உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research (IATR)) 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

வரலாறு

1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26-ஆவது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்றுவித்தனர்.

முதல் மாநாடு

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் காலாண்டு இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் (எட்டு நாட்கள்) நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாம் மாநாடு

1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10-ஆம் நாட்களில் (எட்டு நாட்கள்) சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.

மூன்றாவது மாநாடு

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970-இல் நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 (நான்கு நாட்கள்) காலப்பகுதியில் நடைபெற்றது.

இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.

நான்காவது மாநாடு

1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன்படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10-ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

5-ஆவது முதல் 8-ஆவது மாநாடு வரை

முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-ஆவது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது[1].

ஐந்தாவது மாநாடு 8 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ஆம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாலம்பூரில் 6-ஆவது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-ஆவது மாநாடு 1989 டிசம்பர் 1-8-இல் நடைபெற்றது. அதன் பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5-இல் நடத்தப் பெற்றது.

ஒன்பதாவது மாநாடு

எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்[2]. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது.[3][4]

அதிகாரபூர்வமான 9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு[5] 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும்.[6].

10-ஆவது மாநாடு

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 சூலை 3 முதல் 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்றது.[7] உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.[8]

11-ஆவது மாநாடு

பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2023 சூன் 16 முதல் 18 வரை சிங்கப்பூரில் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டது.[9][10] ஆனால், அம்மாநாடு அங்கு நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக இரண்டு போட்டி மாநாடுகள், அதே ஆண்டில் சூலை 7 முதல் 9 வரை இந்தியாவின் சென்னையிலும்,[11][12] சூலை 21 முதல் 23 வரை மலேசியாவின் கோலாலம்பூரிலும் நடைபெற்றன.[13][14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை