சந்திரகுப்த மௌரியர்

(சந்திரகுப்த மௌரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சந்திர குப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார். இதனால் சந்திர குப்தர் இந்திய துண்டைக்கண்டத்தின் பெரும்பகுதிகளை ஒன்றிணைத்த முதலாவது பேரரசர் என புகழப்படுகின்றார். சந்திரகுப்தர் சாணக்கியரின் உதவியுடன் மகத நாட்டின் ஆட்சியை நந்தர்களிடமிருந்து கைப்பற்றி மௌரிய வம்சத்தை நிறுவினார். இவர் தனது தலைநகரை பாடலிபுத்திரத்தில் அமைத்தார். இவரது ஆட்சி அண். 324 அல்லது 321 கி.மு. முதல் அண். 297 கி.மு. வரை நீடித்தது.

சந்திரகுப்த மௌரியர்
பேரரசர்
பேரரசர் சந்திர குப்த மெளரியர்
ஆட்சிஅண். 324 அல்லது 321 – அண். 297 கி.மு.
முடிசூட்டு விழாஅண். 324 அல்லது 321 கி.மு.
முன்னிருந்தவர்தன நந்தன்
பின்வந்தவர்பிந்துசாரர்
வாரிசு(கள்)பிந்துசாரர்
மரபுமௌரியர்
தந்தைமகாபத்ம நந்தன்
தாய்முரா
பிறப்புஅண். 350 கி.மு.
பாடலிபுத்திரம்
இறப்புஅண். 295 கி.மு.
சந்திரகிரி
சமயம்இந்து

கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோசு (Sandrokuptos), சாண்ட்ரோகாட்டோசு (Sandrokottos), ஆண்ட்ரோகாட்டசு (Androcottus) போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார். இவரது அரசவையில் கிரேக்க செலுசிட் பேரரசின் செலூக்கசு நிக்காத்தரின் தூதுவரான மெகசுதெனசு இருந்தார்.

வரலாற்று ஆதாரங்கள்

சந்திரகுப்தரின் வாழ்க்கையை பற்றி பண்டைய வரலாற்று கிரேக்க, இந்து, பௌத்த மற்றும் சமண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை பெருவாரியாக வேறுபடுகின்றன.[1]

ரோமானிய வரலாற்றாசிரியர் சசுடின் எழுதிய இரண்டாம் நூற்றாண்டு உரையைத் தவிர, கிரேக்க மற்றும் ரோமானிய நூல்களில் சந்திரகுப்தர் பெயர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இவற்றில் கடைசி நந்த மன்னர் அவருக்கு முன் இருந்த மன்னரின் அரியணையை அபகரித்த கதை பிரதானமாக குறிப்பிடப்படுகின்றன. சந்திரகுப்தர் ஒரு கீழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், சந்திரகுப்தரும் சாணக்கியரும் நந்த மன்னரை தோற்கடித்து, பின்னர் சந்திரகுப்தர் மகத நாட்டின் அரியணையில் அமர்ந்ததையும் சசுடின் குறிப்பிடுகிறார்.[1] சந்திரகுப்தர் அரசவையில் கிரேக்க செலுசிட் பேரரசின் செலூக்கசு நிக்காத்தரின் தூதுவரான மெகசுதெனசு இருந்தார். இவரது குறிப்புகள், சந்திரகுப்தர் அலெக்சாந்தருடன் சந்தித்ததாகக் கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், சந்திரகுப்தர் ஆட்சி கி.மு. 321 க்கு முன் தொடங்கி இருக்க வேண்டும். மேலும் இந்தக் குறிப்புகளில் சந்திரகுப்தர் ஒரு சிறந்த அரசராக விவரிக்கப்படுகிறார்.[2]

நான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்து புராண நூல்கள் பெரும்பாலும் கிரேக்க கதைகளையே பிரதிபலிக்கின்றன. இந்த நூல்கள் சந்திரகுப்தரின் வம்சாவளியைப் பற்றிய விவரங்களைப் பற்றி விவாதிக்கவில்லை, மாறாக கடைசி நந்த மன்னரின் கதையை கூறுகின்றன. நந்த மன்னர் கொடூரமானவர், தர்மம் மற்றும் சாத்திரங்களுக்கு எதிரானவர் என்றும் விவரிக்கப்படுகிறார். சாணக்கியரின் அர்த்தசாத்திரம் நாட்டின் ஆன்மீக, கலாச்சார மற்றும் இராணுவ நலன்களுக்கு எதிரான நந்தர்களின் ஆட்சியை பற்றி விவரிக்கின்றது .[1]

மகாவம்சம் போன்ற பௌத்த நூல்கள் சந்திரகுப்தர் ஓர் சத்திரிய குலத்தில் பிறந்ததாக விவரிக்கின்றன. இந்த நூல்கள் பெரும்பாலும் சந்திரகுப்தர் காலத்திற்கு பின் ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவையாகும். இந்த புத்த ஆதாரங்கள் பௌத்த சமயத்தின் புரவலரான அசோகரின் வம்சத்தை நேரடியாக புத்தரின் வம்சத்துடன் இணைக்க முயற்சிக்கின்றன.[3] கோசல இராச்சிய அரசனிடமிருந்து இருந்து தப்பிக்க சந்திரகுப்தரின் குடும்பம் பிரிந்ததாகவும், சந்திரகுப்தனின் மூதாதையர்கள் மயில்களுக்காக அறியப்பட்ட தனிமையான இமயமலை இராச்சியத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் சில பௌத்த ஆதாரங்கள் கூறுகின்றன. இவை "மௌரியர்" என்ற அடைமொழி பாளி மொழியில் "மோரா" (மயில் என்று பொருள்படும்) என்ற வார்த்தையிலிருந்து வந்தது எனக்கூறுகின்றன.[1] பௌத்த கதைகள் பெரும்பாலும் வேறுபடுகின்றன. சில எழுத்தாளர்கள் இவரது வாழ்க்கையை விளக்க மற்ற கதைகளை வழங்குகிறார்கள். மேலும், பிராமணராகிய சாணக்கியர் சந்திரகுப்தரின் ஆலோசகர் என்றும் அவரது ஆதரவுடன் சந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் அரசரானார் என்றும் புத்த ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.[4]

12 ஆம் நூற்றாண்டின் சமண உரையான ஏமச்சந்திரரின் பரிசிச்ட்டபர்வன் சந்திரகுப்தரின் ஆரம்பகால சமண ஆதாரமாகும். இது சந்திரகுப்தர் இறந்து கிட்டத்தட்ட 1,400 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. இது சந்திரகுப்தரின் புராணக்கதை மற்றும் சாணக்கியர் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கிறது.[5] மற்ற சமண ஆதாரங்கள், சந்திரகுப்தர் தனது அரசை துறந்த பிறகு கருநாடகம் சென்று விரதத்தின் மூலம் மரணத்தை அமைதியாக வரவேற்கும் ஒரு சமண மத சடங்கை மேற்கொண்டார் எனக் கூறுகின்றன.[6][7]

பிறப்பு மற்றும் ஆட்சிக்காலம்

சந்திரகுப்தர் எப்போது பிறந்தார் என்று பண்டைய நூல்களில் தெளிவாக குறிப்பிடபடவில்லை. கிரேக்க நூல்கள் அலெக்சாந்தருடன் கி.மு. 325 இல் சந்தித்தபோது போது சந்திரகுப்தர் ஒரு இளைஞராக இருந்ததாகக் கூறுகின்றன. இதை வைத்து சந்திரகுப்தர் கி.மு. 350க்குப் பிறகு பிறந்திருக்கலாம் என்று கணக்கிடப்படுகின்றது.[8]

சில குறிப்புகள் சந்திரகுப்தரை மகா நந்தரின் மனைவிகளில் ஒருவரான முராவின் மகன் என்று கூறுகின்றன.[1] மேலும் சில ஆதாரங்கள் முராவை மன்னரின் துணைவியாக விவரிக்கின்றன.[9] சமசுகிருத நாடக உரையான முத்ரராக்சசா சந்திரகுப்தரை விவரிக்க விரிசாலா மற்றும் குலகீனா ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறது. இரண்டாவது சொல் "அங்கீகரிக்கப்பட்ட குலத்திலிருந்தோ அல்லது குடும்பத்திலிருந்தோ வந்தவர் அல்ல" என பொருள் படும்.[1] விரிசாலா என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன: ஒன்று "சூத்திரனின் மகன்", மற்றொன்று "அரசர்களில் சிறந்தவர்". சந்திரகுப்தர் ஒரு சூத்திரப் பின்னணியைக் கொண்டிருந்தார் என்று முன்வைக்க, முந்தைய விளக்கம் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க எழுத்தாளர் சசுடினும் இதையே குறிப்பிடுகின்றார். எனினும் சில வரலாற்றாசிரியர்கள் இரண்டாவது பொருள் தான் சரியானது என வாதிட்டனர்.[1] காஷ்மீரிய இந்து பாரம்பரியத்தின் 11 ஆம் நூற்றாண்டு நூல்களான கதாசரித்சாகரா மற்றும் பிரிகத்-கதா-மஞ்சரி ஆகியவற்றின் படி சந்திரகுப்தர் அயோத்தியில் வாசித்த பூர்வ நந்தரின் மகன் ஆவார்.[1] இந்து ஆதாரங்களில் உள்ள பொதுவான கருப்பொருள், சந்திரகுப்தர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர் மற்றும் சாணக்கியருடன் சேர்ந்து தனது குடிமக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தர்ம மன்னராக உருவெடுத்தார் என்பதேயாகும்.[10]

சமண புராணங்களின் படி சாணக்கியர் ஒரு சமண பாமரர். சாணக்கியர் பிறந்தபோது, ​​சமணத் துறவிகள், இவர் ஒரு நாள் வளர்ந்து ஒருவரைப் பேரரசனாக்க உதவுவார் என்றும், அரியணைக்கு பின்னால் இருக்கும் சக்தியாக இருப்பார் என்றும் தீர்க்கதரிசனம் கூறினர். இதை ஏற்ற சாணக்கியர் ஓர் மயில் வளர்க்கும் சமூகத்தை சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்த குழந்தையே பின்னாளில் சந்திரகுப்தராக வளர்ந்தது.[1][5]

நூல்களில் சந்திரகுப்தரின் ஆட்சியின் தொடக்கம் அல்லது இறுதி ஆண்டு தெளிவாக இடம்பெறவில்லை.[8] வரலாற்றாசிரியர்கள் சந்திரகுப்தரின் ஆட்சி கி.மு. 324 மற்றும் கி.மு. 321 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே துவங்கியதாகவும், கி.மு. 298 மற்றும் கி.மு. 293 க்கு இடையில் முடிவுற்றதாகவும் கூறுகின்றனர்.[2][11][12] இந்து மற்றும் பௌத்த நூல்களின்படி, சந்திரகுப்தர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[3] கௌதம புத்தர் இறந்த 162 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரகுப்த மௌரியர் ஆட்சி செய்ததாக புத்த ஆதாரங்கள் கூறுகின்றன. இதைப்போல சமண ஆதாரங்கள் மகாவீரரின் மரணத்திற்கும் சந்திரகுப்தரின் பதவியேற்பிற்கும் இடையே வெவ்வேறு இடைவெளிகளைக் கொடுக்கின்றன. இருப்பினும், புத்தர் மற்றும் மகாவீரரின் பிறப்பும் இறப்பும் மூலத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஆதலால், இதை வைத்து சந்திரகுப்தரின் காலத்தை கணிப்பது கடினமாக உள்ளது.[8]

வாழ்க்கை

எழுச்சி

சந்திரகுப்தரின் குரு சாணக்கியர் (1915 ஆம் ஆண்டு ஓவியம்)

பௌத்த மற்றும் இந்து ஆதாரங்கள் சந்திரகுப்தர் மற்றும் சாணக்கியர் இடையேயான சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என்பதற்கு வெவ்வேறு பதிப்புகளை வழங்குகின்றன. பரவலாக கூறப்படும் கதை பின்வருமாறு: விந்திய மலை அருகே இளம் சந்திரகுப்தர் தன்னை ஓர் அரசனாக அடையாளப்படுத்திக்கொண்டு அவரது மாடு மேய்க்கும் நண்பர்களுடன் விளையாடியதைக் குறிப்பிடுகின்றன. சந்திரகுப்தரின் திறனை கண்ட சாணக்கியர், அவரை தத்தெடுத்தார்.[1] சாணக்கியர் வேதங்கள், இராணுவக் கலைகள், சட்டம் மற்றும் பிற சாத்திரங்களைப் படிப்பதற்காக சந்திரகுப்தரை தக்கசீலசீலத்துக்கு அனுப்பினார்.[13]

அதன் பிறகு, சந்திரகுப்தரும் சாணக்கியரும் மகத அரசின் தலைநகரான பாடலிபுத்திரத்திற்கு வந்தனர். இந்து மற்றும் பௌத்த ஆதாரங்களின்படி இவர்கள் அங்கு அரசாண்டு வந்த தன நந்தரை சந்தித்தனர்.[1] இதற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை பற்றி வெவ்வேறு கூற்றுகள் உள்ளன. ஒரு கூற்றின் படி சந்திரகுப்தர் நந்தர்களின் படைத்தலைவர் ஆக்கப்பட்டார்.[1] இன்னொரு கூற்றின் படி சந்திரகுப்தர் நந்தரை அவமானபடுத்தியதால், மரணதண்டனை விதிக்கப்பட்டது. நந்த மன்னரால் சாணக்கியர் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டார் என்று ஒரு மாற்று பதிப்பு கூறுகிறது.[1] சந்திரகுப்தரும் சாணக்கியரும் அங்கிருந்து தப்பித்து, பின்னர் நந்த மன்னனை ஆட்சியில் இருந்து அகற்ற திட்டமிட்டனர்.[11] மன்னனால் அவமதிக்கப்பட்டதை உணர்ந்த சாணக்கியர் நந்த வம்சத்தை அழிப்பதாக சபதம் செய்ததாகவும் சில நூல்கள் கூறுகின்றன.[1]

சசுடின் எழுதிய ரோமானிய உரை சந்திரகுப்தர் சம்பந்தப்பட்ட இரண்டு அதிசய சம்பவங்களைக் குறிப்பிடுகிறது. மேலும் இவற்றை அவரின் தலைவிதியின் சகுனங்களாகவும் அடையாளங்களாகவும் முன்வைக்கிறது. முதல் சம்பவத்தில், சந்திரகுப்தர் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு பெரிய சிங்கம் அவரிடம் வந்து, அவரை நக்கிவிட்டு, பின்னர் அமைதியாக வெளியேறியது. இரண்டாவது சம்பவத்தில், சந்திரகுப்தர் போருக்குத் தயாராகிக் கொண்டு இருந்தபோது, ​​ஒரு பெரிய காட்டு யானை அவரை அணுகி, அவருடைய வாகனமாக தன்னை முன்னிறுத்தியது.[1]

மகாவம்சதிகம் என்ற பௌத்த நூலின் படி, சந்திரகுப்தரும் சாணக்கியரும் தக்கசிலாவில் கல்வியை முடித்த பிறகு பல இடங்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்து படைகளை எழுப்பினர். சாணக்கியர் சந்திரகுப்தரை படைத் தலைவராக்கினார்.[1] சமண உரைகள் இந்த இராணுவம் சாணக்கியரால் உருவாக்கப்பட்டதாகவும், பர்வதகா என்ற அரசருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறது.[5][8]பௌத்த மற்றும் சமண நூல்கள் சந்திரகுப்தரின் இராணுவம் நந்தர்களின் தலைநகரைத் தாக்கி பின்னர் தோல்வியுற்றதாக பதிவு செய்கின்றன. சந்திரகுப்தர் மற்றும் சாணக்யர் பின்னர் நந்த பேரரசின் எல்லையில் தொடங்கி, தலைநகருக்கு செல்லும் வழியில் உள்ள பிரதேசங்களை படிப்படியாக கைப்பற்றினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதிய படைகளை நிறுவுவதன் மூலம் தனது வியூகத்தை செம்மைப்படுத்தினார். இறுதியாக நந்தர்களின் தலைநகரான பாடலிபுத்திரத்தை முற்றுகையிட்டார். பின்னர் தன நந்தர் கொல்லப்பட்டார் என பௌத்த நூல்களும், அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என இந்து நூல்களும் கூறுகின்றன. நந்தரின் மகள் சந்திரகுப்தருடன் காதல் வயப்பட்டு மணந்ததாக சமண ஆதாரங்கள் சான்றளிக்கின்றன.[5][8][1]

அரச விரிவாக்கம்

சந்திரகுப்த மௌரியர் ஆட்சியில் மௌரியப் பேரரசின் பரப்புகள் (கி.மு. 290)

அலெக்சாந்தரின் படையெடுப்பின் போது வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில பகுதிகள் அவர் வசம் போனது. கி.மு. 323 ஆம் ஆண்டு அலெக்சாந்தரின் மரணத்திற்கு பிறகு அந்த பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டனர். இந்திய துணைக்கண்டத்தில் இருந்த கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்கோடர் ஆண்டு கொண்டிருந்தார். பிற கிரேக்க-ரோமானிய நூல்கள் சந்திரகுப்தர் கிரேக்க-இந்திய ஆளுநர்களைத் தாக்கினார் எனவும், செலூக்கசு நிக்காத்தாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் எனவும் கூறுகின்றன.[8] இந்த உடன்படிக்கையின் கீழ், அராச்சோசியா (கந்தகார்), கெட்ரோசியா (மக்ரான்) மற்றும் பரோபனிசடை (காபூல்) ஆகிய பகுதிகளை நிக்காத்தர் சந்திரகுப்தரிடம் விட்டுக்கொடுத்தாக கூறப்படுகின்றது. மேலும், இதற்கு ஈடாக சந்திரகுப்தர் 500 யானைகளை கொடுத்ததாக கூறப்படுகின்றது.[2][14] தவிர செலுக்கசின் மகள் எலேனாவை திருமணம் செய்து கொண்டார் சந்திரகுப்தர்.[15]

வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது இராச்சியம் விரிவடைந்தது. தமிழகம், கலிங்கம், வட கிழக்கின் மலை நாடுகள் தவிர பிற பகுதிகள் அவர் வசம் சென்றன. மேற்கில் பாரசீக எல்லை வரை அவரது இராச்சியம் பரவியிருந்தது.[8] தமிழ் சங்க இலக்கிய கவிதைத் தொகுப்புகள் அகநானூறு மற்றும் புறநானூறு நந்தர்களின் ஆட்சி மற்றும் மௌரியப் பேரரசைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, கவிதைகள் 69, 281 மற்றும் 375 மௌரியர்களின் படை மற்றும் தேர்களைக் குறிப்பிடுகின்றன, அதே சமயம் 251 மற்றும் 265 கவிதைகள் நந்தர்களை குறிப்பிடுகின்றன.[16]

ஆட்சி

சந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்தசாத்திரம்" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகசுதனிசின் "இண்டிகா" மூலமும் அறியலாம்.

சந்திரகுப்தரின் ஆட்சி முறையில் வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. வர்த்தகத்தில் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. மேலும் முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன.[17][18] சந்திரகுப்தர் காலத்து ஆட்சியில் மக்கள் உண்மையை மதித்து நடந்தனர். மேலும் பஞ்சாயத்து ஆட்சி முறை சிறப்பாக நடைபெற்றது என்று அவரது கால ஆட்சிச் சிறப்பை மெகசுதனிசு குறித்துள்ளார்.

இறுதி மற்றும் வழித்தோன்றல்கள்

சந்திரகுப்தரின் பிற கால வாழ்க்கை பற்றிய குறிப்புகள் சரியாக இல்லை. இதை பற்றிய கதைகள் பெரும்பாலும் சமண நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.[5][12] சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார் என்றும், துறவியாக வாழ்ந்து இன்றைய கருநாடக மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவிற்கு அருகில் உள்ள சந்திரகிரியில் பத்திரபாகு முனிவர் உட்பட பலருடன் மோட்ச நிலையை அடைந்தார் என சமண நூல்கள் கூறுகின்றன.[5] வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சந்திரகுப்தர் சமண மதத்திற்கு மாறியதற்கான ஆதாரங்களையும், பத்திரபாகு மற்றும் சரவணபெலகுளாவுடன் அவருக்கும் இருந்த தொடர்பைக் கூர்ந்து கவனித்தால், அது காலத்தோடு ஒவ்வாதாகவும் சிக்கலாகவும். கூடுதலாக, சமண ஆதாரங்களைத் தவிர, இதை குறிக்கும் வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லை.[19]

சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர் அவருக்கு பிறகு அரியணை ஏறினார். சந்திரகுப்தரின் பேரன் அசோகர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்