வின்சென்ட் தே பவுல்

புனித வின்சென்ட் தே பவுல் (24 ஏப்ரல் 1581 – 27 செப்டம்பர் 1660) கத்தோலிக்க திருச்சபையில் வாழ்ந்த, ஏழைகளுக்கு தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும், ஆங்கிலிக்க ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.[1]

புனித வின்சென்ட் தே பவுல்
ஒப்புரவாளர், சபை நிறுவனர்
பிறப்பு(1581-04-24)24 ஏப்ரல் 1581
பாவ்ய், காஸ்கனி, பிரான்ஸ்
இறப்பு27 செப்டம்பர் 1660(1660-09-27) (அகவை 79)
பாரிஸ், பிரான்ஸ்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்
அருளாளர் பட்டம்13 ஆகஸ்ட் 1729, ரோம் by திருத்தந்தை 13ம் பெனடிக்ட்
புனிதர் பட்டம்16 ஜூன் 1737, ரோம் by திருத்தந்தை 12ம் கிளமென்ட்
முக்கிய திருத்தலங்கள்புனித வின்சென்ட் தெ பவுல் சிற்றாலயம், ர்யூ டி செவ்ரெஸ், பாரிஸ், பிரான்ஸ்
திருவிழாசெப்டம்பர் 27
பாதுகாவல்தொண்டு நிறுவனங்கள்; மருத்துவமனைகள்; தொழுநோய்; சிறைக்கைதிகள்; புனித வின்சென்ட் தெ பவுல் சபைகள்; தன்னார்வலர்கள்

வாழ்க்கை குறிப்பு

புனித வின்சென்ட் பிரான்ஸ் நாட்டில் காஸ்கனியின் பாவ்ய் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.[2]

பிரான்சின், டாக்சில் கலை இலக்கியப் படிப்பையும், தவ்லோசில் இறையியல் படிப்பையும் முடித்து, 1600ஆம் ஆண்டு கத்தோலிக்க குருவானார். அதன் பிறகும், சிறிது காலம் தவ்லோசிலேயே தங்கி இருந்தார். 1605ல், மார்செய்ல் பகுதிக்கு திரும்பும் வழியில் துருக்கிய கடற்கொள்ளையரால் பிடித்துச்செல்லப்பட்டு, துனீசியாவின் டுனிஸ் பகுதியில் அடிமையாக விற்கப்பட்டார்.[3] தனது உரிமையாளரை கிறிஸ்தவராக மனந்திருப்பிய பிறகு, 1607ல் அங்கிருந்து தப்பித்தார்.

பிரான்சுக்கு திரும்பியதும், வின்சென்ட் ரோமுக்கு பயணம் மேற்கொண்டு, தனது படிப்பைத் தொடர்ந்தார். 1609ல், அரசர் 4ஆம் ஹென்றிக்கு பணி செய்ய பிரான்ஸ் அனுப்பப்பட்டார்; அங்கு அவர் மார்கரெட் டி வலோயிசின் குருவாக பணியாற்றினார். சிறிது காலம் க்ளிச்சியின் பங்கு குருவாக இருந்துவிட்டு, 1612 முதல் புகழ்பெற்ற கான்டி குடும்பத்துக்கு குருவாக பணியாற்றினார். இவர் டி கான்டி சீமாட்டியின் ஒப்புரவாளராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருந்தார்; மேலும் அந்த சீமாட்டியின் உதவியோடு, பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகளுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்.[3]

1622ல், வின்சென்ட் தே பவுல் போர் கப்பலில் குருவாக நியமிக்கப்பட்டார்; அங்கு இவர் போர் கைதிகளுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.[2]

1625ஆம் ஆண்டு, வின்சென்ட் மறைப்பணி சபை என்ற துறவற சபையை நிறுவினர்; மறைபரப்பு பணியை மேற்கொள்ளும் இச்சபையின் குருக்கள் பொதுவாக வின்சென்டியர்கள் அல்லது லாசரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1633ல் லூயிஸ் தே மரிலாக்கின் வழிகாட்டுதலோடு, பிறரன்பு புதல்விகள் என்ற பெண்களுக்கான துறவற சபையை இவர் நிறுவினார்.[1] இவர் ஜான்செனிச பேதகத்திற்கு எதிராகவும் போராடினார். (பேதகம் என்பதற்கு தவறான கிறிஸ்தவ போதனை என்பது பொருள்).

பிறரன்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய வின்சென்ட் தே பவுல், 1660 செப்டம்பர் 27ந்தேதி மரணம் அடைந்தார். இவரது தே பவுலின் கருணை, பணிவு, தாராள குணம் ஆகியவை அவருக்கு புகழைத் தேடித் தந்திருக்கின்றன.[1]

வணக்கம்

புனித வின்சென்ட் தே பவுலின் மெழுகு உருவம், பிரான்ஸ்.

1705ல், வின்சென்ட் தே பவுலின் புனிதர் பட்டமளிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, வின்சென்ட்டியர்களின் தலைவர் கோரிக்கை விடுத்தார். 13 ஆகஸ்ட் 1729 அன்று, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் வின்சென்ட்டுக்கு முத்திப்பேறு (அருளாளர்) பட்டம் வழங்கினார். 16 ஜூன் 1737 அன்று, திருத்தந்தை 13ம் கிளமென்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

வின்சென்ட் தே பவுல் இறந்த 52 ஆண்டுகளுக்கு பிறகு, 1712ல் முதன்முறை அவரது கல்லறை தோண்டப்பட்டபோது, அவருடைய உடல் முழுவதும் அழியாமல் இருந்தது. ஆனால் 1737ல் புனிதர் பட்டத்திற்காக இவரது கல்லறை மீண்டும் தோண்டப்பட்டபோது, சில எலும்புகளும் இதயமும் மட்டுமே அழியாமல் கிடைத்தன.

பாரிசில் வின்சென்ட்டியர்களின் தலைமையகச் சிற்றாலயத்தில் உள்ள, புனித வின்சென்ட் தே பவுலின் மெழுகு உருவத்தின் உள்ளே அவரது எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. பாரிசில் உள்ள பிறரன்பு புதல்விகளின் தலைமை இல்லத்தில் இருக்கும் திருப்பண்டப் பேழையில் வின்சென்ட் தே பவுலின் இதயம் வைக்கப்பட்டுள்ளது.[4]

1737ல், இவரது விழா நாளாக ஜூலை 19ந்தேதி குறிக்கப்பட்டு ரோமன் நாள்காட்டியில் இணைக்கப்பட்டது.[5] 1885ல், திருத்தந்தை 13ம் லியோ இவரை பிறரன்பு சகோதரிகளின் பாதுகாவலராக அறிவித்தார்.[3] இவர் பிறரன்பு சகோதரர்களின் பாதுகாவலராகவும் இருக்கிறார். திருத்தந்தை 6ம் பவுல் புனித வின்சென்ட் தே பவுலின் விழாவை செப்டம்பர் 27ந்தேதிக்கு மாற்றினார்.[6]

சிறப்புகள்

  • 1833ல், அருளாளர் ஃப்ரடெரிக் ஓசானம் இவரது பெயரால், ஏழைகளுக்கு உதவி செய்யும் பிறரன்பு அமைப்பாக புனித வின்சென்ட் தே பவுல் சபையை நிறுவினார். இந்த சபை இன்று 132 நாடுகளில் உள்ளது.[7]
  • புனித வின்சென்ட் தே பவுலின் வரலாற்றை மையப்படுத்தி, 1947ல் பைரே ஃப்ரெஸ்னே என்பவர் மான்சியர் வின்சென்ட் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

ஆதாரங்கள்

 இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது:  Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை