பேரரசர் அலெக்சாந்தர்

மாசிடோனின் இராணுவத் தளபதி மற்றும் மன்னன்

மாசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தர் (Alexander III of Macedon; பண்டைக் கிரேக்கம்Ἀλέξανδρος அலெக்சாந்துரோசு; 20/21 சூலை 356 பொ. ஊ. மு. – 10/11 சூன் 323 பொ. ஊ. மு.) என்பவர் பண்டைக் கிரேக்க இராச்சியமான மாசிடோனின் மன்னன் ஆவார்.[a] இவர் பொதுவாக மகா அலெக்சாந்தர்[a] என்று அறியப்படுகிறார். இவர் தனது தந்தை இரண்டாம் பிலிப்புக்குப் பிறகு, கி. மு. 336ஆம் ஆண்டில், தன் 20ஆம் வயதில் அரியணைக்கு வந்தார். தன்னுடைய பெரும்பாலான ஆட்சிக் காலத்தை மேற்கு ஆசியா மற்றும் எகிப்து முழுவதும் நடத்திய ஒரு நீண்ட இராணுவப் படையெடுப்பில் செலவழித்தார். தன் 30ஆம் வயதில் வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றை உருவாக்கினார். இப்பேரரசு கிரேக்கம் முதல் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தது.[2] இவர் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதே கிடையாது. வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் மிக வெற்றிகரமான இராணுவத் தளபதிகளில் ஒருவராக, பரவலாகப் பெரும்பாலானவர்களால் இவர் கருதப்படுகிறார்.[3][4]

மூன்றாம் அலெக்சாந்தர்
ஓர் உரோமானிய பளபளப்புக் கல்லில் அலெக்சாந்தர் உருவம்
மாசிடோனியாவின் மன்னன்
ஆட்சிக்காலம்கி. மு. 336 – கி. மு. 323
முன்னையவர்இரண்டாம் பிலிப்
பின்னையவர்
எலனியக் காலத்தின் ஆதிக்கவாதி
ஆட்சிக்காலம்கிமு. 336 - கிமு. 323
முன்னையவர்இரண்டாம் பிலிப்
பின்னையவர்திமேத்ரியசு போலியோர்சிதேசு
எகிப்தின் பார்வோன்
ஆட்சிக்காலம்கி. மு. 332 – கி. மு. 323
முன்னையவர்மூன்றாம் தாரா
பின்னையவர்
  • நான்காம் அலெக்சாந்தர்
  • மூன்றாம் பிலிப்
  • தேசிய பட்டங்கள்
    • அரியணைப் பெயர் - கடவுள் இராவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் கடவுள் அமூனால் விரும்பப்படுபவர்
    • சொந்தப் பெயர் - அலெக்சாந்த்ரோசு
    • ஓரசு பெயர் - எகிப்தின் பாதுகாவலர்
      • இரண்டாம் ஓரசு பெயர் - அயல் நிலங்களைத் தாக்கிய வீரம் மிக்க ஆட்சியாளர்
      • மூன்றாம் ஓரசு பெயர் - ஒட்டு மொத்த நிலத்தின் ஆட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்
      • நான்காம் ஓரசு பெயர் - வலிமையான கரத்தைக் கொண்டவர்
    • நெப்தி பெயர் - மலைகள், நிலங்கள், மற்றும் பாலைவனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் வலிமை மிக்க சிங்கம்
    • தங்க ஓரசு பெயர் - எகிப்தைக் காக்கும் (வலிமையான) காளை, கடலின் மற்றும் சூரியனைச் சுற்றியுள்ளவற்றின் ஆட்சியாளர்
பாரசீகப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு. 330 – கி. மு. 323
முன்னையவர்மூன்றாம் தாரா
பின்னையவர்
பிறப்பு20 அல்லது 21 சூலை, கி. மு. 356
பெல்லா, மாசிடோனியா
இறப்பு10 அல்லது 11 சூன், கி. மு. 323 (அகவை 32)
பாபிலோன், மெசொப்பொத்தேமியா
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
மாசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தர்
கிரேக்கம்Ἀλέξανδρος[d]
அரசமரபுஅர்கியாத்
தந்தைமக்கெடோனின் இரண்டாம் பிலிப்
தாய்எபிருசின் ஒலிம்பியாசு
மதம்பண்டைய கிரேக்க சமயம்

தன் 16ஆம் வயது வரை அலெக்சாந்தர் அரிசுட்டாட்டிலால் பயிற்றுவிக்கப்பட்டார். கி. மு. 335இல் மாசிடோனின் மன்னர் என்ற அதிகாரத்தைப் பெற்ற பிறகு, பால்கன் பகுதியில் இவர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். திரேசு மற்றும் இல்லீரியா மீது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதி செய்தார். தீப்ஸை நோக்கி அணிவகுத்தார். இறுதியாக இந்த யுத்தத்தில் தீப்ஸானது அழிக்கப்பட்டது. பிறகு, கோரிந்து குழுமத்துக்கு அலெக்சாந்தர் தலைமை தாங்கினார். இவரது தந்தை கனவு கண்ட, எலனிய உலகு அனைத்தையும் ஒன்றிணைக்கும் திட்டத்திற்காகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். பாரசீகத்தின் மீது படையெடுத்த போது, அனைத்துக் கிரேக்கர்களுக்குமான தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[5][6]

கி. மு. 334ஆம் ஆண்டு இவர் அகாமனிசியப் பாரசீகப் பேரரசு மீது படையெடுத்தார். 10 ஆண்டுகளுக்கு நீடித்த ஒரு தொடர்ச்சியான இராணுவப் படையெடுப்பைத் தொடங்கினார். ஆசியா மைனரை வெற்றி கொண்ட பிறகு, இசுசு மற்றும் கௌகமேலா உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான தீர்க்கமான யுத்தங்களில் அகமானிசியப் பாரசீகத்தின் சக்தியை உடைத்தார். இறுதியாக, மூன்றாம் தாராவைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். அகமானிசியப் பேரரசு முழுவதையும் கைப்பற்றினார்.[b][7] பாரசீகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மாசிடோனியப் பேரரசானது ஏட்ரியாட்டிக் கடல் முதல் சிந்து ஆறு வரை இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. "உலகின் எல்லைகள் மற்றும் பெரிய வெளிக் கடலை" அடைய அலெக்சாந்தர் அரு முயற்சி செய்தார். கி. மு. 323இல் இந்தியா மீது படையெடுத்தார். தற்போதைய பஞ்சாப் பகுதியின், ஒரு பண்டைய இந்திய மன்னனான போரசுக்கு எதிராகச் செலம் போரில் இவர் வென்றார். வீட்டு நினைவு காரணமாக மனச் சோர்வடைந்த இவரது துருப்புக்களின் கோரிக்கையால் பியாஸ் ஆற்றின் அருகில் இறுதியாகத் தன் நாட்டிற்குத் திரும்பிப் பயணிக்க ஆரம்பித்தார். பிறகு, பாபிலோனில் கி. மு. 323இல் இறந்தார். மெசொப்பொத்தேமியாவின் நகரான பாபிலோனைத் தனது பேரரசின் தலைநகரமாக நிறுவ இவர் திட்டமிட்டிருந்தார். மேற்கொண்டு, ஒரு தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட இராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகள் அலெக்சாந்தரின் இறப்பால் தொடங்காமல் அப்படியே விடப்பட்டன. அதன் முதல் திட்டமானது அரேபியா மீதான ஒரு கிரேக்கப் படையெடுப்பில் இருந்து தொடங்குவதாக இருந்தது. இவரது இறப்பிற்கு பின் வந்த ஆண்டுகளில் மாசிடோனியப் பேரரசு முழுவதும் ஒரு தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்கள் ஏற்பட ஆரம்பித்தன. இறுதியாக தியாடோச்சியின் கைகளில் பேரரசானது சிதறுண்டது.

இவரது இறப்பானது எலனியக் காலத்தின் தொடக்கத்தைக் குறித்தது. கிரேக்கப் பௌத்தம் மற்றும் எலனிய யூதம் போன்ற கலாச்சாரப் பரவல் மற்றும் கலப்பை இவரது படையெடுப்புகள் தொடங்கி வைத்தன. இவர் தன் பெயரைக் கொண்ட 20க்கும் மேற்பட்ட நகரங்களை நிறுவினார். இதில் மிக முக்கியமானது எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா ஆகும். கிரேக்கக் காலனியவாதிகளை அலெக்சாந்தர் குடியமர்த்தியது மற்றும் அதன் விளைவாகக் கிரேக்கக் கலாச்சாரம் பரவியது ஆகியவை காரணமாக எலனிய நாகரிகத்தின் பெரிய அளவிலான ஆதிக்கமும், தாக்கமும் கிழக்கே இந்தியத் துணைக்கண்டம் வரை பரவியிருந்தது. எலனியக் காலமானது உரோமைப் பேரரசு மூலமாக நவீன மேற்கத்திய நாகரிகமாக வளர்ச்சி அடைந்தது. இவரது பேரரசின் இணைப்பு மொழியாகக் கிரேக்க மொழி விளங்கியது. கி. பி. 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பைசாந்தியப் பேரரசு சிதைவடையும் வரை அதன் முக்கியமான மொழியாகக் கிரேக்க மொழி விளங்கியது. 1910கள் மற்றும் 1920களின் ஆரம்பங்களில் நடைபெற்ற கிரேக்க இனப்படுகொலை வரையிலும், 1920களின் நடுவில் நடந்த கிரேக்க-துருக்கிய மக்கட்தொகைப் பரிமாற்றம் வரையிலும், நடு அனத்தோலியா மற்றும் தூரக் கிழக்கு அனத்தோலியாவில் கிரேக்க மொழி பேசும் சமூகங்கள் எஞ்சியிருந்தன. அக்கீலியஸைப் போன்ற ஒரு பாரம்பரிய வீரனாக, கிரேக்க மற்றும் கிரேக்கம் அல்லாத கலாச்சாரங்களின் வரலாற்று மற்றும் புராணப் பாரம்பரியங்களில் இவர் முக்கியத்துவம் பெற்றார். இவருடைய இராணுவச் சாதனைகளும், யுத்தத்தில் அதற்கு முன் பெற்றிராத வெற்றிகளும், பிற்கால இராணுவத் தலைவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அளவீடாக இவரை ஆக்கியது.[c] இவரது உத்திகள் உலகெங்கும் உள்ள இராணுவ அமைப்புகளில் ஒரு முக்கியமான ஆய்வுப் பாடமாகத் தொடர்கின்றன.[8]

ஆரம்ப வாழ்க்கை

வம்சாவளியும், குழந்தைப் பருவமும்

கி. மு. 336இல் அலெக்சாந்தரின் பிறப்பிடமான மாசிடோன் இராச்சியத்தின் வரைபடம்

மூன்றாம் அலெக்சாந்தர் மாசிடோன் இராச்சியத்தின்[9] தலைநகரான பெல்லாவில், பண்டைய கிரேக்க மாதமான எக்கதோம்பையோனின் 6ஆம் நாளில் பிறந்தார். இது தற்கால நாட்காட்டியின் படி 20 சூலை கி. மு. 336ஆம் நாளைக் குறிக்கிறது. எனினும், சரியான நாள் தெளிவாகத் தெரியவில்லை.[10][11] இவர் மாசிடோனின் அப்போதைய மன்னனான இரண்டாம் பிலிப்புக்கும், அவரது நான்காவது மனைவியாகிய ஒலிம்பியாசுக்கும் மகனாகப் பிறந்தார். ஒலிம்பியாசு எபிரசு மன்னன் முதலாம் நியோப்தாலமசின் மகள் ஆவார்.[12] பிலிப்புக்கு 7 அல்லது 8 மனைவிகள் இருந்த போதும், ஒலிம்பியாசு அவரது முதன்மை மனைவியாகச் சில காலத்துக்கு நீடித்தார். இதற்குக் காரணம் அவர் அலெக்சாந்தரைப் பெற்றெடுத்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[13]

ஓர் உரோமானியப் பதக்கத்தில் அலெக்சாந்தரின் தாய் ஒலிம்பியாசு சித்தரிக்கப்பட்டுள்ளார்

அலெக்சாந்தரின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவத்தைச் சுற்றி ஏராளமான புராணக் கதைகள் உள்ளன.[14] பண்டைக் கிரேக்கச் சுயசரிதையாளர் புளூட்டாக்கின் கூற்றுப் படி, பிலிப்புக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு முந்தைய நாளில் ஒலிம்பியாசு தன் வயிற்றை இடியோசையுடன் கூடிய ஒரு மின்னல் தாக்குவதாகக் கனவு கண்டார். இது "நீண்ட தொலைவிற்கு அகண்ட" ஒரு தீயை ஏற்படுத்தியது. பிறகு மறைந்தது. திருமணத்திற்குச் சில காலத்திற்குப் பின்பு, ஒரு கனவில் தன் மனைவியின் வயிற்றை ஒரு சிங்க உருவம் பொறித்த முத்திரையால் அடைத்ததாகப் பிலிப் கண்டதாகக் கூறப்படுகிறது.[15] இந்தக் கனவுகளுக்குப் பல்வேறு வகையான விளக்கங்களைப் புளூட்டாக் கொடுத்துள்ளார்: திருமணத்திற்கு முன்பு ஒலிம்பியாசு கர்ப்பமடைந்தார், அவரது வயிறு அடைக்கப்படுவதன் மூலம் இது தெரிவிக்கப்படுகிறது; அல்லது அலெக்சாந்தரின் தந்தை சியுசு. அதிகார உயர்வு பெறும் நோக்கம் கொண்ட ஒலிம்பியாசு அலெக்சாந்தரின் தெய்வீகப் பெற்றோர் கதையைப் பரப்பினாரா எனப் பண்டைய வரலாற்றாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. இவர் அலெக்சாந்தரிடம் இதைக் கூறினார் என்றும், அல்லது இந்தப் பரிந்துரையை இறைப்பற்றில்லாத தன்மையால் தவிர்த்தார் என்றும் பல்வேறு வகையில் இதைக் குறிப்பிடுகின்றனர்.[15]

அலெக்சாந்தர் பிறந்த அந்த நாளில், சல்சிதிசு மூவலந்தீவில் பொடிடேயா நகரத்தை முற்றுகையிடுவதற்காகப் பிலிப் தயாராகிக் கொண்டிருந்தார். அதே நாளில் இல்லீரியா மற்றும் பயோனியாவின் கூட்டு இராணுவத்தைப் பிலிப்பின் தளபதி பர்மெனியோன் தோற்கடித்தார் மற்றும் பிலிப்பின் குதிரைகள் ஒலிம்பிக் போட்டிகளில் வென்றன ஆகிய செய்திகளையும் பிலிப் அறிந்தார். இதே நாளில் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எபேசசிலிருந்த ஆர்ட்டெமிசு கோயிலும் எரித்துத் தரை மட்டமாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அலெக்சாந்தரின் பிறந்த தினத்தன்று அவரைக் காண ஆர்ட்டெமிசு சென்றதாலேயே அவரது கோயில் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக மக்னீசியாவின் எகேசியசு கூறுவதற்கு இது இட்டுச் சென்றது.[16] அலெக்சாந்தர் மன்னனாக உருவாகிய போது இத்தகையப் புராணக் கதைகள் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தான் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவன் மற்றும் பெரும் சாதனைகளைச் செய்யப் பிறந்தவன் என்ற கருத்துகளைப் பரப்புவதற்காக அலெக்சாந்தரின் தூண்டுதலில் இந்தப் புராணக் கதைகள் பரப்பப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[14]

பெல்லா தொல்லியல் களம், கிரேக்கம். அலெக்சாந்தரின் பிறப்பிடம்

ஆரம்ப ஆண்டுகளில் அலெக்சாந்தர் இலனிகே என்றழைக்கப்பட்ட ஒரு செவிலியரால் வளர்க்கப்பட்டார். இலனிகே அலெக்சாந்தரின் எதிர் காலத் தளபதியான கருப்பு கிளேயிதசின் தமக்கை ஆவார். பிறகு தன் குழந்தைப் பருவத்தில், "கண்டிப்பான" லியோனிதசால் அலெக்சாந்தர் பயிற்றுவிக்கப்பட்டார். லியோனிதசு அலெக்சாந்தரின் தாயின் உறவினர் ஆவார். பிறகு அலெக்சாந்தருக்கு அகர்னனியாவின் இலைசிமாக்கசு பயிற்சி கொடுத்தார்.[17] உயர் குடி மாசிடோனிய இளைஞர்கள் வளர்க்கப்படும் முறையில், அலெக்சாந்தர் வளர்க்கப்பட்டார். படிக்கவும், லைர் இசைக் கருவியை மீட்டவும், குதிரை ஏற்றம் செய்யவும், சண்டையிடவும், மற்றும் வேட்டையாடவும் கற்றுக் கொண்டார்.[18] அலெக்சாந்தருக்கு 10 வயதாக இருந்த பொழுது பிலிப்புக்காக ஒரு குதிரையை தெச்சாலியைச் சேர்ந்த ஒரு வணிகர் கொண்டு வந்தார். அதை 13 தலேந்துகளுக்குக் கொடுப்பதாக விலை பேசினார். அக்குதிரை தன் மீது ஏற யாரையும் அனுமதிக்கவில்லை. அதை கூட்டிச் சென்று விட பிலிப் ஆணையிட்டார். எனினும் அலெக்சாந்தர், அக்குதிரை அதன் சொந்த நிழலைக் கண்டு பயப்படுவதைக் கண்டறிந்தார். குதிரையைத் தான் அடக்குவதாகக் கூறினார். இறுதியாகக் குதிரையை அடக்கினார்.[14] இத்தகைய துணிச்சல் மற்றும் குறிக்கோளைக் கண்டு மகிழ்ந்து, தனது மகனைக் கண் கலங்கி பிலிப் முத்தமிட்டார் என்று புளூட்டாக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிலிப், "என் மகனே, உனது குறிக்கோள்களுக்குத் தகுந்த பெரிய ஓர் இராச்சியத்தை நீ கண்டறிய வேண்டும். உனக்கு மாசிடோன் மிகச் சிறியது" என்று கூறினார். அக்குதிரையைத் தன் மகனுக்காக வாங்கிக் கொடுத்தார்.[19] அலெக்சாந்தர் அக்குதிரைக்குப் புசெபலசு என்று பெயரிட்டார். இப்பெயரின் பொருள் "காளைத் தலை" ஆகும். புசபெலசு அலெக்சாந்தரை இந்தியா வரை சுமந்து வந்தது. புசபெலசு வயது முதிர்வின் காரணமாக, அதன் 30ஆம் வயதில் இறந்ததாகப் புளூட்டாக் குறிப்பிடுகிறார். இவ்விலங்கு இறந்த போது, அலெக்சாந்தர் இக்குதிரையின் பெயரை ஒரு நகருக்கு வைத்தார். அந்நகரின் பெயர் புசபலா ஆகும்.[20]

கல்வி

மகா அலெக்சாந்தருக்கு அரிசுட்டாட்டில் பயிற்றுவித்தல்
இளம் மகா அலெக்சாந்தரின் ஓர் எலனியக் கால மார்பளவுச் சிலை. இது தாலமி பேரரசைச் சேர்ந்ததாகவும், கி. மு. 2 - 1ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

அலெக்சாந்தருக்கு 13 வயதாகிய பொழுது, அவருக்கென ஓர் ஆசிரியரைப் பிலிப் தேடத் தொடங்கினார். ஐசோகிரேதீசு மற்றும் இசுபேசிப்பசு போன்ற அறிஞர்களை நியமிக்கலாமா எனக் கருதினார். ஆசிரியராகப் பயிற்று விக்க இசுபேசிப்பசு கல்வி நிலையத்தில் இருந்த தனது உறுப்பினர் பதவியை இராசினாமா செய்ய முன் வந்தார். இறுதியில் அரிசுட்டாட்டிலைப் பிலிப் தேர்ந்தெடுத்தார். மியேசாவில் இருந்த நிம்பிசின் கோயிலை வகுப்பறையாகப் பிலிப் கொடுத்தார். அலெக்சாந்தருக்குப் பயிற்றுவிப்பதற்குக் கைமாறாக அரிசுட்டாட்டில் பிறந்த பட்டணமாகிய இசுதகேயிராவை மீண்டும் கட்டித் தரப் பிலிப் ஒப்புக் கொண்டார். இந்தப் பட்டணத்தைப் பிலிப் ஏற்கனவே தரை மட்டமாக்கி இருந்தார். அடிமைகளாக இருக்கும் முன்னாள் குடிமக்களை வாங்கவும், விடுதலை செய்யவும் அல்லது நாடு கடந்து வாழ்பவர்களை மன்னிக்கவும் பிலிப் ஒப்புக்கொண்டார்.[21]

தாலமி, எப்பைசிதியோன், மற்றும் சசாந்தர் உள்ளிட்ட மாசிடோனிய உயர் குடியினக் குழந்தைகள் மற்றும் அலெக்சாந்தருக்கு மியேசா ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியைப் போன்று விளங்கியது. இங்கு படித்த பல மாணவர்கள் அலெக்சாந்தரின் நண்பர்களாகவும், எதிர் காலத் தளபதிகளாகவும் உருவாயினர். இவர்கள் பொதுவாகத் "தோழர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். அலெக்சாந்தர் மற்றும் அவரது தோழர்களுக்கு அரிசுட்டாட்டில் மருத்துவம், தத்துவம், அறநெறி, சமயம், தருக்கம் மற்றும் கலையைக் கற்றுக் கொடுத்தார். அரிசுட்டாட்டிலின் பயிற்சியின் கீழ் அலெக்சாந்தர் ஓமரின் நூல்களுக்கான ஓர் ஆர்வத்தைப் பெற்றார். குறிப்பாக, இலியட்டை அவர் விரும்பினார். இலியட் நூலின் உரை விளக்கங்களைக் கொண்ட ஒரு பிரதியை அரிசுட்டாட்டில் அலெக்சாந்தருக்குக் கொடுத்தார். இப்பிரதியைப் பிற்காலத்தில் தனது படையெடுப்புகளின் போது அலெக்சாந்தர் தன்னுடனேயே கொண்டு சென்றார்.[22]

யூரிப்பிடீசு நாடகங்களை மனப் பாடமாக அலெக்சாந்தரால் கூற முடிந்தது.[23]

இவரது இளமைப் பருவத்தின் போது, மாசிடோனிய அவையில் இருந்த நாடு கடந்து வாழ்ந்த பாரசீகர்களுடன் அலெக்சாந்தருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அப்பாரசீகர்கள் மூன்றாம் அர்தசெராக்சஸை எதிர்த்திருந்தனர். இரண்டாம் பிலிப்பின் பாதுகாப்பைப் பல ஆண்டுகளுக்குப் பெற்றிருந்தனர்.[24][25][26] அவர்களில் இரண்டாம் அர்தபசோசு மற்றும் அவரது மகள் பர்சைனே ஆகியோரும் அடங்குவர். பர்சைனே எதிர் காலத்தில் அலெக்சாந்தரின் துணைவியானார். அவர் கி. மு. 353 - 342இல் மாசிடோனிய அவையில் தங்கியிருந்தார். அலெக்சாந்தரின் எதிர் கால சத்ரப்பானா அம்மீனாபசும் மாசிடோனிய அவையில் இருந்தார் அல்லது பாரசீக உயர் குடியினரான சிசினேசு அவையில் இருந்தார்.[24][27][28][29] பாரசீக விவகாரங்களைப் பற்றிய ஒரு நல்ல அறிவை மாசிடோனிய அவைக்கு இது கொடுத்தது. மாசிடோனிய அரசை நிர்வகிப்பதில் கொண்டு வரப்பட்ட சில புதுமைகளின் மீதும் இது தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[27]

அலெக்சாந்தரின் ஆசிரியர்களில் லம்பசகசின் அனாக்சிமெனசும் ஒருவர் என சுடா என்ற வரலாற்றாளர் எழுதியுள்ளார். அலெக்சாந்தரின் படையெடுப்புகளின் போது அலெக்சாந்தருடன் அனாக்சிமெனசும் கூடவே இருந்தார் என சுடா குறிப்பிட்டுள்ளார்.[30]

இரண்டாம் பிலிப்பின் வாரிசு

பிரதிந்தித்துவமும், மாசிடோனின் முன்னேற்றமும்

மக்கெடோனின் இரண்டாம் பிலிப், அலெக்சாந்தரின் தந்தை

16ஆம் வயதில், அரிசுட்டாட்டிலுக்குக் கீழான அலெக்சாந்தரின் கல்வியானது முடிவுற்றது. வடக்கில் திரேசியவர்களுக்கு எதிராக இரண்டாம் பிலிப் போரிட்டுக் கொண்டிருந்தார். இது அலெக்சாந்தரை அரசப் பிரதிநிதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக ஆக்கியது.[14] பிலிப் இல்லாதபோது, மாசிடோனியாவுக்கு எதிராக மயேதியின் திரேசியப் பழங்குடியினமானது கிளர்ச்சியில் ஈடுபட்டது. அலெக்சாந்தர் உடனடியாக எதிர் வினையாற்றினார். திரேசியர்களது நிலப்பகுதியிலிருந்து அவர்களை விரட்டியடித்தார். அந்நிலப்பகுதியானது காலனித்துவப்படுத்தப்பட்டது. அலெக்சாந்த்ரோபோலீசு என்றழைக்கப்பட்ட ஒரு நகரம் நிறுவப்பட்டது.[31]

பிலிப் திரும்பி வந்தபோது, தெற்கு திரேசில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடிபணிய வைக்க ஒரு சிறிய படையை அலெக்சாந்தர் அனுப்பி வைத்தார். கிரேக்க நகரமான பெரிந்துசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அலெக்சாந்தர் தன்னுடைய தந்தையின் உயிரைக் காப்பாற்றியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தெல்பிக்கு அருகில் அப்பல்லோவுக்கு உரிய புனிதமான நிலங்களின் மீது அம்பிசா நகரமானது புனிதத் தன்மையற்று நடக்க ஆரம்பித்தது. இந்தச் செயல் கிரேக்க விவகாரங்களில் மேலும் தலையிடும் வாய்ப்பைப் பிலிப்புக்குக் கொடுத்தது. திரேசில் இருந்தபோது, தெற்குக் கிரேக்கத்தில் ஓர் இராணுவ நடவடிக்கைக்காக ஓர் இராணுவத்தைத் திரட்டுமாறு அலெக்சாந்தருக்கு ஆணையிடப்பட்டது. மற்ற கிரேக்க அரசுகள் இதில் தலையிடலாம் என்று கருதிய அலெக்சாந்தர், தான் இல்லீரியா மீது தாக்குவதற்குத் தயாராவது போல் பாவனை செய்தார். இதனிடையில் இல்லீரியர்கள் மாசிடோனியா மீது படையெடுத்தனர். ஆனால் அலெக்சாந்தரால் அவர்களது படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.[32]

கி. மு. 338இல் பிலிப்பும் அவரது இராணுவமும் அவரது மகனுடன் இணைந்து கொண்டன. தெர்மோபைலே வழியாகத் தெற்கே அவர்கள் அணி வகுத்தனர். தேபன் கோட்டைப் படையினரிடம் இருந்து வந்த பிடிவாதமான எதிர்ப்புக்குப் பிறகு, அதனைக் கைப்பற்றினர். எலாத்தே நகரத்தை ஆக்கிரமித்தனர். இந்நகரம் ஏதென்சு மற்றும் தீப்சு ஆகிய இரு நகரங்களிலிருந்தும் சில நாள் அணிவகுக்கும் தொலைவில் உள்ளது. டெமோஸ்தனிஸ் தலைமையிலான ஏதெனியர்கள் மாசிடோனியாவுக்கு எதிராக தீப்சுடன் கூட்டணி வைக்க வாக்களித்தனர். ஏதென்சு மற்றும் பிலிப் ஆகிய இருவருமே தீப்சின் ஆதரவைப் பெறத் தூது அனுப்பினர். ஆனால் ஆதரவைப் பெறுவதில் ஏதேன்சு வெற்றி பெற்றது.[33] அம்பிசா மீது பிலிப் அணிவகுத்துச் சென்றார். அம்பித்தியோனியின் வேண்டுகோளின் பேரிலேயே பிலிப் இவ்வாறு செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது. டெமோஸ்தனிஸால் அங்கு அனுப்பப்பட்டக் கூலிப்படையினரைப் பிலிப் பிடித்தார். நகரத்தின் சரணடைவை ஏற்றுக் கொண்டார். பிறகு, எலாத்தேவுக்குப் பிலிப் திரும்பினார். ஏதென்சு மற்றும் தீப்சுக்குக் கடைசியாக அமைதி ஏற்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பைப் பிலிப் வழங்கினார். ஆனால், இரண்டு அரசுகளும் அதை நிராகரித்தன.[34]

சிரோனிய யுத்தத்தின் யுத்த வரைபடம்

பிலிப் தெற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, அவரது எதிரிகள் அவரை போயோட்டியாவின் சிரோனியாவுக்கு அருகில் வழிமறித்தனர். இதைத் தொடர்ந்து நடந்த சிரோனியா யுத்தத்தில், இராணுவத்தின் வலது பிரிவை பிலிப்பும், இடது பிரிவை அலெக்சாந்தரும் வழிநடத்தினர். இவர்களுடன் பிலிப்பின் நம்பிக்கைக்குரிய தளபதிகளின் ஒரு குழுவும் செயல்பட்டது. பண்டைய ஆதாரங்களின்படி, இரு படையினரும் சில நேரத்திற்குக் கடுமையாகச் சண்டையிட்டனர். பிலிப் வேண்டுமென்றே தனது துருப்புக்களைப் பின் வாங்குமாறு ஆணையிட்டார். போரிட்ட அனுபவமற்ற ஏதேனிய ஆப்லைட்டுகள் தன்னைத் தொடர்வார்கள் என்பதற்காக இவ்வாறு செய்தார். இவ்வாறாக அவர்களது வரிசையை உடைத்தார். தேபன் வரிசையை முதலில் உடைத்தவர் அலெக்சாந்தர் ஆவார். பிறகு, பிலிப்பின் தளபதிகள் அதன் வரிசையை உடைத்தனர். எதிரியின் ஒற்றுமைக்குச் சேதம் விளைவித்த பிறகு, தன்னுடைய துருப்புக்களுக்கு அழுத்தி முன்னேறுமாறு பிலிப் ஆணையிட்டார். சீக்கிரமே பிலிப்பின் வீரர்கள் எதிரிகளைத் தோற்றோடச் செய்தனர். ஏதெனியர்கள் தோல்வியடைந்த பிறகு, தேபன்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். தன்னந்தனியாகச் சண்டையிடும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.[35]

சிரோனியாவில் அடைந்த வெற்றிக்குப் பிறகு, பிலிப் மற்றும் அலெக்சாந்தரை எதிர்ப்பதற்கு யாருமில்லாத நிலையில் அவர்கள் பெலோபொன்னேசுக்கு அணிவகுத்தனர். அங்கு அனைத்து நகரங்களாலும் வரவேற்கப்பட்டனர். ஆனால் எசுபார்த்தவை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இது போருக்கு இட்டுச் செல்லவில்லை.[36] கொரிந்தில் பிலிப் ஒரு "எலனியக் கூட்டணியை" நிறுவினார். கிரேக்க பாரசீகப் போர்களின் போது உருவாக்கப்பட்ட, பழைய பாரசீக எதிர்ப்புக் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. எசுபார்த்தாவைத் தவிர பெரும்பாலான கிரேக்க நகர அரசுகளை இது உள்ளடக்கியிருந்தது. பிறகு பிலிப்புக்கு இந்தக் குழுமத்தின் எசிமோன் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. எசிமோன் என்பதன் பொருள் "உச்சத் தளபதி" ஆகும். இந்தக் குழுமமானது நவீன அறிஞர்களால் கொரிந்த் குழுமம் என்று அறியப்படுகிறது. பிறகு பிலிப் பாரசீகப் பேரரசைத் தாக்கும் தனது திட்டத்தை அறிவித்தார்.[37][38]

நாடு கடத்தலும், திரும்புதலும்

பெல்லாவுக்குப் பிலிப் திரும்பியபோது, கி. மு. 338இல் கிளியோபாட்ரா யூரிதைசின் மீது விருப்பம் கொண்டு அவரை மணந்து கொண்டார்.[39] இவர் பிலிப்பின் தளபதி அத்தலுசின் உடன் பிறந்தவரின் மகள் ஆவார்.[40] வாரிசாக அலெக்சாந்தரின் நிலையை இந்தத் திருமணம் உறுதியற்றதாக்கியது. ஏனெனில், கிளியோபாட்ரா யூரிதைசின் எந்த ஒரு மகனும் ஒரு முழுமையான மாசிடோனிய வாரிசாக முடியும். அலெக்சாந்தர் கூடப் பாதியளவு மாசிடோனியன் தான்.[41] திருமண விருந்தின்போது, குடிபோதையில் இருந்த அத்தலுசு பொது இடத்தில் கடவுள்களிடம், இந்தக் கூட்டணியானது ஒரு நியாயமான வாரிசை உருவாக்க வேண்டும் என வேண்டினார்.[40]

தான் விரும்பி மணந்து கொண்ட கிளியோபாட்ராவுடனான திருமணத்தின்போது, பிலிப்பைத் திருமணம் செய்துகொள்ள கிளியோபாட்ரா மிகவும் இளையவராக இருந்தார். கிளியோபாட்ராவின் உறவினரான அத்தலுசு குடிபோதையில் மாசிடோனியர்கள் கடவுளிடம் தன் உறவினப் பெண் மூலம் இந்த இராச்சியத்திற்கு ஒரு நியாயமான வாரிசைக் கேட்க வேண்டும் என்று விரும்பினார். இது அலெக்சாந்தருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. தன்னிடமிருந்த ஒரு கோப்பையை அத்தலுசு தலையில் எறிந்தார். "வில்லனே, நான் மட்டும் என்ன நெறி தவறிப் பிறந்தவனா?" என்றார். பிறகு பிலிப் அத்தலுசுவுக்கு ஆதரவாக எழுந்தார். தனது மகனுக்கு எதிராகத் திரும்பினார். ஆனால் இருவரின் அதிர்ஷ்டம் காரணமாக, அல்லது அளவுக்கதிகமான கோபம் அல்லது அவர் குடித்த மதுவின் காரணமாக, பிலிப்பின் கால் இடறியது. எனவே தரையில் விழுந்தார். அலெக்சாந்தர் பிலிப்பைப் பார்த்து, "அங்கே பாருங்கள், ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்குப்படையெடுக்கத் திட்டமிடும் ஒரு மனிதன் ஓர் இருக்கையில் இருந்த மற்றொரு இருக்கைக்கு மாறும் போது தவறி விழுகிறார்" என்றார்.

—பிலிப்பின் திருமணத்தின்போது நடைபெற்ற சண்டை குறித்த புளூட்டாக்கின் விளக்கம்.[42]

கி. மு. 337இல் மாசிடோனியிலிருந்து தனது தாயுடன் அலெக்சாந்தர் தப்பித்தார். மொலோசியர்களின் தலைநகரமான தோடோனாவில் மன்னனும், தன் சகோதரனுமான எபிரசின் முதலாம் அலெக்சாந்தரிடம் அவரை ஒப்படைத்து விட்டுத் தப்பினார்.[43] இல்லீரியாவுக்குச் சென்றார்.[43] அங்கிருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இல்லீரிய மன்னர்களிடம் தஞ்சம் கேட்டார். ஒருவேளை கிளாவுகியசிடம் அவர் தஞ்சம் கேட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு விருந்தினராக உபசரிக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் தான் அவர்களைப் போரில் அலெக்சாந்தர் தோற்கடித்திருந்தார். இருந்த போதும் இவ்வாறு உபசரிக்கப்பட்டார்.[44] எனினும், தனது அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகப் பயிற்றுவிக்கப்பட்ட மகனை விட்டு விட பிலிப்பிற்கு எண்ணம் இல்லை எனத் தெரிகிறது.[43] இவ்வாறாக, ஆறு மாதங்களுக்குப் பிறகு அலெக்சாந்தர் மாசிடோனுக்குத் திரும்பி வந்தார். ஒரு குடும்ப நண்பரான தெமாரதுசு என்பவரின் முயற்சியின் காரணமாக அவர் திரும்பி வந்தார். தெமாரதுசு இரு பக்கத்தினருக்கும் இடையில் சமரச முயற்சியில் ஈடுபட்டார்.[45]

அடுத்த ஆண்டு, காரியாவின் பாரசீகச் சத்ரப்பான (ஆளுநர்) பிக்சோதரசு தனது முதல் மகளை அலெக்சாந்தரின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய பிலிப் அரிதேயசுக்கு மணமுடிக்க முன் வந்தார்.[43] அரிதேயசைத் தனது வாரிசாக்க பிலிப் எண்ணம் கொண்டுள்ளார் என, ஒலிம்பியாசு மற்றும் அலெக்சந்தரின் நண்பர்களில் பலர் பரிந்துரைத்தனர்.[43] பிக்சோதரசுக்கு, கொரிந்தின் தெசாலுசு என்ற நடிகரை அனுப்பியதன் மூலம் அலெக்சாந்தர் எதிர்வினையாற்றினார். அந்த நடிகர் பிக்சோதரசு தனது மகளை நெறிதவறிப் பிறந்த ஒரு மகனுக்குக் கொடுக்கக் கூடாது என்றும், அலெக்சாந்தருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதைப் பிலிப் கேட்டபோது பேச்சுவார்த்தைகளை நிறுத்தினார். ஒரு காரியனின் மகளை மணக்க நினைத்ததற்காக அலெக்சாந்தரைக் கடிந்து கொண்டார். அலெக்சாந்தருக்கு அதைவிட ஒரு சிறந்த பெண்ணை மண முடிக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக விளக்கினார்.[43] அலெக்சாந்தரின் நண்பர்களில் நால்வரான எர்பலுசு, நியர்சுசு, தாலமி மற்றும் எரிகியசு ஆகியோரைப் பிலிப் நாடு கடத்தினார். தெசாலுசைக் கைது செய்து சங்கிலியுடன் அழைத்துவருமாறு கொரிந்தியர்களைப் பணித்தார்.[46]

மாசிடோனின் மன்னன்

பொறுப்பேற்பு

அரங்கத்திற்குள் நுழையும்போது, அலெக்சாந்தரின் தந்தையான இரண்டாம் பிலிப், பசானியசால் அரசியல் கொலை செய்யப்படுகிறார்

கி. மு. 336ஆம் ஆண்டின் கோடை காலத்தில், தனது மகள் கிளியோபட்ராவுக்கும், ஒலிம்பியாசின் சகோதரனாகிய எபிரசின் முதலாம் அலெக்சாந்தருக்குமான திருமணத்த்துகாக ஏகேயில் இருந்தபோது தன் பாதுகாவலர்களையின் தலைவனான பசானியாசால்[e] பிலிப் அரசியல் கொலை செய்யப்பட்டார். தப்பிக்க முயன்ற பசானியசு ஒரு திராட்சைக் கொடியால் கால் இடறி விழுந்தார். துரத்தி வந்தவர்கள் பசானியசைக் கொன்றனர். கொன்றவர்களில் அலெக்சாந்தரின் தோழர்களான பெர்திக்கசு மற்றும் லியோன்னதுசு ஆகியோரும் அடங்குவர். அந்த இடத்திலேயே தன் 20ஆம் வயதில் உயர் குடியினர் மற்றும் இராணுவத்தால் மன்னனாக அலெக்சாந்தர் அறிவிக்கப்பட்டார்.[47][48][49]

சக்தியை வலுப்படுத்துதல்

அரியணைக்குப் போட்டியாளர்களாக வருவார்கள் எனக் கருதப்பட்டவர்களை ஒழித்துக்கட்டியதன் மூலம், அலெக்சாந்தர் தனது ஆட்சியைத் தொடங்கினார். தன் உறவினரான நான்காம் அமீந்தசை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.[50] லின்செசிதிசு பகுதியைச் சேர்ந்த இரண்டு மாசிடோனிய இளவரசர்களையும் மரண தண்டனைக்கு உட்படுத்தினார். ஆனால் மூன்றாவது இளவரசரான அலெக்சாந்தர் லின்செசுதிசை விட்டுவிட்டார். கிளியோபாட்ரா யூரிதைசு மற்றும் அவருடன் பிலிப்புக்குப் பிறந்த மகளான ஐரோப்பா ஆகியோரை ஒலிம்பியாசு உயிருடன் எரித்தார். இதை அறிந்தபோது அலெக்சாந்தர் மிகவும் கோபமடைந்தார். கிளியோபட்ராவின் உறவினரும், ஆசியா மைனரில் இருந்த இராணுவத்தின் முன் வரிசைப் பாதுகாவலர்களின் தளபதியுமான அத்தலுசையும் மரண தண்டனைக்கு உட்படுத்த அலெக்சாந்தர் ஆணையிட்டார்.[50][51]

ஏதென்சு பக்கம் கட்சி தாவுவது பற்றி டெமோஸ்தனிஸுடன் அத்தலுசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அத்தலுசு அலெக்சாந்தரைக் கடுமையாக விமர்சித்து வந்தார். கிளியோபட்ராவின் கொலைக்குப் பிறகு அத்தலுசை உயிருடன் விட்டால் அவர் மிகவும் ஆபத்தானவராக மாறுவார் என அலெக்சாந்தர் கருதினார்.[51] அலெக்சாந்தர் அரிதேசை விட்டுவிட்டார். ஒலிம்பியாசு விஷம் கொடுத்ததன் காரணமாக அரிதேசு மனநலமற்றவராக மாறிவிட்டார் எனப் பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[47][49][52]

பிலிப்பின் மறைவு பற்றிய செய்தியானது பல அரசுகளைப் புரட்சி செய்ய எழுப்பியது. இவற்றில் தீப்சு, ஏதென்சு, தெச்சாலி மற்றும் மாசிடோனின் வடக்கிலிருந்த திரேசு பழங்குடியினங்களும் அடங்கும். அலெக்சாந்தரை இந்தப் புரட்சிகளின் செய்திகள் அடைந்தபோது, அவர் உடனடியாகச் செயலாற்றினர். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்ட போதும், அலெக்சாந்தர் 3,000 மாசிடோனியக் குதிரைப் படையினரைத் திரட்டித் தெற்கே தெச்சாலியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார். ஒலிம்பசு மற்றும் ஒச்சா மலைகளுக்கு இடைப்பட்ட வழியை தெச்சாலி இராணுவமானது ஆக்கிரமித்திருப்பதை அறிந்தார். ஒச்சா மலை மீது பயணிக்குமாறு தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். தெச்சாலியர்கள் அடுத்த நாள் கண் விழித்தனர். அலெக்சாந்தரைத் தங்களுக்குப் பின்புறமாகக் கண்டனர். கால தாமதமின்றிச் சரணடைந்தனர். தங்களுடைய குதிரைப்படையை அலெக்சாந்தரின் படையுடன் இணைத்தனர். பிறகு பெலொப்பொனேசியா நோக்கித் தெற்கே தனது பயணத்தை அலெக்சாந்தர் தொடர்ந்தார்.[53]

தெர்மோபைலேவில் அலெக்சாந்தர் பயணத்தை நிறுத்தினார். அங்கு அம்பிக்தியோனிக் குழுமத்தின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். தெற்கு நோக்கிக் கொரிந்திற்குப் பயணம் மேற்கொண்டார். ஏதென்சு அமைதி வேண்டியது. அலெக்சாந்தர் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை மன்னித்தார். கொரிந்தில் அலெக்சாந்தர் தங்கியிருந்த போது தான், பிரபலமான அலெக்சாந்தர் மற்றும் அனைவரும் சுயநலவாதிகள் எனும் எண்ணமுடைய தியோசினிசின் சந்திப்பு நடந்தது. தியோசினிசுக்காகத் தான் என்ன செய்ய முடியும் என்று அலெக்சாந்தர் கேட்டபோது, அந்தத் தத்துவஞானி சூரிய வெளிச்சத்தை மறைத்துக் கொண்டிருப்பதாகவும், சற்றே விலகித் தனது பக்கவாட்டில் நிற்குமாறும் அலெக்சாந்தரிடம் கூறினார்.[54] இந்தப் பதிலானது அலெக்சாந்தருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியாதாகத் தெரிகிறது. "உண்மையில், நான் அலெக்சாந்தராக இல்லாவிட்டால், தியோசினிசாக இருக்க விரும்புவேன்" என்று கூறினார்[55]. கொரிந்தில் அலெக்சாந்தர் எசிமோன் ("தலைவர்") என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பிலிப்பைப் போலவே பாரசீகத்துக்கு எதிராக நடைபெறப்போகும் யுத்தத்திற்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு திரேசியக் கிளர்ச்சி குறித்த செய்தியையும் அலெக்சாந்தர் பெற்றார்.[56]

பால்கன் படையெடுப்பு

கி. மு. 335இல் திரேசியர்களுக்கு எதிரான "வண்டிகளின் யுத்தத்தில்" மாசிடோனியக் காலாட்படை.

ஆசியாவுக்கு வரும் முன், அலெக்சாந்தர் தன் நாட்டின் வட எல்லைகளைப் பாதுகாப்பானதாக உருவாக்க விரும்பினார். கி. மு. 335ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில், பல்வேறு கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக இவர் முன்னேறினர். ஆம்ப்பிபோலிஸில் தொடங்கிய இவர், கிழக்கே "சுதந்திர திரேசியர்களின்" நாட்டிற்குப் பயணித்தார். ஏமுசு மலையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த திரேசியப் படைகளை மாசிடோனிய இராணுவமானது தாக்கித் தோற்கடித்து.[57] திரிப்பள்ளி நாட்டிற்குள் மாசிடோனியர்கள் அணிவகுத்துச் சென்றனர். லிகினசு ஆற்றுக்கு அருகில் அவர்களின் இராணுவத்தைத் தோற்கடித்தனர்.[58] லிகினசு ஆறானது, தன்யூபு ஆற்றின் ஒரு கிளை நதியாகும். பிறகு அலெக்சாந்தர் மூன்று நாட்களுக்குத் தன்யூபு ஆற்றை நோக்கி அணிவகுத்தார். ஆற்றின் மறுகரையில் கெதே பழங்குடியினத்தை எதிர் கொண்டார். ஆற்றை இரவில் கடந்து அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஒரு சிறு குதிரைப்படை சண்டைக்குப் பிறகு, அவர்களது இராணுவத்தைப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளினார்.[59]

தன்னுடைய அதிகாரத்திற்கு எதிராக இல்லீரியத் தலைவனான கிளேயிதசு மற்றும் தவுலந்தியின் மன்னனாகிய கிளாவுகியசு ஆகியோர் வெளிப்படையாகக் கிளர்ச்சியில் ஈடுபடும் செய்திகள் அலெக்சாந்தரை அடைந்தன. மேற்கே இல்லீரியாவை நோக்கி அணிவகுத்தார். ஒவ்வொருவரையும் அலெக்சாந்தர் தோற்கடித்தார். அந்த இரண்டு ஆட்சியாளர்களும் தங்கள் துருப்புகளுடன் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த வெற்றிகளின் மூலம் மாசிடோனியாவின் வட எல்லையை அலெக்சாந்தர் பாதுகாப்புடையதாக்கினார்.[60]

தீப்சு அழிக்கப்படுதல்

அலெக்சாந்தர் வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, தெபன்களும், ஏதெனியர்களும் மீண்டும் ஒருமுறை கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அலெக்சாந்தர் உடனடியாகத் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.[61] மற்ற நகரங்கள் மீண்டும் தயங்கியபோது. தீப்சு நகரமானது போரிட முடிவு செய்தது. தெபன் எதிர்ப்பானது வலுவற்றதாக இருந்தது. அலெக்சாந்தர் அந்த நகரத்தை தரைமட்டமாக்கினார். மற்ற போவோத்திய நகரங்களுக்கு மத்தியில் அதன் நிலப்பரப்பைப் பகிர்ந்தளித்தார். தீப்சின் முடிவானது ஏதென்சை அமைதியாக்கியது. ஒட்டுமொத்தக் கிரேக்கமும் தற்காலிகமாக அமைதியடைந்தது.[61] பிறகு, தனது ஆசியப் போர் நடவடிக்கைகளில் அலெக்சாந்தர் இறங்கினார். அந்திபதேரை நாட்டை ஆளப் பிரதிநிதியாக நியமித்து விட்டுக் கிளம்பினார்.[62]

அகாமனிசியப் பாரசீகப் பேரரசை வெல்லுதல்

அனத்தோலியா

அலெக்சாந்தரின் பேரரசையும், அவரது வழிகளையும் குறிக்கும் வரைபடம்
மகா அலெக்சாந்தர்
'அலெக்சாந்தர் பாபிலோனுக்குள் நுழைதல்,'கலை நூலகத்தின் தேசிய படக்காட்சி, வாசிங்டன் டி. சி.
கோர்டியன் முடிச்சை வெட்டும் அலெக்சாந்தர் (1767). ஓவியர் சீன்-சைமோன் பெர்தெலெமி.

கி. மு. 338இல் சிரோனியா யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் பிலிப் தன்னை ஒரு குழுமத்தின் எசிமோனாக நிறுவுவதற்கான வேலையைத் தொடங்கினார். 480இல் கிரேக்கம் அடைந்த சில மனக் குறைகளுக்காகப் பாரசீகர்களுக்கு எதிராக ஒரு படையெடுப்பை நடத்த வேண்டும் என்பதே இந்தக் குழுமத்தின் நோக்கம் என தியோதரசு என்ற வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனத்தோலியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த கிரேக்க நகரங்களை அகாமனிசிய ஆட்சியிலிருந்து விடுவிப்பதும் இதன் நோக்கமாகும். 336இல் பர்மேனியோன், அமீந்தசு, ஆந்த்ரோமேனசு மற்றும் அத்தலுசு ஆகியோரை 10,000 வீரர்களைக் கொண்ட ஓர் இராணுவத்துடன் அனத்தோலியாவுக்கு, படையெடுப்புக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக அனுப்பினார்.[63][64] முதலில் அனைத்து நன்றாக நடந்தது. அனத்தோலியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த கிரேக்க நகரங்கள் பிலிப் கொல்லப்பட்டு அவரது இளம் வயது மகன் அலெக்சாந்தர் மன்னனானார் என்ற செய்தி வரும் வரை கிளர்ச்சியில் ஈடுபட்டன. பிலிப் இறப்பால் மாசிடோனியர்கள் சோர்ந்து போயினர். மக்னீசியாயாவுக்கு அருகில் ரோட்சில் கூலிப்படையினரான மெம்னோன் என்பவரின் தலைமையிலான அகாமனிசியர்கள் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்டனர்.[63][64]

இரண்டாம் பிலிப்பின் படையெடுப்புத் திட்டத்தைக் கையிலெடுத்த அலெக்ஸாந்தரின் இராணுவமானது, கி. மு. 334இல் தார்தனெல்சு நீரிணைப்பைக் கடந்தது. அலெக்சாந்தரின் படையில் சுமார் 48,100 வீரர்கள், 6,100 குதிரைப் படையினர், மற்றும் 120 கப்பல்களைக் கொண்ட ஒரு படையும், கப்பற்படையில் 38,000[61] வீரர்களும் இருந்தனர். இவர்கள் மாசிடோன், மற்றும் பல கிரேக்க நகர அரசுகள், கூலிப்படையினர் மற்றும் திரேசு, பையோனியா மற்றும் இல்லீரியாவிலிருந்து திரட்டப்பட்ட நிலப்பிரபுக்களின் வீரர்கள் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.[65][f] பாரசீகப் பேரரசு முழுவதையும் வெல்லும் தனது எண்ணத்தை ஆசிய மண்ணில் ஓர் ஈட்டியை எறிந்து, கடவுளிடமிருந்து பெறும் ஒரு பரிசாக ஆசியாவைத் தான் பெற்றுக் கொண்டதாகக் கூறியதன் மூலம் அலெக்சாந்தர் வெளிக்காட்டினார். அலெக்சாந்தரின் தந்தை பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுத்த நிலைக்கு மாறாக, அலெக்சாந்தரின் போரிடும் ஆர்வத்தையும் இது காட்டியது.[61]

கிரானிகசு யுத்தத்தில் பாரசீகப் படைகளுக்கு எதிராகப் பெற்ற ஓர் ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, சர்தீசின் பாரசீக மாகாணத் தலைநகரம் மற்றும் கருவூலத்தின் சரணடைவை அலெக்சாந்தர் ஏற்றுக் கொண்டார். பிறகு ஐயோனியாவின் கடற்கரைக்கு முன்னேறினார். அங்கிருந்த நகரங்களுக்குத் தன்னாட்சியையும், சனநாயகத்தையும் வழங்கினார். அகாமனிசியப் படைகளால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மிலீட்டஸை வெல்ல ஒரு தேர்ந்த முற்றுகை நடவடிக்கை தேவைப்பட்டது. அதற்கு அருகிலேயே பாரசீகக் கப்பற்படையும் இருந்தது. மேலும் தெற்கில், காரியாவின் ஆலிகார்னாசசில் அலெக்சாந்தர் தனது முதல் பெரும் அளவிலான முற்றுகையை வெற்றிகரமாக நடத்தினார். தன்னுடைய எதிரிகளான கூலிப்படைத் தலைவரான ரோட்ஸின் மெம்னோன் மற்றும் காரியாவின் பாரசீக சத்ரப்பான ஓரோந்தோபதேசு ஆகியோரைக் கடல் வழியாகப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளினார்.[66] காரியாவின் அரசாங்கத்தின் பொறுப்பை, எகதோம்னிது அரசமரபைச் சேர்ந்த, தன்னைத் தத்தெடுத்த அதா என்பவருக்கு அலெக்சாந்தர் கொடுத்தார்.[67]

ஆலிகார்னாசசிலிருந்து மலைப்பாங்கான லைசியா மற்றும் பாம்ப்ளியாவின் சமவெளிக்கு அலெக்சாந்தர் முன்னேறினார். பாரசீகர்கள் கப்பல் தளங்களை அமைக்க இயலாமல் செய்ய அனைத்துக் கடற்கரை நகரங்களிலும் தனது கட்டுப்பாட்டை நிலை நாட்டினர். பாம்ப்ளியாவில் இருந்து கடற்கரையானது எந்த ஒரு முக்கியத் துறைமுகங்களையும் கொண்டிருக்கவில்லை. அலெக்சாந்தர் நிலப்பரப்பின் உள்பகுதிக்குள் பயணிக்க ஆரம்பித்தார். தெர்மோசோசில் அலெக்சாந்தரின் செருக்குக் குலைக்கப்பட்டது. ஆனால், அவர் பிசிதியா நகரத்திற்குள் புயல் போல் நுழையவில்லை.[68] பண்டைய பிரைகியத் தலைநகரமான கோர்தியத்தில் அலெக்சாந்தர் முன்னர் தீர்க்க முடியாது என்று எண்ணப்பட்ட கோர்டியன் முடிச்சை "தீர்த்தார்". எதிர் கால "ஆசிய மன்னன்" மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று கூறப்பட்டது.[69] இக்கதையின் படி, முடிச்சானது எவ்வாறு அவிழ்க்கப்படுகிறது என்பது முக்கியமல்ல என்று கூறித் தனது வாளால் அதை வெட்டினார்.[70]

லெவண்டும், சிரியாவும்

கி. மு. 333ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில் தாரசைக் கடந்து அலெக்சாந்தர் சிலிசியாவுக்குள் நுழைந்தார். உடல் நலக் குறைவு காரணமாக, ஒரு நீண்ட நிறுத்த ஓய்வுக்குப் பிறகு சிரியாவை நோக்கி அணிவகுக்க ஆரம்பித்தார். தாராவின் குறிப்பிடத்தக்க பெரிய இராணுவத்தால் பயண வேகத்தில் தாராவின் இராணுவத்தை விடக் குறைந்த போதும், சிரியாவுக்கு மீண்டும் அணிவகுத்து வந்தார். அங்கு இசுசு யுத்தத்தில் தாராவைத் தோற்கடித்தார். யுத்தத்திலிருந்து தாரா தப்பி ஓடினார். இதன் காரணமாக அவரது இராணுவம் சிதறுண்டது. தன் மனைவி, இரண்டு மகள்கள், தாய் சிசிகாம்பிசு மற்றும் ஒரு சிறப்பான செல்வங்களை விட்டு விட்டுச் சென்றார்.[71] தாரா ஏற்கனவே இழந்த நிலங்கள் உள்ளிட்டவை சம்பந்தமாக ஓர் அமைதி ஒப்பந்தம் மற்றும் அவரது குடும்பத்திற்கு 10,000 தலேந்துகள் பிணையத் தொகையாகக் கொடுக்க முன் வந்தார். தான் தற்போது ஆசியாவின் மன்னனாகிவிட்டதால் தான் மட்டுமே நிலப்பரப்பைப் பிரிப்பது எவ்வாறு என்பதை முடிவு செய்வேன் என்று அலெக்சாந்தர் பதிலளித்தார்.[72] சிரியாவையும், லெவண்டின் பெரும்பாலான கடற்கரையையும் கைப்பற்ற அலெக்சாந்தர் முன்னேறினார்.[67] அடுத்த ஆண்டு கி. மு. 332இல் தயரைத் தாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒரு நீண்ட மற்றும் கடினமான முற்றுகைக்குப் பிறகு நகரைக் கைப்பற்றினார்.[73][74] இராணுவ வயதுடைய ஆண்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.[75]

எகிப்து

எகிப்தியச் சித்திர எழுத்துக்களில் மகா அலெக்சாந்தரின் பெயர் வலப்புறமிருந்து இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது. அண். கி. மு. 332. இலூவா அருங்காட்சியகம்.

அலெக்சாந்தர் தயரை அழித்தபோது எகிப்துக்குச் செல்லும் வழியில் இருந்த பெரும்பாலான பட்டணங்கள் சீக்கிரமே பணிந்தன. எனினும், அலெக்சாந்தர் காசாவில் எதிர்ப்பைச் சந்தித்தார். காசாவானது கடுமையான அரண்களைக் கொண்டிருந்தது. ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அதை வெல்ல முற்றுகை தேவைப்பட்டது. "மேட்டின் உயரம் காரணமாக முற்றுகை என்பது நடத்த இயலாததாக இருக்கும் என இவரது பொறியாளர்கள் சுட்டிக்காட்டியபோது... அம்முற்றுகையை நடத்த அலெக்சாந்தருக்கு அது ஊக்குவிப்பாக அமைந்தது".[76] மூன்று தோல்வியடைந்த தாக்குதல்களுக்குப் பிறகு நகரின் மையமானது வீழ்ந்தது. ஆனால், இம்முயற்சியில் அலெக்சாந்தர் தோள்பட்டையில் கடும் காயத்தைப் பெற்றார். இராணு வயதுடைய அனைத்து ஆண்களும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.[77]

பாரசீகர்களிடமிருந்து அலெக்சாந்தர் எடுத்துக்கொண்ட பெரும் எண்ணிக்கையிலான நிலப்பகுதிகளில் எகிப்து ஒன்றே ஒன்றுதான். சீவாவுக்குப் பயணித்த பிறகு. மெம்பிசில் இருந்து பிதா கோயிலில் அலெக்சாந்தருக்கு மகுடம் சூட்டப்பட்டது. இவர் ஓர் அயல் நாட்டவராக இருந்ததோ, இவர் தனது முழு ஆட்சியின் போதும் எகிப்தில் இல்லாமல் இருந்ததோ, எகிப்திய மக்கள் மன அமைதியை குலைக்கவில்லை எனத் தெரிகிறது.[78] பாரசீகர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட கோவில்களை அலெக்சாந்தர் புனரமைத்தார். எகிப்தியக் கடவுள்களுக்கு புதிய நினைவுச் சின்னங்களைக் கட்டினார். கர்னாக்கிலிருந்த லுக்சோர் கோயிலில் புனித படகுக்காக ஒரு கிறித்தவ வழிபாட்டு மனையைக் கட்டினார். எகிப்தில் இவர் இருந்த குறுகிய மாதங்களின் போது, கிரேக்க அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு வரி அமைப்பை மறுசீரமைத்தார். அந்நாட்டின் இராணுவ ஆக்கிரமிப்பை ஒருங்கிணைத்தார். கி. மு. 331ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆசியாவுக்குப் பாரச்சீகர்களைத் துரத்துவதற்காக, எகிப்தில் இருந்து சென்றார்.[78]

கி. மு. 332ஆம் ஆண்டு அலெக்சாந்தர் எகிப்தை நோக்கி முன்னேறினார். அம்மக்கள் தங்களுக்கு விடுதலை அளிக்க வந்தவராக இவரைக் கருதினர்[79]. தன் சக்தியை நியாயப்படுத்துவதற்காகவும், நீண்ட வழிவந்த பார்வோன்களின் வழித்தோன்றலாக அறியப்படுவதற்காகவும் மெம்பிசிலிருந்த கடவுளுக்கு அலெக்சாந்தர் பலியீடுகள் கொடுத்தார். சீவா பாலைவனச் சோலையில் இருந்த அமூன்-ராவின் புகழ் பெற்ற தெய்வ வாக்குப் உரைப்பவரிடம் ஆலோசனை பெற்றார்.[78] லிபியப் பாலைவனத்தின் சீவா பாலைவனச் சோலையில் இருந்த ஆரக்கிளில் தெய்வம் அமூனின் மகனாக அலெக்சாந்தர் அறிவிக்கப்பட்டார்.[80] இவ்வாறாக, அமூனைத் தனது உண்மையான தந்தையாக அலெக்சாந்தர் அடிக்கடிக் குறிப்பிட்டார். தன் இறப்பிற்குப் பிறகு, அலெக்சாந்தரின் படம் பொறித்த பணத் தாள்கள் அமூனின் கொம்புகளைக் கொண்டிருந்தன. இது அலெக்சாந்தரின் தெய்வீகத்தன்மைக்கு அடையாளமாகக் குறிப்பிடப்பட்டது.[81] அனைத்து பார்வோன்களுக்காகவும் கடவுள் அனுப்பிய ஒருவரின் முன்னறிவிப்பாக கிரேக்கர்கள் இந்தச் செய்தியைப் புரிந்து கொண்டனர்.[78]

எகிப்தில் இவர் தங்கியிருந்த போது அலெக்சாந்திரியாவை நிறுவினார். இவரது இறப்பிற்குப் பிறகு தாலமிப் பேரரசின் செழிப்பான தலைநகரமாக அலெக்சாந்திரியா உருவானது.[82] எகிப்தின் கட்டுப்பாடானது, லாகோசின் மகனாகிய முதலாம் தாலமிக்குக் கொடுக்கப்பட்டது. அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு இவர் தாலமி அரசமரபை (கி. மு. 305 - 30) நிறுவினர்.

அசிரியாவும், பாபிலோனியாவும்

கி. மு. 331ஆம் ஆண்டில், எகிப்திலிருந்து புறப்பட்ட அலெக்சாந்தர், மேல் மெசொப்பொத்தேமியாவில் (தற்போது வடக்கு ஈராக்கில் உள்ளது) உள்ள அகமானிசிய அசிரியாவுக்காக கிழக்கு நோக்கி அணிவகுத்துச் சென்றார். கௌகமேலா யுத்தத்தில் தாராவை மீண்டும் தோற்கடித்தார்.[83] மீண்டும் ஒருமுறை யுத்த களத்தில் இருந்து தாரா தப்பித்து ஓடினார். அர்பேலா வரை அலெக்சாந்தர் அவரைத் துரத்திச் சென்றார். இருவருக்குமிடையிலான இறுதியான, தீர்க்கமான சண்டையாக கெளகமேலா இருந்தது.[84] எகபடனாவுக்கு (தற்போதைய அமாதான்) மலைகளைத் தாண்டி தாரா தப்பி ஓடினார். அதேநேரத்தில், அலெக்சாந்தர் பாபிலோனைக் கைப்பற்றினார்.[85]

பாபிலோனிய வானியல் குறிப்புகளின் படி, "உலகின் மன்னன் அலெக்சாந்தர்" நகருக்குள் நுழைவதற்கு முன்னர் பாபிலோனிய மக்களுக்குத் தன் ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பினார்: "நான் உங்கள் வீடுகளுக்குள் நுழைய மாட்டேன்".[86]

பாரசீகம்

தற்போதைய ஈரானில் பாரசீக வாயிலின் தளம். இந்தச் சாலையானது 1990களில் இடப்பட்டது.

பாபிலோனில் இருந்து அலெக்சாந்தர் அகாமனிசியத் தலைநகரங்களில் ஒன்றான சூசாவுக்குச் சென்றார். அதன் கருவூலத்தைக் கைப்பற்றினார்[85]. பாரசீக அரச சாலை வழியாகப் சம்பிரதாயத்திற்காகப் பாரசீகத் தலைநகரமாக இருந்த பெர்சப்பொலிஸுக்குத் தன் பெரும்பாலான இராணுவத்தை அனுப்பி வைத்தார். நகரத்துக்கு நேரான வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளைத் தனக்காக அலெக்சாந்தர் பிரித்துக்கொண்டார். பாரசீக வாயில்கள் (தற்போதைய சக்ரோசு மலைத்தொடர்) எனப்படும் வழிக்குள் புயலெனப் புகுந்தார். இவ்வழியானது அரியோபர்சனேசு தலைமையிலான ஒரு பாரசீக இராணுவத்தால் அடைக்கப்பட்டிருந்தது. பெர்சப்பொலிஸின் கோட்டைக் காவல் படையினர் கருவூலத்தைச் சூறையாடும் முன்னர் அங்கு விரைந்தார்.[87]

பெர்சப்பொலிஸுக்குள் நுழைந்த போது, தனது துருப்புக்களுக்கு நகரத்தைச் சூறையாடப் பல நாட்களுக்கு அலெக்சாந்தர் அனுமதியளித்தார்.[88] அலெக்சாந்தர் பெர்சப்பொலிஸில் ஐந்து மாதங்கள் தங்கியிருந்தார்.[89] இவர் தங்கியிருந்த போது முதலாம் செர்கஸின் கிழக்கு அரண்மனையில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அது எஞ்சியிருந்த நகரம் முழுமைக்கும் பரவியது. யாரோ குடிபோதையில் செய்த விபத்து அல்லது செர்கஸ் இரண்டாம் பாரசீகப் போரின்போது ஏதென்ஸின் அக்ரோபோலிஸை எரித்ததற்கு வேண்டும் என்று பழிவாங்கச் செய்யப்பட்ட நிகழ்வு எனப் பலவரான காரணங்கள் கூறப்படுகின்றன;[90] அலெக்சாந்தரின் தோழரான எதேரா தைசு தூண்டிவிட்டு நெருப்பைப் பற்ற வைத்ததாகப் புளூட்டாக் மற்றும் தியோதரசு ஆகியோர் கூறுகின்றனர். நகரம் எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த போதும், அலெக்சாந்தர் தன் செயலுக்காக உடனே வருத்தம் கொள்ள ஆரம்பித்தார்.[91][92][93] தன்னுடைய வீரர்களுக்கு நெருப்பை அணைக்குமாறு ஆணையிட்டதாகப் புளூட்டாக் கூறுகிறார்.[91] ஆனால் தீயானது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு தீ ஏற்கனவே பரவி இருந்தது.[91] அடுத்த நாள் காலை வரை தனது செயலுக்காக அலெக்சாந்தர் வருத்தம் கொள்ளவில்லை எனக் கர்தியசு கூறுகிறார்.[91] கீழே விழுந்து கிடந்த செர்கஸின் சிலையைப் பார்த்து, அதை ஓர் உயிருள்ள மனிதனைப் போல பாவித்து, அலெக்சாந்தர் ஒரு கணம் அமைதியாகிப் பின்னர் பேசியதாகப் புளூட்டாக் தன் துணுக்கில் குறிப்பிட்டுள்ளார்:

கிரேக்கத்திற்கு எதிராக நீ மேற்கொண்ட போர்ப் பயணங்களுக்காக உன்னைக் கீழேயே கிடக்க விட்டுவிட்டு நான் செல்ல வேண்டுமா, அல்லது மற்ற அம்சங்களில் உன்னுடைய ஈகைப் பண்பு மற்றும் நல்லொழுக்கம் காரணமாக உன்னை நான் மீண்டும் நிற்க வைக்க வேண்டுமா?[94]

பாரசீகப் பேரரசு மற்றும் கிழக்கின் வீழ்ச்சி

அலெக்சாந்தரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டிற்குத் (கி. மு. 324) தேதியிடப்பட்ட பாக்திரியாவில் இருந்து கிடைத்த ஒரு நிர்வாக ஆவணம். இவரது பெயரின் "அலெக்சாந்திரோசு" வடிவத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாக அறியப்படும் ஆவணம். அரமைக் ஆவணங்களின் கலிலி சேகரிப்பு.[95]

அலெக்சாந்தர் பிறகு தாராவை மெதியாவுக்கும், பார்த்தியாவுக்கும் துரத்திச் சென்றார்.[96] பாரசீக மன்னரின் கையில் அவருடைய சொந்த விதி இல்லாமல் போய்விட்டது. இவரது பாக்திரியா சத்ரப்பும், இனத்தவருமான பெசுசுவால் தாரா கைதியாகப் பிடிக்கப்பட்டார்.[97] அலெக்சாந்தர் நெருங்கி வந்தபோது பெசுசு தனது ஆட்களைக்கொண்டு அந்த சிறந்த மன்னன் உயிரிழக்கும் அளவுக்குக் குத்திக்கொன்றார். பிறகு தாராவுக்கு அடுத்த மன்னனாக, தனக்கு ஐந்தாம் அர்தசெர்கஸ் என்று பெயரிட்டுக் கொண்டார். பிறகு, அலெக்சாந்தருக்கு எதிராக ஒரு கரந்தடிப் போர் முறைத் தாக்குதல்களைத் தொடங்குவதற்காக நடு ஆசியாவுக்குப் பின் வாங்கினார்.[98] தாராவின் எஞ்சியவற்றை அவருடைய அகாமனிசிய முன்னோர்களுக்கு அருகில் ஒரு மன்னனுக்குத் தகுதியான இறுதிச்சடங்கில் அலெக்சாந்தர் புதைத்தார்.[99] அகாமனிசிய அரியணைக்கு அடுத்த ஆட்சியாளராகத் தன்னை, தாரா இறக்கும் போது பெயரிட்டார் என அலெக்சாந்தர் கூறினார்.[100] தாராவின் இறப்புடன் அகாமனிசியப் பேரரசானது வீழ்ச்சி அடைந்துவிட்டதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது.[101] எனினும், சமூக வாழ்வின் அடிப்படையான வடிவங்களும், அரசின் பொதுவான அமைப்பும் அலெக்சாந்தரின் சொந்த ஆட்சியின் கீழ் பராமரிக்கப்பட்டுப் புத்துயிர் கொடுக்கப்பட்டன. ஈரானியலாளர் பியர்ரி பிரயன்ட், அலெக்சாந்தரை "அகாமனிசியர்களின் கடைசி ஆட்சியாளராகப் பல வழிகளில் செயல்பட்டார் எனக் கருதலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.[102]

பெசுசுவைத் தவறான முறையில் அரியணையைக் கைப்பற்றியவராக அலெக்சாந்தர் கருதினார். அவரைத் தோற்கடிப்பதற்காகப் புறப்பட்டார். இந்தப் படையெடுப்பானது ஆரம்பத்தில் பெசுசுக்கு எதிரானதாகத் தொடங்கப்பட்டது. ஆனால், நடு ஆசியாவுக்குள் பயணித்த ஒரு பெரிய பயணமாக மாறிப்போனது. அலெக்சாந்தர் ஒரு தொடர்ச்சியான புதிய நகரங்களை நிறுவினார். இவை அனைத்திற்கும் அலெக்சாந்திரியா என்று பெயரிட்டார். தற்போதைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தாரம், தற்போதைய தஜிகிஸ்தானில் உள்ள அலெக்சாந்திரியா எசுசதே (பொருள்: "தொலைதூரத்தில் உள்ளது") ஆகியவை இதில் அடங்கும். இந்தப் போர்ப் பயணமானது அலெக்சாந்தரை மெதியா, பார்த்தியா, அரியா (மேற்கு ஆப்கானிஸ்தான்), தரங்கியானா, அரசோசியா (தெற்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தான்), பாக்திரியா (வடக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தான்), மற்றும் சிதியா ஆகியவற்றுக்குப் பயணிக்க வைத்தது.[103]

கி. மு. 329ஆம் ஆண்டு, சோக்தியானாவின் சத்திரப்பை தெளிவற்ற பதவியைக் கொண்டு வைத்திருந்த இசுபிதமேனசு, பெசுசுவுக்குத் துரோகம் செய்து, அலெக்சாந்தரின் நம்பிக்கைக்குரிய தோழரான தாலமியிடம் காட்டிக் கொடுத்தார். பெசுசு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[104] இருந்தும், பிறகு சில காலத்தில், சக்சார்தசு ஆற்றின் அருகில் ஒரு குதிரை நாடோடிகளின் இராணுவத்தின் ஊடுருவலை அலெக்சாந்தர் எதிர் கொள்ள வேண்டி வந்தது. சோக்தியானவில் இசுபிதமேனசு கிளர்ச்சியில் ஈடுபட்டார். சக்சார்தசு யுத்தத்தில் சிதியர்களை அலெக்சாந்தர் தானும் பங்கெடுத்துத் தோற்கடித்தார். இசுபிதமேனசுக்கு எதிராக உடனடியாக ஒரு போர்ப் பயணத்தைத் தொடங்கினார். கபை யுத்தத்தில் அவரைத் தோற்கடித்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு, இசுபிதமேனசு அலெக்சாந்தரிடம் அமைதி வேண்டினார். தன் சொந்த ஆட்களையே கொல்லப்பட்டார்.[105]

பிரச்சினைகளும், சதித்திட்டங்களும்

கிளேயிதசின் கொலை. ஓவியர் ஆந்த்ரே கசுதைக்னே (1898–1899).

இக்காலத்தின் போது, பாரசீக உடை மற்றும் பழக்க வழக்கங்களின் சில கூறுகளை அலெக்சாந்தர் கடைபிடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, கையில் மரியாதைக்காக முத்தமிடுவது அல்லது தரையில் பணிந்து வணங்குவது எனும் புரோசுகினேசிசு பழக்கவழக்கம். இதைப் பாரசீகர்கள் சமூக ரீதியாகத் தங்களைவிட உயர்ந்தவர்களுக்கு மரியாதைக்காகச் செலுத்துவர்.[106] ஈரானிய உயர் வகுப்பினரின் உதவி மற்றும் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட அலெக்சாந்தரின் பரந்த உத்தியின் ஓர் அம்சம் இதுவாகும்.[102] எனினும், புரோசுகினேசிசு நடத்தையைத் தெய்வங்களுக்கு உரியதாகக் கிரேக்கர்கள் கருதினர். இதைத் தனக்கு மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்பியதன் மூலம் அலெக்சாந்தர் தன்னைத் தெய்வமாக்கிக் கொள்ள விரும்பினார் எனக் கிரேக்கர்கள் நம்பினர். இது அலெக்சாந்தர், பல சொந்த நாட்டினரின் ஆதரவை இழக்க வைத்தது. இறுதியாக அலெக்சாந்தர் இந்த நடத்தையைக் கைவிட்டுவிட்டார்.[107]

அகாமனிசியர்களின் நீண்ட ஆட்சியின்போது, மைய அரசாங்கம், இராணுவம் மற்றும் பல சத்திரப்புகள் உள்ளிட்ட பேரரசின் பல பிரிவுகளின் உயர் பதவிகள் ஈரானியர்களுக்கு என்று, குறிப்பாகப் பெருளவுக்கு பாரசீக உயர் குடியினருக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.[102] இப்பாரசீக உயர் குடியினர் அகாமனிசிய அரச குடும்பத்துடன் திருமண பந்தங்களின் மூலம் பல வழிகளில் மேலும் இணைக்கப்பட்டிருந்தனர்.[102] பேரரசுக்கு அதன் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை ஒரு நீண்ட காலத்திற்குக் கொடுத்த, பல்வேறு பிரிவுகள் மற்றும் மக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற ஒரு பிரச்சனையை இது அலெக்சாந்தருக்கு ஏற்படுத்தியது.[102] அனத்தோலியா, பாபிலோனியா அல்லது எகிப்தின் ஏகாதிபத்திய அமைப்புகளில் இருந்த உட்புற வேறுபாடுகளிலிருந்து வெறுமனே மிகு நலம் பெறுவது என்பது பற்றாது என அலெக்சாந்தர் புரிந்து கொண்டார் என பிரயன்ட் விளக்குகிறார். ஈரானியர்களின் ஆதரவு கொண்டோ அல்லது இல்லாமலோ ஒரு மைய அரசாங்கத்தை (மீண்டும்) உருவாக்க வேண்டும் என்ற தேவை அலெக்சாந்தருக்கு இருந்தது.[102] கி. மு. 334ஆம் ஆண்டிலேயே, இதைப்பற்றிய தனது புரிதலை அலெக்சாந்தர் வெளிக்காட்டியுள்ளார். "அகாமனிசிய முடியரசின் சித்தாந்தம், குறிப்பாக நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் மன்னன் என்ற கருத்துருவின் முக்கியக் கூறுகளைப் பயன்படுத்திக்கொண்டு" ஆட்சியில் இருந்த மன்னன் மூன்றாம் தாராவுக்குச் சவால் விடுத்தார்.[102] கி. மு. 332இல் மூன்றாம் தாராவுக்கு அலெக்சாந்தர் ஒரு மடலை எழுதினார். அதில் "அகாமனிசிய அரியணைக்குத் தாராவை விடத் தான் தகுதி வாய்ந்தவன்" என்று வாதிட்டார்.[102] எனினும், பெர்சப்பொலிஸில் இருந்து அகாமனிசிய அரண்மனையை எரிப்பது என்று அலெக்சாந்தர் எடுத்த இறுதி முடிவு, அதனுடன் சேர்ந்து ஒட்டுமொத்த பாரசீக மக்களின் முழுமையான தவிர்ப்பு அல்லது எதிர்ப்பானது தாராவுக்கு அடுத்த நியாயமான மன்னனாக அலெக்சாந்தர் தன்னைக் காட்டிக் கொள்வதை நடைமுறைக்கு இயலாததாக மாற்றியது.[102] எனினும், பெசுசுக்கு (ஐந்தாவது அர்தசெர்கஸ்) எதிராக "மூன்றாம் தாராவுக்காகப் பழிவாங்குபவர் என்பதன் மூலம் தன் நியாயத்தின் கோரிக்கையை" அலெக்சாந்தர் மீண்டும் உறுதிப்படுத்திக் கூறினார் என பிரயன்ட் கூறுகிறார்.[102]

அலெக்சாந்தரின் உயிருக்கு எதிரான ஒரு சதித்திட்டமானது வெளிப்படுத்தப்பட்டது. இவரது அதிகாரிகளில் ஒருவரான பிலோதசு அலெக்சாந்தரை எச்சரிப்பதில் தோல்வியடைந்ததால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். மகனின் இறப்பானது தந்தையின் இறப்பையும் இன்றியமையாததாக்கியது. எகபடனாவில் இருந்த கருவூலத்தைக் காக்கும் பணியில் இருந்த பர்மெனியோன், பழிவாங்கும் முயற்சிகளைத் தவிர்ப்பதற்காக, அலெக்சாந்தரின் ஆணைப் படி அரசியல் கொலை செய்யப்பட்டார். மற்றொரு மோசமான செயலாக, கிரானிகசில் தனது உயிரைக் காப்பாற்றிய கருப்பு கிளேயிதசை, சமர்கந்தில் (தற்போதைய சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்) நடைபெற்ற ஒரு வன்முறையான குடிபோதைச் சண்டையில் அலெக்சாந்தர் தானே கொன்றார். பல நீதித் தவறுகளை அலெக்சாந்தர் செய்து விட்டதாகக் கிளேயிதசு குற்றம் சாட்டினார். ஓர் ஊழல் நிறைந்த கிழக்கு வாழ்க்கை முறைக்காக, மாசிடோனிய வாழ்க்கை முறைகளை அலெக்சாந்தர் மறந்து விட்டதாகக் கூறினார்.[108]

பிறகு நடு ஆசியப் பயணத்தின்போது, அலெக்சாந்தரின் உயிருக்கு எதிரான ஓர் இரண்டாவது சதித் திட்டம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த முறை இது இவரது சொந்தப் பணியாள் சிறுவர்களால் துண்டப்பட்டிருந்தது. இவரது அலுவல்ரீதியான வரலாற்றாளரான ஒலிந்துசின் கல்லிசுதனிசு இந்தத் திட்டத்தில் சிக்க வைக்கப்பட்டார். தனது, அலெக்சாந்தரின் அனபசிசு நூலில் அர்ரியன், கல்லிசுதனிசு மற்றும் பணியாள் சிறுவர்கள் சித்திரவதை எந்திரத்தில் வைத்து தண்டனை கொடுக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார். இதற்குப் பிறகு அவர்கள் சீக்கிரமே இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[109] கல்லிசுதனிசு இந்தத் திட்டத்தில் உண்மையிலேயே ஈடுபட்டிருந்தார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு முன், புரோசுகினேசிசு நடத்தையை அறிமுகப்படுத்தும் முயற்சிகளின் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியதன் மூலம் அலெக்சாந்தரின் ஆதரவை கல்லிசுதனிசு இழந்திருந்தார்.[110]

அலெக்சாந்தர் இல்லாத வேளையில் மாசிடோன்

அலெக்சாந்தர் ஆசியாவுக்குப் புறப்பட்ட போது, ஓர் அனுபவம் வாய்ந்த இராணுவ மற்றும் அரசியல் தலைவரும், இரண்டாம் பிலிப்பின் "பழைய பாதுகாவலர்களில்" ஒருவராகவும் இருந்த தன் தளபதி அந்திபேதரை மாசிடோனை நிர்வகிக்கும் பொறுப்பில் விட்டுச்சென்றார்.[62] தீப்சை அலெக்சாந்தர் சூறையாடியது, அலெக்சாந்தர் இல்லாத வேளையில் கிரேக்கமானது தொடர்ந்து அமைதியாக இருப்பதை உறுதி செய்தது.[62] இதற்கு ஒரு விதிவிலக்கு, கி. மு. 331இல் எசுபார்த்தா மன்னனாகிய மூன்றாம் அகிசு அனைவரையும் ஆயுதம் ஏந்த அழைத்ததாகும். அவரை அந்திபேதர் மெகாலோபோலிசு யுத்தத்தில் தோற்கடித்துக் கொன்றார்.[62] கொரிந்த் குழுமத்திடம் எசுபார்த்தர்களுக்குத் தண்டனை கொடுக்க அந்திபேதர் பரிந்துரைத்தார். ஆனால் அலெக்சாந்தர் அவர்களை மன்னித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.[111] அந்திபேதருக்கும், ஒலிம்பியாசுக்கும் இடையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரச்சினைகள் இருந்தது. ஒருவர் மற்றொருவரைப் பற்றி அலெக்சாந்தரிடம் புகாரளித்துக் கொண்டிருந்தனர்.[112]

அலெக்சாந்தர் ஆசியாவில் போர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தில், கிரேக்கமானது பொதுவாக அமைதி மற்றும் செழிப்பான ஒரு காலத்தைக் கொண்டிருந்தது.[113] தனது படையெடுப்பில் இருந்து பெருமளவிலான செல்வங்களை அலெக்சாந்தர் கிரேக்கத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார். இது பொருளாதாரத்தை ஊக்குவித்தது. இவரது பேரரசு முழுவதும் வணிகத்தை அதிகப்படுத்தியது.[114] இருப்பினும், தொடர்ந்து துருப்புக்கள் வேண்டும் என்று அலெக்சாந்தர் கோரியதும், இவருடைய பேரரசு முழுவதும் மாசிடோனியர்களை இடம்பெயர வைத்ததும் மாசிடோனின் வலிமையைக் குறைத்தது. அலெக்சாந்தருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பெருமளவுக்குப் பலவீனமாக்கியது. இறுதியாக மூன்றாவது மாசிடோனியப் போருக்குப் (கி. மு. 171 - கி. மு. 168) பிறகு உரோமால் அடிபணிய வைக்கப்பட்டது.[18]

நாணய முறை

பைபுலோசில் கண்டெடுக்கப்பட்ட மகா அலெக்சாந்தரின் வெள்ளி தெத்ராதிராம் நாணயங்கள் (அண். கி. மு. 330 - கி. மு. 300) (17, 33 கிராம்கள்)

பாங்கயான் மலைகளை இரண்டாம் பிலிப் வென்றதும், பிறகு கி. மு. 356 மற்றும் கி. மு. 342க்கு இடையில் தாசோசு தீவைக் கைப்பற்றியதும் செழிப்பான தங்க மற்றும் வெள்ளிச் சுரங்கங்களை மாசிடோனியக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.[115]

கி. மு. 333இல் இசுசு யுத்தத்திற்குப் பிறகு, தர்சுசில் சிலிசியாவில் அலெக்சாந்தர் ஒரு புதிய நாணய முறையை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது. இவரது பேரரசின் முக்கியமான நாணய முறையாக இது உருவானது. தங்க இசுதேத்தர் நாணயங்கள், வெள்ளி தெத்ராதிராம் மற்றும் திராம் நாணயங்கள், மற்றும் வெண்கல நாணயங்களை அலெக்சாந்தர் அச்சிட்டார். இவரது பேரரசில் இந்த நாணயங்களின் வகைகள் மாறாமல் தொடர்ந்தது.[116] ஒரு தங்க நாணய வரிசையானது ஏதெனாவின் தலையை ஒரு பக்கமும், பின்புறம் ஒரு சிறகுடைய நைக்கையும் (வெற்றி) கொண்டிருந்தது.[117] வெள்ளி நாணய முறையானது, ஒரு சிங்கத்தோல் தலைப்பாகையை அணிந்திருந்த, தாடியற்ற ஹெராக்கிள்ஸின் தலையையும், பின்புறம் தனது இடது கையில் செங்கோலை வைத்திருந்த, அரியணையில் அமர்ந்திருந்த சியுசு ஏதோபோரோசையும் ('கழுகை எடுத்து வருபவர்') கொண்டிருந்தது.[118] கிரேக்க மற்றும் கிரேக்கமல்லாத அம்சங்களும் இந்த வடிவமைப்பில் இருந்தன. மாசிடோனியர்களுக்கு முக்கியத் தெய்வங்களாக ஹெராக்கிள்ஸும், சியுசும் இருந்தனர். தெமெனிது அரச மரபின் முன்னோராக ஹெராக்கிள்ஸ் கருதப்பட்டார். முதன்மை மாசிடோனியச் சரணாலயமான தியூமின் புரவலராக சியுசு கருதப்பட்டார்.[116] தர்சுசில் வழிபடப்பட்ட அனத்தோலியக் கடவுளான சந்தாசின் அடையாள விலங்காகச் சிங்கம் திகழ்ந்தது.[116] அலெக்சாந்தரின் வெள்ளி தெத்ராதிராம் நாணயங்களின் பின்புறம் இருந்த வடிவமானது, அலெக்சாந்தரின் படையெடுப்புக்கு முன்னர் பாரசீகச் சத்ரப்பான மசேயுசால் தார்சுசில் அச்சிடப்பட்ட வெள்ளி இசுதேத்தர் நாணயங்களில் இருந்த கடவுள் பால்தார்சின் (தார்சுசின் பால்) சித்தரிப்பைப் பெரும்பாலும் ஒத்திருந்தது.[116]

தன்னுடைய புதிய போர்ப் பயணங்களின் போது சீரான ஏகாதிபத்திய நாணய முறையைக் கட்டாயப்படுத்த அலெக்சாந்தர் முயற்சிக்கவில்லை. பேரரசின் அனைத்துச் சத்ரப்புகளிலும் பாரசீக நாணயங்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தன.[119]

இந்தியப் படையெடுப்பு

இந்தியத் துணைக்கண்டத்துக்குள் திடீர்த் தாக்குதல்கள்

செலம் போரில் மையத்தை மாசிடோனியக் காலாட்படையினர் தாக்குதல். ஓவியர் ஆந்த்ரே கசுதைக்னே (1898-1899)
அலெக்சாந்தரின் இந்தியத் துணைக்கண்டப் படையெடுப்பு

இசுபிதமேனசின் இறப்பு மற்றும் தனது புது சத்ரப்புக்களுடனான உறவை உறுதிப்படுத்த ரோக்சானாவுடனான தனது திருமணத்திற்குப் பிறகு அலெக்சாந்தர் இந்தியத் துணைக்கண்டம் பக்கம் திரும்பினார். காந்தார தேசத்தின் (தற்போதைய கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் வடக்கு பாக்கித்தானுக்கு இடையில் இருந்த ஒரு பகுதி) முன்னாள் சத்ரபதின் தலைவர்களைத் தன்னிடம் வந்து தனது அதிகாரத்திற்கு அடிபணியுமாறு கூறினார். தக்சசீலத்தின் ஆட்சியாளரான அம்பியின் இராச்சியமானது சிந்து ஆறு முதல் ஜீலம் ஆறு வரை பரவியிருந்தது. அவர் ஆணைக்குக் கீழ்ப் படிந்தார். கம்போஜர்களின் சில பிரிவினரான அசுபசியோயி மற்றும் அசக்கெனோயி உள்ளிட்ட சில குன்று இனங்களின் தலைவர்கள் அடிபணிய மறுத்தனர்.[120] அலெக்சாந்தர் குறித்த தனது அச்சத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள அம்பி வேக வேகமாக விலைமதிப்பு மிக்க பரிசுப் பொருட்களுடன் அவரைச் சந்தித்தார். தனது படைகள் அனைத்தையும் அலெக்சாந்தரின் பயன்பாட்டிற்குக் கொடுத்தார். அலெக்சாந்தர் அம்பிக்குப் பட்டம் மற்றும் பரிசுப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், "பாரசீக மேலங்கிகள், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 30 குதிரைகள், மற்றும் 1,000 தலேந்துகள் தங்கம்" ஆகியவற்றின் ஓர் அலமாரியைக் கொடுத்தார். அலெக்சாந்தர் தன்னுடைய படைகளைப் பிரிக்கும் ஊக்கம் பெற்றார். எபேசுதியன் மற்றும் பெர்திகசு ஆகியோருக்கு சிந்து ஆறு வளையும் குந்த்[121] என்ற இடத்தில் ஒரு பாலம் கட்டுவதற்கு அம்பி உதவி புரிந்தார். அவர்களது படைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கினார். அலெக்சாந்தரைத் தன் ஒட்டுமொத்த இராணுவத்துடன் தனது தலைநகரான தட்சசீலத்தில் வரவேற்றார். நட்பை வெளிப்படுத்தினார். மிகவும் தாராளமாக உபசரித்தார்.

மாசிடோனிய மன்னனின் இறுதியான முன்னேற்றதின்போது, அம்பி அவருடன் 5,000 வீரர்களைக் கொண்ட படையுடன் உடன் சென்றார். செலம் போரில் பங்கேற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு போரசைத் தொடர்வதற்காக அலெக்சாந்தர் அம்பியை அனுப்பினார். போரசுக்குச் சாதகமான விதிமுறைகளை விதிக்குமாறு அம்பிக்குப் பணி வழங்கப்பட்டது. ஆனால் தனது பழைய எதிரியின் கையில் உயிரிழக்கும் அபாயத்திலிருந்து அம்பி மயிரிழையில் தப்பினார். இறுதியாக இருவருக்கும் அலெக்சாந்தர் சமரசம் செய்து வைத்தார். ஜீலம் ஆற்றில் இருந்த படைகளின் உபகரணங்களுக்கு உற்சாகத்துடன் பங்களித்த அம்பிக்கு, ஜீலம் ஆறு மற்றும் சிந்து ஆற்றுக்கு இடைப்பட்ட ஒட்டு மொத்த நிலப்பரப்புக்குமான அரசாங்கத்தின் மன்னனாகப் பொறுப்பு வழங்கப்பட்டது. மச்சாதசின் மகன் பிலிப்பின் இறப்பிற்குப் பிறகு, குறிப்பிடத்தக்க அளவுப் பொறுப்பானது அம்பிக்கு வழங்கப்பட்டது. அலெக்சாந்தரின் இறப்பின் போது (கி. மு. 323) கூட தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அனுமதி அம்பிக்கு வழங்கப்பட்டது. இறுதியாக, திரிபரதிசுசில் மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் அம்பிக்கு (கி. மு. 321) அதிகாரம் வழங்கப்பட்டது.

கி. மு. 327/326ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், குனார் பள்ளத்தாக்கின் அசுபசியோயி, குரேயுசு பள்ளத்தாக்கின் குரேயர்கள், சுவாத் மற்றும் புனர் பள்ளத்தாக்கின் அசக்கெனோயி ஆகியோருக்கு எதிராக அலெக்சாந்தர் தானே ஒரு போர்ப் பயணத்தை வழி நடத்தினார்.[122] அசுபசியோயிக்கு எதிராக ஓர் ஆக்ரோஷமான சண்டை தொடர்ந்தது. அலெக்சாந்தரின் தோள்பட்டையில் ஓர் அம்பு தாக்கிக் காயம் ஏற்பட்டது. ஆனால், இறுதியாக அசுபசியோயி தோற்றனர். அலெக்சாந்தர் பிறகு அசக்கெனோயியை எதிர்கொண்டார். அவர்கள் தங்களது வலுப் பகுதிகளான மசகா, ஓரா மற்றும் ஓர்னோசில் அலெக்சாந்தருக்கு எதிராகப் போரிட்டனர்.[120]

மசகா கோட்டையானது சில நாட்கள் குருதி தோய்ந்த சண்டைக்குப் பிறகு தரைமட்டமாக்கப்பட்டது. இதில் அலெக்சாந்தருக்குக் கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. குர்தியசின் கூற்றுப் படி, "மசகாவின் ஒட்டுமொத்த மக்களையும் அலெக்சாந்தர் படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த கட்டடங்களையும் இடித்தார்."[123] இதே போன்ற படுகொலையானது ஓராவிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. மசகா மற்றும் ஓராவிற்குப் பிறகு ஏராளமான அசக்கெனோயிகள் ஓர்னோசு கோட்டைக்குத் தப்பியோடினர். அவர்களைப் பின் தொடர்ந்த அலெக்சாந்தர் நான்கு நாட்கள் குருதி தோய்ந்த சண்டைக்குப் பிறகு, அவர்களது முக்கியத்துவம் வாய்ந்த மலைக் கோட்டையைக் கைப்பற்றினார்.[120]

போரஸ் அலெக்சாந்தரிடம் சரணடைதல்

ஓர்னோசுக்குப் பிறகு, அலெக்சாந்தர் சிந்து ஆற்றைக் கடந்தார். போரஸுக்கு எதிராக ஒரு காவிய யுத்தத்தில் சண்டையிட்டு வென்றார். போரஸ் ஜீலம் மற்றும் செனாப் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆண்டு வந்தார். இப்பகுதி தற்போது பஞ்சாபில் உள்ளது. கி. மு. 326இல் நடந்த செலம் போரில் அவர் போரஸைத் தோற்கடித்தார்.[124] போரஸின் வீரத்தைக் கண்டு அலெக்சாந்தர் மதிப்புணர்ச்சி கொண்டார். போரஸைத் தன்னுடைய கூட்டாளிகளில் ஒருவராக்கினார். போரஸை ஒரு சத்ரப்பாக நியமித்தார். போரஸ் அதற்கு முன்னர் சொந்தமாகக் கொண்டிராத நிலப்பரப்புகளை அவரின் நிலப்பகுதியுடன் இணைத்தார். இவ்வாறாக இபாசிசு (பியாஸ் நகரம்) வரையில் இருந்த தென்கிழக்குப் பகுதிகள் இணைக்கப்பட்டன.[125][126] கிரேக்கத்திலிருந்து தொலைதூரத்தில் இருந்த இந்த நிலங்களைக் கட்டுப்படுத்த அலெக்சாந்தருக்கு ஓர் உள்ளூர் நபரைத் தேர்ந்தெடுத்தது உதவியாக இருந்தது.[127] ஜீலம் ஆற்றின் எதிரெதிர்ப் பகுதிகளில் அலெக்சாந்தர் இரண்டு நகரங்களைத் தோற்றுவித்தார். இதே காலகட்டத்தில் இறந்த தன்னுடைய குதிரைக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு நகரத்திற்குப் புசெபலா என்றும்,[128] மற்றொரு நகரத்திற்கு நிக்கே (வெற்றி) என்றும் பெயர் வைத்தார். நிக்கே நகரம் தற்போதைய பஞ்சாப்பில் உள்ள மோங் என்ற இடத்தின் தளத்தில் அமைந்திருந்தது எனக் கருதப்படுகிறது.[129] தயனாவின் அப்போலோனியசின் வாழ்க்கை என்ற நூலில் மூத்த பிலோசுதிரதுசின் கூற்றுப் படி, அலெக்சாந்தரின் இராணுவத்திற்கு எதிராகப் போரஸின் இராணுவத்தில் இருந்த ஒரு யானையானது வீரத்துடன் சண்டையிட்டது. அலெக்சாந்தர் அந்த யானையை கீலியோசுக்கு (சூரியன்) அர்ப்பணித்தார். அந்த யானைக்கு அஜாக்ஸ் என்று பெயரிட்டார். ஒரு மகா விலங்கானது ஒரு மகா பெயருக்கு உரித்தானது என இவர் நினைத்தார். அந்த யானை தன் தந்தத்தைச் சுற்றித் தங்க வளையங்களைக் கொண்டிருந்தது. அதில் கிரேக்கத்தில் பின்வரும் வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது: "சியுசின் மகனான அலெக்சாந்தர் அஜாக்ஸை கீலியோசுக்கு அர்ப்பணிக்கிறார்" (ΑΛΕΞΑΝΔΡΟΣ Ο ΔΙΟΣ ΤΟΝ ΑΙΑΝΤΑ ΤΩΙ ΗΛΙΩΙ).[130]

எலனிய இராணுவத்தில் புரட்சி

கி. மு. 323இல் ஆசியா. அலெக்சாந்தரின் பேரரசு மற்றும் அதன் அண்டை நாடுகளுடன், இந்தியத் துணைக் கண்டத்தின் நந்தப் பேரரசு மற்றும் கங்காரிதாய்

போரஸின் இராச்சியத்திற்குக் கிழக்கே கங்கை ஆற்றுக்கருகில், மகத நாட்டின் நந்தப் பேரரசும், மேலும் கிழக்கே, இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காளப் பகுதியின் கங்காரிதாய் பேரரசும் அமைந்திருந்தன. பிற பெரிய இராணுவங்களை எதிர் கொள்ளும் அச்சம் மற்றும் பல ஆண்டு போர்ப் பயணம் மேற்கொண்டிருந்ததால் அடைந்த களைப்பு ஆகியவற்றால் பியாஸ் ஆற்றுக்கு அருகில் அலெக்சாந்தரின் இராணுவமானது புரட்சியில் ஈடுபட்டது. மேலும் கிழக்கே அணிவகுக்க மறுத்தது.[131] இவ்வாறாக அலெக்சாந்தரின் படையெடுப்புகளின் தொலை தூரக் கிழக்கின் எல்லையாகப் பியாஸ் ஆறு அமைந்தது.[132]

மாசிடோனியர்களைப் பொறுத்தவரையில், போரஸுடனான போராட்டமானது அவர்களது துணிவை மழுங்கச் செய்தது. இந்தியாவுக்குள் மேற்கொண்டு முன்னேறுவதையும் தடுத்தது. வெறும் 20,000 காலாட்படையினரையும், 2,000 குதிரைப் படையினரையும் திரட்டியிருந்த ஒரு எதிரியை அவர்களால் முறியடிக்க மட்டுமே முடிந்தது. கங்கை ஆற்றைக் கடக்குமாறு அவர்களுக்கு அலெக்சாந்தர் அறிவுறுத்தியபோது அவர்கள் வன்முறையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களது கணக்கின்படி, கங்கையின் அகலமானது 32 பர்லாங்குகள் (6.4 கிலோ மீட்டர்), அதன் ஆழமானது 100 பதொம்கள் (180 மீட்டர்). அதே நேரத்தில் கங்கையின் மற்றொரு கரையில் பல்வேறு வகையான ஆயுதம் ஏந்திய வீரர்களும், குதிரைப்படையினரும், யானைப்படையும் நிறைந்திருந்தன. கந்தேரைத்துகள் மற்றும் பிரேசீயின் மன்னர்கள் 80,000 குதிரைப் படை, 2,00,000 காலாட்படை, 8,000 தேர்கள், 6,000 யானைப்படையுடன் அலெக்சாந்தரின் படைக்காகக் காத்திருப்பதாக அலெக்சாந்தரின் படைக்குக் கூறப்பட்டது.[133]

மேலும் அணிவகுக்கத் தனது வீரர்களை இணங்க வைக்க அலெக்சாந்தர் முயற்சித்தார். ஆனால், அவரது எண்ணத்தை மாற்றித் திரும்புமாறு அலெக்சாந்தரின் தளபதியான கோயேனுசு மன்றாடினார். அவர், வீரர்கள் "தங்களது பெற்றோர், மனைவிகள் மற்றும் குழந்தைகள், மற்றும் தாயகத்தைப் பார்ப்பதற்காக ஏங்குகின்றனர்" என்றார். அலெக்சாந்தர் இறுதியாக ஒப்புக் கொண்டார். தெற்கு நோக்கித் திரும்பினார். சிந்து ஆற்றின் பக்கவாட்டில் அணிவகுத்துச் சென்றார். செல்லும் வழியில் இவரது இராணுவமானது மல்கி (தற்போதைய முல்தான்) மற்றும் பிற இந்தியப் பழங்குடியினங்களை வென்றது. இந்த முற்றுகையின் போது அலெக்சாந்தருக்குக் காயம் ஏற்பட்டது.[134]

அலெக்சாந்தர் தனது இராணுவத்தின் பெரும் பகுதியை கர்மானியாவிற்குத் (தற்போதைய தெற்கு ஈரான்) தன் தளபதி கிரதேருசுவுடன் அனுப்பி வைத்தார். தனது கப்பற்படைத் தளபதி நீர்ச்சுசின் தலைமையில் பாரசீக வளைகுடாவின் கடற்கரையைச் சுற்றி அய்வுப் பயணம் மேற்கொள்ள ஒரு கப்பல் குழுவையும் நியமித்தார். எஞ்சிய இராணுவத்தைப் பாரசீகத்திற்கு, மிகுந்த கடினமான தெற்கு வழியாகக் கெத்ரோசியப் பாலைவனம் மற்றும் மக்ரான் வழியாக அழைத்துச்சென்றார்.[135] கி. மு. 324இல், சுசாவை அலெக்சாந்தர் அடைந்தார். ஆனால், சுசாவை அடையும் முன்னரே கடுமையான பாலைவனச் சூழல் காரணமாகத் தனது வீரர்களில் பெரும்பாலானவர்களை இழந்தார்.[136]

பாரசீகத்தில் கடைசி ஆண்டுகள்

தான் இல்லாத நிலையில் தனது பல சத்ரப்புகளும், இராணுவ ஆளுநர்களும் தவறாக நடந்து கொண்டதை அறிந்த அலெக்சாந்தர், சூசாவுக்குத் தான் செல்லும் வழியில் உதாரணத்திற்காக அவர்களில் பலருக்கு மரண தண்டனை கொடுத்தார்.[137][138] தனது வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அவர்களது கடன்களை அடைத்தார். அதிக வயதுடைய மற்றும் உடல் ஊனமுற்ற அனுபவமுடைய வீரர்களை மாசிடோனுக்குக் கிரதேருசின் தலைமையில் தான் திரும்பி அனுப்புவதாக அறிவித்தார். இவரது எண்ணத்தை இவரது துருப்புகள் தவறாகப் புரிந்து கொண்டன. ஓபிசு என்ற பட்டணத்தில் புரட்சியில் ஈடுபட்டனர். தாங்கள் தொலைதூரத்திற்கு அனுப்பப்பட மறுப்புத் தெரிவித்தனர். பாரசீகப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடைகளை அலெக்சாந்தர் பயன்படுத்த ஆரம்பித்தது, மற்றும் மாசிடோனிய இராணுவப் பிரிவுகளில் பாரசீக அதிகாரிகளையும், வீரர்களையும் இணைத்தது ஆகியவற்றை விமர்சித்தனர்.[139]

மூன்று நாட்களுக்குப் பிறகு, தனது வீரர்களை இணங்க வைக்க இயலாமல், இராணுவத்தில் தளபதி பதவிகளைப் பாரசீகர்களுக்கு அலெக்சாந்தர் கொடுத்தார். மாசிடோனிய இராணுவப் பட்டங்களைப் பாரசீகப் பிரிவுகளுக்கு வழங்கினார். மாசிடோனியர்கள் சீக்கிரமே மன்னிப்புக் கேட்டு மன்றாடினர். அலெக்சாந்தர் அதை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய பல ஆயிரக்கணக்கான வீரர்களுக்காக ஒரு பெரிய விருந்தை நடத்தினார்.[140] தனது மாசிடோனிய மற்றும் பாரசீகக் குடிமக்களுக்கு இடையில் ஒரு நீண்டகாலம் நிலைத்திருக்கிற ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகத் தனது மூத்த அதிகாரிகளுக்குப் பாரசீக மற்றும் பிற உயர் குடியினப் பெண்களுடன் ஒரு குழு திருமணத்தைச் சூசாவில் நடத்தினார். ஆனால், இதில் சில திருமணங்கள் மட்டுமே ஓர் ஆண்டுக்கும் மேல் நீடித்ததாகத் தெரிகிறது.[138]

சைரசின் சமாதியில் அலெக்சாந்தர். ஓவியர் பியர்ரி-என்றி டி வாலென்சியென்னசு (1796)

அதே நேரத்தில் பாரசீகத்திற்குத் திரும்பி வந்தபோது, பசர்கதேவிலிருந்த மகா சைரசின் சமாதியில் காவலில் இருந்த காவலர்கள் அதைச் சிதைத்ததை அலெக்சாந்தர் அறிந்தார். அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றினார்.[141] அலெக்சாந்தர் சைரசை மதித்தார். செனோபோனின் சைரோபீடியோவைத் தன் சிறு வயது முதலே படித்திருந்தார். அதில், யுத்தத்தில் சைரசின் வீரம், மற்றும் ஒரு மன்னன் மற்றும் சட்டமியற்றுபவராக சைரசின் நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது.[142] பசர்கதேவுக்குத் தான் சென்றபோது, சைரசின் சமாதியின் உட்புற அறைச் சுவரை அலங்கரிக்குமாறுத் தனது கட்டடவியலாளர் அரிசுதோபுலுசுக்கு ஆணையிட்டார்.[142]

இதற்குப் பிறகு, அலெக்சாந்தர் எகபடனாவிற்குப் பெரும்பாலான பாரசீகப் பொக்கிஷங்களை மீட்கப் பயணித்தார். பாபிலோனுக்குத் திரும்பிய பிறகு, ஒரு தொடர்ச்சியான புதிய போர்ப் பயணங்களை மேற்கொள்ள அலெக்சாந்தர் திட்டமிட்டார். இது அரேபியா மீதான படையெடுப்பில் இருந்து தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு அலெக்சாந்தருக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில், சிறிது காலத்திலேயே அலெக்சாந்தரும் இறந்தார்.[143]

இறப்பும், அடுத்த மன்னனும்

அலெக்சாந்தரின் இறப்பைப் பதிவு செய்துள்ள ஒரு பாபிலோனிய வானியல் குறிப்பு (அண். கி. மு. 323 - கி. மு. 322), (பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்)

10 அல்லது 11 சூன் கி. மு. 323 அன்று, பாபிலோனில் இரண்டாம் நெபுகாத்நேசரின் அரண்மனையில் அலெக்சாந்தர் தன் 32ஆம் வயதில் இறந்தார்.[144] அலெக்சாந்தரின் இறப்பு குறித்து இரு வெவ்வேறு தகவல் குறிப்புகள் உள்ளன. அவை ஒன்றிலிருந்து மற்றொன்று சிறிதளவு வேறுபடுகின்றன. இறப்பதற்குச் சுமார் 14 நாட்களுக்கு முன்பு, கப்பற் படைத் தளபதி நீர்ச்சுசுடன் விருந்தில் ஈடுபட்டார் என்றும், அன்று இரவு மற்றும் அடுத்த நாள் லாரிசாவின் மெதியசுடன் மதுபான விருந்தைக் கழித்தார் என்றும் புளூட்டாக்கின் தகவல் குறிப்பிடுகிறது.[145] அலெக்சாந்தருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, அவர் பேச இயலாத நிலையை அடையும் வரைக்கும் காய்ச்சல் மோசமானது. இவரது உடல் நலத்தை குறித்து சாதாரண வீரர்களுக்குக் கவலையும், அச்ச உணர்வும் ஏற்பட்டது. படுக்கையில் படுத்திருந்த அலெக்சாந்தரை ஒருவர் ஒருவராகக் கண்டு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களை நோக்கி அமைதியாக அலெக்சாந்தர் தனது கையை அசைத்தார்.[146] தியோதோருசின் இரண்டாம் குறிப்பின் படி, ஹெராக்கிள்ஸுக்கு மரியாதை செலுத்த ஒரு பெரிய கிண்ணத்தில் கலக்கப்படாத திராட்சை மதுவைக் குடித்த பிறகு, அலெக்சாந்தருக்கு வலி ஏற்பட்டது. இதற்குப் பிறகு, 11 நாட்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்குக் காய்ச்சல் ஏற்படவில்லை. ஆனால், சில நாட்கள் வேதனைக்குப் பிறகு இறந்தார் என தியோதோருசின் இரண்டாவது குறிப்பு குறிப்பிடுகிறது.[147] இந்த இரண்டாவது தகவலை மாற்றுத் தகவலாக அர்ரியன் குறிப்பிடுகிறார். ஆனால், இத்தகவலை புளூட்டாக் குறிப்பாக மறுக்கிறார்.[145]

மாசிடோனிய உயர் குடியினர் அரசியல் படுகொலை செய்யப்படுவது என்பது வாடிக்கையான நிகழ்வு என்பதைக் கருத்தில் கொள்ளும் போது,[148] இவரது இறப்பைப் பற்றி உள்ள பல தகவல்களில், இவரது இறப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. தியோதோருசு, புளூட்டாக், அர்ரியன் மற்றும் ஜஸ்டின் ஆகிய அனைவரும் அலெக்சாந்தருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற கருத்தியலை முன் வைக்கின்றனர். விஷம் கொடுக்கப்பட்ட ஒரு கூட்டுச் சதியின் பலியாள் அலெக்சாந்தர் என்று ஜஸ்டின் குறிப்பிடுகிறார். புளூட்டாக் இதை ஒரு புனைவு என்று நிராகரிக்கிறார்.[149] தகவல்கள் முழுமையடைய வேண்டும் என்பதற்காகவே, இதைக் குறிப்பிட்டதாக தியோதோருசு மற்றும் அர்ரியன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.[147][150] அப்போது மாசிடோனிய அரசு அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தவரும், ஒலிம்பியாசுடன் பிணக்கு கொண்டிருந்தவருமான அந்திபேதரை, இந்த சதி எனக் கூறப்படும் திட்டத்தின் தலைவராக, அனைத்து குறிப்புகளும் ஒரே பார்வையில் குறிப்பிடுகின்றன. பாபிலோனுக்குத் தான் அழைக்கப்பட்டது மரண தண்டனைக்காகத்தான் என அந்திபேதர் கருதி இருக்கலாம்.[151] பர்மேனியோன் மற்றும் பிளோதசு ஆகியோரின் விதியையும் கண்ட அந்திபேதர்,[152] அலெக்சாந்தருக்கு திரட்சை மது ஊற்றிக் குடுப்பவரான தன் மகன் லோல்லாசு மூலமாக அலெக்சாந்தருக்கு அந்திபேதர் விஷம் கலக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.[150][152] அரிசுட்டாட்டில் கூட இதில் பங்கெடுத்திருக்கலாம் என்று கூட ஒரு பரிந்துரை குறிப்பிடப்படுகிறது.[150]

அலெக்சாந்தருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறக்கும் வரையில், இடைப்பட்ட காலமாக 12 நாட்கள் இருந்த உண்மையின் அடிப்படையில், இந்த விஷம் வைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிரான வலிமையான வாதம் வைக்கப்படுகிறது. செயலாற்ற இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் விஷங்கள் பொதுவாக இல்லை என்று குறிப்பிடப்படுகிறது.[153] இருப்பினும், அலெக்சாந்தரின் இறப்பைப் பற்றி புலனாய்வு செய்த 2003ஆம் ஆண்டு பிபிசி ஆவணப் படத்தில், நியுசிலாந்தின் தேசிய விஷ மையத்தின் லியோ செப் என்பவர் வெள்ளை எல்லேபோரே (அறிவியல் பெயர்: வெராத்ரம் ஆல்பம்) என்னும் தாவரமானது பண்டைய காலத்தில் அறியப்பட்ட ஒன்று. அது அலெக்சாந்தருக்கு விஷம் வைக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று அவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.[154][155][156] 2014ஆம் ஆண்டு கிளினிக்கல் டாக்ஸிகாலஜி பத்திரிக்கையின் பிரதியில் அலெக்சாந்தரின் திராட்சை மதுவில் இந்த தாவரத்தின் சிறு துண்டு கலக்கப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. அலெக்சாந்தர் ரொமான்ஸ் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் வழிமுறைக்கு இந்த விஷம் வைக்கப்பட்ட அறிகுறிகள் சரியாகப் பொருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.[157] வெராத்ரம் ஆல்பம் விஷமானது செயலாற்ற நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும். அலெக்சாந்தருக்கு விஷம் வைக்கப்பட்டிருந்தால், அது இந்தத் தாவரத்தின் மூலமாகத்தான் இருந்திருக்க பெரும்பாலான வாய்ப்பிருந்துள்ளது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.[157][158] 2010ஆம் ஆண்டு, மற்றொரு விஷம் குறித்த கருத்தியலானது வைக்கப்பட்டது. அதில் பாக்டீரியாவால் உருவாக்கப்படும் ஓர் ஆபத்தான கலிச்சிமைசீன் என்ற சேர்மமானது, ஸ்டைக்ஸ் ஆற்றின் (தற்போது மவ்ரோனெரி, ஆர்காடியா, கிரேக்கம்) நீரில் இருந்தது. அந்த ஆற்று நீரில் விஷம் கலந்த நிகழ்வுடன் அலெக்சாந்தரின் இறப்பும் ஒத்துப்போகிறது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[159]

மலேரியா, குடற்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்களும் (நோய்கள்) மரணத்திற்குக் காரணமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 1998ஆம் ஆண்டின் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையில் இவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டதால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது. மேலும் இக்காய்ச்சலை, உணவுக் கழிவுக் குழாயில் இடப்பட்ட துளைகள் மற்றும் இவரது உடலின் நிலையானது சிறிதாக சிறிதாக இயக்கமற்றுப் போனது ஆகியவையும் மேலும் அதிகமாக்கி இவரது இறப்புக்கான காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.[160] மற்றுமொரு சமீபத்திய ஆய்வானது, முதுகெலும்பு இணைப்பு (தொற்று) அழற்சி அல்லது மூளையுறை அழற்சி ஆகியவை இவரது இறப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிடுகிறது.[161] இவரின் உடல் நலக்குறைவு அறிகுறிகளுடன் ஒத்துப்போகும் மற்ற அறிகுறிகளானவை, கடுமையான கணைய அழற்சி, மேற்கு நைல் வைரஸ்[162][163] மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நரம்பு அமைப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீரென ஏற்படும் தசை பலமிழப்பான கில்லைன்- பர்ரே அறிகுறி[164] ஆகியவற்றால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. பல ஆண்டு கடுமையான மதுப்பழக்கம் மற்றும் கடும் காயங்கள் ஏற்பட்டதால் பொதுவாகவே அலெக்சாந்தரின் உடல் நலமானது குன்றி வந்திருக்கலாம் என்று இயற்கை மரணக் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.[160]

இறப்புக்குப் பிந்தைய நிகழ்வுகள்

அலெக்சாந்தரின் உடலானது ஒரு மனித உடலை ஒத்த தங்க அமைப்புடைய கல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. தேனால் நிரப்பப்பட்டது. பின்னர் அது ஒரு தங்கப் பெட்டகத்தில் வைக்கப்பட்டது.[165][166] அயேலியன் என்பவரின் கூற்றுப் படி, அரிசுதாந்தர் என்ற ஒரு தீர்க்கதரிசி அலெக்சாந்தர் எங்கு புதைக்கப்படுகிறாரோ அந்த நிலமானது "எக்காலத்திற்கும் மகிழ்ச்சியுடனும், தோற்கடிக்க இயலாததாகவும் இருக்கும்" என்று கூறினார்.[167] இவருக்குப் பின் வந்த மன்னர்கள் இவரது உடலை வைத்திருக்கும் பட்சத்தில் அது அவர்களின் ஆட்சியின் நியாயத்தின் அறிகுறியாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஏனெனில், முந்தைய மன்னனைப் புதைப்பது என்பது ஓர் அரச தனி உரிமை என்று கருதப்பட்டது.[168]

தியோதுருசு சிக்குலுசுவின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, அலெக்சாந்தரின் இறுதி ஊர்வலம் குறித்த 19ஆம் நூற்றாண்டுச் சித்தரிப்பு

அலெக்சாந்தரின் இறுதி ஊர்வலமானது மாசிடோனுக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில், தாலமி அவரது உடலைக் கைப்பற்றித் தற்காலிகமாக மெம்பிசில் வைத்திருந்தார்.[165][167] அவருக்குப் பின் வந்த இரண்டாம் தாலமி அலெக்சாந்தரின் கல்சவப்பெட்டியை அலெக்சாந்திரியாவுக்கு மாற்றினர். அங்கு சவப்பெட்டியானது குறைந்தது பிந்தைய பண்டைக் காலம் வரை இருந்தது. இந்நிலையில் தாலமிக்குப் பின் வந்த ஆட்சியாளர்களில் கடைசி ஆட்சியாளர்களில் ஒருவரான ஒன்பதாம் தாலமி சோத்தர் அலெக்சாந்தரின் சவப்பெட்டியை எடுத்துவிட்டு ஒரு கண்ணாடி சவப்பெட்டியை வைத்தார். இதன் மூலம், அலெக்சாந்தர் சவப்பெட்டியில் இருந்து நாணயங்களை உருவாக்கலாம் என்று அவர் கருதினார்.[169] வடக்கு கிரேக்கத்தில் ஆம்ப்பிபோலிஸில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய சமாதியானது அலெக்சாந்தரின் காலத்தைச் சேர்ந்ததாகும்.[170] இது இந்த இடம் தான் உண்மையில் அலெக்சாந்தர் புதைக்கப்பட வேண்டிய இடமாக இருந்திருக்க வேண்டும் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. அலெக்சாந்தரின் இறுதி ஊர்வலம் சென்றடைய வேண்டிய இடத்துடன் இது ஒத்துப்போகிறது. எனினும், இந்த நினைவுச்சின்னமானது அலெக்சாந்தரின் அன்பிற்குரிய நண்பனான எசுபேதியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.[171][172]

"அலெக்சாந்தரின் கல் சவப்பெட்டியில்"உள்ள அலெக்சாந்தரின் சிற்பங்கள்

பாம்பே, யூலியசு சீசர் மற்றும் அகஸ்ட்டஸ் ஆகிய அனைவரும் அலெக்சாந்திரியாவில் இருந்த அலெக்சாந்தரின் சமாதிக்கு வருகை புரிந்துள்ளனர். அங்கு அகஸ்ட்டஸ் விபத்தாக அலெக்சாந்தரின் மூக்கைத் தட்டி விட்டார் என்று கூறப்படுகிறது. அலெக்சாந்தரின் இந்தச் சமாதியிலிருந்து அவரது மார்புத் தகட்டைத் தனது சொந்த உபயோகத்திற்காகக் காலிகுலா எடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கி. பி. 200 ஆண்டு வாக்கில், பேரரசர் செப்திமியூசு செவெருசு பொது மக்களின் பார்வையில் இருந்து அலெக்சாந்தரின் சமாதியை மூடினார். அவரது மகனும், அவருக்குப் பின் வந்தவருமான கரகல்லா அலெக்சாந்தரை மிகவும் மதித்தவர்களில் ஒருவர் ஆவார். அவர் தனது ஆட்சியின்போது அலெக்சாந்தரின் சமாதிக்கு வருகை புரிந்துள்ளார். இதற்குப் பிறகு, அலெக்சாந்தரின் சமாதி என்ன ஆனது என்பது பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை.[169]

"அலெக்சாந்தரின் கல் சவப்பெட்டி" என்று அழைக்கப்படும் சவப் பெட்டியானது சிதோனுக்கு அருகில் கண்டறியப்பட்டது. அது தற்போது இசுதான்புல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது. அது இவ்வாறு பெயரிடப்பட்டதற்கான காரணமானது, அலெக்சாந்தரின் உடலை கொண்டிருந்ததற்காக அல்ல. மாறாக, அதில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் அலெக்சாந்தரும், அவரது தோழர்களும் பாரசீகர்களுடன் சண்டையிடுவது மற்றும் வேட்டையாடுவது ஆகியவற்றைச் சித்தரித்ததேயாகும். இது உண்மையில், கி. மு. 331ஆம் ஆண்டின் இசுசு யுத்தத்திற்குப் பிறகு உடனேயே சிதோனின் மன்னனாக அலெக்சாந்தரால் நியமிக்கப்பட்ட அப்தலோனிமசுவின் (இறப்பு கி. மு. 311) கல் சவப்பெட்டி என்று கருதப்பட்டது.[173][174] எனினும், தற்போது இந்தச் சவப்பெட்டியானது அப்தலோனிமசுவின் இறப்பிற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

தேமாதேசு என்ற ஏதெனியச் சொற்பொழிவாளர், அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிந்தைய மாசிடோனிய இராணுவத்தைக் கண்பார்வையற்றுப் போன சைக்ளோப்சுடன் ஒப்பிடுகிறார். ஏனெனில், மாசிடோனிய இராணுவமானது பல சிந்தனையற்ற மற்றும் ஒழுங்கற்ற செயல்களை மேற்கொண்டது.[175][176][177] இதனுடன், லியோசுதெனிசு, அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு அவரது தளபதிகளுக்கு இடையே நடந்த அரசற்ற நிலையாலும் அவர்களைக் கண்பார்வையற்ற சைக்ளோப்சு "தன்னுடைய கண்ணை இழந்த பின் தன் கைக்கு முன் உள்ளவற்றை உணரவும் பிடிக்கவும் முயற்சித்தார், அவருக்கு எங்கு தன் கைகளை வைப்பது என்று தெரியவில்லை", என்பதன் மூலம் ஒப்பிடுகிறார்.[178]

மாசிடோனியப் பேரரசு பிரிக்கப்படுதல்

கி. மு. 301இல் தியாடோச்சிகளின் இராச்சியங்கள்:
      தாலமி பேரரசு,
       செலூக்கியப் பேரரசு,
       பெர்காமோன் இராச்சியம்,
       மாசிடோன் இராச்சியம்,
மேலும்,
       உரோமைக் குடியரசு,
      கார்த்தேஜியக் குடியரசு,
       எபிரசு இராச்சியம்.

அலெக்சாந்தரின் இறப்பானது திடீரென நடந்து விட்டது. அவரது இறப்பைப் பற்றிய தகவல்கள் கிரேக்கத்தை அடைந்தபோது அத்தகவல்களை உடனடியாக யாரும் நம்பவில்லை.[62] அலெக்சாந்தருக்குப் பிறகு என முடிவு செய்யப்பட்ட அல்லது வாரிசு என்று யாரும் கிடையாது. இவருக்கும், இவரது மனைவி ரோக்சானாவுக்கும் பிறந்த மகனான நான்காம் அலெக்சாந்தர், அலெக்சாந்தரின் இறப்புக்குப் பின்னரே பிறந்தார்.[179] தியோதோருசின் கூற்றுப் படி, அலெக்சாந்தர் மரணப்படுக்கையில் இருந்தபோது அவரது தோழர்கள் யாரிடம் அலெக்சாந்தர் தன் இராச்சியத்தை கொடுக்கப்போகிறார் என்று அவரிடம் கேட்டனர். அவர் மணிச் சுருக்கமாக "டோயி கிராதிசுதோயி" - "வலிமையானவனுக்கு" என்று பதிலளித்தார்.[147] மற்றொரு கருத்துப் படி, இவருக்குப் பின் வந்தவர்கள் வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ "டோயி கிரதேரோயி" - "கிரதேருசுவுக்கு" என்று கேட்டதாகக் கூறினர். கிரதேருசு அலெக்சாந்தரின் மாசிடோனியத் துருப்புக்களைத் தாயகத்தில் தலைமை தாங்கியவரும், மாசிடோனியாவின் தற்காலிக மன்னனாகப் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியும் ஆவார்.[180]

அலெக்சாந்தர் இந்தக் கட்டத்தில் பேச முடியாத நிலையில் இருந்தார் என அர்ரியன் மற்றும் புளூட்டாக் குறிப்பிடுகின்றனர். இந்தத் தகவலானது ஒரு கதையாக இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.[181] தியோதோருசு, கர்தியசு மற்றும் ஜஸ்டின் ஆகியோர் சற்றே நம்பத்தகுந்த கதையைக் கூறுகின்றனர். அதில், சாட்சிகளின் முன்னிலையில், ஒரு பாதுகாவலரும், தோழர்களின் குதிரைப்படையின் தலைவருமான பெர்திகசுவிடம் அலெக்சாந்தர் தனது முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அவரைத் தேர்ந்தெடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது.[147][179]

பெர்திகசு ஆரம்பத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. மாறாக, ரோக்சானாவின் குழந்தையானது ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அது மன்னனாகும் என்றும், தான், கிரதேருசு, லியோன்னதுசு மற்றும் அந்திபேதர் ஆகியோர் பாதுகாவலர்களாக இருப்போம் என்று பரிந்துரைத்தார். எனினும், மெலேகர் தலைமையிலான காலாட்படையினர் விவாதத்திலிருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால், இந்த முன்னேற்பாட்டை ஏற்கமாட்டோம் என்று நிராகரித்தனர். மாறாக, அவர்கள் அலெக்சாந்தரின் ஒன்று விட்ட சகோதரரான பிலிப் அரிதேயுசுக்கு ஆதரவளித்தனர். இறுதியாக, இரு பிரிவினரும் சமரசம் செய்துகொண்டனர். நான்காம் அலெக்சாந்தரின் பிறப்பிற்குப் பிறகு, அவரும், மூன்றாம் பிலிப்பும் இணைந்த மன்னர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இது பெயரளவில் மட்டுமே இருந்தது.[182]

எனினும், சீக்கிரமே மாசிடோனியர்களை ஒற்றுமையின்மையும், போட்டி மனப்பான்மையும் பாதித்தது. பாபிலோனின் பிரித்தல் சந்திப்பின் போது, பெர்திகசால் ஒவ்வொரு தளபதிக்கும் பிரித்தளிக்கப்பட்ட சத்ரப்புகள் அவர்கள் தங்கள் சக்திக்கு உரிமை கோரிய சக்தி மையங்களாக உருவாயின. கி. மு. 321இல் பெர்திகசின் அரசியல் படுகொலைக்குப் பிறகு, மாசிடோனிய ஒற்றுமையானது வீழ்ச்சியுற்றது. "வழி வந்தவர்கள்" (தியாடோச்சி) என்பவர்களுக்கு இடையில் 40 ஆண்டுகளுக்கு நீடித்த போர் நடைபெற்றது. இறுதியாக, எலனிய உலகமானது நான்கு நிலையான அதிகாரப் பிரிவுகளாகப் பிரிந்தது: தாலமி எகிப்து, செலூக்கிய மெசொப்பொத்தேமியா மற்றும் நடு ஆசியா, அத்தலிது அனத்தோலியா, மற்றும் அந்திகோனிது மாசிடோன். இந்தச் செயல் முறையில், நான்காம் அலெக்சாந்தர் மற்றும் மூன்றாம் பிலிப் ஆகிய இருவருமே கொல்லப்பட்டனர்.[183]

கடைசித் திட்டங்கள்

பலகுரோசு மற்றும் அவருக்குப் பின் வந்த மெனேசு ஆகியோர்களால் அச்சடிக்கப்பட்ட மகா அலெக்சாந்தரின் ஒரு நாணயம். இவர்கள் இருவருமே அலெக்சாந்தரின் முந்தைய சமதோபைலேக்குகள் (பாதுகாவலர்கள்) ஆவர். அலெக்சாந்தரின் காலத்தில் (அண். கி. மு. 333-327) சிலிசியாவில் சத்ரப் பதவியை அவர்கள் வகித்தபோது இவை அச்சிடப்பட்டன. நாணயத்தின் முன்பகுதியில் மாசிடோனிய அரச குடும்பத்தின் மூதாதையரான ஹெராக்கிள்ஸும், பின்புறத்தில் உட்கார்ந்திருக்கும் சியுசு அயேதோபோரோசும் உள்ளனர்.[184]

தன் இறப்பிற்கு முன்னர், கிரதேருசுக்கு விவரித்து எழுதப்பட்ட குறிப்புகளை அலெக்சாந்தர் கொடுத்ததாக தியோதோருசு குறிப்பிடுகிறார். இவை அலெக்சாந்தரின் "கடைசித் திட்டங்கள்" என்று அறியப்படுகின்றன.[185] கிரதேருசு அலெக்சாந்தரின் கட்டளைகளைச் செயல்படுத்தத் தொடங்கினார். ஆனால், அலெக்சாந்தருக்குப் பின்னர் வந்த மன்னர்கள் இந்தத் திட்டங்களை நடைமுறைக்கு ஒவ்வாததாகவும், மட்டுமீறியவையாகவும் கருதியதால் மேலும் செயல்படுத்த வேண்டாம் என முடிவு செய்தனர்.[185] மேலும், பெர்திகசு பாபிலோனில் இருந்த மாசிடோனியத் துருப்புகளிடம் அலெக்சாந்தரின் கடைசித் திட்டங்கள் அடங்கிய குறிப்புகளை வாசித்தார். அவர்கள் இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டாம் என வாக்களித்தனர்.[62]

தியோதோருசின் கூற்றுப் படி, அலெக்சாந்தரின் கடைசித் திட்டங்கள், தெற்கு மற்றும் மேற்கு நடுநிலக் கடல் பகுதியில் இராணுவ விரிவாக்கம், நினைவுச் சின்னங்கள் கட்டுதல், மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு மக்கள் தொகைகளை ஒன்றாகக் கலக்க வைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. மேலும்,

  • திரியேம் வகைக் கப்பல்களை விடப் பெரிய 1,000 கப்பல்களைக் கட்டுதல், கார்த்தேஜ் மற்றும் மேற்கு நடுநிலக் கடல் பகுதிகளின் மீது படையெடுக்கப் பயன்படுத்துவதற்காக ஆப்பிரிக்க கடற்கரையில் ஹெராக்கிள்ஸின் தூண்கள் வரை துறைமுகங்கள் மற்றும் ஒரு சாலையை அமைத்தல்.[186]
  • டெலோஸ், தெல்பி, தோதோனா, தியும், ஆம்ப்பிபோலிஸ் ஆகிய இடங்களில் பெரிய கோயில்களைக் கட்டுதல், இவை ஒவ்வொன்றும் 1,500 தலேந்துகள் தங்கம் செலவை ஏற்படுத்த கூடியவை, திராயில் ஏதெனாவிற்கு ஒரு நினைவுச்சின்னக் கோயில் கட்டுதல்[62][186]
  • சிறிய குடியிருப்புகளை ஒன்றிணைத்து பெரிய நகரங்களாக்குதல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மக்களைக் கொண்டு வருதல், மாற்று திசையில் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு மக்களைக் கொண்டு சொல்லுதல், பெரிய கண்டத்திற்கு ஒரு பொதுவான ஒற்றுமை மற்றும் நட்பை உருவாக்க, கலப்புத் திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் ஏற்படுத்தல்[186][187]
  • தன் தந்தை பிலிப்புக்கு ஒரு நினைவுச்சின்ன சமாதியை, "எகிப்தின் பெரிய பிரமிடுகளுக்கு ஈடாகக் கட்டுதல்"[62][186]
  • அரேபியாவை வெல்லுதல்[62]
  • ஆப்பிரிக்காவைக் கடல் வழியாகச் சுற்றிவருதல்[62]

இந்தத் திட்டங்களின் பெரிய அளவு என்பது இவற்றின் வரலாற்று உண்மைத் தன்மையைப் பல அறிஞர்கள் கேள்விக்குள்ளாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது. மாசிடோனியத் துருப்புகள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வாக்களிக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பெர்திகசால் இந்தத் திட்டங்கள் மிகைப்படுத்தப்பட்டன என எர்னஸ்டு பதியன் என்கிற ஆத்திரிய அறிஞர் வாதிடுகிறார்.[186] அலெக்சாந்தர் ரொமான்ஸ் என்ற பாரம்பரியத்துக்குள் பிந்தைய எழுத்தாளர்களால் இவை உருவாக்கப்பட்டன எனப் பிற அறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.[188]

பண்பு நலன்

தளபதித்துவம்

கிரானிகசு யுத்தம், கி. மு. 334
இசுசு யுத்தம், கி. மு. 333

ஓர் இராணுவத் தளபதியாக, அதற்கு முன் யாரும் செய்திராத இவரது சாதனைகள் காரணமாகவே அலெக்சாந்தர் "மகா" என்ற அடைமொழியைப் பெற்றார் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் எதிரிகளை விடத் தன் படையில் குறைவான எண்ணிக்கையில் வீரர்களைக் கொண்டிருந்த போதும், இவர் என்றுமே ஒரு யுத்தத்தில் தோற்றது கிடையாது.[189] நிலப்பகுதி, காலாட்படை மற்றும் குதிரைப்படை வியூகங்கள், துணிச்சலான உத்திகள் மற்றும் தன் துருப்புக்களின் ஆக்ரோஷமான விசுவாசம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதன் காரணமாக இவர் வெற்றியாளராகத் திகழ்ந்தார்.[190] மாசிடோனியக் காலாட்படையினர் சரிசா என்ற 6 மீட்டர் நீளமுடைய ஓர் ஈட்டியைப் பயன்படுத்தினர். கடுமையான பயிற்சி மூலம் இரண்டாம் பிலிப்பால் இந்த ஈட்டியானது உருவாக்கப்பட்டு, நேர்த்தியாக்கப்பட்டிருந்தது ஆகும். தன் படையை விடப் பெரிய, ஆனால் சிதறுண்டு இருந்த பாரசீகப் படைகளுக்கு எதிராக சரிசாவை இவர் பயன்படுத்தினார்.[191] மாசிடோனியக் காலாட்படையின் வேகம் மற்றும் நகரும் திறனை அலெக்சாந்தர் பயன்படுத்தினார். இவரது படையானது பல்வேறு மொழிகளைப் பேசிய மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியவர்களைக் கொண்டிருந்தது. தன் வேற்றுமை நிறைந்த இராணுவத்தில் ஒற்றுமையின்மை வரக்கூடும் என்பதை அலெக்சாந்தர் அறிந்திருந்தார். இதிலிருந்து மீள்வதற்காக யுத்தத்தில் அலெக்சாந்தர் தானே கலந்து கொள்வார்.[89] இது எல்லாம் மாசிடோனிய மன்னர்களுக்குமான ஒரு பொதுவான நடத்தையாகும்.[190]

ஆசியாவில் இவரது முதல் யுத்தத்தின் போது, கிரானிகசில், அலெக்சாந்தர் தன்னுடைய படைகளில் ஒரு சிறிய பிரிவை மட்டுமே பயன்படுத்தினர். பொதுவாக, இவர்கள் 13,000 காலாட்படை, 5,000 குதிரைப்படையைக் கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் இவர்கள் ஒரு பெரிய பாரசீகப் படையான 40,000 வீரர்களைக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராகப் போர்புரிந்தனர்.[192] அலெக்சாந்தர் தனது காலாட்படையை மையப்பகுதியில் பயன்படுத்துவார். குதிரைப்படை வீரர்கள் மற்றும் வில்லாளர்களை இரு பக்க வாட்டிலும் வலது மற்றும் இடது புறத்தில் பயன்படுத்துவார். இவ்வாறாக, பாரசீகக் குதிரைப்படை வரிசையின் சுமார் 3 கி. மீ. நீளத்திற்கு, தனது இராணுவத்தின் வரிசை சரியாகப் பொருந்துமாறு செய்வார். மாறாக, பாரசீகக் காலாட்படையானது அவர்களின் குதிரைப் படைக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கும். இது அலெக்சாந்தர் எப்பொழுதுமே சுற்றி வளைக்கப்பட மாட்டார் என்பதை உறுதிசெய்தது. நீண்ட ஈட்டி ஆயுதங்களை ஏந்திய மாசிடோனியப் பாலன்க்சு காலாட்படையினர், பாரசீகர்களின் இசிமிதர்கள் மற்றும் ஜாவெலின் ஈட்டிகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அனுகூலம் பெற்றிருந்தனர். பாரசீகர்களுடன் ஒப்பிடுகையில் மாசிடோனிய வீரர்களின் உயிரிழப்பானது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை.[193]

கி. மு. 333இல் இசுசுவில், தாராவுக்கு எதிரான தனது முதல் சண்டையில், இவர் இதேபோன்ற படைத்துறைப் பயன்பாட்டைப் பின்பற்றினார். மீண்டும் மையத்தில் இருந்த பாலன்க்சு காலாட்படையானது உந்தி முன்னேறிச் சென்றது.[193] மையத்தில் இருந்த வீரர்களுக்கு அலெக்சாந்தரே தலைமை தாங்கினார். எதிரி இராணுவத்தைத் தோற்றோடச் செய்தார்.[194] தாராவுடன் நடந்த தீர்க்கமான சண்டையில், தாரா தனது தேர்களின் சக்கரங்களில் புல் அரிவாள்களைப் பயன்படுத்தினார். இதன் மூலம் மாசிடோனியக் காலாட்படையினரின் வரிசையை உடைக்க முயற்சித்தார். தாரா தன்னுடைய குதிரைப் படையினர் ஈட்டியைப் பயன்படுத்தச் செய்தார். அலெக்சாந்தர் தனது காலாட்படையினரை நெருக்கமாக இருந்து போர்புரியும் பாலன்க்சு முறையை இரட்டையாகப் பயன்படுத்தி நிறுத்தி வைத்தார். அந்த பாலன்க்சின் நடுப்பகுதியினர், தாராவின் தேர்கள் முன்னேறும் போது பிரிந்து கொள்வர். பிறகு மீண்டும் இணைந்து கொள்வர். பாலன்க்சின் இந்த முன்னேற்றமானது வெற்றிகரமாக நடந்தது. தாராவின் மையப்பகுதி உடைக்கப்பட்டது. இதன் காரணமாகத் தாரா மீண்டும் தப்பித்து ஓடினார்.[193]

அதற்கு முன் அறிந்திராத போர் உத்திகளைப் பயன்படுத்தும் எதிரிகளை எதிர்கொள்ளும்போது, அலெக்சாந்தர் தனது படைகளை எதிரிகளின் பாணியிலேயே பயன்படுத்தினர். நடு ஆசியா மற்றும் இந்தியாவில் இவர் இதைச் செய்தார். பாக்திரியா மற்றும் சோக்தியானாவில் தன்னுடைய ஈட்டி எறிபவர்கள் மற்றும் வில்லாளர்களை, எதிரிகள் தன் படையைச் சுற்றி வளைக்காதவாறு பார்த்துக் கொள்வதற்காக அலெக்சாந்தர் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். அதே நேரத்தில், தனது குதிரைப்படையை மையத்தில் குவித்து வைத்திருந்தார்.[194] இந்தியாவில் போரஸின் யானைப்படையால் எதிர்கொள்ளப்பட்ட போது, மாசிடோனியர்கள் தங்களது வரிசையைத் திறந்து யானைகளைச் சுற்றி வளைத்தனர். தங்களது சரிசா ஈட்டிகளைக் கொண்டு மேல் நோக்கிக் குத்தி, யானைப் பாகன்களை அவர்களது அமர்ந்த நிலையில் இருந்து தள்ளி விட்டனர்.[140]

உடல் தோற்றம்

பைர்கோதெலெசால் செதுக்கப்பட்ட அலெக்சாந்தர் குறித்த ஒரு மணி

அலெக்சாந்தரின் உடல் தோற்றம் குறித்து வரலாற்று ஆதாரங்கள் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. ஆரம்ப கால நூல்கள் மிகக் குறைவான தகவல்களையே கொண்டுள்ளன.[195] இவரது வாழ்நாளின் போது, அலெக்சாந்தர் அக்காலத்தில் புகழ்பெற்ற மற்றும் சிறந்த கலைஞர்களை பணிக்கு அமர்த்தி, கலை வேலைப்பாடுகளை உருவாக்கியதன் மூலம் தன்னைக் குறித்த மக்களின் பார்வையைக் கவனமாக மெருகேற்றினார். இவற்றில் லைசிபோசுவின் சிற்பங்கள், அப்பெல்லெசின் ஓவியங்கள் மற்றும் பைர்கோதெலெசின் இரத்தினச் செதுக்குருவங்கள் ஆகியவையும் அடங்கும்.[196] லைசிபோசுவால் உருவாக்கப்பட்ட தனது ஓவியங்களால் அலெக்சாந்தர் மிகவும் மன நிறைவு அடைந்தார் என்றும், அதனால் மற்ற சிற்பிகள் தனது உருவத்தைச் செதுக்குவதைத் தடை செய்தார் என்றும் பண்டைக்கால வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்கால அறிஞர்கள் இத்தகவல் குறித்து ஐயப்பாடு தெரிவிக்கின்றனர்.[196][197] எது எவ்வாறாயினும், ஆந்த்ரூ இசுதீவர்டின் கூற்றுப் படி, யார் உருவாக்குகிறார்களோ அவர்களைப் பொருத்து இல்லாமல், கலை ஓவியங்கள் ஒரு சார்புடையவையாகவே எப்போதும் இருந்துள்ளன. அலெக்சாந்தரின் கலைச் சித்தரிப்புகள் "இவரது ஆட்சியை (அல்லது கூடுதலாக இவரது வழித்தோன்றல்கள் ஆட்சியை) நியாயப்படுத்தவும், அவர்களது பார்வையாளர்களுக்குப் புரிந்துகொள்ளும் விதமாகவும், விமர்சகர்களுக்குப் பதில் அளிக்கும் விதத்திலும், அவர்கள் அனைவரையும் அலெக்சாந்தரின் பெருமைக்கு இணங்க வைக்கும் வகையிலும் இருந்தன", எனவே இவை "புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சி" என்ற வரையறைக்குள் தான் கருதப்பட வேண்டும் என்கிறார். இதே வகையில்தான் சில நூல்களைப் புகழ்ச்சிக் கவிதைகள் என்கிறோம்.[198] இத்தகைய கவனத் தேவைகள் குறிப்பிடப்படுகின்ற போதிலும், லைசிபோசுவின் சிற்பமானது அதன் யதார்த்தத் தன்மைக்காகப் புகழ்பெற்றதாக உள்ளது. மற்ற மிகுந்த கட்டிருக்கமான, தோற்ற நிலைச் சிற்பங்களிலிருந்து இது மிகவும் நம்பத்தகுந்த சித்தரிப்பாகக் கருதப்படுகிறது.[199]

கர்தியசு உருபுசு என்ற கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் உரோமானிய வரலாற்றாளர், தனது மகா அலெக்சாந்தரின் வரலாறுகள் நூலில் மூன்றாம் தாராவின் அரியணையில் அலெக்சாந்தர் அமரும் நிகழ்வைப்பற்றிப் பின்வரும் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்:

மன்னனின் அரியணையில் அலெக்சாந்தர் பிறகு உட்கார்ந்தார். அவரது உடல் உயரத்திற்கு அது மிகவும் உயரமானதாக இருந்தது. கடைசிப் படிக்கட்டில் அவரது கால் எட்டாததன் காரணமாக, மன்னனின் பணியாள் சிறுவர்களில் ஒருவன் அவரது பாதத்திற்கு அடியில் ஒரு மேசையை வைத்தான்.[200]

கர்தியசு மற்றும் தியோதோருசு ஆகிய இருவருமே மூன்றாம் தாராவின் தாயான சிசிகாம்பிசு, அலெக்சாந்தர் மற்றும் எபேசுதியனை முதன் முதலில் சந்தித்தபோது நடந்ததாகப் பின்வரும் ஒரு கதையைக் குறிப்பிடுகின்றனர். சிசிகாம்பிசு எபேசுதியனை அலெக்சாந்தர் என்று நினைத்தார். ஏனெனில், எபேசுதியன் உயரமானவராகவும், இருவரில் மிகுந்த அழகானவராகவும் இருந்தார்.[201]

லைசிபோசுவின் ஓர் அலெக்சாந்தர் சிற்பம்

அலெக்சாந்தரின் கல் சவப்பெட்டியில் உள்ள சிற்பங்கள் இவர் வெளிரிய நிறத்தையும், சிவந்த கன்னங்களையும் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகின்றன. கிரேக்க சுயசரிதையாளர் புளூட்டாக் (அண்.  கி. பி. 45 - அண். கி. பி. 120) அலெக்சாந்தரைப் பற்றிக் குறிப்பிட்ட விளக்கத்துடன் இது ஒத்துப்போகிறது:

அலெக்சாந்தரின் வெளிப்புறத் தோற்றமானது, லைசிப்புசுவால் உருவாக்கப்பட்ட சிலைகளால் சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்தக் கலைஞரின் மூலமாகத் தான் அலெக்சாந்தர் தன்னைப்பற்றிய பிரதிகள் பொதுவாக உருவாக்கப்பட்டால் அது சரியாக இருக்கும் என்று எண்ணினார். இவரது கழுத்தின் அமைவடக்கம், இவரது கழுத்தானது சற்று இடதுபக்கம் திரும்பியிருக்கும், இவரது கண்களின் உருக வைக்கும் பார்வை ஆகியவற்றை இந்தக் கலைஞர் துல்லியமாகக் கணித்து இருந்தார். இந்தத் தனிப் பண்புகளை அலெக்சாந்தருக்குப் பின் வந்த மன்னர்களும், தோழர்களும் பின்பற்ற முயற்சித்தனர். அப்பெல்லெசு, எனினும் அலெக்சாந்தரைத் தான் ஓவியமாக வரையும் போது, அவரை இடி மின்னலை கையில் கொண்டவராக சித்தரித்துள்ளார். அதில் அலெக்சாந்தரின் நிறத்தை அவர் சரியாகச் சித்தரிக்கவில்லை. அதில் அலெக்சாந்தரை அடர், கருத்த நிறமுடையவராகச் சித்தரித்துள்ளார். அதே நேரத்தில், அலெக்சாந்தர் வெளிரிய நிறமுடையவர், இவரது வெளிரிய நிறமானது சிவந்த நிறமாக இவரது மார்பில் மாற்றம் அடைகிறது. இவரது முகமும் சிவந்த நிறமாக இருந்தது. மேலும், அலெக்சாந்தரின் தோலில் இருந்து ஒரு மிகுந்த நறுமணம் வீசியது. இவருடைய வாய் மற்றும் தசையில் நறுமணம் வீசியது. இந்த மணமானது இவரது ஆடைகளையும் நிரப்பியது. இதை நாம் "அரிசுதோசெனுசின் சுயசரிதை" என்ற நூலில் படித்துள்ளோம்.[202]

அலெக்சாந்தர் வேட்டையாடுவதைக் குறிக்கும் ஒரு நீர் வண்ண ஓவியம். இது அலெக்சாந்தரின் தந்தை இரண்டாம் பிலிப்பின் சமாதியில், அயிகை என்ற தொல்லியல் தளத்தில் உள்ளது. அலெக்சாந்தரின் காலத்தில் உருவாக்கப்பட்ட இவர் குறித்த ஒரே ஒரு சித்தரிப்பு இதுவாகும். ஆண்டு கி. மு. 330கள்.

நறுமணத்தின் தகவல்களை வரலாற்றாளர்கள், பண்டைய கிரேக்கத்தில் கடவுள்கள் மற்றும் கதாநாயகர்களின் பண்பாக நறுமணங்கள் இருக்குமென இருந்த ஒரு நம்பிக்கையிலிருந்து தோன்றியதெனவும், இது அலெக்சாந்தருக்கும் பொருந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனப் புரிந்து கொள்கின்றனர்.[196]

அலெக்சாந்தர் பளபளப்புக் கல் மற்றும் அக்கால நாணயங்கள் அலெக்சாந்தர் "ஒரு நேரான மூக்குடைய, சற்று முன்னோக்கி இருக்கும் தடையை உடைய, முழுமையடைந்த உதடுகளையுடைய, ஒரு நன்றாக அகன்ற நெற்றிக்குக் கீழ், உள்புறமாக இருக்கிற கண்களை உடையவராக" சித்தரிக்கின்றன.[196] பண்டைய வரலாற்றளரான அயேலியன் (அண். கி. பி. 175 - அண். கி. பி. 235), தன்னுடைய வேரியா இசுதோரியா (12.14) நூலில் அலெக்சாந்தரின் முடியின் நிறத்தை "ξανθὴν" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் பொருளை மஞ்சள், சிவப்பு அல்லது பழுப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.[203][204][205]

பல அறிஞர்கள் மற்றும் வரலாற்றாளர்கள் அலெக்சாந்தருக்குக் கெத்திரோகுரோமி என்ற உடற்பண்பு இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். அலெக்சாந்தருக்கு ஒரு கண் வெளிரியதாகவும், மற்ற கண் கருப்பாகவும் இருந்ததாக விளக்கப்பட்டுள்ளது.[206][207][208] அலெக்சாந்தரின் அனபாசிசு என்ற நூலில் அர்ரியன் இவருக்கு, "இருள் போன்ற அடர் நிறத்துடன் ஒரு கண்ணும், வான் போன்ற நீல நிறத்தில் ஒரு கண்ணும்" இருந்ததென குறிப்பிட்டுள்ளார்.[209] அலெக்சாந்தர் வேற்றுலகத்தைச் சேர்ந்தவர், கதாநாயகப் பண்புகளைக் கொண்டவர் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக இவ்வாறாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என சிலர் இத்தகவலை நிராகரிக்கின்றனர்.[210][211] கல் சவப்பெட்டியில் உள்ள அலெக்சாந்தரின் சிற்பங்களுக்கு உண்மையான நிறங்கள் மீண்டும் சரிசெய்து கொடுக்கப்பட்டபோது, இவருக்குப் பழுப்புக் கண்களும், செம்பழுப்பு நிற முடியும் இருந்ததாகக் காட்டப்படுகிறது.[212]

ஆளுமைத்தன்மை

அலெக்சாந்தரின் பெற்றோர்கள் இருவருமே இவரது குறிக்கோள்களை அடைய ஊக்கமளித்தனர். அலெக்சாந்தரின் மிக அருகில் இருந்த மற்றும் தாக்கமேற்படுத்திய ஒரு மாதிரி நபராக இவரது தந்தை திகழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பிலிப்பின் போர்ப் பயணங்களை இள வயது அலெக்சாந்தர் கவனித்து வந்தார். பிலிப் பெரும் காயங்களை அலட்சியப்படுத்தி வெற்றி மீது வெற்றி பெற்று வந்தார்.[50] அலெக்சாந்தரின் போட்டி மனப்பான்மை கொண்ட பண்பை இவர் தன் தந்தையுடன் கொண்ட உறவுமுறை தான் "தயார் செய்தது" என்று கருதப்படுகிறது. அலெக்சாந்தரிடம் தனது தந்தையை விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.[213] யுத்தத்தில் அலெக்சாந்தர் ஆபத்தான விளைவுகளைப் பற்றி எண்ணாமல் நடந்து கொள்ளும் நடத்தை மூலம் இது புரிந்து கொள்ளப்படுகிறது. "உலகிற்குக் காட்டச் சிறந்த சாதனைகளைத் தனக்காகத் தன் தந்தை விட்டுச் செல்ல மாட்டார்" என அலெக்சாந்தர் கவலை கொண்டார்.[214] தன்னுடைய தோழர்களிடமும் தன்னுடைய தந்தையின் சாதனைகளையும் சிறுமைப்படுத்தினார்.[213] அலெக்சாந்தரின் தாயான ஒலிம்பியாசும் இவரைப் போலவே பெரிய குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். பாரசீகப் பேரரசை வெல்வது என்பது அலெக்சாந்தரின் ஊழ் என்று தன் மகன் நம்புவதற்கு ஊக்கப்படுத்தினார்.[213] ஊழ் குறித்த ஒரு சிந்தனையைத் தனது மகனை உணர வைத்தார்.[215] இவர் முன்னேறிய ஆண்டுகளில், "இவரது அசட்டை செய்யாத உள்ளுணர்வையும், கம்பீரத்தையும் இந்தக் குறிக்கோள் தக்க வைத்தது" எனப் புளூட்டாக் கூறுகிறார்.[216]

புளூட்டாக்கின் கூற்றுப் படி, அலெக்சாந்தர் ஒரு வன்முறை கலந்த சினமுடையவராகவும், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது செயல்படக்கூடியவராகவும், உணர்ச்சிவசப்படக்கூடிய இயல்பையும் கொண்டிருந்தார்.[217] இது இவரது முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[213] அலெக்சாந்தர் பிடிவாதம் உடையவராகவும், தன்னுடைய தந்தையின் ஆணைகளுக்குக் கட்டுப்படாதவராகவும் விளங்கிய போதும், காரணங்களைக் கூறிச் செய்யப்படும் விவாதத்தை ஏற்றுக்கொண்டார்.[218] அலெக்சாந்தருக்கு அமைதியான ஒரு பக்கமும் இருந்தது. அது கவனமானதாகவும், நியாயமான முறையில் சிந்திக்கக் கூடியதாகவும் மற்றும் கவனமாகத் திட்டமிடக்கூடியதாகவும் இருந்தது. அறிவைப் பற்றிய ஒரு பெரிய விருப்பம், தத்துவத்தின் மீதான விருப்பம் ஆகியவற்றை அலெக்சாந்தர் கொண்டிருந்தார். மேலும், அலெக்சாந்தர் படிப்பதில் ஆர்வம் உடையவர் ஆவார்.[219] அரிசுட்டாட்டிலின் பயிற்சி இவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அலெக்சாந்தர் புத்திக் கூர்மையுடையவராகவும், எதையும் எளிதாகக் கற்றுக் கொள்ளக் கூடியவராகவும் இருந்தார்.[213] இவரது புத்திக் கூர்மை மற்றும் நியாயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்கமானது, தளபதியாக இவரது திறமை மற்றும் வெற்றியின் மூலம் சிறந்த முறையில் விளக்கப்படுகிறது.[217]

மகா அலெக்சாந்தரைச் சித்தரிக்கும் ஒரு கிரேக்க மார்பளவுச் சிலை. கி. மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உண்மையான சிலையின் ஓர் உரோமானிய நகல். நை கிளைபுதோதெக் அருங்காட்சியகம், கோபன்கேகன்.

அலெக்சாந்தர் கல்விப் புலமை மிக்கவர் ஆவார். கலை மற்றும் அறிவியல் ஆகிய இரண்டுக்குமே புரவலராக விளங்கினார்.[216][219] எனினும், விளையாட்டுக்கள் அல்லது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் (இவரது தந்தையைப் போல் இல்லாமல்) இவருக்குச் சிறிதளவே ஆர்வம் இருந்தது. ஓமரின் இலட்சியங்களான, பிறரிடம் இருந்து பெரும் மதிப்பு மற்றும் நற்பெயரை மட்டுமே அலெக்சாந்தர் தேடினார்.[220] அலெக்சாந்தருக்குப் பிறரை வசீகரிக்கும் தன்மையானது பெருமளவில் இருந்தது. தனது தனித் தன்மை மூலம் பிறரது நடவடிக்கைகளை மாற்றும் சக்தி இவருக்கு இருந்தது. இப்பண்புகள் இவரைச் சிறந்த தலைவர் ஆக்கியது.[179][217] இவரது இறப்பிற்குப் பிறகு, மாசிடோனியாவை ஒன்றிணைத்து, பேரரசை நிலைநிறுத்த இவரது தளபதிகள் யாராலும் இயலவில்லை என்பதே, இவரது தனித் தன்மைகளை விளக்கும் ஒரு சான்றாகும். அலெக்சாந்தரால் மட்டுமே இவற்றைச் செய்ய முடிந்தது.[179]

இவரது கடைசி ஆண்டுகளில், குறிப்பாக, எபேசுதியனின் இறப்பிற்குப் பிறகு, அலெக்சாந்தர் தற்புகழ்ச்சியும், ஐயப்பித்தும் கொண்டிருந்தார் என்பதற்கான அறிகுறிகளை வெளிக் காட்ட ஆரம்பித்தார்.[151] இவரது அசாதாரணமான சாதனைகள், தான் ஊழ் மீது இவருக்கிருந்த வெளிப்படுத்த முடியாத நம்பிக்கை, இவருடைய தோழர்களின் புகழ்ச்சி ஆகியவற்றால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[221] இவரது தனிச் சிறப்புகள் மீது இவருக்கிருந்த பெருமையானது, இவரது உயிலிலும், உலகை வெல்ல வேண்டும் என்ற இவரது விருப்பத்திலும்[151] தாமாகவே வெளிப்படுகின்றன. பல்வேறுபட்ட நூல்கள் இவர் எல்லையற்ற குறிக்கோளைக்[222][223] கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றன. இந்த அடைமொழியின் பொருளானது வரலாற்றின் அடிபாட்டு வழக்காக மாறிவிட்டது.[224][225]

தன்னை ஒரு கடவுளாக அலெக்சாந்தர் நம்பினார் என்று தெரிகிறது, அல்லது குறைந்தது அவ்வாறு மாற முயற்சித்தார்.[151] இவரது தாயார் ஒலிம்பியாசு இவரிடம் அடிக்கடி இவர் கடவுள் சியுசின் மகன் என்று கூறினார்.[226] சீவாவிலுள்ள அமூனின் ஆரக்கிளில் இந்தக் கருத்தானது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.[227] இவர் தன்னை சியுசு-அம்மோனின் மகன் என்று அடையாளப்படுத்தத் தொடங்கினார்.[227] அலெக்சாந்தர் பாரசீக உடை மற்றும் பழக்க வழக்கங்களின் கூறுகளைத் தனது அரசவையில் பின்பற்ற ஆரம்பித்தார். குறிப்பாக, புரோசுகினேசிசு பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். ஈரானிய உயர் குடியினரின் உதவி மற்றும் ஆதரவை உறுதிப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு அலெக்சாந்தர் எடுத்த பரந்த உத்திகளின் ஒரு பகுதி இதுவாகும்.[102] எனினும், மாசிடோனியர்கள் புரோசுகினேசிசு பழக்கத்திற்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைப் பின்பற்ற மறுப்புத் தெரிவித்தனர்.[106] இவருடைய இச்செயலானது இவரது நாட்டு வீரர்கள் பெரும்பாலானவர்களின் ஆதரவை இழக்கக் காரணமாக இருந்தது.[228] அலெக்சாந்தர் நடைமுறையைப் பின்பற்றிய ஓர் ஆட்சியாளர் ஆவார். கலாச்சார ரீதியாக வேறுபட்டிருந்த மக்களை ஆட்சி செய்வதில் இருந்த கஷ்டங்களைப் புரிந்து கொண்டார். பேரரசின் மக்கள் வாழ்ந்த இராச்சியங்களில் மன்னனைக் கடவுளாகக் கருதினர்.[229] எனவே, இது தற்புகழ்ச்சியாக இருந்திராமல், தன் ஆட்சியை வலுப்படுத்தவும், தனது பேரரசு ஒன்றுபடுத்தி வைத்திருக்கவும் எடுக்கப்பட்ட ஒரு நடைமுறை ரீதியிலான முயற்சியாக இவரது நடத்தை இருந்திருக்கலாம்.[230]

சொந்த உறவு முறைகள்

அலெக்சாந்தர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதலில் பாக்திரியாவின் சோக்தியானா உயர் குடியினரான ஆக்சியர்தேசின் மகள் ரோக்சானாவை[231][232][233] திருமணம் செய்துகொண்டார்.[234] பிறகு, இசுததேய்ரா மற்றும் பாரிசதிசு ஆகிய பாரசீக இளவரசிகளை அரசியல் காரணங்களுக்காக மணந்து கொண்டார்.[235][236] இசுததேய்ரா மூன்றாம் தாராவின் மகள் ஆவார். பாரிசதிசு மூன்றாம் அர்தசெராக்சஸின் மகள் ஆவார். அலெக்சாந்தருக்கு, ரோக்சானா மூலம் நான்காம் அலெக்சாந்தர், பர்சைனி என்ற ஒரு துணைவி மூலம் மாசிடோனின் ஹெராக்கிள்ஸ் என்ற இரண்டு மகன்கள் இருந்ததாகத் தெரிகிறது.[237][238]

அக்கால வழக்கப் படி, பெண்களுடன் அலெக்சாந்தர் மிகுந்த வலிமையான நட்புறவைக் கொண்டிருந்தர் என கிரீன் பரிந்துரைக்கிறார். அலெக்சாந்தர், கரியாவின் அதா மற்றும் தாராவின் தாயான சிசிகாம்பிசுவுடன் நட்பு கொண்டிருந்தார். அலெக்சாந்தரின் இறப்பைக் கேட்டபோது துயரத்தினால் சிசிகாம்பிசு இறந்தார் என்று கூறப்படுகிறது.[213]

யுத்தப் பதிவுகள்

முடிவுபதிவுநாள்போர்யுத்தம்எதிரி/கள்வகைநாடு
(தற்போது)
பதவி
வெற்றி1–0338-08-022 ஆகத்து, கி. மு. 338இரண்டாம் பிலிப் கிரேக்கத்தை அடிபணிய வைத்தல்Chaeroneaசிரோனிய யுத்தம்.தீப்ஸ், கிரேக்கம், ஏதென்ஸ் மற்றும் பிற கிரேக்க நகரங்கள்யுத்தம்கிரேக்கம்இளவரசர்

வெற்றி2–0335கி. மு. 335பால்கன் போர்ப் பயணம்Mount Haemusகேமுசு மலை யுத்தம்.கெதே, திரேசியர்கள்யுத்தம்பல்காரியாமன்னர்

வெற்றி3–0335-12திசம்பர், கி. மு. 335பால்கன் போர்ப் பயணம்Peliumபெலியம் முற்றுகை.இல்லியர்கள்முற்றுகைஅல்பேனியாமன்னர்

வெற்றி4–0335-12திசம்பர், கி. மு. 335பால்கன் போர்ப் பயணம்Pelium தீப்சு யுத்தம்.தீப்ஸ், கிரேக்கம்யுத்தம்கிரேக்கம்மன்னர்

வெற்றி5–0334-05மே, கி. மு. 334பாரசீகப் போர்ப் பயணம்Granicusகிரானிகசு யுத்தம்.அகாமனிசியப் பேரரசுயுத்தம்துருக்கிமன்னர்

வெற்றி6–0334கி. மு. 334பாரசீகப் போர்ப் பயணம்Miletusமிலேதுசு முற்றுகை.அகாமனிசியப் பேரரசு, மிலேசியர்கள்முற்றுகைதுருக்கிமன்னர்

வெற்றி7–0334கி. மு. 334பாரசீகப் போர்ப் பயணம்கலிகார்னசுசு முற்றுகை.அகாமனிசியப் பேரரசுமுற்றுகைதுருக்கிமன்னர்

வெற்றி8–0333-11-055 நவம்பர், கி. மு. 333பாரசீகப் போர்ப் பயணம்Issusஇசுசு யுத்தம்.அகாமனிசியப் பேரரசுயுத்தம்துருக்கிமன்னர்

வெற்றி9–0332சனவரி – சூலை, கி. மு. 332பாரசீகப் போர்ப் பயணம்Tyreதயர் முற்றுகை.அகாமனிசியப் பேரரசு, தயரியர்கள்முற்றுகைலெபனான்மன்னர்

வெற்றி10–0332-10அக்டோபர், கி. மு. 332பாரசீகப் போர்ப் பயணம்Tyreகாசா முற்றுகை.அகாமனிசியப் பேரரசுமுற்றுகைபாலத்தீனம்மன்னர்

வெற்றி11–0331-10-011 அக்டோபர், கி. மு. 331பாரசீகப் போர்ப் பயணம்Gaugamelaகௌகமேலா யுத்தம்.அகாமனிசியப் பேரரசுயுத்தம்ஈராக்குமன்னர்

வெற்றி12–0331-12திசம்பர், கி. மு. 331பாரசீகப் போர்ப் பயணம்Uxian Defileஉக்சியத் தூம்பு யுத்தம்.உக்சியர்கள்யுத்தம்ஈரான்மன்னர்

வெற்றி13–0330-01-2020 சனவரி, கி. மு. 330பாரசீகப் போர்ப் பயணம்Persian Gateபாரசீக வாயில் யுத்தம்.அகாமனிசியப் பேரரசுயுத்தம்ஈரான்மன்னர்

வெற்றி14–0329கி. மு. 329பாரசீகப் போர்ப் பயணம்Cyropolisசைரோபோலிசு முற்றுகை.சோக்தியானாமுற்றுகைதுருக்மெனிஸ்தான்மன்னர்

வெற்றி15–0329-10அக்டோபர், கி. மு. 329பாரசீகப் போர்ப் பயணம்Jaxartesசக்சார்தெசு யுத்தம்.சிதியர்கள்யுத்தம்உசுபெக்கிசுத்தான்மன்னர்

வெற்றி16–0327கி. மு. 327பாரசீகப் போர்ப் பயணம்Sogdian Rockசோக்தியக் குன்று முற்றுகை.சோக்தியானாமுற்றுகைஉசுபெக்கிசுத்தான்மன்னர்

வெற்றி17–0327மே, கி. மு. 327 – மார்ச், கி. மு. 326இந்தியப் போர்ப் பயணம்கோபென் போர்ப் பயணம்.அசுபசியர்கள்போர்ப் பயணம்ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான்மன்னர்

வெற்றி18–0326-04ஏப்ரல், கி. மு. 326இந்தியப் போர்ப் பயணம்Aornosஓர்னோசு முற்றுகை.அசுவகாமுற்றுகைபாக்கித்தான்மன்னர்

வெற்றி19–0326-05மே, கி. மு. 326இந்தியப் போர்ப் பயணம்Hydaspes செலம் போர்.போரஸ்யுத்தம்பாக்கித்தான்மன்னர்

வெற்றி20–0325நவம்பர், கி. மு. 326 – பெப்ரவரி, கி. மு. 325இந்தியப் போர்ப் பயணம்முல்தான் முற்றுகை.மலிமுற்றுகைபாக்கித்தான்மன்னர்

மரபு

எலனியக் காலத்தவரின் உலகப் பார்வை: எரடோசுதெனீசின் (கி. மு. 276 – கி. மு. 194) உலக வரைபடம். இவர் இந்த வரைபடத்தை அலெக்சாந்தர் மற்றும் அவருக்குப் பின்வந்தவர்களின் போர்ப் பயணங்களில் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு உருவாக்கினார்.[239]

அலெக்சாந்தரின் மரபானது இவரது இராணுவ வெற்றிகளையும் தாண்டி விரிவடைந்துள்ளது. ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் இவரது ஆட்சியானது ஒரு திருப்புமுனையைக் குறித்தது.[240] இவருடைய போர்ப் பயணங்கள் கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான தொடர்பு மற்றும் வணிகத்தை அதிகரித்தது. கிழக்கிலிருந்து பரந்த பகுதிகள், குறிப்பிடத்தக்க அளவுக்கு கிரேக்க நாகரிகம் மற்றும் தாக்கத்தைப் பற்றி அறிந்து கொண்டன.[18] இவர் நிறுவிய சில நகரங்கள் முக்கியமான கலாச்சார மையங்களாக உருவாயின. அவற்றில் பல 21ஆம் நூற்றாண்டு வரை எஞ்சியுள்ளன. இவர் அணிவகுத்த பகுதிகள் குறித்து இவரது வரலாற்றாளர்கள் மதிப்புமிக்க தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், நடுநிலைக் கடலைத் தாண்டி இருந்த ஓர் உலகத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வையும் கிரேக்கர்கள் பெற்றனர்.[18]

எலனிய இராச்சியங்கள்

அலெக்சாந்திரியாவின் திட்டம் அண். கி. மு. 30

அலெக்சாந்தரின் உடனடியான மரபாகக் கருதப்படுவது, ஆசியாவின் பரந்த பகுதிகளுக்கு மாசிடோனிய ஆட்சியை அறிமுகப்படுத்தியது ஆகும். இவரது இறப்பின்போது, அலெக்சாந்தரின் பேரரசானது சுமார் 52,00,000 சதுர கிலோமீட்டர்[241] பரப்பளவைக் கொண்டிருந்தது. இது அந்நேரத்தில் உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. இவற்றில் பெரும்பாலான பகுதிகள் மாசிடோனியக் கைகளிலோ அல்லது கிரேக்கத் தாக்கத்தின் கீழோ அடுத்த 200 - 300 ஆண்டுகளுக்கு இருந்தது. இந்தப் பேரரசில் இருந்து வழிவந்த அரசுகள், குறைந்தது ஆரம்பத்தில் வந்த அரசுகள், ஆதிக்கப் படைகள் ஆகியவற்றின் இந்த 300 ஆண்டு காலமானது அடிக்கடி எலனியக் காலம் என்று குறிப்பிடப்படுகிறது.[242]

அலெக்சாந்தரின் பேரரசின் கிழக்கு எல்லைகள் அவரது வாழ்நாளின் போதே சிதைவுற ஆரம்பித்தன.[179] இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் இவர் உருவாக்கிய அதிகார வெற்றிடமானது வரலாற்றின் சக்தி வாய்ந்த இந்திய அரச மரபுகளில் ஒன்றான மௌரியப் பேரரசு உருவாவதற்கு நேரடியான காரணமாக அமைந்தது. இந்த அதிகார வெற்றிடத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சந்திரகுப்த மௌரியர், ஒப்பீட்டளவில் எளிமையான பூர்வீகத்தை உடையவர் ஆவார். இவர் கிரேக்க நூல்களில் சந்திரோகோட்டோசு என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் பஞ்சாபின் கட்டுப்பாட்டைப் பெற்றார். அந்த அதிகார மையத்தைக் கொண்டு நந்தப் பேரரசை வெல்ல முன்னேறினார்.[243]

நகரங்களைத் தோற்றுவித்தல்

இவரது படையெடுப்புகளின் போது, அலெக்சாந்தர் தன் பெயரைக் கொண்ட சுமார் 20 நகரங்களைத் தோற்றுவித்தார். இவற்றில் பெரும்பாலானவை டைகிரிசு ஆற்றின் கிழக்கே அமைந்துள்ளன.[107][244] இதில், முதன்மையானதும், மிகப் பெரியதுமானது எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகரமாகும். இது நடுநிலக் கடல் பகுதியில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவானது.[107] இந்த நகரங்களின் அமைவிடங்கள் வணிகப் பாதைகளையும், தற்காப்புக் காவல் இடங்களையும் பிரதிபலித்தன. முதலில் இந்த நகரங்கள் வாழத் தகுதியற்ற இடங்களாக இருந்திருக்க வேண்டும். பாதுகாப்புக் காவலர்களுக்கான பகுதியை விட மேலானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.[107] அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு, இந்நகரங்களில் குடியேறிய பல கிரேக்கர்கள் கிரேக்கத்திற்குத் திரும்பி வர முயற்சித்தனர்.[107][244] எனினும், அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, பல அலெக்சாந்திரியாக்கள் செழித்தோங்கின. அங்கே நுட்பமான பொதுக் கட்டடங்களும், கிரேக்கர்கள் மற்றும் உள்ளூர் மக்களைக் கொண்ட குறிப்பிடத்தக்க அளவுக்கான மக்கள் தொகையையும் கொண்டிருந்தது.[107]

"புதிய" இசுமைர்னா நகரத்தின் தோற்றுவிப்பும் அலெக்சாந்தருடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு புராணத்தின் படி, பகசு மலையில் அலெக்சாந்தர் வேட்டையாடியதற்குப் பிறகு, நெமெசிசு சரணாலயத்தில் ஒரு பிளேன் மரத்திற்குக் கீழே உறங்கினார். அவர் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் கடவுள் தோன்றி அங்கு ஒரு நகரத்தை தோற்றுவிக்குமாறு கூறியது. "பழைய" நகரத்திலிருந்த மக்களை நகர்த்தி இந்தப் புதிய நகரத்திற்குக் குடியமர்த்துமாறு கூறியது. இதைப் பற்றிக் கேட்பதற்காக அந்நகரத்தவர் கிளருசில் இருந்த ஆரக்கிளுக்கு தூதர்களை அனுப்பினர். ஆரக்கிளின் பதிலுக்குப் பிறகு, அவர்கள் "புதிய" நகரத்திற்குக் குடிபெயர முடிவு செய்தனர்.[245]

தற்போதைய ஜோர்தானில் இருக்கும் பெல்லா நகரமானது, அலெக்சாந்தரின் இராணுவத்தில் இருந்த அனுபவசாலி வீரர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள், கிரேக்கத்தில் இருந்த, அலெக்சாந்தர் பிறந்த பெல்லா நகரத்தின் பெயரை இந்நகரத்திற்கு வைத்தனர்.[246]

கிரேக்கக் கோயில்களுக்கு நிதி வழங்குதல்

பிரீனேவில் ஏதெனாவிற்கு மகா அலெக்சாந்தரின் அர்ப்பணிப்பு, இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[247]

கி. மு. 334இல், மகா அலெக்சாந்தர் தற்போதைய மேற்குத் துருக்கியில் உள்ள பிரீனேவில் ஏதெனாவிற்குப் புதுக் கோயிலைக் கட்டி முடிக்க நன்கொடை அளித்தார்.[248] இக்கோயிலில் இருந்து கிடைத்த கல்வெட்டானது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில், "மன்னன் அலெக்சாந்தர் [இந்தக் கோயிலை] ஏதெனா போலியாசுக்கு அர்ப்பணித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[247] அலெக்சாந்தரின் வாழ்வின் ஒரு கட்டத்தை உறுதி செய்யும், சில தனிப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இந்தக் கல்வெட்டு திகழ்கிறது.[247] இந்தக் கோயிலுக்கு வடிவமைப்பை பிதியோசு உருவாக்கினார். இவர் மாசலசின் சமாதியை உருவாக்கிய கட்டடக் கலைஞர்களில் ஒருவராவார்.[247][248][249]

சியுசு பத்தியோசுக்கு ஒரு கோயிலை அலெக்சாந்தர் தோற்றுவித்தார் என லிபனியசு எழுதியுள்ளார். இந்த இடத்தில்தான் பிற்கால நகரமான அந்தியோக்கியா கட்டப்பட்டது.[250][251]

சரபிசுக்கு ஒரு பெரிய கோயிலை அலெக்சாந்தர் கட்டினார் என சுடா எழுதியுள்ளார்.[252]

எலனிய மயமாக்கம்

அந்நேரத்தில் உலகின் மிகப் பெரிய நாடாக அலெக்சாந்தரின் பேரரசு விளங்கியது. இது சுமார் 52,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.

எலனிய மயமாக்கம் என்ற சொல்லானது முதன்முதலில் செருமானிய வரலாற்றாளர் சோகன் குதாவ் துரோய்சனால் கிரேக்க மொழி, கலாச்சாரம் மற்றும் அலெக்சாந்தரின் வெற்றிக்குப் பிறகு முந்தைய பாரசீகப் பேரரசுக்குள் கிரேக்க மக்கள் தொகைப் பரவல் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் செயல்பாடானது பெரிய எலனிய நகரங்களான அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா மற்றும் செலூக்கியா (நவீன பகுதாதுவின் தெற்கில் உள்ளது) ஆகியவற்றில் காண முடியும்.[253] பாரசீகக் கலாச்சாரத்திற்குள் கிரேக்கக் காரணிகளைப் புகுத்த அலெக்சாந்தர் விரும்பினார். கிரேக்க மற்றும் பாரசீகக் கலாச்சாரத்தைக் கலக்க வைக்க விரும்பினார். ஆசியா மற்றும் ஐரோப்பாவின் மக்கள் தொகையை ஒரே இனத்தவராக்க விரும்பினார். இத்தகைய கொள்கைகளை அலெக்சாந்தருக்குப் பின் வந்தவர்கள் வெளிப்படையாக நிராகரித்தபோதும், இப்பகுதிகள் முழுவதும் எலனிய மயமாக்கமானது நடைபெற்றது. வழி வந்த அரசுகளின் தனித்துவமான மற்றும் எதிரான "கிழக்கு மயமாக்கத்துடன்" இது நடைபெற்றறது.[254]

படையெடுப்புகளால் பரப்பப்பட்ட எலனியக் கலாச்சாரத்தின் மையமானது பெரும்பாலும் ஏதெனியக் கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருந்தது.[255] அலெக்சாந்தரின் இராணுவத்தில் கிரேக்கம் முழுவதிலும் இருந்து வந்திருந்த வீரர்களின் நெருக்கமான ஒருங்கிணைப்பானது, பெரும்பாலும் அத்திக்கை அடிப்படையாகக் கொண்ட "கோயினே" அல்லது "சாதாரண" கிரேக்க வழக்கு மொழியின் உருவாக்கத்திற்கு நேரடியாக இட்டுச் சென்றது[256]. எலனிய உலகம் முழுவதும் கோயினே மொழியானது பரவியது. எலனிய நிலங்களின் லிங்குவாஃபிராங்கா ஆனது. இறுதியாக, நவீன கிரேக்க மொழியின் மூதாதையர் மொழியானது.[256] மேலும், நகரத் திட்டமிடல், கல்வி, உள்ளூர் அரசாங்கம் மற்றும் கலை ஆகியவை எலனியக் காலத்தின்போது, பாரம்பரியக் கிரேக்கக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இவை தனித்துவமான புது வடிவங்களாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன. இவை பொதுவாக எலனியம் என்று குழுப்படுத்தப்படுகின்றன. மேலும், புதிய ஏற்பாடானது கோயினே கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.[257] எலனியக் கலாச்சாரத்தின் அம்சங்களானவை கி. பி. 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த பைசாந்தியப் பேரரசின் வழக்கங்களிலும் கூடக் காணப்பட்டன.[258]

தெற்கு மற்றும் நடு ஆசியாவில் எலனிய மயமாக்கம்

கிரேக்க-பௌத்தப் பாணியில் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை. ஆண்டு கி. பி. ஒன்று முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை. இடம் காந்தாரதேசம், வடக்கு பாக்கித்தான். தற்போது இது டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

எலனிய மயமாக்கத்தின் அதிகப் படியாகக் குறிப்பிடப்படுகிற தாக்கங்களில் சிலவற்றை, ஆப்கானித்தான் மற்றும் இந்தியாவில் காண முடியும். ஒப்பீட்டளவில் பிந்தைய காலத்தில் வளர்ச்சியடைந்த, தற்போதைய ஆப்கானித்தான் மற்றும் இந்தியாவில் இருந்த கிரேக்க பாக்திரியா பேரரசு (கி. மு. 250 - கி. மு. 125) (தற்போதைய ஆப்கானித்தான், பாக்கித்தான், மற்றும் தஜிகிஸ்தான்) மற்றும் இந்தோ-கிரேக்க இராச்சியத்தில் (கி. மு. 180 - கி. பி. 10) இவற்றைக் காண முடியும்.[259] பட்டுப் பாதை வணிக வழிகளில் எலனியக் கலாச்சாரமானது ஈரானிய மற்றும் பௌத்தக் கலாச்சாரங்களுடன் கலந்து ஒரு கலப்புக் கலாச்சாரத்தை உருவாக்கியது. கி. மு. 3ஆம் நூற்றாண்டு மற்றும் கி. பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற நாட்டுப் பண்பாடுகளின் தாக்கம் கொண்ட காந்தாரதேசத்தின் (தற்போதைய பாக்கித்தானில் சிந்து, சுவாத் மற்றும் காபூல் ஆறுகளின் இணைவின் மேல் பகுதியில் உள்ள ஒரு பகுதி) கலை மற்றும் தொன்மவியலானது, எலனிய நாகரிகம் மற்றும் தெற்கு ஆசியாவுக்கு இடையிலான நேரடித் தொடர்புக்கான சான்றாகத் திகழ்கின்றது. இவற்றில் அசோகர் கல்வெட்டுக்களும் ஒன்றாகும். அசோகரின் நிலப்பரப்பில் கிரேக்கர்கள் பௌத்தத்திற்கு மதம் மாறியதையும், எலனிய உலகத்தில் அசோகரின் சமகாலத்தவர்களால் பௌத்தத் தூதர்கள் வரவேற்கப்பட்டதையும் இக்கல்வெட்டுகள் நேரடியாகக் குறிப்பிடுகின்றன.[260] இந்தக் கலப்பானது கிரேக்க-பௌத்தம் என்று அழைக்கப்படுகிறது. இது பௌத்த மதத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.[261] கிரேக்க-பௌத்தக் கலை என்ற ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியது. இந்தக் கிரேக்க-பௌத்த இராச்சியங்கள், முதல் சில பௌத்தத் தூதுக்குழுக்களைச் சீனா, இலங்கை, எலனிய ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தன.

புத்தரின் சில முதல் மற்றும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய உருவச் சித்தரிப்புகள் இக்காலத்தில் தோன்றின. இவை அப்பல்லோவின் கிரேக்கச் சிலைகளை மாதிரியாகக் கொண்டு கிரேக்க-பௌத்தப் பாணியில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[259] பல பௌத்தப் பழக்க வழக்கங்களும் பண்டைய கிரேக்க சமயத்தால் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. போதிசத்துவர் கோட்பாடானது கிரேக்கத் தெய்வீகக் கதாநாயகர்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.[262] சில மகாயான பௌத்த சமயத்தின் சடங்குப் பழக்கவழக்கங்கள் (ஊதுபத்தி பற்ற வைத்தல், மலர்களைப் பரிசாகக் கொடுத்தல், சமய மேடைகளில் உணவு படைத்தல்) ஆகியவை பண்டைய கிரேக்கர்களால் பின்பற்றப்பட்ட பழக்கங்களை ஒத்துள்ளது. எனினும், இதே பழக்க வழக்கங்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கலாச்சாரத்திலும் காணப்பட்டுள்ளன. மெனாண்டர் என்ற ஒரு கிரேக்க மன்னன் பௌத்த மதத்திற்கு மாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் பௌத்த இலக்கியத்தில் 'மிலிந்தா' என்ற நிலையான புகழைப் பெற்றுள்ளார்.[259] எலனிய மயமாக்கச் செயல்முறையானது கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையிலான வணிகத்தை ஊக்குவித்தது.[263] உதாரணமாக, கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்குத் தேதியிடப்பட்ட கிரேக்க வானியல் உபரணங்கள் கிரேக்க பாக்திரியா பேரரசின் நகரமான ஐ கனௌமில், தற்போதைய ஆப்கானித்தானில் கிடைக்கப்பெற்றுள்ளன.[264] நீண்ட காலமாக இந்தியாவில் பிரபஞ்சம் தோன்றியதாக இருந்து வந்த நம்பிக்கையானது, ஒரு மைய மலையைச் (மேரு மலை) சுற்றி நான்கு கண்டங்கள் மலரின் இதழ்களைப் போல ஒரு வட்ட வடிவில் இருந்தன என்பதாகும்.[263][265][266] இவை, இறுதியாகக் கிரேக்கக் கருத்தான ஒரு கோள வடிவ புவியைச் சுற்றி கோள வடிவ கிரகங்கள் இருக்கின்றன என்ற கருத்தால் மாற்றம் செய்யப்பட்டன. எவன சாதகம் (பொருள்: கிரேக்க வானியல் நூல்) மற்றும் பவுலிச சித்தாந்தா ஆகிய நூல்கள் இந்திய வானியலின் மீது கிரேக்க வானியல் யோசனைகளின் தாக்கத்தைக் குறிப்பிடுகின்றன.

கிழக்கில் மகா அலெக்சாந்தரின் வெற்றிகளைத் தொடர்ந்து, இந்தியக் கலை மீது எலனியத் தாக்கமானது அதிகப் படியாக இருந்தது. கட்டடக்கலையில், தக்சசீலாவுக்கு அருகில் காணப்படும் சந்தியால் கோயிலானது பாக்கித்தான் வரை அயனிய ஒழுங்கின் சில உதாரணங்கள் காணப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. அயனியத் தாக்கத்தைக் காட்டும் போதிகைகளின் பல உதாரணங்கள் பட்னா வரையிலும் காணப்படுகின்றன. குறிப்பாக, கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்குத் தேதியிடப்பட்ட பாடலிபுத்திரத் தலைநகரத்தை எடுத்துக்கொள்ளலாம்.[267] கொறிந்திய ஒழுங்கானது காந்தாரக் கலையில் வெகுவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இந்தோ-கொரிந்தியத் தலைநகரங்கள் மூலம் இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

உரோமின் மீதான தாக்கம்

இப்பதக்கமானது உரோமைப் பேரரசில் தயாரிக்கப்பட்டது, அலெக்சாந்தரின் நினைவுகளின் தாக்கத்தை இது விளக்குகிறது. வால்ட்டர்சு கலை அருங்காட்சியகம், பால்ட்டிமோர்.

அலெக்சாந்தரையும், அவரது சாதனைகளையும் பல உரோமானியர்கள், குறிப்பாகத் தளபதிகள், பெரிதும் மதித்தனர். அவர்கள் அலெக்சாந்தரின் சாதனைகளுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பினர்.[268] பாலிபியசு தன் வரலாறுகள் நூலைத் தொடங்கிய போது, அலெக்சாந்தரின் சாதனைகளை உரோமானியர்களுக்கு நினைவுபடுத்தி விட்டு எழுதத் தொடங்கினார். இதற்குப் பிறகு, உரோமானியத் தலைவர்கள் இவரை ஒரு முன் மாதிரியாகக் காண ஆரம்பித்தனர். மகா பாம்பே "மாக்னசு" என்ற அடைமொழியைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அலெக்சாந்தரின் அனசுதோல் பாணி சிகையலங்காரத்தைக் கூடத் தானும் வைத்துக் கொண்டார். வெல்லப்பட்ட கிழக்கின் நிலங்களில் அலெக்சாந்தரின் 260 ஆண்டுகள் பழமையான மேலங்கியைக் கூடத் தேடினார். பிறகு, அதைத் தன் தனி மதிப்பின் அடையாளத்திற்காக அணிந்து கொண்டார்.[268] யூலியசு சீசர் ஒரு லைசிப்பிய வெண்கலக் குதிரை வீரன் சிலையை அலெக்சாந்தருக்காக அர்ப்பணித்தார். ஆனால், அலெக்சாந்தரின் தலைக்குப் பதிலாகத் தன் தலையை வைத்தார். அதே நேரத்தில், அலெக்சாந்திரியாவில் அலெக்சாந்தரின் சமாதிக்கு வருகை புரிந்த அகஸ்ட்டஸ், தற்காலிகமாகத் தன் முத்திரையை இசுபிங்சு உருவத்தில் இருந்து அலெக்சாந்தரின் தலைக்கு மாற்றினார்.[268] பேரரசர் திராசனும் அலெக்சாந்தரைப் பெரிதும் மதித்தார். நீரோ மற்றும் கரகல்லாவும் அலெக்சாந்தரைப் பெரிதும் மதித்தனர்.[268] ஏகாதிபத்திய அரியணையில் சிறிது காலம் அமர்ந்திருந்த மக்ரினுசின் குடும்பத்தவரான மக்ரியானிகள் ஓர் உரோமானியக் குடும்பத்தினர் ஆவர். இவர்கள் அலெக்சாந்தரின் உருவத்தை, ஆபரணமாகவோ, அல்லது உடைகளில் தையல் பூ வேலை செய்தோ அணிந்து கொண்டனர்.[269]

அதே நேரத்தில், சில உரோமானிய எழுத்தாளர்கள், குறிப்பாக குடியரசு நபர்கள், சர்வாதிகார மனப் பாங்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் குடியரசு எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பிடும் ஓர் எச்சரிக்கைக் கதையாக அலெக்சாந்தரைப் பயன்படுத்தினர்.[270] ஓர் ஆட்சியாளரின் பண்புகளான அமிசிதா (நட்பு) மற்றும் கிளமென்சியா (இரக்கம்), மேலும் இரகுந்தியா (சினம்) மற்றும் குபிதிதாசு குளோரியே (நற்பெயருக்கான மட்டு மீறிய விருப்பம்) ஆகியவற்றுக்கான உதாரணமாக இந்த எழுத்தாளர்கள் அலெக்சாந்தாரைக் குறிப்பிட்டனர்.[270]

பேரரசர் சூலியன் தன் நையாண்டியான "சீசர்கள்" நூலில், முந்தைய உரோமானியப் பேரரசர்களுக்கு இடையிலான ஒரு போட்டியில், அங்கு கூடியிருக்கும் கடவுள்களின் பார்வையில், ஒரு மிகு போட்டியாளராக மகா அலெக்சாந்தரை அழைப்பதாக விளக்கியுள்ளார்.[271]

இத்தினேரியம் அலெக்சாந்தரி என்பது 4ஆம் நூற்றாண்டு, இலத்தீன் இத்தினேரியம் (பயண வழிகாட்டி) ஆகும். இது மகா அலெக்சாந்தரின் படையெடுப்புகளை விளக்கியிருந்தது. யூலியசு சீசர் தன் மனைவியின் இறப்பிற்குப் பிறகு, ஒரு வருவாய் அதிகாரியாக இசுபானியாவிற்குச் சேவையாற்ற கி. மு. 69இல் இளவேனிற்காலம் அல்லது ஆரம்ப கோடை காலத்தில் சென்றிருந்தார். அங்கு இருந்த போது, மகா அலெக்சாந்தரின் ஒரு சிலையைக் கண்டார். அதே வயதில் அலெக்சாந்தர் உலகைத் தன் காலடியில் வைத்திருந்ததையும், ஒப்பீட்டளவில் தான் குறைவாகச் சாதித்திருப்பதையும் எண்ணி உணர்ந்து அதிருப்தி கொண்டார்.[272][273]

பாம்பேயின் சிறு வயதுக் கதாநாயகனாக அலெக்சாந்தர் இருந்ததால், அவர் தன்னைப் "புதிய அலெக்சாந்தர்" என்று பாவனை செய்து கொண்டார்.[274]

அலமன்னிக்கு எதிராகத் தனது போர்ப் பயணத்தைக் கரகல்லா முடித்த பிறகு, அவருக்கு மகா அலெக்சாந்தர் குறித்த எண்ணங்கள் மனது முழுவதும் நிரம்பியிருந்தன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.[275][276] தன்னுடைய தனிநபர் பாணியில் அவர் வெளிப்படையாக அலெக்சாந்தர் போல் நடித்துக் காட்டினார். பார்த்தியப் பேரரசு மீதான தனது படையெடுப்புத் திட்டத்தில் மாசிடோனிய பாணியிலான பாலன்க்சு வடிவில் தனது 16,000 வீரர்களை வழிநடத்த கரகல்லா முடிவு செய்தார். உரோமானிய இராணுவமானது பாலன்க்சு வடிவத்தை ஒரு வழக்கொழிந்த உத்தி அமைப்பு என்று முடிவெடுத்து ஒதுக்கியிருந்த போதிலும் அவர் இவ்வாறு செய்தார்.[275][276][277] வரலாற்றாளர் கிரித்தோபர் மேத்யூ, பலங்கரீ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு என்று கூறுகிறார். இரண்டுமே இராணுவச் சார்புடையவையாக இருந்தன. முதல் பொருளானது வெறுமனே உரோமானிய யுத்த வரிசையைக் குறிக்கிறது. வீரர்கள் ஈட்டிகளை ஆயுதமாக ஏந்தி இருக்கின்றனர் என்பதைக் குறிப்பதாக இல்லை. இரண்டாவது பொருளானது பிந்தைய உரோமைக் குடியரசின் 'மரியன் கோவேறு கழுதையை' ஒத்த பொருளைக் குறிக்கிறது. அவர்கள் தங்களது உபகரணங்களை நீண்ட குச்சியில் கட்டிக்கொண்டு சென்றனர். இவை, கி. பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலாவது குறைந்தது பயன்பாட்டில் இருந்தன.[277] இதன் விளைவாக, பார்த்திகாவின் இரண்டாம் இலெகியோவின் பலங்கரீயானது ஈட்டி ஏந்திய வீரர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, தரப்படுத்தப்பட்ட யுத்த வரிசைத் துருப்புக்கள் அல்லது ஒருவேளை திரியாரீயாக இருந்திருக்கலாம்.[277]

அலெக்சாந்தர் குறித்த கரகல்லாவின் மிகையார்வமானது எந்த அளவுக்குச் சென்றது என்றால், தனது பாரசீகப் படையெடுப்புக்குத் திட்டமிடும் போது, கரகல்லா அலெக்சாந்திரியாவுக்கு வருகை புரிந்தார். அரிசுட்டாட்டில் அலெக்சாந்தருக்கு விஷம் வைத்தார் என்ற புராணக் கதையின் அடிப்படையில், அரிசுட்டாட்டிலியப் பள்ளியில் இருந்த தத்துவவாதிகளைக் கொடுமைப்படுத்தினார். இது கரகல்லாவின் வளர்ந்து வந்த ஏறு மாறான நடத்தையின் ஓர் அறிகுறியாகும். ஆனால், அலெக்சாந்தர் குறித்து அவரது மிகையார்வமானது விசித்திரமாக இருந்தபோதிலும், அலெக்சாந்திரியாவில் இறுதியாக நடந்த நிகழ்வுகளால் அது நிழலடிப்பு செய்யப்பட்டது.[276]

கி. பி. 39இல், பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பிரமிக்க வைக்கும் செயலைக் காலிகுலா செய்தார். பையே விடுமுறைப் போக்கிடத்தில் இருந்து, பண்டைத் துறைமுகமான புதியோலி வரை சுமார் மூன்று கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவு நீளமுடைய ஒரு தற்காலிக மிதவைப் பாலத்தைக் கப்பல்களைப் பகுதிகளாகக் கொண்டு கட்டுமாறு ஆணையிட்டார்.[278][279] எல்லிசுபாந்தைக் கடக்கப் பாரசீக மன்னன் செர்கஸ் அமைத்த படகுப் பாலத்திற்குச் சவால் விடக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்பாலத்தை அவர் அமைத்தார்.[279] காலிகுலாவுக்கு நீந்தத் தெரியாது.[280] பிறகு, தனது விருப்பத்திற்குரிய குதிரையான இன்சிததுசில் அப்பாலத்தைக் கடந்தார். அப்போது மகா அலெக்சாந்தரின் மார்பகத் தட்டைக் காலிகுலா அணிந்திருந்தார்.[279] திபேரியசாஇச் சேர்ந்த உண்மையைக் கணித்துக் கூறுபவரான மெந்திசின் திரசில்லுசு என்பவர், காலிகுலா "பையே விரிகுடாவைத் தனது குதிரை மூலம் கடந்தாலும் கடப்பாரே தவிர பேரரசராக வர அவருக்கு வாய்ப்பு இல்லை" என்று குறிப்பிட்டதைப் பொய்யாக்க வேண்டுமென்று இந்தச் செயலை காலிகுலா செய்தார்.[279]

கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மொழியானது அலெக்சாந்தரின் படையெடுப்புகள் மூலம் மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் பரப்பப்பட்டது என்பது, இந்த நிலப்பரப்புக்குள் பிற்கால உரோமானிய விரிவாக்கமானது சென்றதற்கு ஒரு "முன் நிபந்தனையாக" எடுத்துக் கொள்ளப்பட்டது. பைசாந்தியப் பேரரசு அமைவதற்கு முழுமையான அடித்தளமாகவும் இது அமைந்தது என எர்ரிங்டன் என்ற பிரித்தானிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.[281]

அனத்தோலிய இசுத்துமசு வழியாக ஒரு கால்வாய் வெட்டும் வெற்றியடையாத திட்டம்

பவுசனியாசின் கூற்றுப் படி, மிமாசு மலை (தற்போதைய கரபுருன் பகுதி) வழியே தோண்ட அலெக்சாந்தர் விருப்பம் கொண்டார். ஆனால், அதில் வெற்றி அடையவில்லை. அலெக்சாந்தரின் வெற்றியடையாத ஒரே திட்டம் என்று அவர் இதைக் கூறுகிறார்.[282] மூத்த பிளினியின் மேற்கொண்ட தகவல்படி, திட்டமிடப்பட்ட நீளமானது 12 கிலோமீட்டர் ஆகும். ஆனால், கய்சிதிரியா மற்றும் எர்மான் விரிகுடாக்களை இணைக்க இசுத்துமசு வழியாக ஒரு கால்வாயை வெட்ட வேண்டும் என்பதே திட்டம் என்று அவர் கூறுகிறார்.[283][284]

பாரசீக வளைகுடாவில் இகருசு தீவுக்குப் பெயரிடுதல்

அர்ரியனின் கூற்றுப் படி, அரிசுதோபுலுசு கூறியதாவது, அலெக்சாந்தர் பாரசீக வளைகுடாவின் இகருசு தீவுக்கு (தற்போதைய பைலாகா தீவு) ஏஜியன் கடலில் இருந்த இகருசு தீவின் பெயரை வைத்தார்.[285][286]

கடிதங்கள்

அலெக்சாந்தர் ஏராளமான கடிதங்களை எழுதியும், பெற்றும் உள்ளார். ஆனால், இதில் ஒன்று கூட தற்போது எஞ்சியிருக்கவில்லை. கிரேக்க நகரங்களுக்கு இவர் அனுப்பிய ஒரு சில அலுவல் பூர்வமான கடிதங்களின் நகல்கள் கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றன. பிற கடிதங்களின் உரையானது சில நேரங்களில் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல்கள் எப்போதாவது அவற்றின் சில வரிகளை மட்டும் குறிப்பிடுகின்றன. இந்த வரிகள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாக உள்ளது. பல போலிக் கடிதங்கள், அவற்றில் சில உண்மையான கடிதங்களை அடிப்படையாக கொண்டவையாகவும் இருந்திருக்கலாம், ரொமான்ஸ் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[287]

புராணக் கதைகளில்

14ஆம் நூற்றாண்டு ஆர்மீனிய நூலின் கையெழுத்துப் பிரதியில் அலெக்சாந்தர்

அலெக்சாந்தர் குறித்த பல புராணக் கதைகள் அவரது சொந்த வாழ் நாளில் இருந்து பெறப்படுகின்றன. இவற்றை அலெக்சாந்தரே ஊக்குவித்து இருக்கலாம் என்று பெரும்பாலும் கருதப்படுகிறது.[288] இவரது அரசவை வரலாற்றாளரான கல்லிசுதனிசு, சிலிசியாவில் உள்ள கடலானது அலெக்சாந்தரை புரோசுகினேசிசு முறையில் வணங்கி வழிவிட்டதாகச் சித்தரித்துள்ளார். அலெக்சாந்தரின் இறப்பிற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு எழுதிய, ஒனேசிக்ரிதுசு, அலெக்சாந்தர் மற்றும் புராணக் கதை அமெசான்களின் இராணியான தலேசுத்ரிசுக்கு இடையிலான முன்னேற்பாடு செய்யப்பட்ட காதலர்கள் சந்திப்புக் கதையைப் புனைந்து உருவாக்கியிருந்தார். தன்னுடைய புரவலர் மன்னனான லிசிமச்சூஸிடம் இதை அவர் வாசித்துக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லிசிமச்சூஸ் அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். இக்கதையைக் கேட்ட அவர், "நான் அந்தத் தருணத்தில் எங்கிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கிண்டலாகக் கூறினார்.[289]

அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு, முதல் நூற்றாண்டுகளில், அநேகமாக அலெக்சாந்திரியாவில், புராணக் கதைப் பகுதிகளின் ஒரு தொகுப்பானது இணைக்கப்பட்டு அலெக்சாந்தர் ரொமான்ஸ் என்ற நூலாக அறியப்பட்டது. இது பிற்காலத்தில் கல்லிசுதனிசு எழுதினார் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டது. எனவே, இது பாசாங்கு-கல்லிசுதனிசு என்று அழைக்கப்படுகிறது. இந்த நூலானது பல்வேறு விரிவாக்கங்களுக்கும், திருத்தங்களுக்கும் பண்டைக்காலம் மற்றும் நடுக்காலம்[290] முழுவதும் உள்ளாக்கப்பட்டது. இதில் பல ஐயப்பாடான கதைகள் உள்ளன.[288] இது பல மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.[291]

பண்டைய மற்றும் நவீனக் கலாச்சாரத்தில்

ஒரு 14ஆம் நூற்றாண்டுப் பைசாந்தியக் கையெழுத்துப் பிரதியில் அலெக்சாந்தர்
காற்றை வெல்லும் அலெக்சாந்தர். ஓவியர் சீன் வாக்குவேலின், லெசு பைத்சு எத் கான்குவசுதாசு தெ'அலெக்சாந்தரே லே கிராண்டே, 1448 - 1449

மகா அலெக்சாந்தரின் சாதனைகளும், மரபுகளும் பல கலாச்சாரங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவரது சொந்த சகாப்தம் முதல் தற்போதைய காலம் வரை, உயர்ந்த மற்றும் பிரபலமான கலாச்சாரம் ஆகிய இரண்டிலுமே அலெக்சாந்தர் குறிப்பிடப்பட்டுள்ளார். குறிப்பாக, அலெக்சாந்தர் ரொமான்ஸ் எனும் நூலானது, பிந்தைய கலாச்சாரங்களில், பாரசீகதிலிருந்து நடுக்கால ஐரோப்பா, நவீன கிரேக்க மொழி வரை, அலெக்சாந்தரின் சித்தரிப்புகளின் மீது ஒரு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.[291]

சா நாமாவின் ஒரு தாள், கஃபாவில் அலெக்சாந்தர் வழிபடுவதைக் காட்டுகிறது. ஆண்டு 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி.

அலெக்சாந்தர் நவீன கிரேக்க நாட்டுப்புறக் கதைகளில் பெரும்பாலும் காணப்படுகிறார். இவர் எந்த ஒரு பண்டைய நபரை விடவும் அதிகமாகக் காணப்படுகிறார்.[292] நவீன கிரேக்க மொழியில், இவரது பெயரின் வழக்காடு வடிவமானது ("ஓ மெகாலெக்சாந்திரோசு") என்பதாகும். இது ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. கரகியோசிசின் நிழல் நாடகங்களில் காணப்படும் ஒரே ஒரு பண்டைய கதாநாயகன் அலெக்சாந்தர் மட்டும் தான்.[292] ஒரு நன்றாக அறியப்பட்ட நீதிக் கதையானது, கிரேக்க மாலுமிகள் மத்தியில் காணப்படுகிறது. இதில் கடலில் வாழும் ஒரு கடற்கன்னி புயலின்போது கப்பலின் முன்பகுதியைப் பிடித்து, கப்பல் மீகானிடம், "மன்னன் அலெக்சாந்தர் உயிருடன் உள்ளாரா?" என்று கேட்கும். இதற்கான சரியான பதிலானது, "அவர் உயிருடன் நலமாக உள்ளார், உலகை ஆண்டு கொண்டிருக்கிறார்!" என்பதாகும். இதற்குப் பிறகு, அக்கடற்கன்னி மறைந்து கடலுக்குள் அமைதியாகி விடும். மற்ற எந்த ஒரு பதிலும், அந்தக் கடற்கன்னியை, ஒரு சினங்கொண்ட கோர்வனாக மாற்றிவிடும். அது கப்பலில் உள்ள அனைவருடன் கப்பலைப் பிடித்து கடலின் அடிப்பகுதிக்கு இழுத்துச் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.[292]

அலெக்சாந்தர் மூழ்கி இயங்கக்கூடிய ஒரு கண்ணாடியில் வைத்து கடலுக்குள் இறக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஒரு 16ஆம் நூற்றாண்டு இசுலாமிய ஓவியம்

இசுலாமுக்கு முந்தைய நடுப் பாரசீக (சரதுசம்) இலக்கியத்தில், அலெக்சாந்தர் குஜாஸ்தக் (பொருள்: "சபிக்கப்பட்டவன்") என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். பாரசீகர்கள் மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர், செங்கிஸ் கானையும் சபிக்கப்பட்டவன் என்று தான் அழைத்தனர். சரதுசக் கோயில்களை அழித்தார் என்றும், சரதுசப் புனித நூல்களை எரித்தார் என்றும் அலெக்சாந்தர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.[293] சன்னி இசுலாமியப் பாரசீகத்தில், அலெக்சாந்தர் ரொமான்ஸின் (பாரசீக மொழி: اسکندرنامهஇசுகாந்தர்நாமா) தாக்கத்தின் கீழ், அலெக்சாந்தர் குறித்த ஒரு நேர்மறையான சித்தரிப்பு தோன்றுகிறது.[294] பிர்தௌசியின் சா நாமாவில் ("மன்னர்களின் நூல்"), அலெக்சாந்தரை நியாயமான வழி வந்த பாரசீக ஷாக்களின் வழித்தோன்றல் எனவும், இளமை நீர் ஊற்றைத் தேடி உலகின் கடைசி எல்லைக்குச் சென்ற ஒரு புராண நபராகவும் குறிப்பிடுகிறது.[295] சா நாமாவில், அலெக்சாந்தரின் முதல் பயணமாக, அவர் மக்காவுக்குச் சென்று கஃபாவில் வழிபடுவதைக் குறிப்பிடுகிறது.[296] இதற்குப் பின் வந்த இசுலாமியக் கலை மற்றும் இலக்கியத்தில், அலெக்சாந்தர் ஒரு ஹஜ் பயணம் (மெக்காவுக்குப் புனிதப் பயணம்) மேற்கொள்வதாகப் பலமுறை சித்தரிக்கப்பட்டுள்ளது.[297] பிற்காலப் பாரசீக எழுத்தாளர்கள், அலெக்சாந்தரைத் தத்துவத்துடன் தொடர்புபடுத்துகிறது. சாக்கிரட்டீசு, பிளேட்டோ மற்றும் அரிசுட்டாட்டில் உள்ளிட்ட தத்துவவாதிகளுடன் சேர்த்து, சாகா வரத்தைத் தேடுபவராகக் குறிப்பிடப்படுகிறார்.[294]

துல்-கர்னைன் (பொருள்: "இரண்டு கொம்புகளை உடையவர்") என்ற நபரைப் பற்றித் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அலெக்சாந்தர் குறித்த பிந்தைய புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது என அறிஞர்கள் நம்புகின்றனர்.[294] இந்தப் பாரம்பரியத்தில், கோக் மகோக் தேசங்களுக்கு எதிராக ஒரு சுவரைக் கட்டிய கதாநாயகனாக அலெக்சாந்தர் குறிப்பிடப்படுகிறார்.[298] பிறகு, அறியப்பட்ட உலகத்திற்கு, உயிர் நீர் மற்றும் சாகா வரத்தைத் தேடிப் பயணித்ததாகவும், இறுதியாக, அலெக்சாந்தர் ஓர் இறை தூதராக மாறினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[298]

அலெக்சாந்தர் ரொமான்ஸின் சிரியாக் மொழிப் பதிப்புகளில் இவர் ஒரு குறைபாடற்ற கிறித்தவ உலகத் துரந்தராகவும், "ஒரே உண்மையான கடவுளை" வழிபட்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[294] எகிப்தில் அலெக்சாந்தர், பாரசீகப் படையெடுப்புக்கு முந்தைய கடைசிப் பார்வோனாகிய இரண்டாம் நெக்தனெபோவின் மகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.[298] தாராவை இவர் தோற்கடித்தது எகிப்து விமோசனம் பெற்றதாகவும், எகிப்தானது இன்னும் எகிப்தியர்களால் தான் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை "நிரூபிப்பதாகவும்" இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.[294]

ஜொசிஃபஸின் கூற்றுப் படி, எருசேலத்திற்குள் அலெக்சாந்தர் நுழைந்தபோது அவருக்குத் தானியேல் நூலானது காட்டப்பட்டது. பாரசீகப் பேரரசை ஒரு வலிமையான கிரேக்க மன்னன் வெல்வான் என்று அதில் விளக்கப்பட்டிருந்தது. எருசேலத்தை அலெக்சாந்தர் எதுவும் செய்யாமல் விட்டதற்குக் காரணமாக இது கூறப்படுகிறது.[299]

இந்தி மற்றும் உருதுவில் உள்ள "சிக்கந்தர்" என்ற பெயரானது அலெக்சாந்தரின் பாரசீகப் பெயரில் இருந்து பெறப்பட்டதாகும். இது வளர்ந்து வரும் ஓர் இளம் திறமைசாலியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குவாரசமியப் பேரரசின் ஷாவான இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவும், தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்சியும் தங்களைத் தாமே "சிக்கந்தர்-இ-சானி" (இரண்டாம் மகா அலெக்சாந்தர்) என்று அழைத்துக் கொண்டனர்.[300] மத்தியகால இந்தியாவில், நடு ஆசியாவின் ஈரானியக் கலாச்சாரப் பகுதியைச் சேர்ந்த துருக்கிய மற்றும் ஆப்கானிய ஆட்சியாளர்கள், அலெக்சாந்தர் குறித்த நேர்மறையான கலாச்சாரத் துணைக் குறிப்புகளை இந்தியத் துணைக்கண்டத்திற்குக் கொண்டு வந்தனர். இது இந்தோ-பாரசீகக் கவிஞர்களில் ஒருவரான அமீர் குஸ்ராவ் எழுதிய சிக்கந்தர்னாமா (அலெக்சாந்தர் ரொமான்ஸ்) மற்றும் முகலாயச் சகாப்தப் பாரசீக சிறு ஓவியங்களில் ஒரு பிரபலமான பாடமாக மகா அலெக்சாந்தரின் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு வேகப்படுத்தி இட்டுச் சென்றது.[301] நடுக்கால ஐரோப்பாவில் மகா அலெக்சாந்தர் ஒன்பது தகுதியாளர்களில் ஓர் உறுப்பினராகப் போற்றப்படுகிறார். பெண்களுக்கு மரியாதை காட்டும் முறையிலான ஆண்களின் பண்பும் பரிவும் கலத்த நடத்தைகள் அனைத்தையும் கொண்ட ஒரு கதாநாயகர்களின் குழுவாக இவர்கள் நம்பப்படுகின்றனர்.[302] பிரெஞ்சுப் புரட்சிப் போர்களின் முதல் இத்தாலியப் படையெடுப்பின்போது, பவுரியேனிடமிருந்து வந்த ஒரு கேள்விக்கு அலெக்சாந்தர் அல்லது சீசரில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நெப்போலியனிடம் கேட்கப்பட்டபோது, அவர் மகா அலெக்சாந்தரை முதல் இடத்தில் வைத்திருப்பதாகக் கூறினார். ஏனெனில், ஆசியாவில் அவர் மேற்கொண்ட படையெடுப்பை இதற்கு முக்கியக் காரணம் என்று கூறினார்.[303]

கிரேக்கத் தொகை நூல்களில், அலெக்சாந்தர் குறித்த பாடல்கள் காணப்படுகின்றன.[304][305]

வரலாறு முழுவதும் அலெக்சாந்தருடன் தொடர்புடைய கலைப் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சொற்பொழிவுகள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களுடன் சேர்த்து, நவீன காலத்தில் இசை மற்றும் திரைப்பட வேலைப்பாடுகளின் பாடமாக அலெக்சாந்தர் இன்னும் தொடர்கிறார். பிரித்தானிய இசைக் குழுவான அயர்ன் மெய்டன் பாடலான 'மகா அலெக்சாந்தர்" இதற்கு ஓர் உதாரணமாகும். அலெக்சாந்தர் குறித்த கருத்துக்களுடன் எடுக்கப்பட்ட சில திரைப்படங்கள்:

  • சிக்கந்தர் (1941), ஓர் இந்தியத் திரைப்படம், இயக்குனர் சோரப் மோதி, இது அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு பற்றிக் கூறியது[306]
  • மகா அலெக்சாந்தர் (1956), எம். ஜி. எம். தயாரித்த ஒரு ஹாலிவுட் திரைப்படம், இதில் ரிச்சர்ட் பர்டன் நடித்திருந்தார்
  • சிக்கந்தர்-இ-ஆசம் (1965), ஓர் இந்தியத் திரைப்படம், இயக்குனர் கேதார் கபூர்
  • அலெக்சாந்தர் (2004), ஒரு ஹாலிவுட் திரைப்படம், இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், கோலின் பார்ரெல் இதில் நடித்திருந்தார்

மற்ற பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அலெக்சாந்தர் குறித்துச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அலெக்சாந்தர் குறித்த புதிய புதினங்கள்:

வலெரியோ மசிமோ மான்பிரெதி எழுதிய "மகா அலெக்சாந்தர்" முப்புதினங்கள். இதில் "த சன் ஆப் த ட்ரீம்", "த சாண்ட் ஆப் அமோன்", மற்றும் "த எண்ட்ஸ் ஆப் த வேர்ல்ட்" ஆகியவை உள்ளன. மேரி ரெனால்டின் முப்புதினங்கள். இதில், "ஃபயர் ஃப்ரம் ஹெவன்", "த பெர்ஷியன் பாய்", மற்றும் "ஃப்யூனெரல் கேம்ஸ்" ஆகியவை உள்ளன.

அயர்லாந்து நாடகாசிரியரான ஆபரே தாமசு டீ வெரே, "மகா அலெக்சாந்தர், ஒரு நாடகப் பாடல்" என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

வரலாற்றாய்வு

சில கல்வெட்டுகள் மற்றும் துணுக்குகள் தவிர, அலெக்சாந்தரை நேரில் அறிந்திருந்த மக்களால் எழுதப்பட்ட நூல்கள் அல்லது அலெக்சாந்தரிடம் பணியாற்றிய மனிதர்களிடம் சேகரித்த தகவல்கள் அனைத்தும் தற்போது தொலைந்து விட்டது.[18] அலெக்சாந்தரின் வாழ்க்கை குறித்து எழுதிய சமகாலத்தவர்களாக, இவரது படையெடுப்பு வரலாற்றாளரான கல்லிசுதனிசு, அலெக்சாந்தரின் தளபதிகளான தாலமி மற்றும் நீர்ச்சுசு, படையெடுப்புகளி ன்போது ஒரு துணை அதிகாரியாக இருந்த அரிசுதோபுலுசு, அலெக்சாந்தரின் தலைமைக் கப்பல் ஓட்டுனரான ஒனேசிக்ரிதுசு ஆகியோர் திகழ்கின்றனர். அவர்களது அனைத்து நூல்களும் தொலைந்துவிட்டன. ஆனால், அவர்களது உண்மையான நூல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிற்கால நூல்கள் எஞ்சியுள்ளன. இதில், முக்காலத்தைச் சேர்ந்தது தியோதோருசு சிகுலுசின் (கி. மு. 1ஆம் நூற்றாண்டு) நூல், இதற்குப் பிறகு குயிந்தசு கர்தியசு உரூபுசு (கி. பி. 1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை), அர்ரியன் (கி. பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 2ஆம் நூற்றாண்டு வரை), சுயசரிதையாளர் புளூட்டாக் (கி. பி. 1 முதல் 2ஆம் நூற்றாண்டு வரை) மற்றும் இறுதியாக ஜஸ்டின் ஆகியோர் நூல்களை எழுதியுள்ளனர். ஜஸ்டினின் நூல் பிற்கால 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூட இருக்கக்கூடிய பிற்கால நூலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[18] இவை அனைத்திலும் அர்ரியனின் நூலானது பொதுவாக அனைவராலும் மிகுந்த நம்பகத்தன்மை உடையதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அவர் தாலமி மற்றும் அரிசுதோபுலுசின் நூல்களைப் பயன்படுத்தித் தன் நூலை எழுதியிருந்தார். இதற்குப் பிறகு அதிக நம்பகத்தன்மை உடையதாக தியோதோருசின் நூல் குறிப்பிடப்படுகிறது.[18]

அலெக்சாந்தரின் படைத்தலைவர்கள்

  1. செலூக்கஸ் நிக்காத்தர்
  2. தாலமி சோத்தர்
  3. லிசிமச்சூஸ்
  4. ஆண்டிகோணஸ்
  5. சசாண்டர்

அலெக்சாந்தருக்குப் பின்

தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் செலூக்கியப் பேரரசு, தாலமைக் பேரரசு, சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் என ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாந்தரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகள்

அலெக்சாந்தரின் மறைவிற்குப் பின் நான்காம் அலெக்சாந்தர் கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார்.கிமு 311இல் நடந்த முதல் வாரிசுரிமைப் போரின் முடிவில் எலனியக் காலத்தில் அலெக்சாந்தரின் நண்பரும், படைத்தலைவருமான செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா பகுதிகளுக்கு கிமு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். ஆப்பிரிக்காவின் பண்டைய எகிப்து பகுதியை தாலமி சோத்தர் எனும் படைத்தலைவர் கிமு 305ல் தாலமைக் பேரரசை நிறுவினார். அலெக்சாந்தரின் வேறு படைத்தலைவர்களான லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் மற்றும் சசாண்டர் ஆகியவர்கள் கிரேக்கப் பேரரசின் ஐரோப்பிய பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க

உசாத்துணை

குறிப்புகள்

மேற்கோள்கள்

பிழை காட்டு: <ref> tag with name "AelXII7" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "AVII14" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "DSXVII77" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "DSXVII114" defined in <references> is not used in prior text.

பிழை காட்டு: <ref> tag with name "P72" defined in <references> is not used in prior text.

ஆதாரங்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

பேரரசர் அலெக்சாந்தர்
அர்கீது அரசமரபு
பிறப்பு: கிமு. 356 இறப்பு: கிமு. 323
அரச பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் பிலிப்
மாசிடோனின் மன்னர்
கிமு. 336–323
பின்னர்
நான்காம் அலெக்சாந்தர்
முன்னர்
மூன்றாம் தாரா
பாரசீகப் பேரரசர்
கி. மு. 330–323
எகிப்தின் பார்வோன்
கி. மு. 332–323
புதிய உருவாக்கம்ஆசியாவின் கோமகன்
கி. மு. 331–323
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை