மலை

மலை என்பது ஒரு குறித்த நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நிலவடிவம் ஆகும். இதற்கு ஒரு உச்சி இருக்கும். மலை, குன்று ஆகிய சொற்கள் சில வேளைகளில் ஒன்றுக்கு ஒன்று மாற்றீடாகப் பயன்பட்டாலும், குன்று, மலையைவிட குறைவான உயரமும் உச்சி இல்லாமலும் சரிவு கொண்டதாகவும் இருக்கும். மலை தொடர்பான கல்வித்துறை மலையியல் எனப்படுகிறது.

சுவிசு ஆல்ப்சில் உள்ள "மட்டர்ஹோர்ன்"
ஐந்து விரல் மலை, அசர்பைசான்

வரைவிலக்கணம்

மலை என்பதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வரைவிலக்கணம் எதுவும் கிடையாது[1]. உயரம், கன அளவு, புறவடிவம், சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என்பன மலை என்பதை வரையறுப்பதற்கான அடிப்படைகளாகப் கொள்ளப்படுகின்றன. "பிரமிப்பூட்டத்தக்கதாக, அல்லது குறித்துச் சொல்லத்தக்க உயரத்துக்கு, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழச் சடுதியாக இயற்கையாகவே உயர்ந்திருக்கும் நில மேற்பரப்பு" என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி, மலைக்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.

ஒரு நிலவடிவம் மலையாகக் கொள்ளப்படுகிறதா என்பதை உள்ளூர் மக்கள் அதனை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது. கலிபோர்னியாவின் சான்பிரான்சிசுக்கோவில் உள்ள "டேவிட்சன் மலை" 300 மீட்டர் (980 அடி) மட்டுமே உயரம் கொண்டது. ஆயினும் அது மலை எனப்படுகிறது. இதுபோலவே ஒக்லகோமாவின் லோட்டனுக்குப் புறத்தேயுள்ள "இசுக்காட் மலை" 251 மீட்டர் (823 அடி) மட்டுமே உயரமானது. யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடல் மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்திருக்கும் பகுதி கீரிமலை என்று அழைக்கப்படுவதையும் குறிப்பிடலாம்.

மலை என்பதற்குப் பின்வரும் வரைவிலக்கணங்கள் புழக்கத்தில் உள்ளன:

  • அடிவாரத்தில் இருந்து குறைந்தது 2,500 மீட்டர் (8,202 அடி) உயரம் கொண்டது.
  • அடிவாரத்தில் இருந்து 1,500 மீட்டர்களுக்கும் (4,921 அடி) 2,500 மீட்டர்களுக்கும் (8,202 அடி) உயரத்துக்கு மேற்பட்டும், 2 பாகைகளுக்கு மேற்பட்ட சரிவும் கொண்டது.
  • அடிவாரத்தில் இருந்து 1,000 மீட்டர்களுக்கும் (3,281 அடி) 1,500 மீட்டர்களுக்கும் (4,921 அடி) உயரத்துக்கு மேற்பட்டும், 5 பாகைகளுக்கு மேற்பட்ட சரிவும் கொண்டது.

ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும்; தென்னமெரிக்காவின் 22% உம்; ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களில் முறையே 17%, 3% ஆகிய பகுதிகளும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளன. உலகின் 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் அரைப் பகுதியினர் நீருக்காக மலைகளிலேயே தங்கியுள்ளனர்.

நிலப் பண்பியல்

நிவேதா நாட்டிலுள்ள ஜெப் டெவிஸ் மலைச்சிகரம்.

மலைகளை - எரிமலை, மடிப்பு, பகுதி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன[2]. இம்மூன்று வகைகளும், பூமிக்கு அடியிலிருக்கும் பாறை அடுக்குகள் நகர்வதால் உருவாகின்றன.

எரிமலைகள்

பூமிக்கு அடியிலிருக்கும் பாறை அடுக்குகளின் அழுத்தத்தால் வெப்பநிலை உயர்ந்து எரிமலைகள் (Volcanoes) உருவாகின்றது[3]. பூமிக்கு அடியில் 100கிமீ தொலைவில் ஏற்படும் உயரழுத்த வெப்பநிலையானது, அருகிலிருக்கும் பாறைகளை உருக்கி திரவம் போன்றதாக்கிவிடும். திரவநிலையிலுள்ள பாறைக்குழம்பானது, தனது உஷ்னத்தால் மேலெழுந்து பூமியின் மேற்பரப்பை அடைந்துவிடும். மேற்பரப்பை அடைந்த பாறைக்குழம்பானது, அப்படியே படிந்து பெரும் எரிமலைகளாய் உருவாகிவிடும்[4]. சப்பானிலுள்ள ஃவூஜி மலை மற்றும் பிலிப்பீன்சிலுள்ள பினாதுபோ சிகரம் ஆகியவை எரிமலைகளின் சான்றுகளாகும்.

மடிப்பு மலைகள்

மடிப்பு மலைகளானது (Fold mountains), பூமிக்கு மேலிருக்கும் பாறை அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து பாறைகள் மடிவதினால் உருவாகின்றன[5]. பெரும் வெடிப்பிலிருந்து உருவாகிய பூமியின் மேற்பரப்பில், எடை குறைந்து காணப்பட்ட பெரும் பாறைகளானது ஒருகட்டத்தில் அசையா நிலங்களான கண்டங்களை நோக்கி நகர ஆரம்பித்தது. பின்னர் உந்து விசையினால் தள்ளப்பட்ட பாறைகள், பெரும் விசை கொண்டு கண்டங்களுடன் மோதியதால் ஏற்பட்ட செங்குத்தான மடிப்புகளே மடிப்பு மலைகள் எனப்படுகி்ன்றன.[6]. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான ஜீரா மலைத்தொடர், மடிப்பு மலைகளுக்கு சிறந்த உதாரணமாகும்.

பகுதி மலைகள்

நியுயார்க்கின் தென்கிழக்கிலுள்ள கேட்ஸ்கில்ஸ் மலை.

பூமியின் மேலடுக்கிலுள்ள பாறை அடுக்குகள், ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்படும் தவறுகளினால் பகுதி மலைகள் (Block mountains) உருவாகின்றன. ஒரு பாறையின் தவறுதலான நகர்தலால், மற்ற பாறைகள் பாதிக்குமானாலும் மலைகள் உருவாகும்[7]. பாறைகள் உராய்வதால் மேல்லெழும்பப்பட்ட பகுதிகள், பகுதி மலைகளாகும். மலைத்தொடரின் இடைப்பட்ட பள்ளமான பகுதிகள், பிளவிடை பள்ளங்கள் என அழைக்கப்படுகின்றன. மேலும் இது சிறிய வடிவிலான பள்ளத்தாக்குகளாகும். கிழக்கு ஆபிரிக்கா, வொஸ்கெஸ், வட அமெரிக்காவின் மேற்கிலுள்ள மலைத்தொடர் ஆகியவை, பகுதி மலைகளின் சான்றுகளாகும். பாறைகளின் அழுத்தத்தால் மெல்லியதான பூமியின் மேலேடுகள் விரிவடையும் போது, பகுதி மலைகள் அடிக்கடி உருவாகும்.

மண்ணரிப்பு

மலைப்பகுதிகள் பல காரணங்களால் (நீர், காற்று, பனி, நிறை ஈர்ப்பு) மண்ணரிப்புக்கு ஆளாகின்றன, இதனால் மண் படிப்படியாக உயரப்பகுதியில் இருந்து கீழே தள்ளப்படுகின்றன. இதனால் மலைகளின் மேற்பரப்பு குறைக்கிறது. [8] இதனால் பனிச்சரிவு நிகழ்வுகள்,   பிரமிடு போன்ற சிகரங்கள், கத்தி-விளிம்புகள், கின்ன வடிவ வளைந்த ஏரிகள், பீடபூமி மலைகள் போன்றவை  உயர்ந்த பீடபூமியின் அரிப்பிலிருந்து உருவாகின்றன.

சூழலியல்

சுவிஸ் ஆப்ஸ் மலை

மலைகள் மீது நிலவும் குளிர்ச்சியான காலநிலை மலைகளில் வாழும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது. இதனால் மலைப்பகுதியில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை இக்கால நிலையில் வாழ ஏதுவாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. மலையின் உயரப்பகுதிகளில் சூழியல் அமைப்பானது கிட்டத்தட்ட நிலையான காலநிலை நிலவுகிறது. இது உயரடுக்கு மண்டலம் எனப்படுகிறது.[9] வறண்ட காலநிலைகளுடன், அதிக மழைப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை இப்பகுதியில் மாறுபட்ட காலநிலையை கொண்டதாக உள்ளது.[10][11]

உயரடுக்கு மண்டலங்களில் காணப்படும் சில தாவரங்களும் விலங்குகளும் தனிமைப் படுத்தப்படுகின்றன, ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்கு மேலேயும் கீழேயுள்ள நிலைமைகள் மாறுபட்டு இருப்பதால், அவற்றின் இயக்கங்கள் அல்லது பரவல்கள் கட்டுப்படுத்தப்படும். இந்த தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் வானளாவிய தீவுகளாக அறியப்படுகின்றன.[12]

உச்சநிலை மண்டலங்களில் ஒரு பொதுவான முறை நிலவுகிறது. உயரத்தில் உள்ள காலநிலையில், மரங்கள் வளர முடியாது, அங்கு உள்ள வாழ்க்கையானது எப்பொழுதும் பனிசூழ்ந்து துருவப்பகுதி போல இருக்கும்.[11] கீழ்பகுதியில் வரவர, குளிர்ச்சியான, வறண்ட கால நிலையைத் தாங்கக்கூடிய ஊசிஇலை மரக்காடுகள் காணப்படுகின்றன.[13] அதற்கும் கீழே, மலைக் காடுகள் காணப்படுகின்றன. இங்கு பூமியின் மிதமான காலநிலை நிலவுவதால், இந்த காடுகளில் உள்ள மரங்கள், பெரும்பாலும் வெப்ப மண்டல, மழைக்காட்டு மரங்களாக இருக்கின்றன.

உயிரினங்களின் வாழ்க்கையை ஆய்தல்

ஆல்ப்ஸ் மலையின் வளமை

மலைகளின் குளிர்ச்சியான காலநிலையானது, அங்கு வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க ஒரு சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் மட்டுமே வாழ முனைகின்றன. இதனால், உயிரினங்களின் பரிமாண வளர்ச்சி பாதிக்கப்படுகின்றன[14]. உலர் காலநிலைகளுடன் உள்ள பகுதிகளில், அதிக மழையினாலும் குறைந்த தட்பவெப்ப நிலையினாலும், பல்வேறு இயற்கை சூழல்களை வழங்குகிறது[11]. குறிப்பிட்ட உயர்ந்த மண்டலங்களில் காணப்படும் சில தாவரங்கள் மற்றும் விலங்குகள், ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல் சரியான உணவு கிடைக்காமையால், தனிமைப்படுத்தப்பட்டு அழியும் தறுவாயில் உள்ளது. இவ்வாறான சுழற்சி முறைகள் வான் தீவுகள் என்றழைக்கப்படுகின்றன[15].

சமுதாயம்

ரெய்னரை மலையில் ஏறும் மலை ஏறிகள்

கடுமையான வானிலை மற்றும் சிறிய அளவிலான நிலப்பரப்பு ஆகியவற்றின் காரணமாக சமவெளிகளைவிட மலைகளில் மனித குடியிருப்புகளு் பொதுவாக குறைவானவை ஆகும். பூவியில் 7% நிலப்பரப்பே 2,500 மீட்டர் (8,200 அடி) க்கும் கூடுதலான உயரத்தில் உள்ளது,[16] இந்த உயரத்திற்கு மேலே 140 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் [16] மேலும் 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்தில் 20-30 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.[17] உயரம் கூடக்கூட வளிமண்டல அழுத்தம் குறைவதால் சுவாசத்திற்கான குறைவான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, மேலும் சூரிய கதிர்வீச்சிலிருந்து (UV) குறைவான பாதுகாப்பே இங்கு உள்ளது.[10] ஆக்சிஜன் குறைவதால்,   உலகிலேயே மிக அதிகமான நிரந்தர குடியிருப்புகள் 5,100 மீட்டர் (16,700 அடி) வரையே உள்ளன. நிரந்தரமாக தாங்கமுடியாத மிக அதிகமான உயரம் 5,950 மீட்டர் (19,520 அடி) ஆகும்.[18] 8,000 மீட்டர் (26,000 அடி) உயரத்தில், மனித உயிர்களுக்கு போதுமான போதுமான ஆக்ஸிஜன் இல்லை. இதனால்  இது "மரண மண்டலம்" என்று அறியப்படுகிறது.[18] எவரெஸ்ட் சிகரத்தின் முனை மற்றும் கே2 சிகரம் ஆகியன மரண மண்டலத்தில் உள்ளன.

ஆண்டிஸ், மத்திய ஆசிய, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் சுமார் பாதி மலைவாசி மக்கள் வாழ்கின்றனர்.[19]பாரம்பரிய மலைசார் சமூகங்கள் விவசாயம் செய்து வாழ்து வந்தனர்,  தாழ் நிலங்களிலைவிட இங்கு விவசாயம் பொய்த்துப்போகும் ஆபத்து கூடுதலாக உள்ளது. மலைகளிலேயே பெரும்பாலும் தாதுக்கள் கிடைப்பதால், தாது அகழும் சுரங்கங்கள் சில சமயம் மலைவாழ் சமுதாய மக்களின் பொருளாதரத்தில் முதன்மை அங்கமாக இருக்கின்றன. மிக அண்மைக்காலமாக, மலைவாழ் சமுதாயத்தினருக்கு சுற்றுலா சார்ந்த  தேசிய பூங்கா அல்லது ஸ்கை ரிசார்ட்ஸ் போன்றவை கவர்ச்சிகரமான வளர்ச்சியைக் அளிக்கின்றன. [20]   மலைவாழ் மக்களில் சுமார் 80% வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.[19]

உலகின் பெரும்பாலான ஆறுகளுக்கான மூலமாக மலை உள்ளது, மலைகளில் பொழியும் பனிப்பொழிவால் படியும் பனியானது சமதள மக்களுக்கு ஆற்று நீரை கோடையில் வழங்கும் ஒரு சேமிப்புக் கருவியாக செயல்படுகிறது. [21]   மனிதகுலத்தில் பாதிக்கும் மேலான மக்கள் தண்ணீருக்கு மலைகளை சார்ந்தது உள்ளனர்.[22][23]

தமிழர் பண்பாட்டில் மலை

பெருமாள் மலை

தமிழ்த் திணையியலின் படி, மலையும் மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பார்க்க

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலை&oldid=3699900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை