ஓவர்லார்ட் நடவடிக்கை

ஓவர்லார்ட் நடவடிக்கை (Operation Overlord) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த நேச நாட்டு போர் நடவடிக்கை. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. சூன் 6, 1944ல் தொடங்கிய நார்மாண்டி படையிறக்கம் முதல் ஆகஸ்ட் 24ல் பாரிசு நகரம் வீழ்ந்தது வரையான நிகழ்வுகள் ஓவர்லார்ட் நடவடிக்கை எனக் கருதப்படுகின்றன.

ஓவர்லார்ட் நடவடிக்கை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

நார்மாண்டி கடற்கரையில் தரையிறங்கும் நேச நாட்டுப் படைகள்
நாள்6 சூன் – 25 ஆகஸ்ட் 1944
இடம்நார்மாண்டி, பிரான்சு
தெளிவான நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
நேச நாடுகள்

 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
பிரான்சு சுதந்திர பிரெஞ்சுப் படைகள்
போலந்து சுதந்திர போலந்தியப் படைகள்
 ஆஸ்திரேலியா
பெல்ஜியம் சுதந்திர பெல்ஜியப் படைகள்
 நியூசிலாந்து
 நெதர்லாந்து
 நார்வே
சுதந்திர செக்கஸ்லோவாக்கியப் படைகள்
கிரேக்க நாடு கிரேக்கம்

 நாசி யேர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஐக்கிய அமெரிக்கா ஒமார் பிராட்லி
ஐக்கிய இராச்சியம் டிராஃபர்ட் லீக்-மல்லோரி
ஐக்கிய இராச்சியம் ஆர்தர் டெட்டர்
ஐக்கிய இராச்சியம் மைல்ஸ் டெம்சி
ஐக்கிய இராச்சியம் பெர்ட்ராம் ராம்சே
நாட்சி ஜெர்மனி கெர்ட் வோன் ரன்ஸ்டெட்
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
பலம்
1,452,000 (25 சூலை)
2,052,299 (21 ஆகஸ்ட்)
380,000 (25 சூலை) – 1,000,000+)
2,200 – ~2,300 டாங்குகள், பீரங்கிகள்
இழப்புகள்
226,386 பேர்
4,101 வானூர்திகள்
~4,000 டாங்குகள்
209,875 – 450,000 பேர்
2,127 வானூர்திகள்
~2,200 டாங்குகள், பீரங்கிகள்
13,632–19,890 பிரெஞ்சு பொது மக்கள்

ஓவர்லார்ட் நடவடிக்கை என்ற குறியீடு நார்மாண்டி படையிறக்கம் மற்றும் நார்மாண்டி படையெடுப்பு, டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு ஓவர்லார்ட் நடவடிக்கை எனப்படுகிறது. இது சூன் 6 முதல்-ஆகஸ்ட் 25 வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்ப கட்ட தரையிறக்கம் ”நார்மாண்டி படையிறக்கம்” அல்லது ”நெப்டியூன் நடவடிக்கை” என்றும் இது நிகழ்ந்த நாளான சூன் 6, 1944 ”டி-டே” என்றழைக்கப்படுகிறது. ”நார்மாண்டி படையெடுப்பு” என்னும் பெயர் இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற சூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

1940 முதல் நான்கு ஆண்டுகளாக நாசி ஜெர்மனியின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பாவை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது படையெடுக்கத் திட்டமிட்டன. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நேச நாடுகளின் படைகளுடன், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, நார்வே, போலந்து, லக்சம்பர்க், செக்கஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் நாடு கடந்த அரசுப் படைகளும் (விடுதலைப் படைகள்) கலந்து கொண்டன. படையெடுப்பு நிகழும் இடம், நேரம் ஆகியவற்றை ஜெர்மானியர்கள் கணிக்காமல் இருக்க பல திசைதிருப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஜெர்மானியப் போர்த் தலைமையகத்துள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், உத்தி முடிவுகளில் இட்லரின் தலையீட்டாலும் ஜெர்மானியர்களால் படையெடுப்பைத் தடுக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.

சூன் 6, 1944ல் இப்படையெடுப்பு தொடங்கியது. ஒன்றரை மாத கால கடும் சண்டைக்குப் பின்னர் நார்மாண்டி கடற்கரை முழுவதும் நேச நாட்டுப் படைகளின் வசமாகின. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. ஆனால் பிரிட்டானிய மற்றும் கனடிய இலக்குப் பகுதியான கன் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. சூலை இறுதியில் அமெரிக்கப்படைகள் நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. இதனைத் தடுக்க ஜெர்மானியர்கள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. செய்ன் ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பகுதி ஃபலேசு இடைப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று பிரான்சுத் தலைநகர் பாரிசு விடுவிக்கப்பட்டது. மேற்கு பிரான்சில் எஞ்சிய ஜெர்மானியப் படைகள் செய்ன் ஆற்றைக் கடந்து பின்வாங்கின. இவ்வாறு ஓவர்லார்ட் நடவடிக்கை நேச நாடுகளுக்கு பெரும் வெற்றியாக முடிவடைந்தது.

பின்புலம்

1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளை வென்று ஆக்கிரமித்தன. அடுத்த நான்காண்டுகள் இவை ஜெர்மனியால் ஆளப்பட்டன. ஜெர்மானியின் பிடியிலிருந்து பிரிட்டன் மட்டும் தப்பியது. பிரிட்டானியப் பிரதமர் சர்ச்சில் மேற்கு ஐரோப்பாவை மீட்க உறுதி பூண்டார். மேற்கு ஐரோப்பாவை வென்ற பின்னர் இட்லரின் கவனம் கிழக்கு நோக்கி திரும்பியது. அடுத்த நான்காண்டுகள் ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் கடுமையாக மோதின. ஜெர்மனியைத் தோற்கடிக்க வேண்டுமெனில் அதனை இருமுனைப் போரில் ஈடுபட வைக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட் ஆகியோர் முடிவு செய்தனர். இதற்காக 1942ல் டியப் திடீர்த்தாக்குதல் நடத்தப்பட்டு தோல்வியடைந்தது. பின் அது போல் சிறிய அளவிலான தாக்குதல்கள் வெற்றி பெறாது, மிகப்பெரிய அளவில் படையெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. டியப் திடீர்த்தாக்குதலுக்குப் பிறகு மேற்கில் ஒரு படையெடுப்பு சாத்தியம் என்பதை ஜெர்மானியப் போர்த் தலைமையகமும் உணர்ந்து கொண்டது.

புதிய படையெடுப்புக்கான திட்ட வேலைகள் 1942ல் தொடங்கின. தொடக்கத்தில் சிலெட்ஜ்ஹாம்மர் நடவடிக்கை என்றும் ரவுண்ட்டேபிள் நடவடிக்கை என்றும் என்று குறிப்பெயர்கள் இடப்பட்டிருந்த படையெடுப்புத் திட்டங்கள் 1943ல் நிகழ்வதாக இருந்தன. பின்னர் இப்படையெடுப்புத் திட்டம் “ஓவர்லார்ட்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1944 க்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிரான்சின் துறைமுகங்களை நேரடியாகத் தாக்கிக் கைப்பற்ற இயலாது என்பதை டியப் திடீர்த்தாக்குதலின் தோல்வி மூலம் நேச நாட்டு உத்தியாளர்கள் உணர்ந்தனர். இதனால் துறைமுகங்களைத் தவிர்த்து கடற்கரையில் நேரடியாகப் படைகளைத் தரையிறக்குவது என்று முடிவானது. புவியியல் காரணங்களால் இத்தகு படையெடுப்பு நார்மாண்டி அல்லது பா தெ கலே பகுதிகளில் தான் சாத்தியம் என்று கண்டறியப்பட்டது. இங்கிலாந்துக்கு மிக அருகிலிருந்த கலே கடற்கரையே படையெடுப்புக்கு மிக உகந்தது என்றாலும் அங்கு ஜெர்மானியப் படைபலம் அதிகமாக இருந்ததால், படையெடுப்புக்கு நார்மாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.

முன்னேற்பாடுகள்

நேச நாட்டு முன்னேற்பாடுகள்

ஓவர்லார்ட் திட்டம்

நார்மாண்டியில் படையெடுப்பு நிகழ்த்துவதற்கான திட்டம், 1943 கியூபெக் மாநாட்டில் ஒப்புதல் பெற்றது. இப்படையெடுப்புக்கான தேதி மே 1, 1944 என முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 1943ல் அமெரிக்க தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவுக்கான நேச நாட்டுத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். பிரிட்டானிய தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரி படையெடுப்பில் ஈடுபடும் தரைப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டு, படையெடுப்புக்கு திட்டமிடும் பொறுப்பும் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் கடல்வழியே 3 டிவிசன்களும் வான்வழியே 2 பிரிகேட்களும் பங்கு பெறுவதாக இருந்த படையெடுப்புத் திட்டம் பின்பு விரிவுபடுத்தப்பட்டது. கடல்வழியே 5, வான்வழியே 3 என மொத்தம் 8 டிவிசன்கள் முதல் நாள் தரையிறக்கத்துக்கு ஒதுக்கப்பட்டன. ஒட்டு மொத்த படையெடுப்புக்கென 39 டிவிசன்கள் (சுமார் 10 லட்சம் வீரர்கள்) ஒதுக்கப்பட்டன. இவற்றுள் பிரிட்டானியக் கட்டுப்பாட்டிலிருந்த 12 பிரிட்டானிய, 3 கனடிய மற்றும் 1 போலந்திய டிவிசன்களும், 22 அமெரிக்க டிவிசன்களும், ஒரு சுதந்திர பிரெஞ்சுப் படை டிவிசனும் அடக்கம்.

கப்பற்படை பீரங்கித் தாக்குதல் திட்டம்

படையெடுப்பு நிகழும் இடத்தையும் நேரத்தையும் ஜெர்மானியர்கள் கணிக்காமல் இருக்கவும் அவர்கள்து கவனத்தை திசை திருப்பவும் பாடிகார்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியான ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை வெற்றி பெற்று, ஜெர்மானியர்கள் படையெடுப்பு கலே பகுதியில் தான் நிகழப் போகிறது என்று நம்பத் தொடங்கினர். நார்மாண்டிப் பகுதியின் வரைபடங்கள் மற்றும் திரைப்படங்கள் திரட்டப்பட்டு அப்பகுதியில் புவியியல் அமைப்பு, ஓத அலைகளின் பண்புகள், கடற்கரை மணலின் தன்மை ஆகியவை ஆராயப்பட்டன. நார்மாண்டிக் கடற்கரைப் பகுதி நீர்மூழ்கிக் கப்பல்களால் நோட்டம் விடப்பட்டது. படையெடுப்புக்கான ஒத்திகைகளும் இங்கிலாந்து கடற்கரைகளில் நடத்தப்பட்டன. நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய டாங்குகள் மற்றும் கவச வண்டிகள், மிதவைப் பாலங்கள் போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. படையெடுப்பின் ஆரம்ப வாரங்களில் பிரான்சின் துறைமுகங்கள் எதையும் கைப்பற்ற திட்டமில்லாததால், தளவாடங்களையும் படைகளையும் தரையிறக்க செயற்கையான மல்பெரி துறைமுகங்கள் உருவாக்கப்பட்டன. படையெடுப்பு நிகழ்ந்த பின்னர் படைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்க புதிய குழாய் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

மோண்ட்கோமரி வகுத்த திட்டப்படி, முதல் 40 நாட்களுள் நார்மாண்டியின் கடற்கரையில் ஒரு வலுவான கடற்கரை முகப்பை உருவாக்கிவிட வேண்டும்; கன் மற்றும் செர்போர்க் துறைமுகங்கள் கைப்பற்றப்பட வேண்டும்; பின்னர் அந்த கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேறி பிரான்சின் உட்பகுதிக்கு பல திசைகளில் முன்னேற வேண்டும். 90 நாட்களுக்குள் செய்ன் ஆற்றை அடையவேண்டும் என்று இலக்குகள் வகுக்கப்பட்டிருந்தன.

ஜெர்மானிய முன்னேற்பாடுகள்

அட்லாண்டிக் சுவர்

ஜெர்மனியின் தலைவர்களும், தளபதிகளும் மேற்குப் போர்முனையில் ஒரு படையெடுப்பு நிகழும் என்று கருதவில்லை. எனினும் டியப் திடீர்த்தாக்குதலுக்குப் பின்னர் கடற்கரை அரண்நிலையான அட்லாண்டிக் சுவர் உருவாக்கப்பட்டது. நேச நாட்டு முன்னேற்பாடுகளால் சுதாரித்துக் கொண்ட ஜெர்மானியப் போர்த் தலைமையகம் 1944ல் படையெடுப்பை எதிர்க்க புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. ஆர்மி குரூப் பி எனும் படைப்பிரிவு, ஃபீல்டு மார்ஷல் ரோம்மலின் தலைமையில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டது. படையெடுப்பை எதிர்க்கும் பொறுப்பு ரோம்மலுக்கு வழங்கப்பட்டது. மேற்கு கடற்கரையில் அரண் நிலைகள் பலவீனமாக இருப்பதை உணர்ந்த அவர், அவற்றைப் பலப்படுத்தும் முயற்சியைத் தொடங்கினார். சுமார் அறுபது லட்சம் கண்ணி வெடிகள் அட்லாண்டிக் சுவரெங்கும் இடப்பட்டன. கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் அரண்நிலைகள் பலப்படுத்தப்பட்டன. மிதவை வானூர்திகள் மற்றும் வான்குடைகளைப் பயன்படுத்தி வான்குடை வீரர்கள் தரையிறங்க ஏதுவான இடங்களில் எல்லாம் ரோம்மலின் தண்ணீர்விட்டான் கொடி ("Rommel's asparagus") என்றழைக்கப்பட்ட கூர்மையான குச்சிகள் நடப்பட்டன. பள்ளமான ஆற்றுப் பகுதிகளும், ஆற்று முகத்துவாரப் பகுதிகளும் நிரந்தரமாக வெள்ளக்காடாக்கப்பட்டன. கரையோரமாகக் கடலிலும் நீரடித் தடைகளும், டாங்கு எதிர்ப்புத் தடைகளும் நிறுவப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி ஜெர்மானியர்களால் அட்லாண்டிக் சுவரைக் கட்டி முடிக்க இயலவில்லை.

ஃபீல்டு மார்ஷல்கள் ரன்ஸ்டெட் மற்றும் ரோம்மல்

நேச நாட்டுப் படைகளை எதிர்கொள்ளுவது எப்படி என்று ஜெர்மானியத் தளபதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. நேச நாட்டுப் படைகளைக் கடற்கரையில் காலூன்ற விட்டுவிட்டால் பின் அவர்களைத் திருப்பி விரட்டவே முடியாது என்று ரோம்மல் உறுதியாக நம்பினார். நேச நாட்டு வான்படைகளின் வான் ஆதிக்க நிலை, ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களை முறியடித்துவிடும், எனவே படையெடுப்பைக் கடற்கரையில் படைகள் இறங்கும் தருவாயிலேயே எதிர்த்து அழித்து விடவேண்டும். இதற்காக அனைத்து ஜெர்மானியப் படைப்பிரிவுகளையும் கடற்கரைப் பகுதிகளுக்கு நகர்த்த வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால் இட்லரும் மேற்கு முனைத் தளபதி ரன்ஸ்டெடும் இதற்கு மாறான ஆழப் பாதுகாப்பு (depth in defence) உத்தியினை ஏற்றுக்கொண்டனர். நேச நாட்டுப் படைகள் எங்கு தரையிறங்குவார்கள் என்று தெரியாத போது, பெரும்பாலான படைப்பிரிவுகளை பிரான்சின் உட்பகுதியில் நிறுத்த வேண்டும், படையெடுப்பு நிகழும் போது நேச நாட்டுப் படைகளை சிறிது முன்னேற விட்டு பின்பு சுற்றி வளைத்து அழிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். குறிப்பாக பான்சர் (கவச) டிவிசன்களை கடற்கரையோரமாக நிறுத்த ரோம்மல் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நான்கு காலாட்படை டிவிசன்கள் மட்டுமே நிறுத்தப்படிருந்தன.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் தான் படையெடுப்பு நிகழக் கூடிய சூழ்நிலை இருந்தது. முழு நிலவு நாட்களை ஒட்டி கடல்மட்டம் உயரும் போது தரையிறக்கப் படகுகளும் வண்டிகளும் கடற்கரைப் பகுதிகளில் இயங்கக் கூடிய நிலை இருந்தது. மேலும் இந்நாட்களில் வானிலை சீராக இருந்தால் தான் வான்வழித் தரையிறக்கமும் ஒரு சேர நடைபெற முடியும். மே-சூன் 1944 மாதங்களில் வானிலை மோசமாக இருந்ததால் படையெடுப்பு நிகழாது என்று ஜெர்மானியர்கள் மெத்தனமாக இருந்தனர். ஆனால் வானிலை சீரான ஒரு சிறிய கால இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு சூன் 6ம் தேதி படையெடுப்பு தொடங்கியது.

தரையிறக்கம்

ஒமாகா கடற்கரை - சூன் 7 1944

நார்மாண்டியில் படையிறக்கம் இரு கட்டங்களாக நடைபெற்றது. வான்வழியாக 24,000 பிரிட்டானிய மற்றும் அமெரிக்கப் படையினர் சூன் 5 பின்னிரவிலும், சூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர். கடற்கரையிலிருந்து உட்பகுதிக்கு விரைந்து முன்னேற உதவியாக சில முக்கிய பாலங்களைக் கைப்பற்றுவது, ஜெர்மானிய இருப்புப் படைகள் நார்மாண்டி களத்துக்குச் செல்ல பயன்படுத்தக் கூடிய பாலங்களைத் தகர்த்தல், நார்மாண்டிக் கடற்கரையைத் தாக்கக் கூடிய பீரங்கி நிலைகளை அழித்தல் போன்ற இலக்குகள் இப்படையினருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. பின் சூன் 6 காலை 6.30 மணியளவில் தரைப்படைகள் கடல்வழியாகத் தரையிறங்கத் தொடங்கின. தரையிறக்கம் நிகழ்ந்த 80 கிமீ நீளமுள்ள நார்மாண்டி கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இவ்வைந்து கடற்கரைகளிலும் சூன் 6 இரவுக்குள் 1,60,000 படையினர் தரையிறங்கினர். இந்த நடவடிக்கையில் 5000 கப்பல்களும் 1,75,000 மாலுமிகளும் ஈடுபட்டிருந்தனர். இதுவே போர் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும்.

ஜூனோ கடற்கரையில் கனடியப் படைகள்

ஐந்து கடற்கரைப் பகுதிகளில் ஒமாகா கடற்கரையில் தான் ஜெர்மானிய எதிர்ப்பு கடுமையாக இருந்தது. அமெரிக்கப் படைகளைத் தரையிறங்க விடாமல் கடலும் கரையும் இணையும் நீர்க்கோட்டில் (waterline) வைத்தே அவர்களை அழிப்பது ஜெர்மானியத் திட்டம். படையெடுப்புக்கு முன் ஜெர்மானிய அரண் நிலைகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நேசநாட்டு வான்வழி குண்டுவீச்சு, மேக மூட்டம் காரணமாக வெற்றி பெறவில்லை. இதனால் சேதமடையாத ஜெர்மானிய பீரங்கி நிலைகளும், துப்பாக்கி நிலைகளும் அமெரிக்கப் படைகள் தரையை அணுகும் முன் குண்டுமழை பொழிந்ததால் அமெரிக்கர்களுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. எனினும் சூன் 6 இரவுக்குள் ஒமாகா கடற்கரை அமெரிக்கர் வசமானது. இது போல பிரிட்டானிய மற்றும் கனடியப் படைகள் தரையிறங்கிய கோல்ட் மற்றும் ஜூனோ கடற்கரைகளும் கடும் சண்டைகளுக்குப் பின்னர் கைப்பற்றப்பட்டன. யூட்டா மற்றும் சுவார்ட் கடற்கரைகள் எளிதில் கைப்பற்றப்பட்டன. முதல் நாள் இறுதியில் திட்டமிட்டபடி நேச நாட்டுப் படைகளால் பல இலக்குகளை நிறைவேற்ற இயலவில்லை. சென் லோ, கன், போயோ ஆகிய நகரங்கள் ஜெர்மானியர் வசமே இருந்தன. ஐந்து கடற்கரைப் பகுதிகளும் ஒன்றிணைக்கப்படவில்லை. ஆனால் இப்படையிறக்கத்தில் எதிர்பார்த்த அளவு இழப்புகளும் ஏற்படவில்லை. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் நிகழ்ந்த ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுவிட்டன. இந்த அளவில் நார்மாண்டித் தரையிறக்கம் நேச நாட்டு வெற்றியில் முடிவடைந்தது.

நார்மாண்டிக்கான சண்டை

எப்சம் நடவடிக்கை - கன் சண்டையின் ஒரு பகுதி

கடற்கரை முகப்பு பத்திரமாக்கப்பட்டவுடன் நேச நாட்டுப் படைகள் நார்மாண்டி கடற்கரையோரமிருந்த பிற ஊர்களையும் துறைமுகங்களையும் கைப்பற்ற முனைந்தன. விரைவாகத் துறைமுகங்களைக் கைப்பற்றி படைத் தளவாட இறக்குமதியைத் தொடங்குவதும் நார்மாண்டிப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும் அவர்களது இலக்கு. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. ஆனால் பிரிட்டானிய / கனடிய இலக்குப் பகுதியான கன் நகரத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. அமெரிக்கப் படைகள் கேரன்டான் மற்றும் செர்போர்க் நகரங்களை சூன் மாத இறுதிக்குள் கைப்பற்றின. ஆனால் செர்போர்க் துறைமுகத்தினை ஜெர்மானியர்கள் சேதப்படுத்திவிட்டதால் ஆகஸ்ட் மாத மத்தி வரை அதில் சரக்குக் கப்பல் போக்குவரத்து துவங்கவில்லை.

செர்போர்கில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய போர்க்கைதிகள்

பிரிட்டானிய/கனடியப் படைகள் கன் நகரைக் கைப்பற்ற முயன்றன. கன், நார்மாண்டி பகுதியின் மிகப்பெரிய நகரம். நார்மாண்டியிலிருந்து பிரான்சின் பிறபகுதிகளுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பாக விளங்கியது. இதனைப் பயன்படுத்தி எதிர்த்தாக்குதலுக்கு ஜெர்மானியர்கள் படைகளை விரைவில் நகர்த்தும் சாத்தியமிருந்தது. ஓர்ன் ஆறு மற்றும் கன் கால்வாய் ஆகிய நீர்நிலைகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்நீர்நிலைகள் நேச நாட்டுப் படை முன்னேற்றத்துக்குப் பெரும் தடைகளாக இருந்தன. மேலும் கன்னைச் சுற்றிய பகுதிகள் சமவெளியாக இருந்ததால் விமான ஓடு தளங்களை அமைக்க ஏற்றதாக அமைந்தன. இந்த மூன்று காரணங்களால் நேச நாட்டு உத்தியாளர்கள் கன் நகரைக் கைப்பற்ற விரும்பினர். கன்னிலிருந்து தான் நேச நாட்டுப் படைகளின் அடுத்த கட்ட முன்னேற்றம் தொடங்கும் என்று ஜெர்மானியர்கள் கருதியதால், அந்நகரைத் தக்கவைக்க பெருமுயற்சி செய்தனர். சூன், சூலை மாதங்களில் இரு தரப்பினருக்கும் இங்கு கடும் சண்டை நடந்தது. மார்ட்லெட், எப்சம், விண்ட்சர், ஜூபிடர், குட்வுட், சார்ண்வுட் மற்றும் அட்லாண்டிக் நடவடிக்கைகளின் மூலமாக சிறிது சிறிதாக கன் நகரம் பிரிட்டானிய / கனடியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. கன் நகரில் ஜெர்மானியர்களின் கவனமும் படைகளும் குவிந்திருந்ததால் அமெரிக்கக் கட்ட்டுப்பாட்டுப் பகுதியில் ஜெர்மானியப் படைவளையம் பலவீனமாக இருந்தது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்கப் படைகள் சூலை இறுதி வாரம் அங்கு உடைத்து வெளியேறத் தொடங்கின.

உடைத்து வெளியேற்றம்

ஒமார் பிராட்லி (இடது)

கோப்ரா நடவடிக்கை என்று பெயரிடப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளின் உடைத்து வெளியேற்றத் தாக்குதல் சூலை 25ம் தேதி தொடங்கியது. இதில் லெப்டினன்ட் ஜெனரல் ஒமார் பிராட்லி தலைமையிலான அமெரிக்க 1 வது ஆர்மியின் தாக்குதலால் நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படைவளையம் சிதறியது. படை ஒழுங்கு சீர்குலைந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் செய்னை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. சூலை 31ம் தேதி 1 வது ஆர்மி நார்மாண்டியிலிருந்து வெளியேறி பிரான்சின் உட்பகுதிக்குள் புகுந்து விட்டது.

நிலையைச் சீர்செய்ய ஜெர்மானிய மேற்கு முனை தளபதி குந்தர் வோன் குளூக் புதியப் படைப்பிரிவுகளை நார்மாண்டிப் போர்முனைக்கு அனுப்பினார். ஆனால் இரண்டு மாதங்கள் நடந்திருந்த தொடர் சண்டையில் ஜெர்மானியப் படைபலம் வெகுவாகக் குறைந்ததிருந்தது. மேலும் இதுவரை நடந்த சண்டை நகராத காலாட்படை மோதல்கள். கோப்ரா நடவடிக்கையின் வெற்றியால் பிரான்சில் போர் நகரும் போராக மாறியது (war of maneuver). ஆயுத பலத்திலும், எந்திரமயமாக்கலிலும் ஜெர்மனியை விட மிகவும் முன்னணியில் இருந்த நேச நாட்டுப் படைகளுக்கு இப்புதிய போர்முறை சாதகமாக அமைந்தது. இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற எதிர்த்தாக்குதல் ஒன்றை நிகழ்த்த இட்லர் தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டார். பிரிட்டானிப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை மீட்டு, கோடென்ண்டின் தீபகற்கபத்தின் அவராஞ்செசு நகர் வரை முன்னேற ஜெர்மானியப் படைகளுக்கு இலக்குகள் கொடுத்தார். இத்தாக்குதலுக்கு லியூட்டிக் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. ஜெர்மானிய களத் தளபதிகள் இட்லரின் உத்தியோடு உடன்படவில்லை. இத்தகைய தாக்குதலுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு, மாறாக தாக்குதலில் ஈடுபடும் படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட வாய்ப்பு உண்டு என்று மறுத்தனர். ஆனால் அவர்களது கருத்துகளை கண்டுகொள்ளாமல் நடவடிக்கையைத் தொடங்க உத்தரவிட்டார் இட்லர்.

ஃபலேசு இடைப்பகுதி உருவாக்கம்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் லியூட்டிக் தாக்குதல் தொடங்கியது. நேச நாட்டு வான்படைகளின் எதிர்த்தாக்குதலால், ஜெர்மானியத் தாக்குதல் படையில் பெரும்பாலான டாங்குகள் அழிக்கப்பட்டன. ஒரு வார சண்டைக்குப் பின்னர், ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு, தாக்குதலில் ஈடுபட்ட படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஜெர்மானியத் தளபதிகள் இட்லரை எச்சரித்தபடியே பல படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை வளையத்தில் சிக்கிக் கொண்டதால் ஃபலேசு இடைப்பகுதி உருவாகி விட்டது. ஜெர்மானிய 7வது மற்றும் 5வது கவச ஆர்மிகளின் பல படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலை உருவானது. லியூட்டிக் தாக்குதலில் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை நிலைகளை ஆழமாக ஊடுருவித் தாக்கியதால், தாக்குதல் முறியடிக்கப்பட்டவுடன் முப்புறமும் எதிரிப்படைகளால சூழப்பட்டு சிக்கிக் கொண்டன. நேச நாட்டுப் படைநிலைகளின் இடையே ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஃபலேசு வீக்கப்பகுதி (Falaise Gap) என்று அழைக்கப்பட்டது. வடக்கில் கனடியப் படைகளும், மேற்கில் பிரிட்டானிய 2வது ஆர்மியும், தெற்கில் அமெரிக்க 1வது ஆர்மியும் இவ்வீக்கப்பகுதியை சூழ்ந்திருந்தன.

ஃபலேசு வீக்கப்பகுதியினை நான்காவது புறமும் சூழ்ந்து ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாடுகள் டிராக்டபிள் நடவடிக்கையை மேற்கொண்டன. தப்பும் வழி அடைபடும் முன்னர் ஃபலேசு வீக்கப்பகுதியிலிருந்து தப்ப ஜெர்மானியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், நேச நாட்டுப் படைகள் மெல்ல மெல்ல அவ்வழியை அடைத்தன. ஆகஸ்ட் 21ம் தேதி ஃபலேசிலிருந்து ஜெர்மானியப் படைப்பிரிவுகள் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு வீக்கப்பகுதி இடைப்பகுதியாக (pocket) மாறிவிட்டது. சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஃபலேசிலிருந்து தப்பினாலும் இறுதியில் சுமார் 50,000 வீரர்கள் இடைப்பகுதியில் சிக்கிக் கொண்டு சரணடைந்தனர்.

முடிவு

பாரிசில் பிராட்லி, ஐசனாவர் மற்றும் டி கோல்

ஃபலேசில் ஏற்பட்ட பெருந்தோல்வியால் செய்ன் ஆற்றுக்கு மேற்கே இருந்த ஜெர்மானியப் படைகள் முற்றிலுமாக சீர் குலைந்தன. மூன்று மாத தொடர் சண்டையில் வீரர்களையும், தளவாடங்களையும் பெருமளவில் இழந்திருந்த ஜெர்மானியப் படைகளால் இதற்கு மேல் நேச நாட்டு படைகளைச் சமாளிக்க முடியவில்லை. வேகமாக செய்ன் ஆற்றுக்குப் பின்வாங்கத் தொடங்கின. ஆகஸ்ட் 19ம் தேதி பிரான்சின் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு உள்நாட்டுப் படைகள் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளுக்கு எதிராக புரட்சியைத் தொடங்கின. அவர்களுக்கு உதவியாக பாரிசை விடுவிக்க நேச நாட்டு படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டன. ஆகஸ்ட் 25ம் தேதி பாரிசு வீழ்ந்தது. எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகள் செய்ன் ஆற்றைக் கடந்து பின்வாங்கின. இத்துடன் ஓவர்லார்ட் நடவடிக்கை முழுமையடைந்தது.

விளைவுகள்

நார்மாண்டியில் கைப்பற்றப்பட்ட நாசிக் கட்சிக் கொடியுடன் கனடிய வீரரக்ள்

இந்த படையெடுப்பில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. தரையிறங்கிய நேசநாட்டுப் படைவீரர்களில் சுமார் 10 % (2,09,672) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர். மேலும் 4,101 வானூர்திகள் இத்தாக்குதலில் நாசமாகின, அவற்றிலிருந்த 16,714 பேர் கொல்லப்பட்டனர். ஆக மொத்தம் நேச நாட்டு இழப்புகள் 226,386 பேர். ஜெர்மானியத் தரப்பில் எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டன என்று சரியாகத் தெரியவில்லை. அவை 2,10,000 முதல் அதிகபட்சம் 4,50,000 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதில் சுமார் 2,00,000 பேர் போர்க்கைதிகள். எண்ணிக்கையளவில் இரு தரப்பிலும் இழப்புகள் ஓரளவு சமமாக இருந்தாலும், அவரவர் படை எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, சதவிகித அளவில் ஜெர்மானியர்களுக்குத் தான் இழப்புகள் அதிகமாக இருந்தன. இவை தவிர சுமார் 2,000 டாங்குகளும் நாசமாகின. ஓவர்லார்ட் சண்டைகளில் 13,632 - 19,890 பிரெஞ்சு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். கன், பிரெஸ்ட், செர்போர்க் போன்ற நார்மாண்டிப் பகுதியின் பல நகரங்கள் இச்சண்டையில் பெரும் சேதமடைந்தன.

மேல்நிலை உத்தியளவில் ஓவர்லார்ட் நடவடிக்கை நேச நாடுகளுக்கு ஒரு பெருத்த வெற்றி. இதன் வெற்றியால் ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்பது உறுதியானது. இருமுனைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்ட இட்லரின் மூன்றாம் ரெய்க்கால் எந்த ஒரு முனையிலும் தனது முழு பலத்தை உபயோகிக்க முடியாமல் போனது. பாரிசு விடுவிக்கப்பட்ட ஓராண்டுக்குள் ஜெர்மனி வீழ்ந்தது.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை