பண்டைய உரோமை

பண்டைய உரோமை (Ancient Rome) என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலி தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் மத்தியதரைக் கடலோரமாகவும் உரோமை நகரை மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சியுற்றது.[1]

கி.மு. 510 முதல் கி.பி.480 வரையிலான ரோமன் நாகரீகத்தின் வளர்ச்சி:
  மேற்கு ரோமப் பேரரசு
  கிழக்கு ரோமப் பேரரசு/பைஜான்டைன் பேரரசு
உரோமைப் பொதுவெளி மையம். உரோமைக் குடியரசு மற்றும் பேரரசுக் காலங்களில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் இங்குதான் நடந்தன.

உரோமைக் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. அக்கால கட்டத்தில் உரோமைக் கலாச்சாரம் முடியாட்சி, மேல்மட்டத்தோர் ஆட்சி, குடியாட்சி, என்று பல நிலைகளைத் தாண்டிச் சென்று, பேரரசு ஆட்சியாக மாறியது. உரோமையின் ஆட்சி அதிகாரம் தெற்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, பால்கன் பகுதிகள், சிறு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் படையெடுப்பு வழியாகவும் கலாச்சார ஊடுருவல் வழியாகவும் பரவியது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதையும் உரோமை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்ந்தது. பண்டைய செவ்வுலகின் ஈடு இணையற்ற பேரரசாகவும் வல்லரசாகவும் உரோமையே விளங்கியது.

பண்டைக் காலத்தின் ஒரே வல்லரசு உரோமைதான். உரோமையர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுள் ஜூலியஸ் சீசர், சிசரோ, ஹோரஸ் போன்றோர் அடங்குவர். உரோமைக் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மாக்கியவெல்லி, ரூசோ, நீச்சே போன்ற அறிஞர்களும் மெய்யியலாரும் பெரிதும் போற்றியுள்ளனர்.

உரோமை இராணுவக் கலையிலும் அரசியல் கலையிலும் சிறந்து விளங்கியது. அதன் இராணுவம் தனிப்பயிற்சி பெற்ற போர்வீரர்களை உருவாக்கி, அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருந்தது. உரோமையின் அரசியல் அறிவு மக்களின் பொது நலனை வளர்க்கவே அரசு அமைக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு போன்ற நாடுகளில் நிலவுகின்ற நவீன காலத்து மக்களாட்சி முறைகளுக்கு உரோமை வழிவகுத்தது.[2][3][4]

உரோமையில் மக்களாட்சி நிலவிய காலம் முடிவுக்கு வந்த கட்டத்தில் உரோமை மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த பகுதிகளையும் அதற்கு மேலும் பல நாடுகளையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு, அட்லாண்டிக் கடலிலிருந்து பாலஸ்தீனாவில் யூதேயா வரை, ரைன் நதியின் முகத்துவாரத்திலிருந்து வட ஆப்பிரிக்காவரை விரிந்து பரந்தது.

உரோமை பேரரசாக உருவெடுத்தபோது அதன் பொற்காலம் அகஸ்டஸ் சீசர் ஆட்சியின் கீழ் தொடங்கியது. பேரரசன் ட்ரேஜன் (Trajan) ஆட்சியில் உரோமைப் பேரரசு நிலப்பரப்பில் மிக உச்சக் கட்டத்தை எட்டியது. பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்களாட்சி விழுமியங்கள் மங்கத் தொடங்கின. புதிய பேரரசன் ஆட்சியை நிலைநாட்டுமுன் உள்நாட்டுப் போர்கள் நிகழ்வது வழக்கமாயிற்று.[5][6][7]

கிபி 5ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியாக இருந்த மேற்குப் பேரரசு சிறுசிறு தனி நாடுகளாகப் பிளவுபடத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் உள்நாட்டுக் கலகங்கள், வெளியிலிருந்த வந்த இடம்பெயர் மக்களின் தாக்குதல்கள் போன்றவை ஆகும். வரலாற்றாசிரியர்கள் பொதுவரலாற்றின் பண்டைய காலம் முடிவடைந்து ஐரோப்பிய நடுக்காலம் தொடங்கியதை இக்காலத்தோடு இணைத்துப் பேசுகின்றனர்.

உரோமை மேற்குப் பேரரசு சிறுசிறு நாடுகளாகப் பிளவுபட்ட காலத்தில் கிழக்கு உரோமைப் பேரரசு பிளவின்றி முழுமையாக இருந்து தப்பிக்கொண்டது. மேற்கு-கிழக்கு என்று உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டதிலிருந்து காண்ஸ்டாண்டிநோபுள் மாநகரம் கிழக்குப் பேரரசின் தலைநகராயிற்று. கிழக்கு உரோமைப் பேரரசில் கிரேக்க நாடு, பால்கன் நாடுகள், சிறு ஆசியாவின் பகுதிகள், சிரியா, எகிப்து ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

பின்னர், இசுலாமியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியதோடு கிழக்கு உரோமைப் பேரரசின் சிரியா மற்றும் எகிப்துப் பகுதிகள் கலீபா ஆட்சியின் கீழ் வந்தன. இருப்பினும், மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு கிழக்கு உரோமைப் பேரரசு நீடித்தது. துருக்கி ஓட்டோமான் பேரரசு கிழக்கு உரோமைப் பேரரசின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி, காண்ஸ்டாண்டிநோபுளைச் சூறையாடியதோடு அந்நகரும் வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தது. கிழக்கு உரோமைப் பேரரசு கிறித்தவக் கலாச்சாரம் நிலவிய நடுக்கால, கிழக்கு உரோமைப் பேரரசை வரலாற்றாசிரியர்கள் "பிசான்சியப் பேரரசு" என்று அழைக்கின்றனர்.

உரோமை நாகரிகத்தைப் பண்டைய கிரேக்கத்தோடு இணைத்து "செவ்விய பண்டைக்காலம்" (classical antiquity) என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது உண்டு.

பண்டைய உரோமை உலகுக்கு வழங்கியவற்றுள் மேற்கத்திய நாடுகள் பெற்றுக்கொண்ட ஆட்சிமுறை, சட்டமுறை, போர்முறை, கலைகள், இலக்கியங்கள், கட்டடக் கலை, தொழில்நுட்பம், சமயம், மொழி ஆகியவை உள்ளடங்கும்.

உரோமை நிறுவப்பட்டது பற்றிய தொல்கதை

பாரம்பரியத் தொல்கதைப்படி, உரோமை நகரை ரோமுலுஸ், ரேமுஸ் என்னும் இரட்டையர் கிமு 753ஆம் ஆண்டில் நிறுவினர். அவர்களை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாக மரபு.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பண்டைய_உரோமை&oldid=3875078" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை