உடை

ஆள் பாதி ஆடைப் பாதி என்பர்.

மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை () (clothing, clothes, attire) எனலாம். சில வேளைகளில், காலணிகளும், அணிகலன்களும் உடை என வகைப்படுத்தப்படுவது உண்டு. உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய இரண்டும் உணவு, உறையுள் என்பன.உடை உடுக்கப்படுவதற்கு தொழிற்பாட்டுக் காரணிகளும், சமூகக் காரணிகளும் உண்டு. உடை உடலை வெளிச் சூழலில் இருந்து பாதுகாக்கின்றது. வெளி மாசுகளில் இருந்தும், காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றில் இருந்தும் உடலைக் காப்பாற்றுவதில் உடைக்கு முக்கிய பங்கு உண்டு.கொசு போன்ற பூச்சிக் கடிகளில் இருந்தும், கேடு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களில் இருந்தும் உடை உடலை காக்கின்றது. கரடுமுரடான மேற்பரப்புகளால் உடலில் காயங்கள் ஏற்படாதிருக்க, தோலுக்கும் அத்தகைய மேற்பரப்புக்களுக்கும் இடையே ஒரு தடுப்பாகவும் உடை செயல்படுகின்றது. கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதையும் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் உடை, புறவூதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்தும் மனிதருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது. தீ, ஆயுதங்கள் போன்றவற்றில் இருந்தும், கதிர்வீச்சு போன்றவற்றிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பதற்காக சிறப்பு உடைகளும் உள்ளன.

உடையின் வரலாறு

உடையின் தோற்றம்

உடை அணியும் வழக்கம் எப்போது தோன்றியது என்பதை அறிந்து கொள்வது கடினமானது. எனினும் மறைமுகமான வழிகளில், எடுத்துக்காட்டாகப் பேன் வகைகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம், மனிதர் ஏறத்தாழ 107,000 ஆண்டுகளுக்கு முன் உடை அணியத் தொடங்கியிருக்கலாம் என்கின்ற கருத்தைச் சிலர் முன்வைத்துள்ளனர்,[1][2][3]

செயற்பாடுகள்

குளிர்கால உடை அணிந்துள்ள குழந்தை.

உடையின் முதன்மைச் செயற்பாடு, அதை அணிபவருக்கு உடல் வசதியைக் கொடுப்பது ஆகும். வெப்பமான காலநிலைகளில் சூரிய வெப்பத்திலிருந்தும், காற்றில் இருந்தும் உடலைப் பாதுகாக்க வேண்டும். குளிரான காலநிலைகளில் உடையின் வெப்பக் காப்பு இயல்பு முக்கியமானது. இதன்மூலம், உடல், வெப்பத்தைச் சூழலுக்கு இழப்பதை உடை தடுக்க முடியும். உறையுள் (வீடு), உடையின் தேவையைப் பெருமளவு குறைக்கிறது. இதனாலேயே வீட்டுக்குள் நுழையும்போது, மேலாடை, தொப்பி, கையுறைகள். காலுறைகள், காலணிகள் போன்றவற்றைக் கழற்றிவிட முடிகிறது. பருவகாலங்களையும், புவியியல் அமைவிடங்களையும் பொறுத்து உடையின் தன்மைகள் மாறுகின்றன. சூடான பருவங்களிலும், வெப்பப் பகுதிகளிலும் மெல்லியனவும், குறைந்த அடுக்குகளைக் கொண்டனவுமான உடைகள் பயன்படுகின்றன.

உடை பல வகையான சமூக, பண்பாட்டுச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. தனிமனித வேறுபாடுகள், தொழில் அடைப்படையிலான வேறுபாடுகள், பால் அடிப்படையிலான வேறுபாடுகள், சமூகத் தகுதி, அதிகார நிலை என்பவற்றைப் பொறுத்து வெவ்வேறு வகையான உடைகள் அணியப்படுகின்றன.[4] சமுதாயங்களில் உடை தொடர்பான நெறிமுறைகள் அடக்கம், வெட்கம், சமயம், பால், சமூகத் தகுதி போன்ற அம்சங்கள் குறித்த அச்சமூகத்தின் உலக நோக்கின் வெளிப்பாடாக அமைகின்றன. இவை தவிர, அலங்கார அணியாகவும், தனிப்பட்ட ரசனைகளுக்காகவும் உடைகளை அணிகின்றனர். இவையும் உடைகள் அணிவதன் முக்கிய நோக்கங்களுள் அடங்குகின்றன.

உடையற்ற நிர்வாணமான மனிதன் வெட்கம் அடைவதாகவும், உடை வெட்கத்தை நீக்குவதாகவும் கருதப்படுகின்றது. இந்தக் கருத்தை கிறிஸ்தவ தொன்மவியலில் காணலாம். ஏவாள் கடவுளின் சொல்லைக் கேளாமல் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்டதால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வெட்கம் வந்து தமது பாலுறுப்புகளை இலைகளால் மறைத்தனர் என்று கிறித்தவ வேதம் கூறுகிறது. பாலியல் உறுப்புக்களை மறைப்பது நற்பழக்கமாக அனேக சமூகங்களினால் கருதப்படுகின்றது. உடை பாலியல் நோக்கில் மனிதன் தூண்டப்படாமல் இருப்பதற்கு உதவுவதாகவும் கருதப்படுகின்றது. சில முஸ்லீம் பெண்கள் முகம் உட்பட உடலை மறைத்து உடையணிவதற்கு ஆண்களை பாலியல் உணர்ச்சிக்கு உந்தாமல் தடுப்பதற்கே எனப்படுகின்றது.

சூழல் இடர்களிலிருந்து காத்துக்கொள்வதற்குத் தேவையான உடைகளை உருவாக்குவதில் மனிதர் தமது கண்டுபிடிப்புத் திறனைப் பெருமளவில் வெளிப்படுத்தி உள்ளனர். விண்வெளி உடை, காற்றுப்பதன உடை, போர்க் கவசம், நீர்மூழ்கு உடை, நீச்சல் உடை, உயர் கட்புலப்பாட்டு உடை போன்ற பல்வேறு வகையான உடைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

ஆய்வுகள்

உடைகள், அவற்றின் செயற்படுதன்மை என்பவை தொடர்பான கட்டுரைகள் 19 நூற்றாண்டில் இருந்தே காணப்பட்டாலும்,[5] உளம்சார் சமூகவியல், உடற்றொழிலியல், மேலும் இது போன்ற துறைகளில் அறிவியல் அடைப்படையிலான ஆய்வுகள் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்தே தொடங்குகின்றன. 1930 ஆம் ஆண்டில் வெளியான புளூகெல் என்பவரின் உடை உளவியல் (Psychology of Clothes),[4] 1949 ஆம் ஆண்டில் வெளியான நியூபர்க்கின் வெப்பச்சீரமைப்பு உடற்றொழிலியலும் உடை அறிவியலும் (Physiology of Heat Regulation and The Science of Clothing)[6] போன்ற நூல்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். 1968 ஆம் ஆண்டளவில், சூழல்சார் உடற்றொழிலியல் துறை பெருமளவு முன்னேற்றம் கண்டு விரிவடைந்த போதும், சூழல்சார் உடற்றொழிலியல் தொடர்பிலான உடை அறிவியல் போதுமான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை.[7] அதன் பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, இது குறித்த அறிவுத் தளமும் வளர்ந்துள்ளது. எனினும், அடிப்படையான கருத்துருக்கள் மாற்றம் அடையவில்லை. உண்மையில், வெப்பச்சீரமைப்பு உடைகளை உருவாக்க முயல்பவர்கள் உட்படத் தற்கால நூலாசிரியர்கள் பலரும் இன்றும் நியூபர்க்கின் நூலையே மேற்கோள் காட்டுகின்றனர்.[8]

பண்பாட்டு அம்சங்கள்

பால் வேறுபாடு

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உட்துறைச் செயலர் கொண்டொலீசா ரைசும், துருக்கியின் சனாதிபதி அப்துல்லா குல்லும் மேல் நாட்டுப் பாணி வணிக உடையில் காணப்படுகின்றனர்.

பெரும்பாலான சமூகங்களில், உடைகளில் பால் வேறுபாடு காட்டுவது உகந்ததாகக் கருதப்படுகிறது. பாணி, நிறம், துணிவகை என்பவற்றில் இவ்வேறுபாடு வெளிப்படுகின்றது. மேலேநாட்டுச் சமூகங்களில், பாவாடை, குதி உயர்ந்த காலணிகள் போன்றவை பெண்களுக்கு மட்டுமே உரியனவாகக் கருதப்படுகின்றன. அதுபோல் ஆண்களுக்கு மட்டுமே உரியதாகக் கழுத்துப் பட்டியைக் கூறலாம். இச் சமூகங்களில் ஆண்களுக்கான உடைகள் நடைமுறைக்கு உகந்தவையாகவும், பல்வேறுபட்ட நிலைமைகளில் சிறப்பாகச் செயற்படக் கூடியனவாகவும் உள்ள அதேவேளை, பெண்களுக்கான உடைகள் பல வகைகளாகப் பெருமளவு பாணிகளில் கிடைக்கின்றன. பல வேளைகளில், ஆண்கள் திறந்த மார்புடன் இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆண்களுக்கான மரபுவழி மேல்நாட்டு உடைகளைப் பெண்கள் அணிவது தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், பெண்கள் உடைகளை ஆண்கள் அணிவது வழக்கம் இல்லை.

தற்காலத் தமிழர், ஆண்களும் பெண்களும், மேல்நாட்டு உடைகளையும் அணிகின்றனர். அவ்வாறான நிலைமைகளில் மேற்குறித்தவை தமிழருக்கும் பொருந்துகின்றன. ஆனாலும் மரபு வழி உடைகளைப் பொறுத்தவரை ஆண், பெண் பாலாரிடையே பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. சேலை பெண்களுக்கு உரியது, ஆண்கள் வேட்டி உடுத்துவர். ஒரு காலத்தில் ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணிவதில்லை எனத்தெரிகிறது எனினும், தற்காலத்தில் ஆண்கள் மட்டுமே மேற்சட்டை அணியாமல் இருப்பது உண்டு. நாட்டுப்புறங்களில் பொது இடங்களில் பெருமளவு ஆண்கள் மேற்சட்டை அணியாமல் இருப்பதைக் காணலாம். உண்மையில், பல இந்துக் கோயில்களில் ஆண்கள் மேற்சட்டை அணிந்து செல்வதற்குத் தடை உள்ளது. மரபு வழி உடைகள் தற்கால நிலைமைகளில் வசதிக் குறைவானவை என்பதால், நகரப் பகுதிகளில் வசதியான பிற பண்பாட்டினர் உடைகளை அணிகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் மேல்நாட்டு உடைகளுக்கு மாறுகின்றனர். பெண்கள் மேல்நாட்டு உடைகளுடன், சுடிதார் போன்ற பிற கீழ்நாட்டு உடைகளையும் அணிகின்றனர். எனினும், மரபுவழிச் சேலைகள் இன்னும் தமிழ்ப் பெண்களிடையே பெருமளவில் புழக்கத்தில் உள்ளன.

பெரும்பாலான பண்பாடுகளில் பெண்கள் அணியும் உடைகள் ஆண்களுடையவற்றை விடக் கவர்ச்சியாக இருப்பது வழக்கம். பெண்களுடைய உடைகளுக்கு நிறம், கோலம், பாங்கு போன்ற அம்சங்கள் தொடர்பில் தேர்வுகளுக்கு எல்லை கிடையாது. ஆனால் ஆண்கள் உடைகளுக்கு மேற்படி அம்சங்களில் தேர்வு அதிகம் இல்லை.

சில சமூகங்களில் பெரும்பாலும் பெண்கள் உடை அணிவது குறித்து இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இசுலாம் மதம் சார்ந்த சமூகங்களில் பெண்கள் அணியும் உடை தொடர்பாகக் கட்டுப்பாடுகள் உண்டு. அடக்கமாக உடை அணிய வேண்டும் என்பதே அடிப்படையான நோக்கம் எனினும், வெவ்வேறு இசுலாம் சமூகக் குழுக்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில நாடுகளில் இசுலாம் மதப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது உடலின் எந்தப் பகுதியுமே வெளியே தெரியாமல் கருநிற உடையால் மூடிக் கொள்கின்றனர்.

சமூகத் தகுதி

ஆலிம் கானின் உடை, அவரது செல்வம், தகுதி, அதிகாரம் என்பவை குறித்த ஒரு சமூகச் செய்தியைத் தருகிறது.

சில சமூகங்களில், உடைகள், சமூகத்தில் ஒருவருடைய தரநிலையையோ, சமூகத் தகுதியையோ குறிக்கின்றன. பண்டை உரோமில், செனட்டர்கள் மட்டுமே தைரியன் ஊதா எனப்படும் சாயத்தினால் சாயமூட்டப்பட்ட உடைகளை அணிய முடியும். அவாய் சமூகத்தில் உயர்நிலைத் தலைவர்கள் மட்டுமே இறகு உடையையும், செதுக்கிய திமிங்கிலப்பல் அணியையும் அணியலாம். இந்தியாவின் தற்போதைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் திருவிதாங்கூர் அரசில் வரி செலுத்தினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலாடை அணிவதற்குத் தகுதி உடையவர்கள். சீனக் குடியரசு நிறுவப்படுவதற்கு முந்திய சீனாவில், பேரரசர் மட்டுமே மஞ்சள் நிற உடை அணிய முடியும். மக்கள் என்னென்ன உடைகளை அணியலாம் என்பது தொடர்பில் ஆக்கப்பட்ட சட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகளை மனித வரலாறு முழுவதிலும் காணலாம். தற்காலச் சமூகமும் உள் அடங்கலாக, மேற்படி சட்டங்கள் இல்லாத சமூகங்களில், கீழ்நிலைகளில் உள்ளவர்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்த உடைகளை அணிவது சமூகத் தகுதியைக் குறிப்பதாக அமைகின்றது. அத்துடன், இணைநிலையினர் அழுத்தமும் உடைத் தெரிவில் செல்வாக்குச் செலுத்துகிறது.

சமயம்

வெண்ணிற உடையும் தொப்பியும் அணிந்து தொழுகையில் ஈடுபட்டிருக்கும் இசுலாமியர் ஒருவர்.

சமயம் சார்ந்த உடைகளைத் தொழில் சார்ந்த உடைகளின் ஒரு சிறப்பு வகையாகக் கொள்ள முடியும். சில வேளைகளில் இந்த உடைகளைச் சமயக் கிரியைகளை நிகழ்த்தும்போது மட்டுமே அணிகின்றனர். எனினும், சிறப்புத் தகுதியை வெளிப்படுத்த அன்றாடம் இத்தகைய உடைகளை அணிவதும் உண்டு.

சமணம் உட்பட்ட சில மதத்தவர் சமயக் கிரியைகளை நிகழ்த்தும்போது தைக்கப்படாத உடைகளையே உடுத்துகின்றனர். தைக்கப்படாத உடை, கையில் உள்ள பணி தொடர்பில், ஒருமனப்பட்டதும் முழுமையானதுமான பக்தியைக் குறிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். சில இந்துக் கோயில்களிலும், பக்தர்கள் தைத்த உடைகளான சுடிதார், காற்சட்டை போன்ற உடைகள் அணிந்து உட்செல்வதை அனுமதிப்பது இல்லை. தைக்கப்படாத சேலை, வேட்டி போன்றவற்றை மட்டுமே உடுத்த முடியும். இந்துசமயத் துறவிகளும், புத்த பிக்குகளும் தைக்கப்படாத உடைகளையே உடுத்துகின்றனர். இந்துத் துறவிகளின் உடை காவி நிறத்தில் இருப்பது வழக்கம். தற்காலத்தில் இந்துத் துறவிகள் பலர் இக் காவி நிறத்தில் வேட்டியும் தைக்கப்பட்ட மேலாடையும் அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இலங்கையில் புத்த பிக்குகளின் உடை மஞ்சள் நிறமானது.

சீக்கியர்கள் தமது சமயத் தேவையின் ஒரு பகுதியாகத் தலையில் தலைப்பாகை அணிகின்றனர். முசுலிம்களும் தொழுகையின் போது தொப்பி அணிகின்றனர் அல்லது தலையை வேறு விதமாக மூடிக் கொள்கின்றனர். ஆனால், இந்துக் கோயில்கள் சிலவற்றில், குறிப்பாகத் தென்னிந்தியக் கோயில்களில் தொப்பியோ முக்காடோ அணிந்து வழிபடுவது குற்றமாகக் கருதப்படுகிறது.

சீருடைகள்

தொழில்சார் உடைகள்

மனித வரலாற்றில் நீண்ட காலமாகவே சில குறிப்பிட்ட தொழில்களைச் செய்பவர்கள் இன்னின்ன மாதிரியாக உடை அணிய வேண்டும் என்ற ஏற்பாடு இருந்துள்ளது. நாட்டுக்கு நாடு, சமூகத்துக்குச் சமூகம் வேறுபாடுகள் இருந்தாலும், சமயம் சார்ந்த கிரியைகளை நடத்துவோர், போர்வீரர் போன்றோர் ஒரு குறிப்பிட்ட விதமாகவே உடைகளை அணிந்து வந்துள்ளனர். தமிழ் நாட்டிலும், சிற்பிகள், பூசகர்கள், வேறும் பிற தொழில்களைப் புரிவோர் எவ்வாறு உடை அணியவேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்கள் அத்தகைய தொழில் சார்ந்த நூல்களில் காணப்படுகின்றன.

தற்காலத்தில், படைத்துறை, காவல்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு அவரவர் தரநிலையைப் பொறுத்துச் சீருடைகள் உள்ளன. இவற்றை விட வானூர்திப் பணியாளர், தொழில்நுட்பப் பணியினர்; சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், அங்காடிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணி புரிவோர், பேருந்துப் பணியாளர் எனப் பலவகைத் தொழில் புரிவோருக்கும் சீருடைகள் உள்ளன. மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்றோரும் தமது வழமையான உடைகளுக்கு மேல் சீரான மேலாடை ஒன்றை அணிகின்றனர். பல வேளைகளில் இத்தகைய சீருடைகள் அரசினாலோ, உள்ளூராட்சிச் சபைகளினாலோ கட்டாயம் ஆக்கப்படுகின்றன..

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உடை&oldid=3576693" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை