இந்தியத் தரைப்படை

இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.
(இந்திய ராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

இந்திய பாதுகாப்பு படைகள்
முப்படைகளின் இலச்சினை
முப்படைகளின் இலச்சினை.
ஆள்பலம்
மொத்த பாதுகாப்பு படைகள்2,414,700 (3 வது இடம் )
செயலார்ந்த பணியில் ஈடுபடுவோர்1,414,000 (3 வது இடம் )
மொத்தபடைகள்3,773,300 ((6 வது இடம் ))
துணை ராணுவ படைகள்1,089,700
உறுப்புகள்
இந்திய தரைப்படை
இந்திய வான்படை
இந்தியக் கடற்படை
இந்தியக் கடலோரக் காவல்படை
துணை இராணுவ படைகள்
உத்திசார்ந்த அணுஆயுத கட்டளையகம்
வரலாறு
இந்திய இராணுவ வரலாறு

ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப்பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர் [1] மேலும், ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.[2] வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை.இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.[3]

இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டில் இந்திய தரைப்படை உருவாக்கப்பட்டு, ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை, இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாக பணியாற்றியுள்ளது. இப்படை தற்பொழுது முதன்மை தரைப்படை தலைவர் பிக்ரம் சிங் தலைமையில் செயல்படுகிறது. தரைப்படையின் தலைமைப் பதவி பீல்டு மார்சல். இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவர்: பீல்டு மார்சல் மானக்சா 1973, ஓய்வு பெற்ற பின் 30 அண்டுகள் கழித்து 1986 இல் பீல்டு மார்சல் கரியப்பா.

குறிக்கோள்கள்

இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப்பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.

  • முதன்மை குறிக்கோள் : நாட்டின் பாதுகாப்பு நலன், அரசுரிமையை பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பை பாதுகாத்தல், இந்தியாவை வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்.
  • இதர குறிக்கோள்கள்: பிற மறைமுக போர்களில் அரசு முகமைகளுக்கு உதவுதல் மற்றும் பிற உள்நாட்டு அச்சுறுத்தல்களை களைதல், குடிமக்களுக்கு அவசர கால தேவையின் போது உதவியளித்தல். "[4]

வரலாறு

இந்திய தரைப்படையின் ரி-90 தகரி

இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டு , ஆங்கிலேய-இந்திய தரைப்படை இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. பெரும்பான்மையான படைகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன. இந்தியத் தரைப்படை ஆங்கிலேய-இந்திய தரைப்படையில் இருந்து உய்த்துணரப் பட்டதால், ஆங்கிலேய-இந்தியத் தரைப்படையின் அதே நிலைமுறை வடிவமும், சீருடைகளும், பழக்கவழக்கங்களும், ஆங்கிலேய மரபை ஒத்துள்ளது. நகைச்சுவையாக, இந்திய தரைப்படை இன்றைய ஆங்கிலேயருடைய படையினரை விட அதிகமாக ஆங்கிலேய மரபை பாதுக்காப்பதாக்க் கூறுவர்.

முதலாவது காசுமீர் போர் (1947)

விடுதலை அடைந்த உடனே இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே காசுமீர் மாநில உரிமை மீதான சச்சரவின் மூலம் போர் நடந்தது. அந்நாளில் இசுலாமியர் பெரும்பான்மையான காசுமீர் மாநிலத்தை ஆண்ட இந்து அரசர் தன் மாநிலத்தை இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ சேர்க்க இணக்கம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, பாக்கித்தான் தன் படைகளை ஏவி காசுமீரத்தை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைக்க முயன்றது. காசுமீர் அரசர் அரிசிங் இந்தியாவின் படைத்துறை உதவியை நாடினார். இந்தியா முதலில் உதவ மறுத்தாலும், பின் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் கையொப்பம் ஆனதும் தன் படைகளை அனுப்பியது. இவ்வொப்பந்தத்தை பாக்கித்தான் இன்றளவும் ஏற்க மறுக்கிறது. இப்போரில் இந்திய தரைப்படைகள் காசுமீரின் தலைநகரான சிறிநகர் பகுதியில் வான்படையால் இறக்கப்பட்டனர். இப்போரில் இந்திய தரைப்படை தலைவர் செனரல் திம்மையா மாறுவேடத்தில் நேரடியாக பங்கேற்றார். மாநிலம் முழுவதும் நடைபெற்ற போரில் பல முன்னாள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போரிட்டனர்.1948ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாக்கித்தானிய போர் முடிவுக்கு வந்தது. இருதரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளை தமதாக்கிக் கொண்டு ஒரு தற்காலிக கட்டுப்பாட்டுக் கோட்டினை ஒப்புக்கொண்டு இயங்குகின்றனர்.

அமைதி காக்கும் படை பணிகள்

இந்திய தரைப்படை வீரர்கள் செப்டம்பர் 1953 ஆம் ஆண்டு அமைதி காக்கும் படையாக கொரியா வந்திறங்கும் காட்சி

தற்காலத்தில் இந்திய தரைப்படை தனது ஒரு பட்டாளத்தை ஐக்கிய நாடுகள் அவையின் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. தனது நீண்ட, கடினமான அமைதி காக்கும் படைப் பணிகளை உலகம் முழுவதும் செய்து தொடர்ச்சியாக நிகழ்த்தி வருவதை ஐநா அவை பாராட்டியுள்ளது. இந்தியத் தரைப்படை அமைதி காக்கும் படையாக பங்கேற்ற பல பணிகளில் அங்கோலா, கம்போடியா, சைப்ரஸ், காங்கோ மக்களாட்சி குடியரசு, எல் சால்வடோர், நமீபியா, லெபனான், லைபீரியா, மொசாம்பிக், ருவாண்டா, சோமாலியா, இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளில் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரியப் போரில் மருத்துவ உதவிகளை மேற்கொண்டது.

ஐதராபாத் போர் (1948)

இந்தியப் பிரிவினைக்குப் பின்னும், ஐதராபாத் மாநிலம், ஐதராபாத் நிசாமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஐதராபாத் நிசாம் தன் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க இணங்கவில்லை. இந்திய அரசுக்கும் நிசாமுக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று முடிவுக்கு வந்தது. இந்திய துணை தலைமை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியப் படைகளை ஐதராபாத் மாநிலத்தை கைப்பற்ற அனுப்பினார். ஐந்து நாள்கள் கடும் சண்டையில் இந்திய தரைப்படை, இந்திய வான்படை உதவியுடன், வெற்றிகரமாக ஐதராபாத் மாநிலத்தைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஐதராபாத் மாநிலம் இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

கோவா, தாமன், தியு போர் (1961)

ஆங்கிலேய, பிரெஞ்சு ஆதிக்க சக்திகள் 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இருப்பினும் கோவா, தாமன் மற்றும் தியு பகுதிகளை கைவசம் கொண்ட போத்திகீசியர் அப்பகுதிகளை விட்டு வெளியேற மறுத்தனர். 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் நாள், இந்திய அரசு விஜய் நடவடிக்கை என்ற பெயரில் போத்திகீசிய பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கை தொடங்கியது. இருபத்தியாறு மணி நேரத்தில் கோவா, தாமன், தியு பகுதிகள் இந்தியாவின் வசம் வந்தது.

இந்திய-சீன போர் (1962)

இந்திய-சீன போரின் முடிவில் திருத்தியமைக்கப்பட்ட வரைபடம்

1959இல் இருந்தே, இந்தியா, தனது படைகளை இந்திய–சீன எல்லையில், சீனா தனது பகுதிகளாக கருதும் பகுதிகளில் முன்னேற்றியது. பல சிறிய எல்லை சண்டைகளை இந்தியா தொடங்கினாலும், சீனா எந்தவித பதில் நடவடிக்கையையும் எடுக்க வில்லை.[5] திபெத் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில் இரு நாடுகளுக்குமிடையே உரசல்கள் கூடின.[6]

இந்திய படை ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது படைவலுவைத் தவறாக கணக்கிட்டு மக்கள் சீனக் குடியரசுடனான எல்லைப் பிரச்சனையை போர் மூலம் முடிவுக்கு கொண்டுவரத் திட்டமிட்டது. 1962ஆம் ஆண்டு, இந்தியத் தரைப்படை பூட்டான், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லை அருகே 5 கிலோமீட்டர் சீன எல்லைக்குள் முகாமிட்டது. சீனாவும் பல இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் ஆக்கிரமித்த அகாசி சீன் பகுதிகளில் சீனா பல சாலைகளையும் உருவாக்கி இராணுவ நடவடிக்கைகளுக்கு வியூகம் அமைத்திருந்தது. பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சீனத் தரைப்படை இந்தியத் தரைப்படையை அக்டோபர் 12இல், தக்களா மேடு என்ற பகுதியில் திடீரெனத் தாக்கியது. திடீர் தாக்குதலில் இந்தியத் தரைப்படை நிலைகுலைந்தது. அகாசி சின் வரையிலான பகுதிகளை திரும்ப கைப்பற்றுமாறு அன்றைய தலைமை அமைச்சர் நேரு ஆணையிட்டார். எனினும், வெகுதாமதமாக வந்த ஆணையால் இந்தியத் தரைப்படையால் போதுமான படைகளை நகர்த்த முடியாமல் போனது. மேலும், சீனப் படையினரின் அதிகமான எண்ணிக்கையும், சீனா எல்லையின் பல இடங்களில் தாக்குதலை துவக்கியதும், இந்தியத் தரைப்படையை சீர்குலைத்தன. சீனா அகாசி சின் பகுதியை மட்டுமல்லாது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளையும் கைப்பற்றினர். சீனா தாம் கோரிய பகுதியை கைப்பற்றியதுடன் மற்ற சில பகுதிகளையும் கைப்பற்றியபின் மக்கள் சீனக் குடியரசு இந்திய அரசை சமரசத்திற்கு அழைத்தது. ஆனால் இந்தியா சமரசத்தை வேண்டாது தொடர்ந்து போரில் ஈடுபட, சீனா தாமாகவே அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை விட்டு பின்வாங்கியது. இந்தியப் படைகளின் மோசமான தோல்வி பல கேள்விகளை எழுப்பியது. கென்டர்சன் பூருக்ஸ் என்பவர் தலைமையில் தோல்வியின் காரணங்களை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் முடிவின்படி இந்திய படைத்துறையின் தலைமையும் இந்திய அரசியல் தலைமையும் இத்தோல்விக்கு காரணம் என்று அறியப்பட்டது. மேலும் இந்தியத் தரைப்படை மிகக்குறைந்த அளவில் படையை பயன்படுத்தியதும், வான்படைகள் போதுமான அளவில் படைகளை நகர்த்த இயலாமையும் இந்தியப் படைத்துறையின் தவறுகளாகச் சுட்டப்பட்டன. அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருசுண மேனன் ஊடகங்களின் பெரும் கண்டனத்துக்கு ஆளானார்.[7][8]

இரண்டாம் காசுமீர் போர் (1965)

முதன்மை கட்டுரை :இந்திய-பாகிஸ்தான் போர், 1965

பாகிஸ்தானுடன் 1965 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது காசுமீர் போர் காசுமீர் மாநிலத்தில் நடந்தது. பாக்கிஸ்தானிய ஜனாதிபதி அயூப் கான் ஜிப்ரால்டர் இரகசிய நடவடிக்கை என்ற பெயரில் ஆகஸ்ட் 1965ல் பாக்கிஸ்தானிய துணை ராணுவ படைகளை இந்திய கட்டுப்பாட்டில் இருந்த காசுமீர் பகுதியில் ஊடுருவ உத்தரவிட்டார். இந்திய சீனப் போரில் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்திய படைகளைத் தாக்க இதுவே தக்க சமயம் என பாக்கிஸ்தானிய தலைவர்கள் எண்ணினர். இச்சதித் திட்டத்தின் இன்னொரு பகுதியாக பாக்கிஸ்தானிய இராணுவம் தாக்கும் வேளையில் காசுமீர் இசுலாமிய மக்களை இந்தியாவுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட வைத்து இந்திய இராணுவத்தை நிலை குலைய வைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது. எனினும் காசுமீர் இசுலாமிய மக்கள் இந்தியாவை எதிர்க்க முன்வராததால் இந்நடவடிக்கை பெரும் தோல்வியுற்றது. மேலும் இந்தியத் தரைப்படை மிக விரைவாக செயல்பட்டு ஊடுருவியவர்களை விரட்டியது. இந்தியாவின் பதில் நடவடிக்கை பாக்கிஸ்தான் இராணுவத்துக்குப் பெரும் சேதத்தை விளைவித்தது.[9][10][11] போர்க் காலம் முடிந்து சண்டைநிறுத்தம் ஏற்பட்டபோது, இந்திய அறிக்கையின்படி சுமார் 3000 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டும், 8500 பேர் காயமடைந்தும், 1,100 பேர் போர் கைதிகளாகவும் இருந்தனர். பாக்கிஸ்தான் பக்கத்து அறிக்கையில் சுமார் 3 ,800 பாக்கிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் , 9,000 பேர் காயமடைந்ததாகவும் மேலும் 2 ,000 பேர் போர் கைதிகளாக இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவித்தது.[12][13] ஏறத்தாழ 200 பாக்கிஸ்தானிய பீரங்கி வாகனங்கள் இந்தியா அழிக்கவோ கைப்பற்றவோ செய்தது. இந்தியா தனது பங்குக்கு மொத்தம் 190 பீரங்கி வாகனங்களை இழந்தது.[11] ஆக மொத்தம், பாக்கித்தான் இழந்ததில் பாதியாவது இந்தியா இழந்திருந்தது.[14] ஐக்கிய அமெரிக்கா, ஐநா அவையின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியா போரை நிறுத்தி தாசுகண்ட் பேரறிவிப்பு வெளியிட்டது.அரசியல் காரணங்களுக்காகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது.[15] .

வங்காளதேச போர் (1971)

முதன்மை கட்டுரை: வங்காளதேச விடுதலைப் போர் 1971 ஆம் ஆண்டு, மேற்கு பாக்கித்தான் தொடர்ந்து தங்களை ஒதுக்கி வந்ததை எதிர்த்து கிழக்கு பாக்கித்தானில் (கிழக்கு வங்காளம்) வங்காள விடுதலைப் போராட்டம் துவங்கியது. இதை ஒடுக்க பாக்கித்தானிய அரசு கடும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏதிலிகள் இந்தியாவில் குடிபுகுந்தனர். ஆயிரக்கணக்கான ஏதிலிகளின் எதிர்பாரா வருகையால் போதுமான வசதிகளை ஏற்படுத்த இயலாமல் திணறிய இந்திய அரசு வங்காள விடுதலை போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது.

நவம்பர் 20 , 1971,இல் இந்திய தரைப்படை 14 வது பஞ்சாப் பட்டாளத்தையும் 45 வது குதிரைப்படையையும் இந்திய - கிழக்கு பாக்கிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கரிப்பூர் என்ற பகுதிக்கு நகர்த்தியது . பின் நடைபெற்ற கரிப்பூர் போரில் இந்தியா வென்றது. இந்தியாவின் தலையீட்டைத் தடுக்க பாக்கிஸ்தான் வான்படை நடத்திய செங்கிஸ்கான் நடவடிக்கை முழு வெற்றியைத் தரவில்லை. மேலும் இந்தியாவை முழு வீச்சில் போரில் ஈடுபடுத்தியது. நள்ளிரவுக்குள் இந்திய தரைப்படையும், வான்படையும் நடத்திய பெரும் தாக்குதலில் கிழக்கு பாகிஸ்தானின் பல பகுதிகளை இந்தியா கைப்பற்றியது.[16][17]

INS Vikrant (R11) launches an Alize aircraft during Indo-Pakistani War of 1971.

பாகிஸ்தான், இந்தியாவின் கிழக்கு பாக்கிஸ்தான் தலையிடுதலை முறியடிக்க மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவின் மேற்குப் பகுதியைத் தாக்கியது. டிசம்பர் 4 , 1971 இல், தரைப்படையின் 23 வது பட்டாளத்தை சார்ந்த பஞ்சாப் படையணி, பாக்கிஸ்தானிய தரைப்படையை சார்ந்த 51 வது படையணியை இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ராம்கார்க் என்ற இடத்தில் எதிர் கொண்டது. இந்திய வான்படையின் துணைகொண்டு நடைபெற்ற போரின் இறுதியில் 34 பாக்கிஸ்தானிய பீரங்கிகளும் 50 பாதுகாப்பு வண்டிகளும் அழிக்கப்பட்டன. சுமார் 200 பாக்கிஸ்தானிய படை வீரர்களும் 2 இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். டிசம்பர் நான்கு முதல் 16 வரை நடைபெற்ற பாசந்தர் போர் மூலம் பாக்கிஸ்தான் மற்றொரு பெரிய தோல்வியை அடைந்தது. இப்போரில் சுமார் 66 பாக்கிஸ்தானிய பீரங்கிகள் அழிக்கப்பட்டன. மேலும் 40 பீரங்கிகள் கைப்பற்றபட்டன. 11 இந்திய பீரங்கிகள் அழிக்கப்பட்டன. .[18]

கார்கில் போர்

முதன்மை கட்டுரை : கார்கில் போர்

கார்கில் நகரம்.

கார்கில் போர் 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர். இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோட்டுக்கு திரும்பினர்.

போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், இராணுவ புரட்சி செய்து பிரதமர் நவாஸ் செரிப்யை பதவியில் இருந்து அகற்றினார்.

கார்கில் போரில் உலக வரலாற்றில் முதலாம் தடவை இரண்டு அணு ஆயுதங்கள் பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.

அமைப்பு

இராணுவ பயிற்சியில் இந்திய தரைப்படையினர்.

விடுதலையின்போது நாட்டின் எல்லைகளைக் காப்பதே இந்திய தரைப்படையின் தலையாத கடமையாகக் கருதப்பட்டது. ஆயினும் தற்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பிலும், குறிப்பாக காசுமீர், அசாம் ஆகிய மாநிலங்களில் தரைப்படை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய தரைப்படையில் சுமார் 10 லட்சம் படை வீரர்கள் 34 பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். தலைமையகம் புது டெல்லி நகரில் அமைந்துள்ளது .

கட்டளையகங்கள்

இந்திய தரைப்படை 6 கட்டளையகங்களின் கீழ் இயங்குகிறது. ஒவ்வொரு கட்டளையகமும் லெப்டினன்ட் செனரல் தரத்திலுள்ள கட்டளை அலுவலகரின் கீழ் இயங்குகிறது. எல்லா கட்டளையகங்கள் புது டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி கட்டளையகம் சிம்லாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

கட்டளையகம்அமைவிடம்
தெற்கு கட்டளையகம்புனே
கிழக்கு கட்டளையகம்கொல்கத்தா
மத்திய கட்டளையகம்லக்னோ
மேற்கு கட்டளையகம்சண்டிகர்
வடக்கு கட்டளையகம்உதம்பூர்
தென் மேற்கு கட்டளையகம்ஜெய்ப்பூர்

படைபலம்

இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.

அக்னி ஏவுகணை
இந்திய தரைப்படை படைபலம்
செயலார்ந்த தீவிரப்பணி1,300,000
இருப்பு படை1,200,000
எல்லையோர பாதுகாப்பு படை200,000**
தகரி4,500
பீரங்கி12,800
எறி ஏவுகணை100 (அக்னி-1,அக்னி ஏவுகணை-2)
எறி ஏவுகணை>500 (பிருத்வி -1)
வழிகாட்டு இறக்கை ஏவுகணைபிரமோஸ்
வானூர்திகள்10 உலங்கு வானூர்தி ஸ்கோடரன் படைகள்
தரைலிருந்து வான் தாக்கும் ஏவுகணை கள்90000

புள்ளி விபரங்கள்

4 வது இராஜபுத்திர காலாட்படை பிரிவினர்
  • 4 RAPID படைகள்
  • 18 காலாட்படை பிரிவுகள்
  • 10 மலை பிரிவுகள்
  • 3 கவச வாகன பிரிவுகள்
  • 2 பீரங்கி பிரிவுகள்
  • 13 விமான எதிர்ப்பு பிரிகேட் + 2 தரைலிருந்து வான் தாக்கும் ஏவுகணை படையினர்
  • 5 தனி கவச வாகன பிரிகேட்
  • 15 தனி பீரங்கி பிரிகேட்
  • 7 தனி காலாட்படை பிரிகேட்
  • 1 வான்குடை பிரிகேட்
  • 4 பொறியாளர் பிரிகேட்
  • 14 தரைப்படை உலங்கு வானூர்தி படைகள்

கவச வாகனங்கள்

அர்சுன் தகரி
கண்காட்சியில் ரி-90 பீஷ்மா தகரி

முதன்மை கவச தாங்கிகள்

  • அர்சுன் கவச தாங்கி Mk1 - (94+). தரைப்படை மேலும் 124 இவ்வகை தகரிகளை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 53 தகரிகள் ஆவடியில் தயாரிக்கப்பட்டு தரசோதனையில் உள்ளன.
  • ரி-90 பீஷ்மா - (610). மேலும் 1000 தகரிகளை 2020 க்குள் தயாரிக்க திட்டம்.[19][20].
  • T-72 M1 (2,480+). 968 T72M1 தகரிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.
  • T-55 (900): [1]
  • விசயந்தா -(1800) இருப்பு தகரி

கவச சண்டை வாகனங்கள்

  • BMP-1 (700) மற்றும் BMP-2 (1500+) சரத் - BMP-2 தற்போது TISAS (thermal imaging stand alone sights) எனப்படும் வெப்ப படமாக்கல் தொழில் நுட்பத்தையும், நவின கவசமான ATGM தையும் கொண்டுள்ளது.
  • காசபீர் கண்ணிவெடி எதிர்ப்பு கவாச வாகனம்
  • WZT-3 (200 ) கவச தானுந்து
  • KTO Rosomak AFV
  • BTR-80 APC
  • SKOT APC
  • BRDM-2 (255) நிலத்திலும் நீரிலும் இயங்க்கக்கூடிய வாகனம். கவாச வாகன எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்பட்டது.
  • FV101 ஸ்கார்பியன்
  • FV432 APC

வானூர்திகள்

கீழ் கொடுக்க பட்டுள்ள பட்டியல் இந்திய தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள வானூர்திகளின் பட்டியல். இந்திய வான்படையின் வானூர்தி பட்டியல் அல்ல.

வானூர்திதோற்றம்வகைபதிப்புபயன்பாட்டில் [21]
HAL துருவ்  இந்தியாஉலங்கு வானூர்தி~115
ஏரோஸ்பேட்டியேல் அலியோட் III  இந்தியாஉலங்கு வானூர்திSA 316B Chetak60
ஏரோஸ்பேட்டியேல் லாமா  இந்தியாஉலங்கு வானூர்திSA 315B Cheetah120
மில் எம்.ஐ.-24  சோவியத் ஒன்றியம்தாக்குதல் உலங்கு வானூர்திMil Mi-25 Hind-F12
Mil Mi-35  சோவியத் ஒன்றியம்தாக்குதல் உலங்கு வானூர்திMil Mi-35 Hind32
IAI செர்ச்சர் II  இசுரேல்ஆளில்லா உளவு விமானம்100+
IAI ஹெரான்  இசுரேல்ஆளில்லா உளவு விமானம்50+
DRDO நிஸாந்  இந்தியாஆளில்லா உளவு விமானம்12

விமர்சனங்கள்

இந்திய தரைப்படையை நோக்கி பலதரப்பட்ட விமர்சனங்கள் வெவ்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.

சமவுரிமை விமர்சனம்

பெண்கள்

இந்திய படைத்துறையில் பெண்களுக்கு சம உரிமைகளும் வாய்ப்புக்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்று குற்றச் சாட்டப்படுகிறது.[22] பெரும்பான்மை உயர் பதவிகள் அனைத்துமே ஆண்கள் வைத்திருப்பது இதற்கு இன்னுமொரு சான்றாகும்.ஆனால் தற்போது இந்திய இராணுவத்தில் பல்வேறு பிரிவுகளின் பெண் உயர் அதிகாரிகள் உள்ளனர்.இந்திய இராணுவ பெண் அதிகாரிகள்

இனங்கள்

இந்திய படைத்துறையில் இனாப்பாகுபாடே இல்லை.திறமைக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள்

இந்திய படைத்துறையில் மனித உரிமை மீறல்களே நடந்ததில்லை.பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் வைத்து இராணுவத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

செலவினம்

பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக இருக்க, பெரும் தொகை நிதி படைத்துறைக்குச் செலவிடப்படுவது விமர்சிக்கப்படுகிறது. இந்திய படைத்துறை போர் வானூர்திகள், கப்பல்கள், கவச வாகனங்கள், எரிபொருள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்தே பெரிதும் பெறுகிறது. இது ஒரு பெரிய செலவு ஆகும். எனினும் பாக்கிசுத்தான், பயங்கரவாதம், சீனா என பலதரப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதால் இவை அவசியம் என நியாயப்படுத்தப்படுகிறது.

ஊழல்

ஊழல் அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.[23] குறிப்பாக ஆயுதக் கொள்வனவில் பெருமளவு பண மோசடி செய்யப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போபாராஸ் பீரங்கி ஊழல் நாட்டையே உலுக்கியது. பீரங்கி ஊழல்

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்தியத்_தரைப்படை&oldid=3754745" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை