உரையாடல்

மனிதர்கள் பேசிக் கொள்வதை உரையாடல் என்கிறோம்.

உரையாடல் (conversation) என்பது ஒருவர் மற்றவருடன் கலந்து பேசிக் (உரை) கொள்வதைக் குறிக்கும். உரையாடலின் போது ஒருவருக்கொருவர் அளவளாவி, பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். எழுத்து வழியாக செய்திப் பரிமாற்றம் நடந்தால், அதுவும் உரையாடல் என்றே வழங்கும். உரையாடல் என்பது குமுகாயத்தில் ஒரு இன்றியமையாத திறனாகக் கருதப் படுகின்றது. ஒரு மொழியைக் கற்கும் போது, அதில் உரையாடல் செய்வது எவ்வாறு என்பதையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.

உரையாடல் பகுப்பாய்வு என்பது சமூகவியலில் ஒரு ஆராய்ச்சிப் பிரிவாகும். இதில், மனிதர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொள்கின்றனர், அந்த அளவளாவுதல் அமைப்பு, அமைப்பாண்மை ஆகியன எவ்வாறு உள்ளன என்பன பற்றி விரிவாக அலசப் படுகின்றது.

வரையறை

ஆசிரியர் மாணவி உரையாடல், சைமர் கல்லூரி

உரையாடல் என்றால் என்ன என்று தெளிவான விளக்கங்கள் எதுவுமில்லை. உரையாடலில் குறைந்தது இரண்டு பேர் பேசிக் கொள்வார்கள் என்று மட்டும் கூறலாம்.[1] ஆனால், எது உரையாடல் இல்லை என்று கூற முடியும். வணக்கம் சொல்லிக் கொள்வது, மேல் நிலையில் உள்ளவர்கள் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்த்து இடும் கட்டளைகள் ஆகியன உரையாடல்கள் ஆகா.[2] மிகக் குறுகிய தலைப்புகளைப் பற்றிப் பேசுவதும் உரையாடல் ஆகாது.[3] தார்ன்பரி என்பவர் உரையாடலைப் பற்றி, "உரையாடல் என்பது மனிதர்கள் செய்கின்ற ஒரு பேச்சுத் தொழில் (வினை). தங்களுக்குள் ஒரு உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ள இந்த வினையைச் செய்கின்றனர். இது முறை சாரா, செவ்வொழுங்கான வினை.[4] உரையாடலின் போது, உரையாடுபவர்கள் எந்த சட்ட முறைகளையும் பயன் படுத்துவதில்லை. பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒப்பான வாய்ப்பு கிடைக்கிறது" என்று கூறுகிறார்.

உரையாடல் எந்த சட்ட முறைகளையும் பின் பற்றுவதில்லை என்று சொன்ன போதிலும், நடத்தை நெறி கருதி, அங்கங்கே உள்ள பண்பாட்டு முறைகளைப் பின் பற்றியே ஆக வேண்டி இருக்கும். உரையாடல் ஒரு கூட்டு முயற்சியாக இருப்பதால், அது தொடர்பான சட்ட முறைகள் இன்றியமையாதவையாக ஆகின்றன. இந்த சட்ட முறைகளை மீறும் போது, உரையாடல் தொடர முடியாமற் போகும். சட்ட முறைகளை மீறாமல் இருக்கும் வரை, உரையாடல் தொடர்ந்து நடக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கலாம். ஒரு சில நேரங்களில், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள, உரையாடலே உகமமான பரிமாற்றக் கருவியாகும். ஆனால், உரையாடலில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பேசுவது அனைத்தும் நினைவில் இருந்து மறைந்து கொண்டே போய்விடும்; அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்து பார்ப்பது கடினம். இது போன்ற தேவைகள் எதேனும் இருப்பின், எழுத்து வழி உரையாடல் செய்வது நல்லது. கருத்துப் பரிமாற்றம் விரைவாக நடக்க வேண்டுமாயின், பேச்சு வழி உரையாடல் செய்வது சரியாக இருக்கும்.

வகைப்பாடு

உரையாடலைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்.

கதைத்தல்

கதைத்தல் என்பது உரையாடலில் ஒரு பகுதி ஆகும். கதைத்தலின்போது, முரண்பாடுகள் ஏதேனும் தோன்றுமாயின், உடனே பேசப்படும் கருப்பொருள் மாறுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு கதைத்தலில் கடவுள் நம்பிக்கை என்பது கருப்பொருளாக இருந்தால், ஒருவர் தான் கூறுவதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது இல்லை.[5] அப்படிச் செய்தால் அது கதைத்தல் ஆகாது.

கதைத்தலின் கருப்பொருள்

கருப்பொருளை வைத்துக் கதைத்தலைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

  • தற்சார்பு கருப்பொருள்

கதைத்தலில் ஒருவர் தம்முடைய சொந்த கருத்தைக் கருப்பொருளாக முன் வைப்பார். இதனால், அவருக்கு அந்தப் பொருளைப் பற்றிப் புரிதலும் தெளிவும் பிறக்க வாய்ப்பு இருக்கின்றது.

  • மெய்ச்சார்பான உண்மைக் கருப்பொருள்

இது போன்ற கருப்பொருட்கள் கதைத்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வலிமை பெற்றது.

  • மற்றவர்களைப் பற்றிய கருப்பொருள்

இது மற்றவர்களைப் பற்றி (குறிப்பாக கதைத்தலில் பங்கு கொள்ள வர இயலாதவர்களைப் பற்றி) பேசுவதைக் குறிக்கும். அவர்களைப் பற்றிய குறை நிறைகளை அவர்கள் இல்லாது போது உரையாடுவது, வெட்டிப் பேச்சு (‘’கிசு கிசு’’) போன்றவை இதில் அடங்கும்.

  • தன்னைப் பற்றிய கருப்பொருள்

இதில் ஒருவர் தன்னுடைய நிறை குறைகளைக் கருப்பொருளாக வைத்துக் கதைத்தலைத் தொடங்குவார். மற்றவர்கள் கவனம் தன் மீது திரும்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும், இதைச் செய்யலாம்.

கதைத்தல் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல கருப்பொருட்களைக் கொண்டதாக இருக்கின்றது. அதனால், ஒரு கதைத்தல் எந்த பிரிவைச் சார்ந்ததென்று கூற முடியாது.

உரையாடலின் கூறுகள்

உரையாடலில் பல கூறுகள் உள்ளன.

ஆண்கள், பெண்கள்

பொதுவாகவே, பெண்கள் அதிகம் பேசுபவர்கள் என்ற எண்ணம் பலருக்கு இருக்கின்றது. ஆனால், மத்தாயசு என்பவரின் ஆய்வின் படி, உரையாடலில் (அமெரிக்காவில்) ஆண்களும் பெண்களும் ஒரே அளவான சொற்களையே பயன் படுத்துகின்றனர் என்று தெரிகின்றது.[6] அதாவது, இரு பாலரிலும், ஒவ்வொருவரும் நாளென்றுக்கு சராசரி 16,000 சொற்கள் பயன் படுத்துகின்றனர்.

அயலாருடன் உரையாடல்

அயலவருடன் (strangers) பேசும்போது ஒருவர் தம் சொந்த விசயங்களை (confidential matter) மற்றவர்களிடத்தில் பெரும்பாலும் கூறுவதில்லை. ஆனால், ஒரு பேருந்து, தொடர் வண்டி, வானூர்தி போன்றவற்றில் செல்லும்போது பக்கத்தில் இருப்பவரிடம், ஒரு சில நேரங்களில், நம் சொந்த விசயங்கள் பலவற்றைப் பரிமாறிக் கொள்கிறோம். ஒரு முறை, ஒருவர், தன் அருகில் அமர்ந்திருந்த மன நல மருத்துவரிடம், தமக்கு ஏதேனும் பயன் கிடைக்குமென ஒரு உரையாடலைத் தொடங்கி, தன் சொந்த விசயங்கள் பலவற்றை அவரிடம் கூறி இருக்கிறார்.[7]

தான்-முதல் உரையாடல்

குமுகாயவியல் துறையில், சார்லசு தெர்பர் என்னும் ஆய்வாளர் தம் நூலில், (The Pursuit of Attention: Power and Ego in Everyday Life) தான்-முதல் உரையாடல் பற்றி முன்வைக்கும் கருத்துகள்: தான்-முதல் என்பது தன்னைத்தானே விரும்பி எதிலும் தன்னை முன் வைப்பது. இது போன்ற இயல்புகள் அமெரிக்காவில் மிகுதியாகவும் காணப்பட காரணம், அங்கே ஒருவருக்கு மற்றவர்களிடத்தில் இருந்து கிடைக்கும் துணை, ஆதரவு ஆகியன குறைவு என்று தெர்பர் கருதுகிறார். எனவே, ஒவ்வொருவரும் மற்றவர்கள் எதிரே தான் எவ்வளவு சிறந்தவன் என்று வலிந்து காட்டிக்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு உரையாடலாக இருந்தால், அதன் கருப் பொருளைத் தன் பக்கம் இழுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில், மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க, தான்-முதல் உரையாடல் என்பதை ஒரு கருவியாகப் பலர் பயன் படுத்துகின்றனர் என்பது தெர்பரின் கருத்து. இது நண்பர்கள் நடுவிலும், குடும்பங்களிலும் நடப்பதைக் காணலாம் என்கிறார் தெர்பர்.

செயற்கை அறிவுத்திறன் உரையாடல்

செயற்கை அறிவுத்திறன் என்பது கணிப்பொறிகளை, செயற்கை முறையில், மனிதர்களைப் போல எவ்வாறு அறிவுத் திறன் உள்ளவையாக ஆக்குவது என்பதைப் பற்றி ஆராயும் ஒரு பொறியியல் பிரிவு ஆகும். ஒரு கணிப்பொறி ஒரு மனிதருடன் மற்றொரு மனிதரைப் போலவே உரையாடும் திறன் இருக்குமானால், அந்தக் கணிப்பொறி மனிதனுக்கு இணையான அறிவு உள்ளதாகக் கருதப்படும். இங்கு, அறிவுத் திறனை அளப்பதற்கு உரையாடல் திறனே ஒரு அளவுகோலாக மொழியப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

தன்னோடு-தான் உரையாடல்

ஒருவர் தன்னோடு உரையாடிக் கொள்வது ஒரு சில நேரங்களில் நன்மையைத் தரும். இதனால், ஒருவர் தன் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளைக் காண்பதுடன், தன்னைச் சூழ்ந்துள்ள துயரம் தரும் ‘’மயான’’ அமைதியையும் கலைக்க முடியும் என்றும் கருதப்படுகின்றது.

ஊடகங்களில் உரையாடல்

உரையாடல்கள் ஊடகங்களில் மிகப் பேரளவில் இன்று நடை பெறுகின்றன. உரையாடல்களின் உட்கருத்துக்கள், உரையாடுவதற்கான நேரம், ஆகியன ஏற்கனவே குறிப்பிடப் பட்டு, பிறகு உரையாடல்கள் நிகழ்த்தப் படுகின்றன. புதிய தலை முறை, விஜய் டி.வி. , ஆகிய தொலைக் காட்சி அலை வரிசைகள் பல உரையாடல்களை நடத்தி வருகின்றன.

படைப்புகள்

ஆர்னால்டு லாகோஸ்கி (Arnold Lakhovsky), உரையாடல் (The Conversation (circa 1935))

உரையாடலைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதப் பட்ட ஒரு சில நூல்கள் கீழே தரப் பட்டுள்ளன.

  • மில்டன் ரைட் (Milton Wright) எழுதிய The Art of Conversation (உரையாடற் கலை, 1936) என்பது ஒரு நூல். இந்த நூலில், அரசியல், சமயம், வணிகம், போன்ற தலைப்புக்களில் நடக்கும் உரையாடல்களைப் பற்றி நன்கு பேசப் பட்டுள்ளது. உரையாடலில் பங்கு பெருவோர் தங்கள் கருத்துக்களைக் கூறுவதோடு மட்டும் நிற்காமல், தங்கள் உணர்வுகளையும் காட்டி உரையாடலில் ஒன்றி விடுகின்றனர், என்கிறார் நூலாசிரியர் ரைட் .
  • கெர்ரி பேட்டர்சன், சோசப் கிரென்னி, அல் சுவிட்சுலர், ரான் மாக்மிலன் (Kerry Patterson, Joseph Grenny, Al Switzler, and Ron McMillan ) ஆகியோர் எழுதிய இரு புத்தகங்கள் பலராலும் அறியப்பட்டவை. ஒன்று, Crucial Conversations: Tools for Talking When Stakes are High, McGraw-Hill, 2002, என்பது. உரையாடலின் போது, கருத்துக்கள் ஒத்துப் போக வில்லை என்றால் என்ன செய்வது; அலுவலகத்திலும், வீட்டிலும் உரையாடலை எவ்வாறு கட்டுக்குள் வைத்துக் கொள்வது, என்பன போன்ற கருத்துக்களை இந்த நூல் அலசிப் பார்க்கின்றது. இந்த ஆசிரியர்கள் எழுதிய மற்றுமொரு நூல் Crucial Confrontations: Tools for Resolving Broken Promises, Violated Expectations, and Bad Behavior, McGraw-Hill, 2005 என்பது. இதில், உரையாடலின் போது, தான் கூறிய ஒன்றுக்கு எப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டவராக (accountable) இருந்து உரையாடலை நடத்தி முடிப்பது என்பதை விளக்குகின்றது.
  • சார்லசு பிலாட்பெர்க் எழுதிய இரு புத்தகங்கள்: ஒன்று: From Pluralist to Patriotic Politics: Putting Practice First, Oxford and New York: Oxford University Press, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-829688-6. மற்றொன்று, Shall We Dance? A Patriotic Politics for Canada, Montreal and Kingston: McGill-Queen's University Press, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7735-2596-3. அரசியலில் கருத்து முரண்பாடுகள் தோன்றும் போது, ஒப்பந்தப் பேச்சு (negotiation) பேசுவதை விட, உரையாடல் நன்மை பயக்கும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
  • இசுடீபன் மில்லர் (Stephen Miller) எழுதிய புத்தகம்: Conversation: A History of a Declining Art. பண்டைக் காலத்தில் கிரேக்கர்கள் தொடக்கி, இன்றுள்ள தேநீர் விடுதிகள், சொல்லாடல் காட்சிகள் (talk shows) ஆகியன முடிய, கலந்துரையாடல்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்று விவரிக்கின்றது.

உரையாடலின் நன்மைகள்

  • தன்னை மற்றவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
  • கருப்பொருளை நன்கு தெரிந்து கொள்ளல்.
  • கூடிய தன்னம்பிக்கை.
  • பணி செய்யும் அலுவலகத்தில் உரையாடலினால் வரும் பயன்.
  • தன்னைப் பற்றிய அக்கறை கொள்ளல்.
  • மற்றவர்களுடன் நல்ல உறவுமுறை.[8]

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உரையாடல்&oldid=3545211" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை