புதிய ஏற்பாட்டு இயேசு வரலாறு

புதிய ஏற்பாட்டு இயேசு வரலாறு (Life of Jesus in the New Testament) என்ற தலைப்பில், விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி நமக்குத் தரப்படும் தகவல் அடிப்படையில் இயேசுவின் வரலாற்றை எடுத்துரைக்கும் முயற்சி குறிக்கப்படுகிறது.

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படத்தொகுப்பு: நடுப்பகுதியின் 26 கட்டங்களில் இயேசுவின் துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் காட்டப்படுகின்றன. ஓவியர்: தூச்சியோ தி புவோனின்சேஞ்ஞா (சுமார் 1255-1318)[1]

இந்த நற்செய்தி நூல்களே இயேசுவின் வரலாற்றுக்கு முதன்மை ஆதாரங்கள்.[2][3]ஆயினும், புதிய ஏற்பாட்டின் பிற நூல்கள் சிலவும் இயேசுவைப் பற்றிய சில தகவல்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நற்செய்தி நூல்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட புனித பவுலின் திருமுகங்கள் இயேசுவின் இறுதி இராவுணவு போன்ற நிகழ்ச்சிகள் பற்றிப் பேசுகின்றன. [2][3][4]திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் இயேசுவின் விண்ணேற்றம் பற்றிக் கூறப்படும் செய்திகள், அப்பொருள் பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைவிட அதிக அளவில் உள்ளன. (திருத்தூதர் பணிகள் 1:1-1)

நற்செய்திகளின்படி இயேசுவின் வரலாற்றுச் சுருக்கம்

இயேசுவின் முன்னோர் பற்றிய தகவல்களும் அவருடைய பிறப்புப் பற்றிய தகவல்களும் நான்கு நற்செய்திகளுள் மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் தரப்படுகின்றன. அந்நற்செய்திகள் மத்தேயு, மற்றும் லூக்கா ஆகும்.

இயேசு யூதேயாவின் பெத்லகேமில் ஒரு கன்னியிடமிருந்து பிறந்தார் என்ற செய்தியை மத்தேயுவும் லூக்காவும் தருகின்றனர். மத்தேயு நற்செய்தியில் கீழ்த்திசை ஞானிகள் ஒரு விண்மீனைக் கண்டு அதைத் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேமுக்குச் சென்று “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவருக்கு” காணிக்கைகள் அளித்தார்கள் (மத்தேயு 2). ஏரோது அரசன் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருந்த ஆண் குழந்தைகளையும் கொன்ற செய்தியும் திருக்குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடிச் சென்ற செய்தியும், திரும்பிவந்து நாசரேத்தில் குடியேறிய செய்தியும் மத்தேயுவில் உள்ளன.[5][6]

நற்செய்திகளின் படி, இயேசுவின் பணி வாழ்க்கை அவருடைய திருமுழுக்கிலிருந்து தொடங்குகிறது. இயேசுவுக்கு சுமார் 30 வயது ஆனபோது அவர் திருமுழுக்கு யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார். பின்னர் இயேசு பாலத்தீனத்தின் கலிலேயாப் பகுதியில் இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவித்து, சீடர்களைச் சேர்த்துக்கொண்டார்.[7][8]

இயேசுவின் சீடர்களுள் ஒருவரான பேதுரு இயேசுவை “மெசியா” என்று அறிக்கையிடுகிறார். அதன் பின் இயேசு ஒரு மலைக்குச் சென்று அங்கு மூன்று சீடர்களின் முன்னிலையில் தோற்றம் மாறுகின்றார்.[9][10]திருமுழுக்கு யோவானின் இறப்பும், இயேசுவின் உருமாற்றமும் நிகழ்ந்தபின் இயேசு எருசலேமை நோக்கி இறுதிப் பயணத்தை மேற்கொள்கிறார். அதற்கு முன்னர் அவர் தாம் துன்பங்கள் பலவற்றை ஏற்று, சிலுவையில் அறையப்பட்டு எருசலேமில் உயிர்துறக்கப் போவதாக முன்னறிவிக்கின்றார்.[11]

இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார். எருசலேமில் இயேசுவுக்கும் யூத சமயத்தில் ஆழ்ந்த பிடிப்புடைய பரிசேயர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. மேலும் இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யூதாசி இஸ்காரியோத்து இயேசுவின் எதிரிகளிடம் முப்பது வெள்ளிக்காசுக்கு அவரைக் காட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார். [12][13][14]

இயேசு எருசலேமில் போதித்துவந்த வேளையில், இறுதி வாரத்தில் அவர் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இராவுணவை உட்கொள்கின்றார். மறுநாள் அவர் யூதாசு இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்படுகிறார். இயேசு கைது செய்யப்படுகின்றார். விசாரணைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றார்.[15]

இயேசு என்ன குற்றம் செய்தார் என்று விசாரித்தவர்கள் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட்டு, சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.

இயேசுவின் சிலுவையில் இறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து, தம் சீடர்களுக்குக் காட்சியளிக்கின்றார். இது நாற்பது நாள்கள் நிகழ்கின்றது. அதன்பின் இயேசு விண்ணகம் ஏகிச் செல்கின்றார்.[16][17]

இயேசுவின் குலமரபும் பிறப்பும்

இடையர்கள் இயேசுவை வணங்குதல். ஓவியர் கெரார்டு ஃபான் ஹோந்தோர்ஸ்ட். ஆண்டு: 1622

இயேசுவின் குலமரபுப் பட்டியலும் அவருடைய பிறப்பு நிகழ்ச்சியும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களுள் இரண்டில் காணப்படுகின்றன. அதாவது, மத்தேயு, லூக்கா என்னும் இரு நற்செய்தியாளர்கள் அச்செய்திகளைத் தருகின்றனர் (மத்தேயு 1:1-17; லூக்கா 3:23-38). லூக்கா இயேசுவின் குலமரபை அவருடைய தாய் மரியாவிலிருந்து பின்னோக்கி முதல்மனிதரான ஆதாம் வரையும், அதோடு ஆதாமிலிருந்து கடவுள் வரையும் கொண்டுசெல்கிறார். மத்தேயு, ஆபிரகாமிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தலைமுறையாகக் குறிப்பிட்டு இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு வரையும் குறிப்பிடுகின்றார்.[18]

மத்தேயுவும் லூக்காவும் புனித யோசேப்பு இயேசுவின் இயற்கையான தந்தை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இயேசுவின் தாய் கடவுளின் வல்லமையால் இயேசுவைக் கருத்தரித்து ஈன்றார் என்று இரு நற்செய்தியாளரும் வலியுறுத்துகின்றனர்.[19]

இரு நற்செய்தியாளரும் புனித யோசேப்பு தாவீது அரசரின் வாரிசு என்றும், ஆபிரகாமின் வாரிசு என்றும் காட்டுகின்றனர். இருவரும் தருகின்ற இயேசுவின் குலமரபுப் பட்டியல்களும் ஆபிரகாமிலிருந்து தாவீது அரசர் வரையுள்ள தலைமுறைகளை, ஒரே ஒரு பெயரைத் தவிர, ஒரே விதத்தில் காட்டுகின்றன. ஆனால், தாவீதிலிருந்து புனித யோசேப்பு வரையிலான தலைமுறைகளைக் குறிப்பிடும்போது அந்த இரு பட்டியல்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.[20][21]

மத்தேயுவில் புனித யோசேப்பு என்பவர் யாக்கோபின் மகன் என்றுள்ளது; ஆனால் லூக்காவில் யோசேப்பு ஏலியின் மகன் என்று காணப்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு என்பதை அறிஞர் பல வகைகளில் விளக்குகின்றனர். ஒரு விளக்கத்தின்படி, மத்தேயு இயேசுவின் குலமுதுவர் பட்டியலை புனித யோசேப்பின் வழிமரபைக் கண்முன்கொண்டு பார்க்கிறார்; லூக்காவோ இயேசுவின் அன்னையாகிய மரியாவின் வழிமரபைக் கருத்தில் கொண்டு எடுத்துக்கூறுகின்றார். [22][23][24]

இயேசுவின் பிறப்புப் பற்றிய தகவல்களை மத்தேயுவின் லூக்காவும் வெவ்வேறு விதங்களில் தருகின்றனர். அச்செய்திகளைத் தமக்குள் பொருத்தமான விதத்தில் இசைவுற எடுத்துக்கூற முடியுமா என்பது பற்றி அறிஞரிடையே ஒருமித்த கருத்து இல்லை.

சிலர், இயேசுவின் பிறப்புப் பற்றி மத்தேயுவும் லூக்காவும் தரும் செய்திகள் வரலாற்றுத் தகவல்கள் அல்லவென்றும், அவை இரு குறிப்பிட்ட இறையியல் கருத்தை எடுத்துக் கூறும் வகையில் நற்செய்தி ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டவை என்றும் கூறுவர்.[25][26][27][28][29][30][31][32]

வேறு சில அறிஞர்கள், மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற செய்திகளுக்கிடையே இருக்கின்ற ஒப்புமையைச் சுட்டிக்காட்டி, அவை ஒன்றுக்கொன்று முரணாக இல்லை என்பதையும் குறிப்பிடுகின்றனர்.[33]

இயேசுவின் பணி வாழ்வு

இயேசு பன்னிரு திருத்தூதர்களை அழைத்து அவர்களை நற்செய்தி உரைக்க அனுப்பினார். ஓவியர்: தொமேனிக்கோ கிர்லாந்தாயோ. ஆண்டு:1481

இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான கட்டங்கள் இவை:

  • இயேசுவின் திருமுழுக்கு
  • இயேசுவின் உருமாற்றம்
  • இயேசுவின் சிலுவைச் சாவு
  • இயேசுவின் உயிர்த்தெழுதல்
  • இயேசு விண்ணேகுதல்[34][35][36]

நற்செய்தி நூல்களின்படி, இயேசுவின் பணி வாழ்வு அவருடைய திருமுழுக்கோடு தொடங்குகிறது.

படக்கலவை

ஆதாரங்கள்

குறிப்புகள்

  •  

மேலும் அறிய

  • Bruce J. Malina: Windows on the World of Jesus: Time Travel to Ancient Judea. Westminster John Knox Press: Louisville (Kentucky) 1993
  • Bruce J. Malina: The New Testament World: Insights from Cultural Anthropology. 3rd edition, Westminster John Knox Press Louisville (Kentucky) 2001
  • Ekkehard Stegemann and Wolfgang Stegemann: The Jesus Movement: A Social History of Its First Century. Augsburg Fortress Publishers: Minneapolis 1999
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை