வரலாற்றுவரைவியல்

வரலாற்றுவரைவியல் (Historiography) என்பது, வரலாற்றை ஒரு கல்விசார் துறையாக உருவாக்குவதில் வரலாற்றாளர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய ஆய்வுத்துறை ஆகும். அத்துடன் இதன் விரிவாக்கமாக ஒரு குறித்த விடயத்திலான ஏதாவது ஒரு தொகுதி வரலாற்று ஆக்கங்களையும் குறிக்கும். ஒரு குறித்த விடயத்திலான வரலாற்றுவரைவியல் என்பது, குறிப்பிட்ட தகவல் மூலங்கள், நுட்பங்கள், கோட்பாட்டு அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு வரலாற்றாளர்கள் அவ்விடயத்தை ஆய்வு செய்தனர் என்பதை உள்ளடக்கும். "ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றுவரைவியல்", கனடாவின் வரலாற்றுவரைவியல்", "பிரித்தானியப் பேரரசின் வரலாற்றுவரைவியல்", "தொடக்க இசுலாத்தின் வரலாற்றுவரைவியல்", "சீனாவின் வரலாற்றுவரைவியல்" என விடயம் சார்ந்தோ அரசியல் வரலாறு, சமூக வரலாறு போன்ற வேறுபட்ட அணுகுமுறைகள், வகைகள் சார்ந்தோ வரலாற்றுவரைவியலை அறிஞர் விளக்குவர். கல்விசார் வரலாற்றின் வளர்ச்சியுடன், 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி வரலாற்றுவரைவியல் ஆக்கங்கள் பல உருவாகின. எந்த அளவுக்கு வரலாற்றாளர்கள் தமது சொந்தக் குழு, பற்று (நாட்டுப்பற்றுப் போல) போன்றவற்றின் செல்வாக்குக்கு உட்படுகிறார்கள் என்பது விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.[1]

யேக்கப் டி விட்டின் (1754) வரலாறு எழுதுதல் பற்றிய கருத்துருவக ஓவியம். ஏறத்தாழ திறந்த மேனியாக இருக்கும் உண்மை வரலாறு எழுதுபவரைக் கவனித்துக்கொண்டு இருக்க, இடப்புறம் இருக்கும் பல்லாசு ஏதெனா (ஞானத்துக்கான கடவுள்) ஆலோசனை வழங்குகிறார்.

வரலாற்றாளர்களின் ஆய்வு ஆர்வம் காலத்தோடு மாறுபடுகிறது. அத்துடன், மரபுவழியான இராசதந்திர, பொருளாதார, அரசியல் வரலாறுகளில் இருந்து விலகிப் புதிய அணுகுமுறைகளை நோக்கி, சிறப்பாக சமூக, பண்பாட்டு வரலாற்று ஆய்வுகளை நோக்கிச் செல்வதைக் காணமுடிகின்றது. 1975 இலிருந்து 1995 வரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தம்மை சமூக வரலாற்றோடு அடையாளம் காணும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 31% இலிருந்து 41% ஆகக் கூடியுள்ளது. அதேவேளை அரசியல் வரலாற்றோடு அடையாளம் காண்பவர்களின் தொகை 40% இலிருந்து 30% ஆகக் குறைந்துள்ளது.[2] 2007 இல் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் வரலாற்று பிரிவு ஆசிரியர்கள் 5,723 இல் 1,644 (29%) பேர் சமூக வரலாற்றுடனும், 1,425 (25%) பேர் அரசியல் வரலாற்றுடனும் தம்மை அடையாளம் கண்டுள்ளனர்.[3]

பெயர்

நவீன காலத் தொடக்கத்தில் வரலாற்றுவரைவியல் என்னும் சொல் "வரலாற்றை எழுதுதல்" என்பதையும் வரலாற்றுவரைவாளர் என்னும் சொல் "வரலாற்றாளர்" என்பதையும் குறித்தது. அக்காலத்தில் சில நாடுகளில் அதிகாரபூர்வ வரலாற்றாளர்கள், "அரச வரலாற்றுவரைவாளர்" என்ற பதவிப் பெயரைக் கொண்டிருந்தனர். சுவீடனில் 1618 இலிருந்தும், இங்கிலாந்தில் 1660 இலிருந்தும், இசுக்காட்லாந்தில் 1681 இலிருந்தும் இவ்வாறான பதவி இருந்தது. இசுக்கட்லாந்தில் இப்போதும் உள்ளது. "வரலாறு எழுதப்பட்ட, எழுதப்படும் முறை பற்றிய ஆய்வு - வரலாறு எழுதுவதன் வரலாறு .... வரலாற்றுவரைவியலைக் கற்கும்போது நேரடியாகக் கடந்தகால நிகழ்வுகள் குறித்துக் கற்பதில்லை, மாறாக, தனிப்பட்ட வரலாற்றாளர்களின் ஆக்கங்களில் அந்நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பது பற்றியே கற்கப்படுகிறது." என்னும் வரைவிலக்கணம் அண்மைக் காலத்திலேயே உருவானது.[4]

நவீன காலத்துக்கு முற்பட்ட வரலாறு

கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது உலகு தழுவிய ஒரு தேவையாகவே தோன்றுவதுடன், வரலாற்றைச் சொல்வது உலகம் முழுவதிலும் உள்ள நாகரிகங்களில் தனித்தனியாகவே உருவாகின. வரலாறு எவ்வெவற்றை உள்ளடக்கியுள்ளது என்பது ஒரு மெய்யியற் பிரச்சினை. மிகப் பழைய வரலாறுகள் மெசொப்பொத்தேமியா, பண்டை எகிப்து ஆகியவற்றின் காலத்துக்கு உரியவை. ஆனால், இந்தத் தொடக்க நாகரிகங்களில் வரலாற்றை எழுதியவர்களின் பெயர்கள் தெரியவரவில்லை. இக்கட்டுரையில் வரலாறு என்பது, எதிர்காலத் தலைமுறையினர் நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் விளக்க முறையில் எழுதப்பட்ட வரலாற்றையே குறிக்கிறது. எழுத்தின் அறிமுகத்துக்கு முன்னர் வாய்மொழி வரலாறு அல்லது வாய்மொழி மரபு இருந்துவந்தது.

அறிவொளிக் காலம்

அறிவொளிக் காலத்தின் துல்லியம் தொடர்பான முன்னேற்றங்களுக்கு வோல்ட்டயரின் வரலாற்று ஆக்கங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

அறிவொளிக் காலத்திலேயே முறையான வழிமுறைகளைப் பயன்படுத்தியதன் மூலம் வரலாற்றுவரைவியலின் நவீன வளர்ச்சி தொடங்கியது. இக்காலத்தில் பிரான்சைச் சேர்ந்த மெய்யியலாளர் வோல்ட்டயர் (1694–1778), கடந்த காலத்தைப் பார்ப்பதற்கான அவரது புதிய வழிமுறைகளை விளக்கியதன் மூலம் வரலாற்றுவரைவியலின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தினார். இவர் இராசதந்திர, இராணுவ நிகழ்வுகளை விவரிக்கும் மரபில் இருந்து விலகி வழக்காறுகள், சமூக வரலாறு, கலைகளிலும் அறிவியல்களிலும் செய்த சாதனைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

19 ஆம் நூற்றாண்டு

பிரெஞ்சுப் புரட்சியுடன் தொடர்புடைய குழப்பமான நிகழ்வுகள் 19 ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி வரலாற்றுவரைவியலுக்கும், பகுப்பாய்வுக்கும் தூண்டுகோலாக அமைந்தன. இங்கிலாந்தில் இடம்பெற்ற 1688 புரட்சி மீதான ஆர்வமும் 1832 இன் பெரும் சீர்திருத்தச் சட்டம் காரணமான மீண்டும் உருவானது.

20 ஆம் நூற்றாண்டு

20 ஆம் நூற்றாண்டு வரலாற்றுவரைவியல் பல முக்கியமான நாடுகளில் பல்கலைக்கழகங்களையும், கல்விசார் ஆய்வு மையங்களையும் நோக்கிச் சென்றதைக் காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்களுக்கான வரலாறு தொடர்ந்தும் தாமாகவே கற்றுக்கொண்ட தொழில்முறை சாராதவர்களால் எழுதப்பட்டது. ஆனாலும், புலமைசார் வரலாறு பல்கலைக்கழகங்களிலும், ஆய்வுக் கருத்தரங்குகளிலும் பயிற்சி பெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருந்தது. ஆவணக் காப்பகங்களில் முதல்நிலை மூலங்களுடன் ஆய்வு செய்வதையே பயிற்சி வலியுறுத்தியது. மேற்கு ஐரோப்பாவும், ஐக்கிய அமெரிக்காவும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின. பிறபகுதிகள் தொடர்பான பிரதேச ஆய்வுகளின் தோற்றமும் வரலாற்று வரைவியல் நடைமுறைகளின் வளர்ச்சிக்கு உதவியது.

அணுகுமுறைகள்

எவ்வாறு ஒரு வரலாற்றாளன் வரலாற்று நிகழ்வுகளை அணுகுகின்றான் என்பது வரலாற்றுவரைவியலில் முக்கியமான முடிவுகளுள் ஒன்று. பெயர்கள், தேதிகள், இடங்கள் போன்றவை சார்ந்த தன்னளவிலான வரலாற்று உண்மைகள் குறிப்பாகப் பொருள் பொதிந்தன அல்ல என்பதை வரலாற்றாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான உண்மைகள் பிற வரலாற்றுச் சான்றுகளுடன் சேரும்போதே பயனுள்ளவை ஆகின்றன. இவ்வாறான சான்றுகளைச் சேகரிக்கும் வழிமுறையே குறிப்பான வரலாற்றுவரைவியல் அணுகுமுறை எனப்படுகின்றது.

புலமை ஆய்விதழ்கள்

கல்விசார் வரலாற்றாளர்கள் தமது எண்ணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களை வெளியிடுவதற்குமான களமாகச் செயற்படக்கூடிய வரலாற்று ஆய்விதழ்கள் 19 ஆம் நூற்றாண்டில் வெளிவரத் தொடங்கின. தொடக்ககால வரலாற்று ஆய்விதழ்கள் இயற்பிய அறிவியல்களுக்கான ஆய்விதழ்களைப் போலவே இருந்ததுடன், இது வரலாற்றுக்குக் கூடிய தொழில்சார் தோற்றம் தருவதற்கு ஒரு வழியாகவும் பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வரலாற்றுவரைவியல்&oldid=3227982" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை