காபூசு பின் சயீது அல் சயீது

காபூசு பின் சயீது அல் சயீது (Qaboos bin Said Al Said, அரபு மொழி: قابوس بن سعيد آل سعيد‎; Qābūs ibn Sa'īd Āl Sa'īd; 18 நவம்பர் 1940[1] – 10 சனவரி 2020) என்பவர் 1970 முதல் 2020 இல் இறக்கும் வரை ஓமான் சுல்தானாகப் பதவியில் இருந்தவர். அல்-சயீது அரசர்களின் 14-வது தலைமுறையான இவர்,[2] மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அரபு உலகில் மிக நீண்டகாலம் நாடொன்றின் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றவர்.[3]

காபூசு இப்னு சயீது அல் சயீது
Qaboos bin Said Al Said
பாரம்பரிய உடையில் ஓமான் சுல்தான்
ஓமான் சுல்தான்
ஆட்சிக்காலம்23 சூலை 1970 – 10 சனவரி 2020
முன்னையவர்சயீது பின் தைமூர்
பின்னையவர்ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது
பிறப்பு(1940-11-18)18 நவம்பர் 1940
சலாலா, ஓமான்
இறப்பு10 சனவரி 2020(2020-01-10) (அகவை 79)
ஓமான்
துணைவர்
சயீதா கமீலா
(தி. 1976; ம.மு. 1979)
மரபுஅல் சயீது மாளிகை
தந்தைசயீது பின் தைமூர்
தாய்மசூன் அல்-மசானி
மதம்இபாதி இசுலாம்

மஸ்கத் மற்றும் ஓமானின் சுல்தான் சயீது பின் தைமூரின் ஒரேயொரு மகனான காபூசு பின் சயீது இங்கிலாந்தில் கல்வி கற்றவர். சாண்ட்கர்சுட் அரச இராணுவக் கல்வி நிலையத்தில் படித்துப் பட்டம் பெற்றார். 1970இல் பிரித்தானியாவின் உதவியுடன் நடந்த ஒரு இராணுவப் புரட்சியில் தனது தந்தையை ஆட்சியில் இருந்து கவிழ்த்து விட்டு சுல்தானாக முடிசூடினார். இதனை அடுத்து மசுக்கட்டும் ஓமானும் என இருந்த நாட்டின் பெயரை ஓமான் என மாற்றினார்.

இவரது தலைமையின்கீழ் நாட்டின் வாழ்க்கைத் தரம் மற்றும் அபிவிருத்தி பெரும் வளர்ச்சி கண்டது. நவீனமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தி ஓமானின் சர்வதேசத் தனிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடிமை முறை ஒழிப்பு, தோஃபர் கிளர்ச்சியின் முடிவு, ஓமானின் அரசியலமைப்பு அறிவித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும். பிற்கால வாழ்க்கையில் மோசமான உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட காபூசு 2020 சனவரி 10 இல் இறந்தார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. மூன்று சகோதரிகள் உள்ளனர். அதனால், ஏனைய அரபு நாடுகள் போலன்றி இவர் இதுவரை தன்னுடைய வாரிசு யார் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனால் தனக்குப் பின் தனது வாரிசாக அவரது உடன்பிறவா சகோதரரான ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது என்பவரைப் பெயரிட்டு உயில் எழுதி முத்திரையிட்டு இராணுவ அமைச்சரிடம் கொடுத்திருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

காபூசு இபாதி என்ற இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களே ஓமானின் ஆட்சியாளர்களாக பல தலைமுறைகளாக உள்ளனர். ஓமான் இசுலாமிய நாடாக இருந்தாலும், காபூசு நாட்டில் சமய சுதந்திரத்தை வழங்கினார். ஓமானில் நான்கு கிறித்தவ தேவாலயங்களையும், பல இந்துக் கோவில்களையும் கட்ட நிதியுதவி செய்துள்ளார்.[4] கபூசு பின் சயீது மேல்நாட்டுச் செந்நெறி இசையின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவரது 120 உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு மத்திய கிழக்கில் அதிக நற்பெயரைக் கொண்டுள்ளது.[5]

1976 மார்ச் 22 இல், காபூசு தனது உறவினரான கமீலா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1979 இல் இவர்கள் மணமுறிவு பெற்றனர்.[6] கமீலா 2005 இல் வேறொருவரைத் திருமணம் புரிந்தார்.[7] கபூசிற்கு பிள்ளைகள் கிடையாது. மூன்று சகோதரிகள் உள்ளனர். அதனால், ஏனைய அரபு நாடுகள் போலன்றி இவர் தன்னுடைய வாரிசு யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் தனக்குப் பின் யார் ஆட்சியில் வரவேண்டும் என்று உயில் எழுதி முத்திரையிட்டு இராணுவ அமைச்சரிடம் கொடுத்துள்ளார்.[8]

1995 செப்டம்பரில் சலாலாவில் அவரது அரண்மனைக்கு அருகில் வாகன விபத்தொன்றில் காயமடைந்தார். இவ்விபத்தில் இவரது முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கயீசு பின் அப்துல் முனிம் அல் சவாவி என்பவர் உயிரிழந்தார்.[9]

மறைவு

2015 இல், கபூஸ் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.[10][11] 2019 திசம்பர் 14 இல், இவர் பெல்சியத்தில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கிய பின்னர் இவரது ஆயுட்காலம் மிகக் குறுகியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவர் தனது சொந்த நாட்டில் இறக்க விரும்பியதால் நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.[12] 2020 சனவரி 10 இல் தனது 79-வது அகவையில் காலமானார். இவரது இறப்பிற்காக ஓமான் அரசு மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தது.[13][14]

அடுத்த சுல்தான்

பாரசீக வளைகுடாவின் ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போலல்லாமல், காபூசு தனது வாரிசைப் பகிரங்கமாகப் பெயரிடவில்லை. அரசியலமைப்பின் 6 வது பிரிவின்படி, பதவி வெற்றிடம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குள் ஓமானிய அரச குடும்பம் ஒரு புதிய சுல்தானைத் தெரிவு செய்ய வேண்டும். அரச குடும்பப் பேரவை அடுத்த சுல்தானை அறிவிக்கத் தவறினால், காபூசு கடைசியாக எழுதி வைத்த உயில் ஓமானின் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், உச்ச நீதிமன்றத் தலைவர்கள் மற்றும் இரு நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் தலைவர்கள் முன்னிலையில் திறக்கப்பட வேண்டும்.[15]

காபூசிற்குப் பிள்ளைகளோ சகோதரர்களோ இல்லை. ஆனாலும், ஓமான் அரச குடும்பத்தில் வேறு ஆண் உறவினரும், தந்தை-வழி மாமாக்களும் குடும்பத்தினரும் இருந்தனர். 2020 சனவரி 11 அன்று, இறந்த சுல்தான் காபூசு பின் சயீதின் இரகசியக் கடிதத்தை ஓமானிய உயர் அதிகாரிகள் திறந்தனர் என ஓமான் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. இதற்கமைய கைத்தாம் பின் தாரிக் அல் சயீது நாட்டின் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[16] கைத்தாம் காபூசின் முன்னாள் மைத்துனரும் ஆவார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை