லிபர்லாந்து

லிபர்லாந்து (Liberland, அலுவல் சார்ந்து லிபர்லாந்து சுதந்திரக் குடியரசு) என்பது தன்யூப் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள, தன்னிச்சையாக பறைசாற்றப்பெற்ற ஒரு நுண் நாடு ஆகும். இது குரோவாட்ஸ்காவுக்கும், செர்பியாவுக்கும் இடையே உள்ள தகராறுக்குட்பட்ட நிலப் பகுதிகளுள் ஒன்றனுக்கு உரிமை கோருவதாகும். முதன்முதலில் ஏப்ரல் 13, 2015இல், செக் நாட்டைச் சேர்ந்த தாராளமயக் கொள்கையுடைய அரசியலரும், செயற்பாட்டாளருமான வீட் யெட்லிட்ச்கா லிபர்லாந்தின் தோற்றத்தை பொது அறிவிப்பு செய்தார்.[1][2]

லிபர்லாந்து சுதந்திரக் குடியரசு
நுண் நாடு
கொடி of லிபர்லாந்து
கொடி
சின்னம் of லிபர்லாந்து
சின்னம்
குறிக்கோள்: Žít a nechat žít (வாழ்க, வாழ விடுக)
To live and let live
ஐரோப்பாவில் லிபர்லாந்தின் அமைவிடம்
உரிமை கோரப்படும் லிபர்லாந்தின் அமைவிடம்
ஆட்சி மொழி(கள்)செக் மொழி, ஆங்கிலம்[1]
நிறுவன வகைதன்னிச்சையாக அறிவித்துக்கொள்ளப்பட்ட நுண் நாடு
• குடியரசுத் தலைவர்
வீட் யெட்லிட்ச்கா (நிறுவனர்)
நிறுவுதல்
• நிறுவப்பட்டது
ஏப்ரல் 13, 2015 (2015-04-13)
பரப்பு கூறப்படும்
• மொத்தம்
7 km2 (2.7 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
0
கூறப்படும் நாணயம்எதுவுமில்லை

குரோவாட்ஸ்காவுக்கும், செர்பியாவுக்கும் இடையே நடந்துவரும் எல்லைத் தகராறு காரணமாகவே இந்நாடு உருவாக்கப்பட்டதாக லிபர்லாந்தின் அலுவல்முறை இணையதளம் குறிப்பிடுகிறது.[3][4][5] இதுவரை ஐக்கிய நாடுகள் அவையில் இடம்பெற்றுள்ள எந்த நாடும் வெளியுறவு சார்ந்த ஏற்பினை லிபர்லாந்துக்கு வழங்கவில்லை. குரோவாட்ஸ்காவிலும், செர்பியாவிலும் உள்ள சட்ட வல்லுநர்கள் யெட்லிட்ச்காவின் உரிமைகோரலுக்கு சட்டம் சார்ந்து எவ்வித அடிப்படையும் இல்லை என்றே கூறிவருகின்றனர். மேலும் இந்நிலப்பகுதிக்கு இவ்விரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடி வருவதாக செய்திகள் பலவும் தெரிவிக்கின்றன.[6][7] இரு வேறு விதங்களில் எதிர்வினையாற்றி இருந்தாலும், குரோவாட்ஸ்கா, செர்பியா ஆகிய இரு நாடுகளுமே யெட்லிட்ச்காவின் அறிவிப்பை அற்பமானது என்று புறந்தள்ளியுள்ளன. 24 ஏப்ரல் 2015 அன்று செர்பிய வெளியுறவு அமைச்சகம் தாம் இதனை சிறிய விடயமாகக் கருதினாலும், "புதிய அரசு" தன்யூப் ஆற்றினால் எல்லை பிரிக்கப்படும் தமது பகுதிக்குள் குறுக்கிடவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.[8] இந்நிலப் பகுதியை நிர்வகித்து வரும் குரோவாட்ஸ்காவோ பன்னாட்டு நடுமைத் தீர்வுக்குப் பிறகு இப்பகுதி குரோவாட்ஸ்காவுக்கோ, செர்பியாவுக்கோ வழங்கப்பட வேண்டுமே அன்றி மூன்றாம் தரப்பு எதற்கும் வழங்கப்படக் கூடாது என்று கூறியுள்ளது.[9]

மே 2015 இன் தொடக்கத்தில் இருந்து இப்பகுதிக்குச் செல்ல விடாமல் குரோவாட்ஸ்கா தடுத்து வருகிறது.[6] அதே மாதத்தில் வீட் யெட்லிட்ச்கா ஒரு நாளுக்கும் குறைவாக இரு முறை காவலில் வைக்கப்பட்டார்.

அமைவிடம்

லிபர்லாந்தால் உரிமை கோரப்படும் நிலப்பகுதி வரைபடத்தில் "Siga" (அனற்பாறை) எனக் குறிக்கப்பட்டு பச்சை நிறம் தீட்டப்பட்டுள்ள பகுதியாகும். எல்லை வரையறையில் உள்ள குழப்பங்களால் தன்யூப் ஆற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள மஞ்சள் நிறப் பகுதிகளை செர்பியா, குரோவாட்ஸ்கா ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடுகின்றன. பச்சை நிறப் பகுதிக்கு இவ்விரு நாடுகளும் உரிமை பாராட்டியதில்லை என்று யெட்லிட்ச்கா கூறிவரும் நிலையில், அதை அந்நாடுகள் மறுக்கின்றன.

யுகோசுலாவியப் போர்களில் இருந்தே செர்பியாவுக்கும், குரோவாட்ஸ்காவுக்கும் இடைப்பட்ட உக்கோவார் தீவு, சாரென்கிராடு தீவு உள்ளிட்ட சில எல்லைப் பகுதிகள் தகராறுக்குரியவையாக இருந்து வரும் நிலையில் யெட்லிட்ச்கா குறி வைத்துள்ள இடத்துக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.[6][7] ஆனால் மேட்டு அனற்பாறை (Gornja Siga, upper tufa) என்று அறியப்படும் இப்பகுதியை இந்நாடுகள் உரிமை கோரியதில்லை என்றே யெட்லிட்ச்கா வலியுறுத்தி வருகிறார்.[1][2][4]

லிபர்லாந்தின் பரப்பளவு சுமார் 7 சதுர கிலோமீட்டர்கள் (2.7 sq mi). இதன் பெரும்பகுதி காடு ஆகும். குடியிருப்பவர் எவருமில்லை. ஏப்ரல் 2015இல் இப்பகுதிக்குச் சென்ற செக் இதழியலாளர் பாழடைந்த வீடு ஒன்றைக் கண்டுள்ளார். அவ்வீடு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. அணுகுசாலை மோசமான நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.[10]

பல நிலம்சூழ் நாடுகளும் கருங்கடலை எளிதாக அடைவதற்குரிய பன்னாட்டு நீர்வழியான தன்யூப் ஆறு லிபர்லாந்தின் வழி பாய்கிறது.

குடியுரிமை

லிபர்லாந்தின் அலுவல்முறை இணையதளத்தின்படி பொதுவுடைமையாளர்கள், புதிய நாசிசவாதிகள், ஏனைய தீவிரவாதிகள் ஆகியோருக்கு மட்டுமே குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.[11][11][12] தி கார்டியன் இதழின் செய்திப்படி ஒரே வாரத்தில் குடியுரிமை கோரி 200,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன[13] மே 2015இல் சுமார் முப்பது பேருக்கு முதன்முறையாக குடியுரிமை வழங்கப்பட்டது. லிபர்லாந்தில் நடக்கவிருந்த இந்நிகழ்வுக்குச் செல்லவிருந்த அக்குழுவை குரோவாட்ஸ்காவின் எல்லைக் காவல் படை நுழைய விடாது தடுத்தது. செர்பியப் பகுதியில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம் ஆற்றைக் கடந்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செர்பிய மீன்பிடி படகுகளை ஆட்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் அனுமதி இல்லாததால் அதுவும் கைவிடப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக எல்லை தாண்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் செர்பிய காவல்துறை எச்சரித்தது. பச்கி மோனோச்டர் என்ற செர்பிய கிராமம் ஒன்றில் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டு இவ்விழா நடத்தப்பட்டது. அதே நேரத்தில், பன்னாட்டு நீர்வழியான தன்யூப் ஆற்றின் வழியாக செக் குடியரசிலிருந்தே லிபர்லாந்துக்குள் நுழையும் முயற்சி மேற்கொள்வதாகத் திட்டம் வகுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.[14]

அரசியலைமைப்புச் சட்டத்தின் முன்வரைவு ஒன்று எழுதப்பட்டு பல முறை திருத்தப்பட்டுள்ளது. முதன்மையாக காச்பர் சயாட்ச் என்பவர் எழுத கிட் ஹப்பில் பலரும் பங்களித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைச் சட்டவரைவு, சட்டமியற்றும் அதிகாரம், செயல்படுத்தும் அதிகாரம், நீதி வழங்கும் அதிகாரம் என நான்கு பிரிவுகள் உள்ளன.[15][16]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லிபர்லாந்து&oldid=3626170" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்