சுமேரியா

சுமேரியர் சாதனை சுமேரியர் பங்களிப்பு

சுமேரியா தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (இன்றைய தென் ஈராக்) அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும். இது கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3வது ஆயிரவாண்டில் பாபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது.

சுமேரியா
புவியியல் பகுதிதற்கால ஈராக்
காலப்பகுதிபுதிய கற்காலம், பிந்தைய செப்புக் காலம்
காலம்கிமு 4500 - 1900
சுமேரியாவின் சாமர்ரா நகர அகழாய்வில் கண்டெடுக்கபப்ட்ட சுவசுத்திக்கா சின்னம் பொறித்த கிண்ணம், பெர்கமோன் அருங்காட்சியகம்

சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது. "சுமேரியர்" என்ற சொல் சுமேரிய மொழி பேசியவர்களை குறிக்கிறது. யூப்பிரட்டீஸ், டைகிரிசு என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசொப்பொத்தேமியா என அழைக்கப்படுகிறது.

இங்கு தோன்றிய நாகரிகம்தான் சுமேரிய நாகரிகம் அல்லது மெசொப்பொத்தேமிய நாகரிகம். செப்புக் காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசொப்பொத்தேமியா, நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் சுமேரியா இருந்தது. இது "நாகரீக அரசர்களின் நிலம்" அல்லது "சொந்த நிலம்" என்றும் அழைக்கப்பட்டது.[1] சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது. இங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. கி.மு 4000 முதல் கி.மு. 3000 வரை இந்த நாகரிகம் எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[2]

இந்த இரண்டு ஆறுகளையும் ஆண்டு முழுவதும் நீர்பாசனத்திற்காக பயன்படுத்தினர். வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மெசபடோமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது. முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும்.[3][4][5][6] சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும்,செம்மைப்படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்களையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.[7] சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்நாடு யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக் ஆகும்.

பின்னணி

சுமேரியர் என்ற சொல் அக்காதிய மக்களால் முதலில் வழங்கப்பட்டது. அக்காதிய மொழியில் இதன் பொருள் "கருந்தலை மக்கள்" என்பதாகும்.[8] தங்களின் பிரதேசத்தை "நாகரிக பிரபுக்களின் நாடு" என அழைத்தனர். இவர்களின் மொழி இந்நிலப்பகுதி மொழிகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டதால் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.[2] ஆனாலும் தொல்பொருள் சான்றுகள் சுமேரியர் இந்நிலப்பகுதிகளில் உபைதியன்கள் காலப்பகுதி (கி.மு. 5200-4500 அல்லது கி.மு. 6090-5429) தொடக்கம் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் இருந்ததை சுட்டுகிறது. இவர்கள் யூபிரிடிஸ் - டைகிரிடிஸ் ஆறுகளால் படிந்த செழுமையான வண்டல் நிலங்களில் உழவுத்தொழில் மேற்கொண்டனர்.

இந்நிலப்பகுதி ஆண்டுக்கு ஏறக்குறைய 130 மி.மீ. மழைவீழ்ச்சியே பெறுகின்றது. எனவே யூபிரிடிஸ், டைகிரிஸ் ஆறுகளை ஆண்டு முழுவதுக்குமான நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்துவது முக்கியமாகும். சுமேரிய மொழியில் நீர்ப்பாசனத்துடன் தொடர்புடைய பல சொற்கள் காணப்படுகின்றன. இதன் மூலம், வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மொசொப்பொத்தேமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது என்பது தெளிவாகிறது.

வரலாறு

ஆதி சுமேரிய நாகரிகம் தோன்றிய வரலாறு இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஏறக்குறைய கி.மு 5000 ஆண்டளவிலிருந்து கி.மு 3000 ஆண்டுவரை அங்கே ஒரு கலாச்சாரம் இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பண்டைய நாகரிங்களில் மிகவும் பழைமையான நாகரிகம் மெசொப்பத்தாமியாவில் தோன்றிய சுமேரிய நாகரீகமாகும். அக்காடிய மொழியில் சுமர் என்றால் 'காலச்சார நாடு' என்று பொருள். சுமேரியாவிலிருந்து தான் நாகரீகங்களும், கலாச்சாரங்களும் தோன்றியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்களின் கருத்து.[9]

பண்டைய அண்மைக் கிழக்கில் சுமேரியா எனப்படும் தற்கால ஈராக் பகுதி "வளமான பிறை பிரதேசத்தில்" செழிப்புடன் விளங்கியது. அப்பகுதியில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மக்கள், தோட்டங்களை வளர்க்க தொடங்கினர். கிமு 7000 ல் விவசாயம் தொடங்கியது, எனவே வேட்டை சமூகம் உழவுத்தொழில் சார்ந்த சமூகமாக மாற வேண்டியதாயிற்று. இப்பகுதியில் கி. மு 4500 வாக்கில் பாரசீக வளைகுடாவில் கலக்கும் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளின் கரையோர நகரங்களில் வாழ்ந்த மக்கள் உபைதுகள் காலம் எனத் தொல்பொருள் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகின்றனர்.[7] உபைதியன்களுக்குப் பிறகு உரூக் இன மக்கள் இப்பகுதியை ஆண்டனர். அவர்கள் சதுப்பு நிலங்களை சீர்திருத்தி விவசாயம் மேற்கொண்டார்கள். சில காலங்களுக்குப் பிறகு கிமு 23 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி அக்காதியர்களால் வெல்லப்பட்டது. அதன் பிறகு கி. மு. 21 ஆம் நூற்றாண்டில் குடியன் எனப்படும் இனக்குழுவால் வெல்லப்பட்ட பின் இப்பகுதில் பெரும் சுமேரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை மிகக் குறுகிய காலத்திலேயே அதாவது கி. மு 20 ஆம் நூற்றாண்டில் செமிட்டிக் இனமக்கள் இங்கு படையெடுத்தனர். அவர்களுக்குப் பின் இப்பகுதி முழுவதும் பாபிலோனியர்களால் ஆளப்பட்டது. இவர்களின் நாகரீகங்களும் அக்காடிய நாகரீகத்துடன் கலந்து ஏற்பட்டதே சுமேரிய நாகரீகமாகும்.

சுமேரிய மொழி

கிமு 2600 சுமேரிய ஆப்பெழுத்துகள் பட்டியல்

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (சுமேரியா) ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.

சுமேரிய எழுத்து முறை

முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களையே சாரும். ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் ஆப்பெழுத்துகள் அமைத்தனர். இவ்வெழுத்து முறைக்கு “கியூனிபார்ம்” என்று பெயர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி சுமேரியர்களின் எழுத்து வடிவம் தான் உலகின் முதல் எழுத்து வடிவமாகும். சித்திரங்கள் வடிவில் தோன்றி பின்பு எழுத்துக்கள் சுமேரியர்களால் கண்டுபிடிக்கபட்டு, தங்கள் வர்த்தக கணக்கிற்காக அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள். உலகம் அறிந்த முதல் இலக்கியம் அங்கு தான் தொடங்கியது. தன் கைவிரல்கள் பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற்கொண்டவர்கள் சுமேரியர்கள்.

நாட்கள் கணக்கிடும் முறை

சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்த்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின. சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன

சுமேரியர்களின் சமயம் & கடவுள்கள்

சுமேரியாவின் அக்காடியப் பேரரசின் கிமு 2300 காலத்திய மூன்று தெய்வங்கள்
கிமு 2334-2154 காலத்திய சுமேரியர்களின் இஷ்தர் எனும் பெண் தெய்வம்
சுமேரியர்களின் புயல் மற்றும் மழை கடவுளான ஆதாத் சிலையை தாங்கிச் செல்லும் அக்காடிய பேரரசின் படைவீரர்கள்
பிற்காலத்திய சுமேரிய கடவுள்களான இஷ்தர், சின் மற்றும் சமாஷ், கிமு 12ம் நூற்றாண்டு

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.[10]

சுமேரிய மும்மூர்த்திகள்

  1. அனு - வான் கடவுள்
  2. ஈஅ - கடல் கடவுள்
  3. ஆதாத் - மழை மற்றும் காற்று கடவுள்

பிற கடவுள்கள்

  1. எஸ்தர் - செழுமைக்கான பெண் கடவுள்
  2. துமுழி - இசுதாரின் இணைத்தெய்வம்
  3. மனிதத் தலையுள்ள காளை மாடுகள்
  4. அப்சு - நீர்க்கடவுள்

சுமேரியர்களின் கட்டிடக்கலை

ஊர் நகரத்தின் ஊரின் சிகூரட், ஈராக்

ஊர் மிகவும் முக்கியம் வாய்ந்த சுமேரிய நகரம். இந்தப்பட்டணம் ஈராக்கின் தென் பகுதியில் அமைந்திருந்தது. ஆபிரகாமும் இந்தப்பட்டணத்தை சேரந்தவன். அக்காடிய இராச்சியத்திற்கு பின்பு ஊர்- நம்மு (கி. மு 2100) எனும் மன்னனால் சந்திரக்கடவுளுக்கு பெரிய சிகுரத் கோவில் ஊர் பட்டணத்திலே கட்டப்பட்டது.

சுமேரிய நகரங்கள்

தற்கால ஈராக்கில் சுமேரியாவின் நகரங்கள்

மெசொப்பொத்தேமியா என்பது பல நாடுகளைக் குறிக்கும். அதில் சுமேரியாவும் அடக்கம். சுமர் திரிந்து சுமேரியாவாயிற்று. எரிது பின்னர் ஈராக் ஆனது. எரிது, லகாசு, ஊர் முதலியவைகள் சுமேரிய நகரங்கள் ஆகும். மெசொப்பொத்தேமியா என்பது கிரேக்கச் சொல். “மெசொ” என்றால் நடுவே என்று பொருள்.“பட்டோமே” என்றால் ஆறுகள்.[11][12]புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளின் நடுவில் உள்ள சமவெளிப் பகுதிகளின் தோன்றிய நாகரிகங்களில் சுமேரியா, பாபிலோன், இட்டைட்டு, அக்காடியம் ஆகியவை பழைமைச் சிறப்புள்ளவை. காவியச் சிறப்புள்ள புராணக்கதைகளும் இந்த நான்கில் உண்டு. யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரும் ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் நாடே அன்றைய மெசொப்பொத்தேமியா ஆகும். நான்கு நாகரிகங்களின் புராணக்கதைகள், வழிபாடுகள், மெஸப்பட்டேமியாவின் உற்பத்தித்தானமாயுள்ள அனதோலியா என்ற இன்றைய துருக்கி, கீழே செமிட்டிக் இன அடையாளமான இன்றைய பாலஸ்தீனமான உகரித், பண்டைய எகிப்து, பண்டைய அசிரியா, பாரசீகம், ஆகிய எல்லை தாண்டிய பகுதிகளிலும் பரவியிருந்தது. கி. மு 4000 ஆண்டுகளில் சுமேரியாவில் 12க்கும் மேற்பட்ட சுதந்திர நகர இராச்சியங்கள் இருந்தன. இவை கால்வாய்களாலும் நன்கு கட்டப்பட்ட கற்சுவர்களினாலும் பிரிக்கப்பட்டிருந்தன ஒவ்வொரு நகரத்தின் மையத்திலும் ஒரு தனித்துவமான தெய்வக் கோவிலும் ஆண் அல்லது பெண் தெய்வ வழிபாடும் இருந்தது. நகரத்தின் தலைவனாக இத்தெய்வங்களே இருந்தன. இதன் பிரதிநிதியாக அரசன் கருதப்பட்டான். ஆரம்ப காலங்களில் எரிது, இசின், கிஷ், அக்காத், லகாசு, லார்சா, நிப்பூர் அத்துடன் ஊர் ஆகிய பட்டணங்கள் இருந்தன. இவை ஏறக்குறைய கிமு 2800 ஆம் ஆண்டுகளில் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் இருந்தன. சுமேரியாவின் முதலாவது மன்னன் எத்தனா. இவன் கிஷ் பட்டணத்தின் மன்னன்.

சுமேரியாவின் முதன்மை நகரங்கள்

  1. எரிது
  2. ஊர்
  3. உரூக்
  4. அக்காத்
  5. லார்சா
  6. சிப்பர்
  7. சாமர்ரா
  8. ஈலாம்
  9. பாபிலோன்
  10. கிஷ்
  11. லகாசு
  12. உம்மா
  13. நிப்பூர்
  14. இசின்
  15. போர்சிப்பா
  16. எசுன்னா

சுமேரியர்களின் வாழ்க்கை முறை

சுமேரியப் பெண் அணிந்த தலையணி மற்றும் கழுத்தணி, பிரித்தானிய அருங்காட்சியகம்

சுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல்பட்டன என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு சுமேரிய நகரத்திற்கும் தனிபட்ட கடவுள் மற்றும் தனிபட்ட ஆளுனர்களும் அமைத்துகொண்டார்கள். ஆயினும் சுமேரிய தலைநகரமான "உர்"-இன் அரசனுக்கு தான் எல்லோரும் பொதுவாக காணிக்கைகள் செலுத்தினர். சுமேரியாவில் குறைந்தபட்சம் 12 நகரங்கள் தழைத்தோங்கின. தனித்தனியான சுவர்கள் அமைத்த நகரங்களாக அவை அமைந்தன. அவற்றில் "ஊர்", "உரூக் ", "கிஷ்" மற்றும் "லகாசு" முக்கிய நகரங்களாக விளங்கின. 24000 வரை மக்கள் தொகை கொண்ட "ஊர்" சுமேரியாவின் மிக பெரிய நகரமாக கருதப்பட்டது. அங்கு முக்கிய கடவுளாக வணங்கபட்டது "நன்னா" என்றழைக்கபட்ட சந்திரன். 70 அடி உயரம் கொண்ட கோபுரம் நன்னா கோவிலில் காணப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ராஜ கோபுரங்கள் அகழ்வாராய்ச்சியின் சாட்சியாக விளங்குகின்றன. மெசொப்பொத்தேமியாவின் மற்றுமொரு பெரு நகரமாகிய “உரூக்”கில் 6 மைல் நீள பெருஞ்சுவர் ஒவ்வொரு 35 அடிகளில் பாதுகாப்பு கோபுரங்களுடன் கட்டபட்டது. நகரத்தின் மையத்தில் அந்நகரத்தின் கடவுளின் கோவில் இருந்தது. நகரத்தை சுற்றி தானியங்களின் விளைநிலங்கள், ஈச்சம்பழ தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் காணப்பட்டன. பொதுமக்கள், நிலச்சுவான்கள் மற்றும் அடிமைகள் என பல்வேறு மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். 90 விழுகாடு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். கோவில்களிலும் நிலச்சுவான்கள் வீடுகளில் அடிமைகள் பணிக்கு அமர்த்தபட்டனர். நெல்லிடித்தல் மற்றும் நெய்தல் போன்ற பொது வேலைகள் அவர்களுக்கு தரபட்டன.

சுமேரியாவின் முதன்மை நகரங்கள்

  1. எரிது
  2. ஊர்
  3. உரூக்
  4. அக்காத்
  5. லார்சா
  6. சிப்பர்
  7. சாமர்ரா
  8. ஈலாம்
  9. பாபிலோன்
  10. கிஷ்
  11. லகாசு

உபைதியன்கள் காலம் (கிமு 6500 - கிமு 3800)

மெசபடோமியா முழுவதும் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைதியன்களே விளங்கினர். இவர்களது மண்பாண்டக் கலை தெற்கு மெசபடோமியா மற்றும் பாரசீக வளைகுடா முழுதும் பரவியிருந்தது இக்கால கட்டத்தில் கி. மு. 5300 களில் உழவுத் தொழில் செய்பபர்கள் எரிது என்ற நகரத்தில் நிலைத்து வாழத் தலைப்பட்டனர். 'எரிது' நகரம் உலகின் முதல் வளர்ந்த நகரமாக விளங்கியது. இவர்களே முதலில் சிறந்த முறையில் நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்தவர்கள் ஆவர். யூப்ரடிஸ் பகுதியில் உள்ள தாழ் நிலங்களை காயவைத்து, வாய்க்கால்கள் வெட்டி தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் அந்நிலத்தை உபயோகபடுத்தி கொண்டார்கள். நில வளங்களை நன்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் முதன்முறையாக அவர்கள் உழுது விவசாயம் செய்தார்கள்.[11] இவர்களது முக்கிய நகரம் உருக் ஆகும். உருக் நகரம் இவர்களது வழிபாட்டின் முக்கிய நகரமாக விளங்கியது. முதன்மை படைப்புக் கடவுளாகிய இனன்னா என்ற ஆண்தெய்வத்திற்கும் போர் மற்றும் அன்பின் கடவுளான உருக்கின் பெண் தெய்வத்திற்கும், என்கி என்ற அறிவுக் கடவுளுக்கும் வழிபாடு நடைபெற்றது.[13] அந்நகரத்தில் மூன்று விதமான வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந்தன. மண் குடிசைகளில் வாழ்ந்த விவசாயிகள் , கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வந்த நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் நதியோர நிலங்களில் நாணல் குடிசைகள் அமைத்து வாழ்ந்த சுமேரியர்களின் முன்னோர்களாக கருதபட்ட மீன்பிடிக்கும் மக்கள் என மூன்று வித மக்களின் கலாச்சாரமும் எரிது நகரத்தில் காணப்பட்டன.[14][15]

உருக் காலம் (கி. மு. 4100 – கிமு 2900)

உரூக் காலத்தில் வண்ணமேற்றப்பட்ட மட்பாண்டங்களைச் செய்ய வேகமாகச் சுழலும் குயவன் சக்கரம் கண்டறியப்பட்டன. இதனால் ஏராளமான மட்பாண்டங்களை இவர்கள் உற்பத்தி செய்தனர். நிலவளம் நிறைந்திருந்தாலும் கணிம மற்றும் உலோக வளங்கள் அங்கு குறைவாகவே தான் காணப்பட்டன, ஆகையால் அவர்கள் உலோகங்களை இறக்குமதி செய்தார்கள். உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாகப் படகுகள் வடிவைமைதார்கள். பண்டமாற்று முறையையும் முதன்முதலில் அமல்படுத்தினார்கள். ஏர் கலப்பைகள் கண்டுபிடிப்பை தொடர்ந்து சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சக்கரங்களின் உதவியால் மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள். சக்கரத்தின் உதவியால் 3000 ஆண்டுகள் முன்னரே அவர்களின் போக்குவரத்து இந்திய எல்லை வரையும் செவ்வனே நீண்டு சென்றது. கோயிலை மையமாகக் கொண்ட நகரங்கள் தோற்றுவிக்கபப்ட்டன. இங்கு சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தது. உரூக் நாகரிகத்தில் தான் முதன் முதலாக அடிமைகளை வைத்து வேலை வாங்கும் வழக்கம் தொடங்கியது. அருகிலிலுள்ள மலைப் பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்களாக அடிமைகளாக அழைத்து வந்ததாக நூல்களில் கூறப்பட்டுள்ளது.[16] இந்த உருக் நாகரிகம் தற்போதைய துருக்கிப் பிரதேசத்தில் உள்ள டாரசு மலையின் பெரும் பகுதியிலும் மேற்கே மத்தியதரைக்கடல் வரையிலும் தூரக் கிழக்கான ஈரானை மையமாகவும்கொண்டு பரவியிருந்தது.[16]

உரூக் நாகரிகம் தனக்கென ஒரு சிறந்த பொருளாதாரத்தைப் பெற்ற நாகரிகமாக விளங்கியது. தூரத்தில் உள்ள உருக் இராச்சியத்திற்குட்பட்ட குடியேற்ற நாடுகள் சிறப்பு இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டன.[16] உருக் நகரம் 'என்சி' என்ற மன்னன் தலைமையில் நிர்வாகம் செய்யபப்ட்டது. நிர்வாகக் குழுவில் சிறந்த பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் வல்லுநர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் தக்க ஆலோச்னைகளை மன்னனுக்கு வழங்கினார்கள்.[17] இக்கால கட்டத்தில் உருக் நாகரிகம் 50,000 குடியேற்றங்களைக் கொண்ட பெரிய நகரமாக உலகில் சிறந்து விளங்கியது. இந்நாகரிகம் கி. மு. 3200- 2900 களில் ஏற்பட்ட ஒரு மோசமான காலநிலையால் அழிவுற்றது.[18]

புகழ்பெற்ற தலைவனாக கருதபட்ட கில்கமெஷ் வாழ்ந்த நகரமாக “உரூக்” கருதப்பட்டது. அத்தலைவனை பற்றி உலகின் மிக பழமையான நூலே கில்கமெஷ் காப்பியம் எழுதப்பட்டுள்ளது. புரதான நகரமாகிய உருக்கை அராபியர்கள் வர்க்கா என்று அழைத்தனர். வேதாகமத்தில் எரேக் என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. சுமேரியாவின் தலைநகராக உரூக் விளங்கியது. யூப்பிரடீஸ் நதியருகில் இந்த பட்டணம் அமைந்திருந்தது. உருக் எனும் வார்த்தையே ஈராக் ஆக திரிபு பெற்றது. உருக் மக்கள் பெண் தெய்வத்தை வழிபட்டனர்.

முற்காலத்தைய அரசுகள்

இக்கால அரார்களாக என்மெர்க்கர், கில்கமெஷ் ஆகிய மன்னர்களைப் பற்றி கில்கமெஷ் காப்பியம் குறிப்பிடுகின்றன. இவ்வரசுகள் விரைவில் தங்கள் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு பரந்தன. தென் மெசபடோமியாவிலிருந்து வந்த செமிட்டிக் மக்கள் சுமேரிய நாகரிகத்தின் பல்வேறு கூறுகளை இணைத்து புதிய சுமேரிய நாகரிகத்தை உருவாக்கினர். இக்காலத்தைய முதல் அரசராக ’எதனா’ அறியப்படுகிறார். இவ்வமிசத்தின், உருக் அரசரும் 13 ஆவது அரசருமான கிஷ் என்பவரைப் பற்றி கில்கமெஷ் காப்பியம் குறித்துள்ளது. இவ்வாட்சியில் அரசுகள் பல சுவர்களால் பிரிக்கப்பட்டும் பல்வேறு கலகங்களால் கூடியதுமாக இருந்தது.

லகாசு இராச்சியம்

ஆப்பெழுத்து பலகையில் சிதைந்த கழுகுகளின் சிற்பம்

தெற்கு மெசொப்பொத்தேமியா பகுதியில் லகாசு நகரம் அமைந்திருந்தது. லாகாசு சுமேரியாவின் ஒரு பகுதி.[14] இதன் முதல் மன்னனாக என்னாட்டம் என்பவன் அறியப்படுகிறான். இவன் குறுகிய காலத்திலெயே கிஷ், உரூக், ஊர், லார்சா ஆகிய பகுதிகளை வென்று உம்மா என்ற நகரத்துடன் இணைத்தான் இவன் ஆட்சி ஈலாம் மற்றும் பாரசீக வளைகுடா வரை பரவியது. இவன் தனது எதிரிகளை அடக்க பயிற்சி பெற்ற வல்லூறுப் படையைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறான்.[19] பின்பு அக்காடிய மக்களால் சுமேரியா முழுவதும் கைப்பற்றப்பட்டு, அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. சிறிது காலங்களின் பின்னர் சுமேரியர்கள் அக்காடிய மக்களை வென்றனர்.[14]

அக்காடியப் பேரரசு (கிமு 2371 – கிமு 2230)

ஆதி மெசொப்பத்தாமியாவின் தென்பகுதியில் சுமேரியாவும், வடபகுதியில் பிற்கால பாபிலோனும் அமைந்திருந்தது. இந்த இரண்டு பட்டணங்களும் அல்லது சாடுகளும் கி.மு 2500 நூற்றாண்டளவில் ஆரம்பமாகியது. அக்காதியம் எனும் மொழி பேசப்பட்டது. இது ஒரு செமித்திய மொழி. கி.மு 2340 ஆம் ஆண்டளவில் சார்கோன் மன்னனால் அக்காடிய இராச்சியம் விரிவடைந்தது.[20] அதன் பின்பு அக்காடியா தேசம் மிகவும் புகழ்பெற்றது. அக்காடிய இராச்சியத்தின் வீழ்ச்சி நேரம் சுமேரிய முழுவதும் லகாஷை தவிர ஒரே போர்க்களமாக இருந்தது.[21]

குடியன்கள் காலம் கிமு 2083 - கிமு 2046

குடியன்களின் லகாசு நகரத்தின் தலைச்சிற்பம்

கி. மு 2083–கி.மு 2050 வரை லகாசு பகுதியை குடியன்கள் ஆண்டனர். லகாஷ் பகுதியை குதேயா என்பவன் ஆட்சி செய்தான். இவன் நல்லுறவை விரும்பி, நல்ல முறையில் ஆட்சி செய்தான். நல்லவன் மட்டுமல்ல, பலமான அரசைத் தோற்றுவித்தவனுமாவான். இவன் சுமேரியாவிலே பல கோவில்களை கட்டினான். லாகாஷ் மக்கள் அநேக கடவுள்கள் இருப்பதாக நம்பினார்கள். குதேயா தனக்கென்று ஒரு கடவுளை வைத்திருந்தான். கடவுளின் பெயர்: நின்கித்சிதா. இவனுடைய மரணத்தின் பின் இவனுடைய மகன் லகாசை ஆட்சி செய்தான்.

செமித்தியர்

செமித்தியர் என்றால் பல சாதிகள் என்று பொருள்படும். இவர்கள் சேமுடைய சந்ததியினர். இவர்கள் அராபியா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களில் வாழ்ந்தனர். இவர்களிலிருந்து பல ஜாதிகள் பிரிந்தது. இவர்கள் வம்சத்தில் தான் கிறிஸ்துவும், முகமது நபியும் பிறந்தனர். ஒரு காலகட்டத்தில், சுமேரிய நிலபகுதிகள் கடல்நீரின் ஆதிக்கத்தில் மூழ்க தொடங்கின. உப்பு படிந்த நிலங்களில் சுமேரியாவின் முக்கிய தொழிலான விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்களில் வாழ்க்கை தரம் மெதுவாக குறைய தொடங்கியது.[22] இதனால் அவர்கள் பசி, உணவு தட்டுபாடு மற்றும் நோய்களால் பாதிக்கபட்டனர். பலவீனமான சுமேரியர்களை "செமித்திக் இன மக்கள் போர் மூலம் ஆக்கிரமித்து கொண்டனர். செமித்திக் இன மன்னன் கிஷ் நகரத்தை ஆளதொடங்கினார். சிறந்த போர் தந்திரங்களை மேற்கொண்டு அவர் சுமேரியாவின் பெரும் பகுதியை தன்வசமாக்கினார். பின்பு சுமேரியவின் "நிப்பூர்" நகர மன்னனை தோற்கடித்து நிப்பூர் நகரத்தை ஆண்டார். அந்நகரத்தின் கடவுளாகிய "என்லில்" ஆசியினால் தான் தன் ஆட்சி அமைகிறது என்று அம்மன்னன் தீர்க்கமாக நம்பினான். பின்னாளில் அம்மன்னன் எல்லாம் வல்ல சார்கன் என அழைக்கபட்டார். மிக சிறந்த ஆட்சி புரிந்த சார்கன் மன்னரின் இறப்பிற்கு பின் அவர் சந்ததிகள் சுமேரியாவை ஆண்டுவந்தனர்.

ஈலம் அல்லது எலாம்

ஈலாம் எனப்படுவது தற்கால ஈரான் நாட்டின் மேற்கு பகுதியாகும். இது சுமேரியாக்கு கிழக்கில் யூப்ரடிஸ் நதியின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்தது. சுமேரிய மக்களின் நாகரிக காலத்திலே இவர்களது நாகரிகமும் ஆரம்பித்தது. இவர்கள் நான்கு பெரிய பட்டணங்களில் வாழ்ந்தார்கள், அவான், அன்ஷான், சிமாஷ் அத்துடன் தலைநகர் சூசா. கலாச்சார ரீதியில் ஏலாம் பின்தங்கியிருந்தது. அநேக காரியங்கள் அவர்கள் மற்றக்கலாச்சாரங்களிலிருந்து பின்பற்றினார்கள். எழுத்து வடிவம் சுமேரிய மக்களிடத்திலிருந்தும் கட்டடக்கலையை பாபிலோனியர்களிடமிருந்தும் பின்பற்றினர். இவர்களுக்கென்று தனிப்பட்ட இலக்கியங்களோ, கடவுள்களோ இருந்ததாக தெரியவில்லை. எலாமியருடைய மொழி வேறு மொழிகளுடன் தொடர்பாயிருக்கவில்லை. இவர்களுடைய மொழியிலிருந்து வேறு மொழிகளும் உருவாகவில்லை. கி.மு 2200 அளவில் எலாம் ஊர் என்ற அரசின் கீழ் வந்தது. கி.மு 2000 அளவில் எலாம் வலுப்பெற்று, ஊர் இராச்சியத்தை கைப்பற்றியது. ஏறக்குறைய கி.மு 1600 அளவில் காசிட்டு இராச்சியம் எலாமை கைப்பற்றியது. கி. மு 1160 எலாம் மீண்டும் வலுப்பெற்றது. காசிட்டு மக்கள் பாபிலோனியாவையும் கைப்பற்ரும் அளவிற்கு வலுப்பெற்றது. ஆனால் முதலாவது நேபுகாத் நேச்சரால் கி.மு 1120 ஆண்டளவில் எலாம் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் எலாம் கிமு 750 அளவில் வளர்ந்தது. ஆனால் அசீரியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது அதன் பின்பு மேதிய அரசர்கள் இதனை ஆண்டனர்.

ஹைத்திஸ் மக்கள்

இவர்களுடைய தொடக்கம் எதுவென்று அறியப்படவில்லை. என்றாலும், இவர்களுடைய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிகளை சார்ந்தது. இவர்களை ஹத்துசாஸ் என்றும் அழைப்பர். கி.மு 1595 அளவில் இவர்களினால் பாபிலோனிய இராச்சியம் கைப்பற்றப்பட்டது.

காசிட்டு மக்கள்

இவர்களும் இந்தோ- ஐரோப்பிய மொழிகளைப்பேசிய மக்கள். இவர்களும் ஹைத்திஸ் மக்களைப்போலவே மெசொப்பத்தாமியாவுக்குள் உட்புகுந்தனர், கி.மு 1590 ஆம் ஆண்டளவில் இவர்கள் பாபிலோனியாவை கைப்பற்றினர்.

பாபிலோன்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

உசாத்துணை

  • பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்) - இப்புத்தகம் மெசப்பதோமிய நாகரிகங்கள் அனைத்தும் குமரிக்கண்ட நாகரிகத்தில் இருந்து பிரிந்தது என்பதற்கான மொழியியல் மற்றும் ஊர் பெயரியல் சான்றுகளை முன்வைக்கிறது.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sumer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
புவியியல்
மொழி
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுமேரியா&oldid=3875139" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை