மொடு சன்யூ

சியோங்னு பேரரசின் சன்யூ (ஆட்சி. பொ. ஊ. மு. 209-174)

மொடு என்பவர் சியோங்னு பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது தந்தை தோவுமன் ஆவார். இவர் கி. மு. 209ஆம் ஆண்டு தன் தந்தையைக் கொல்லுமாறுத் தன் ஆட்களுக்கு ஆணையிட்டு ஆட்சிக்கு வந்தார்.[2][3]  

மாவோடுன்/மொடுன்/மொடு
சியோங்னு பேரரசின் சன்யூ
ஆட்சிக்காலம்கி. மு. 209–174
முன்னையவர்தோவுமன்
பின்னையவர்இலாவோசங்கு
பிறப்புஅண். கி. மு. 234
தற்போதைய மங்கோலியா
இறப்புகி. மு. 174 (அகவை 59-60)
அரசமரபுஇலுவாண்டி[1]
தந்தைதோவுமன்

மொடு கி. மு. 209 முதல் கி. மு. 174 வரை ஆட்சி செய்தார். இவர் இவரது தந்தை தோவுமனுக்குக் கீழ் ஒரு இராணுவத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு சியோங்னு பேரரசின் சன்யூவாக முடிசூட்டிக் கொண்டார். இவரது பேரரசு தற்போதைய மங்கோலியாவில் அமைந்திருந்தது. கி. மு. 215இல் மெங்கு தியான் தலைமையிலான கின் படைகள் சியோங்னுக்களின் மேய்ச்சல் நிலங்களைக் கைப்பற்றின. இதற்குப் பதிலாக இவர் அரியணையைக் கைப்பற்றினார். மங்கோலிய-மஞ்சூரியப் புல்வெளியில் இருந்த பழங்குடியினங்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்து அதன் மூலம் ஒரு சக்திவாய்ந்த சியோங்னு பேரரசைத் தோற்றுவித்தார். இவர் சியோங்னு சக்தியை மையப்படுத்தினார். கி. மு. 210இல் முதல் பேரரசரின் இறப்பிற்குப் பிறகு கின் அரசானது குழப்பத்தில் மூழ்கியது. இதன் காரணமாக தனது சியோங்னு பேரரசை விரிவாக்க மொடுவுக்கு எளிதான வாய்ப்புக் கிடைத்தது. இதைப் பயன்படுத்தி இவர் அக்காலத்தில் இருந்த மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றை உருவாக்கினார்.[4] இப்பேரரசின் கிழக்கு எல்லையானது இலியாவோ ஆறு வரையும், மேற்கு எல்லைகளானவை பாமிர் மலைகள் வரையும், வடக்கு எல்லைகளானவை பைக்கால் ஏரி வரையும் இருந்தன.

மொடுவுக்குப் பிறகு அவரது மகன் இலாவோசங்கு ஆட்சிக்கு வந்தார்.

பெயர்

மொடுன் என்ற இவரது பெயர் பகதூர் (கதாநாயகன்)[5] என்ற நடு ஐரோவாசியக் கலாச்சாரச் சொல்லின் பழைய சீன உச்சரிப்பாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது ஒரு ஹூனர் (சியோங்னு) பெயர் ஆகும்.[6]

பிறப்பிடம் மற்றும் அதிகாரத்துக்கு வருதல்

சிமா சியானின் கூற்றுப்படி மொடு ஒரு அறிவாற்றல் மிகுந்த குழந்தையாக இருந்தார். ஆனால் இவரது தந்தை தோவுமன் தன்னுடைய மற்ற மனைவிகள் மூலம் பிறந்த மகன் தனக்குப் பிறகு மன்னனாக வர வேண்டும் என எண்ணினார்.[3] தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசுக்குப் போட்டியாளராக இல்லாமல் மொடுவை நீக்குவதற்காக உயேசி பழங்குடியினரிடம் இளம் மொடுவைப் பிணையக் கைதியாக அனுப்பினர். பிறகு அவர் உயேசிப் பழங்குடியினத்தைத் தாக்கினார். தனது தாக்குதலுக்குப் பதிலடியாக மொடுவை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர் இவ்வாறு செய்தார்.[3] ஒரு வேகமான குதிரையைத் திருடியதன் மூலம் மொடு தன் விதியிலிருந்து தப்பினார். சியோங்னுவுக்குத் திரும்பி வந்தார். சியோங்னு மக்கள் மொடுவை ஒரு கதாநாயகனாக வரவேற்றனர்.[3] இவரது துணிச்சலுக்குப் பரிசாக 10,000 குதிரைப்படை வீரர்களின் தளபதியாக இவரை இவரது தந்தை நியமித்தார்.[3]

துணிச்சலுக்குப் பெயர் பெற்றிருந்த காரணத்தால் மிகுந்த விசுவாசமுடைய போர்வீரர்களின் ஒரு குழுவானது மொடுவால் ஒன்றிணைக்கப்பட்டது.[2] பறக்கும் போது சீட்டி அடிக்கும் சத்தத்தை எழுப்பும் ஒரு குறியீட்டு அம்பை இவர் புதிதாக உருவாக்கினார். சீட்டிச் சத்தம் கேட்கும் திசையில் அம்புகளை எய்யுமாறு தனது ஆட்களுக்குப் பயிற்சி அளித்தார். தனது ஆட்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன் விருப்பத்திற்குரிய குதிரை மீது அம்பெய்யுமாறு தனது போர் வீரர்களுக்கு மொடு ஆணையிட்டார். இதற்கு மறுப்புத் தெரிவித்த யாரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[2] இவர் பிறகு இந்த விசுவாசச் சோதனையை தன்னுடைய விருப்பத்திற்குரிய மனைவிகளில் ஒருவரை வைத்துச் செய்தார். மீண்டும் இவரது ஆணையைச் செயல்படுத்த மறுத்தவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். எஞ்சியிருந்த இவரது போர்வீரர்களின் முழுமையான விசுவாசத்தைப் பற்றி திடமான நம்பிக்கை கொண்ட பிறகு ஒரு வேட்டைப் பயணத்தின்போது தன்னுடைய தந்தை மீது அம்பெய்யுமாறு அவர்களுக்கு ஆணையிட்டார். அம்பு மழையில் இவரது தந்தை கொல்லப்பட்டார். தான் ஆணையிட்டால் அம்பெய்ய மறுப்பதற்கு யாரும் இல்லாதது, தன்னுடைய தந்தை பதவியில் இல்லாதது ஆகிய சூழ்நிலையில் சியோங்னுவின் சன்யூவாக மொடு தன்னைப் பொது அறிவிப்புச் செய்தார்.[7]

சன்யூவாக முடிசூட்டிக் கொண்ட பிறகு தான் புதிதாகப் பெற்ற சக்திக்கு அச்சுறுத்தலாக விளங்கிய யாரையும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையை மொடு மேற்கொண்டார். இவ்வாறாகத் தனது ஆட்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்த தனது எதிரி ஒன்றுவிட்ட சகோதரன், தனது மாற்றாந்தாய் மற்றும் பிற சியோங்னு அதிகாரிகளை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.

சியோங்னு பேரரசின் எழுச்சி

மொடுவின் ஆட்சியின் ஆரம்பத்தின் போது சியோங்னு நாடு மற்றும் அதன் செல்வாக்குப் பகுதிகள்.

மொடுவின் சியோங்னு பேரரசானது தன் நிலப்பரப்பை ஆக்ரோஷமாகப் பாதுகாத்தது மற்றும் விரிவாக்கம் செய்தது. சியோங்னுவின் கிழக்கில் இருந்த அண்டையவர்களான தோங்கு, இரு நாடுகளுக்கும் இடையில் மக்களற்ற நிலத்தை ஆக்கிரமிக்கத் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, அதற்கு எதிர்வினையாக மொடு அவர்களைத் தாக்கினார். கி. மு. 208ஆம் ஆண்டு வாக்கில் தோங்கு தோற்கடிக்கப்பட்டனர். அவர்களில் எஞ்சியவர்கள் சியான்பே மற்றும் உகுவான் பழங்குடி இனங்களாகப் பிரிந்தனர். வடக்கிலிருந்த திங்லிங் மற்றும் பிற மக்களை மொடு அடிபணிய வைத்தார். கி. மு. 203ஆம் ஆண்டு உயேசியைத் தோற்கடித்தார். இந்த வெற்றிகளுக்குப் பிறகு அனைத்து சியோங்னு பிரபுக்களும் மொடுவின் ஆளுமையை ஏற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றிகளின் மூலம் முக்கியமான வணிகப் பாதைகளை இவரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. இப்பாதைகள் பிறகு சியோங்னுவிற்கு ஒரு பெரிய வருமானத்தைக் கொடுத்தன.

ஆன் அரசமரபுடன் போர்

கி. மு. 200இல் ஆன் மன்னனாகிய சின் மயி, சுவோபங், தய் நிலப்பகுதியில் சியோங்னுவிடம் சரணடைந்தார். ஆன் நிலப்பரப்பு மீது சூறையாடல் நடத்த சியோங்னுவுடன் இணைந்து கொண்டார். ஆனின் பேரரசரான கவோசு இவர்களுக்கு எதிராக ஒரு இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். இவர்களது படைகளைச் சிதறச் செய்தார். இவர்களைப் பலமுறை தோற்கடித்தார். பிறகு இவர்கள் பின்வாங்கினர். சாவோவின் மன்னனாக சாவோ லீயைச் சின் பதவியில் அமர்த்தினார். கவோசுக்கு எதிராகத் தெற்கு நோக்கி அணிவகுத்தார். ஆனால் இவர்களும் கூடத் தோற்கடிக்கப்பட்டனர். தனக்குத் திறை செலுத்திய நாடுகள் மீது சியோங்னுவின் தாக்கத்தைக் கண்ட கவோசு வடக்கு நோக்கி 3,20,000 வீரர்களைக் கொண்ட வலிமையான இராணுவத்துடன் அவர்களை எதிர்கொள்வதற்காக அணிவகுத்தார். எனினும் குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போதுமான ஆடைகள் இல்லாத காரணத்தால் இவரது ஆட்கள் இடர்பாடுகளுக்கு ஆளாயினர். மேலும் அவர்களிடம் இராணுவத்திற்கு உணவு அளிக்கப் போதுமான பொருட்களும் இல்லை. எனவே கவோசு அவர்களை அங்கேயே விட்டுவிட்டுப் பிங்சங் நகரத்தை நோக்கி வெறும் 40,000 வீரர்களுடன் முன்னேறினார். இதைத் தனக்குச் சாதகமான ஒரு வாய்ப்பாக மொடு சன்யூ கண்டார். உடனடியாக நகரத்தை 3 இலட்சம் குதிரைப்படை வீரர்களுடன் சுற்றி வளைத்தார். தன்னுடைய பெரும்பான்மை இராணுவத்தில் இருந்து பேரரசர் துண்டிக்கப்பட்டார். இது ஏன் என்று தெரியவில்லை, ஆனாலும் சன்யூ இறுதியாகத் தனது வீரர்கள் சிலரைப் பின் வாங்க வைத்தார். சன்யூவின் துணைவி பேரரசரைத் தப்பிக்க விடுமாறு அவரை அறிவுரை கூறி இணங்க வைத்தார் எனச் சிமா சியான் கூறுகிறார். சின் காலாட்படையானது நேரத்திற்கு வராத காரணத்தால் நீண்ட முற்றுகையானது நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்திருக்கும். சன்யூவின் வீரர்கள் குறைவாக இருந்ததைக் கண்ட கவோசு முற்றுகையை உடைத்தார். ஆன் வலுவூட்டல் படைகள் வருகை புரிந்தபோது சியோங்னு பின்வாங்கினர். இது பைதேங் யுத்தம் என்று அழைக்கப்படுகிறது. சியோங்னுவிடம் பிடி படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய நிகழ்வானது தன்னுடைய நாடோடி எதிரியுடன் அமைதி ஏற்படுத்த கவோசுவை ஒப்புக்கொள்ள வைத்தது. கவோசு சன்யூவிற்கு ஒரு "இளவரசியை" அனுப்பி வைத்தார். பட்டு, மது மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார். இவற்றைச் சன்யூ ஏற்றுக்கொண்டார். கவோசுவின் ஆட்சியின் போது சிறு சிறு தாக்குதல்களை மட்டுமே சன்யூ நடத்தினார்.[8][9] இளவரசிகள் என்று தவறாகக் கூறப்பட்ட சாதாரண பெண்களை ஆன் அரச மரமானது அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தது. சில நேரங்களில் ஆன் ஏகாதிபத்தியக் குடும்ப உறுப்பினர்களையும் பலமுறை இந்தத் திருமணக் கூட்டணிக்காக சியோங்னுவிடம், பேரரசரின் மகள்களை அனுப்புவதைத் தவிர்ப்பதற்காக அனுப்பியது.[10][11][12][13][14]

தன்னுடைய சீனப் படையெடுப்புக்குப் பிறகு, உயேசி மற்றும் உசுன் பழங்குடியினங்களைச் சியோங்னுவிற்குத் திறை செலுத்தும் நாடுகளாக மொடு மாற்றினார்.

கி. மு. 195இல் யானின் மன்னனான லு வான், ஆன் தளபதி சோவு போவால் தோற்கடிக்கப்பட்ட பிறகு சியோங்னுவிற்குத் தப்பி ஓடினார்.[15]

கி. மு. 178இல் கான்சு மற்றும் தாரிம் வடிநிலத்தில் இருந்த உயேசி மற்றும் உசுன் பழங்குடியினங்கள் மீது சியோங்னு தாக்குதல் ஓட்டம் நடத்தியது.[16]

கி. மு. 174ஆம் ஆண்டு மொடு இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் ஜியூ ஆட்சிக்கு வந்தார். இலாவோசங்கு சன்யூ என்ற பெயரால் ஜியூ அறியப்படுகிறார்.[17]

பிந்தைய பழங்கதைகள்

துருக்கியிலுள்ள மொடுவின் (மெட்டே ஹான்) மார்பளவுச் சிலை.

ஜோகன்னஸ் டி துரோக்சு என்ற அங்கேரியர் எழுதிய குரோனிகா அங்கேரோரம் என்ற நூலில் அட்டிலாவின் பரம்பரையில் முன்னோராகக் குறிப்பிடப்படும் பிக்ஸ்டுன் அல்லது பெஸ்டுர் என்பவர் இந்த மொடு சன்யூ தான் என்று கருதப்படுகிறது.[18]

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மொடு_சன்யூ&oldid=3931342" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை