அறிவொளிக் காலம்

வார்ப்புரு:Classicism

அறிவொளி (அறிவொளிக் காலம் அல்லது பகுத்தறிவுக் காலம் எனவும் அறியப்படுகிறது;[1] பிரெஞ்சு மொழி: le Siècle des Lumières, lit. 'ஒளியின் நூற்றாண்டு'; மற்றும் இடாய்ச்சு மொழி: Aufklärung, 'அறிவொளி')[2] என்பது ஒரு அறிவார்ந்த மற்றும் தத்துவ இயக்கமாகும். இவ்வியக்கம், தத்துவத்தின் நூற்றாண்டு என விளிக்கப்படும் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் சிந்தனைக் கருத்துக்களில் தாக்கம் செலுத்தியது.[3] அறிவொளியானது ஒரு கருத்தின் அதிகாரபூர்வமாக்கலுக்கும் ஏற்புடைத் தன்மைக்கும் முதன்மை மூலமாக பகுத்தாராய்தலை அடிப்படையாகக் கொண்ட பன்முகச் சிந்தனைகளை உள்ளடக்கியிருந்தது. மேலும் இது விடுதலை, முன்னேற்றம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கம் மற்றும் அரசுக்கும் திருச்சபைக்குமிடையிலான வலுவேறாக்கல் போன்ற முற்போக்குச் சிந்தனைகளை கொண்டிருந்தது.[4][5] பிரான்சில், les Lumièresன் மையக் கோட்பாடுகளாக தனிமனித விடுதலை மற்றும் சமயச் சகிப்புத்தன்மை என்பன விளங்கின. மேலும், சர்வாதிகார முடியாட்சி மற்றும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சமயக் கட்டுப்பாடுகளை இவ்வியக்கம் எதிர்த்தது. அறிவொளி மூலம் அறிவியல் முறை மற்றும் குறுக்கியல் பார்வை என்பன வலியுறுத்தப்பட்டதோடு, மதப் பழமைவாதத்தை கேள்விக்குட்படுத்தும் போக்கும் அதிகரித்தது. இப் போக்கு அறிதலுக்கான துணிச்சல் (Sapere aude) எனும் சொற்பதத்தால் வருணிக்கப்பட்டது.[6]

பிரெஞ்சு வரலாற்றாசிரியர்கள், 14ம் லூயி இறந்த ஆண்டான 1715 மற்றும் பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பமான 1789 ஆகியவற்றுக்கிடையிலான காலப்பகுதியை அறிவொளிக்காலமாக வரையறுக்கின்றனர். சில அண்மைய வரலாற்றாய்வாளர்கள் அறிவியல் புரட்சி ஆரம்பமான 1620களை அறிவொளிக் காலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இக்காலப்பகுதியின் Les philosophes (பிரெஞ்சு மொழியில் 'தத்துவஞானிகள்') அறிவியல் கல்விக்கூடங்கள், கழகங்கள், இலக்கியக் கூடங்கள், கோப்பிக் கூடங்கள் ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்துவதன் ஊடாகவும், அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களினூடாகவும் தமது கருத்துக்களைப் பரப்பினர். அறிவொளிக்கருத்துக்கள் முடியரசினதும் திருச்சபையினதும் அதிகாரங்களை நலிவடையச் செய்ததோடு, 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசியற் புரட்சிகளுக்கும் வழிகோலியது. தாராண்மைவாதம் மற்றும் புதுச் செவ்வியல் வாதம் போன்ற 19ம் நூற்றாண்டின் பல்வேறு இயக்கங்கள் அறிவொளிக் கருத்துக்களைத் தமது அடிப்படையாகவும் அறிவுசார் மரபுரிமையாகவும் கொண்டிருந்தன.[7]

அறிவொளிக்காலத்தின் அடுத்த படியாக அறிவியல் புரட்சி உருவாகியதோடு அது அறிவொளிக் காலத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.[8] முன்னைய மெய்யியலறிஞர்களான பிரான்சிசு பேகன், ரெனெ தெக்காட்டு, சோன் லொக் மற்றும் பரூச் இசுபினோசா போன்றோரின் கருத்துக்கள் அறிவொளியில் தாக்கம் செலுத்தியுள்ளன.[9] அறிவொளிக்காலத்தின் முக்கிய அறிஞர்களாக சீசரெ பெக்கரியா, வோல்டேர், டெனி டிட்ரோ, இழான் இழாக்கு ரூசோ, டேவிட் யூம், அடம் சிமித் மற்றும் இம்மானுவேல் கன்ட் ஆகியோரைக் குறிப்பிடலாம். ரசியாவின்சி 2ம் கத்தரீன், ஆசுத்திரியாவின் 2ம் யோசேப்பு மற்றும் பிரசியாவின் 2ம் பிரடெரிக் போன்ற ஐரோப்பிய ஆட்சியாளர்கள் அறிவொளிச் சிந்தனைகளை சமய மற்றும் அரசியல் சகிப்புத்தன்மை வடிவில் செயற்படுத்த முனைந்தனர். இது அறிவொளி முடியாட்சி என அறியப்பட்டது.[10] பெஞ்சமின் பிராங்கிளின் அடிக்கடி ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு நடைபெறும் அறிவியல் மற்றும் அரசியல் விவாதங்களில் சிறப்பான பங்கை வழங்கினார். மேலும், அங்கிருந்து புதிய கருத்துக்களை பிலதெல்பியாவுக்கு எடுத்து வந்தார். தோமசு செபர்சன் ஐரோப்பியக் கருத்துக்களை இறுக்கமாகப் பின்பற்றியதோடு, சில அறிவொளிக் கருத்துக்களை தமது 1776 விடுதலைப் பிரகடனத்திலும் உள்ளடக்கியிருந்தார். அவரது சகபாடியான சேம்சு மடிசன், 1787ல் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பை வரையும் போது இக்கருத்துக்களை அதில் உள்ளடக்கினார்.[11]

அறிவொளிக்காலத்தின் செல்வாக்கு மிகுந்த வெளியீடு Encyclopédie (கலைக்களஞ்சியம்) ஆகும். 1751க்கும் 1772க்கும் இடையில் முப்பத்தைந்து பகுதிகளாக வெளியிடப்பட்ட இது, டெனி டிட்ரோ, லா லா ரோ டலம்பேர்ட் (1759 வரை) மற்றும் 150 அறிவியலாளர்கள் மற்றும் தத்துவஞானிகளை உள்ளடக்கிய ஒரு குழுவால் தொகுக்கப்பட்டிருந்தது. இது அறிவொளிக் கருத்துக்களை ஐரோப்பா மற்றும் ஏனைய இடங்களுக்கு பரப்ப உதவியாக இருந்தது.[12]

ஏனைய சிறந்த வெளியீடுகளாக வோல்டேரின் Dictionnaire philosophique (தத்துவ அகராதி; 1764) மற்றும் Letters on the English (ஆங்கிலத்திலான கடிதம்) (1733); ரூசோவின் Discourse on Inequality (ஏற்றத்தாழ்வு தொடர்பான உரையாடல்) (1754) மற்றும் The Social Contract (சமூக ஒப்பந்தம்) (1762); அடம் சிமித்தின் The Wealth of Nations (நாடுகளின் செல்வம்) (1776); மற்றும் மொன்டெசுகியூவின் Spirit of the Laws (சட்டங்களின் அடிப்படை) (1748) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அறிவொளிக் கருத்துக்கள் 1789ல் ஆரம்பமான பிரெஞ்சுப் புரட்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தது. புரட்சியின் பின், புனைவியம் எனப்பட்ட ஒரு எதிர்க்கருத்து இயக்கம் அறிவொளிக் கருத்துக்களைப் பதிலீடு செய்தது.

மெய்யியல்

ரெனெ தெக்காட்டின் பகுத்தறிவு மெய்யியலே அறிவொளி எண்ணக்கருவுக்கான அடித்தளத்தை இட்டது. அறிவியலை ஒரு பாதுகாப்பான மீயியற்பியல் அடிப்படையில் கட்டமைக்கும் இவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை. எனினும், மனம் மற்றும் சடப்பொருள் ஆகியவற்றுக்கிடையிலான இருமைக் கொள்கைக்கு இட்டுச் செல்லும் தத்துவப் பிரிவுகளில் பிரயோகிக்கப்படும் இவரது சந்தேகிக்கும் முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும். இவரது ஐயுறவியல் கொள்கை சோன் லொக்கின் Essay Concerning Human Understanding (மனிதப் புரிந்துணர்வு பற்றிய கட்டுரை) (1690) மற்றும் 1740களின் டேவிட் யூமின் எழுத்துக்கள் மூலமாகவும் சீராக்கப்பட்டது. இவரது இருமையியல் கொள்கை இசுபினோசாவின் Tractatus (டிரக்டடசு) (1670) மற்றும் Ethics (சமூகநீதி) (1677) ஆகிய படைப்புக்களில் உள்ள உடன்பாடு காணா சடப்பொருளின் ஒருமையியல்பு பற்றிய கருத்துக்களினால் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

இக் கருத்து வேறுபாடு அறிவொளிச் சிந்தனையில் இரு வேறு பிரிவுகளுக்கு வித்திட்டது. தெக்காட்டு, லொக் மற்றும் கிருத்தியன் வூல்ப் ஆகியோரின் கொள்கையான மிதப் பல்வகைமை, வலு மற்றும் நம்பிக்கை ஆகிய துறைகளில் மறுசீரமைப்புக்கும் பாரம்பரிய முறைமைகளுக்கும் இடையிலான ஒரு தீர்வைத் தேடியது. அதேவேளை இசுபினோசாவின் தத்துவங்களால் உந்தப்பட்ட தீவிர அறிவொளி, மக்களாட்சி, தனிமனித விடுதலை, கருத்துச் சுதந்திரம் மற்றும் சமய அதிகார வேரறுப்பு ஆகிய சிந்தனைகளை முன்னெடுத்தது.[13][14] மிதப் பல்வகைமை கடவுளியல் சார்ந்து இருந்த அதேவேளை தீவிரக் கொள்கை, சமூக ஒழுக்கத்தை கடவுள் கொள்கையிலிருந்து முழுமையாக வேறாக்கியது. இவ்விரு சிந்தனைகளும் நம்பிக்கைக்கு மீள இட்டுச்செல்லும் பழமைவாத எதிர் அறிவொளிக் கொள்கையால் எதிர்க்கப்பட்டன.[15]

18ம் நூற்றாண்டில் பாரிசு நகர், பாரம்பரியக் கொள்கைகள் மற்றும் சமயக் கட்டுப்பாடுகளை சவாலுக்குட்படுத்தும் தத்துவ மற்றும் அறிவியல் செயற்பாடுகளின் மையமாக விளங்கியது. நம்பிக்கை மற்றும் கத்தோலிக்கக் கொள்கைகளுக்குப் பதிலாகப் ப்குத்தறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் உருவாக்கத்துக்காகக் குரல் கொடுத்த வோல்டேர் மற்றும் இழான் இழாக்கு உரூசோ ஆகியோரால் வழிநடத்தப்பட்ட தத்துவ இயக்கம் இயற்கைச் சட்டங்களின் அடிப்படையிலான புதிய சமூக ஒழுங்கு மற்றும் பரிசோதனைகள் மற்றும் அவதானிப்புக்களின் அடிப்படையிலான அறிவியல் என்பவற்றை வேண்டிநின்றது. அரசியல் தத்துவஞானியான மொன்டெசுகியூ அரசாங்கமொன்றில் வலுவேறாக்கம் பற்றிய கருத்தை அறிமுகப்படுத்தினார். இக் கொள்கை ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்குநர்களால் வலுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும், பிரெஞ்சு அறிவொளியின் தத்துவஞானிகள் புரட்சியாளர்களாக அன்றி பிரபுக்கள் வகுப்பின் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், அவர்களது சிந்தனைகள், பழைய அரசின் ஏற்புடைத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதிலும் பிரெஞ்சுப் புரட்சியை வழிப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றின.[16]

செருமானிய தத்துவவியலாளரான இம்மானுவேல் கன்ட்

சமூக ஒழுக்கம் தொடர்பான தத்துவஞானியான பிரான்சிசு அட்சிசன் பயனெறிமுறை மற்றும் விளைபயன்வாதக் கொள்கையை விளக்கும் போது, "பெரும்பான்மையானோருக்கு பெரிய மகிழ்ச்சி" என்று குறிப்பிடுகிறார். அறிவியல் முறை (அறிவு, ஆதாரம், அனுபவம் மற்றும் காரணப்படுத்தல்) மற்றும் அறிவியல் மற்றும் சமயம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு நோக்கிய சில நவீன மனப்பாங்குகள் ஆகியவற்றினுள் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் இவரது மாணவர்களாகிய டேவிட் யூம் மற்றும் அடம் சிமித் ஆகியோரால் விருத்திசெய்யப்பட்டனவாகும்.[17] தத்துவத்தின் ஐயுறவாதத் தத்துவ மற்றும் புலனறிவாத மரபின் சிறந்த நபர்களில் யூமும் ஒருவரானார்.

இம்மானுவேல் கன்ட் (1724–1804) பகுத்தறிவு வாதம் மற்றும் சமய நம்பிக்கை, தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றுக்கிடையிலான ஒரு சமரசத்தைக் காண முற்பட்டதோடு, தனிப்பட்ட மற்றும் பொது பகுத்தறிதலூடாக பொது வெளி ஒன்றை உருவாக்கவும் முயன்றார்.[18] கன்டின் செயற்பாடுகள் செருமானிய எண்ணக் கருக்களைச் சீர்படுத்துவதிலும் மேலும் அனைத்து ஐரோப்பிய தத்துவவியலை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றியது. 20ம் நூற்றாண்டு வரையிலும் இதன் தாக்கம் காணப்பட்டது.[19] மேரி வொல்சுடோன்கிராப்ட் இங்கிலாந்தின் துவக்ககால பெண்ணிய தத்துவவியலாளர்களுள் ஒருவராவார்.[20] இவர் பகுத்தறிவு அடிப்படையிலான சமுதாய உருவாக்கம் சார்பாக வாதிட்டதோடு, ஆண்களும் பெண்களும் பகுத்தறிவாதிகளாக நோக்கப்படவேண்டுமெனவும் கோரினார். A Vindication of the Rights of Woman (பெண்கள் உரிமை தொடர்பான கொள்கைநாட்டரவு) (1791) இவரது சிறப்பான படைப்பாகும்.[21]

அறிவியல்

அறிவொளி தொடர்பான உரையாடல் மற்றும் சிந்தனையில் அறிவியல் முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு அறிவொளிக்கால எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அறிவியல் பின்னணியைக் கொண்டிருந்தனர். இவர்கள் சமயம் மற்றும் பாரம்பரிய அதிகாரத்தின் வீழ்ச்சியும் சுதந்திர சிந்தனை மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றின் விருத்தியுமே அறிவியல் வளர்ச்சிக்கு காரணமாகக் கருதினர். அறிவொளிக் கால அறிவியல் முன்னேற்றங்களில் இரசாயனவியலாளரான யோசேப்பு பிளாக்கின் மூலமான காபனீரொட்சைட்டின் கண்டுபிடிப்பு, நிலவியலாளர் சேம்சு அட்டனினால் முன்வைக்கப்பட்ட நீள் நேரம் தொடர்பான கொள்கை, சேம்சு வாட்டின் மூலமான நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பு என்பவை குறிப்பிடத்தக்கன.[22] லவோசியரின் ஆராய்ச்சிகள் பாரிசு நகரில் முதலாவது நவீன இரசாயனத் தொழிற்சாலையை உருவாக்க உதவின.மேலும், மொன்ட் கோல்பியர் சகோதரர்களின் ஆய்வுகள் வெப்ப ஆவி பலூன்களின் மூலமான முதலாவது மனிதப் பறப்புக்கு உதவின. இதன் மூலம் புவா டி பொலோஞ்சுக்கு அருகிலுள்ள சாடோ டி லா முயெட் எனும் இடத்திலிருந்து நவம்பர் 21, 1783ல் முதலாவது வெப்ப ஆவி பலூன் ஏவப்பட்டது.[23]

பரவலாக நோக்கில், அறிவொளிக்கால அறிவியல் புலனறிவாதம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைக்கு பெருமளவில் முக்கியத்துவம் வழங்கியது. மேலும், அறிவொளிக்கால சிந்தனைகளான முன்னேற்றம் மற்றும் மேம்பாடு என்பவற்றோடும் இயைந்து சென்றது. இயற்கை மெய்யியலின் கீழ் வகைப்படுத்தப்பட்ட அறிவியற்கல்வியானது இயற்பியல் மற்றும் இரசாயனவியலும் இயற்கை வரலாறும் என்ற இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. இரசாயனவியல் மற்றும் இயற்கை வரலாறு, உடற்கூற்றியல், உயிரியல், நிலவியல், கனிமவியல், மற்றும் விலங்கியல் ஆகியவற்றின் கூட்டாகக் காணப்பட்டது.[24] ஏனைய பெரும்பாலான அறிவொளிக்காலச் சிந்தனைகள் போலவே அறிவியலின் நன்மைகளும் அனைவராலும் ஏற்கப்படவில்லை. அறிவியல் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான இடைவெளியை அதிகரிப்பதாகவும், மனிதரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக செயற்படவில்லையெனவும் உரூசோ விமர்சித்தார்.[25] அறிவொளிக் காலத்தின் போது அறிவியல் சங்கங்களும் கல்விக் கூடங்களுமே முன்னிலை பெற்றன. இவை பல்கலைக்கழகங்களைப் பின்தள்ளி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான மையப் புள்ளியாக முதன்மை பெற்றன. சங்கங்களும் கல்விக் கூடங்களும் முதிர்வு மற்றும் அறிவியல் தொழில்முறைக்கு அடிப்படையாக அமைந்தன. அதிகரித்து வந்த படித்த சமூகத்தினரிடம் அறிவியல் பிரபல்யம் பெற்றமை இன்னுமொரு முக்கிய முன்னேற்றமாகும். மெய்யியலாளர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவியல் கொள்கைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றுள் Encyclopédie மற்றும் வோல்டேர் மற்றும் எமிலி டு சற்றெலி ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்ட நியூட்டனியம் போன்ற ஊடகங்கள் முக்கியமானவை. சில வரலாற்றாய்வாளர்கள் 18ம் நூற்றாண்டை அறிவியல் வரலாற்றின் சலிப்பூட்டும் காலப்பகுதியாகக் குறிப்பிடுகின்றனர்.[26] எனினும், இந் நூற்றாண்டில் மருத்துவம், கணிதம் மற்றும் இயற்பியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், உயிரியல் வகைப்பாட்டியலில் வளர்ச்சி, காந்தவியல் மற்றும் மின்னோட்டம் பற்றிய புதிய விளக்கங்கள், நவீன இரசாயனவியலுக்கு வழிகோலிய இரசாயனவியலின் முதிர்ச்சி என்பன ஏற்பட்டன.

பல்கலைக்கழகங்களின் புலமை வாதத்துக்கு மாறாக அறிவியல் கல்விக்கூடங்கள் மற்றும் சங்கங்கள் அறிவியல் புரட்சியின் விளைவாக அறிவியல் அறிவின் உருவாக்குனர்களாக வளர்ச்சி பெற்றன.[27] அறிவொளியின் போது, சங்கங்கள் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பை உருவாக்க அல்லது பேண முயன்றன. எவ்வாறாயினும் சமகால மூலங்கள் பல்கலைக்கழகங்களையும் அறிவியல் சங்கங்களையும் பிரித்தறிய விழைகின்றன. பல்கலைக்கழகங்களின் பயன்பாடு என்பது அறிவைக் கடத்துதலே என்றும், சங்கங்கள் அறிவை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவை வாதிடுகின்றன.[28] அமைப்புமுறை அறிவியலில் பல்கலைக்கழகங்களின் பங்கு தேய்வடைந்து சென்ற அதேவேளை, ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியலின் மையப்புள்ளியாக கற்ற சமூகம் முதன்மை பெற்றது. அலுவல்முறை அறிவியல் சங்கங்கள் அரசாங்கத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவ வழங்கல் நிறுவனங்களாகச் செயற்பட்டன.[29] பெரும்பாலான சங்கங்கள் தமது சொந்த வெளியீடுகளை மேற்பார்வையிடவும், புதிய உறுப்பினர்களின் தெரிவைக் கட்டுப்படுத்தவும், சங்கத்தை நிர்வகிக்கவும் அனுமதி பெற்றிருந்தன.[30] 1700க்குப் பின், பாரியளவிலான அலுவல்முறைக் கல்விக்கூடங்களும் சங்கங்களும் ஐரோப்பாவில் நிறுவப்பட்டன. 1789ம் ஆண்டளவில் எழுபதுக்கும் மேற்பட்ட அலுவல்முறை அறிவியல் சங்கங்கள் காணப்பட்டன. இவ் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில், பேர்னாட் டி பொன்டெனெல் 18ம் நூற்றாண்டை "கல்விக்கூடங்களின் நூற்றாண்டு" என விளித்தார்.[31]

அறிவொளிக்காலத்தில் அறிவியலின் பாதிப்பை கவிதையிலும் இலக்கியத்திலும் கூடக் காணமுடிகிறது. சில கவிதைகளில் அறிவியல் உருவகங்கள் மற்றும் உவமைகள் புகுத்தப்பட்டிருந்ததோடு ஏனையவை நேரடியாக அறிவியல் கருத்துக்கள் தொடர்பாக எழுதப்பட்டிருந்தன. சேர். ரிச்சார்ட் பிளக்மோர் தமது Creation, a Philosophical Poem in Seven Books (படைப்பு, ஏழு புத்தகங்களிலான ஒரு தத்துவக் கவிதை) (1712) எனும் படைப்பை உருவாக்க நியூட்டனிய முறைமையைப் பயன்படுத்தினார். 1727ல் நியூட்டனின் மரணத்தின் பின், அவரை கௌரவிக்கும் வகையில் பல பதிற்றாண்டுகளுக்கு கவிதைகள் பாடப்பட்டன.[32] சேம்சு தோம்சன் (1700–1748) தமது "Poem to the Memory of Newton" (நியூட்டனின் நினைவுக் கவிதை) எனும் கவிதையை எழுதியதன் மூலம் நியூட்டனின் இழப்பை சோகத்தோடு நினைவுகூர்ந்ததோடு, அவரது அறிவியல் மற்றும் மரபுரிமையைப் புகழ்ந்துரைத்தார்.[33]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அறிவொளிக்_காலம்&oldid=3818425" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை