ஆப்பிரிக்காவின் கொம்பு

ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இப்பகுதி வடகிழக்கு ஆப்பிரிக்கா என்றும் சோமாலியத் தீபகற்பம் எனவும் குறிப்பிடப்பிடப்படுகிறது. இத்தீபகற்பத்தின் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும்[1][2][3][4]. இதன் பரப்பு 2,000,000 சதுர கிமீ (772,200 சதுர மைல்) ஆகும். இப்பகுதியில் தோராயமாக 100 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.

ஆப்பிரிக்காவின் கொம்பு
Horn of Africa
ஆப்பிரிக்கக் கொம்பின் வரைபடம்
பரப்பளவு2,872,857 கிமீ
மக்கள்தொகை100,128,000
நாடுகள் Eritrea,  Djibouti,  Ethiopia,  Somalia
நேரவலயம்UTC+3
மொழிகள்அபரம், அமாரியம், அரபு, ஒரோமோ, சோமாலி, திகிரி, திகிரினியா
பெரிய நகரங்கள்
எதியோப்பியா அடிஸ் அபாபா
சீபூத்தீ சிபூட்டி நகரம்
எரித்திரியா அஸ்மாரா
சோமாலியா மொகடிசு

புவியியல்

இப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இங்கு வடமேற்கு எத்தியோப்பியாவில் உள்ள சிம்மியன் மலைத் தொடர் உயரமானதாகும். நிலநடுக் கோடுக்கு அண்மையில் இருந்த போதும் இப்பகுதியின் தாழ்நிலங்கள் வறட்சியால் தரிசாக உள்ளது. இதற்கு காரணம் பருவத்துக்குரிய மழைப்பொழிவை சாகில் மற்றும் சூடான் பகுதிகள் மேற்கில் இருந்து வீசும் பருவக்காற்று மூலம் பெறுகின்றன மேலும் அக்காற்று சிபூட்டி & சோமாலியாவை அடையும் போது ஈரப்பதத்தை இழந்துவிடுகிறது. இதன் காரணமாக பருவக்காற்று மூலம் இப்பகுதி குறைவான மழைப்பொழிவையே பெறுகிறது. மேற்கு மற்றும் நடு எத்தியோப்பியா, தென் பகுதி எரித்திரியா ஆகியவை அதிக மழைப்பொழிவையே பெறுகிறது. எத்தியோப்பாவில் உள்ள மலைகள் ஆண்டுக்கு 2000 மிமீ (80 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகின்றன, எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாரா ஆண்டுக்கு 570 மிமீ (23 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகிறது. எத்தியோப்பியாவிற்கு வெளியில் உள்ள பகுதிகளுக்கும் இங்கு பெய்யும் மழையே நீருக்கான ஆதாராமாகும். குறிப்பாக எகிப்து இங்கு பெய்யும் மழையையே தன் நீராதாரத்திற்கு நம்பியுள்ளது. மழைப்பொழிவை கணக்கில் கொண்டால் எகிப்தே உலகின் மிக வறண்ட நாடாகும். குளிர் காலத்தில் வடகிழக்கிலிருந்து வீசும் அயனக்காற்று வட சோமாலியாவிலுள்ள மலைப்பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு போதுமான ஈரப்பதத்தை தருவதில்லை. வட சோமாலிய மலைப்பகுதிகள் பின் இலையுதிர் காலத்தில் ஆண்டுக்கு 500 மிமீ (20 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகின்றன. கடற்கரை பகுதிகளில் காற்று கடலை நோக்கி செல்லுவதாலும் காற்று நிலம் மற்றும் கடலுக்கு இணையாக வீசுவதாலும் ஆண்டுக்கு குறைவான அளவில் 50 மிமீ (2 அங்குலம்) மழைப்பொழிவையே பெறுகின்றன.

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய காலம்

செங்கடல் குறுக்கிடுமிடம்

தற்கால மனிதனின் மூதாதயர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.[5] தற்போது 12 மைல் அகலமுடைய செங்கடலிலுள்ள பாப்-எல்-மான்டேப் (அரபியில் இதன் பொருள் துக்கத்தின் கதவு) நீரிணை 50,000 ஆண்டுகளுக்கு முன் குறுகலாகவும் ஆழம் குறைவானதாகவும் (70 மீட்டருக்கும் குறைவாக) இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த நீரிணைப்பகுதி எப்போதும் நிலத்துடன் நிலமாக ஒட்டி இருக்கவில்லை என்றும் இந்த பகுதியில் சில தீவுகள் இருந்திருக்கலாம் எனவும் அவைகளை அக்கால மனிதர் சிறு மிதவைகளின் மூலம் அடைந்திருக்கவேண்டும் எனவும் கருதுகின்றனர்.

இப்பகுதியில் இருந்த மக்களில் சிறு குழு செங்கடலை கடந்தது என்று கருதப்படுகிறது. அவர்கள் கடற்கரையோரம் பயணித்து உலகின் மற்ற பாகங்களுக்கு சென்றிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள வம்சாவளிகளில் ஓரே ஒரு வம்சாவளியின் பெண் வழித்தோன்றல்களின் மரபணு காப்லோகுரூப் எல்3 மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியே காணப்படுகிறது. பல குழுக்கள் குடி பெயர்ந்திருந்தால் ஆப்பிரிக்காவில் உள்ள வம்சாவளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வம்சாவளியின் வழித்தோன்றல்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இருந்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது. காப்லோகுரூப் எல்3 என்பதில் இருந்து பிரிந்தவையே காப்லோகுரூப் என், காப்லோகுரூப் எம் ஆகும்.

மற்றொரு கருத்தாக்கத்தின் படி இரண்டு குழுக்கள் குடி பெயர்ந்திருக்கவேண்டும் என்றும் ஒன்று செங்கடலை தாண்டி கடற்கரையோரமாக இத்தியாவிற்கு வந்திருக்க வேண்டும் அம்மக்கள் மரபணு காப்லோகுரூப் எம் கொண்டிருக்கலாம் எனவும் மற்றொரு குழு நைல் ஆற்றை ஒட்டி வடபகுதிக்கு வந்து சினாய் தீபகற்பத்தின் வழியாக ஆசியாவிற்கு வந்து பின் அவர்களில் சிலர் ஐரோப்பாவிற்கும் சிலர் கிழக்கு ஆசியாவிற்கும் சென்றிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது, இவர்களின் மரபணு காப்லோகுரூப் என் உடையதாக இருந்திருக்கவேண்டும் எனவும் கருதப்படுகிறது. இதனாலயே ஐரோப்பாவில் காப்லோகுரூப் என் பெரும்பான்மையாக இருப்பதற்கும், காப்லோகுரூப் எம் அரிதாக இருப்பதற்கும் இரு குழு குடி பெயர்தல் கருத்தாக்கம் காரணமாக இருக்கலாம் என கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

பழங்காலம்

பழங்கால வரைபடத்தின் படி ஆப்பிரிக்க கொம்பு மற்றும் அரேபிய தீபகற்பம் பகுதியிலுள்ள வணிக இடங்கள்

பழங்கால எகிப்தியர்கள் புண்ட் (பொருள் - கடவுளின் நிலம்) என கருதிய பகுதி வடக்கு சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா, செங்கடலை ஒட்டிய சூடான் ஆகியவற்றை சேர்ந்த பகுதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அக்சம் அரசானது தற்போதைய எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியையும் எரித்திரியாவின் சில பகுதிகளையும் கொண்டிருந்தது. முதலாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இவ்வரசு இருந்ததுடன் உரோம பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தில் பெரும் பங்காற்றியது. இவர்கள் நாணயத்தை தயாரித்து அதை வணிகத்திற்கு பயன்படுத்தினர். வெள்ளை நைல் மற்றும் நீல நைல் கூடும் இடத்தில் இருந்த குஷ் அரசை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்தனர். அரேபிய தீபகற்பத்தில் உள்ள அரசுகளின் உள்விவகாரங்களிலும் அடிக்கடி தலையிட்டனர். தற்போதய ஏமன் பகுதியில் இருந்த இம்யரைட் அரசை கைப்பற்றியதின் மூலம் அரேபிய தீபகற்பத்திலும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். மன்னன் அய்சானின் ஆட்சி காலத்தில் அக்சம் அரசானது கிருத்துவ சமயத்திற்கு மாறியது. இதுவே கிருத்துவ சமயத்திற்கு மாறிய முதல் பெரிய அரசாகும்.

இப்பகுதிக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்குமான வணிகத்தில் வடக்கு சோமாலியா சிறப்பு இடத்தை பிடித்திருந்தது. எகிப்தியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், மெசபடோமியர்கள் ஆகியோர் மதிப்பு மிக்க பொருளாக கருதும் சாம்பிராணி, குங்குமதூபம் மற்றும் மசாலா பொருட்களுக்களை வழங்குபவர்களாக சோமாலிய கடலோடிகளும் வணிகர்களும் திகழ்ந்தனர்.

வரலாற்றின் இடைக்காலம்

இடைக்காலத்தில் இப்பகுதியின் வணிகத்தை பல்வேறு அரசுகள் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தின. அடல் சூல்தானகம், அஜூரான் அரசு, வர்சன்கலி சூல்தான்கள், ஜாக்வே வம்சம், காப்ரூன் வம்சம் ஆகியவை அவற்றில் சில.

இப்பகுதியை ஆண்ட அடல் சூல்தானகம் பல இனக்குழுக்கள் கொண்ட முசுலிம் அரசாக திகழ்ந்தது. இது புகழின் உச்சியில் இருந்த போது எத்தியோப்பியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் சோமாலியாவின் பெரும் பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன, இப்பகுதியின் வரலாற்று காலத்து நகரங்களான மடுனா, அபாசா, பார்பரா, சேலேக், ஹரார் ஆகியவை செழிப்புடன் விளங்கின. தற்போதும் காணப்படும் எண்ணற்ற முற்றம் உள்ள வீடுகளும், மசூதிகளும், சிறு கோவில்களும், மதில்களால் சூழப்பட்ட இடங்களும் இதை உணர்த்துபவையாகும்.

13ம் நூற்றாண்டில் வர்சன்கலி பிரிவு மக்களால் உருவாக்கப்பட்ட வர்சன்கலி சூல்தான்கள் அரசு சோமாலியாவின் வடகிழக்கு மற்றும் சோமாலியாவின் தென்கிழக்கின் சில பகுதிகளை ஆண்டனர்.

அண்மையகாலம்

1869ல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதிலிருந்து இக்காலம் தொடங்குகிறது. சுயஸ் கால்வாய் வழியாக ஆசியப்பகுதிக்கு எளிதாக வர தொடங்கிய ஐரோப்பியர் ஆப்பிரிக்காவில் நிலம்பிடிப்பதில் தீவிரம் காட்டினர். இங்கு தங்கள் ஆட்சிக்குட்ட பகுதி இருந்தால் தங்கள் கப்பல்கள் தங்கி செல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்ததும் ஒரு காரணமாகும். இத்தாலி எரித்திரியாவை கைப்பற்றியது,1890ல் அதிகாரபூர்வமாக தன் ஆளுகைக்கு உட்பட்ட குடியேற்ற நாடாக அறிவித்தது. இத்தாலி இப்பகுதியில் மேலும் நிலங்களை கைப்பற்ற முனைந்த போது அம்முயற்சி எத்தியோப்பிய படைகளால் 1896 ல் தடுக்கப்பட்டது. எனினும் 1935ல் நடந்த இரண்டாம் எத்தியோப்பிய போரில் இத்தாலி வென்று 1936ல் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலியின் சோமாலி பகுதிகள் இணைந்த கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலி மாகாணம் உருவாக்கப்பட்டது. 1941ல் எரித்திரியாவின் மக்கள் தொகையான 760,000 ல் 70,000 பேர் இத்தாலியர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப்போரில் இத்தாலியின் படைகள் தோற்றதன் காரணமாக இப்பகுதி நேச நாட்டு படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இத்தாலியர்கள் அனைவரும் பிரித்தானியரால் வெளியேற்றப்பட்டனர் [6]. 1952 வரை ஐநாவின் ஆணைப்படி பிரிந்தானிய அரசு எரித்திரியாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

எரித்திரியா செங்கடல் கடற்கரையில் அமைந்திருக்கும் இடத்தின் காரணமாகவும் அங்குள்ள தாதுப்பொருட்களின் வளம் காரணமாகவும் எத்தியோப்பியா தன் 14வது மாகாணமாக பிரித்தானிய அரசு எரித்திரியாவில் தன் கட்டுப்பாட்டை விலக்கியதும் இணைத்துக்கொண்டது. 1959ல் எரித்திரியாவில் எல்லா பள்ளிகளும் எத்தியோப்பியாவின் மொழியான அம்ஹாரிய மொழியை கட்டாயமாக மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என ஆணையிட்டது. எரித்திரியாவுக்கான (எரித்திரியா மக்களுக்கான) சிறப்புகளை அளிக்க எத்தியோப்பியா அக்கரை கொள்ளாததால் 1960ல் எரித்திரியா விடுதலைப்போராட்டம் தொடங்கியது. 30 ஆண்டுகள் நீடித்த இந்த போராட்டம் 1991ல் முடிவுக்கு வந்தது. ஐநா வின் மேற்பார்வையில் நடந்த பொது வாக்கெடுப்பில் எரித்திய மக்கள் மிகப்பெரும்பான்மையோர் தனி நாடு வேண்டும் என வாக்களித்ததால் எரித்திரியா தன் விடுதலையை அறிவித்தது, 1993ல் உலக நாடுகளும் எரித்திரியாவின் விடுதலையை ஏற்றுக்கொண்டன.[7] 1998ல் எத்தியோப்பாவுடன் ஏற்பட்ட எல்லைத்தகராறு காரணமாக எரித்திரியா-எத்தியோப்பியா போர் மூண்டது.[8]

சோமாலி மற்றும் அஃபார் சுல்தான்களால் டட்ஜூரா வளைகுடாவின் வடபகுதியில் உள்ள நிலமானது 1862 முதல் 1894 வரை ஆளப்பட்டு வந்ததது. இது தற்போதைய சிபூட்டி ஆகும். உள்ளூர் தலைவர்களுடன் பிரெஞ்சு அரசு பல ஒப்பந்தங்களை 1883 முதல் 1887 வரை ஏற்படுத்தி அப்பகுதியில் தங்களுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்திக்கொண்டது [9][10][11]. 2894ல் பிரெஞ்சு நிலையான நிர்வாகத்தை சிபூட்டி நகரத்தில் ஏற்படுத்தியது, அப்பகுதி பிரெஞ்சு சோமாலிலாந்து என அழைக்கப்பட்டது.

சிபூட்டிக்கு அருகிலுள்ள சோமாலியாவுக்கு பிரித்தானியாவிடம் இருந்து 1960 ல் விடுதலை கிடைப்பதை அடுத்து சிபூட்டி புதிதாக உருவாகும் சோமாலிய குடியரசுடன் இணைவதா அல்லது பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருப்பதா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு பிரெஞ்சு அரசுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவு அதிகம் இருந்தது. இத்தகைய முடிவு கிடைத்ததற்கு காரணம் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்த அஃபார் இனகுழுக்களும் அங்கு குடியிருந்த ஐரோப்பிய நாட்டவர்களும் ஆவர் [12]. வாக்கெடுப்பின் போது பெருமளவில் முறைகேடுகளும் நடந்தன மேலும் பொது வாக்கெடுப்புக்கு முன்பு பிரெஞ்சு அரசு ஆயிரக்கணக்கான சோமாலியர்களை வெளியேற்றியது. சோமாலியாவுடன் இணையவேண்டும் என்று வாக்களித்தவர்களில் பெரும்பான்மையோர் சோமாலிகள் ஆவர். சிபூட்டி 1977ம் ஆண்டு பிரெஞ்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1958ல் நடத்த வாக்கெடுப்பில் சோமாலியாவுடன் இணையவேண்டும் என்று பரப்புரை மேற்கொண்ட, சிபூட்டியின் விடுதலைக்கு போராடிய ஹசன் குலீட் அப்டிடூன் சிபூட்டியின் முதல் அதிபராக (1977–1999) தேர்ந்தெடுக்கப்பட்டார் [12].

முகமது அப்துல்லா அசன் தலைமையிலான டெர்விசு அரசு பிரித்தானிய பேரரசின் படைகளை 4 முறை தோற்கடித்து அவற்றை கடலோரங்களுக்கு பின்வாங்கும் படி செய்தார்[13]. இவரின் இந்த வெற்றிகளால் ஒட்டோமான் பேரரசும் செர்மானிய பேரரசும் டெர்விசு அரசை தங்கள் கூட்டாளியாக ஏற்றன. துருக்கியர்கள் அசனுக்கு சோமாலிய நாட்டின் அமீர் என்ற பட்டத்தை அளித்தார்கள் [14]. 25 ஆண்டுகளாக டெர்விசு அரசை வெற்றிகொள்ளமுடியாமல் இருந்த பிரித்தானியர்கள் வான்வழி தாக்குதல் நடத்தி 1920ல் வெற்றி பெற்றார்கள் [15] . டெர்விசு அரசின் பகுதிகள் பிரித்தானிய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது.

அரபு உலகத்துடன் பலகாலமாக இருந்த தொடர்பின் காரணமாக சோமாலியா அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக 1974ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது [16]. அதே ஆண்டே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னிருந்த அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தியது [17] . 1991ல் ஏற்பட்ட உள் நாட்டு போரின் காரணமாக புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரிந்தது. சோமாலிலாந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது ஆனால் அதை உலக நாடுகள் தனி நாடாக ஏற்கமறுத்து தன்னாட்சி பெற்ற பகுதியாக ஏற்றுக்கொண்டன, இவை இரண்டும் சோமாலியாவின் வடபகுதியில் உள்ளன [18]. ,

எத்தியோப்பிய பேரரசர் இரண்டாம் மெனெலிக் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கில் படையெடுப்பை மேற்கொண்டு பல இடங்களை பிடித்தார், இதற்கு உதவியாக ஒரோமோ இன படைக்குழுவை சார்ந்த ராசு கோபனா இருந்தார் [19][20]. 16ம் நூற்றாண்டில் அடல் சூல்தானின் படைத்தளபதி அகமது இபின் இப்ராகிம் அல்-காசி இடம் இழந்த பகுதிகளையும், பல புதிய பகுதிகளையும் கைப்பற்றினார். இரண்டாம் மெனெலிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளே தற்போதைய எத்தியோப்பாவாகும் [21] . இவர் இத்தாலியுடன் விக்காலேயில் மே, 1889ல் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி இத்தாலி சிறிய நிலம்பகுதியான் டிக்ரே (தற்போதைய எரித்திரியாவின் ஒரு பகுதி) கட்டுக்குள் வைத்திருக்கும் வரை இத்தாலி எத்தியோப்பியாவின் இறையாண்மையை மதித்து நடக்கும் [22]. மேலும் இத்தாலி மெனெலிக்கிற்கு படைக்கருவிகளை கொடுத்து உதவுவதோடு அவர் பேரரசராக நீடிப்பதற்கும் உதவும் [23] . இத்தாலி நிலமற்ற இத்தாலியர்களை எரித்திரியாவில் குடியமர்த்தியதால் இத்தாலியர்களுக்கும் எரித்திரிய மக்களுக்கும் புகைச்சல் அதிகமாகியது [23]. இத்தாலி எத்தியோப்பியாவின் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மார்ச் 1986ல் முதல் இத்தாலி-எத்தியோப்பிய போர் மூண்டது, இதில் இத்தாலி படைகள் எத்தியோப்பிய படைகளால் தோற்கடிக்கப்பட்டது [24].

20ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் ஹைலி செலச்சி (Haile Selassie) எத்தியோப்பியாவின் பேரரசராக பதவியேற்றார். 1935 ல் நடந்த இரண்டாம் இத்தாலி-எத்தியோப்பிய போரில் இத்தாலியின் படைகள் வென்று எத்தியோப்பியாவை இத்தாலியின் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியுடன் இணைத்துக்கொண்டது [25]. இதையடுத்து ஹைலி உலக நாடுகள் சங்கத்திடம் முறையிட்டார். அங்கு அவரின் பேச்சு அவரை உலகளவில் பெயர் பெற்றவராக உருவாக்கியது. டைம் இதழ் அவரை 1935ம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்தது [26].இரண்டாம் உலக்கப்போரில் இத்தாலி தோற்றதால் எத்தியோப்பியா ஹைலி செலச்சியின் முழு கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. 1974ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இராணுவத்திலிருந்த மார்க்சிய-லெனிய புரட்சி படைகள் எத்தியோப்பியாவை கைப்பற்றின. 1974லிருந்து 1991 இவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இக்காலத்தில் ஹைலி மரியம் என்பர் எத்தியோப்பியாவிற்கு தலைவராக இருந்தார். 1991ல் இப்படைகள் தோற்கடிக்கப்பட்டு, 87 உறுப்பினர்கள் கொண்ட சபை சனநாயகவழியில் தேர்தல் நடக்கும் வரை இடைக்கால ஆட்சிபுரிந்தது, 1995 முதல் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆட்சி செலுத்துகிறார்.

மொழி

புவியியல் வகையில் மட்டுமல்லாமல் இனம் மற்றும் மொழிகள் அடிப்படையிலும் இப்பகுதி இணைந்துள்ளது. இப்பகுதியில் பேசப்படும் பல மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை. செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்த அம்ஹாரிய, திகுரிஞா போன்ற மொழிகள் எத்தியோப்பியா, எரித்திரியாவில் அதிகம் பேசப்படுகின்றன. குஷிட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரோமோ மொழி இப்பகுதியில் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை பேசுபவர்கள் எத்தியோப்பில் உள்ளனர், மற்ற நாடுகளில் இவற்றை பேசுபவர்கள் குறைவு. சோமாலி மொழியை பேசுபவர்கள் சோமாலியாவிலும் [27] சிபூட்டியிலும் பெரும்பான்மையாக உள்ளனர். எத்தியோப்பியாவின் சோமாலி மாகாணத்தில் 95 விழுக்காடு மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

பண்பாடு

கீச் (Ge'ez)மொழியில் (எத்தியோப்பிய) உள்ள விவிலியத்தின் ஆரம்ம பகுதி

இப்பகுதியில் பல பழங்கால நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கிமு 4000-1000 வாக்கிலேயே எத்தியோப்பியர்கள் டெவ் என்னும் புல்லை பயன்படுத்துவதை பற்றி அறிந்துள்ளார்கள்[28]. இது என்சிரா என்னும் ஒரு வகை ரொட்டி தயாரிக்கப் பயன்படுவதாகும். காப்பி தோன்றிய இடம் எத்தியோப்பியாவாகும், இங்கிருந்தே இது உலகெங்கும் பரவியது [29] . எத்தியோப்பிய மரபுவழி திருச்சபையின் சுவர் ஓவியங்களில் எத்தியோப்பிய கலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும், இவற்றை ஏழாம் நூற்றாண்டுகளிலேயே காணலாம். எத்தியோப்பியாவில் பழங்கால திருச்சபைகளை காணலாம். சோமாலிய கட்டகலையின் பாதிப்பை அங்கு 1269ல் கட்டப்பட்ட மசூதியில் காணலாம். பல எழுத்து முறைகள் இங்கு தோன்றியுள்ளன. கீச் (Ge'ez) (எத்தோப்பிய என்றும் இது அழைக்கப்படுகிறது) இவற்றில் குறிப்பிடத்தக்கது. கீச் (Ge'ez) அபுகிடா முறையில் அமைந்த எழுத்து முறையாகும்.

பொருளாதாரம்

இப்பகுதியிலேயே உலகில் அதிகளவான ஒட்டகங்கள் உள்ளன

இப்பகுதியின் பொருளாதாரம் ஏற்றுமதியையே பெரிதும் சார்ந்துள்ளது. எத்தியோப்பியாவில் விளையும் காப்பிகளில் 80 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோமாலியாவின் வாழை மற்றும் கால்நடைகளில் 50 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இப்பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையான வணிகத்தில் 95 விழுக்காடு அதிகாரபூர்வமற்றதாகவும், ஆவணங்கள் அற்றதாகவும் உள்ளது. நாட்டுப்புறங்களில் வசிக்கும் மக்கள் கால்நடைகளை வணிகம் செய்கின்றனர் [30] எத்தியோப்பில் இருந்து ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகள் சோமாலியா, சிபூட்டி மற்றும் பல கிழக்காப்பிரிக்க நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இவ்வணிகம் காரணமாக இப்பகுதியில் உணவுப்பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது மேலும் இது உணவுப்பாதுகாப்புக்கும் வழிவகுக்கிறது, எல்லை சிக்கல்களினால் ஏற்படும் இறுக்க நிலையை குறைவத்து நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்பட உதவுகிறது. அதிகாரபூர்வமற்றதாகவும், ஆவணங்கள் அற்றதாகவும் உள்ள இவ்வணிகத்தால் நோய்கள் நாடுகளின் எல்லைகளை கடந்து சுலபமாக பரவுவதற்கும் வழியேற்படுவது பெரும் குறையாகும்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை