வாலசுக் கோடு

வாலசுக் கோடு (Wallace Line) அல்லது வாலசின் கோடு (Wallace's Line) என்பது, ஆசியச் சூழ்நிலை மண்டலத்தையும், ஆசியாவுக்கும், ஆசுத்திரலேசியாவுக்கும் இடையிலான மாறுநிலைப் பகுதியான வாலசியச் சூழ்நிலை மண்டலத்தையும் பிரிக்கின்ற விலங்குவளம்சார் எல்லைக்கோடு ஆகும். இது, 1859ல் பிரித்தானிய இயற்கையியலாளர் அல்பிரட் ரசல் வாலசு என்பவரால் வரையப்பட்டது. இக்கோட்டுக்கு வடக்கே, ஆசிய இனங்களோடு தொடர்புடைய உயிரினங்களும், கிழக்கில், ஆசியாவையும் ஆசுத்திரேலியாவையும் மூலமாகக் கொண்ட இனங்கள் கலந்தும் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டில் வாலசு கிழக்கிந்தியாவூடாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்தத் தெளிவான வேறுபாட்டைக் கவனித்தார்.

வாலசின் கோடு ஆசுத்திரலேசிய, தென்கிழக்காசிய விலங்கு வளங்களுக்கு இடையில் எல்லையாக அமைகிறது. கடைசிப் பெருமப் பனிப்பாறைக் காலத்தில், கடல் நீர் மட்டம் இன்றிருப்பதைவிட 110மீ தாழ்வாக இருந்தபோது, இருந்திருக்கக்கூடிய நிலப்பகுதியின் விரிவு சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. பாலிக்கும், லோம்போக்குக்கும் இடையில் உள்ள லோம்போக் நீரிணையின் ஆழம் காரணமாக, நீர் மட்டம் குறைந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த தீவுகள் இணைந்திருந்த காலத்திலும் இது ஒரு நீர்த்தடையாகச் செயற்பட்டுள்ளது.

இக்கோடு, இந்தோனீசியாவுக்கூடாக போர்னியோவுக்கும், சுலவேசிக்கும் இடையிலும், பாலிக்கும் லோம்போக்குக்கும் இடையில் லோம்போக் நீரிணையூடாகவும் செல்கிறது. பாலிக்கும் லோம்போக்குக்கும் இடையிலான தூரம் குறைவு. ஏறத்தாழ 35 கிமீ (22 மைல்). பல பறவைகள் மிகச் சிறிய கடற்பரப்பையே தாண்டுவதில்லை ஆதலால், பல பறவையினங்களின் பரம்பல் இந்த எல்லையைக் கடந்து காணப்படவில்லை. சில வௌவால் இனங்கள் இந்த எல்லைக்கு இருபுறமும் காணப்படுகின்றன. ஆனால், பிற பாலூட்டிகள் எல்லைக்கு ஏதோ ஒரு பக்கத்திலேயே உள்ளன. ஆனால், நண்டு உண்ணும் ஒருவகைக் குரங்குகளை இரண்டு பக்கங்களிலும் காணமுடிகிறது. மேலோட்டமான விலங்குகளின் பரவல் கோலம் கருத்தைக் கவரக்கூடிய வகையில், வாலசின் கருத்துக்கு இயைபானதாகவே காணப்படுகிறது. தாவர வளங்கள், விலங்கு வளங்களைப்போல வாலசின் கோட்டைப் பின்பற்றவில்லை.[1]

வரலாற்றுப் பின்னணி

வாலசின் கட்டுரையில் உள்ள, கோட்டைக் காட்டும் நிலப்படம்

பெர்டினன்டோ மகெலன் கொல்லப்பட்ட பின்னர் அவரது பயணத்தைத் தொடர்ந்த அந்தோனியோ பிடாபெட்டா என்பவர், பிலிப்பைன்சுக்கும், மலுக்குத் தீவுகளுக்கும் இடையே உயிரியல் வேறுபாடுகள் காணப்படுவது குறித்து 1521ல் பதிவுசெய்துள்ளார். அதுமட்டுமன்றி, வாலசே குறிப்பிட்டிருப்பதுபோல், இரண்டு பகுதிகளுக்கும் இடையே விலங்கு வளங்களில் வேறுபாடுகள் இருப்பது குறித்து ஜார்ஜ் வின்சர் ஏர்ள் ஏற்கெனவே கவனித்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவினதும், ஆசுத்திரேலியாவினதும் பௌதீகப் புவியியல் குறித்து (On the Physical Geography of South-Eastern Asia and Australia) என்னும் தலைப்பில் ஏர்ள் 1845ல் ஒரு சிறுநூலை வெளியிட்டார். இதில் கடல் மட்டம் குறைந்திருந்த காலத்தில் மேற்குப் பகுதியில் இருந்த தீவுகள் ஆசியாவுடன் இணைந்திருந்து ஒரே வகையான விலங்கினங்களைக் கொண்டிருப்பது குறித்தும், கிழக்கில் இருந்த தீவுகள் ஆசுத்திரேலியாவுடன் இணைந்திருந்து பைகொண்ட பாலூட்டி இனங்களைக் கொண்டிருப்பது பற்றியும் விபரித்துள்ளார். வாலசு, இப்பகுதிகளில் அவர் மேற்கொண்ட விரிவான பயணங்களைப் பயன்படுத்தியும், "போர்னியோவிற்கும் சாவாவுக்கும் கிழக்கே உள்ள எல்லாத் தீவுகளும், ஒருகாலத்தில் ஆசுத்திரேலிய அல்லது பசுபிக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்தவை" என்பதை எடுத்துக்காட்டியும், விலங்குவள வேறுபாட்டுக்கான எல்லைக் கோடொன்றை பாலிக்குக் கிழக்கே முன்மொழிந்தார்.[2] வாலசுக் கோடு என்னும் பெயரை முதலில் பயன்படுத்தியவர் தாமசு அக்சுலி (Thomas Huxley) ஆவார். 1868 இலண்ட விலங்கியல் கழகத்துக்கு அளித்த கட்டுரை ஒன்றில் அவர் அப்பெயரைப் பயன்படுத்தி, அக்கோட்டை பிலிப்பைன்சுக்கு மேற்கில் குறித்திருந்தார்..[3][4] டார்வினின் கூர்ப்பு தொடர்பான எடுகோளை ஆதரித்து ஜோசேப் டால்ட்டன் ஊக்கர் (Joseph Dalton Hooker), ஆசா கிரே (Asa Gray) ஆகியோர் கட்டுரைகளை எழுதிவந்த அதே நேரத்தில், இந்தோனீசியாவில் வாலசின் ஆய்வுகள் உருவாகிக்கொண்டிருந்த கூர்ப்புக் கொள்கையை விளக்குவனவாக அமைந்தன.[5]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

  • ஆசுத்திரலேசியச் சூழல்மண்டலம்

வெளியிணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாலசுக்_கோடு&oldid=3520638" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை