நஜது

நஜ்த் அல்லது நஜது அல்லது நெஜது (Najd அரபு மொழி: نَجْد‎, பலுக்கல் [nad͡ʒd]) என்பது சௌதி அராபியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள புவியியல் மைய நிலப்பரப்பாகும்.[1] தற்கால ஆட்சிப் பகுதிகளான ரியாத், அல்-காசிம் மற்றும் ஹாயில் ஆகியவற்றை நஜ்த் உள்ளடக்கியுள்ளது. இவற்றின் ஒருங்கிணைந்த பரப்பளவு 554,000 சதுர கிமீ (214,000 சதுர மைல்) ஆகும்.

நஜது
نَجْد
நிலப்பகுதி
மேற்கிலிருந்து காண்கையில் நஜதிலுள்ள தவ்வீக் சரிவு. சௌதியின் தலைநகர் ரியாத், கீழ்வானத்தைத் தாண்டித் தென்படுகின்றது.
மேற்கிலிருந்து காண்கையில் நஜதிலுள்ள தவ்வீக் சரிவு. சௌதியின் தலைநகர் ரியாத், கீழ்வானத்தைத் தாண்டித் தென்படுகின்றது.
Location of நஜது
நாடுசௌதி அராபியா
சௌதி அராபியாவின் நிலப்பகுதிகள்ரியாத் பகுதி, அல்-காசிம் பகுதி, ஹாயில்

நிலவியல்

எல்லைகள்

சௌதி அராபியாவின் தற்கால அரசியல் பிரிவுகளின் மேல் நஜ்த்

நஜ்த் என்ற அரபுச் சொல்லின் பொருள் "மேட்டுநிலம்" என்பதாகும், இது ஒரு காலத்தில் அராபிய மூவலந்தீவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. எனினும், இவற்றில் மிகவும் புகழ்பெற்றது, மேற்கில் ஹெஜாஸ் மற்றும் ஏமன் மலைகளாலும் கிழக்கில் கிழக்கு அராபியாவின் வரலாற்று நிலப்பகுதியினாலும், வடக்கில் ஈராக்கு மற்றும் சிரியாவாலும் சூழப்பட்ட மூவலந்தீவின் மையப்பகுதியாகும்.

நிலவியல் அமைப்புகள்

நஜ்த் என்பது 762 மீ முதல் 1,525 மீ (2,500 முதல் 5,003 அடி) உயரமும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய சாய்வையும் கொண்ட ஒரு உயர்நிலமாகும். வரலாற்றில் அல்-யமாமா என அழைக்கப்படும் அதன் கிழக்குப்பகுதிகள், ஏராளமான வேளாண் மற்றும் வணிக நடவடிக்கைகளைக் கொண்ட பாலைவனச்சோலைக் குடியேற்றங்களைக் கொண்டுள்ளன, எஞ்சியுள்ளவை பாரம்பரியமாக நாடோடி பெடூக்களால் பரவலாக ஆட்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கில் ஹாயிலுக்கு அருகிலுள்ள இரட்டை மலைகளான அஜா மற்றும் சல்மா, வடக்குத் தெற்காக இந்த நிலப்பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷம்மர் மேட்டுநிலம் மற்றும் தவ்வீக் மலைத்தொடர் ஆகியவை இந்த நிலப்பரப்பின் முதன்மையான பண்புகளாகும்.

வாடி என்றழைக்கப்படும் பல்வேறு வறண்ட ஆற்றுப்படுகைகள், வறண்ட பாலைவனக் காலநிலையில் விலைமதிப்பற்ற மழைநீரைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதன் காரணமாகப் பெரும்பாலான நஜ்து சிற்றூர்களும் குடியிருப்புகளும் இந்த வாடிக்களின் அருகில் அமைந்துள்ளன. தெற்கில் ரியாத்துக்கு அருகிலுள்ள வாடி ஹனிபா, வாடி நாம், வடக்கில் அல்-காசிம் மாகாணத்திலுள்ள வாடி அல்-ரூமா, மற்றும் நஜ்தின் தெற்கு முனையில் நஜ்ரானின் எல்லையிலுள்ள வாடி அத்-தவாசீர் போன்றவை முக்கியமானவை. மற்ற குடியிருப்புகள் பாலைவனச்சோலைகளுக்கு அருகில் அமைந்துள்ளன.

வரலாற்றில், நஜ்து நிலப்பகுதி, சிறிய நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் குடியேற்றத் தொகுதிகளைக் கொண்ட சிறிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்துள்ளது, அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றும் பொதுவாக ஒரு "தலைநகரை" மையமாகக் கொண்டிருந்துள்ளன. ஒவ்வொரு மாகாணமும் தத்தம் வட்டார நஜ்தி பேச்சுவழக்கு மற்றும் நஜ்தி பழக்கவழக்கங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், இந்த உட்பிரிவுகள் இன்றும் நஜ்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாகாணங்களில் மிக முக்கியமானவை: ரியாத் மற்றும் வரலாற்றுச் சௌதித் தலைநகரான தரைய்யாவை உள்ளடக்கிய அல்-அரித்; புரைய்தாவைத் தலைநகராகக் கொண்ட அல்-காசிம்; அல் மஜ்மாவை மையமாகக் கொண்ட சுடையீர்; ஷக்ராவை மையமாகக் கொண்ட அல்-வாஷ்ம்; ஹாயிலைத் தலைநகராகக் கொண்ட ஜெபல் ஷம்மர். இருப்பினும், தற்கால சவூதி அரேபியாவின்படி, நஜ்த் மூன்று ஆட்சிப்பகுதிகளாக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது: ஹாயில், அல்-காசிம் மற்றும் ரியாத்.

முக்கிய நகரங்கள்

ரியாத் நகரம் நஜ்தின் மிகப்பெரிய நகரமாகவும், ஒட்டுமொத்தமாக நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது, 2010 இல் 5,700,000 க்கும் அதிகமாகவும் 2016 இல் 5,008,100 என்றும் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பிற நகரங்கள்: புரைய்தா (2005 இல் 505,845), உனைசா (2005 இல் 138,351) ) மற்றும் அர் ராஸ் (2005 இல் 116,164).[2] சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்கள்: சுடையீர், அல்-கர்ஜ், தவாத்மி, 'அஃபிஃப், அல்-ஜில்ஃபி, அல் மஜ்மா, ஷக்ரா, தர்மதா, துர்மா, அல்-குவேய்யா, அல்-ஹரீக், ஹொட்டட் பானி தமீம், லயலா, அஸ் சுலாயில், மற்றும் நஜ்தின் தென்கோடிக் குடியேற்றமான வாடி அட்-தவாசீர்.

மக்கள்

இனக்குழுக்கள்

சௌதி அராபியாவின் தற்கால அரசாட்சி உருவாவதற்கு முன்னர் இருந்த மக்கள் அராபியப் பழங்குடியினர், நாடோடிகள் (பெடூக்கள்) அல்லது நகராத வேளாளர்கள் மற்றும் வணிகர்கள். மீதமுள்ள மக்கள் பெரும்பாலும் பல்வேறு காரணங்களுக்காக, எந்தவொரு பழங்குடியினருடனும் இணைக்கப்படாதிருக்கும் அராபியர்கள், அவர்கள் பெரும்பாலும் நஜ்தின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் வாழ்ந்து தச்சுத்தொழில் அல்லது கைவினைத்தொழில் (சோனா) போன்ற பல்வேறு தொழில்களைச் செய்து வந்தனர். ஆப்பிரிக்க மற்றும் சில கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய அடிமைகள் அல்லது விடுதலை பெற்றவர்களால் ஆன ஒரு சிறிய பகுதியும் அந்த மக்கள்தொகையில் உள்ளடக்கியிருந்தது.

நஜ்தி பழங்குடியினரில் பெரும்பாலோர் அட்னானைட் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; திஹாமா மற்றும் ஹெஜாஸிலிருந்து பண்டைய காலங்களில் நஜ்திற்கு குடிபெயர்ந்தவர்கள். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நஜ்தி பழங்குடியினர் தற்கால ரியாத்தை சுற்றியுள்ள பகுதியை ஆட்கொண்ட பானு ஹனிஃபா, மேலும் வடக்குப் பகுதிகளை ஆட்கொண்ட பானு தமீம், அல்-காசிமில் மையமாக இருந்த பானு ஆப்ஸின் பழங்குடிகள், தற்கால ஹாயிலை மையமாகக் கொண்ட தைய் பழங்குடிகள், தெற்கு நஜ்தில் உள்ள பானு அமீரின் பழங்குடிகள் ஆவர். 15 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில், மேற்கிலிருந்து கணிசமான பழங்குடியினரின் வருகையால் இப்பகுதியின் நாடோடி மற்றும் குடியேறிய மக்கள் தொகையை அதிகரித்து, வஹாபி இயக்கம் வளர வழிவகுத்தது.[3] இருபதாம் நூற்றாண்டில், பண்டைய பழங்குடியினர் பலர் புதிய கூட்டமைப்புகளாக உருவெடுத்தனர் அல்லது மையக்கிழக்கின் பிற பகுதிகளிலிருந்து குடியேறினர், மேலும் மூவலந்தீவின் பிற பகுதிகளிலிருந்தும் பல பழங்குடியினர் நஜ்திற்குக் குடிபெயர்ந்தனர். இருப்பினும், முதற்குடி நஜ்திகளில் பெரும்பாலானோர் இன்றும் இந்த பண்டைய நஜ்தி பழங்குடியினர் அல்லது அவர்களின் புதிய உருமாற்றங்களின் வழிவந்தோர்களாகவே உள்ளனர். பண்டைய காலங்களில் கூட பல நஜ்தி பழங்குடியினர் நாடோடி அல்லது பெடூயின்களாக அல்லாது, நிலையான வேளாளர்களாகவும் வணிகர்களாகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சௌதி அராபியாவின் அரச குடும்பமான, அல் சௌத், பானு ஹனிஃபா பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சௌதி அரேபியா உருவாவதற்கு முன்னதாக, நஜ்தின் முக்கிய நாடோடி பழங்குடியினர் தவாசீர், முட்டயர், உதய்பா, ஷம்மர் (வரலாற்று முறையில் தைய் என அழைக்கப்படுகிறார்கள்) சுபே', சுஹூல், ஹர்ப் மற்றும் தெற்கு நஜ்தில் உள்ள கஹ்தானியர்கள் ஆகியோர். அந்த பழங்குடியினரைத் தவிர, நகராத மக்களில் பலர் அனிசா, பானு தமீம், பானு ஹனிஃபா, பானு காலித் மற்றும் பானு சைய்த் ஆகியோரைச் சேர்ந்தவர்கள்.

மதம்

இப்பகுதி இஸ்லாத்தை கடுமையானப் பின்பற்றுவதற்காக அறியப்படுகிறது, மேலும் பொதுவாக மதப்பழமைவாதத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. வஹாபிசம் என்று அழைக்கப்பட்டு சௌதி கொடி வழியால் பின்பற்றப்படும் இஸ்லாத்தின் கடுமையான உட்பிரிவின் நிறுவனர், முஹம்மது இப்னு அப்துல் வஹாப், நஜ்தில் உள்ள ஒரு சிற்றூரான 'உயய்னா'வில் பிறந்தார்.[4]

மொழி

பதிவுசெய்யப்பட்ட அனைத்து வரலாற்றின்படி நஜ்த் மக்கள் ஏதோவொரு வடிவத்தில் அரபு மொழியைப் பேசிவந்துள்ளனர். மூவலந்தீவின் பிற பகுதிகளைப் போலவே, நாடோடி பெடூயின்களின் பேச்சுவழக்குக்கும், நகராத மக்களின் பேச்சுவழக்குக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. எனினும், இந்த மாறுபாடு நாட்டில் வேறு எங்கும் இல்லாததை விட நஜ்தில் மிகக்குறைவாகவே உள்ளது, பெரும்பாலான நகராத நஜ்திகள், நாடோடி பெடூயின்களின் வழிவந்ததைப் போலவே நஜ்தி நகராப் பேச்சுவழக்கு பெடூயின் பேச்சுவழக்கில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. நஜ்தி உயர்நிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இருப்பிடம், கடுமையான காலநிலை மற்றும் முந்தைய மொழியிலிருந்து எந்தவொரு அடிக்கூறு இல்லாதது போன்ற காரணங்களால், அனைத்து நவீன அரபு மொழிகளைக் காட்டிலும் மிகக் குறைவான வெளிநாட்டுத் தாக்கம் கொண்டதாக நஜ்தி பேச்சுவழக்கு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக தெற்கு சவுதி அராபியாவைப் போலல்லாமல், பண்டைய தென் அராபிய மொழி கூட பண்டைய காலங்களில் நஜ்தில் பரவலாகப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. நஜ்துக்குள்ளேயே, வெவ்வேறு பகுதிகளும் நகரங்களும் அவற்றின் தனித்துவமான வட்டார வழக்குகள் மற்றும் துணை கிளைமொழிகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், இவை அண்மைய காலங்களில் பெரும்பாலும் ஒன்றிணைந்து பிற பகுதிகள் மற்றும் நாடுகளிலிருந்து வந்த அரபு மொழிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நஜ்த் பகுதியில் கரடுமுரடான கம்பளித் துணி தயாரிக்கப்பட்டுவந்துள்ளது.[5]

மேலும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நஜ்த்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நஜது&oldid=2868609" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை