ஆலோவீன்

அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம்

ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.[1][2][3][4] இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

ஆலோவீன்
கடைபிடிப்போர்பல்வேறு மேற்கத்திய நாடுகள் (பார்க்க கட்டுரை)
வகைமதச்சார்பற்ற வகை
கொண்டாட்டங்கள்இடத்தைப் பொறுத்து மாறும்.
நாள்அக்டோபர் 31
தொடர்புடையனசம்ஹைன், புனிதர் அனைவர் பெருவிழா

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

வரலாறு

ஆலோவீன் பழமையான செல்டிக் திருவிழாவில் இருந்து வந்தது.[5]. சமஹைன் திருவிழாவானது கேல் நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படுகிறது. பல சமயங்களில் [6] இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.[7]

இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. அல்லது கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.[8][9]

அடையாளங்கள்

ஆலோவீன் நாளன்று பழைய எலும்புக்கூடுகளை முன்னிலைப்படுத்துவார்கள். இது அவர்களை விட்டுப் பிரிந்தவர்களை குறிப்பிடுகிறது. ஐரோப்பாவிலிருந்தான வழக்கத்தில் முதன்முதலில் டர்னிப் காய்கறியில் தீய ஆவியின் முகம் செதுக்கப்பட்டது. அதற்குள் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது ஜேக்-ஓ-லாந்தர் (ஜேக்கின் விளக்கு) என்று அறியப்படுகிறது.[10]

இதன் பின்னணி செவிவழிக் கதையாக கூறப்படுவது: ஜேக்[11] என்ற பொறாமை குணம் கொண்ட, சூதாடும் வழக்கமுள்ள குடிக்கும் பழக்கமுள்ள ஒரு விவசாயி பேயானது மரத்தில் ஏறுமாறு செய்து பின்னர், அது ஏறுகின்ற சமயத்தில் அதன் கிளையை குறுக்காக வெட்டினார். இதற்குப் பழி வாங்கும் விதமாக பேயானது ஜேக் தனது ஒரே விளக்கினைக் கொண்டு பூமியில் அங்கும் இங்குமாக இரவில் அலையுமாறு சாபம் கொடுத்தது. வட அமெரிக்காவில் [12] டர்னிப்புக்குப் பதிலாக பறங்கிக்காய் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி எளிதாகக் கிடைப்பது மட்டுமில்லாமல் மிகவும் பெரிதாகவும் செந்நிறத்திலும் இருக்கிறது.

ஆலோவீனோடு தொடர்புடைய உருவச் சித்திரங்கள் அனைத்தும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வந்துள்ளன. தேச வழக்கங்களும், கோதிக் மற்றும் திகில் இலக்கியங்களும், பிராங்கன்ஸ்டீன், தி மம்மி போன்ற பெரும்புகழ் படைத்த திகில் திரைப்படங்களும் இதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளன.[13][14] இந்தப் பண்டிகை காலத்தில் இத்தகைய ஆலோவீன் அடையாளங்களைக் கொண்டு வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன.

ஆரஞ்சு மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்த கொண்டாட்டத்தில் தொடர்புபட்ட வண்ணங்களாய் உள்ளன. இவை இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பதாய் கருதப்படுகிறது.[15]

பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

ஆடை அலங்கரிப்புகள்

ஆலோவீன் ஆடை அலங்கரிப்புகள் என்பது பெருத்த உருவங்கள் கொண்ட பேய்கள், முறையற்றபடி மந்திர சக்தியை பயன்படுத்தும் சூனியக்காரிகள், எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் ஆகியவற்றின் அடையாளங்கள் கொண்ட உடை அலங்கரிப்புகளாக இருக்கும். இந்த ஆடை அலங்கரிப்புகள் பாரம்பரிய வகை என்பது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், மற்றும் நவீன நாகரீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.

அமெரிக்க தேசிய சில்லரை விற்பனைக் கூட்டமைப்புக்காக பிக் ரிசெர்ச் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 2005 ஆம் ஆண்டில் 53.3% நுகர்வோர் ஆலோவீன் அலங்கரிப்புகளுக்காக சராசரியாக $38.11 செலவிடத் திட்டமிட்டிருந்ததாக கண்டறியப்பட்டது. இது முந்தைய வருடத்தை விட $10 அதிகமான தொகையாகும்.[16]

யுனிசெப்

அமெரிக்காவில் யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் 1950 ஆம் ஆண்டில் இவ்வழக்கம் அறிமுகமானது. பின்னர் அது 1952 ஆம் ஆண்டில் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கைகளில் சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து யுனிசெப்புக்கான ஆலோவீன் நிதியைப் பெற்றுத் திரும்புவர். இத்தகைய வகையில் இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டில் கனடாவில் இத்திட்டம் நிர்வாக மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது.[17]

விளையாட்டுகளும் மற்ற செயல்பாடுகளும்

ஆலோவீன் வாழ்த்து அட்டை

ஆலோவீன் பாரம்பரியத்தில் பல விளையாட்டுகள் உள்ளன.

ஆப்பிள் விளையாட்டில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீருக்குள் ஆப்பிள் இடப்படும். உருண்டோடிக் கொண்டிருக்கும் அந்த ஆப்பிளை கைகளைப் பயன்படுத்தாமல் தங்கள் பற்களால் பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். சில ஆட்டங்களில் பற்களில் பிடித்துக் கொண்டுள்ள ஒரு கரண்டியை அந்த உருண்டோடும் ஆப்பிள் மீது இட வேண்டும் என்பதுண்டு.[18]

இதே போல் உணவுப் பண்டம் ஒரு நூலில் கட்டப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்க, அதனைக் கையால் தொடாமல் உண்ண வேண்டும் என்பது இன்னொரு விளையாட்டு. இவ்வாறு உண்கையில் முகம் முழுவதும் உணவுப் பொருளின் பிசுபிசுப்பு ஒட்டிக் கொண்டு விடும்.[19]

புய்சினி ("பூசீனி" என அழைக்கப்படும்) எனும் அயர்லாந்து விளையாட்டின்படி ஒரு மனிதன் கண்கட்டிய நிலையில் ஒரு மேசை முன்பாக உட்காரவைக்கப்படுகிறான். இம்மேசை மீது பல திரவங்கள் நிரப்பிய சிறிய கோப்பைகள் வைக்கப்படுகின்றன. கண் கட்டிய மனிதன் ஒரு கோப்பையில் உள்ள திரவத்தை அல்லது அந்த கோப்பையைத் தொடுகிறான். அந்த கோப்பையைப் பொறுத்து அவனது வருங்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. பாரம்பரியமான அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து வழக்கத்தில் எதிர்கால மனைவியை கணிப்பது எவ்வாறு என்றால் ஒரு ஆப்பிளை நீளவாக்கில் வெட்டி அந்த பகுதியை ஒருவருடைய தோள்களுக்கு மேலாக போட வேண்டும். அந்த பகுதியானது கீழே விழும் போது எதிர்கால மனைவியின் பெயரின் முதல் எழுத்தை சுட்டிக் காட்டுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள் ஒரு இருட்டான அறையில் ஆலோவீன் வெளிச்சத்தில் உட்கார்ந்து கண்ணாடியைப் பார்த்தால் எதிர்கால கணவனின் உருவம் கண்ணாடியில் தெரியும். திருமணத்திற்கு முன்பாக வருங்கால கணவன் இறக்க நேரிடின் ஒரு மண்டையோடு கண்ணாடியில் தோன்றும் என்பதாய் அவர்கள் நம்பினர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.

பொழுதுபோக்கு இடங்கள்

பார்வையாளர்களுக்கு ஒரு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்படுகின்றன.[20][21] இந்த வகை திகிலான ஈர்ப்புகள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 300-500 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித் தருவதாக கணக்கிடப்படுகிறது.[20] இந்த ஆர்வம் காரணமாக, தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுக்காகவும், மற்றும் அதைச் சார்ந்த ஆடை அணிவிப்புகளுக்காகவும் பெரும் செலவுகளை நிறுவனங்கள் செய்கின்றன.[22]

உணவுகள்

சுவையான ஆப்பிள் இனிப்பு

இந்த விடுமுறையானது வருடாந்திர ஆப்பிள் அறுவடையின் போது வருவதால் இனிப்பு ஆப்பிள்கள் ஆலோவீன் கால விருந்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த ஆப்பிள்கள் ஒரு ஈரப்பதமான இனிப்புத் திரவத்தில் உருட்டப்படுகின்றன. சில சமயம் கடலை வகைகளிலும் அவை உருட்டப்படுகின்றன.

ஒரு சமயம் இந்த உருட்டலில் கூர்மையான ஊசி போன்ற பொருட்களும் சேர்ந்து உருட்டப்படுவதாக செய்திகள் வெளியாயின.[23] அதன்பின் இப்பழக்கம் வெகுவாய்க் குறைந்து போனது.[24] ஆயினும் இத்தகைய சம்பவங்கள் ஏதும் நேர்ந்து இதுவரை தீவிர காயங்கள் ஏதும் ஏற்பட்டதாக செய்தியில்லை. அநாவசிய பரபரப்பு இந்த விடயத்திற்கு வேண்டுமென்றே கொடுக்கப்பட்டு பீதி கிளப்பப்பட்டதாக பலர் நம்புகின்றனர். இத்தகைய தருணங்களில் சில குழந்தைகள் மற்றவர்கள் கவனத்தைக் கவர தங்களது ஆப்பிள்களில் தாங்களே ஊசி போன்றவைகளை வைத்த சம்பவங்கள் நேர்ந்துள்ளன. [சான்று தேவை]

ஆப்பிள், பூசணி மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் ஏராளமான உணவுப் பொருட்கள் பல்வேறு நாடுகளிலும் ஆலோவீன் சமயத்தில் தயாரிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

உலகளாவிய கொண்டாட்டம்

ஆலோவீன் எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை. அவரவர் நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து இவை கொண்டாடப்படுவது மாறுகின்றது. அமெரிக்காவில் கொண்டாடப்படுவதை வைத்து அதன் உலகளாவிய தாக்கம் அறியப்படுகிறது.

மதம் சார்ந்த கருத்துக்கள்

வட அமெரிக்காவில் ஆலோவீனைப் பற்றிய கிருத்துவ பார்வையானது முற்றிலும் மாறுபடுகிறது. சில கிருத்துவ அமைப்புகள் இந்த நாளை கிருத்துவக் கலாச்சாரத்திற்கு உட்பட்ட ’அனைத்து துறவியர் தினமாக’க் கூறுகின்றன.[25][26] இந்த கருத்தை மறுக்கும் கிருத்துவர்கள் இதனை புதுப்பித்தல் நாளாகக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதைக் கருதுகின்றனர்.[27] செல்டிக் கிருத்தவர்கள் இந்த நாள் குறித்ததாக சம்ஹைன் செய்திகளைப் பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.[28]

பல கிருத்துவர்கள் ஆலோவீன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதச்சார்பற்ற நாளாகவே கருதுகின்றனர். இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலோவீன் நாளை ஒரு கிருத்துவ மதம் சம்பந்தப்பட்ட நாளாகவே கருதுகின்றன.[1][29]. பெரும்பான்மையான கிருத்துவர்கள் உண்மையில் இதில் சாத்தான்கள் பற்றிய எதுவும் இல்லை என்றும் குழந்தைகளின் மத உணர்வுகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறுகின்றனர். இறப்புகளைப் பற்றியும் அவை குறித்த கொள்கைகளைப் பற்றியும் செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த முறைகள் ஒரு பாடமாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.[28] கிருத்துவர்களில் சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் அடிப்படைவாதிகளும் ஆலோவீன் கருத்துக்களை மற்றும் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். இதை அற்பமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.[2][30] சிலர் ஆலோவீன் கொள்கைகள் முற்றிலுமாக கிருத்துவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாகக் கூறுகின்றனர்.[31] இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய இறந்தோர் திருவிழாவைச் சார்ந்தது என்பது அவர்கள் வாதம்.[30].

கிருத்துவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஆலோவீன் கருத்துக்களில் மாறுபடுகின்றன. செல்டிக் பகன் இனத்தவர் இந்த பருவத்தை ஆண்டில் புனிதமானதாய் கருதுகின்றனர்.[3]

குறிப்புகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆலோவீன்&oldid=3927554" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை