பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் (International Day for Biological Diversity) அல்லது உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) தற்போது ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[1]

புவியில் இருந்து அப்பல்லோ 17 விண்கலத்தின் காட்சி

பின்னணி

ஐநா பொதுச் சபையின் இரண்டாவது குழுவினால் 1993 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை இந்நாள் திசம்பர் 29 ஆம் ஆள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நாளிலேயே பல்லுயிர் பெருக்கத்திற்கான மரபுநெறி உருவாக்கப்பட்டது. 2000 திசம்பர் 20 இல்,[2] 1992 மே 22 ரியோ பூமி உச்சி மாநாட்டை நினைவுகூரும் முகமாகவும், திசம்பர் இறுதியில் வரும் பல விடுமுறை நாட்களைத் தவிர்க்கும் பொருட்டும் இந்நாள் மே 22 ஆம் நாளுக்கு மாற்றப்பட்டது.[3][4][5]

இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றன. இந்த உலகிலே, பல வடிவங்களிலும், அளவுகளிலும் உயிரினங்கள் வாழுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள், முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவு முறைகள், வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில், கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. உயிரியற் பல்வகைமை இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

நாம் உண்ணும் உணவில் 90 சதவீதம் இந்த உலகில் வாழும் தாவரங்களையும், விலங்குகளையும் சார்ந்து தான் இருக்கின்றன. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும் மருந்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த உயிரினங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள் தான். இருப்பிடங்கள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்கும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறு நமக்கு இன்றியமையாத பொருட்களான உணவு, உடை, உறவிடம் என்ற காரணிகளுக்கு நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. பல்லுயிர் பெருக்கம் இயற்கையாக கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கின்றது. வளி மண்டலத்தில் நடைபெறும் வேதியியல் மற்றும் நீர் சுழற்சிகளை சமன்படுத்துகிறது. நீரை தூய்மை படுத்துதல்(மீன்கள்) மற்றும் மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து(மண்புழு) வளமான நிலத்தை கொடுக்கிறது. பல்வேறு ஆய்வுகளின் படி இப்படிப்பட்ட இயற்கையான சூழ்நிலையை நம்முடைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் அமைத்து கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த உயிரியல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதுக்கு உலக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. மனிதர்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காகவே பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கருப்பொருளுடன் தொடர்பு படுத்தி சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் உலக பல்லுயிர் தினம், இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம். உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலருமான வெங்கடேஷ் கூறியதாவது, வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே ‘பல்லுயிரின பாதுகாப்பு நாடு’ என்பதுதான். மரம், செடி, கொடி, பாலூட்டி, ஊர்வன, பறப்பன, நீர், நில வாழ் என பல்வேறு உயிரினங்கள் வாழத் தகுதியான நிலப்பரப்பு நம்முடையது. தமிழகத்தில் நீலகிரி, ஆனை மலை, பொதிகை மலை போன்ற மலைப் பிரதேசங்கள் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை, ஏரிகள், ஆறுகள், கழிமுகங்கள், சதுப்பு நிலங்கள் போன்ற பல்வேறு விதமான புவியியல் அமைப்புகள் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களில் பல்வகை உயிர்கள் சுதந்திரமாக வாழ்கின்றன. நமது பொறுப்பற்ற நடவடிக்கையால் தற்போது கிடைப்பதற்கரிய இயற்கையை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோம். முன்னோர்கள் வளர்த்த, பார்த்த பல தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் இப்போது இல்லை. அவற்றின் பெயர்கள் கூட இன்றைய சந்ததியினருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது, செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்தினை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை ‘டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் ‘விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் ‘வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்.

தேவைக்கேற்ப இயற்கையைப் பயன்படுத்த வேண்டும். பேராசைக்கு இயற்கையை சுரண்டக் கூடாது. தற்போது மனிதர்கள் உணவை கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இயற்கை வளம் என்பது வங்கியில் சேமிக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்து பயன்படுத்தினால் நமது பணம் அப்படியே இருக்கும். வாழ்நாள் முழுமைக்கும் வாழ்வாதாரமாக அது நம்மை பாதுகாக்கும். பணத்தை மொத்தமாக எடுத்து செலவழித்தால் என்ன நிலைமை ஏற்படுமோ அதே கதிதான் இயற்கையை மொத்தமாக பயன்படுத்தினால் ஏற்படும்.  மரம் என்பது பூமிக்கு பாரமான உயிரினம் இல்லை. அது தன்னுடைய ஒவ்வொரு உறுப்பாலும், இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும். பறவைகளும், விலங்குகளும் அதேபோலத்தான்.

இந்த கருப்பொருட்களை பாது காக்காவிட்டால் தற்போது பூமியில் அதிகரித்து வரும் கொசுக்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும் தலைப்பிரட்டைகள் காணாமல் போகும். மலேரியா, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் முன்பை விட வேகமாக பரவி மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய ஏரிகளிலும், குளங்களிலும் பறவைகள் தென்பட்டால்தான் அந்த நீர் பயன்படுத்துவதற்கு உகந்தது. ஆனால், மனிதர்களால் கழிவும், குப்பையுமாகக் காணப்படும் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் பறவைகள் எப்படி வரும். இயற்கை சிலந்தியைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும் மொத்த இடத்திலும் அதிர்வு ஏற்படும். எனவே, உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித்தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். பூமியில் வாழ மனிதர்களாகிய நமக்கு உரிமை இருப்பது போல, மற்ற விலங்கினங்களுக்கும், தாவர இனங்களுக்கும் உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கருப்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் ஒரு கருப்பொருள் ஒன்றின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றது.

அண்டுகருப்பொருள்[6]
2000காடுகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது
2003பல்லுயிர் மற்றும் வறுமை ஒழிப்பு - நிலையான வளர்ச்சிக்கான சவால்கள்
2004பல்லுயிர்: அனைவருக்கும் உணவு, நீர் மற்றும் ஆரோக்கியம்
2005பல்லுயிர்: நமது மாறிவரும் உலகத்திற்கான ஆயுள் காப்பீடு
2006உலர் நிலங்களில் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும்
2007பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம்
2008பல்லுயிர் மற்றும் விவசாயம்
2009ஊடுருவும் வேற்று இனங்கள்
2010பல்லுயிர், வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்பு
2011காடு பல்லுயிர்
2012கடல் பல்லுயிர்
2013நீர் மற்றும் பல்லுயிர்
2014தீவு பல்லுயிர்
2015உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு
2016பல்லுயிர் பெருக்கம்; மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்துதல்
2017பல்லுயிர் மற்றும் நிலையான சுற்றுலா
2018பல்லுயிர் பெருக்கத்திற்கான 25 ஆண்டுகால நடவடிக்கையைக் கொண்டாடுகிறோம்
2019நமது பல்லுயிர், நமது உணவு, நமது ஆரோக்கியம்
2020எங்கள் தீர்வுகள் இயற்கையில் உள்ளன
2021இயற்கையின் தீர்வின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம்
2022அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை