைக்கண்டத்தின் மீது நடத்தியது. அப்படையெடுப்புகளில் பிற்காலப் படையெடுப்புகள் பெரும்பாலும் மங்கோலியப் பூர்வீகம் உடைய கரவுனாக்கள் என்ற இனத்தவர்களாலேயே நடத்தப்பட்டன. மங்கோலியர்கள் துணைக்கண்டத்தின் பகுதிகளைப் பல தசாப்தங்களுக்கு ஆக்கிரமித்திருந்தனர். மங்கோலியர்கள் இந்தியாவிற்குள் கால்பதித்து பழைய தில்லியின் வெளிப்புறப் பகுதிகளை அடைந்தபோது தில்லி சுல்தானகமானது அவர்களுக்கு எதிராக ஒரு பதில் தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலில் மங்கோலிய இராணுவமானது தீவிர தோல்விகளை அடைந்தது.[1]

13ஆம் நூற்றாண்டு உடையில் தற்போதைய மங்கோலிய இராணுவ வீரர்கள்.
மங்கோலியப் பேரரசின் வீரர்கள் குறித்த ஒரு சுவரோவியம், மங்கோலியத் தேசிய அருங்காட்சியகம், உலான் பத்தூர், மங்கோலியா.
கி.பி. 1311 வாக்கில்      மங்கோலியப் பேரரசு மற்றும்      தில்லி சுல்தானகம்.

பின்புலம்

சமர்கந்திலிருந்து இந்தியாவிற்கு ஜலாலுதீன் மிங்புர்னுவைத் துரத்திக்கொண்டு வந்த செங்கிஸ் கான் 1221இல் நடந்த சிந்து ஆற்று யுத்தத்தில் அவரைத் தோற்கடித்தார். ஜலாலுதீனைத் தொடர்ந்து துரத்துவதற்காக இரண்டு தியுமன்களைத் (20,000 படைவீரர்கள்) தனது தளபதிகளான தோர்பே மற்றும் பாலா ஆகியோர்களின் தலைமையில் அனுப்பி வைத்தார். ஜலாலுதீனை இலாகூர் பகுதி முழுவதும் மங்கோலியத் தளபதியான பாலா துரத்தினார். முல்தான் மாகாணத்தின் வெளிப் பகுதிகளையும் தாக்கினார். ஒரு கட்டத்தில் இலாகூரின் வெளிப் பகுதிகளைக் கூடச் சூறையாடினார். தனது படைவீரர்களை மீண்டும் சேர்த்த ஜலாலுதீன் யுத்தத்தில் தப்பிப் பிழைத்தவர்களைக் கொண்டு ஒரு சிறிய இராணுவத்தை அமைத்தார். தில்லி சுல்தானகத்தின் துருக்கிய ஆட்சியாளர்களிடம் கூட்டணி அல்லது தஞ்சம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவரது கோரிக்கைகள் சம்சுத்தீன் இல்த்துத்மிசால் நிராகரிக்கப்பட்டன.[2]

ஜலாலுதீன் பஞ்சாபின் உள்ளூர் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். ஆனால் திறந்த வெளியில் பல ஆட்சியாளர்களால் தோற்கடிக்கப்பட்டார். பின்னல் ஜலாலுதீன் பஞ்சாபின் வெளிப் பகுதிகளுக்கு பின்வாங்கினார். முல்தானில் அடைக்கலம் அடைந்தார்.

சிந்து மாகாணத்தின் உள்ளூர் ஆளுநருக்கு எதிராக ஜலாலுதீன் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது தெற்கு ஈரானின் கிர்மான் மாகாணத்தில் எழுச்சி ஏற்பட்டதைக் கேட்டறிந்தார். உடனே தெற்குப் பலுசிஸ்தான் வழியாக அம்மாகாணத்தை நோக்கி அவர் பயணித்தார். ஜலாலுதீனுடன் கோர் மற்றும் பெஷாவரில் இருந்து வந்த படைகளும் இணைந்து கொண்டன. அப்படையில் கல்ஜி, துர்கோமன் மற்றும் கோரி பழங்குடியினங்களைச் சேர்ந்த வீரர்களும் இருந்தனர். தன்னுடைய புதிய கூட்டாளிகளுடன் கஜினியை நோக்கி ஜலாலுதீன் அணி வகுத்தார். ஜலாலுதீனை வேட்டையாடுவதற்காக நியமிக்கப்பட்ட துர்தை தலைமையிலான மங்கோலியப் படையை ஜலாலுதீன் தோற்கடித்தார். வெற்றி பெற்ற ஜலாலுதீனின் கூட்டாளிகள் போரில் கிடைத்த பொருட்களைப் பிரித்துக் கொள்வதில் சண்டையிட ஆரம்பித்தனர். இறுதியாகக் கல்ஜி, துர்கோமன் மற்றும் கோரிப் பழங்குடியினத்தவர்கள் ஜலாலுதீனை அப்படியே விட்டு விட்டுப் பெஷாவருக்குத் திரும்பினர். இந்த நிகழ்வு நடந்து முடிந்த நேரத்தில் செங்கிஸ் கானின் மூன்றாவது மகனான ஒக்தாயி கான் மங்கோலியப் பேரரசின் பெரிய கானாகப் பதவியில் அமர்ந்திருந்தார். கானால் அனுப்பப்பட்ட சோர்மகான் எனும் மங்கோலியத் தளபதி ஜலாலுதீனைத் தாக்கித் தோற்கடித்தார். இவ்வாறாகக் குவாரசமிய ஷாவின் அரசமரபு முடிவுக்கு வந்தது.[3]

மங்கோலியர்கள் காஷ்மீரைக் கைப்பற்றுதல்

1235க்குப் பிறகு சிறிது காலத்தில் மற்றொரு மங்கோலியப் படை காஷ்மீர் மீது படையெடுத்தது. பல வருடங்களுக்குத் தருகச்சியை (நிர்வாக ஆளுநர்) அங்கு நிலைநிறுத்தியது. காஷ்மீர் மங்கோலியச் சார்புப் பகுதியானது.[4] அந்நேரத்தில் ஒடோச்சி என்ற பெயருடைய ஒரு காஷ்மீரிய புத்த குருவும் மற்றும் அவரது சகோதரர் நமோ என்பவரும் ஒக்தாயி கானின் அரசவைக்கு வருகை புரிந்தனர். பெஷாவரை மற்றொரு மங்கோலியத் தளபதியான பக்சக் தாக்கினார். ஜலாலுதீனிடம் இருந்து பிரிந்த பழங்குடியினத்தவரின் இராணுவத்தைத் தோற்கடித்தார். ஏனெனில் அவர்கள் மங்கோலியர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்கினர். பெரும்பாலும் கல்ஜிகளாக இருந்த அந்தப் பழங்குடியினத்தவர்கள் முல்தானுக்குத் தப்பி ஓடினர். பிறகு தில்லி சுல்தானகத்தின் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1241ஆம் ஆண்டின் குளிர் காலத்தில் மங்கோலிய இராணுவமானது சிந்து சமவெளி மீது படையெடுத்தது. லாகூரை முற்றுகையிட்டது. எனினும் டிசம்பர் 30, 1241 அன்று முங்கேட்டு தலைமையிலான மங்கோலியர்கள் தில்லி சுல்தானகத்திடம் இருந்து விலகுவதற்கு முன் இலாகூர் நகர மக்களைக் கொன்றனர். அதே வருடத்தில் (1241) பெரிய கான் ஒக்தாயி இறந்தார்.

1254-55இல் காஷ்மீரிகள் புரட்சி செய்தனர். 1251இல் பெரிய கானாகப் பதவியேற்ற மோங்கே கான் தனது தளபதிகளான சலி மற்றும் தகுதரை காஷ்மீர் அவையை மாற்றம் செய்ய நியமித்தார். மேலும் அவர் காஷ்மீரின் தருகச்சியாகப் புத்த குரு ஒடோச்சியை நியமித்தார். எனினும் காஷ்மீர் மன்னர் ஸ்ரீநகரில் ஒடோச்சியைக் கொலை செய்தார். காஷ்மீர் மீது படையெடுத்த சலி மன்னரைக் கொன்று புரட்சியை ஒடுக்கினர். அதன் பிறகு பல வருடங்களுக்கு மங்கோலியப் பேரரசின் ஒரு பகுதியாகக் காஷ்மீர் தொடர்ந்தது.[5]

தில்லி சுல்தானகத்துடனான மோதல்கள்

தில்லி இளவரசரான ஜலாலுதீன் மசூத், மங்கோலியத் தலைநகரான கரகோரத்திற்குத் தனது அண்ணனிடம் இருந்து அரியணையைக் கைப்பற்ற மோங்கே கானின் உதவியைப் பெறுவதற்காக 1248இல் பயணம் செய்தார். மோங்கே பெரிய கானாக முடி சூட்டப்பட்ட பொழுது ஜலாலுதீன் மசூத் இவ்விழாவில் பங்கேற்று மோங்கேயிடமிருந்து உதவியை வேண்டினார். மசூத் தனது பூர்வீக உரிமையை பெற உதவுமாறு சலிக்கு மோங்கே ஆணையிட்டார். முல்தான் மற்றும் இலாகூர் மீது வெற்றிகரமான தாக்குதல்களைச் சலி நடத்தினார். ஹெராத்தின் பட்டத்து இளவரசனான சம் அல்-தின் முகமது கர்ட் மங்கோலியர்களுடன் இத்தாக்குதலில் இணைந்து செயல்பட்டார். இலாகூர், குஜா மற்றும் சோட்ரா ஆகிய இடங்களின் ஆட்சியாளராக ஜலாலுதீன் நியமிக்கப்பட்டார். 1257இல் சிந்து மாகாணத்தின் ஆளுநர் தனது முழு பகுதியையும் மோங்கேயின் தம்பியான குலாகு கானுக்குத் தர முன்வந்தார். அதற்குப் பதிலாக தில்லியிலுள்ள தனது ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மங்கோலியப் பாதுகாப்பை வேண்டினார். குலாகு சலி பகதூர் தலைமையில் ஒரு பலம் வாய்ந்த இராணுவத்தைச் சிந்து மாகாணத்திற்கு அனுப்பினார். 1257ஆம் ஆண்டின் குளிர்காலம் - 1258 ஆம் ஆண்டின் புது வருட பிறப்பு நேரத்தில் சலி நோயன் சிந்து மாகாணத்திற்குள் நுழைந்தார். முல்தானிலிருந்த கோட்டைப் பாதுகாப்புகளை அகற்றினார். சிந்து நதியில் இருக்கும் தீவுக் கோட்டையான பக்கரை இவரது படைகள் பலப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் குலாகு தில்லி சுல்தானகத்தின் மீது பெரியதொரு படையெடுப்பை எடுக்க மறுத்து விட்டார். சில வருடங்களுக்குப் பிறகு குலாகுவுக்கும் தில்லி சுல்தான்களுக்கும் இடையில் ஏற்பட்ட தூதுவ தொடர்புகள் அவர்கள் அமைதியை வேண்டினர் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

கியாசுத்தீன் பால்பனின் (ஆட்சி: 1266–1287) மனதை ஆட்கொண்டிருந்த ஒரு நினைவானது மங்கோலியப் படையெடுப்பால் ஏற்படும் ஆபத்து ஆகும். இக்காரணத்திற்காக அவர் கட்டுக்கோப்பான ஒரு இராணுவத்தைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய அளவிற்கு அமைத்திருந்தார். இதற்காகப் பால்பன் பாதிக்கப்படாத அல்லது பொறாமை குணம் உடைய தலைவர்களைப் பதவியில் அமர்த்துவதைத் தவிர்த்தார். இந்துக்களின் கையில் அதிகாரத்தை கொடுக்க மறுத்தார். மேலும் அவர் எப்பொழுதுமே தனது தலை நகருக்கு அருகிலேயே தங்கியிருந்தார். தூரப் பகுதிகளில் நடக்கும் போர்களுக்குச் செல்வதைத் தவிர்த்தார்.[6]

இந்தியா மீதான பெரிய அளவிலான மங்கோலியப் படையெடுப்புகள் நின்று போயின. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தித் தில்லி சுல்தான்கள் முல்தான், உச் மற்றும் இலாகூர் ஆகிய எல்லைப்புறப் பட்டணங்களை மீட்டெடுத்தனர். மேலும் குவாரசமியா அல்லது மங்கோலியப் படையெடுப்பாளர்களுடன் இணைந்த உள்ளூர் ரானாக்கள் மற்றும் ராய்களுக்குத் தண்டனை கொடுக்க இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மங்கோலியப் படையெடுப்புகளின் விளைவாகத் தில்லி சுல்தானகத்தில் தஞ்சமடைந்த பெரிய எண்ணிக்கையிலான பழங்குடியினங்கள் வட இந்தியாவில் இருந்த அதிகார அமைப்பை மாற்றின. கல்ஜி பழங்குடியினம் பழைய தில்லி சுல்தான்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. விரைவிலேயே இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தங்களது அதிகாரத்தை விரிவுபடுத்தியது. இதே காலகட்டத்தில் (1300) இந்தியாவுக்குள் மங்கோலியப் படையெடுப்புகள் மீண்டும் தொடங்கின.

சகதாயி கானரசு-தெகலாவிப் போர்கள்

தில்லி சுல்தானகத்தின் மேம்பாடு

நடுக்கால ஆதாரங்கள் படையெடுத்து வந்த மங்கோலியர்கள் இலட்சக்கணக்கில் இருந்ததாகக் கூறுகின்றன. அந்நேரத்தில் நடு ஆசியா அல்லது மத்திய கிழக்கில் இருந்த மங்கோலியக் குதிரைப் படையினரின் ஒரு தோராயமான மொத்த எண்ணிக்கையானது 1,50,000 படை வீரர்களே ஆகும். இந்த ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மங்கோலியத் தளபதிகளின் எண்ணிக்கையானது, எவ்வளவு மங்கோலிய வீரர்கள் படையெடுப்புகளில் பங்கு பெற்றனர் என்பதைப் பற்றிய ஒரு தெளிவை நமக்கு உணர்த்தும். அத்தளபதிகள் அநேகமாக ஒரு தியுமன் படை வீரர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கி இருக்க வேண்டும். ஒரு தியுமன் என்பது பெயரளவில் 10,000 வீரர்களை உள்ளடக்கியதாகும்.[7] இந்தப் படையெடுப்புகள் செங்கிஸ் கானின் பல்வேறு வழித்தோன்றல்கள் அல்லது மங்கோலிய இராணுவத்தின் படைப்பிரிவுகளின் தளபதிகளால் தலைமை தாங்கப்பட்டன. இத்தகைய படைகளின் அளவானது 10,000 முதல் 30,000 குதிரைப் படையினர் ஆகும். ஆனால் தில்லியில் இருந்த வரலாற்றாளர்கள் 1,00,000-2,00,000 குதிரைப் படையினரைக் கொண்டிருந்ததாக மிகைப்படுத்திக் கூறினர்.[8]

சகதாயிகளின் வளர்ச்சி

13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சகதாயி கானரசு மற்றும் அதன் அண்டை நாடுகள்.

1260களில் மங்கோலியப் பேரரசின் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தபோது நடு ஆசியாவைச் சகதாயி கானரசுத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதன் தலைவராக 1280கள் முதல் துவா என்பவர் இருந்தார். அவர் கய்டு கானுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். ஆப்கானித்தானில் செயல்பட்டுக் கொண்டிருந்த துவா இந்தியாவுக்கும் மங்கோலிய ஆட்சியை நீட்டிக்க முயற்சிகள் செய்தார். இஸ்லாமிய சமயத்தையும் நெகுதர் இனத்தையும் சேர்ந்த ஆளுநரான அப்துல்லா, சகதாயி கானின் நான்காவது தலைமுறை வழித்தோன்றல்[9] ஆவார். அவர் 1292இல் தனது படையுடன் பஞ்சாபின் மீது படையெடுத்தார். ஆனால் அவர்களது முன்வரிசைப் படையானது தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர் உல்கு, கல்ஜியின் சுல்தானான ஜலாலுதீனால் சிறைப் பிடிக்கப்பட்டார். இவ்வாறாகப் பிடிக்கப்பட்ட 4,000 மங்கோலியக் கைதிகள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு தில்லிக்குக் கொண்டு வரப்பட்டு "புதிய முஸ்லிம்கள்" என்ற பெயருடன் வாழ ஆரம்பித்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதி சரியாக முகலாயபுரம் என்று பெயரிடப்பட்டது.[10][11] 1296–1297இல் சகதாயி தியுமன்கள் தில்லி சுல்தானகத்தால் பலமுறை தோற்கடிக்கப்பட்டன.[12]

ஜரன்-மஞ்சூர் யுத்தம்

பின்னர் மங்கோலியர்கள் ஜலாலுதீனுக்குப் பின்வந்த அலாவுதீனின் ஆட்சிக்காலத்தில் வட இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தனர். குறைந்தது இருமுறையாவது அவர்கள் நல்ல படைபலத்துடன் வந்தனர். 1297ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் சகதாயி நோயனான காதர் தனது இராணுவத்துடன் வந்து பஞ்சாப் பகுதியைச் சூறையாடினார். மேலும் அவர் கசூர் வரை முன்னேறி வந்தார்.[13] 1298ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உலுக் கான் (மற்றும் ஜாபர் கான்) தலைமை தாங்கிய அலாவுதீனின் இராணுவமானது படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தது.[13]

செக்வான் முற்றுகை

1298–99ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு மங்கோலிய இராணுவமானது (தப்பியோடிய கரவுனாக்களாக இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது) சிந்து பகுதி மீது படையெடுத்தது. சிவிஸ்தான் கோட்டையை ஆக்கிரமித்தது. அவர்கள் நெகுதர் இனத்தில் இருந்து தப்பித்தவர்களாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.[14] இந்த மங்கோலியர்கள் ஜாபர்கானால் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டு தில்லிக்கு கைதிகளாகக் கொண்டு வரப்பட்டனர்.[15] அந்த நேரத்தில் அலாவுதீனின் இராணுவத்தின் முக்கியப் படையானது உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கான் ஆகியவர்களால் தலைமை தாங்கப்பட்டு குஜராத்தை சூறையாடிக் கொண்டிருந்தது. இந்த இராணுவம் குஜராத்தில் இருந்து தில்லிக்கு திரும்பி வந்துகொண்டிருந்த பொழுது இதிலிருந்த மங்கோலிய வீரர்களில் சிலர் தங்களுக்கு கொடுக்க வேண்டிய கும்ஸ் (சூறையாடப்பட்ட பொருட்களை பிரித்துக் கொடுப்பதில் ஐந்தில் ஒரு பங்கு) காரணமாகக் கலகம் செய்தனர்.[16] இந்தக் கலகமானது ஒடுக்கப்பட்டது. தில்லியில் இருந்த கலகக்காரர்களின் குடும்பங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டன.[17]

கிளி யுத்தம்

1299ஆம் ஆண்டின் பிற்பகுதியில் துவா தனது மகன் குத்லுக் கவாஜாவை தில்லியை வெல்வதற்காக அனுப்பினார்.[18] அலாவுதீன் தனது இராணுவத்தை டில்லிக்கு அருகில் கிளி என்ற இடத்திற்குக் கொண்டு சென்றார். போரைத் தாமதப்படுத்த முயன்றார். இராணுவ உதவிப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக மங்கோலியர்கள் பின் வாங்குவார்கள் என நம்பினார். அதே நேரத்தில் தனது மாகாணங்களிலிருந்து வலுவூட்டல் படைகள் வந்து சேரும் என நம்பினார். ஆனால் அலாவுதீனின் தளபதியான ஜாபர் கான் அலாவுதீனின் அனுமதியின்றி மங்கோலிய இராணுவத்தைத் தாக்கினார்.[19] மங்கோலியர்கள் தோற்று ஓடுவதுபோல் ஓட ஆரம்பித்தனர். ஜாபர் கானின் இராணுவத்தைத் தங்களைப் பின் தொடருமாறு வரச்செய்து பொறியில் சிக்க வைத்தனர். படையெடுப்பாளர்கள் மீது கடுமையான சேதத்தை விளைவித்த பின்னர் ஜாபர்கான் மற்றும் அவரது வீரர்கள் கொல்லப்பட்டனர்.[20] சில நாட்களுக்குப் பிறகு மங்கோலியர்கள் பின்வாங்கினர். அவர்களது தலைவர் குத்லுக் கவாஜா படுகாயமடைந்தார். திரும்பிச் செல்லும் வழியில் இறந்தார்.[21]

தில்லி முற்றுகை

1302-03இன் குளிர் காலத்தில் அலாவுதீன் ககதியர்களின் தலைநகரான வாராங்கலைச் சூறையாடத் தனது இராணுவத்தை அனுப்பினார். சித்தூரை முற்றுகையிடத் தானே கிளம்பினார். பாதுகாப்பின்றி இருந்த தில்லியைக் கவனித்த மங்கோலியர்கள் 1303ஆம் ஆண்டின் ஆகத்து மாதவாக்கில் மற்றொரு படையெடுப்பை ஆரம்பித்தனர்.[22] படையெடுப்பாளர்கள் வரும் முன்பே தில்லிக்கு அலாவுதீன் சென்றடைந்தார். ஆனால் ஒரு வலிமையான தற்காப்பை அமைப்பதற்கு அவருக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. அந்நேரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் ஒரு முகாம் அமைத்து கடுமையான பாதுகாப்புடன் அவர் தங்கியிருந்தார். தில்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகளை மங்கோலியர்கள் சூறையாடினர். ஆனால் சிரி கோட்டையை வெல்ல முடியாத காரணத்தால் இறுதியாகப் பின்வாங்கினர்.[23] மங்கோலியர்களுடன் ஏற்பட்ட இந்த நெருக்கமான சண்டை மங்கோலியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கான பாதைகள் முழுவதும் இருந்த கோட்டைகள் மற்றும் இராணுவ இருப்பை வலிமையாக்க அலாவுதீனைத் தூண்டியது.[24] மேலும் ஒரு வலிமையான இராணுவத்தை பராமரிக்கத் தேவையான போதிய அளவு வருமானத்தை உறுதி செய்வதற்காக அலாவுதீன் தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார்.[25]

இந்த நிகழ்வுகளுக்குச் சிறிது காலத்திற்குப் பிறகு துவா கான், யுவான் ககான் தெமுர் ஒல்ஜெய்டுவுடன் நடந்து கொண்டிருந்த சண்டைகளை நிறுத்த விரும்பினார். 1304ஆம் ஆண்டு வாக்கில் மங்கோலியக் கானரசுகளுக்கு இடையில் ஒரு பொதுவான அமைதி அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் யுவான் அரசமரபு மற்றும் மேற்கு கானரசுகளுக்கு இடையில் இருந்த சண்டை நிறுத்தப்பட்டது. இவ்வாறாக சுமார் 25 வருடங்களுக்கு நீடித்தது. இது நடந்த உடனேயே துவா கான் இந்தியா மீது ஒரு கூட்டு மங்கோலியத் தாக்குதலை நடத்த முன்மொழிந்தார். ஆனால் அந்தப் படையெடுப்பு பொருள்வயமாக்கப்படவில்லை.

அம்ரோகா யுத்தம்

1305ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் துவா மீண்டும் ஒரு இராணுவத்தை அனுப்பினார். அந்த இராணுவமானது கடுமையான காவலுடன் இருந்த தில்லி நகரத்தைத் தாண்டி தென்கிழக்கு திசையில் இமயமலை அடிவாரத்தின் வழியே கங்கைச் சமவெளிக்கு முன்னேறியது. மாலிக் நாயக்கால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் 30,000 வீரர்களைக் கொண்ட வலிமையான குதிரைப்படை அம்ரோகா யுத்தத்தில் மங்கோலியர்களைத் தோற்கடித்தது.[26][27] பெரும் எண்ணிக்கையிலான மங்கோலியர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[28]

இராவி யுத்தம் (1306)

1306இல் அனுப்பப்பட்ட மற்றொரு மங்கோலிய இராணுவம் இராவி ஆறு வரை முன்னேறியது. வரும் வழியில் இருந்த பகுதிகளைச் சூறையாடியது. இந்த இராணுவத்தில் மூன்று பிரிவுகள் இருந்தன. அவை கோபேக், இக்பால்மண்ட் மற்றும் தை-பு ஆகியவர்களால் தலைமை தாங்கப்பட்டன. மாலிக்கபூர் தலைமை தாங்கிய அலாவுதீனின் படைகள் படையெடுப்பாளர்களை உறுதியுடன் தோற்கடித்தன.[29]

தில்லியின் பதில் தாக்குதல்கள்

அதே வருடத்தில் மங்கோலியக் கானான துவா இறந்தார். அவருக்கு அடுத்து அரியணைக்கு யார் வருவது என்ற சண்டையில் இந்தியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள் நின்று போயின. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அலாவுதீனின் தளபதியான மாலிக் துக்ளக் தற்கால ஆப்கானித்தானில் இருந்த மங்கோலியப் பகுதிகளின் மீது அடிக்கடித் தாக்குதல்களை நடத்தினார்.[30][31]

பிற்கால மங்கோலியப் படையெடுப்புகள்

1320இல் ஜுல்ஜு (துலுச்சா) தலைமையிலான கரவுனாக்கள் ஜீலம் பள்ளத்தாக்கு வழியாக எவ்வித எதிர்ப்புமின்றி காஷ்மீருக்குள் நுழைந்தனர். ஜுல்ஜுவுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதன் மூலம் அவரைப் பின் வாங்க வைக்க காஷ்மீர் மன்னர் சுகாதேவா முயற்சித்தார்.[32] மங்கோலியர்களை எதிர்க்க படையை ஆயத்தமாக்க முடியாத சுகாதேவா கிசுத்துவாருக்குத் தப்பி ஓடினார். காஷ்மீர் மக்கள் ஜுல்ஜுவின் கருணையை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மங்கோலியர்கள் குடியிருப்புகளை எரிக்க ஆரம்பித்தனர். ஆண்களைக் கொன்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாக்கினர். லார் கோட்டையில் மன்னரின் தளபதியான இராமச்சந்திராவின் கீழ் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் மட்டும் பாதுகாப்புடன் இருந்தனர். படையெடுப்பாளர்கள் எட்டு மாதங்களுக்குக் குளிர்காலம் தொடங்கும் வரை தங்களது அழிப்பைத் தொடர்ந்து நடத்தினர். பிரினால் வழியாக திரும்பி செல்லும்போது திவாசார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜுல்ஜு தன் வீரர்கள் மற்றும் கைதிகள் பெரும்பாலானவர்களைப் பறிகொடுத்தார்.

சுல்தானகத்தில் கல்ஜிக்களுக்குப் பிறகு துக்ளக் அரசமரபு ஆட்சிக்கு வந்தபோது அடுத்த பெரிய மங்கோலியப் படையெடுப்பு நடைபெற்றது. 1326இல் தர்மசிரின் தில்லிக்கு அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தூதுவர்களை அனுப்பினார். 1327இல் தர்மசிரின் தலைமையிலான சகதாயி மங்கோலியர்கள் எல்லைப்புறப் பட்டணங்களான லம்கான் மற்றும் முல்தானைச் சூறையாடினர். தில்லியை முற்றுகையிட்டனர். தனது சுல்தானகத்தை அதிகமான பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக துக்ளக் ஆட்சியாளர் ஒரு பெரிய தொகையை மங்கோலியர்களுக்கு கொடுத்தார். தர்மசிரின் குராசான் பகுதியையும் தாக்கியிருந்தார். இதன் காரணமாக ஈல்கானரசு அரசமரபின் அபு சயித்துடன் தர்மசிரினுக்கு எதிராக ஒரு கூட்டணியை ஏற்படுத்த முகமது பின் துக்ளக் முயற்சித்தார். ஆனால் தர்மசிரினுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தக் கூடிய அளவிற்கு அந்த முயற்சி பொருள்வயமாக்கப்படவில்லை.[33] தர்மசிரின் புத்த மதத்தைப் பின்பற்றினார். ஆனால் பிற்காலத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். சகதாயி கானரசிலிருந்த மத ரீதியான பிரச்சினைகள் மங்கோலியர்களைப் பிரிப்பதில் ஒரு காரணியாக விளங்கின.

தர்மசிரினின் தில்லி முற்றுகைக்குப் பிறகு இந்தியாவின் மேல் பெரிய அளவிலான படையெடுப்புகள் மங்கோலியர்களால் நடத்தப்படவில்லை. எனினும் வடமேற்குப் பகுதியில் இருந்த பல உள்ளூர் அரசுகளில் சிறு குழுக்களாக மங்கோலியர்கள் இராணுவத்தில் பணியாற்றினர். அமீர் கசகான் என்பவர் வட இந்தியா மீது தனது கரவுனாக்கள் மூலம் தாக்குதலை நடத்தினார். மேலும் அவர் 1350ஆம் ஆண்டு தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிற்கு உதவி புரிவதற்காகப் பல்லாயிரக்கணக்கான வீரர்களை துக்ளக்கின் நாட்டில் நடந்த கலகத்தை ஒடுக்குவதற்காக அனுப்பினார்.

தைமூர் மற்றும் பாபர்

தைமூர்
1397–1398இன் குளிர்காலத்தில் தைமூர் தில்லியின் சுல்தானான நசீரல்தீன் மஹ்மும் துக்ளக்கைத் தோற்கடிக்கிறார்.
16ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படையெடுத்த, தைமூர் வழிவந்த துருக்கிய-மங்கோலிய வழித்தோன்றலான பாபர்.

தில்லி சுல்தான்கள் மங்கோலியா மற்றும் சீனாவில் இருந்த யுவான் அரசமரபு, மற்றும் பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஈல்கானரசு ஆகிய அரசுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டனர். 1338வாக்கில் தில்லியின் சுல்தான் முகமது பின் துக்ளக், தோகோன் தெமுரின் (பேரரசர் ஹுயிசோங்) தலைமையிலான யுவான் அவைக்கு மொராக்கோவைச் சேர்ந்த பயணியான இபின் பட்டுடாவை தூதராக அனுப்பி வைத்தார். இபின் பட்டுடா கொண்டுசென்ற பரிசுப் பொருட்களில் 200 அடிமைகளும் இருந்தனர்.

அந்த நேரத்தில் சகதாயி கானரசானது பல நாடுகளாகப் பிரிந்தது. மூர்க்கமான மங்கோலியத் துருக்கியத் தலைவரான தைமூர் நடு ஆசியா மற்றும் அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தைமூரின் இரு கொள்கைகளானவை ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்லாமியமயமாக்கம் ஆகியவை ஆகும். தைமூர் தனது பேரரசில் இருந்த மங்கோலியப் பழங்குடியினங்களைப் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றினார். தன்னுடைய சொந்த இராணுவத்தில் துருக்கிய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். மேலும் தைமூர் சகதாயி கானரசு முழுவதும் இஸ்லாமிய நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தார். இவரது பேரரசில் ஷரியா சட்டங்கள் பின்பற்றப்பட்டன. செங்கிஸ் கானின் ஷாமன் மதச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. போர் தொடங்குவதற்காகவும் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்கும் தைமூர் இந்தியாவின் மீது 1398ஆம் ஆண்டு படையெடுத்தார்.

தைமூரின் பேரரசானது சிதறுண்டது. அவரது வழித்தோன்றல்கள் நடு ஆசியாவைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தவறினர். இதனால் அப்பேரரசு பல்வேறு சிற்றரசுகளாகப் பிரிந்தது. சகதாயி மங்கோலியர்கள் மற்றும் தைமூர் ஆகியோரின் வழித்தோன்றல்கள் அருகருகே வசித்து கொண்டு சில நேரங்களில் சண்டையிட்டும் சில நேரங்களில் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டும் வாழ்ந்தனர்.

இவ்வாறான ஒரு திருமண பந்தத்தின் மூலம் பிறந்தவர் தான் முகலாயப் பேரரசை நிறுவிய பாபர்.[34] பாபரின் தாய் தாஷ்கண்டை ஆண்ட மங்கோலியக் கான்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். பாபர் தைமூரின் உண்மையான வழித்தோன்றல் ஆவார். தைமூரின் நம்பிக்கைகளை அவரும் கொண்டிருந்தார். செங்கிஸ் கானின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறைபாடுள்ளவை என்று கருதிய பாபர் "அவற்றிற்கு தெய்வீகத் தன்மையுடைய அதிகாரம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாபரின் சொந்தத் தாய் மங்கோலியப் பெண்ணாக இருந்த போதிலும், மங்கோலிய இனத்தை பாபருக்குப் பிடிக்கவில்லை. மங்கோலியர்களுக்கு எதிராகப் பாபர் தனது சுயசரிதையில் கடினமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்:

"முகலாயர்கள் ஒரு தேவதை இனம் என்றால், அது மோசமாக இருக்கும்,
தங்கத்தில் கூட எழுதுங்கள், முகலாய பெயர் மோசமாக இருக்கும்."

பாபர் காபூலை ஆக்கிரமித்து இந்திய துணைக்கண்டத்தின் மீது படையெடுக்கத் தொடங்கிய போது சகதாயி கானரசில் இருந்து வந்த முந்தைய படையெடுப்பாளர்களைப் போலவே அவரும் முகலாயர் என்றே அழைக்கப்பட்டார். தைமூரின் படையெடுப்பு கூட மங்கோலியப் படையெடுப்பு என்றே கருதப்பட்டது. ஏனெனில் மங்கோலியர்கள் நடு ஆசியாவை நீண்ட காலத்திற்கு ஆட்சிபுரிந்து அங்கு வாழ்ந்த மக்களுக்குத் தங்களது பெயரை வழங்கினர்.

உசாத்துணை

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்