மங்கோலியா

கிழக்காசியாவின் நிலஞ்சூழ் நாடு

மங்கோலியா[b] (Mongolia, /mɒŋˈɡliə/ () mong-GOH-lee) என்பது கிழக்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதற்கு வடக்கே உருசியாவும், தெற்கே சீனாவும் எல்லைகளாக உள்ளன. மங்கோலியாவின் மேற்குக் கோடி முனையானது கசக்கஸ்தானில் இருந்து வெறும் 23 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. வரை படத்தில் காணும் போது இப்பகுதியானது ஒரு நாற்சந்திப்பை ஒத்திருக்கலாம். இந்நாட்டின் பரப்பளவு 15,64,116 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த மக்கள்தொகை வெறும் 33 இலட்சமே ஆகும். உலகின் மிகவும் அடர்த்தி குறைவான இறையாண்மையுள்ள நாடாக இது திகழ்கிறது. நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடலை எல்லையாகக் கொண்டிராத உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடு மங்கோலியா ஆகும். இந்த நாட்டின் பெரும்பாலான நிலமானது ஸ்டெப்பி புல்வெளிகளால் மூடப்பட்டுள்ளது. இந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கே மலைகளும், தெற்கே கோபிப் பாலைவனமும் உள்ளன. இதன் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும் உலான் பத்தூர் திகழ்கிறது. தோராயமாக இந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேரை இந்நகரம் கொண்டுள்ளது.

மங்கோலியா
Mongolia
கொடி of மங்கோலியா
கொடி
சின்னம் of மங்கோலியா
சின்னம்
நாட்டுப்பண்: Монгол улсын төрийн дуулал
"தேசியப் பண்"
தலைநகரம்உலான் பத்தூர்[a]
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மங்கோலியம்
அதிகாரபூர்வ எழுத்துமுறைகள்
இனக் குழுகள்
(2020[2])
சமயம்
(2020[2])
மக்கள்மங்கோலியர்
அரசாங்கம்ஒருமுக சனாதிபதிக் குடியரசு[3]
• அரசுத்தலைவர்
உக்நாகீன் கூரெல்சூக்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
அமைப்பு
கிமு 209
1206
1691
• சிங் அரசில் இருந்து விடுதலை அறிவிப்பு
29 திசம்பர் 1911
26 நவம்பர் 1924
• தற்போதைய அரசியலமைப்பு
13 பெப்ரவரி 1992
பரப்பு
• மொத்தம்
1,564,116 km2 (603,909 sq mi) (18-ஆவது)
• நீர் (%)
0.67[4]
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
3,227,863[5] (134-ஆவது)
• அடர்த்தி
2.07/km2 (5.4/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
$47.1  பில்.[6] (124-ஆவது)
• தலைவிகிதம்
$13,611[6] (103-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
$15.7 பில்.[6] (136-ஆவது)
• தலைவிகிதம்
$4,542[6] (115-ஆவது)
ஜினி (2018)32.7[7]
மத்திமம்
மமேசு (2021) 0.739[8]
உயர் · 96-ஆவது
நாணயம்தோகுரோக் (MNT)
நேர வலயம்ஒ.அ.நே+7/+8[9]
திகதி அமைப்புஆஆஆஆ.மாமா.நாநா (பொ.ஊ)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+976
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMN
இணையக் குறி.mn, .мон

தற்போதைய மங்கோலியாவின் நிலப்பரப்பானது பல்வேறு நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்டுள்ளது. இதில் சியோங்னு, சியான்பே, உரூரன் ககானரசு, முதல் துருக்கியக் ககானரசு, இரண்டாம் துருக்கியக் ககானரசு, உயுகுர் ககானரசு மற்றும் பிற அரசுகளும் அடங்கும். 1206இல் செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். வரலாற்றின் மிகப் பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசாக இது உருவானது. இவரது பேரன் குப்லாய் கான் மைய சீனாவைக் கைப்பற்றினார். யுவான் அரசமரபை நிறுவினார். யுவான் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியர்கள் மங்கோலியாவுக்குப் பின் வாங்கினர். தயன் கான் மற்றும் தியூமன் சசக்த் கான் ஆகியோரின் சகாப்தங்களைத் தவிர்த்து பிற காலங்களில் தங்களுடைய முந்தைய வாழ்க்கை முறையான பழங்குடியினச் சண்டைகளை மங்கோலியர்கள் தொடர்ந்தனர். 16ஆம் நூற்றாண்டில் திபெத்தியப் பௌத்தமானது மங்கோலியாவுக்குப் பரவியது. சிங் அரசமரபானது மஞ்சு இனத்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அரசமரபு மங்கோலியாவை 17ஆம் நூற்றாண்டில் இணைத்துக் கொண்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்கில் இந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர்.[10][11] 1911இல் சிங் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியா விடுதலையை அறிவித்தது. ஆனால், சீனக் குடியரசிடமிருந்து உண்மையான சுதந்திரத்தை 1921ஆம் ஆண்டு தான் அடைந்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே மங்கோலியாவானது சோவியத் ஒன்றியத்தின் ஒரு சார்பு நாடாக மாறியது. 1924இல் ஒரு சோசலிசக் குடியரசாக மங்கோலிய மக்கள் குடியரசு நிறுவப்பட்டது.[12] 1989ஆம் ஆண்டின் பொதுவுடமைவாத எதிர்ப்புப் புரட்சிக்குப் பிறகு மங்கோலியா 1990ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இதன் சொந்த அமைதியான சனநாயகப் புரட்சியை நடத்தியது. பல கட்சி ஆட்சியமைப்பு, 1992ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் சந்தைப் பொருளாதாரத்துக்கான மாற்றம் ஆகியவற்றுக்கு இப்புரட்சி வழி வகுத்தது.

தோராயமாக 30% மக்கள் நாடோடிகளாகவோ அல்லது பகுதியளவு நாடோடிகளாகவோ உள்ளனர். பண்பாட்டில் குதிரையானது இன்னும் ஓர் அங்கமாகத் தொடர்கிறது. நாட்டின் பெரும்பான்மையான சமயமாக பௌத்தமும் (51.7%), இரண்டாவது பெரிய குழுவாக சமயம் சாராதவர்களும் (40.6%) உள்ளனர். மூன்றாவது பெரிய குழுவாக இசுலாமியர் (3.2%) உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கசக் இனத்தவர்களாக உள்ளனர். நாட்டின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். தோராயமாக 5% கசக்குகள், துவர்கள், மற்றும் பிற சிறுபான்மையினராக உள்ளனர். இவர்கள் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் அதிகளவில் உள்ளனர். ஐக்கிய நாடுகள் அவை, ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை, ஜி77, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, மற்றும் அணி சேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் ஓர் உறுப்பினராக மங்கோலியா உள்ளது. மேலும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் சர்வதேசக் கூட்டாளியாகவும் உள்ளது. 1997ஆம் ஆண்டு உலக வணிக அமைப்பில் மங்கோலியா இணைந்தது. பிராந்தியப் பொருளாதார மற்றும் வணிகக் குழுக்களில் இதன் பங்களிப்பை விரிவாக்க மங்கோலியா முயற்சி செய்து வருகிறது.[4]

சொற்பிறப்பியல்

மங்கோலியா
மங்கோலியப் பெயர்
மங்கோலிய சிரில்லிக் Монгол Улс
(மங்கோல் உளூசு)
மொங்கோலிய எழுத்துமுறை ᠮᠣᠩᠭᠣᠯ
ᠤᠯᠤᠰ

இலத்தீன் மொழியில் மங்கோலியா என்ற பெயரின் பொருளானது "மங்கோலியர்களின் நிலம்" என்பதாகும். மங்கோலியச் சொல்லான மங்கோல் எவ்வாறு தோன்றியது என்று தெரியவில்லை. ஒரு மலை அல்லது ஆற்றின் பெயராக பலவராக இது கொடுக்கப்படுகிறது. மங்கோலிய மோங்கே-தெங்கிரி-கல் ("அழிவற்ற வான் நெருப்பு")[13] என்பதன் ஒரு மருவிய வடிவமாக இது கருதப்படுகிறது, அல்லது உரூரன் ககானரசின் 4ஆம் நூற்றாண்டு நிறுவனரான முகுலு என்பவரிடம் இருந்து பெறப்பட்டது என்று கருதப்படுகிறது.[14] இவரது பெயரானது 'முங்கு' என்றும் முதலில் குறிப்பிடப்பட்டது.[15] தற்போதைய சீன மொழியில் மெங்வு, நடுக்கால சீன மொழியில் முவ்ன்கு என்றும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[16] 8ஆம் நூற்றாண்டின் தாங் அரசமரபின் வடக்குப் பழங்குடியினங்களின் பட்டியலில் சிவேயி பழங்குடியினத்தின் ஒரு பிரிவினராக இந்த முங்கு குறிப்பிடப்படுகின்றனர். இது லியாவோ கால முங்கு[15] என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.[17]

1125இல் லியாவோ அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியப் பீடபூமியில் ஒரு முன்னணிப் பழங்குடியினமாகக் கமக் மங்கோலியர்கள் உருவாயினர். எனினும், சுரசன்களால் ஆட்சி செய்யப்பட்ட சின் அரசமரபு மற்றும் தாதர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான போர்களால் கமக் மங்கோலியர்கள் பலவீனம் அடைந்தனர். இந்தப் பழங்குடியினத்தின் கடைசித் தலைவர் எசுகெய் ஆவார். இவரின் மகனான தெமுஜின் இறுதியாக அனைத்து சிவேயி பழங்குடியினங்களையும் ஒன்றிணைத்து மங்கோலியப் பேரரசாக்கினார் (எகெ மங்கோல் உளூசு). 13ஆம் நூற்றாண்டில் செங்கிஸ் கானின் ஆட்சிக்குக் கீழ் இருந்த மங்கோலிய மொழி பேசிய பழங்குடியினங்களின் ஒரு பெரிய குழுவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட ஒற்றைச் சொல்லாக மங்கோலியர் என்ற வார்த்தை உருவானது.[18]

13 பெப்ரவரி, 1992 அன்று மங்கோலியாவின் புதிய அரசியலமைப்புப் பின்பற்றப்பட்டதில் இருந்து அரசின் அதிகாரப்பூர்வப் பெயராக "மங்கோலியா" (மங்கோல் உளூசு) உள்ளது.

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய மற்றும் பண்டைக் காலம்

கோவ்து மாகாணத்தில் உள்ள கோயித் திசேங்கர் குகையானது[19] மாமூத், சிவிங்கிப் பூனை, இரட்டைத்திமில் ஒட்டகம் மற்றும் நெருப்புக் கோழிகளின் உயிரோட்டமுடைய வெளிர் சிவப்பு, பழுப்பு மற்றும் சிவப்புக் காவி வண்ண ஓவியங்களைக் (20,000 ஆண்டுகளுக்கு முன்னர்) கொண்டுள்ளது. பிரான்சில் 17,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட லசுகௌக்சு என்ற இடத்தில் வரையப்பட்ட ஓவியங்களை ஒத்து இக்குகையானது மங்கோலியாவின் லசுகௌக்சு என்ற செல்லப் பெயரைப் பெற்றுள்ளது. சைபீரியாவின் மால்டா கலாச்சாரத்தைச் சேர்ந்த பெண் தெய்வம் வீனசின் சிலைகள் (21,000 ஆண்டுகளுக்கு முன்னர்) வடக்கு மங்கோலியாவில் இருந்த மேல் பாலியோலித்திக் கலையின் தரத்திற்குச் சான்றாக உள்ளது. நோரோவ்லின், தம்சக்புலக், பயன்சக், மற்றும் இரசான் காத் போன்ற நியோலித்திக் விவசாயக் குடியிருப்புகள் (அண். 5,500-3,500 பொ. ஊ. மு.) குதிரை-சவாரி நாடோடிகளின் அறிமுகத்திற்கு முன்னரே இருந்தது. மங்கோலியாவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இது கருதப்படுகிறது. இப்பண்பாடே அதிக தாக்கத்தையுடைய பண்பாடாக மாறியது. செப்பு மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த அபனசேவோ பண்பாட்டின் (3,500-2,500 பொ. ஊ. மு.) போது மங்கோலியாவில் இருந்து பெறப்படும் தொல்லியல் சான்றுகளில் குதிரை-சவாரி செய்யும் நாடோடிகள் நன்முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.[20] நடு மங்கோலியாவின் கான்காய் மலைகளில் இந்த இந்தோ-ஐரோப்பியப் பண்பாடானது செயல்பாட்டில் இருந்தது. அபனசேவர்களின் சக்கரங்களுடைய வண்டிகளின் புதையலானது பொ. ஊ. மு. 2,200ஆம் ஆண்டிற்கு முன் காலமிடப்படுகிறது.[21] பிந்தைய ஒகுனேவ் பண்பாடு (பொ. ஊ. மு. 2,000), அன்ட்ரோனோவோ பண்பாடு (2,300–1,000 பொ. ஊ. மு.), கரசுக் பண்பாடு (1,500–300 பொ. ஊ. மு.) ஆகியவற்றின் மூலம் ஆயர் நாடோடி வாழ்க்கை முறை மற்றும் உலோக வேலைப்பாடுகள் நன்கு முன்னேற்றம் அடைந்தன. இது இறுதியாக பொ. ஊ. மு. 209ஆம் ஆண்டு இரும்புக் கால சியோங்னு பேரரசுடன் முடிவடைந்தது. பறக்கும் மான்களின் உருவங்களையுடைய கற்கள், சமாதிக்கு மேல் எழுப்பபப்டும் மேடுகளான கெரேக்சுர் குர்கன்கள், சதுர பாள சமாதிகள் மற்றும் பாறை ஓவியங்கள் ஆகியவற்றை சியோங்னு காலத்திற்கு முந்தைய வெண்கலக் காலமானது நினைவுச் சின்னங்களாகக் கொண்டுள்ளது.

நியோலித்திக் காலம் முதலே பயிர் செய்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் ஆயர் நாடோடி வாழ்க்கை முறையுடன் ஒப்பிடும் போது விவசாயமானது எப்போதுமே மிகச் சிறிய அளவிலேயே நடைபெற்றது. விவசாயமானது மங்கோலியாவுக்கு மேற்குப் பகுதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லது மங்கோலியாவிலேயே சுதந்திரமாக வளர்ச்சியடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. செப்புக் காலத்தின் போது மங்கோலியாவின் கிழக்குப் பகுதியில் இருந்தவர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், மேற்குப் பகுதியில் இருந்தவர்கள் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.[19] தொச்சாரியர்கள் (உயேசி) மற்றும் சிதியர்கள் வெண்கலக் காலத்தின் போது மேற்கு மங்கோலியாவில் வாழ்ந்து வந்தனர். இளம் பொன்னிற முடியுடைய 30 முதல் 40 வயதுடைய ஒரு சிதியப் போர் வீரனின் மம்மியானது மங்கோலியாவின் அல்த்தாய் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[22] இது சுமார் 2,500 ஆண்டுகள் பழையது என்று நம்பப்படுகிறது. குதிரை சார்ந்த நாடோடி வாழ்க்கை முறையானது மங்கோலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஐரோவாசியப் புல்வெளியின் அரசியல் மையமும் மங்கோலியாவிற்கு இடம் மாறியது. பொ. ஊ. 18ஆம் நூற்றாண்டு வரை மங்கோலியாவே ஐரோவாசியப் புல்வெளியின் அரசியல் மையமாகத் தொடர்ந்து இருந்தது. சாங் அரசமரபு (1600–1046 பொ. ஊ. மு.) மற்றும் சவு அரசமரபு (1046–256 பொ. ஊ. மு.) ஆகியவற்றின் காலத்தின் போது சீனாவுக்குள் வடக்கு ஆயர்களின் (எ. கா. குயிபங், சன்ரோங், மற்றும் தோங்கு) ஊடுருவல்கள் நாடோடிப் பேரரசுகளின் காலம் வரப்போகிறது என்பதன் முன் அறிகுறியாக இருந்தது.

தொடக்க அரசுகள்

உலான் பத்தூரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் எடுக்கப்பட்ட 7ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்கள்.

வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே மங்கோலியாவில் நாடோடிகள் வாழ்ந்து வந்துள்ளனர். காலம் விட்டு காலம் இந்த நாடோடிகள் சக்தி மற்றும் முக்கியத்துவத்தைப் பெற்ற பெரும் கூட்டமைப்புகளை அமைத்தனர். கானின் அலுவலகம், குறுல்த்தாய் (உச்சபட்ச அவை), இடது மற்றும் வலது பிரிவுகள், ஏகாதிபத்திய இராணுவம் (கெசிக்) மற்றும் தசம அடிப்படையிலான இராணுவ அமைப்பு ஆகியவை பொதுவான அமைப்புகளாக இருந்தன. இந்தப் பேரரசுகளில் முதன்மையானது சியோங்னு ஆகும். சியோங்னுவைத் தோற்றுவித்தவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்படவில்லை. மொடு சன்யூ பொ. ஊ. மு. 209இல் அனைத்துப் பழங்குடியினங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார். சீனாவின் சின் அரசமரபுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இவர்கள் சீக்கிரமே உருவாயினர். இதன் காரணமாக சின் அரசமரபு சீனப் பெருஞ்சுவரைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அழிவை ஏற்படுத்தக் கூடிய சியோங்னு ஊடுருவல்களுக்கு எதிராக ஒரு தற்காப்புக்காக அலுவலர் மெங் தியானின் காலத்தின் போது கிட்டத்தட்ட 3 இலட்சம் போர் வீரர்கள் இந்த சீனப் பெருஞ்சுவரைக் காத்து வந்தனர். பரந்த சியோங்னு பேரரசுக்குப் (பொ. ஊ. மு. 209-பொ. ஊ. 93) பிறகு மங்கோலிய சியான்பே பேரரசு (பொ. ஊ. 93-234) ஆட்சிக்கு வந்தது. தற்போதைய மங்கோலியாவின் முழுப் பகுதிக்கும் அதிகமான பரப்பை சியான்பே ஆண்டது. மங்கோலிய உரூரன் ககானரசு (330-555) தான் ஏகாதிபத்திய பட்டமான "ககான்" என்ற பட்டத்தை முதன் முதலில் பயன்படுத்திய அரசு ஆகும். உரூரன் ககானரசானது சியான்பே பூர்வீகத்தைக் கொண்டிருந்தது. இது ஒரு பரந்த பேரரசை ஆண்டது. பிறகு இதை விடப் பெரிய பேரரசான கோக் துருக்கியர்களால் (555-745) உரூரன் ககானரசு தோற்கடிக்கப்பட்டது.

கோக் துருக்கியர்கள் தற்போது கெர்ச் என்றழைக்கப்படும் பந்திகபேயம் நகரத்தை 576இல் முற்றுகையிட்டனர். கோக் துருக்கியர்களுக்குப் பிறகு உயுகுர் ககானரசு (745–840) ஆட்சிக்கு வந்தது. உயுகுர் ககானரசை கிர்கிசுக்கள் தோற்கடித்தனர். சியான்பேயின் வழித் தோன்றல்களான மங்கோலிய கிதான்கள் லியாவோ அரசமரபின் (907–1125) காலத்தின் போது மங்கோலியாவை ஆண்டனர். இதற்குப் பிறகு கமக் மங்கோல் (1125–1206) முக்கியத்துவம் பெற்றது.

நடு மங்கோலியாவில் பில்கே ககானின் (684–737) நினைவுக் கல்வெட்டின் 3 முதல் 5 வரையிலான வரிகள் ககான்களின் காலத்தை சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

யுத்தங்களில் இவர்கள் நான்கு திசைகளிலும் இருந்த நாடுகளை அடிபணிய வைத்தனர். அவர்களை ஒடுக்கினர். தலைகளை உடையவர்களை தலை வணங்குமாறு செய்தனர். முட்டிகளை உடையவர்களை மண்டியிட வைத்தனர். கிழக்கே கதிர் கான் பொது மக்கள் வரையிலும், மேற்கே இரும்பு வாயில் வரையிலும் இவர்கள் வென்றனர்... இந்த ககான்கள் புத்திசாலிகளாக இருந்தனர். இந்த ககான்கள் தலை சிறந்தவர்களாக இருந்தனர். இவர்களது பணியாளர்களும் கூட புத்திக் கூர்மையுடையவர்களாகவும், தலை சிறந்தவர்களாகவும் இருந்தனர். அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும், மக்களுடன் நேரடியாகத் தொடர்பிலும் இருந்தனர். இவர்கள் நாட்டை இவ்வழியில் ஆண்டனர். இவ்வாறாக மக்கள் மீது இவர்கள் தாக்கத்தைக் கொண்டிருந்தனர். இவர்கள் இறந்த போது போகுலி சோலுக் (பயேக்சே கொரியா), தப்கச் (தாங் சீனா), திபெத் (திபெத்தியப் பேரரசு), அவார்கள் (அவார் ககானரசு), உரோம் (பைசாந்தியப் பேரரசு), கிர்கிசு, உச் குரிகான், ஒதுசு-தாதர்கள், கிதான்கள், ததபிகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இறுதிச் சடங்கிற்கு வந்தனர். மகா ககான்களுக்காக துயரம் கொள்ள ஏராளமான மக்கள் வந்தனர். இவர்கள் மிகப் பிரபலமான ககான்களாக இருந்தனர்.[23]

மங்கோலியப் பேரரசு முதல் தொடக்க கால 20ஆம் நூற்றாண்டு வரை

மங்கோலியப் பேரரசின் விரிவாக்கம் (1206 முதல் 1294 வ்ரை)
1236–1242 ஐரோப்பா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்
தற்போதைய மங்கோலியருடன் ஒப்பிடும் போது 13ஆம் நூற்றாண்டு மங்கோலியப் பேரரசின் எல்லைகளை இந்த வரைபடம் காட்டுகிறது. இங்கு காட்டப்பட்டுள்ள சிவப்புப் பகுதியானது தற்போது மொங்கோலிய மொழி பேசும் பெரும்பாலான மக்கள் எங்கு வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.
அதன் அதிகபட்ச விரிவாக்கத்தின் போது வடக்கு யுவான் அரசமரபு.

பிந்தைய 12ஆம் நூற்றாண்டின் பெரிதும் ஒழுங்கற்ற நிலையின் போது மஞ்சூரியா மற்றும் அல்த்தாய் மலைத் தொடர்களுக்கு இடைப்பட்ட மங்கோலியப் பழங்குடியினங்களை ஒன்றிணைப்பதில் தெமுஜின் என்ற பெயருடைய ஒரு பழங்குடியினத் தலைவன் வெற்றி பெற்றான். 1206இல் அவன் செங்கிஸ் கான் எனும் பட்டத்தைப் பெற்றான். அதன் மிருகத் தனம் மற்றும் ஆக்ரோசத்திற்காகப் புகழ் பெற்ற ஒரு தொடர்ச்சியான இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்கினான். இது பெரும்பாலான ஆசியா முழுவதும் பெரிய, முக்கியமான மாற்ற விளைவுகளை ஏற்படுத்தியது. மங்கோலியப் பேரரசை அமைத்தான். உலக வரலாற்றின் மிகப் பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு இதுவே ஆகும். இவனது வழித் தோன்றல்களின் கீழ் இப்பேரரசு மேற்கே தற்போதைய போலந்து முதல் கிழக்கே தற்போதைய கொரியா வரையிலும், வடக்கே சைபீரியாவின் பகுதிகளிலிருந்து தெற்கே ஓமான் குடா மற்றும் வியட்நாம் வரையிலும் பரவியிருந்தது. 3.30 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இது கொண்டிருந்தது.[24] உலகின் மொத்த நிலப்பரப்பில் இது 22% ஆகும். இப்பேரரசு 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் உலக மக்கள் தொகையில் கால் பங்கு இதுவாகும். இப்பேரரசின் உச்சநிலையின் போது ஏற்பட்ட பாக்ஸ் மங்கோலியா எனப்படும் மங்கோலிய அமைதியானது ஆசியா முழுவதும் வணிகத்தைப் பெருமளவுக்கு எளிதாக்கியது.[25][26]

செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு பேரரசானது நான்கு இராச்சியங்கள் அல்லது கானரசுகளாகப் பிரிக்கப்பட்டது. 1259இல் மோங்கே கானின் இறப்பைத் தொடர்ந்து அதிகாரத்திற்கான யுத்தமானது வெடித்தது. இது டொலுய் உள்நாட்டுப் போர் (1260–1264) என்று அழைக்கப்படுகிறது. இந்த யுத்தத்திற்குப் பிறகு இந்தக் கானரசுகள் இறுதியாக வெளித் தோற்றத்தில் சுதந்திரம் பெற்றன. இந்தக் கானரசுகளில் ஒன்றான "மகா கானரசானது" மங்கோலியத் தாயகம் மற்றும் பெரும்பாலான தற்போதைய சீனாவை உள்ளடக்கியிருந்தது. இது செங்கிஸ் கானின் பேரன் குப்லாய் கானின் கீழ் யுவான் அரசமரபு என்று அறியப்பட்டது. குப்லாய் கான் தன்னுடைய தலை நகரத்தை தற்போதைய பெய்ஜிங்கில் அமைத்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த பிறகு 1368இல் யுவான் அரசமரபானது மிங் அரசமரபால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. யுவான் அரசவையானது வடக்கு நோக்கிப் பின் வாங்கியது. இவ்வாறாக வடக்கு யுவான் அரசமரபு என்றானது. மங்கோலியர்களை அவர்களது தாயகத்துக்குள் துரத்திச் சென்ற மிங் இராணுவங்கள் மங்கோலியத் தலைநகரான கரகோரம் மற்றும் பிற நகரங்களை வெற்றிகரமாகச் சூறையாடி அழித்தன. ஆயுசிறீதரன் மற்றும் அவரது தளபதி கோகே தெமூர் தலைமையிலான மங்கோலியர்கள் இந்தத் தாக்குதல்களில் சிலவற்றை முறியடித்தனர்.[27]

முதன்மையான சீனப் பகுதியிலிருந்து யுவான் ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு மங்கோலியர்கள் தங்களுடைய தாயகத்தைத் தொடர்ந்து ஆண்டு வந்தனர். இந்த அரசமரபானது வரலாற்றில் வடக்கு யுவான் அரசமரபு என்று அறியப்படுகிறது. மங்கோலியப் பழங்குடியினங்கள் பிரிக்கப்பட்டதானது இறுதியாக இவர்களுக்கு மத்தியில் "44" (தோசின் தோர்பன்) என்றும் அறியப்படுகிறது.[28] அடுத்த சில நூற்றாண்டுகள் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான வன்முறை நிறைந்த அதிகாரப் போட்டிகளைக் குறித்தன. குறிப்பாக செங்கிசியர்கள் மற்றும் செங்கிசியர் அல்லாத ஒயிரட்களுக்கு இடையில் இது நடைபெற்றது. மேலும் யோங்லே பேரரசனால் தலைமை தாங்கப்பட்ட ஐந்து போர்ப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு மிங் படையெடுப்புகளாலும் இக்காலம் குறிக்கப்படுகிறது.

முதல் மங்கோலியப் பேரரசன் செங்கிஸ் கான்

16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயன் கானும், அவரது கதுன் மந்துகையும் செங்கிசியர்களுக்குக் கீழ் அனைத்து மங்கோலியக் குழுக்களையும் மீண்டும் ஒன்றிணைந்தனர். 16ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் தயான் கானின் ஒரு பேரனும், துமேது இனத்தைச் சேர்ந்த ஆல்தான் கான் சக்தி வாய்ந்தவராக உருவாகினார். எனினும் தயங் கான் மரபு வழியாகப் பதவியைப் பெற்றவராகவோ அல்லது முறைமை வாய்ந்த கானாகவோ இருக்கவில்லை. இவர் 1557இல் கோகோத் நகரத்தை நிறுவினார். 1578இல் தலாய் லாமாவுடனான சந்திப்புக்குப் பிறகு மங்கோலியாவில் திபெத்தியப் பௌத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு இவர் ஆணையிட்டார். திபெத்தியப் பௌத்தமானது மங்கோலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது இது இரண்டாவது முறையாகும். கல்கா இனத்தைச் சேர்ந்த அப்தை கான் பௌத்தத்திற்கு மதம் மாறினார். 1585இல் எர்தின் சூ மடாலயத்தை தோற்றுவித்தார். இவரது பேரனான சனபசார் முதல் செப்துசுந்தம்பா குதுக்துவாக 1640ஆம் ஆண்டு உருவானார். தலைவர்களைத் தொடர்ந்து ஒட்டு மொத்த மங்கோலிய மக்களும் பௌத்தத்தைத் தழுவினர். ஒவ்வொரு குடும்பமும் புனித நூல்களையும், புத்தர் சிலைகளையும் ஒரு பீடத்தின் மீது தங்களது யூர்ட்டின் வடக்குப் பகுதியில் வைத்து வழிபட்டனர். மடாலயங்களுக்கு நிலம், நிதி மற்றும் மேய்ப்பாளர்களை மங்கோலிய உயர்குடியினர் நன்கொடையாகக் கொடுத்தனர். நிறுவப்பட்ட சமயங்களை உடைய அரசுகளில் காணப்படும் ஒரு வழக்கமான தன்மையாக உச்ச சமய அமைப்புகளான மடாலயங்களானவை தங்களுடைய ஆன்மீக சக்தியுடன் சேர்த்து குறிப்பிடத்தக்க அளவுக்கு சமயம் சாராத சக்தியையும் பயன்படுத்தும் வலிமையான நிலையில் இருந்தனர்.[29]

மங்கோலியர்களின் கடைசி கான் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட லிக்தன் கான் ஆவார். சீன நகரங்களைச் சூறையாடும் விவகாரத்தில் மஞ்சுக்களுடன் இவருக்கு சண்டை ஏற்பட்டது. பெரும்பாலான மங்கோலியப் பழங்குடியினங்களும் கூட தனித்து விடப்பட்டன. இவர் 1634ஆம் ஆண்டு இறந்தார். 1636ஆம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான உள் மங்கோலியப் பழங்குடியினங்கள் மஞ்சுக்களிடம் அடி பணிந்தன. மஞ்சுக்கள் சிங் அரசமரபைத் தோற்றுவித்தனர். 1691ஆம் ஆண்டு கல்கா இனத்தவர் இறுதியாக சிங் ஆட்சிக்கு அடி பணிந்தனர். இவ்வாறாக தற்போதைய மங்கோலியாவின் அனைத்து நிலப்பரப்பும் மஞ்சு ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. பல்வேறு சுங்கர்-சிங் போர்களுக்குப் பிறகு சுங்கர் மக்கள் (மேற்கு மங்கோலியர்கள் அல்லது ஒயிரட்கள்) 1757 மற்றும் 1758ஆம் ஆண்டில் சுங்கர் மீதான சிங் படையெடுப்பின் போது கிட்டத்தட்ட முழுவதுமாக கொன்று அழிக்கப்பட்டனர்.[30]

கோகோத் நகரத்தை நிறுவிய ஆல்தான் கான் (1507-1582). இவர் பௌத்தம் மங்கோலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட உதவி புரிந்தார். தலாய் லாமா என்ற பட்டத்தையும் இவர் தான் உருவாக்கினார்.

6 இலட்சம் சுங்கர்களில் சுமார் 80% அல்லது அதற்கு மேற்பட்டோர் நோய் மற்றும் போர்களின் காரணமாகக் கொல்லப்பட்டனர் என சில அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.[31] ஒப்பீட்டளவில் தன்னாட்சியானது வெளி மங்கோலியாவுக்குக் கொடுக்கப்பட்டது. துசீத் கான், செத்சன் கான், சசக்து கான் மற்றும் சயின் நோயோன் கான் ஆகியோரின் மரபு வழி செங்கிசியக் கானரசுகளால் வெளி மங்கோலியா நிர்வாகம் செய்யப்பட்டது. மங்கோலியாவின் செப்துசுந்தம்பா குதுக்து நடைமுறை ரீதியில் பெரும் அளவிலான அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இப்பகுதிக்குள் ஒட்டு மொத்த சீன குடியமர்வை மஞ்சுக்கள் தடை செய்தனர். மங்கோலியர்கள் தங்களது பண்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதியளித்தனர். உருசியாவில் இருந்த வோல்கா புல்வெளிக்கு இடம் பெயர்ந்த ஒயிரட்கள் கல்மிக்குகள் என்று பிற்காலத்தில் அறியப்பட்டனர்.

இக்காலத்திய முதன்மையான பாதையாக சைபீரியா வழியாகச் சென்ற தேயிலைச் சாலையானது திகழ்ந்தது. ஒவ்வொரு 25 முதல் 30 கிலோ மீட்டர்கள் வரையிலான தொலைவுக்கும் ஒரு முறை நிலையான நிலையங்கள் இச்சாலையில் அமைந்திருந்தன. 5 முதல் 30 வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் இந்த ஒவ்வொரு நிலையங்களையும் கவனித்துக் கொண்டன.

1911ஆம் ஆண்டு வரை ஒரு தொடர்ச்சியான கூட்டணிகள் மற்றும் திருமண பந்தங்கள், மேலும் இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் மங்கோலியா மீதான கட்டுப்பாட்டை சிங் அரசமரபானது பேணி வந்தது. குரீ, உலியசுதை, மற்றும் கோவ்து ஆகிய பகுதிகளில் அம்பன்கள் எனப்படும் மஞ்சு உயரதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். பல்வேறு நில மானிய முறையிலான மற்றும் சமயம் சார்ந்த நிலங்களாக நாடானது பிரிக்கப்பட்டிருந்தது. சிங் அரசமரபினரிடம் விசுவாசம் கொண்டிருந்த மக்களை அதிகாரத்தில் இது அமர வைத்தது. 19ஆம் நூற்றாண்டின் போக்கில் தங்களது குடிமக்களை நோக்கிய பொறுப்புகளுக்கு முக்கியத்துவத்தைக் குறைவாகக் கொடுத்து, தங்களது பிரதிநிதித்துவத்துக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து நிலப் பிரபுக்கள் செயல்பட ஆரம்பித்தனர். மங்கோலிய உயர்குடியினரின் செயல்பாடுகள், கடனுக்கு சீன வணிகர்களின் அதிகப்படியான வரி விதிப்பு, ஏகாதிபத்திய வரிகளை விலங்குகளாகப் பெறாமல் வெள்ளியாகப் பெற்றது ஆகியவை நாடோடிகள் மத்தியில் பரவலான வறுமைக்குக் காரணமானது. வெளி மங்கோலியாவில் 1911ஆம் ஆண்டு வாக்கில் 700 பெரிய மற்றும் சிறிய மடாலயங்கள் இருந்தன. இந்த மடாலயங்களின் 1,15,000 துறவிகள் மங்கோலிய மக்கள் தொகையில் 21% பேராக இருந்தனர். செப்துசுந்தம்பா குதுக்துவைத் தவிர்த்து மீண்டும் அவதாரம் எடுக்கும் பிற 13 உயர் லாமாக்கள் இருந்தனர். இவர்கள் "முத்திரையைத் தாங்கிய புனிதர்கள்" (தம்கதை குதுக்து) என்று வெளி மங்கோலியாவில் அழைக்கப்பட்டனர்.

நவீன வரலாறு

எட்டாவது செப்துசுந்தம்பா குதுக்துவான போகடு கான்
1917இல் ஒன்றிணைந்த மங்கோலியாவின் வரைபடம்

1911இல் சிங் அரசமரபின் வீழ்ச்சியைத் தொடர்ந்து போகடு கானுக்குக் கீழான மங்கோலியாவானது தன் சுதந்திரத்தை அறிவித்தது. ஆனால் புதிதாக நிறுவப்பட்ட சீனக் குடியரசானது மங்கோலியாவை தனது சொந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாகக் கருதியது. சீனக் குடியரசின் அதிபரான யுவான் ஷிக்காய் புதிய குடியரசை சிங் அரசமரபின் இடத்தைப் பிடித்தவர்களாகக் கருதினார். சிங் ஆட்சியின் போது மஞ்சுக்களால் மங்கோலியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே நிர்வாகம் செய்யப்பட்டதாகப் போகடு கான் கூறினார். 1911இல் சிங் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மஞ்சுக்களிடம் மங்கோலிய அடி பணிவின் ஒப்பந்தமானது முறைமையற்றதாகி விட்டதாகக் குறிப்பிட்டார்.[32]

போகடு கானால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியானது சிங் காலத்தின் போது முந்தைய வெளி மங்கோலியாவின் தோராயமான நிலப்பரப்பை உள்ளடக்கியதாக இருந்தது. 1919இல் உருசியாவில் அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து போர்ப் பிரபு சூ சுசேங் தலைமையிலான சீனத் துருப்புகள் மங்கோலியாவை ஆக்கிரமித்தன. வடக்கு எல்லையில் போரானது வெடித்தது. உருசிய உள்நாட்டுப் போரின் விளைவாக வெள்ளை உருசிய இராணுவத் தளபதியான கோமான் உங்கர்ன் தனது துருப்புக்களை மங்கோலியாவிற்கு அக்டோபர் 1920 அன்று வழி நடத்திச் சென்றார். நீசுலல் குரீ (தற்போதைய உலான் பத்தூர்) சீனப் படைகளை 1921ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் மங்கோலிய ஆதரவுடன் தோற்கடித்தார்.

உங்கர்னால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக ஒரு பொதுவுடமைவாத மங்கோலிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நிறுவுதலுக்கு ஆதரவளிக்க போல்செவிக் உருசியாவானது முடிவு செய்தது. 18 மார்ச் 1921 அன்று சீனப் படைகளிடமிருந்து கியக்தாவின் மங்கோலியப் பகுதியை இந்த மங்கோலிய இராணுவமானது பிடித்தது. 6 சூலை அன்று உருசிய மற்றும் மங்கோலியத் துருப்புகள் குரீ நகரத்திற்கு வந்தன. 11 சூலை 1921 அன்று மங்கோலியா மீண்டும் தனது சுதந்திரத்தை அறிவித்தது.[33] இதன் விளைவாக மங்கோலியா சோவியத் ஒன்றியத்துடன் அடுத்த ஏழு தசாப்தங்களுக்கு நெருக்கமான கூட்டணியைக் கொண்டிருந்தது.

மங்கோலிய மக்கள் குடியரசு

1924இல் போகடு கான் தொண்டைப் புற்று நோயால்[34] இறந்ததற்குப் பிறகு மங்கோலியாவின் அரசாட்சி முறைமையானது மாற்றப்பட்டது. சில ஆதாரங்கள் உருசிய ஒற்றர்களின் கையில் போகடு கான் இறந்தார் என்று குறிப்பிடுகின்றன.[35] பிறகு, மங்கோலிய மக்கள் குடியரசானது நிறுவப்பட்டது. 1928இல் கோர்லூகீன் சோயிபல்சன் அதிகாரத்திற்கு வந்தார். மங்கோலிய மக்கள் குடியரசின் (1921-1952) தொடக்க கால தலைவர்களில் பலர் ஒன்றிணைந்த-மங்கோலியா என்ற கொள்கைகளைக் கொண்டிருந்தனர். எனினும், மாறி வந்த உலக அரசியல் மற்றும் அதிகரித்து வந்த சோவியத் அழுத்தம் ஆகியவை இதைத் தொடர்ந்த காலத்தில் ஒன்றிணைந்த-மங்கோலிய இலக்குகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.

கோர்லூகீன் சோயிபல்சன் இசுடாலினின் காலத்தின் போது மங்கோலியாவிற்குத் தலைமை தாங்கினார். மும்முரமான அரசியல் கொடுமைப்படுத்தும் சூழ்நிலையில் ஆட்சி நடத்தினார்.

கோர்லூகீன் சோயிபல்சன் கால்நடைகளை ஒருங்கிணைப்பதையும், பௌத்த மடாலயங்கள் அழிக்கப்படுவதையும் தொடங்கி வைத்தார். இசுடாலின் கால ஒழித்துக் கட்டல்களை நடைமுறைப்படுத்தினார். இந்த ஒழித்துக் கட்டல்கள் ஏராளமான பௌத்தத் துறவிகள் மற்றும் பிற தலைவர்களின் கொலைக்கு இட்டுச் சென்றது. 1920களின் போது மங்கோலியாவில் மொத்த ஆண்களின் மக்கள் தொகையில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கினர் துறவிகளாக இருந்தனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மங்கோலியாவில் சுமார் 750 மடாலயங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன.[36]

1930இல் மங்கோலியர்கள் மீண்டும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்காக மங்கோலிய மக்கள் குடியரசுக்கு புரியத்தியர்களின் இடம் பெயர்வை சோவியத் ஒன்றியமானது நிறுத்தியது. மங்கோலியர்களுக்கு எதிராக சிவப்பு பயங்கரவாதத்தை நடத்தக் கோரிய இசுடாலினின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத மங்கோலியாவின் அனைத்துத் தலைவர்களும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படனர். கொல்லப்பட்டவர்களில் பெல்சிதீன் கெந்தன் மற்றும் அனந்தின் அமர் ஆகியோரும் உள்ளடங்குவர். 1937இல் மங்கோலியாவில் இசுடாலின் கால ஒழித்துக் கட்டல்கள் தொடங்கின. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளில் காட்டப்பட்டுள்ள படி, இசுடாலினின் செல்வாக்கின் கீழ் மங்கோலிய மக்கள் குடியரசில் 17,000 துறவிகள் கொல்லப்பட்டனர் என்று மதிப்பிடப்படுகிறது.[37] சர்வாதிகார அரசுக்குத் தலைமை தாங்கிய சோயிபல்சன் 1937 மற்றும் 1939க்கு இடையில் மங்கோலியாவில் இசுடாலின் கால ஒழித்துக் கட்டல்களை நடத்தினார். 1952இல் சோவியத் ஒன்றியத்தில் இவர் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார். பொதுவுடைமை அனைத்துலகத் தலைவரான போகுமிர் இசுமேரல், "மங்கோலியாவின் மக்கள் முக்கியம் கிடையாது, நிலம் முக்கியமானதாகும். மங்கோலியா இங்கிலாந்து, பிரான்சு மற்றும் செருமனி ஆகியவற்றை விட மிகப் பெரிய நிலமாகும்" என்றார்.[38][page needed]

1939ஆம் ஆண்டு கல்கின் கோலில் சப்பானியப் பதில் தாக்குதலுக்கு எதிராகச் சண்டையிடும் மங்கோலியத் துருப்புக்கள்

1931இல் சோவியத் ஒன்றியத்தின் அண்டைப் பகுதியான மஞ்சூரியா மீது சப்பான் படையெடுத்ததற்குப் பிறகு இந்தப் போர் முனையில் மங்கோலியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. 1939ஆம் ஆண்டில் சோவியத்-சப்பானிய எல்லைப் போரின் போது சப்பானிய விரிவாக்கத்திற்கு எதிராக மங்கோலியாவை சோவியத் ஒன்றியமானது வெற்றிகரமாக தற்காத்தது. உள் மங்கோலியாவை சப்பான் மற்றும் உள் மங்கோலியாவின் சப்பானியக் கைப்பாவை அரசான மெங்சியாங்கிடமிருந்து விடுதலை செய்வதற்காக 1939ஆம் ஆண்டின் கல்கின் கோல் யுத்தம் மற்றும் ஆகத்து 1945இன் சோவியத்-சப்பானியப் போரின் போது சப்பானுக்கு எதிராக மங்கோலியா சண்டையிட்டது.[39]

பனிப் போர்

பசிபிக் போரில் சோவியத் ஒன்றியத்தின் பங்கெடுப்புக்காக யால்ட்டா மாநாடானது பெப்ரவரி 1945இல் நடத்தப்பட்டது. யால்ட்டா மாநாட்டில் பங்கெடுக்க சோவியத் ஒன்றியத்தால் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாக போருக்குப் பிறகு வெளி மங்கோலியாவானது அதன் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிபந்தனையும் இருந்தது. வாக்கெடுப்பானது 20 அக்டோபர் 1945 அன்று நடைபெற்து. அதிகாரப் பூர்வ எண்ணிக்கையின் படி 100% வாக்காளர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.[40]

சீனா நிறுவப்பட்டதற்குப் பிறகு இரு நாடுகளுமே தம்மை 6 அக்டோபர் 1949 அன்று பரஸ்பரம் அங்கீகரித்துக் கொண்டன. எனினும், 1955இல் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய தைவான் மங்கோலிய மக்கள் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைத்துக் கொள்ளப்படுவதைத் தடுத்தது. வெளி மங்கோலியாவையும் சேர்த்து அனைத்து மங்கோலியாவையும் சீனாவின் பகுதியாக அங்கீகரிப்பதனால் இவ்வாறு தடுத்ததாகக் கூறியது. தைவான் எக்காலத்திலும் பயன்படுத்திய ஒரே ஒரு வீட்டோ அதிகாரமாக இது திகழ்கிறது. இவ்வாறாக தைவானின் தொடர்ச்சியான வீட்டோ அச்சுறுத்தல்களின் காரணமாக 1961ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் அவையில் மங்கோலியா இணையவில்லை. அந்த ஆண்டு மூரித்தானியாவை ஐக்கிய நாடுகள் அவையில் இணைப்பதற்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை இனி பயன்படுத்த மாட்டோம் என்று சோவியத் ஒன்றியம் ஒப்புக் கொண்டது. எந்த பிற புதிய சுதந்திர ஆப்பிரிக்க அரசுக்கும் எதிராக வீட்டோவைப் பயன்படுத்த மாட்டோம் என்று சோவியத் ஒன்றியம் ஒப்புக் கொண்டது. இதற்குப் பதிலாக மங்கோலியா ஐக்கிய நாடுகள் அவையில் சேர்த்து கொள்ளப்படும் என்பதை ஏற்றுக் கொண்டது. கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்ட தைவான், எதிர்ப்புக்குப் பணிந்து. 27 அக்டோபர் 1961 அன்று ஐக்கிய நாடுகள் அவையில் மங்கோலியா மற்றும் மூரித்தானியா ஆகிய இரு நாடுகளுமே இணைத்துக் கொள்ளப்பட்டன.[41][42][43]

மங்கோலிய அதிபரான எம்சாகீன் திசேதென்பால் சோவியத் ஒன்றிய நாடுகளில் நீண்ட காலத்திற்குச் சேவையாற்றிய தலைவராக திகழ்கிறார். இவர் 44க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அலுவல் பணியாற்றியுள்ளார்.

26 சனவரி 1952 அன்று சோயிபல்சனின் இறப்பிற்குப் பிறகு மங்கோலியாவில் எம்சாகீன் திசேதென்பால் ஆட்சிக்கு வந்தார். திசேதென்பால் மங்கோலியாவில் ஒரு முன்னணி அரசியல் தலைவராக 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு நீடித்தார்.[44] ஆகத்து 1984இல் மாஸ்கோவிற்கு திசேதென்பால் வருகை புரிந்த போது, அவருடைய கடுமையான உடல் நலக்குறைவானது அவரது ஓய்வு அறிவிப்பைப் பாராளுமன்றம் அறிவிக்கும் நிலைக்கு வழி வகுத்தது. அவருக்குப் பதிலாக சம்பின் பத்மோங் ஆட்சிக்கு வந்தார்.

பனிப் போருக்குப் பின்

1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியானது மங்கோலிய அரசியல் மற்றும் இளைஞர்கள் மீது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சனவரி 1990இல் இந்நாட்டு மக்கள் அமைதியான சனநாயகப் புரட்சியை நடத்தினர். இதன் மூலம் பல கட்சி ஆட்சி முறையுடைய அமைப்பும், ஒரு சந்தைப் பொருளாதாரமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், முந்தைய மார்க்சிய-லெனினிய மங்கோலிய மக்கள் புரட்சிக் கட்சியானது தற்போதைய சமூக சனநாயக மங்கோலிய மக்கள் கட்சியாக மாற்றமடைந்தது. இது நாட்டின் அரசியல் நிலையை மாற்றம் செய்தது.

1992இல் ஒரு புதிய அரசியல் அமைப்பானது அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பெயரில் இருந்து "மக்களின் குடியரசு" என்ற சொற்றொடர் கைவிடப்பட்டது. ஒரு சந்தைப் பொருளாதாரத்துக்கான மாற்றமானது பெரும்பாலும் பிரச்சினைக்கு உரியதாக இருந்தது. 1990களின் தொடக்கத்தின் போது இந்நாடானது அதிக விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பொருள் பற்றாக்குறைங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.[45] பொதுவுடமை சாராத கட்சிகளின் முதல் தேர்தல் வெற்றிகளானவை 1993 (அதிபர் தேர்தல்) மற்றும் 1996இல் (பாராளுமன்ற தேர்தல்) கிடைத்தது. ஆசிய ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகியவற்றில் உறுப்பினர் அந்தஸ்து பெற மங்கோலியாவின் விண்ணப்பத்திற்கு சீனா ஆதரவளித்தது. சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளர் தகுதியை மங்கோலியாவுக்குச் சீனா வழங்கியது.[46]

புவியியலும், கால நிலையும்

மங்கோலியாவின் தெற்குப் பகுதியை கோபி பாலைவனம் ஆக்கிரமித்துள்ளது. அதே நேரத்தில், வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் மலைப் பாங்கானவையாக உள்ளன.

15,64,116 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய மங்கோலியாவானது உலகின் 18வது பெரிய நாடாகத் திகழ்கிறது.[47] அடுத்த பெரிய நாடான பெருவைக் காட்டிலும் இது குறிப்பிடத்தக்க அளவுக்குப் பெரியதாக உள்ளது. இது பெரும்பாலும் 41° மற்றும் 52°வடக்கு அட்ச ரேகை, மற்றும் 87° மற்றும் 120°கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இந்நாட்டின் ஒரு சிறிய பகுதியானது 52° வடக்கு அட்ச ரேகையைத் தாண்டியும் உள்ளது. எடுத்துக் காட்டாக மங்கோலியாவின் வடக்குக் கோடிப் பகுதியானது செருமனியின் பெர்லின் மற்றும் கனடாவின் சசுகதூன் ஆகிய நகரங்களுடன் ஒத்த அட்ச ரேகையில் உள்ளது. அதே நேரத்தில், தெற்குப் பகுதியானது இத்தாலியின் உரோம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ ஆகியவற்றுடன் ஒரே அட்ச ரேகையைக் கொண்டுள்ளது. மங்கோலியாவின் மேற்கு கோடிப் பகுதியானது கொல்கத்தா நகரத்துடன் ஒத்த தீர்க்க ரேகையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், கிழக்கு கோடிப் பகுதியானது சீனாவின் சின்குவாங்தாவோ மற்றும் கங்சோவு, தைவானின் மேற்குக் கோடி முனை ஆகிய பகுதிகளுடன் ஒத்த தீர்க்க ரேகையைக் கொண்டுள்ளது. மங்கோலியா கசகசுதானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத போதும் மங்கோலியாவின் மேற்குக் கோடிப் புள்ளியானது கசகசுதானில் இருந்து வெறும் 36.76 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. இது வரை படத்தில் கிட்டத்தட்ட ஒரு நான் முனைச் சந்திப்பைப் போல காணப்படுகிறது.

மங்கோலியாவின் புவியியலானது வேறுபட்டதாக உள்ளது. மங்கோலியாவில் தெற்கே கோபிப் பாலைவனமும், வடக்கு மற்றும் மேற்கே குளிரான, மலைப் பாங்கான பகுதிகளும் காணப்படுகின்றன. பெரும்பாலான மங்கோலியாவானது மங்கோலிய-மஞ்சூரிய புல்வெளியை உள்ளடக்கியதாக உள்ளது. காட்டுப் பகுதிகள் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 11.2%மாக உள்ளன.[48] இது அயர்லாந்தின் (10%) சதவீதத்தை விட அதிகமானதாகும்.[49] ஒட்டு மொத்த மங்கோலியாவும் மங்கோலியப் பீடபூமியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. மங்கோலியாவில் உயரமான இடமானது தவன் போகடு மலைப் பகுதியில் உள்ள குயிதேன் சிகரம் ஆகும். இது மங்கோலியாவின் மேற்குக் கோடியில் 4,374 மீட்டர் உயரத்தில் உள்ளது. உருசியாவின் துவா பகுதியுடன் மங்கோலியா பகிர்ந்து கொள்ளும் உவசு ஏரியின் வடி நிலமானது ஓர் இயற்கையான உலகப் பாரம்பரியக் களமாகும்.

கால நிலை

ஓர் ஆண்டுக்கு 250க்கும் மேற்பட்ட வெயில் நாட்களைக் கொண்டுள்ளதன் காரணமாக மங்கோலியா "எல்லையற்ற நீல வானத்தின் நிலம்" அல்லது "நீல வான நாடு" (மொங்கோலியம்: "மோங் கோக் தெங்கரீன் ஓரோன்") என்று அறியப்படுகிறது.[50][51][52][53]

கோப்பன் காலநிலைப் பிரிவுகளின் மங்கோலிய வரைபடம்.

நாட்டின் பெரும்பாலான பகுதியானது கோடை காலத்தில் சூடாகவும், குளிர் காலத்தில் மிகவும் குளிருடனும் காணப்படுகிறது. சனவரி மாத சராசரி வெப்பநிலையானது -30° செல்சியசு என்ற அளவிற்குக் கீழிறங்கக் கூடியதாக உள்ளது.[54] குளிர் காலத்தில் சைபீரியாவிலிருந்து குளிர்ந்த, கடுமையான, மெல்லிய காற்றின் ஒரு பரந்த முனையானது வருகிறது. இது ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்ந்த வடி நிலங்களில் தங்குகிறது. அதே நேரத்தில், வெப்பக்கிரம மாறுகையின் (கடல் மட்டத்திலிருந்து உயரம் அதிகரிக்க வெப்பநிலையும் அதிகரிக்கும் நிலை) விளைவுகள் காரணமாக மலைகளின் உச்சிகள் வெது வெதுப்பாக காணப்படுகின்றன.

அரசாங்கமும், அரசியலும்

நிர்வாகப் பிரிவுகள்

மங்கோலிய மாகாணங்களின் சொடுக்கக் கூடிய வரைபடம்.

மங்கோலியா 21 மாகாணங்களாகவும் (ஐமக்குகள்) மற்றும் 331 மாவட்டங்களாகவும் (சம்கள்) பிரிக்கப்பட்டுள்ளது.[55] உலான் பத்தூரானது ஒரு தலை நகரமாக (மாநகரம்) மாகாண நிலையுடன் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. ஐமக்குகள் பின்வருமாறு:

தேசிய விடுமுறைகள்

திகதிவிடுமுறை
சனவரி முதலாம் திகதிபுத்தாண்டு
சனவரி அல்லது பெப்ரவரிபண்டைய புத்தாண்டு (Old new year (Tsagaan sar))
மார்ச் மாதம் எட்டாம் திகதிசர்வதேச மகளிர் தினம்
சூன் முதலாம் திகதிசிறுவர் தினம்
11ம்-12ம் திகதிகள் சூலைநாடம் விடுமுறை (Naadam Holiday)
நவம்பர் 26ம் திகதிசுதந்திர தினம்

சமயம்

2010 இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 53 வீதமானோர் பௌத்தர்கள் ஆவார்கள். அதுமட்டுமன்றி அங்கு சமய ஈடுபாடு இல்லாதவர்கள் 39% வீதமானோர் உள்ளார்கள்.

மங்கோலியாவில் உள்ள சமயங்கள்
சமயம்சனைத் தொகைவீதம்
%
மதமற்றவர்கள்735,28338.6
சமய ஈடுபாடுடையவர்கள்1,170,28361.4
பௌத்தம்1,009,35753.0
இஸ்லாம்57,7023.0
சமனிசம்55,1742.9
கிறித்தவம்41,1172.1
ஏனைய சமயங்கள்6,9330.4
மொத்தம்1,905,566100.0

மொழிகள்

மங்கோலியாவின் உத்தியோகபூர்வ மொழி மங்கோலியன் ஆகும். இது அங்குள்ள 95 வீதமான மக்களால் பேசப்படுகின்றது. இங்கு மங்கோலியன் சிரில்லிக் எழுத்துக்களே எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மங்கோலியா&oldid=3884235" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை