நீண்ட மதில்கள்

பண்டைய ஏதென்சு நகரைச் சூழ்ந்திருந்த மதில் சுவர்

பண்டைய கிரேக்கத்தில் பல இடங்களில் குறிப்பாக கொரிந்து, மெகாரா போன்ற நகரங்களில் நீண்ட மதில் சுவர்கள் கட்டப்பட்டிருந்தாலும்,[1] நீண்ட சுவர்கள் (Long Walls, பண்டைக் கிரேக்கம்Μακρὰ Τείχη ) என்பது பொதுவாக ஏதென்சின் முதன்மை நகரத்தையும் அதன் பிரேயஸ் மற்றும் பலேரம் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட சுவர்களைக் குறிப்பதாக உள்ளது.

பிரேயஸ் மற்றும் ஏதென்சின் நீண்ட மதில்கள்
பண்டைய ஏதென்சு

இது பல கட்டங்களில் கட்டப்பட்டது. போரின்போது நடக்கும் முற்றுகையின் போது கூட கடலுடன் பாதுகாப்பான இணைப்பைக் கொடுத்தது. இந்த மதில்கள் சுமார் 6 கிலோமீட்டர் நீண்டிருந்தன.[2] இவை முதலில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டன. மேலும் பெலோபொன்னேசியப் போரில் ஏதென்சின் தோல்விக்குப் பிறகு கிமு 403 இல் எசுபார்த்தன்களால் அழிக்கப்பட்டன. கிமு 395-391 இல் கொரிந்தியப் போரின் போது பாரசீகத்தின் ஆதரவுடன் இவை மீண்டும் கட்டப்பட்டன.

நீண்ட சுவர்களானது ஏதெனியன் இராணுவ உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. ஏனெனில் அவை நகரத்திற்கு கடலுடனான இணைப்பை தொடர்ந்து பாதுகாத்தன. மேலும் நிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட முற்றுகைகளை முறியடித்தன.

வரலாறு

பின்னணி

கிரேக்க பாரசீகப் போர்களின்போது கிமு 480 மற்றும் 479 இல் அட்டிகாவை பாரசீகம் ஆக்கிரமித்த போது அக்ரோபோலிசைச் சுற்றி இருந்த பண்டைய மதில் சுவரானது பாரசீகர்களால் அழிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த பாரசீகப் படைகள் பிளாட்டீயா சமருக்குப் பிறகு, அகற்றப்பட்டன. அதன்பிறகு ஏதெனியர்கள் தங்கள் தாயகத்தை மீண்டும் கைப்பற்றி தங்கள் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். புனரமைப்புப் பணியின் துவக்கத்தில், நகரத்தைச் சுற்றி புதிய சுவர்களைக் கட்டும் பணிகளைத் துவக்கினர்.

இந்த மதில் சுவர் கட்டும் திட்டமானது எசுபார்த்தன்கள் மற்றும் அவர்களின் பெலோபொன்னேசிய கூட்டாளிகளிடமிருந்து எதிர்ப்பை பெற்றுத் தந்தது. அவர்கள் ஏதென்சின் அதிகாரமானது அண்மைக்காலமாக அதிகரித்து வந்ததால் பீதியடைந்தனர். எசுபார்த்தன் தூதர்கள் ஏதெனியர்களிடம் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று வற்புருத்தினர். ஆக்கிரமிக்க வரும் அந்நியப் படைகளுக்கு எதிராக இந்தச் சுவர் ஏதென்சை பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும் என்றும், கொரிந்தின் பூசந்திக்கு படையெடுப்பாளர்களிடமிருந்து போதுமான காப்பை வழங்கும் என்றும் வாதிட்டனர்.

மேலும் ஏதெனியர்கள் தங்களிடம் கூறப்பட்ட எதிர்மறை வாதங்களைப் புறக்கணித்தனர். தங்கள் நகரத்தை மதில் சுவரில்லாமல் விட்டுவிடுவது பெலோபொன்னேசியர்களின் கருணையில் தங்கள் பாதுகாப்பை முழுமையாக நம்பியிருக்கும் நிலை ஏற்படும் என்பதை முழுமையாக அறிந்திருந்தனர்;[3] இந்த மதில்களை கட்டும்போது தெமிஸ்ட்டோக்ளீஸ் எதிர்கொண்ட சிக்கல்களையும், சூழ்ச்சிகளையும் துசிடிடீஸ் விவரிக்கிறார்; தெமிஸ்ட்டோக்ளீஸ் எசுபார்த்தன்களின் கவனத்தைத் திசைதிருப்பி நாட்களைக் கடத்தி, போதுமான பாதுகாப்பை வழங்கத்தக்கவாறு மதில் சுவர்கள் கட்டப்படும் வரை அவர்களை தாமதப்படுத்தி கட்டி முடித்தார்.[4]

துவக்கம்

கிமு 450 களின் முற்பகுதியில், ஏதென்சு மற்றும் எசுபார்த்தாவின் பல்வேறு பெலோபொன்னேசிய கூட்டாளிகளான குறிப்பாக கொரிந்து மற்றும் ஏஜினா ஆகியோருக்கு இடையே சண்டை தொடங்கியது. கிமு 462 மற்றும் கிமு 458 க்கு இடையிலான இந்த சண்டையின் மத்தியில், ஏதென்சு மேலும் இரண்டு மதில்களைக் கட்டத் தொடங்கியது, நீண்ட மதில்களில், ஒன்று நகரத்திலிருந்து பலேரமில் உள்ள பழைய துறைமுகம் நோக்கியும், மற்றொன்று பைரேயசில் உள்ள புதிய துறைமுகம் நோக்கியும் கட்டப்பட்டது. கிமு 457 இல், எசுபார்த்தன் இராணுவம் தனக்ரா சமரில் ஏதெனியன் இராணுவத்தை தோற்கடித்தது, மேலும் கட்டுமானத்தைத் தடுக்க முயற்சித்தது, ஆனால் சுவர் கட்டுமான வேலைகள் தொடர்ந்தது நடந்தன. அவை போருக்குப் பிறகு விரைவில் முடிக்கப்பட்டன.[3] இந்தச் மதில்கள் ஏதென்சுக்கும் கடலுக்குமான தொடர்பையும், துறைமுகத்திற்கும் நகரத்திற்குமான விநியோக வழி துண்டிக்கவாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தன. இந்த (கட்டடம் 1a) சுவர்கள் [5] ஒரு பரந்த பகுதியை சூழ்ந்து ஏதென்சின் இரண்டு முக்கிய துறைமுகங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

ஏதெனியன் உத்தி மற்றும் அரசியல்

5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏதென்சு பின்பற்றிய ஒரு பெரிய போர் உத்தியை நீண்ட மதில் சுவர்க் கட்டடம் பிரதிபலித்தது. ஹாப்லைட் படைகளை களமிறக்குவதில் நிபுணத்துவம் பெற்ற பெரும்பாலான கிரேக்க நகர அரசுகளைப் போலல்லாமல், ஏதென்சு கிமு 480 களில் ஏஜினாவுடனான போரின் போது தனது முதல் கடற்படையை கட்டியதிலிருந்து கடற்படையை அதன் இராணுவத்தின் மையமாகக் கொண்டிருந்தது.

கிமு 477 இல் டெலியன் கூட்டணி நிறுவப்பட்டதன் மூலம், பாரசீகர்களுக்கு எதிரான கடற்படைப் போரை நீண்டகாலம் தொடர ஏதென்சு உறுதியளித்தது. அடுத்த தசாப்தங்களில், ஏதெனியன் கடற்படை கூட்டணியின் பிரதான அம்சமாக மாறியது. மேலும் கடலின் ஏதென்சு செலுத்திய கட்டுப்பாட்டால் ஹெலஸ்பாண்ட் மற்றும் கருங்கடல் பகுதிகளிலிருந்து தன் நகரத்திற்கு தேவைபட்ட தானியங்களை தடையின்றி இறக்குமதி செய்ய முடிந்தது. கிமு 480 மற்றும் 462 க்கு இடைப்பட்ட காலத்தில் ஏதென்சின் கடற்படைக் கொள்கையானது சனநாயகவாதிகள் அல்லது சிலவர் ஆட்சிக்குழுக்களால் தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. ஆனால் பின்னர், ஏதெனிய அரசியல்வாதியான மெலேசியாசின் மகன் துசிடிடீஸ் ஏகாதிபத்திய கொள்கைக்கான எதிர்ப்பை சிலவர் ஆட்சிக்குழுவின் திரளான குரலாக ஆக்கிய பிறகு, ஓல்ட் ஓலிகார்ச் என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கடற்படையும் சனநாயகமும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதை அடையாளம் காண்டார். இது நவீன அறிஞர்களிடையேயும் எதிரொலித்தது.[6] ஏதெனியன் கடற்படையை நகரத்தின் முக்கிய பலமாக ஆக்குவதற்கு இந்த நீண்ட மதில் சுவர்கள் ஒரு முக்கிய காரணியாக இருந்தன.

நீண்ட மதில் சுவர்களைக் கட்டியதன் மூலம், ஏதென்சு நிலப்பரப்பிற்குள் உள்ள ஒரு தீவாக மாறியது. அதனால் தரைப்படையை அடிப்படையாகக் கொண்ட எந்தப் படையும் அதைக் கைப்பற்ற முடியாது என்றானது.[7] (பண்டைய கிரேக்கப் போர்களில், மதிலால் சூழப்பட்ட நகரத்தை பட்டினிபோட்டு, சரணடையச் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் கைப்பற்றுவது சாத்தியமற்றது. ) எனவே, கிரேக்க நிலப்பரப்பில் உள்ள மற்ற நகரங்களுடனான எந்தவொரு மோதலிலும் தன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஏதென்ஸ் தனது சக்திவாய்ந்த கடற்படையை சார்ந்திருக்க முடியும்.

தனக்ராவில் ஏதெனியன் தோல்விக்குப் பிறகு சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போரில் எசுபார்த்தன் இராணுவம் ஏதெனியர்களை களத்தில் தோற்கடித்தது. ஆனால் நகரத்தை சூழ்ந்து மதில் சுவர்கள் இருந்ததால் நகரத்தை கைப்பற்ற அவர்களால் முடியவில்லை; முற்றுகைக்கு எதிராக தங்கள் நகரத்தை பாதுகாக்க முயன்று, ஏதெனியர்கள் நீண்ட மதில் சுவர்களை கட்டி முடித்தனர். மேலும், அட்டிகாவின் அனைத்து படையெடுப்புகளையும் தடுக்கும் உறுதியில், அவர்கள் போயோட்டியாவையும் கைப்பற்றினர். அவர்கள் ஏற்கனவே மெகாராவைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்ததால், அட்டிகாவிற்கான அனைத்து அணுகு பாதைகளையும் நட்பு கரங்களில் வைத்திருக்க வைத்தனர்.[8] முதல் பெலோபொன்னேசியப் போரின் பெரும்பகுதி காலத்தில், ஏதென்சு பொதுவாக தரைப்படையால் நெருங்க முடியாததாக இருந்தது. ஆனால் அந்தப் போரின் முடிவில் மெகாரா மற்றும் போயோட்டியாவை இழந்த பிறகு ஏதெனியர்களை நீண்ட சுவர்களுக்குள் தஞ்சம் புகுமாறு திரும்பத் தள்ளியது.

மத்திய சுவர்

440 களின் போது, ஏதெனியர்கள் ஏற்கனே இருந்த இரண்டு நீண்ட சுவர்களை மூன்றாவது கட்டமைப்புடன் (கட்டம் 1b) சேர்த்தனர்.[9] இந்த "மத்திய சுவர்" அல்லது "தெற்கு சுவர்" என்பது நகரத்தை பைரேயசுடன் இணைக்கும் மற்றொரு சுவராக கட்டப்பட்டது.

மத்திய சுவர் கட்டப்பட்டதன் நோக்கம் குறித்த பல சாத்தியக்கூறுகள் உள்ளன அவற்றில் ஒன்று: முதல் ஏதென்சு-பிரேயசு சுவரை யாராவது ஊடுருவிச் சென்றால், இது ஒரு கூடுதல் பாதுகாப்பை வழங்க கட்டப்பட்டதாகக் கருதப்பட்டது. கிமு 446 இல் ஏதென்சு கடற்படையில் சவால்களை சந்தித்தப் பிறகு, ஏதென்சு இனி கடலின் முழு ஆதிக்க சக்தியாக இல்லாத நிலை உருவானது. எனவே மத்திய சுவர் ஏதென்ஸ்-பலேரன் சுவரின் காப்பு அமைப்பாகவே செயல்பட்டது.

மத்திய சுவர் கட்டப்பட்ட காலத்தில், ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஏதெனியன் துறைமுகங்களின் முக்கியத்துவம் மாறிவிட்டது. பிரேயஸ் முக்கிய பொருளாதார மற்றும் இராணுவ துறைமுகமாக மாறியது. அதே நேரத்தில் பாலெரோன் துறைமுகம் தெளிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த வளர்ச்சியானது கோட்டை அமைப்பின் மறு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.[10]

பெலோபொன்னேசியன் போர்

பெலோபொன்னேசியப் போரின் முடிவில், கிமு 404 இல் ஏதென்சின் மதில் சுவர்களை லைசாந்தர் இடித்தார்.

எசுபார்த்தாவுடனான ஏதென்சின் பெரும் மோதலில், கிமு 432 முதல் கிமு 404 வரையிலான பெலோபொன்னேசியப் போரில், சுவர்கள் மிக முக்கியமானதாக மாறின. ஏதென்சின் தலைவரான பெரிக்கிளீசு, போரின் தொடக்கத்திலிருந்து கி.மு 429 இல் ஏதென்சைத் தாக்கிய பிளேக் நோயில் இறக்கும் வரை, தங்களைச் சூழ்ந்துள்ள மோதலை தனது உத்திகளால் எதிர்கொண்டார். 440 களில் நடந்ததைப் போலவே, ஏதெனியர்களின் பயிர்களை அழிப்பதன்மூலம் எசுபார்த்தன்கள் அவர்களை தரைப்போருக்கு இழுக்க முயற்சிப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார். அதனால் ஏதெனியர்களை சுவர்களுக்குப் பின்னாலேயே இருக்குமாறும், தங்களுக்கான போரில் வெற்றிபெற தங்கள் கடற்படையையே சார்ந்திருக்குமாறும் கட்டளையிட்டார்.

இதன் விளைவாக, போரின் முதல் சில ஆண்டுகளின் போர்த்தொடர்கள் ஒரு சீரான முறையைப் பின்பற்றினவாகவே இருந்தன. எசுபார்த்தன்கள் ஏதெனியர்களை போருக்கு வெளியே இழுக்கும் நம்பிக்கையில், அட்டிகாவை அழிக்க தரைப்படையை அனுப்புவார்கள். ஆனால் ஏதெனியர்கள் தங்கள் மதில் சுவர்களுக்குப் பின்னாலேயே இருப்பார்கள். அவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக பெலோபொன்னீசைச் சுற்றி பயணம் செய்யும் போது அவர்களின் நகரங்களைச் சூறையாடுவதற்கும் பயிர்களை எரிப்பதற்கும் தங்கள் கடற்படையை அனுப்புவார்கள். ஏதெனியர்கள் தரைப்படைத் தோல்வியைத் தவிர்ப்பதில் வெற்றி பெற்றனர், ஆனால் பெலோபொன்னேசியன் தாக்குதல்களால் பெருமளவு பயிர்களை இழந்தனர். மேலும் அவர்களின் கருவூலம் கடற்படைப் பயணங்கள் மற்றும் தானிய இறக்குமதிக்கான செலவுகளால் பலவீனமடைந்தது. மேலும், கிமு 430 மற்றும் கிமு 429 இல் பரவிய பிளேக் நோய் நகரத்தை அழித்தது. போரின் காரணமாக நகருக்கு வெளியில் உள்ள மக்களும் நகர மக்களுடன் சேர்ந்து சுவர்களுக்குள் குவிந்ததால் நோயின் விளைவுகள் மோசமாகின.

கிமு 425 இல் பைலோஸ் சமரில் ஏதெனியர்கள் வெற்றிபெற்று எசுபார்த்தன் பணயக்கைதிகளை பிடிக்கும் வரை, போரின் முதல் கட்டத்தின் ஏதெனியர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மதில் சுவர்களைப் பயன்படுத்தினர். அந்த போரில் ஏதெனியர்கள் வென்ற பிறகு, எசுபார்த்தன்கள் பயிர்களை அழிக்க ஆண்டுதோறும் மேற்கொண்ட படையெடுப்பை கிமு 413 வரை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். ஏனெனில் ஏதெனியர்கள் தங்கள் மீது படையெடுப்பு தொடங்கப்பட்டால் எசுபார்த்தன் பணயக்கைதிகளைக் கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தினர்.

போரின் இரண்டாம் கட்டத்தில், மதில் சுவர்கள் மீண்டும் இரு தரப்பினருக்கும் மூலோபாயத்தின் மையமாக மாறியது. கிமு 413 இல் எசுபார்த்தன்கள் அட்டிகாவில் உள்ள திசெலியாவில் ஒரு கோட்டையை ஆக்கிரமித்தனர். மேலும் ஏதென்சுக்கு ஆண்டு முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் ஒரு படையை அங்கே நிறுத்தி வைத்தனர். இந்த இராணுவ அச்சுறுத்தலால், ஏதெனியர்கள் கடல் வழியாக மட்டுமே நகரத்துக்கு வேண்டியதை கொண்டு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சிசிலியன் போர்ப்பயணத்தின் பேரழிவு முடிவில் இருந்து ஏதென்சு பலவீனமடையத் தொடங்கியது. மேலும் கிமு 413 கோடையில் அதன் சுவர்களை மாற்றியமைக்கத் தொடங்கியது. இறுதியில் ஏதென்சு பலேரன் சுவரைக் கைவிட்டு, இரண்டு பைரேயஸ் சுவர்களில் மட்டும் கவனம் செலுத்தியது.

நீண்ட மதில் சுவர்களும், அதிலிருந்து அவர்களின் துறைமுகங்களுக்கு உள்ள அணுகல் மட்டுமே ஏதென்சை தோல்வியில் இருந்து பாதுகாக்கும் ஒரே விசயமாக இருந்தது. ஏதெனியர்களை நிலத்தில் மட்டும் போராடி தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்த எசுபார்த்தன்கள் கடற்படையை அமைப்பதில் தங்கள் கவனத்தைத் திருப்பினர். மேலும் போரின் இறுதிக் கட்டம் முழுவதும் கடற்போரில் ஏதெனியர்களை தோற்கடிக்க முயன்றனர். அவர்களின் இறுதி வெற்றியான, ஈகோஸ்போட்டாமி சமரில், ஏதெனியர்களை அவர்களின் தானிய விநியோக வழிகளில் இருந்து துண்டித்து, அவர்களை சரணடையும் நிலைக்கு தள்ளியது. இந்த சரணடைதலின் மிக முக்கியமான விதிமுறைகளில் ஒன்றாக நீண்ட மதில் சுவர்களை அழிப்பது கிமு 404 நடந்தது. அதே ஆண்டில் எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கை ஏதென்சின் கடற்படை அதிகாரத்தை முடித்துவைத்தது. நீண்ட மதில் சுவர்கள் மிகவும் குதூகலத்துடனும், புல்லாங்குழல், பெண்களின் பாடலுடனும் இடிக்கப்பட்டன என்று செனோபோன் கூறுகிறார்.

நீண்ட மதில்கள் மீண்டும் கட்டுதல்

கிமு 393 இல் ஏதென்சின் மதில் சுவர்களை மீண்டும் கட்டுவதற்கு பாரசீக ஆளுநர் இரண்டாம் பார்னபாஸஸ் நிதியளித்தார், மேலும் அவரது கடற்படை வீரர்களையும் அதில் ஈடுபடுத்தினார்.[11]

404 இல் எசுபார்த்தன்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஏதெனியர்கள் தங்கள் அதிகாரத்தையும் சுயாட்சியையும் விரைவாக மீட்டெடுத்தனர். மேலும் கிமு 403 இல் எசுபார்த்தன்கள் அவர்கள் மீது திணித்த அரசாங்கத்தையும் தூக்கியெறிந்தனர். கிமு 395 வாக்கில், ஏதெனியர்கள் எசுபார்த்தாவுக்கு எதிராக ஆர்கோஸ், கொரிந்து, தீப்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து கொரிந்தியப் போரில் ஈடுபடும் அளவுக்கு வலுவாக இருந்தனர்.

ஏதெனியர்களைப் பொறுத்தவரை, இந்த போரின் மிக முக்கியமான நிகழ்வானது நீண்ட மதிலை மீண்டும் கட்டியெழுப்பியதாகும். கிமு 395 வாக்கில், கோட்டைகளின் மறுகட்டமைப்பு தொடங்கியது மேலும் ஏதெனியன் கடற்படை தளபதி கோனனின் கூற்றுப்படி, கிமு 391 வாக்கில் சுவர்கள் அவற்றின் இறுதிக் கட்டத்தை அடைந்தன. கிமு 394 இல், பாரசீகத்திற்கான ஆளுநர் இரண்டாம் பார்னபாசஸ் மற்றும் கானனின் தலைமையின் கீழ் ஒரு பாரசீக கடற்படை சினிடஸ் போரில் எசுபார்த்தன் கடற்படையை தீர்க்கமாக தோற்கடித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பர்னபாசஸ் தனது கடற்படையுடன் கோனனை ஏதென்சுக்கு அனுப்பினார். அங்கு நீண்ட மதில் சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டதால் அப்படைகள் அதற்கு உதவியும், பாதுகாப்பையும் வழங்கின.

இவ்வாறு, பெலோபொன்னேசியப் போரின் முடிவில் எசுபார்த்தன்களிடம் தாங்கள் இழந்த தரைப் பாதுகாப்பை ஏதெனியர்கள் மீண்டும் பெற்றனர். புனரமைக்கப்பட்ட சுவர்கள் பல ஆண்டுகள், தாக்குதலுக்கு உள்ளாக்கபடவில்லை.

கிமு 4 ஆம் நூற்றாண்டில் நீண்ட சுவர்கள்

கொரிந்தியப் போரிலிருந்து மாசிடோனின் பிலிப்பிடம் நகரின் இறுதியில் தோல்வியடைந்தது வரை, ஏதெனிய மூலோபாயத்தில் நீண்ட சுவர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தன. கிமு 377 இல் அரிஸ்டாட்டில்சின் ஆணை டெலியன் கூட்டணியின் பல முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட ஏதெனியன் கூட்டணியை மீண்டும் நிறுவியது. 4 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஏதென்சு மீண்டும் கிரேக்க உலகின் முதன்மையான கடற்படை சக்தியாக வந்தது. மேலும் நில அடிப்படையிலான முற்றுகையைத் தாங்கும் வகையில் கடல் வழிகளை மீண்டும் துவக்கியது.

நீண்ட சுவர் கட்டமைப்புகளின் நீளம் மற்றும் இடம் ஆகியவை பின்வந்த மேம்பட்ட முற்றுகை நுட்பங்களால் மோசமான முறையில் பாதிக்கப்படக்கூடியவையாக ஆனதால், நீண்ட சுவர்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கிமு 337 இல் சமகால தாக்குதல் முறைகளைத் தாங்கும் வகையில் நீண்ட சுவர்களை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் ஏதெனியர்கள் தங்கள் நகர்ப்புற பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கினர். புதிய சுவர்களானது அதில் கட்டப்பட்ட துணை கட்டமைப்புகள் மற்றும் சுவர் நடைபாதைகளுக்கு மேலே கூரைகள் போன்ற பண்புகளை உள்ளடக்கியதாக சீரமைக்கப்பட்டது.

இருப்பினும், கிமு 323 இல் பேரரசர் அலெக்சாந்தர் இறக்கும் வரை ஏதெனியர்கள் புதிய நீண்ட சுவர்களைப் பயன்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. இந்த நேரத்தில் ஏதென்சின் கடற்படை லாமியன் போரில் நசுக்கப்பட்டது. மேலும் அவர்கள் மாசிடோனியர்களுக்கு அடிபணிந்தனர் மற்றும் கடற்படை மூலோபாயத்தில் நீண்ட சுவர்களைப் பயன்படுத்துவது நிராகரிக்கப்பட்டது. மாசிடோனியத் தலைவர்கள் நீண்ட சுவர்களின் இருபுறமும் உள்ள நகரங்களைக் கட்டுப்படுத்தினர். மேலும் இந்த கோட்டைகளை அவர்கள் சிறிதளவும் பயன் படுத்தவில்லை. எனவே நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நீண்ட சுவர்கள் உண்மையில் பயன்படுத்தப்படவில்லை.[12]

பிற்கால வரலாறு

கிமு முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சுவர்கள் இருந்தன. இருப்பினும், முதல் மித்ரிடாடிக் போரின் போது , ஏதென்ஸ் மற்றும் பைரேயஸ் முற்றுகையில் (கிமு 87-86) உரோமானிய தளபதி சுல்லாவால் வென்றார். அதன்பின்னர் அவர் நீண்ட சுவர்களை அழித்தார்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நீண்ட_மதில்கள்&oldid=3661763" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்