வெலிகமை

தென்னிலங்கையிலுள்ள ஒரு பட்டினம்

வெலிகமை அல்லது வெலிகாமம் என்பது (Weligama, வெலிகம) இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றுக்கு இணையான ஒரு வணிக நகராகும் இது. மேலும் இது பூகோள அமைப்பில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானதும் ஆகும். வெலிகமை தென்னிலங்கையில் புகழ் பெற்ற சுற்றுலா நகரமும் ஆகும். வெலிகமையிலுள்ள அக்கிரபோதி விகாரை, அதன் அரச மரம் என்பவற்றின் வரலாற்றைப் பார்க்கையில், கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான மனிதக் குடியிருப்பைக் கொண்டுள்ள ஓர் ஊராக வெலிகமை திகழ்வதை அவதானிக்கலாம்.[1][2][3][4]

வெலிகமை
வெலிகமை கடற்கரை
வெலிகமை கடற்கரை
நாடுஇலங்கை
மாகாணம்தென் மாகாணம்
அரசு
 • முதல்வர்எம்.ஜே. மின்ஹாஜ்
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்72,511
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

வெலிகமை நகர சபை, வெலிகமை பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி அமைப்புகளும், வெலிகமைப் பிரதேச செயலாளர் பிரிவு, வெலிப்பிட்டிப் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய இரு அரச நிருவாக அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. வெலிகமையிலுள்ள பெனேட்டியனைப் பகுதியில் குடாகல்கந்தை எனப்படும் இயற்கையான காட்டுப் பகுதி அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது[5].

இயற்கையமைப்பு

இங்கு ஓடும் பொல்வத்து ஒயா எனப்படும் நதி பல்வேறு இடங்களிலும் வளைந்து நெளிந்து செல்வதால், இது வெலிகமையின் பற்பல பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது. பண்டைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகங்களுள் ஒன்றான பொல்வத்து கங்கை அல்லது பொல்வத்து ஒயா என்ற ஆற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்த வெலிகாமப் பட்டினம் மகாவாலுக்காகமை என்றழைக்கப்பட்டது[6]. இதனாலேயே ஆதி காலந்தொட்டே அரபுக் குடியிருப்புக்கள் இங்கு ஏற்படலாயின. பண்டைய கப்பற்றுறையிலிருந்த பள்ளிவாயலே இன்று கப்பற்றுறைப் பள்ளிவாயல் என்றழைக்கப்படுகிறது. இது தற்காலத்தில் கப்துறைப் பள்ளிவாயல் என்று மருவி வழங்கப்படுகிறது. இதிலிருந்து பார்த்தால் வெலிகமையின் துறைமுகப் பகுதியை மிகத் தெளிவாகக் காணலாம்.

தற்காலத்தில் வெலிகமையின் ஒரு பகுதியான மிரிசையில் மீனவத் துறைமுகமொன்று காணப்படுகின்றது. இதனை அண்டியே 0.32 கி.மீ.2 கராண்டுவைக் களப்பு காணப்படுகிறது[7].

தாழ் நில ஈரவலயத்தில் அமைந்துள்ளமையால் இங்கு பொதுவாக இதமான காலநிலை நிலவுகிறது. கடலில் நீர்மட்டம் உயர்ந்து ஆற்று நீர்மட்டம் குறையும் காலங்களில் சுறா மீன்கள் பொல்வத்து கங்கையினுள் ஊடுருவுவதுண்டு. ஆற்றின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்படும் புதர் நிறைந்த இடங்களில் முதலைகள் வாழ்கின்றன. ஆற்றில் நீர்நாய்களும் ஆற்று நண்டுகளும் ஆற்று மட்டிகளும் காணப்படுகின்றன. உட்புறக் காடுகளில் செங்குரங்கு, சருகுமான், கொடும்புலி, வரி முயல், முள்ளம் பன்றி, உடும்பு, பொன் மரநாய், கீரிப் பிள்ளை, நீர் நாய் போன்ற விலங்குகளும், குந்துகாலி, பாலகன், நீர்க்காகம், மைனா, மாம்பழத்தி, மயில், குயில், செம்பகம், சிச்சிலி, கொக்கு, மணிப் புறா போன்ற பறவைகளும் வாழ்கின்றன. அவுத்திரேலியா, சைபீரியா போன்ற இடங்களிலிருந்து வலசை போகும் பம்பலி கொக்கு, மானில் போன்ற பறவையினங்கள் சிலவற்றையும் இங்குக் காணலாம். மலைப்பாம்பு, நாகம், புடையன், சாரை, வெள்ளாலை, மாபில்லன் போன்ற பாம்பினங்களும் காணப்படுவதுண்டு.

உட்பகுதிகளில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. ஆயினும் கடற்கரையை அண்டிய இடங்களில் நீர் சற்று உவர்ப்பாக உள்ளது. ஆங்காங்கே சிறு மலைகள் காணப்படுகின்றன. கடலை அண்மித்த மலைகளற்ற சமதரையான இடங்களில் நிலத்தடியில் சிப்பிகள், சங்குகள், பவளங்கள் போன்ற கடலுயிரினங்களின் புதைபடிவங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.

வரலாற்று முக்கியத்துவம்

முதலாம் விஜயபாகு மன்னனின் (பொ.கா. 1055 - பொ.கா. 1110) காலத்தில் இராசரட்டை சோழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிய மன்னன் உறுகுணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதிலும் சில காலம் மறைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது வெலிகமையிலுள்ள கராண்டுவைக் களப்பினருகிலுள்ள சிறிபத்தனை எனும் சிறு தீவிலேயே முதலாம் விஜயபாகு மன்னன் மறைந்து வாழ்ந்தான் என்பதாக வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன[7]. அதனைச் சூழவிருந்த மக்களே மன்னனுக்குத் தேவையான உதவிகளை நல்கிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து பதினேழு ஆண்டுகளின் பின்னரேயே அவன் சோழர்களை வெற்றி கொண்டு மீண்டும் இராசரட்டையைக் கைப்பற்றினான்.

குட்டராசக் கல்

வெளிநாட்டு மன்னனொருவன் குஷ்ட நோயால் அவதிப்பட்ட போது தனது நோயைக் குணப்படுத்துவதற்காக வெலிகமைக்கு வந்திருந்து இங்கேயே தன் நோய் நீங்கிச் சென்றான். அவனது ஞாபகார்த்தமாக இன்றும் வெலிகமையில் காணப்படுவதுதான் குஷ்டராஜகலை (குட்டராசக் கல்) ஆகும்[8]. ஆயினும் அவ்விடத்திலிருக்கும் சிலை மகாயான பௌத்தத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவலோகதீசுவர போதிசத்துவருடையதாகும். பொ.கா. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை 383 சதம மீற்றர் உயரமுடையதாகும்[9]. முற்காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்தம் நிலவியமைக்கு ஆதாரமாக இச்சிலை கொள்ளப்படுகிறது.

வெலிகமையில் காணப்படும் இராசகுலவடன விகாரை கலிங்க மரபு ஆட்சியாளனான நிசங்க மல்லனின் இறப்பின் பின்னர் இலங்கையை ஆண்ட அவனது மனைவி கல்யாணவதி அரசியால் கட்டப்பட்டதாகும்[1]. தற்காலத்தில் போதிமலு விகாரை இருக்குமிடத்தில் முற்காலத்தில் கோயிலொன்று காணப்பட்டது. திருவாலக் கோயில் எனப்பட்ட அது இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் போது அக்கோயில் அழிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அக்காணி போதிமலு விகாரையை அமைக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இற்றைக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பொ.கா.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெலிகமையில் கட்டப்பட்டதுதான் அக்கிரபோதி விகாரை ஆகும். இந்த விகாரையும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீளக் கட்டியெழுப்பப்பட்டது. இங்கிருக்கும் அரச மரம் தேவனம்பியதீச மன்னன் காலத்திலேயே அனுராதபுரத்திலிருக்கும் சிறீ மகாபோதியிலிருந்து முதலாவதாகப் பிரித்தெடுத்து நடப்பட்டதாகும்[1]. இவை தவிர கண்டி அரசின் கீழிருந்த காலத்தில் கட்டப்பட்ட சமுத்திரகிரி விகாரை, கோவில கந்த விகாரை (கோவில் மலை விகாரை) என்பனவும் இன்னும் ஏராளமான புராதனக் கோயில்களும் இங்கே காணப்படுகின்றன.

வெலிகமையில் ஏழாம் நூற்றாண்டிலேயே அறபுக் குடியேற்றங்கள் காணப்பட்டமையை பண்டைய வரலாற்றாசிரியரான அல்-பலாதுரியின் குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன[10]. ஆதி காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக பகுதாதிலிருந்தும் யெமனிலிருந்தும் இலங்கைக்கு வந்து சேர்ந்த பனூ ஹாசிம் மரபினர் பெரும்பாலும் வெலிகமையிலேயே குடியேறினர். மௌலானாக்கள் என்றழைக்கப்படும் இவர்களினூடாக இஸ்லாமியப் பேரரசுக்கும் இலங்கைக்குமிடையே உறவு நிலவ வழியேற்பட்டது[11]. முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்த்துக்கேயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான அடக்குமுறைகளின் காரணமாக இப்பகுதியிலிருந்து முஸ்லிம்கள் பலர் வெளியேறவும் கொல்லப்படவும் நேர்ந்தது. வெலிகமையில் காணப்படும் பாலத்தடிப் பள்ளிவாயல் பொ.கா. 1200 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாகும்[10]. இங்கு கிட்டத்தட்ட முப்பது பள்ளிவாயல்கள் காணப்படுகின்ற அதே வேளை நானூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான பள்ளிவாயல்கள் நான்கு காணப்படுகின்றன.

போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்ற முயன்ற போது இலங்கையிலிருந்த முஸ்லிம்கள் அதனை எதிர்த்து நின்றனர். கண்டி மன்னனின் கரையோரப் படை வெலிகமையிலேயே தளமமைத்திருந்தது. அதில் முற்று முழுதாக அறபு முஸ்லிம்களே இருந்தனர். போர்த்துக்கேயர்களால் இப்படையைச் சேர்ந்த 10,000 அறபு வீரர்கள் வெலிகமையில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர்[12]. பின்னர் போர்த்துக்கேயப் படைத்தளம் வெலிகமையில் நிறுவப்பட்டது[13]. மதுராபுரிப் பகுதியினுள் அமைந்துள்ள இவ்விடமே ஹட்டன்கெவத்த (හටන් ගෙවත්ත - படைமுகாம்) என்றழைக்கப்படுகிறது. போர்த்துக்கேயர் வெலிகமையிலும் ஒரு கோட்டையைக் கட்ட முனைந்தனர். அதனைத் தடுப்பதற்காக உடனடியாகச் செயலிலிறங்கிய ஒல்லாந்துக்காரர்களுக்கும் போர்த்துக்கேயருக்குமிடையே இங்கு கடும் சமர் நிலவியது.[14][15]

2004 ஆம் ஆண்டு திசெம்பர்த் திங்களில் நிகழ்ந்த இந்து சமுத்திரக் கடற்கோளினால் வெலிகமையில் 2200 வீடுகள் அழிவுற்றதுடன், 469 பேர் இறந்தனர்.[16]

பண்பாடு

கோலூன்றி மீன் பிடிக்கும் செம்படவர்

இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரால் ஆளப்பட்ட காலத்தில் வெலிகமையிலும் குறிப்பிடத் தக்களவு பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. ஒல்லாந்து நாட்டில் சிறந்து விளங்கிய இறேந்தை பின்னும் கலையை இன்றும் வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் காணலாம்[17].

வெலிகமைப் பகுதியில் நெடுங்காலம் நிலைத்திருக்கும் ஆல மரங்கள் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகரப் பகுதியான தெனிப்பிட்டியிலிருந்த ஆல மரத்தைப் பற்றி கஜமன் நோனா என்ற பெண் கவி பாடிய பாடல்கள் சிங்கள இலக்கியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் இயற்றப்பட்ட கோகில சந்தேசய (குயில் விடு தூது), கிரா சந்தேசய (கிளி விடு தூது) ஆகிய தூது இலக்கியங்கள் மகா வெலிகமை எனும் முஸ்லிம் குடியேற்றத்தைப் பற்றியும் வெலிகமையில் வாழ்ந்த சோனகப் பெண்களைப் பற்றியும் கூறுகின்றன[10][18].

வெலிகமையிலிருக்கும் தப்ரபேன் தீவைச் சூழவுள்ள இடங்கள் ஒரு சில ஹொலிவூட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக் களங்களாயின. இத்தீவைப் பற்றி எழுதப்பட்ட பாடல்களும் நூல்களும் கூடக் காணப்படுகின்றன.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரபுக் குடியேற்றங்களைக் கொண்டுள்ள வெலிகமையில் முஸ்லிம்களின் இடம் மிக முக்கியமானதாகும். இலங்கையின் முதலாவது அறபு இசுலாமியக் கல்லூரியாகிய பாரி மதுரசாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 1984 ஆம் ஆண்டு திசெம்பர் 24 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும், வெலிகமையில் முக்கிய தளத்தைக் கொண்டுள்ள அகில இலங்கை றிபாய் தரீக் சங்கத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2002 யூலை 26 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.

வெலிகமை நகரினுள் ஒல்லாந்தர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் ஆங்கிலேயர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகர்ப் பகுதிகளில் மேலும் சில கிறித்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இலங்கைக்கு வந்த மெத்தோடிஸ்த திருச்சபையினர் முதன் முதலாக வெலிகமையிலேயே வந்திறங்கினர்.[19] இந்துக் கோயில்கள் என்று குறிப்பிடத் தக்களவு எதுவும் காணப்படுவதில்லையாயினும் முற்கால இந்துக் கோயில்கள் தற்காலத்தில் பௌத்த விகாரைகளாகப் பரிணமித்துள்ள சில இடங்கள் இருக்கின்றன.

பொருளாதாரம்

வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி, சுற்றுலாத்துறை என்பன சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. மெறியற் ஹோட்டல் போன்ற சர்வதேச தரத்திலான ஐந்து நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு சுற்றுலா விடுதிகள் இங்கு காணப்படுகின்றன. கபலானை, மிதிகமை, மிரிசை போன்ற இடங்கள் இந்து சமுத்திரத்தில் கடற்சருக்கலுக்குப் புகழ் பெற்ற இடங்களாகும். வெலிகமைக் கடலின் சில பகுதிகளில், குறிப்பாக கொவியாப்பானை, கப்பரத்தொட்டை போன்ற இடங்களில் உயிருள்ள அழகிய பவளப் பாறைகளைக் காணலாம்[20].

வெலிகமையின் மிரிசைத் துறை முகத்துக்கு அண்மித்த பகுதிகளில் விந்துத் திமிங்கிலம், நீலத் திமிங்கிலம், உடொல்பின்கள் போன்ற கடல்வாழ் முலையூட்டி இனங்கள் காணப்படுகின்றன. இங்கு இலங்கைக் கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கான திமிங்கிலக் காட்சிகளுக்காக அவர்களைத் தமது படகுகளில் கூட்டிச் செல்கின்றனர்[21]. பண்டைய துறைமுகம் இருந்த இடத்துக்கு அண்மித்ததாக வெலிகமைக் குடாவின் தென் கோடியில் கப்பற் போக்குவரத்துக்கான ஒரு துறைமுகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.[22]

இங்கு வாழும் சோனக முஸ்லிம்கள் பெரிதும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நகரின் உட்பகுதிகளிலும் அண்டிய பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களும் தென்னந் தோப்புக்களும் கறுவாத் தோட்டங்களும் நெற்கழனிகளும் மரக்கறித் தோட்டங்களும் காணப்படுகின்றன. சில பகுதிகளில் இறப்பர்த் தோட்டங்களும் பைன் மரத் தோட்டங்களும் காணப்படுகின்றன. இங்கு நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதற்காக 1887 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசினால் வெலிகமையில் 300 ஏக்கர் பரப்பளவான பொறாளைக் குளத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[23]. வெலிப்பிட்டிப் பகுதியில் பொல்வத்து கங்கைக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட ஒரு அணைக்கட்டு நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச உதவுகிறது. வெலிகிந்தை தொழிற்புரம், உடுக்காவை, மிதிகமை ஆகிய இடங்களில் இறப்பர்த் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான தயர்த் தொழிற்சாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள், உலோக வேலைத் தொழிற்சாலைகள், பழங்களைப் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றன காணப்படுகின்றன. கும்பல்கமைப் பகுதியில் பாரம்பரிய மட்பாண்ட உற்பத்தி நடைபெறுகிறது.

வெலிகமையின் உட்புறத்தில் வெலிப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இரத்தினக் கல் அகழ்வும் இடம்பெறுவதுண்டு. பல நூற்றாண்டுகளாகவே வெலிகமை வாழ் முஸ்லிம்கள் இரத்தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களால் விற்கப்பட்ட இரத்தினங்களுள் 1887 ஆம் ஆண்டு விற்கப்பட்ட 1867 கீறாத்து நிறையுடைய பசுங்கல் குறிப்பிடத் தக்கதாகும்[24].

பண்டைக் காலத்தில் பொல்வத்து கங்கையின் கழிமுகம் அமைந்துள்ள இடமான பொல்வத்துமோதரை (Bellipettimodere) என்னுமிடத்தில் துறைமுகம் அமைந்திருந்ததுடன், அங்கு ஒரு நீதிமன்றமும் காணப்பட்டது[25]. இங்கிருந்து நெடுந்தொலைவுக்கு ஆற்றின் இருமருங்கிலும் கிங் மரங்களும், கின்னைத் தாவரங்களும், கண்டல் தாவரங்களும், இலங்கைக்கு அகணியமான ஒரு சில மூங்கில் வகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. தற்காலத்தில் இவ்விடத்திலிருந்து பொல்வத்து கங்கையினூடாக உல்லாசப் பயணிகளுக்கான படகுச் சேவைகள் இடம்பெறுகின்றன.

பன்னெடுங் காலமாகவே இங்கு தென்னை சார்ந்த தொழில்கள் இடம் பெறுகின்றன. பொல்வத்தை, மதுராபுரி, மிதிகமை போன்ற சிற்சில இடங்களில் தும்புத் தொழிற்சாலைகளும் கொப்பரா காய்ச்சுமிடங்களும் காணப்படுகின்றன.

கல்வி

வெலிகமையில் ஐந்து தமிழ் மொழி மூலம் கற்பிக்கும் முஸ்லிம் பாடசாலைகளும் கிட்டத்தட்ட முப்பது சிங்களப் பாடசாலைகளும் அமைந்துள்ளன[26]. ஆங்கில மொழிமூலம் கல்வி வழங்கும் தனியார் பாடசாலைகள் நான்கும் இந்நகரினுள் இருக்கின்றன. இவை தவிர (பாரி (ஆ), முர்ஸிய்யா (ஆ), ஹிழ்ரிய்யா (ஆ), ஸலாஹிய்யா (ஆ), ஸலாஹிய்யா (பெ), றிபாயிய்யா (ஆ), றிபாயிய்யா (பெ), ஹப்ஸா (பெ) ஆகிய) எட்டு அறபு இஸ்லாமியக் கலாசாலைகளும் ஒரு சில பிரிவெனாக்களும் (பௌத்த நெறிப் பாடசாலைகள்) காணப்படுகின்றன. இவற்றுள் மூன்று அறபு இஸ்லாமியக் கலாசாலைகள் முற்றிலும் பெண்களுக்கானவையாகும்.

மருத்துவம்

இந்நகரில் அரசாங்க மருத்துவமனைகள் ஐந்தும், மகப்பேற்று தாய் சிசு மருத்துவ நிலையங்கள் ஏழும், அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனைகளிரண்டும், தனியார் மருத்துவமனைகளிரண்டும் காணப்படுகின்றன[27][28]. இவை தவிர வெலிகிந்தையிலுள்ள பௌத்த விகாரையுடனிணைந்த சிறீ சுதர்சன பிரிவெனாவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியொன்று மிக அண்மைக் காலம் வரை இயங்கிய போதிலும் தற்காலத்தில் அங்கு மருத்துவம் கற்பிக்கப்படுவதில்லை. ஹல்லலை, வட்டக்கொடை போன்ற இடங்களில் மூலிகைத் தோட்டங்கள் காணப்படுகின்றன.

வெலிகமையின் புறநகர்ப் பகுதியான உடுக்காவையில் பாம்புக் கடிக்கும் வேறு நச்சுக் கடிகளுக்கும் மருந்து செய்யும் மருத்துவமனையொன்றும் பாம்புப் பண்ணையொன்றும் காணப்படுகின்றன. அங்கு இலங்கைக்கு அகணியமான இருபதுக்கு மேற்பட்ட பாம்பினங்கள் உட்பட பல நூற்றுக் கணக்கான பாம்பினங்களும் நச்சுச் சிலந்திகளும் வளர்க்கப்படுகின்றன[29].

இவ்வூரின் பிரபலங்கள்

  • த. சா. அப்துல் லத்தீப் - முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்
  • பதியுத்தீன் மஹ்மூத் - முன்னாள் கல்வியமைச்சரும் சுகாதார அமைச்சரும்[30]
  • சுஹைர் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  • ஹேமால் குணசேக்கரா - முன்னாள் பிரதியமைச்சர்
  • மேஜர் மொண்டேகு ஜயவிக்கிரம - முன்னாள் பொதுத்துறை அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநரும்
  • அலவி மௌலானா - முன்னாள் அமைச்சரும் மேல் மாகாண ஆளுநரும்

இலக்கியம்

வெலிகமையைச் சேர்ந்தவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் ஏராளம். சிங்களம், தமிழ், ஆங்கிலம், அறபு போன்ற பல்வேறு மொழிகளிலான ஆக்கங்கள் இவ்வூரைச் சேர்ந்தோரால் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாசீன் மௌலானா அவர்கள் எழுதி வெளியிட்ட அறபு-அறபுத் தமிழ் அகராதியைக் குறிப்பிடலாம். பின்னர் இது 1965 இல் அறபு-தமிழ் அகராதியாக வெளியிடப்பட்டது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்களுள் பிரதானமாக வெலிகம சிறீ சுமங்கல தேரர் எழுதிய சித்தந்த சேகரய (சித்தாந்த சேகரம்) என்பதைக் குறிப்பிடலாம். மிக அண்மைக் காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சில நூல்கள் பின்வருமாறு:

  • திருக்குர்ஆனும் இயற்கையும் (* த. சா. அப்துல் லத்தீப்)
  • இஸ்லாமிய நாகரிகம் (எம்.எச்.எம். நாளிர்)
  • முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - கற்றுக் கொள்ளலும் பற்றுக் கொள்ளலும் (எம்.எச்.எம். நாளிர்)
  • நகைமலர் (கலாபூசணம் ஏ.எச்.எம். யூஸுப்)
  • நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு (கலாபூசணம் ஏ.எச்.எம். யூஸுப்)
  • அல்குர்ஆன் கூறும் ஆகார வகைகள் (ஹிப்ஷி தௌபீக்)
  • தமிழ் இலக்கண வினா - விடை (இஸ்மாயில் எம். பைரூஸ் கலைமகன் பைரூஸ் – 2000)
  • மண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர் (எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் - )
  • இஸ்லாமிய நாகரிகம் (உயர்தரம்) (முக்தார் ஏ. முஹம்மது)
  • கணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
  • கணக்கீட்டுச் சுருக்கம் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
  • கணக்கீட்டின் தெளிவு (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
  • தென்றலின் வேகம் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
  • இஸ்லாமிய பத்வாக்கள் (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))
  • நோன்பு - தெளிவுகளும் வழிகாட்டல்களும் (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))
  • பொருளாதார ரீதியாக சமூகத்தை வலுவூட்டுவது எவ்வாறு? - இமாம் யூஸுப் அல்கர்ளாவி (மொழிபெயர்ப்பு: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))
  • ஸகாத் ஒரு சமூகக் கடமை (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))
  • புத்தாக்க சிந்தனைகள் (மொழிபெயர்ப்பு: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))

வேறு பெயர்கள்

இலங்கையின் பழைய வரைபடத்தில் வெலிகாமப் பட்டினம் Beligao என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிகாமப் பட்டினத்துக்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில பின்வருமாறு:

  • மகாவாலுக்காகமை[31] - புராதனப் பெயர். பிரான்சிய மொழி ஆவணங்கள் இப்பெயரையே பயன்படுத்துகின்றன.[32][33]
  • பல்காம் (بلقام) - அறபுப் பெயர். வெலிகமையைப் பற்றிய பண்டைய அறபு ஆக்கங்கள் இப்பெயரிலேயே அதைக் குறிப்பிடுகின்றன.
  • வலீஜாமா (وليجاما ) - தற்காலத்தில் வழங்கப்படும் அறபுப் பெயர்
  • பெலிகாவோ (Beligao), பிலிகாவோ (Biligao) - போர்த்துக்கேயப் பெயர்கள்[34]
  • வெலிகமை (වැලිගම) - சிங்களப் பெயர்
  • மகா வெலிகமை (මහ වැලිගම) - சிங்களப் பெயர்
  • வெலிகாமம் - தமிழ்ப் பெயர்
  • பெலிகம் (Belligam)
  • பெல்லெகம் (Bellegam)
  • பில்லெகம் (Billegam)

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், வெலிகமை
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)32
(90)
33
(91)
33
(91)
32
(90)
32
(90)
31
(88)
30
(86)
30
(86)
31
(88)
30
(86)
31
(88)
31
(88)
31.3
(88.4)
தாழ் சராசரி °C (°F)22
(72)
23
(73)
24
(75)
25
(77)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
24
(75)
24
(75)
23
(73)
24.5
(76.1)
பொழிவு mm (inches)33.6
(1.323)
52.1
(2.051)
68.9
(2.713)
173.9
(6.846)
194.9
(7.673)
102.2
(4.024)
75
(2.95)
67.6
(2.661)
113.4
(4.465)
302.7
(11.917)
247.9
(9.76)
75.6
(2.976)
1,507.8
(59.362)
ஈரப்பதம்76726053453438414449607354
சராசரி பொழிவு நாட்கள்74814161411913191610141
ஆதாரம்: [35]

பிணை நகரங்கள்

பிராங்போர்ட் (பழைய நகரம்), யேர்மனி

மேலும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Weligama
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெலிகமை&oldid=3623501" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்