பெந்தகோஸ்து சபை இயக்கம்

கிறிஸ்தவ சபை

பெந்தகோஸ்து சபை இயக்கம் (Pentecostalism அல்லது Classical Pentecostalism) என்பது கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவாக அமைந்து, தூய ஆவியில் திருமுழுக்கு என்னும் வழியாகக் கடவுள் பற்றிய நேரடி அனுபவம் பெறுவதை வலியுறுத்தும் இயக்கம் ஆகும்.

ஒரு சிறுமி நலம்பெற வேண்டுமென்று பெந்தகோஸ்து சபையினர் மன்றாட்டு நிகழ்த்துதல். கென்டக்கி, 1946

பெந்தகோஸ்து என்னும் சொல்லின் பிறப்பிடம் கிரேக்க மொழி ஆகும். யூத மக்கள் பாஸ்கா திருவிழாவிலிருந்து ஏழு வாரங்கள் கணக்கிட்டு, ஐம்பதாம் நாளில் "அறுவடைப் பெருவிழா" கொண்டாடினார்கள் (காண்க: லேவியர் 23:15-16). அக்கொண்டாட்டம்தான் கிரேக்கத்தில் பெந்தகோஸ்து ("ஐம்பதாம் நாள் விழா") என்ற பெயர் பெற்றது. கிறித்தவர்களைப் பொறுத்தமட்டில் இயேசுவின் சிலுவைச் சாவும் உயிர்த்தெழுதலும் நிகழ்ந்து ஐம்பது நாள்கள் நிறைவுற்றபோது, நம்பிக்கை கொண்டோர்மீது தூய ஆவி இறங்கிவந்து அவர்களைத் திடப்படுத்தினார் என்னும் நம்பிக்கைமீது "பெந்தகோஸ்து" விழா அமைந்தது (காண்க: திருத்தூதர் பணிகள் 2:1-41).

அடிப்படைக் கோட்பாடுகள்

நற்செய்தியை மையமாகக் கொண்ட பிற புரட்டஸ்தாந்து சபைகளைப் போலவே, பெந்தகோஸ்து சபை இயக்கமும் விவிலியத்தில் எந்தவொரு தவறான தகவலும் கிடையாது என்று நம்புகிறது. மேலும், இயேசு கிறித்துவில் நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரும் அவரைத் தம் சொந்த மீட்பராக ஏற்பதிலேயே மீட்பு அடங்குகிறது என்றும் நம்புகிறது.

இந்த இயக்கத்தின்படி, ஒருவர் மனமாற்றம் பெற்று இயேசுவைத் தம் மீட்பராக ஏற்றுக்கொள்வதோடு, தூய ஆவியில் திருமுழுக்கு (அபிசேகம்) என்னும் மற்றொரு சிறப்பு அனுபவத்தையும் பெற்று, தூய ஆவியால் நிரப்பப்பட்டு வாழவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. சிலுவையில் மனித மீட்புக்காக இறந்த இயேசு கிறித்துதான் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கிறார் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு ஏற்பதுவே முதன்மையானது. இவ்வாறு, தூய ஆவியில் "மறுபிறப்பு" அடைய வேண்டும்.

இவ்வாறு தூய ஆவியால் அபிசேகம் செய்யப்படுவோர் வாழ்க்கையில் அதிசயமான ஆன்மிகக் கொடைகள் துலங்கும் என்றும், அவை "பன்மொழி பேசுகின்ற வரம்", "குணமளிக்கும் வரம்" ஆகும் என்றும் பெந்தகோஸ்து இயக்கம் கூறுகிறது. திருச்சபையின் தொடக்க காலத்தில் இக்கொடைகள் செயல்பாட்டில் இருந்ததுபோலவே இற்றை நாட்களிலும் அக்கொடைகளைத் தூய ஆவி அளிக்கிறார் என்பது கருத்து. இதன் அடிப்படையில் பெந்தகோஸ்து இயக்கத்தின் சில பிரிவுகள் "திருத்தூது" அல்லது "முழு நற்செய்தி" என்னும் அடைமொழியைத் தம் பெயர்முன் கொண்டுள்ளன.

பாவத்தை விட்டுவிட்டு மனமாற்றம் அடைவது, புதுப்பிறப்பு அடைவது, நீரில் திருமுழுக்குப் பெறுவது, தூய ஆவியில் திருமுழுக்குப் பெறுவது என்னும் வகையில் ஒருவர் மீட்பு அடைகிறார் என்று பெந்தகோஸ்து சபைகள் பொதுவாக போதிக்கின்றன. தூய ஆவியில் பெறும் திருமுழுக்கு நீரில் பெறும் திருமுழுக்கிலிருந்து வேறுபட்டது என்றும் அச்சபைகள் கருதுகின்றன. ஆவியில் பெறும் திருமுழுக்கு என்பது பெரும்பாலும் ஒருவருக்கு தூய ஆவியில் வல்லமையைக் கொடுத்து அவரைப் பணிக்கும் ஊழியத்திற்கும் தயாராக்குவது ஆகும். அப்போது ஒருவர் தூய ஆவியால் "நிரப்பப்படுகிறார்" என்றும், "அபிசேகம் பெறுகிறார்" என்றும் கூறுவார்கள்.

சுருக்கமான வரலாறு

இயேசு கிறித்துவின் இரண்டாம் வருகை மிக விரைவிலேயே நிகழப்போகிறது என்னும் நம்பிக்கையின் அடிப்படையில், கிறித்தவர்கள் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்றும், தூய்மைபெற வேண்டும் என்றும் ஒரு வேரோட்ட இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. இத்தகைய "இறுதிக் காலத்தில்" தாம் வாழ்வதாகக் கொண்டு, திருச்சபை ஆன்மிக முறையில் புத்துயிர் பெற வேண்டும் என்றும், தூய ஆவியின் ஆன்மிகக் கொடைகளை வாழ்வில் எண்பிக்க வேண்டுமென்றும், உலகெங்கும் நற்செய்தி பரவச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முனைந்து செயல்பட்டனர்.

தூய ஆவியில் திருமுழுக்குப் பெற்றுள்ளோர் யார் என்று அடையாளம் காட்டுவது "பன்மொழி பேசும் வரம்" என்று கூறி, 1900இல் சார்லசு பாராம் என்பவர் அதற்கான அடிப்படை விவிலியத்தில் உள்ளது என்று போதித்தார். உறுதியான இறைநம்பிக்கை இருந்தால் எந்த நோயிலிருந்தும் குணமடையலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். அதன் அடிப்படையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அசூசா வீதியில் "எழுப்புதல் கூட்டங்கள்" மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டன.

அத்தகைய எழுப்புதல் கூட்டங்கள் அமெரிக்கா முழுவதிலும் பெரும் தாக்கம் கொணர்ந்தன. பின்னர் உலகளவிலும் பெந்தகோஸ்து இயக்கம் பரவத் தொடங்கியது.

இன்று, பெந்தகோஸ்து இயக்கத்தின் அனைத்துப் பிரிவுகளுமே தங்கள் தொடக்கம் அசூசா வீதி எழுப்புதல் கூட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று ஏற்கின்றன. ஆயினும் பல பிரிவுகள் தோன்றலாயின.

தொடக்கத்திலிருந்தே "மூவொரு இறைவன் கொள்கை" பற்றிய சர்ச்சை எழுந்தது. இன்று பெந்தகோஸ்து இயக்கப் பிரிவுகள் "மூவொரு இறைவன் கொள்கையை ஏற்பவை" என்றும் ஏற்காதவை என்றும் இரு பெரும் வகைகளாக உள்ளன. பெந்தகோஸ்தே இயக்கத்தில் 700 சபைப் பிரிவுகளும் தனிச்சபைகளும் உள்ளன. மைய அதிகாரம் என ஒன்று இல்லை. இருப்பினும், பல பெந்தகோஸ்து சபைகள் "பெந்தகொஸ்து உலக இணைப்பு" என்னும் அமைப்பின் கீழ் வருகின்றன.

இன்றைய நிலை

இன்று உலகத்தில் சுமார் 279 மில்லியன் பேர் பெந்தகோஸ்து இயக்கத்தைச் சார்ந்தவர்களாகத் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். இந்த இயக்கம் உலகின் தென்கோளப் பகுதியில் அதிகமாகப் பரவி வருகிறது. 1960களிலிருந்து பெந்தகோஸ்து சபையின் சில கூறுகள் மைய நீரோட்ட கிறித்தவ சபைகளாலும் ஏற்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "அருங்கொடை இயக்கம்" (Charismatic Movement) என்ற பெயரில் கத்தோலிக்க திருச்சபை தூய ஆவியின் செயல்பாட்டையும் தூய ஆவி வழங்கும் கொடைகளையும் நம்பிக்கை கொண்டோர் வாழ்வில் ஏற்கிறது. அதுபோலவே மைய நீரோட்ட புரட்டஸ்தாந்து சபைகளும் செய்துள்ளன.

இவ்வாறு பார்க்கும்போது, இன்று உலகெங்கிலும் பெந்தகோஸ்து இயக்கம் என்ற பொதுப்பெயரில் தூய ஆவியின் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து தங்கள் கிறித்தவ நம்பிக்கையை உறுதிப்படுத்தி வாழ்கின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 500 மில்லியன் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.[1]

பின்லாந்து நாட்டின் யிவாஸ்கிலா நகரில் உள்ள ஒரு பெந்தகோஸ்து கோவில் கட்டடம்

கொள்கைகள்

பெந்தகோஸ்து சபைகள் விவிலியத்தை மையமாகக் கொண்டவை. விவிலியம் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது; அதில் யாதொரு தவறும் கிடையாது; தனிமனிதர் மீட்படைய இயேசுவில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று இச்சபைகள் வலியுறுத்துகின்றன.[2] விவிலியம் எழுதப்பட்ட மூல மொழிகளில் யாதொரு தவறும் விவிலியத்தில் இல்லை.[3] நான்கு அடிப்படைக் கொள்கைகள் உள்ளன:

  • இயேசு மீட்பளிக்கிறார் (யோவான் 3:16)
  • தூய ஆவியில் திருமுழுக்கு வழங்குகிறார் (திருத்தூதர் பணிகள் 2:4)
  • எல்லா நோய்களையும் குணமாக்குகிறார் (யாக்கோபு 5:15)
  • மீட்படைந்தவர்களைத் தம்மோடு எடுத்துக்கொள்ள மீண்டும் வரவிருக்கிறார் (1 தெசலோனிக்கர் 4:16-17)

மீட்பு

பிரேசில் நாட்டில் ஒரு பெந்தெகோஸ்து சபைக் கூட்டம்

இயேசுவின் சிலுவைச் சாவு, அடக்கம், உயிர்த்தெழுதல் வழியாக மனிதருக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்கிறது. மனித குலம் கடவுளோடு நல்லுறவு பெறுகிறது என்பதை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.[4] இதுவே கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற "நற்செய்தி". மனிதர் "மறு பிறப்பு" அடைய வேண்டும்.[5] இந்த மறு பிறப்பு என்பது இயேசுவில் நம்பிக்கை கொள்வதன்வழி கடவுளிடமிருந்து வரும் அருளால் இயேசுவை மீட்பராகவும் ஆண்டவராகவும் ஏற்பதில் அடங்கும்.[6] மறு பிறப்பு அடைவதால், நம்பிக்கை கொண்டோர் புதுப்பிக்கப்படுகிறார்கள்; கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகிறார்கள்; கடவுளின் குடும்பத்தில் இடம் பெறுகிறார்கள்; அவர்களிடத்தில் தூய ஆவியின் அர்ச்சிப்புப் பணி தொடங்குகிறது.[7]

மீட்புப் பற்றி பெந்தகோஸ்து இயக்கம் கூறுவது கால்வினின் பார்வையைவிட, ஆர்மீனியப் பார்வையில் அமைந்தது.[8] நம்பிக்கையோடு இயேசு கிறித்துவை ஏற்போர் மீட்படைவர் என்று உறுதியாக இருக்கலாம்; என்றாலும், அவர்கள் அந்த நம்பிக்கையில் தொடர்ந்து நிலைக்க வேண்டும், மனமாற்றம் பெறவும் வேண்டும்.[9]

கடவுள் வழங்கும் மீட்புக்கொடையை ஏற்போர் மீட்படைந்து விண்ணகம் சேர்வர் என்றும், அக்கொடையை வேண்டாம் என்று புறக்கணிப்போர் நரகம் செல்வர் என்றும் பெந்தகோஸ்து சபையினர் நம்புகின்றனர்.[10]

தூய ஆவியில் திருமுழுக்குப் பெறுவதும் பன்மொழி பேசும் வரம் பெறுவதும் கட்டாயம் நிகழவேண்டியதில்லை என்றாலும், பெந்தகோஸ்து சபையைத் தழுவுவோர் மேற்கூறிய அனுபவங்களைப் பெற ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.[11][12][13] மூவொரு இறைவன் கொள்கையை ஏற்காமல் ஒரே இறைவன் மூன்று வகைகளில் தோன்றுவதாக ஏற்கின்ற பெந்தகோஸ்து பிரிவினர் மட்டும் நம்பிக்கையால் மீட்பு கிடைக்கிறது என்னும் கொள்கை தவிர, நீரில் பெறும் திருமுழுக்கும் தூய ஆவியில் பெறும் திருமுழுக்கும் மீட்படைய கட்டாயம் தேவை என்னும் கொள்கையைக் கொண்டுள்ளனர்.

தூய ஆவியில் திருமுழுக்கு

பெந்தகோஸ்து சபைகள் புதிய ஏற்பாட்டில் மூன்றுவிதமான "திருமுழுக்கு" வகைகள் உள்ளதாகக் கொள்கின்றன. அவை:

  • கிறித்துவின் உடலில் திருமுழுக்கு: இது மீட்பைக் குறிக்கிறது. கிறித்துவை நம்புகின்ற ஒவ்வொருவரும் கிறித்துவின் உடலாகிய திருச்சபையில் திருமுழுக்கால் பங்குபெறுகின்றனர். இங்கே தூய ஆவி கருத்தா, கிறித்துவின் உடல் ஊடகம் என்று உள்ளன.[14]
  • நீரில் திருமுழுக்கு: கிறித்துவின் உடலில் இணைவதான திருமுழுக்கு ஏற்கனவே நடந்துவிட்டது என்பதற்கு நீரில் திருமுழுக்கு வெளி அடையாளம் ஆகிறது.[15]
  • தூய ஆவியில் திருமுழுக்கு: இது "கிறித்துவின் உடலில் இணைவதான திருமுழுக்கிலிருந்து" வேறுபடுத்தப்படுகின்ற, வல்லமையளிக்கும் திருமுழுக்கு. இங்கே கிறித்து கருத்தா, தூய ஆவி ஊடகம் என்று உள்ளனர்.[14]

தூய ஆவி ஒவ்வொரு கிறித்தவர் உள்ளும் உறைகிறார் என்றாலும், ஒவ்வொருவரும் அந்த ஆவியால் நிரப்பப்படுவதற்கும், அவரால் ஆட்கொள்ளப்படுவதற்கும் நாட்டம் கொள்ள வேண்டும்.[16] இவ்வாறு அவர்கள் கடவுளின் அன்பினால் நிறைந்தவர்களாக, ஊழியம் புரிகின்ற வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.[17]

ஆவியில் திருமுழுக்கு என்பது எல்லாக் கிறித்தவர்களுக்கும் உரித்தானதே.[18] அதைப் பெற்றிட மனமாற்றமும் புதுப்பிறப்பும் பெறுகின்ற மனநிலை வேண்டும்.

பன்மொழி பேசுகின்ற வரம் ஆவியில் திருமுழுக்குப் பெறுவதால் விளைகின்ற பயனாக வெளிப்படும் என்று பல பெந்தகோஸ்து சபைகள் கருதுகின்றன. ஆயினும் நீண்டகால விளைவாகக் கீழ்வருவன குறிப்பிடப்படுகின்றன: கடவுள் மட்டில் அதிக அன்பு; கடவுளைப் புகழ்ந்து வாழ்த்திடுவதில் ஆர்வம் மேம்படுதல்; உள்ளத்தில் மகிழ்ச்சி; நன்றியுணர்வு தோன்றல்; விவிலிய வாசிப்பில் அதிக ஈடுபாடு; சான்றுபகரும் ஊக்கம்; இறைவேண்டலில் அதிக ஆர்வம் எழுதல் போன்றவை.[19]

குணமளிக்கும் வரம்

"இயேசு குணமளிக்கிறார்" என்பது பெந்தகோஸ்து சபைகளின் முக்கிய கோட்பாடுகளுள் ஒன்று. நோய் நொடிகள் இவ்வுலகில் தோன்றுவது பாவத்தின் விளைவாகத்தான். இயேசு பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க வந்தார். எனவே அவர் குணமளிப்பவராகவும் உள்ளார்.[20] குணம் பெறுவது உடல்சார்ந்தோ, உளம் மற்றும் ஆன்மா சார்ந்தோ இருக்கலாம்.

குணமளிப்பவர் கடவுள் ஒருவரே. விசுவாசத்தோடு மன்றாடும்போது குணம் கட்டாயம் கிடைக்கும் என்றில்லை. கடவுள் துன்பத்தின் வழியாகவும் கற்பிக்கிறார்; நம்பிக்கையின்மையின் காரணமாக குணம் கிடைக்காமலும் இருக்கலாம்.[21] குணம் கிடைக்கவில்லை என்றாலும், நம்பிக்கை தளராமல் இருக்கவேண்டும் (காண்க: யாகப்பர் 5:13-16).[22]

குணமளிக்கும் செயலாக, பிறர்மீது கைகளை வைத்து இறைவேண்டல் செய்வது (காண்க: மாற்கு 16:17-18), இறைவேண்டல் துணிகளை நம்பிக்கையோடு தொட்டு அணிவது (காண்க: திருத்தூதர் பணிகள் 19:11-12) ஆகியவற்றை பெந்தகோஸ்து சபைகள் பரிந்துரைக்கின்றன.[23][23]

பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்க நாள்களில், நோய் தீர மருந்து அருந்துவதும் மருத்துவரை அணுகுவதும் தவறு என்ற கருத்து நிலவியது; கடவுள்மீது நம்பிக்கைக் குறைவை அது காட்டுவதாக எண்ணப்பட்டது.[24] காலப்போக்கில் பெரும்பான்மைன பெந்தகோஸ்து சபையினர் இதுபற்றிய தங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளனர்.

நிறைவியல்

"இயேசு மீண்டும் விரைவில் வருகிறார்" என்பது பெந்தகோஸ்து சபையினரின் முக்கிய கோட்பாடு ஆகும். ஒருவிதத்தில் ஒவ்வொரு நொடியும் "இறுதி" நொடி தான். இயேசு எந்த நேரமும் வரக்கூடும்.[25] எனவே, தூய வாழ்வு நடத்தல், வழிபாட்டுக்காகக் கூடிவருதல், ஈடுபாட்டோடு ஊழியம் செய்தல், நற்செய்தி அறிவித்தல் ஆகியவை எப்போதும் நிகழ வேண்டும்.[26]

தூய ஆவியின் கொடைகளும் ஆவியார் விளைவிக்கும் கனிகளும்

கிறித்தவ திருச்சபை மரபில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி தூய ஆவியார் வழங்கும் கொடைகளாகக் கீழ்வரும் ஏழும் குறிப்பிடப்படுகின்றன:

1. ஞானம்2. மெய்யுணர்வு3. அறிவுரைத் திறன்4. நுண்மதி5. ஆற்றல்6. இறைப்பற்று7. இறையச்சம்

மேலும், தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் கீழ்வருவன:

1. அன்பு2. மகிழ்ச்சி3. அமைதி4. பொறுமை5. பரிவு6. நன்னயம்7. நம்பிக்கை8. கனிவு9. தன்னடக்கம்10. பணிவு நயம்11. தாராள குணம்12. நிறை கற்பு

மேற்கூறிய கொடைகளும் கனிகளும் விவிலிய போதனையின் அடிப்படையில் எழுந்தவை ஆகும்.

பெந்தகோஸ்து சபைகள் கருத்துப்படி, தூய ஆவியின் கொடைகள் “ஆவியில் திருமுழுக்கு” பெறுகின்ற வேளையில் வழங்கப்படுகின்றன. அவை ஆவியாரால் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப அளிக்கப்படுகின்ற “கொடைகள்” ஆகும். அவற்றை மனிதர் தம் சொந்த முயற்சியால் பெறமுடியாது.[27]

ஆவியின் கொடைகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பிறர்முன் வெளிப்படுத்தும்போது அவை ஆவியாரின் வெளிப்பாடுதான். திருச்சபையில் வெவ்வேறு ஊழியங்கள் இருப்பதால் அவற்றிற்கு இயைந்த வகையில் ஆவியாரின் கொடைகளும் பல்வகையின ஆகும். பல்மொழி பேசும் கொடை இருக்கும்போது அதற்கு விளக்கம் தருகின்ற கொடையும் இன்னொருவரிடம் இருக்கலாம்.

பெந்தகோஸ்து சபைகளில் ஆவியின் கொடைகள் ”சொல் சார்ந்த கொடைகள்”, “வல்லமை சார்ந்த கொடைகள்” என்று இருவகையாக உள்ளதாகக் கொள்வர்.

சொல்சார்ந்த கொடைகள்

இறைவாக்கு உரைத்தல், பல்மொழி பேசுதல், மொழிவிளக்கம் தருதல், ஞானம் மற்றும் அறிவு சார்ந்த பேச்சு ஆகியவை “சொல்சார்ந்த கொடைகள்” என்று அறியப்படுகின்றன.

ஆவியின் கொடைகளை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்பதற்கு வழிகாட்டியாக அமைவது 1 கொரிந்தியர் 14 ஆகும்.இறைவாக்கு உரைத்தலும், பன்மொழிப் பேச்சும் விளக்கமும் இருந்தாலும், “இறைவாக்கை அறிவிக்கின்ற பணி” ஒருபோதும் நிறுத்தப்படலாகாது. இப்பணிக்கு நிகரானவையாக முந்தியவற்றைக் கருதவும் கூடாது.

வல்லமை சார்ந்த கொடைகள்

இந்த வகையில் “விசுவாசக் கொடை”, “குணமளிக்கும் கொடை”, “புதுமை நிகழ்த்தும் கொடை” என்பவை அடங்கும்.[28] இங்கே குறிப்பிடப்படுகின்ற “விசுவாசக் கொடை” என்பது இன்னல்கள் இக்கட்டுகள் நடுவே உறுதியாக நிலைத்து நிற்க ஆவியார் தரும் சிறப்புக் கொடையாகக் கருதப்படுகிறது. அது பிற இரு கொடைகளும் செயல்பட அடிப்படையாக உள்ளது.[29]

வழிபாடு

"ஹில்சாங் சபை" - ஆசுத்திரேலியா நாட்டு சிட்னி நகரில் அமைந்துள்ள பெந்தகோஸ்து "மகா சபை". இது நவீன இசை வழிபாட்டுக்குப் பேர்போனது.

பெந்தகோஸ்து வழிபாட்டில் கீழ்வரும் அம்சங்கள் வழக்கமாக உண்டு. அவை: மன்றாட்டு, பாடல், மறையுரை, தூய ஆவியின் கொடைகள் செயல்பாடு, பீட மன்றாட்டு, காணிக்கை, அறிவிப்புகள், சாட்சிகள், இசை நிகழ்ச்சிகள், விவிலிய வாசகம், சிலவேளைகளில் ஆண்டவரின் இராவுணவு நிகழ்ச்சி.[30]

பெந்தகோஸ்து ஆன்மிகத்தின் ஐந்து கூறுகள்:[31] 1)தனி ஆன்மிக அனுபவம். நம்பிக்கை கொண்டவரின் வாழ்வில் தூய ஆவி செயல்படல் இங்கே அழுத்தம் பெறும். 2) சொல் சார்ந்த கொடைச் செயல்பாடு. எழுத்தும் வாசிப்பும் இல்லாப் பண்பாட்டுக் களங்களில் பெந்தகோஸ்து இயக்கம் வெற்றியாதல் இங்கே தெரிகிறது. 3) கட்டுப்பாடு கடந்து செயல்படும் பண்பு. தூய ஆவியின் தூண்டுதலுக்கு இணங்க எதிர்பாரா நேரத்திலும் செயல்பட நம்பிக்கைகொண்டவர் தன்னைக் கையளிப்பார். இதனால் சிலவேளைகளில் பெந்தகோஸ்து வழிபாட்டு நிகழ்ச்சி வழக்கமான கட்டுப்பாட்டிற்குள் நிற்காது. 4) மறுவுலகு நோக்கும் தன்மையோடு, எளிய வாழ்வுமுறை தழுவுதல். 5) விவிலிய போதனைக்கு நிபந்தனையற்ற விதத்தில் தன்னை உட்படுத்தல்.[31] இவ்வாறு றசல் பி. ஸ்பிட்லர் கூறுகிறார்.

பெந்தகோஸ்து வழிபாடு ஒருசில அடிப்படை ஒழுங்குமுறைகளின் வரம்புக்கு உள்ளே நிகழ்ந்தாலும், அவ்வப்போது வரம்புகடந்த செயல்கள் நிகழ்வது சாதாரணம். தூய ஆவி யாரொருவர் மீதும் இறங்கிவரலாம், அவர் திடீரென்று செயல்படத் தூண்டலாம் என்னும் அடிப்படையில், வழிபாட்டில் பங்கேற்பவர் ஒரு பாடலைத் தொடங்கவோ, பாடலில் இணைந்துகொள்ளவோ, கொடைகளைச் செயபடுத்தவோ செய்யலாம். இது ஏற்புடையதே. குறிப்பாக, பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்க நிலையில் இம்முறை மிகப்பரவலாக இருந்தது.[32]"தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்" (1 தெசலோனிக்கர் 5:19) என்னும் விவிலியக் கூற்றின் அடிப்படையில் இது ஏற்கப்படுகிறது.[33]

இறைவேண்டல் என்பது பெந்தகோஸ்து வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. அது வழக்கமான மொழியிலோ பன்மொழியிலோ அமையலாம். மன்றாடும்போது, இறையுதவி தேவைப்படுகின்ற நபர்மீது கைகளை வைத்து மன்றாடலாம், அல்லது கைகளை உயர்த்தி மன்றாடலாம் (1 திமொத்தேயு 2:8). கைகளை எழுப்பி மன்றாடுவது ஒரு பண்டைய வழக்கம். அது பல கிறித்தவ சபைகளில் வழக்கத்தில் உள்ளது.[34][35][36] அதுபோலவே பெந்தகோஸ்து பாடல் முறையும் பிற கிறித்தவ சபைகளில் தாக்கம் கொணர்ந்துள்ளது.[37]

சுலோவாக்கியா நாட்டில் ஒரு பெந்தகோஸ்து சபை வழிபாடு.

மேலும், ஒருவர் மீது மன்றாட்டு நிகழ்த்தும் போது அவர் "ஆவியால் ஆட்கொள்ளப்படுவதும்" அதன் விளைவாக, மயக்கமுற்றதுபோல மல்லாந்து கீழே விழுந்துவிடுவதும் உண்டு.[38][39] கடவுளின் பிரசன்னம் வல்லமையோடு வரும்போது இது நிகழ்வதாக பெந்தகோஸ்து சபையினர் நம்புகின்றனர்.[40] அந்த உடல் அமைவு முறையில் இருந்தவாறு திருமுழுக்குப் பெறுவோரும் உண்டு.[31]

மற்றொரு நிகழ்ச்சி "ஆவியில் நடனமாடல்" என்பது. மன்றாட்டு நிகழும்போது ஒருவர் தாமாகவே இருக்கையிலிருந்து எழுந்து, கண்களை மூடிக்கொண்டு யார்மீதும் மோதாமல் அசைந்தாடிச் சென்று வழிபாட்டில் கலந்துகொள்வது ஆகும். நம்பிக்கை கொண்டவர் கடவுளின் பிரசன்னத்தால் மிகுந்த வல்லமையோடு ஆட்கொள்ளப்பட்ட நிலையில், தம்மையே முற்றிலுமாகக் கடவுளின் வல்லமைக்குக் கையளித்துவிடுவதால் அவருடைய உடல், உள்ளம் ஆன்மா அனைத்துமே கடவுளின் கைகளால் இயங்குவதால் நிகழ்வதாக இது விளக்கப்படுகிறது.[38] சிலவேளைகளில் ஒருவர் ஆவியில் நடனமாடுவதைத் தொடர்ந்து, பிறரும் அவ்வாறே செய்ய, அனைவரும் சேர்ந்து ஒரு நடனச் சங்கிலிபோல அசைந்தாடி, ஓடியாடுவதும் நிகழும்.[31][41]

திருச்சடங்குகள்

பிற கிறித்தவ சபையினரைப் போலவே, பெந்தகோஸ்து சபையினரும், இயேசு கிறித்து சில சடங்கு முறைகளை நிறுவி அவற்றை நம்பிக்கையுடையோர் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டார் என்று நம்புகின்றனர். கத்தோலிக்கமும் சில புரட்டஸ்தாந்து சபைகளும் இச்சடங்குகள் கடவுளின் அருளை வழங்குவதாகக் கொண்டு "திருவருள்சாதனங்கள்" என்று இவற்றை அழைக்கின்றனர். ஆனால் பெந்தகோஸ்து சபையினர் அப்பெயரைப் பயன்படுத்துவதில்லை.[42] கடவுளின் அருளானது நம்பிக்கை கொண்டோர் மீது நேரடியாக இறங்குவதாகவும், சடங்கை நிகழ்த்தும் தலைவர் ஒரு கருவியாகச் செயல்படுவதாகவும் அவர்கள் கொள்வர்.

நீரில் திருமுழுக்குச் சடங்கு என்பது ஏற்கனவே நிகழ்ந்துள்ள மனமற்றத்தின் வெளி அடையாளம். எனவே நீரில் மூழ்கும் முறையாக இது நிகழும். திருமுழுக்கு என்பது மீட்புக்கு இன்றியமையாதது என்று அவர்கள் பெரும்பாலும் கருதுவதில்லை. திருமுழுக்கு பொதுவாக மூவொரு கடவுளின் பெயரால் வழங்கப்படும்.

நற்கருணை அல்லது இயேசுவின் இராவுணவுச் சடங்கு "இயேசுவின் நினைவாக" செய்யப்படுவது என்றும் அதை நிகழ்த்த இயேசு கட்டளை கொடுத்தார் என்றும் பெந்தகோஸ்து சபையினர் நம்புகின்றனர். அவர்கள் இச்சடங்கில் திராட்சை இரசம் பயன்படுத்துவதில்லை. மாறாக, திராட்சைச் சாறு பயன்படுகிறது.[43] இறுதி இராவுணவின்போது இயேசு நிகழ்த்திய "பாதம் கழுவும் சடங்கு" சில பெந்தகோஸ்து சபைகளால் கடைப்பிடிக்கப்படுகிறது.[44] இச்சடங்கு தாழ்ச்சியை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது (காண்க: யோவான் 13:14-17)[42]

புள்ளிவிவரமும் சபைப் பிரிவுகளும்

செருமனியில் ராவென்சுபுர்கு நகரில் ஒரு பெந்தகோஸ்து கோவில்

டேவிட் பாரெட் என்பவர் 1995இல் வழங்கிய கணிப்பின்படி, பெந்தகோஸ்து சபைகள் பலவற்றிலும் உலகம் முழுவதிலும் 217 மில்லியன் பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.[45] ப்யூ ஃபோரம் என்னும் அமைப்பு 2011இல் நிகழ்த்திய ஆய்வின்படி, மையநீரோட்ட பெந்தகோஸ்து சபைகளின் உறுப்பினர் 279 மில்லியன் ஆவர். அவர்கள் உலக மக்கள் தொகையில் 4 விழுக்காடு; உலக கிறித்தவ மக்கள் தொகையில் 12.8 விழுக்காடு.[1] பெந்தகோஸ்து குடும்பத்தின் சபைப் பிரிவுகளின் உறுப்பினர் மட்டுமே இவண் குறிக்கப்படுபவர். மாறாக, சபைப்பிரிவாக இல்லாமல் தனிமுறையில் செயல்படும் குழுக்கள் உள்ளடங்கா. அப்படி இருந்தும், பெந்தகோஸ்து சபை உலகளவில் புரட்டஸ்தாந்து சபைகளுக்குள் மிகப் பெரியது.[46]

மேற்கூறிய ஆய்வில் வெளியான பிற தகவல்கள்: பெந்தகோஸ்து சபையினர் உலகில் கீழ்வரும் எண்ணிக்கையில் உள்ளனர்:

  • சகாரா-கீழ் ஆப்பிரிக்கா: 44%
  • அமெரிக்காக்கள்: 37%
  • ஆசியா, பசிபிக்: 16%[47]

ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா ஆகிய தென்பூகோளப் பகுதியில் பெந்தகோஸ்து இயக்கம் மிகப் பெரும் வளர்ச்சி கொண்டுள்ளது.[48][49] அதிகாரப்பூர்வமாக, 740 பெந்தகோஸ்து சபைப் பிரிவுகள் உள்ளன.[50] சபைப் பிரிவு என்னும் அமைப்புக்கு உட்படாதா தனிக் குழுக்கள் பலவும் பெந்தகோஸ்து குடும்பத்தில் உள்ளன.[51]

உலகில் உள்ள 700க்கும் அதிகமான பெந்தகோஸ்து சபைப்பிரிவுகளுள் 240 பிரிவுகள் வெசுலியன் பிரிவையும், தூய்மை இயக்கப் பிரிவினையும், மெதடிஸ்டு பிரிவினையும் சார்ந்தவை. 1910 வரையிலும் பெந்தகோஸ்து சபைப்பிரிவுகள் அனைத்துமே கொள்கை சார்ந்தமட்டில் வெசுலியப் பிரிவைச் சார்ந்தனவாக இருந்தன. தூய்மை இயக்கப் பிரிவுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ளன.[50][52]

1910இல் வில்லியம் டூரம் என்பவர் "நிறைவுற்ற பணி" என்னும் கொள்கையைப் பிரகடனப்படுத்திய பின்பு, பெந்தகோஸ்து இயக்கத்தினருள் பலரும் வெசுலிய அணுகுமுறையைக் கைவிட்டனர். மனமாற்றம், அர்ச்சிக்கப்படல், ஆவியில் திருமுழுக்கு என்ற முப்பிரிவுக் கொள்கைக்குப் பதிலாக (வெசுலிய அணுகுமுறை), மனமாற்றம், ஆவியில் திருமுழுக்கு என்னும் இருபிரிவுக் கொள்கையை ஏற்கலாயினர். இப்புதிய "நிறைவுற்ற பணி பெந்தகோஸ்து இயக்கத்தினர்" "பாப்திஸ்து", "சீர்திருத்தத்தினர்" என்றும் அறியப்பட்டனர். பாப்திஸ்து சபை, பிரெஸ்பிட்டேரியன் சபைப் பின்னணியிலிருந்து வந்தனர். மனமாற்றம் நிகழும் வேளையில் ஒருவர் அர்ச்சிக்கப்படுகிறார். மனமாற்றத்திற்குப் பின் அவரிடத்தில் அர்ச்சிப்புப் பணி வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது என்ற கொள்கை கொண்டிருந்தனர். இந்த "நிறைவுற்ற பணி" அணுகுமுறையினராக உலகத்தில் 390 பெந்தகோஸ்து சபைப்பிரிவுகள் உள்ளன. அவற்றுள் அசெம்ளி ஆஃப் காட், இன்டர்நேஷனல் ஃபோர்ஸ்குவேர் காஸ்பல், ஓப்பென் பைபிள் சபைகள் என்பவை அடங்கும்.[50][52]

பெந்தகோஸ்து இயக்கத்தின் வரலாறு

பின்னணி

ஆவியின் அருங்கொடை அனுபவம் பெந்தகோஸ்து இயக்கத்தின் ஒரு முக்கிய அம்சம். அதற்கு வரலாற்றில் முன்னுதாரணங்கள் உள்ளன.[53] தொடக்க காலத் திருச்சபையில் பன்மொழி பேசுதல் போன்ற கொடைகள் இருந்தனவென்றும் அவற்றின் தொடர்ச்சியாக பெந்தகோஸ்து இயக்கத்தைப் பார்க்கலாம் என்றும் திருச்சபை வரலாற்றாசிரியர் கூர்ட்டிஸ் வார்ட் என்பவர் கூறுகிறார்.[54] திருச்சபையின் தொடக்க காலக் கொடைகள் புத்துயிர் பெற்று அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் பிரித்தானியாவிலும் பெந்தகோஸ்து இயக்கமாக உருப்பெற்றது 19ஆம் நூற்றாண்டிலேயே என்பது பெரும்பான்மையான அறிஞர் கருத்து.[55]

பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்க நாள்களின் சிறப்பியல்புகள் குறிப்பாக அதனுள் அமைந்த "தூய்மை இயக்கம்", "உயர்நிலை இயக்கம்" போன்றவற்றில் அழுத்தமாக உள்ளன. தூய ஆவி ஊக்கமாக செயல்படுதல், திருச்சபையின் தொடக்கநிலை ஆர்வ உணர்வினை மீண்டும் அனுபவித்தல், குணம்பெறுகின்ற தளரா நம்பிக்கை கொள்ளல் போன்றவை அப்பண்புகள். இந்த அணுகுமுறையை "நற்செய்தி வாதம்" (Evangelicalism) என்பர். இதன்படி நவீன கிறித்தவத்தில் தொடக்க கால புதிய ஏற்பாட்டு கிறித்தவத்தில் காணப்பட்ட புத்துணர்ச்சி அழுத்தமானதாக இல்லை. இறுதிக் காலம் விரைவில் வரப்போகிறது என்பதை வலியுறுத்தி, இயேசுவை அணுகிச் செல்லுமாறு எழுப்புதல் கூட்டங்கள் நடத்துவதின் தேவை அதிகமாக நற்செய்தி வாதத்தால் உணரப்பட்டது. எல்லாக் கிறித்தவர்களும் "ஆவியில் திருமுழுக்கு" பெற்று ஆவி அனுபவம் பெற்று உலகில் நற்செய்தியைப் பரப்ப இயலும், அவ்வாறே செய்யவும் வேண்டும் என்பது நற்செய்தி வாதத்தின் நோக்கமானது.[56] தூய ஆவியின் கொடைகள் அதிகமாகப் பொழியப்படுவது இறுதிக் காலம் அடுத்துவருவதின் அறிகுறி என்று கொள்ளப்பட்டது.

ஒரு சில கிறித்தவத் தலைவர்களின் தாக்கம் பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்கத்தில் அழுத்தமாக இருந்தது. இவர்கள் ஆல்பர்ட் பெஞ்சமின் சிம்சன், ஜான் அலெக்சாந்தர் டோவி, அதோனிரம் ஜட்சன் கோர்டன் போன்றோராகும். குணமாக்கல் அணுகுமுறைக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டது இதில் அடங்கும்.[57]

பெந்தகோஸ்து இயக்கத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒரு குறிப்பிட்ட நபரைச் சுட்டிக்காட்ட இயலாது. மாறாக, ஆங்காங்கே கிறித்தவக் குழுக்கள் தூய ஆவியின் கொடைகளான பன்மொழி பேசுதல், நம்பிக்கை முறையில் குணம்பெறுதல் போன்றவற்றை அனுபவித்து உணரத் தொடங்கியிருந்தனர். வெஸ்லியன் புனிதத் தன்மை இயக்கம் மேற்கூறிய அனுபவத்திற்கு மீட்பு இறையியல் அடிப்படையை வகுத்துக் கொடுத்தது.[2][58][59] நற்செய்தி வாதத்தின் பிற வெளிப்பாடுகளிலிருந்து பெந்தகோஸ்து இயக்கத்தை வேறுபடுத்தும் வகையில் வெஸ்லிய புனிதத் தன்மை அணுகுமுறை அமைந்தது.[60]

தொடக்க கால எழுப்புதல்கள்: 1900–29

ஆவியில் திருமுழுக்கு, பன்மொழி பேசுதல் ஆகியவற்றோரு தொடர்புடைய போதகர் சார்லசு பாக்சு பாராம்.
பெந்தகோஸ்து இயக்கம் தொடங்கிய இடமாகக் கருதப்படுகின்ற கலிபோர்னியா அசூசா வீதி - எழுப்புதல் கூட்டம்

பெந்தகோஸ்து இயக்கம் கிறித்தவ சபைகள் நடுவே தனித்தன்மையோடு உருவாகிட வழிவகுத்தவர்களுள் ஒருவர் சார்லஸ் பாக்ஸ் பாராம் (Charles Fox Parham) என்பவர். தூய்மை இயக்கத்தின் தாக்கம் கொண்ட தனி நற்செய்திவாதியான இவர் நம்பிக்கை குணம் நல்கும் என்பதில் ஆழ்ந்த பிடிப்புடையவர். 1900இல் இவர் ஐக்கிய அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் டொபேகா நகரில் "பெத்தேல் விவிலியப் பள்ளி" என்றொரு நிறுவனத்தைத் தொடங்கினார். அங்கே அவர், ஆவியின் வல்லமையால் பன்மொழி பேசுகின்ற கொடை தூய ஆவியில் திருமுழுக்குப் பெறுவதால் நிகழ்கிறது என்பதற்கு விவிலிய அடிப்படை உள்ளது என்றும் போதித்தார். 1901, சனவரி முதல் நாள், பெத்தேல் விவிலியப் பள்ளி மாணவர்கள் இரவு விழிப்பு மன்றாட்டு நடத்தியபின் இறைவேண்டல் செய்து தூய ஆவியில் திருமுழுக்குப் பெற்றதைத் தொடர்ந்து பன்மொழி பேசும் கொடையையும் பெற்றனர். அதே அனுபவமும் கொடையும் சிறிது நாள்களுக்குப் பின் பாராமுக்கும் கிடைத்தன. அதிலிருந்து பாரம் தாம் நிகழ்த்திய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் அதுபற்றிப் போதித்தார். அன்னிய மொழிகளை அற்புதமான விதத்தில் புரிந்துகொள்ளவும் பேசவும் ஆவி வரம் தருகிறார் என்றும், எனவே வெளிநாடுகளுக்கு நற்செய்திப் பரப்புரைக்காகச் செல்லும் மறைபரப்பாளர்கள் அன்னிய மொழிகளைக் கற்கவேண்டிய தேவையில்லை என்று பாராம் நம்பினார். 1901க்குப் பிறகு பாராம் டொபேகா விவிலியப் பள்ளியை மூடிவிட்டு, கான்ஸாஸ் மற்று மிசூரி மாநிலங்கள் முழுவதிலும் நான்கு ஆண்டுகளாக எழுப்புதல் கூட்டங்கள் நிகழ்த்தினார்.[61] நம்பிக்கை கொண்டோர் வாழ்வில் முதலில் மனமாற்றமும், பின்னர் புனிதமாதலும் நிகழ்வதைத் தொடர்ந்து மூன்றாவது அனுபவமாக ஆவியில் திருமுழுக்கு நிகழ்கிறது என்று அவர் போதித்தார். புனிதமாதல் வழியாக நம்பிக்கை கொண்டோர் கழுவப்படுகின்றனர் என்றும், ஆவியில் திருமுழுக்கு என்பது அவர்களை ஊழியத்திற்கு உறுதிப்படுத்துகிறது என்றும் பாராம் போதித்தார்.[62]

ஐக்கிய அமெரிக்காவின் நடு-மேற்கு மாநிலங்களில் சார்லசு பாராம் மேற்கூறிய விதத்தில் போதித்த அதே காலகட்டத்தில், பிரித்தானியாவின் வேல்சு பிரதேசத்திலும் எழுப்புதல் கூட்டங்கள் நடந்தன (Welsh Revival of 1904-1905). அதனால் தீவிர நற்செய்திவாதிகள், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில், தூய ஆவி உலகம் அனைத்திலும் திருச்சபையை வேரோட்டமான விதத்தில் புதுப்பிக்கப் போகிறார் என்று எண்ணினர். இதைத் தொடர்ந்த ஆயிரக்கணக்கானோர் மனமாற்றம் பெற்று, பன்மொழி பேசுகின்ற கொடையையும் பெற்றனர்.[63]

1905இல் சார்லசு பாராம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகருக்குச் சென்று அங்கே ஒரு விவிலியப் பயிற்சிப் பள்ளி தொடங்கினார். அவருடைய மாணாக்கருள் ஒருவர் வில்லியம் ஜே. சேமர் (William J. Seymour). ஒரு கண் பார்வை மட்டுமே கொண்டிருந்த இவர் கருப்பர் இனப் போதகர். சேமர் 1906இல் லாஸ் ஆஞ்செலசு நகருக்குச் சென்று, அங்கே மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போதித்தார். அந்நிகழ்ச்சி "அசூசா வீதி எழுப்புதல்" (Azusa Street Revival)[64] என்று அழைக்கப்படுகிறது.

அசூசா நிகழ்ச்சிகளில் கருப்பரும் வெள்ளையரும் இனவேறுபாடின்றி, வரையறைகளுக்குக் கட்டுப்படாத விதத்தில் வழிபட்டனர். ஆவி அவர்களை எவ்வாறு தூண்டினாரோ அவ்வாறே மக்கள் போதிப்பதிலும், சாட்சிகூறுவதிலும், பன்மொழி பேசுவதிலும், பாடுவதிலும், ஆவியில் வீழ்தலிலும் ஈடுபட்டனர். இந்த எழுப்புதல் பற்றி பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் பரவலாகப் பேசத் தொடங்கின. இதனால் பல்லாயிரக் கணக்கானோர் அசூசா வழிபாட்டுத் தளத்திற்கு வந்தனர்; அங்கே நேரடி அனுபவத்தின் வழியாகப் பெற்றுக்கொண்ட "தீப்பொறியை" தமது சொந்த பணித்தளங்களுக்கு எடுத்துச் சென்றனர்.[65] ஆக, சார்லசு பாராம், டி.எல். மூடி போன்ற வெஸ்லிய போதகர்களின் எழுப்புதல்கள் ஏற்கனவே நிகழ்ந்திருந்தபோதிலும், ஐக்கிய அமெரிக்காவில் பெந்தகோஸ்து இயக்கம் ஊக்கத்தோடும் எழுச்சியோடும் தோற்றம் பெற்றது வில்லியம் சேமர் என்பவரின் "அசூசா வீதி எழுப்புதல்" நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் என்று பொதுவாக ஏற்கப்படுகிறது.[66]

அசூசா வீதி எழுப்புதல் கூட்டத்தின் வழிகாட்டித் தலைவர் வில்லியம் சேமர்

வில்லியம் சேமர் நிகழ்த்திய எழுப்புதல் கூட்டங்களில் கருப்பரும் வெள்ளையரும் ஒருங்கே இணைந்து வழிபட்டார்கள். இம்முறையானது பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்க காலத்தின் ஒரு சிறப்பு அம்சமாக அமைந்ததோடு, அந்த இயக்கத்தின் வளர்ச்சி எம்முறையில் நிகழும் என்பதற்கு ஒரு அறிகுறியாகவும் அமையலாயிற்று. ஐக்கிய அமெரிக்காவில் நிலவிய இனப் பாகுபாடு முறை (racial segregation), ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow laws) ஆகியவற்றை எதிர்த்து சவால் விடுத்தனர் அவ்வியக்கத்தினர். 1920களுக்கு முன் "கிறித்துவில் தேவ சபை", க்ளீவ்லாந்து தேவ சபை", "பெந்தகோஸ்து புனிதநிலை சபை", "உலக பெந்தகோஸ்து சபைக்குழுக்கள்" போன்ற பல பெந்தகோஸ்து சபைகளிலும் கருப்பரும் வெள்ளையரும் இனவேறுபாடின்றி வழிபட்டனர். இனப் பாகுபாட்டு அமைப்புக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற சிந்தனை அமெரிக்காவில், குறிப்பாக தென் மாநிலங்களில் நிலவிய காலத்தில் இது நிகழ்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. காலப் போக்கில், வட அமெரிக்காவில் பெந்தகோஸ்து இயக்கம் கருப்பருக்கென்றும் வெள்ளையருக்கென்றும் இரு வேறு கிளைகளாகப் பிரிந்தது. அப்போது கூட, இனப் பாகுபாடற்ற வழிபாடுகள் தொடரத்தான் செய்தன. என்றாலும், 1960களில் நிகழ்ந்த குடிசார் உரிமைகள் இயக்கம் தோன்றிய பிறகே இத்தகைய வழிபாடுகள் மீண்டும் பரவலாக நடைமுறைக்கு வந்தன.[61]

பெந்தகோஸ்து வழிபாட்டில் கலந்துகொள்கின்ற பெண்கள்

பெந்தகோஸ்து சபை இயக்கத்தின் தொடக்க காலத்தில் பெண்கள் சிறப்பான பங்களித்தனர்.[67] ஆவியார் எவருக்குச் சிறப்புக் கொடைகளைக் கொடுத்தாரோ, அவர் இயேசு கிறித்துவின் இரண்டாம் வருகைக்குத் தயாரிப்புச் செய்யும் வகையில் தாம் பெற்ற கொடைகளைப் பொறுப்புணர்வோடு செயல்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார் என்ற துணிவின் அடிப்படையில், ஆவியில் திருமுழுக்குப் பெற்ற பெண்கள், மரபின் காரணமாக சில பணிகள் தங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தாலும், ஆவி வழங்குகின்ற வல்லமையால் அனைத்து ஊழியங்களிலும் ஈடுபட உரிமையோடு முன்வந்தார்கள்.[68][69] சார்லசு பாராம் நடத்திய விவிலியக் கல்லூரியில் பயின்று, ஆவியில் திருமுழுக்குப் பெற்று, பன்மொழி பேசும் கொடையையும் பெற்ற முதல் பெண்மணி ஆக்னெஸ் ஓஸ்மான் ஆவார்.[68][70][71] புளோரன்சு கிராஃபோர்டு, ஐடா ராபின்சன், ஏய்மீ செம்பிள் மக்ஃபீர்சன் போன்ற பெந்தகோஸ்து பெண்கள் புதிய சபைக்குழுக்களைத் தோற்றுவித்தார்கள். மற்றும் பல பெண்கள் குருக்களாகவும், துணைக் குருக்களாகவும் நற்செய்திப் பரப்புநர்களாகவும் ஊழியம் செய்தனர்.[72] சில பெண்கள் ஆன்மிகப் பாடல்கள் எழுதினர், பெந்தகோஸ்து பிரசுரங்களை வெளியிட்டனர், விவிலியத்தைப் பயிற்றுவித்து, விவிலியப் பள்ளிகள் நடத்தினர்.[73] பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்க காலத்தில் பெரும்பான்மையாக மனம் மாறியவர்களும் வழிபாடுகளில் பங்கேற்றவர்களும் பெண்களே. அவர்கள் தாமாகவே பாடல்கள் பாடுவதிலும் சாட்சியம் பகர்வதிலும் பேரார்வம் காட்டினார்கள்.[74] பிற்காலத்தில் பெண்கள் மரபுவழியான ஊழியங்களிலேயே அதிகமாகப் பணிபுரியலாயினர். குருக்களாகப் பணிபுரிவது குறைந்து, அவர்கள் துணைக்குரு நிலையில் தம் கணவர்-குருவோடு இணைந்து பணிபுரிந்தனர்; நற்செய்தியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.[75]

தொடக்க கால பெந்தகோஸ்து இயக்கம் அமைதிக் கோட்பாட்டை ஆதரித்தது. இராணுவத்தில் பங்கேற்க மறுப்பதற்கான உரிமையையும் ஆதரித்தது.[76]

பெந்தகோஸ்து இயக்கம் பரவுதல், எதிர்ப்புகளைச் சந்தித்தல்

மேலே குறிப்பிட்டதுபோன்று, லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குச் சென்று அசூசா எழுப்புதல் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் தாம் பெற்ற அனுபவத்தைத் தம்மோடு தம் சபைகளுக்கு எடுத்துச் சென்றார்கள். சில திருச்சபைக் குழுக்கள் அப்படியே முற்றிலுமாக பெந்தகோஸ்து சபைகளாக மாறின. ஆனால், பெந்தகோஸ்து பாணியில் செயல்படத் தொடங்கிய சில சபைக்குழுக்கள் தங்கள் தாய்ச் சபைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதால் புதிய குழுக்களாக உருவெடுத்தன. மேலும், பன்மொழி பேசுகின்ற கொடை தொடக்கத்தில் அன்னிய மொழிகளைப் பேசுகின்ற கொடையாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் வெளி நாடுகளுக்கு நற்செய்தி பரப்பச் சென்றவர்கள் அன்னிய மொழிகளைப் பயில வேண்டிய தேவை இல்லை, தூய ஆவியே அவர்களுக்கு அன்னிய மொழிகளைப் பேசுகின்ற வல்லமைமை அளிப்பார் என்ற கருத்து எழுந்தது. இருப்பினும், வெளி நாடுகளுக்குச் சென்ற பல நற்செய்திப் பரப்புநர்கள் தாங்கள் ஆவியில் பேசிய மொழி பிறருக்குப் புரியாமல் இருந்தது என்று கண்டுகொண்டதும் ஏமாற்றம் அடைந்தார்கள். எனவே, பன்மொழி பேசுகின்ற கொடை பற்றிய ஒரு மீளாய்வு தொடங்கியது.[77] இயேசு மீண்டும் விரைவில் வரவிருக்கிறார் என்னும் உறுதிப்பாடு வலுக்கத் தொடங்கியது. அதனால் நற்செய்தியைத் தாமதமின்றி அறிவித்திட வேண்டும் என்பது தெளிவாயிற்று.[68][78]

வில்லியம் சேமரோடு உழைத்த பிளாரன்சு கிராஃபோர்டு என்பவர் பெந்தகோஸ்து அனுபவத்தை ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதிக்குக் கொண்டுவந்தார். அவ்வாறு திருத்தூது நம்பிக்கை சபை தோன்றியது (1908). அதுபோலவே அசூசா எழுப்புதல் கூட்டங்களில் பங்கேற்ற சிக்காகோ வில்லியம் ஹௌவர்டு டூரம் என்பவர் பெந்தகோஸ்து இயக்கம் ஐக்கிய அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியில் பரவ வழிகோலினார். அங்கிருந்து அவ்வியக்கம் கனடாவுக்குப் பரவியது.[79]

வெளிநாடுகளிலிருந்து வந்து அசூசா எழுப்புதல் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் பெந்தகோஸ்து இயக்கத்தைப் பிற நாடுகளுக்கும் எடுத்துச் சென்றார்கள். இவ்வாறு ஏ.ஜீ. கார் என்பவரும் அவருடைய மனைவியும் இந்தியாவுக்கும் அதன்பின் ஹாங்காங்குக்கும் பெந்தகோஸ்து இயக்கத்தைக் கொண்டுசென்றனர்.[80] சுவீடன், நோர்வே, டென்மார்க், பிரான்சு, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெந்தகோஸ்து இயக்கத்தைப் பரப்பியவர் தாமஸ் பால் பராத்.[81]

டூரம் என்பவரின் தாக்கத்தைப் பெற்ற லூயிஜி ஃபிரான்செஸ்கோன் என்னும் இத்தாலியர் 1907இல் பெந்தகோஸ்து அனுபவம் பெற்றார். அவர் இத்தாலி, ஐ.அ.நா., அர்ஜென்டீனா, பிரேசில் போன்ற நாடுகளில் பெந்தகோஸ்து குழுக்களை உருவாக்கினார். 1908ல் ஜாக்கொமோ லொம்பார்டி என்பவர் இத்தாலியில் பெந்தகோஸ்து வழிபாடுகள் முதன்முறையாக நிகழ்த்தினார்.[82] மேலும், தென்னாப்பிரிக்காவிலும் அந்த இயக்கம் பரவியது.

இவ்வாறு, இன்று உலகில் உள்ள அனைத்து பெந்தகோஸ்து சபைகளும் தங்கள் வரலாற்று வேர்களை அசூசா எழுப்புதல் கூட்டங்களில் காண்கின்றன.[83]

தூய்மை இயக்கத்திலிருந்து தோற்றமெடுத்த பெந்தகோஸ்து இயக்கத்தை தூய்மை இயக்கமே மிகக் கடுமையாகத் தாக்கியது. தூய்மை இயக்கத்தைச் சார்ந்த ஆல்மா ஒயிட் என்பவர் "பேய்களும் பன்மொழி பேசலும்" என்ற தலைப்பில் 1910இல் ஒரு நூல் எழுதி, அதில் பெந்தகோஸ்து வழிபாடு "சாத்தான் வழிபாடு " என்றார்.[84] டபிள்யூ. பி. காட்பி என்பவர், அசூசாவில் எழுப்புதல் நடத்தியோர் "சாத்தானின் போதகர்கள், மந்திரவாதிகள், ஏமாற்றுக்காரர்கள், யாசகர்கள்" என்று விவரித்தார்.[85]

ஏ.பி. சிம்சன் போற ஒருசிலர் மட்டும் பெந்தகோஸ்து இயக்கத்தை மிதமாக விமர்சித்தனர். அவர்கள் கருத்துப்படி, பன்மொழிபேசுதல் என்பது தூய ஆவியின் உண்மையான வெளிப்பாடுதான் என்றாலும் அது கட்டாயமாக தூய ஆவியில் திருமுழுக்கின் தோற்றமாக உள்ளது என்று கூறமுடியாது.

திருமுழுக்கு இயேசுவின் பெயராலா, மூவொரு கடவுளின் பெயராலா?

பெந்தகோஸ்து இயக்கத்தில் எழுந்த ஒரு சர்ச்சை "திருமுழுக்கு இயேசுவின் பெயரால் வழங்கப்படுகிறதா அல்லது தந்தை, மகன், தூய ஆவியாய் இருக்கின்ற மூவொரு கடவுள் பெயரால் வழங்கப்படுகிறதா" என்பதைப் பற்றியது ஆகும்.

இதன் அடிப்படையில் இன்று இருவகை பெந்தகோஸ்து பிரிவுகள் உள்ளன.[86]

பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்கத்தில், ஆப்பிரிக்க-அமெரிக்கரும் வெள்ளை அமெரிக்கரும் இணைந்தே வழிபாடு நடத்தினர். அதன்பிறகு, இன அடிப்படையில் பிரிவு ஏற்பட்டது. சில சபைகள் இணை-வழிபாடுகளைத் தொடர்ந்தன.[87]

1930-59

இக்கால கட்டத்தில், சில மைய நீரோட்ட புரட்டஸ்தாந்து சபைகள் பெந்தகோஸ்து இயக்கம் விவிலிய அடிப்படை கொண்டதல்ல என்று விமர்சித்தனர். "உலக அடிப்படைக் கொள்கைக் கிறித்தவர்கள்" என்ற குழு 1928இல் இவ்வாறு விமர்சித்தது. இருப்பினும், 1940களில் சபைகளுக்கிடையே ஒத்துழைப்பு வளர்ந்தது.[88]

இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெந்தகோஸ்து இயக்கத்தில் "குணமளிக்கும் கொடை" முன்னிலைக்கு வந்தது. வில்லியம் ப்ரான்ஹாம், ஓரால் ராபர்ட்ஸ், கோர்டன் லின்ட்சே, டி.எல். ஓச்போர்ன் என்பவர்கள் ஊழியம் வழியாக பெந்தகோஸ்து இயக்கத்தினர் நடுவிலும் இயக்கத்திற்கு வெளியிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது.[89]

1960இலிருந்து இன்றுவரை

1960களுக்கு முன்னால், பெந்தகோஸ்து இயக்கத்தைச் சாராதா பிற கிறித்தவர்கள் பலரும், தூய ஆவியில் திருமுழுக்குப் பெற்றதை வெளிப்படையாக அறிவிக்காமல், பின்னரே பெந்தகோஸ்து இயக்கத்தைல் சேர்ந்தனர்.[90] 1960களைத் தொடர்ந்து, பல மைய நீரோட்ட புரட்டஸ்தாந்து சபையினர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில், ஆவியில் திருமுழுக்குப் பெற்ற பிறகும், தமது தாய்ச் சபைகளிலேயே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து, மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இது முதலில் "புது பெந்தகோஸ்து இயக்கம்" என்றும், பின்னர் "அருங்கொடை இயக்கம்" (Charismatic Movement) என்றும் பெயர் பெற்றது.[91]

மரபுவழி பெந்தகோஸ்து சபைகள் "அருங்கொடை இயக்கத்தினரை" தயக்கத்தோடே ஏற்றனர். நடனமாடல், மது அருந்துதல், புகைபிடித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பதிலும் தோற்றத்திலும் உடை அணிதலிலும் எளிமையாய் இருத்தலைக் கடைப்பிடித்தலிலும் தொடக்க கால பெந்தகோஸ்து இயக்கத்தினர் மிகக் கண்டிப்பாக இருந்தனர். ஆனால் அருங்கொடை இயக்கத்தினர் மேற்கூறியவற்றை மிதமாகவே கடைப்பிடித்தனர். எனவே, "ஆவியால் நிரப்பப்படுதல்" என்பதன் பொருள் என்னவென்று விவாதம் எழுந்தது.[92] அந்த விவாதம் இன்னும் தொடர்கிறது.[93]

பெந்தகோஸ்து இயக்கத்தில் முதன்மையான சிலர் பெயர்ப்பட்டியல்

முன்னோடிகள்

  • வில்லியம் போர்டுமன் (William Boardman)
  • ஜாண் அலெக்சாந்த டோவி (John Alexander Dowie) (1848–1907)
  • எட்வர்டு இர்விங் (Edward Irving)
  • ஆல்பர்ட் பெஞ்சமின் சிம்சன் (Albert Benjamin Simpson)

பெந்தகோஸ்து இயக்கத் தலைவர்கள்

  • வில்லியம் எம். ப்ரான்ஹாம் (William M. Branham) (1909–65) குணமளிப்பதில் சிறந்தவர், பேர்போனவர்
  • ஏ.ஏ. ஆல்லென் (A. A. Allen) (1911–70) - 1950-60களில் குணமளிப்பதில் பேர்போனவர்
  • ஜோசப் ஆயோ பாபலோலா (Joseph Ayo Babalola) (1904–59)
  • டேவிட் யோங்கி சோ (David Yonggi Cho) – கொரியாவில் இயக்கத்தைப் பரப்பினார்
  • ஜாக் கோ (Jack Coe) (1918–56)
  • மார்கரட் கோர்ட் (Margaret Court) – ஆத்திரேலியாவில் டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர் பின்னர் போதகர் ஆனார்
  • பென்னி ஹின் (Benny Hinn) – நற்செய்தி பரப்புநர்
  • ரெக்ஸ் ஹம்பார்ட் (Rex Humbard) (1919–2007) தொலைக்காட்சியில் முதல் நற்செய்திப் போதகர்
  • ஜோர்ஜ் ஜெஃப்ரீஸ் (George Jeffreys) (1889–1962) - இங்கிலாந்தில் ஊழியம் புரிந்தவர்
  • காத்ரின் கூல்மன் (Kathryn Kuhlman) (1907–76) பெந்தகோஸ்து இயக்கத்தை மைய நீரோட்ட புரட்டஸ்தாந்து சபைகளுக்குள் கொணர்ந்தவர்
  • ஜெரால்ட் ஆர்ச்சி மாங்கன் (Gerald Archie Mangun) (1919–2010) - அமெரிக்காவில் மிகப்பெரிய பெந்தகோஸ்து கோவிலை எழுப்பியவர்
  • சார்லஸ் ஹாரிசன் மேசன் (Charles Harrison Mason) (1866–1961) "கிறித்துவில் கடவுள் சபை" என்ற சபையை உருவாக்கியவர்
  • ஏமி செம்பிள் மெக்ஃபீர்சன் (Aimee Semple McPherson) (1890–1944) - நற்செதிப் போதகர்
  • சார்லஸ் பாக்ஸ் பாரம் (Charles Fox Parham) (1873–1929)- நவீன பெந்தகோஸ்து இயக்கத்திற்கு அடித்தளம் இட்டவர்
  • டேவிட் டு பிளேஸ்ஸிஸ் (David du Plessis) (1905–87) - தென்னாப்பிரிக்காவில் பெந்தகோஸ்து இயக்கத் தலைவர்; அருங்கொடை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர்
  • ஓரல் ராபர்ட்ச் (Oral Roberts) (1918–2009) தொலைக்காட்சி போதகர்
  • வில்லியம் ஜே. சேமர் (William J. Seymour) (1870–1922) பெந்தகோஸ்து இயக்கத்தின் தொடக்கமான அசூசா எழுப்புதல் கூட்டங்களை நடத்தியவர்
  • ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth) (1859–1947) – பிரித்தானிய போதகர்
  • மரியா உட்வொர்த்-எட்டர் (Maria Woodworth-Etter) (1844–1924) – குணமளிப்பில் பேர்பெற்றவர்
  • பேட் ராபர்ட்சன் (Pat Robertson) – தொலைக்காட்சி போதகர்; 1961இல் கிறித்தவ ஒலிபரப்பு வலையத்தைத் தொடங்கியவர்
  • பிஷப் ஐடா ராபின்சன் (Bishop Ida Robinson) (1891–1946) அமெரிக்காவின் சீனாய் மலை புனித சபை என்ற குழுவைத் தொடங்கியவர்
  • ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swaggart) – தொலைக்காட்சி போதகர்; இசைக்கலைஞர்
  • ரைன்ஹார்ட் போன்கே (Reinhard Bonnke)

குறிப்புகள்

ஆதாரங்கள்

மேல் ஆய்வுக்கு

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pentecostalism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை