கொல்கத்தா

மேற்கு வங்கத்தின் தலைநகர்

கொல்கத்தா (வங்காள மொழி: কলকাতা) (முன்பு கல்கத்தா) என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும் தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.[12] இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[13] கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும்.[14]

கொல்கத்தா
কলকাতা (வங்காளம்)
கல்கத்தா
மாநகரம்
விக்டோரியா நினைவிடம்
Map
கொல்கத்தா is located in கொல்கத்தா
கொல்கத்தா
கொல்கத்தா
கொல்கத்தாவில் இருப்பிடம்
கொல்கத்தா is located in மேற்கு வங்காளம்
கொல்கத்தா
கொல்கத்தா
கொல்கத்தா is located in இந்தியா
கொல்கத்தா
கொல்கத்தா
இந்தியாவில் இருப்பிடம்
கொல்கத்தா is located in ஆசியா
கொல்கத்தா
கொல்கத்தா
ஆசியாவில் இருப்பிடம்
கொல்கத்தா is located in புவி
கொல்கத்தா
கொல்கத்தா
புவியில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 22°34′03″N 88°22′12″E / 22.56750°N 88.37000°E / 22.56750; 88.37000
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
கோட்டம்இராஜதானி
பர்த்வான்
மாவட்டங்கள்கொல்கத்தா
வடக்கு 24 பர்கனா
தெற்கு 24 பர்கனா
நதியா
ஹவுரா
ஹூக்லி[1][2][3][4][5]
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கொல்கத்தா மாநகராட்சி
 • மேயர்பாபி ஹக்கிம்
 • துணை மேயர்அதின் கோஷ்
பரப்பளவு[6][7]
 • மாநகரம்206.08 km2 (79.151 sq mi)
 • Metro1,886.67 km2 (728.45 sq mi)
ஏற்றம்9 m (30 ft)
மக்கள்தொகை (2011)[6][8]
 • மாநகரம் 4,496,694
 • தரவரிசை3வது
 • நகர்ப்புறம் 1,41,12,536
14,617,882 (Extended UA)
இனங்கள்கொல்கத்தான்
கல்கத்தான்
மொழி[9]
 • அலுவல்மொழிவங்காளம் • ஆங்கிலம்
நேர வலயம் இ.சீ.நே. (ஒசநே+05:30)
அஞ்சல் குறியீட்டு எண்700 xxx
தொலைபேசி குறியீடு+91 33
வாகனப் பதிவுWB-01 முதல் WB-10 வரை
UN/LOCODEIN CCU

கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கொல்கத்தா நகரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம், தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சி ஆகிய பல அரசியல் மற்றும் சமுக மாற்றங்களில் கொல்கத்தா நகர் மற்ற இந்திய நகர்களை விட மாறுபட்டது.

பெயர்க்காரணம்

கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், காளிகத்தா என்ற பழமையான பெயரில் இருந்து தோன்றியவையே.[15] இப்பகுதியில், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்த ஒரு சிற்றூரின் பெயர் இதுவாகும். இப்பெயருக்கு பல்வேறு பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. காளிகத்தா என்ற பெயர் காளிசேத்ரா ( কালীক্ষেত্র, காளி அன்னையின் (இந்து பெண் தெய்வம்) இடம்) என்ற பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். வங்காள மொழியின் கில்கிலா (தட்டையான நிலம்) என்ற பதத்தில் இருந்தும் இப்பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[16] மேலும், கால்வாய் என்ற பொருள் படும் கால் என்ற சொல்லும், தோண்டு என்ற பொருள்படும் கத்தா இணைந்தே இச்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[17] கல்கத்தா என்று வழங்கி வந்த இந்நகரின் பெயர், 2001-ஆம் ஆண்டில் வங்காள மொழி உச்சரிப்பான கொல்கத்தா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[18]

இந்த நகரத்தின் பெயர் வங்காள மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்தனர். இதனால் இதன் அதிகாரபூர்வப் பெயர் கல்கத்தா என்றே வழங்கி வந்தது. 2001-ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரபூர்வப் பெயர் ஆக்கினர்.

வரலாறு

கொல்கத்தா நகர் 1945, இரண்டாம் உலகப் போரின் முக்கிய துறைமுகமாக விளங்கியது.

கொல்கத்தா நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் கிடைத்த அகழ்வாராய்ச்சி சின்னங்கள் மூலம் இப்பகுதியில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே மக்கள் வசித்து வருவது அறியப்படுகிறது.[19][20] இருப்பினும், நகரின் தெளிவான வரலாற்றை 1690 பின் இப்பகுதிக்கு வந்த பிரித்தானிய கிழக்கிந்திய வாணிப கழகத்தின் வருகைக்கு பின்னே அறிய முடிகிறது. இவ்வணிக கழகத்தின் உயர் அலுவலகராக பணியாற்றிய ஜோப் கேமொக் என்பவர் இந்நகரை நிறுவிய பெருமையை பெறுகிறார்.[21]

அக்காலத்தில், இப்பகுதியை வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலா ஆட்சிப் புரிந்தார். இப்பகுதியில் பாசக் இன மக்களும், வணிகத்தில் சிறந்த செட் இன மக்களும் வசித்து வந்தனர். 17 ஆம் நூற்றண்டின் இறுதியில், ஆங்கிலேயர் இப்பகுதியில் வேற்று நாட்டு குடியேற்ற சக்திகளான நெதர்லாந்து நாட்டவர், போர்த்துகீசியர், மற்றும் பிரெஞ்சு நாட்டவர் ஆகியோருடம் இருந்து தம் நலனை பாதுகாக்க ஒரு கோட்டையைக் கட்ட விரும்பினர். அதன் படி 1702ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையைக் கட்டினர்.[22] இக்கோட்டையே, ஆங்கிலேய படையினரின் குடியிருப்பாகவும், தலைமையிடமாகவும் இருந்தது. பின், கல்கத்தா வங்காள மாகாணத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.[23] பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக கழக படையினரால் தொடந்து ஆங்கிலேயர் தாக்கப்பட, 1756 ஆம் ஆண்டு, வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலாவின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலேயர் தம் கோட்டையை மேலும் பலமாக்கி, போர்கருவிகளைப் பெருக்கினர். இதனால் கோபமடைந்த நவாப் கோட்டையைத் தாக்கி கைப்பற்றினார். கைப்பற்றப்பட்ட போர் கைதிகளான ஆங்கிலேயர் பலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கல்கத்தாவின் கருப்பு நிலவறை என்று குறிப்பிடுவர்.[24] அடுத்த ஆண்டே, ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படைகள் மீண்டும் கோட்டையைக் கைப்பற்றினர்.[24] ஆங்கிலேய இந்தியாவின் தலைநகராக கல்கத்தா நகர் அறிவிக்கப்பட்டது. 1864-ஆம் ஆண்டு முதல் கோடைக்கால தலைநகராக மலைப்பாங்கான சிம்லா நகர் அறிவிக்கப்பட்டது.[25] இக்காலகட்டத்தில் கொல்கத்தா நகர் மாபெரும் வளர்ச்சியினை பெற்றது. மாளிகைகளின் நகர் என்ற பெயரை கொல்கத்தா நகர் பெற்றது. நகரின் அருகில் அமைந்திருந்த சதுப்பு நிலங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு, நிலம் மேம்படுத்தப்பட்டது. கவர்னர்-ஜெனரல் ரிச்சர்டு வெல்லஸ்லி ஆண்ட 1797–1805 ஆண்டுகளில், நகரின் பொது கட்டிடக்கலை மாபெரும் வளர்ச்சியுற்றது.[26] கல்கத்தா நகர் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேய கிழக்கு இந்திய வணிகக் கழகத்தின் அபின் போதை பொருள் வாணிபத்தின் தலைமையிடமாக இருந்தது. கல்கத்தாவின் புறநகர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட அபின் கல்கத்தா நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[27]

19-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கல்கத்தா நகர் இரண்டாக பிரிக்கப்பட்டது; ஆங்கிலேயர் வாழும் வெள்ளையர் நகர், இந்தியர் வாழும் கறுப்பர் நகர்.[28] அந்நூற்றாண்டின் நடுக்காலத்தில் கல்கத்தா நகர் பெரும் பெருளாதார வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக நூற்பு தொழிலிலும், சணல் சார்ந்த தொழில் துறைகளிலும் பெரும் வளர்ச்சி பெற்றது. புதிய இரயில் பாதைகள், தொலை தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆங்கிலேய மற்றும் இந்திய பண்பாடு தொடர்பினால் உயர் வருமானம் கொண்ட இந்தியர்கள் உருவாகினர். இவர்களை பாபு என்று மக்கள் அழைத்தனர்.[29] 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் நிகழ்ந்த சமூக-பண்பாட்டு மாற்றத்தினை வங்காள மறுமலர்ச்சி என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1883-ஆம் ஆண்டு, சுந்தர்நாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு, இந்தியாவில் தேசிய அளவில் நடைபெற்ற முதல் கருத்தரங்கு ஆகும்.[16] படிப்படியாக கல்கத்தா நகர் இந்திய விடுதலை போராட்டத்தின் மையமாக மாறியது. குறிப்பாக வன்முறை வழியே விடுதலை அடைய விரும்புவோரின் மையமாக இருந்தது. 1905-ஆம் ஆண்டு ஆங்கில அரசு மதத்தைக் காரணமாக கொண்டு நடத்திய வங்காள பிரிவினை, மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கம், வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தல், சுதேசி இயக்கம் ஆகியவை வலிமை பெற்றன.[30] இத்தகைய மக்கள் எதிர்ப்பினாலும், நகரின் அமைவிடத்தினாலும், 1911-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தன் தலைநகரை கல்கத்தா நகரில் இருந்து புது தில்லி நகருக்கு மாற்றியது.[31]

புனித பாலின் பேராலயம், கொல்கத்தா, ஆங்கிலேயரால் கட்டப்பட்டது

இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா நகரும் புறநகர் பகுதிகளும், துறைமுகமும் ஜப்பானிய தரைப்படையால் தாக்கப்பட்டன.[32] 20 டிசம்பர் 1942 முதல்,[33] 24 டிசம்பர் 1944 வரை கல்கத்தா நகர் பலமுறை தாக்கப்பட்டது.[34] இப்போரில் இலட்சக்கணக்கானோர் பஞ்சத்தினால் உயிரிழந்தனர்.[35] 1946-ஆம் ஆண்டு, இசுலாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை வலு பெற்றதன் விளைவாக உருவான மதக்கலவரத்தில் ஏறத்தாழ 4,000 மக்கள் உயிரிழந்தனர்.[36][37][38]

இந்திய பிரிவினையின் போது மூண்ட வன்முறையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான இசுலாமியர் சமூகம் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு சென்றனர்.[39]

1960-ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை மாநிலத்தில் வலிமை பெற்ற பொதுவுடமை கொள்கையால் தொழில் நலிவடைந்தது. எண்ணற்ற கதவடைப்பு போராட்டங்களாலும், தொழிலாளர் பிரச்சனைகளாலும்,நக்சலைட்டுகள் வலுப் பெற்றதாலும் நகரின் பொது நிருவாகம் பாதிப்படைந்ததோடு , பொருளாதார தேக்கம் ஏற்பட்டது.[40] 1971-ஆம் ஆண்டு, இந்தியா, பாக்கிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான அகதிகள் கொல்கத்தா நகரில் தஞ்சம் புகுந்ததன் விளைவாக நகரின் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள்ளானது.[41] 1980 களில்,மும்பை நகர் கொல்கத்தா நகரை விட கூடுதல் மக்கள் தொகை கொண்ட நகரானது. இன்றும் கொல்கத்தா நகர் இந்திய பொதுவுடமை கட்சியின் வலிமையான தலைமையிடமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை பொதுவுடமை கட்சி சுமார் 30 ஆண்டுகளாக ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது [42][43] இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு தற்காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவ முனைந்துள்ளது.[44]

புவியமைப்பு

ஊக்லி ஆறு மற்றும் வித்யாசாகர் சேது பாலம்

கொல்கத்தா கிழக்கு இந்தியாவில் உள்ள கங்கை முகத்துவாரம் அருகில் அமைந்துள்ளது.[45] ஊக்லி ஆற்றின் கரையில் தெற்கு-வடக்காக நீள வாக்கில் அமைந்துள்ள இந்நகரின் பெரும்பாலான நிலம் முற்காலத்தில் சதுப்பு நிலமாகவும், ஈரநிலமாகவும் இருந்தவை. மக்கள் வளர்ச்சிக்காக அவை பின்னர் மேம்படுத்தப்பட்டவை.[46] மீதம் இருக்கும் இவ்வகை சதுப்பு நிலம் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.[47]

கங்கை சமவெளியின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இப்பகுதியும் மிகுதியான அளவில் வளமான வண்டல் மண்ணையும், களி மண்ணையும் கொண்டது.[48] இந்திய புவியியல் ஆய்வாளர்களின் கூற்றின்படி, இந்நகரின் அமைவிடம் மூன்றாவது நில நடுக்க அழிவுப் பகுதியில் உள்ளமையால் இப்பகுதி நில நடுக்கங்களால் பாதிப்படைய வாய்ப்புள்ளது.[49] மேலும், இப்பகுதி அயனமண்டல புயல்களால் மிகவும் பாதிப்படையக் கூடிய பகுதி என்று ஐக்கிய நாடுகள் அவை முன்னேற்றத் திட்டத்தின் அறிக்கை கூறுகிறது.[49]

கொல்கத்தா நகர் - செயற்கை கோள் புகைப்படம்

கொல்கத்தா கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டரில் (5 அடி) இருந்து 9 மீட்டர் (30 அடி) வரையான உயரங்களுக்கிடையே அமைந்துள்ளது. இது ஊக்லி ஆற்றின் கரையோரமாக நீணு வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த நகரம் இருக்கும் இடத்தின் பெரும்பகுதி முன்னர் ஈரநிலமாகக் காணப்பட்டது. காலப்போக்கில், அதிகரித்து வந்த மக்கள் தொகையை அடக்குவதற்காக இந்நிலங்கள் படிப்படியாக இவ்வீரநிலங்கள் நிரப்பப்ட்டன. இவ்வாறு நிரப்பப்படாமல் மீந்திருந்த ஈரநிலம், இப்போது கிழக்குக் கல்கத்தா ஈரநிலம் என்று அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான இந்திய கங்கைச் சமவெளிப் போலவே இங்கு முக்கியமாகக் காணப்படும் மண்வகை வண்டல் ஆகும். களிமண், பல அளவுகளிலான மணல், சிறு கற்கள் என்பன நகரத்தின் அடியில் காணப்படுகின்றன. இப்படிவு இரண்டு களிமண் படைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இவற்றுள் மிகக் கீழுள்ள படை நிலமட்டத்தில் இருந்து 250 மீட்டருக்கும், 650 மீட்டருக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலுள்ள படை 10 மீட்டருக்கும், 40 மீட்டருக்கும் இடையிலான தடிப்புக் கொண்டதாக உள்ளது. இந்தியத் தர நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நகரம், புவியதிர்வு வலயம் 3க்குள் அடங்குகிறது.

நகர அமைப்பு

கொல்கத்தா உயர்நீதி மன்றம்

கொல்கத்தா நகர், கொல்கத்தா மாநகராட்சி மன்றத்தின் (KMC), ஆட்சி எல்லைக்குள் சுமார் 185 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[50] முறையான நகர எல்லை இவ்வளவாக இருப்பினும், நகரின் புறநகர் பகுதி மிகப்பெரியது. புற நகர் பகுதிகளையும் சேர்த்து கணக்கிட்டால் கொல்கத்தா நகர பரப்பளவு குறைந்தது 1750 சதுர கிலோமீட்டர் ஆகும்.[50] இப்பரப்பளவில் 72 நகரங்களும் 527 பேரூர்களும் அடங்கும்.[50]

நகர் பொதுவாக வடக்குப் பகுதி, நடுப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்றாக பிரிக்கப்படுகிறது. வடக்கு கொல்கத்தா பகுதி நகரின் பழமையான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில், 19-ஆவது நூற்றாண்டு கட்டிடக்கலை வெளிப்படுவதைக் காணலாம். மேலும் பல தெருக்கள் குறுகிய சந்துகளாக காணப்படுகிறது. தெற்கு கொல்கத்தா இந்தியா விடுதலை அடைந்த பின் உருவாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதி பெரும்பாலும் வசதி படைத்த செல்வர்களின் பகுதியாக காணப்படுகிறது. நடு கொல்கத்தா பெரும்பாலும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் , தலைமை அஞ்சல் அலுவலகம் , கல்கத்தா உயர் நீதிமனறம், லால் பசார் காவலர் தலைமையகம் மற்றும் பல தனியார் அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. மெய்டன் திடல் இப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய திறந்த வெளித் திடல் ஆகும். இத்திடலில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கிழக்கு மேற்குத்திசையில், இந்நகரம் மிக ஒடுக்கமானது. இது மேற்கே ஊக்ளி ஆற்றில் இருந்து தொடங்கி கிழக்கே கிழக்கத்திய மெட்ரோபாலிட்டன் பைபாசு வரை சுமார் 5 கிமீ நீளம் உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் கல்கத்தா என மூன்று பிரிவுகளாக உள்ளது. வடக்குக் கல்கத்தாப் பகுதியே நகரின் மிகப் பழைய பகுதியாகும். இங்கே 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஒடுங்கிய தெருக்களையும் காண முடியும். தெற்குக் கொல்கத்தா பெரும்பாலும் விடுதலைக்குப் பிற்பட்ட பகுதிகளைக் கொண்டதாகும். இங்கே பாலிகுங்னே, அலிப்பூர், புதிய அலிப்பூர் போன்ற உயர் மட்டத்தினர் வாழும் பகுதிகள் உள்ளன. நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உப்பு ஏரி நகரம் எனப்படும் பிதான் நகர்ப் பகுதி திட்டமிட்டுக் கட்டப்பட்ட பகுதியாகும்.

காலநிலை

கொல்கத்தா மாநகர் அயன மண்டல காலநிலையான, வறண்ட மற்றும் ஈரமான பருவங்களைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பம் 26.8 C ஆகும்; மாத சராசரி வெப்ப நெடுக்கம் சுமார் 19 C முதல் 30 C வரை ஆக உள்ளது[51] கோடைக் காலம் (மே மற்றும் ஜூன் மாதங்கள்) சுமார் 30 இல் இருந்து 40 °C (104 °F) வரை வெப்பமாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் உணரப்படுகிறது .[51] டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உணரப்படும் குளிர்காலத்தில், வெப்ப நிலை 9 °C – 11 °C (54 °F – 57 °F) வரை குறையக் கூடும். இந்நகரில் பதியப் பட்டுள்ள உயர் வெப்பம் 43.9 C ஆகும். குறைந்த வெப்பநிலை 5 C ஆகும்.[51]

இப்பகுதி தென்மேற்கு பருவக்காற்றினால் பருவமழையைப் பெறுகிறது.[52] ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழையின் அளவு சராசரியாக 1582 MM ஆகும். ஆகஸ்டு மாதம் அதிகமான அளவு (306 MM) மழை பெய்கிறது. சுற்றுப்புறத் தூய்மைக் கேடு கொல்கத்தா மாநகரின் முக்கிய பிரச்சனையாகும். மற்ற இந்திய நகரங்களை விட கொல்கத்தா நகர் வளி மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வான்மங்கலாலும், பனிப்புகையாலும் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.[53][54] மேலும் வளியில் உள்ள நச்சுப் பொருள்களால் மக்கள் மூச்சு சார்ந்த நோய்களாலும், நுரையீரல் புற்றுநோயாலும், காச நோயாலும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.[55]

பொருளாதாரம்

தெருவோரப் பூ வணிகம்

கொல்கத்தா, கிழக்கு இந்தியாவின் வணிக, நிதித் துறைகளின் மையமாக திகழ்கிறது. கல்கத்தா பங்கு சந்தை நாட்டின் இரண்டாவது பெரிய பங்கு மாற்றகம் ஆகும் [56] இந்நகரின் துறைமுகங்கள் வணிக நோக்கிலும், இராணுவ நோக்கிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா நகரிலேயே அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் பொருளாதாரம், அறிவியல், கலை என எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்த கொல்கத்தா நகர் இந்திய விடுதலைக்கு பின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணங்களால் பின்னடைவுற்றது.[57] பல தொழிலகங்கள் மூடப்பட்டன. பல தொழில்கள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டன.[57][58] 1990-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால் தொழில்கள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இருப்பினும் நகரின் 40% தொழிலாளர்கள் தாமே தொடங்கிய தொழில்களையே நம்பி உள்ளனர்.[59] ஆதலால் பொருளாதார மாற்றங்கள் எளிதில் மக்களை சென்றடைவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, கொல்கத்தா நகரின் தெரு வணிகர்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8,772 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[60] அண்மைய காலத்தில் கொல்கத்தா நகரின் பொருளாதார வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்துறை ஆண்டுக்கு 70% வளர்ச்சி எனற வேகத்தில் வளர்ந்து வருகிறது.[44] மேலும் கட்டுமானத் துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி கிட்டியிருக்கிறது.[61]

தொழில்நுட்ப பூங்காவில் காணப்படும் கொக்நிசண்டு டெக்னாலஜி செலியுசன் கணிப்பொறி தொழில்நுட்ப நிறுவன கட்டிடம்

இந்தியாவின் பல சிறந்த வணிக நிறுவனங்கள் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டவை. அவற்றுள் பாட்டா காலணி நிறுவனம், பிர்லா குழுமம், நிலக்கரி இந்தியா லிமிடெட், தாமோதர் வாலி குழுமம், யுனைட்டட் வங்கி, யுஸிஓ வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அண்மைய காலத்தில் இந்திய அரசு பல்வேறு பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இப்பகுதியில் நிறைவேற்ற முனைகிறது.[62][63]

இன்றியமையா சேவைகள் மற்றும் ஊடகங்கள்

டாட்டா தகவல்தொடர்பு VSNL கோபுரம்

கொல்கத்தா மாநகராட்சி கழகம் நகரின் குடிநீர் தேவையை ஊக்லி ஆற்றின் மூலம் நிறைவு செய்கிறது. மாநகரின் 2500  டன் கழிவு பொருள்கள் தினமும் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள தாபா என்ற கழிவு நிலத்தில் கொட்டப்படுகிறது. இககழிவுப் பொருள்களை இயற்கை உரமாக பயன்படுத்த வேளாளர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.[64] நகரின் பல பகுதிகளில் கழிவு நீர் வசதிகள் இன்றியும், நல்ல கழிப்பிடங்கள் இன்றியும் உள்ளன.[65] நகர் பகுதியில், மின்சார உற்பத்தி, பகிர்ந்தளிப்பு தனியார் மயமாக்கப்பட்டு, கல்கத்தா மின்சார பகிர்ந்தளிப்பு குழுமத்தினால் நிருவகிக்கப் படுகிறது. புறநகர் பகுதிகளில் மேற்கு வங்காள மாநில மின்சாரம் வாரியம் மின்சாரத்தை அளிக்கிறது. தொடர்ச்சியான மின்சார தடங்கல் நகரின் பெரும் பிரச்சனையாக முந்தைய காலங்களில் இருந்து வந்தாலும் அண்மைய காலத்தில் நிலைமை சீராகி உள்ளது. நகரில் சுமார் 20 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 7 ,500 தீயணைப்பு, மீட்புப்பணிகளில் இவை பணியாற்றுகின்றன.[66]

அரசு தகவல் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும், தனியார் நிறுவனங்களான ஹட்ச், ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகியனவும் தொலைபேசி, செல்பேசி சேவைகளை மக்களுக்கு அளிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட GSM, CDMA சேவைகளும் இந்நகரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. அகலப்பட்டை இணைய இணைப்பு சேவையை பிஎஸ்என்எல், ஏர்டெல் ,ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

வங்காள மொழி நாளிதழ்களான ஆனந்தபசார் பத்திரிக்கா, ஆஜ்கல், பர்தாமன், கனசக்தி ஆகியவை விரும்பி படிக்கப் படுகின்றன. பல வட்டார, தேசிய ஆங்கில நாளிதழ்களும் கொல்கத்தா நகரில் வெளிவருகின்றன. அவற்றுள் தி டெலிகிராப் , தி ஸ்டேட்ஸ்மேன் , எசியான் எய்ஜ், இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு விற்பனையாகின்றன.[67] அகில இந்திய வானொலி, மேற்கு வங்காள மாநில வானொலி, பல தனியார் வானொலி சேவையாளர்கள் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றனர். இது தவிர பல தனியார் பண்பலைவரிசைகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமும் பல தனியார் கம்பி வட தொலைக்காட்சி நிறுவனங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

போக்குவரத்து

கொல்கத்தா நகரின் விஐபி சாலை - வானூர்தி நிலையத்தையும் நகரையும் இணைக்கிறது
கொல்கத்தா நகரின் தண்டுப் பேருந்து
வித்யாசாகர் சேது பாலம் கொல்கத்தா நகரையும் அவுரா நகரையும் இணைக்கிறது

பொது போக்குவரத்து வசதிகளை கொல்கத்தா புறநகர் இருப்புப்பாதை , கொல்கத்தா சுரங்க இரயில், தண்டுப் பேருந்து (TRAM), பேருந்துகள் ஆகியவை அளிக்கின்றன . புறநகர் போக்குவரத்துப் பிணையம் தொலைதூர புறநகர் வரை நீண்டுள்ளது. கொல்கத்தா சுரங்க இரயில் வலையமைப்பு, இந்திய இரயில்வேயினால் நடத்தப்படும் பழமையான சுரங்க இரயில் ஆகும்.[68] இது ஊக்லி ஆற்றுக்கு இணையாக தென்-வடக்காக நகரத்தின் ஊடே 16.45 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. பேருந்துகள் நகரின் விரும்பத்தக்க போக்குவரத்து முறையாக அமைந்துள்ளன. இவை அரசாலும், தனியாராலும் இயக்கப்படுகின்றன. இந்திய நகர்களில் கொல்கத்தா நகரில் மட்டுமே தண்டுப் பேருந்துகள் புழக்கத்தில் உள்ளன. இவை கல்கத்தா தண்டுப் பேருந்து நிறுவனத்தால் பராமரிக்கப்ப் படுகின்றன.[69] மிக மெதுவாக இயங்கும் தண்டுப் பேருந்துகள் நகரில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. மழைக் காலத்தில் தேங்கும் மழைநீரால் கொல்கத்தா நகரின் பொது போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கை.[70][71]

நகரின் பல பகுதிகளில் மிதி இழுவண்டிகளையும், கையால் இழுக்கப்படும் இழுவண்டிகளையும் காணலாம். மற்ற இந்திய நகர்களை ஒப்பிடும்போது கொல்கத்தா நகரில் சொந்த வண்டிகளை வைத்திருபோர் எண்ணிக்கை மிகக் குறைவு. பல வகையான பொது போக்குவரத்து வசதிகள் அமைந்திருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[72] இருப்பினும் இந்நிலைமை மாறி வருகிறது; 2002 ஆம் ஆண்டு தகவலின்படி கடந்த ஏழு ஆண்டுகளில் தனியார் வண்டிப் பதிவு 44% உயர்ந்துள்ளது.[73][74]

கொல்கத்தா நகர், அவுரா நிலையம் மற்றும் சீல்டா நிலையம் என்ற இரண்டு தொலைதூர இருப்புப்பாதை நிலையங்களை கொண்டுள்ளது. கொல்கத்தா என்று பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது தொலைதூர இரயில் நிலையம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .[75] இந்நகர் இந்திய இரயில்வேயின் இரண்டு பிரிவுகளுக்கு தலைமையிடமாக அமைந்துள்ளது . அவையாவன கிழக்கு இரயில்வே மற்றும் தென் கிழக்கு இரயில்வே.[76]

நகரின் ஒரே ஒரு வானூர்தி நிலையமான, நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள டம் டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் புறப்படுகின்றன. கொல்கத்தா நகர் கிழக்கு இந்தியாவின் பெரிய ஆற்று துறைமுக நகராகும்.கொல்கத்தா துறைமுக பொறுப்பாட்சி கொல்கத்தா கப்பல் துறையையும், ஹால்டியா கப்பல துறையையும் நிருவகிக்கிறது.[74] கொல்கத்தா நகருக்கும் அதன் இரட்டை நகரமான அவுரா நகருக்கும் இடையே பயணப்படகு சேவைகளும் உள்ளன.

மக்கள்

2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கொல்கத்தாவின் மக்கள்தொகை 4,580,544 ஆக இருந்தது. சூழவுள்ள நகரப்பகுதிகளையும் சேர்த்து இது 13,216,546 ஆகும். 2009 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நகரத்தின் மக்கள்தொகை 5,080,519 ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். பால் விகிதம் 928 பெண்களுக்கு 1000 ஆண்கள் ஆக உள்ளது. இது நாட்டின் சராசரி விகிதத்திலும் குறைவானதாகும். நாட்டுப்புறங்களில் இருந்து வரும் பல ஆண்கள் தமது குடும்பத்தினரை ஊரிலேயே விட்டுவிட்டு நகரில் தனியாக வாழ்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவின் எழுத்தறிவு வீதம் 81% ஆகும். இது நாட்டின் சராசரியிலும் 1% அதிகமானது. கொல்கத்தா மாநகரக் கார்ப்பரேசன் பகுதியின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 4.1%. இது இந்தியாவிலுள்ள மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களோடு ஒப்பிடும்போது குறைவானது. வங்காளிகள் 55% மக்கள் தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மார்வாரிகளும், பீகாரிகளும் 20% மக்கள்தொகையைக் கொண்டோராக உள்ளனர். கொல்கத்தாவில் வாழும் சிறிய சிறுபான்மையினரில், சீனர், தமிழர், நேபாளிகள், ஒரியர், தெலுங்கர், அசாமியர், குசராத்தியர், ஆங்கிலோ இந்தியர், ஆர்மேனியர், திபேத்தியர், மராட்டியர், பஞ்சாபியர், பார்சிகள் என்போர் அடங்குவர். வங்காளி, இந்தி, உருது, ஆங்கிலம், ஒரியா, போச்பூரி ஆகிய மொழிகள் கொல்கத்தாவில் பேசப்படும் முக்கியமான மொழிகள். மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி இங்கு வாழ்வோரில் 80 சதவீதமானோர் இந்துக்கள் ஆவர். 20.27% முசுலிம்களும், 0.88%% கிறித்தவரும், 0.46% சமணரும் இங்கே வாழ்கின்றனர். சீக்கியர், பௌத்தர், யூதர், சோரோவாசுட்டிரியர் என்போரும் குறைந்த அளவில் உள்ளனர். 1.5 மில்லியன் மக்கள் அல்லது மொத்த மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைனர் 2,011 பதிவுசெய்யப்பட்ட சேரிப் பகுதிகளிலும், 3,500 பதிவு செய்யப்படாத சேரிகளிலும் வாழ்கின்றனர். [சான்று தேவை]

பண்பாடு

கொல்கத்தா நீண்டகாலமாகவே அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இந்தியாவின் முன்னைய தலைநகரமான இது நவீன இந்திய இலக்கியம், கலைச் சிந்தனைகள் ஆகியவற்றின் தோற்ற இடமாக விளங்குகின்றது. கொல்கத்தாவின் மக்கள், கலைகளையும் இலக்கியத்தையும் ரசிப்பதில் சிறப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன், புதிய திறமைகளை வரவேற்கும் அவர்களது பாரம்பரியம் கொல்கத்தாவை ஆக்கத்திறன் ஆற்றல் கொண்ட ஒரு நகரமாக ஆக்குகிறது. இக் காரணங்களால் கொல்கத்தா இந்தியாவில் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

பலமான சமுதாய உணர்வுகொண்ட பரா எனப்படும் அயல்கள் கொல்கத்தாவின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆகும். பொதுவாக, இத்தகைய ஒவ்வொரு அயலும், ஒரு சமூகக் கழகத்தையும், அதற்கான ஒரு இடம், சில சமயங்களில் ஒரு விளையாட்டிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். கொல்கத்தா மக்கள் அரட்டைகளில் ஈடுபடுவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள். இவை அறிவு பூர்வமான உரையாடல்களாக அமைவது உண்டு. இந்நகரத்தில் அரசியல் தொடர்பான சுவர் எழுத்துக்கள் வழமையாகக் காணப்படும் ஒரு அம்சம் ஆகும். இவை வெளிப்படையான கண்டனங்கள் முதல், கேலிப் படங்கள், பரப்புரைகள் வரை பலவகையாகக் காணபடுகின்றன.

கொல்கத்தாவில், கோதிக், பரோக், ரோமனிய, கீழைத்தேச, இந்திய-இசுலாமிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட கொண்ட பல கட்டிடங்கள் உள்ளன. புடியேற்றவாதக் காலத்தைச் சேர்ந்த பல கட்டிடங்கள் நல்லநிலையில் பேணப்பட்டு வருவதுடன் இவற்றுட் பல பாரம்பரியச் சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பல பழங்காலக் கட்டிடங்கள் பல்வேறு மட்டங்களில் அழியும் நிலையில் காணப்படுகின்றன. 1814 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இங்குள்ள இந்திய அருங்காட்சியகம் ஆசியாவிலேயே பழமையான அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் இயற்கை வரலாறு, கலைகள் என்னும் துறைகளைச் சார்ந்த ஏராளமான காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ளது. கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகிய விக்டோரியா நினைவகம், நகரின் வரலாறு தொடர்பான ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள இந்தியத் தேசிய நூலகமும், நாட்டின் முன்னணிப் பொது நூலகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. கவின் கலைகள் அக்கடமியும், பிற ஓவியக் கூடங்களும், அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை நடத்துகின்றன.

கொல்கத்தாவில் "சாத்ரா" என அழைக்கப்படும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. வங்காள மொழித் திரைப்படங்களையும், இந்தித் திரைப்படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இங்குள்ள டாலிகஞ்ச் என்னும் இடமே வங்காளத் திரைப்படத்தயாரிப்பின் மையமாகத் திகழ்கின்றது. இதனால் வங்காளத் திரைப்படத்துறையை "டாலிவூட்" எனவும் அழைப்பதுண்டு. நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்ட இத் திரைப்படத்துறை பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது. இவர்களுள் பழைய தலைமுறையைச் சேர்ந்த சத்யசித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்கா, ரித்விக் காட்டக் போன்றவர்களும், தற்காலத்தைச் சேர்ந்த அபர்ணா சென், ரித்துப்பார்னோ கோஷ் ஆகியோரும் அடங்குவர்.

கொல்கத்தாவின் உணவு வகைகளுள் முக்கியமானவை சோறும், மீன் கறியும் ஆகும். ரசகுல்லா, சந்தேசு, இனிப்புத் தயிர் என்னும் இனிப்பு வகைகளுக்கும் கொல்கத்தா பெயர் பெற்றது. கொல்கத்தாவில் வங்காளிகள் மிகவும் விரும்பும் மீனை அடிப்படையாக் கொண்ட பலவையான உணவு வகைகள் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொல்கத்தா&oldid=3835871" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை