இறப்பு

உயிரியற் செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவது

இறப்பு () (Death) என்பது உயிரினங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இறப்பு என்பது அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும். முதுமையடைதல், வேட்டையாடப்படுதல், ஊட்டக்குறை, நோய், தற்கொலை, கொலை, போர், பட்டினி, நீர்ப்போக்கு, பேரதிர்ச்சிகள் மற்றும் விபத்துக்கள் உள்ளிட்டவை பொதுவாக இறப்பு என்ற நிகழ்வுக்கு காரணங்களாகின்றன[1].

பரவலாக மரணத்தை குறிக்க சின்னமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மனித மண்டை ஓடு

இறப்புக்குப் பின்னர் உயிரினங்களின் உடல் சிதைவடையத் தொடங்குகிறது.இறப்பு - குறிப்பாக மனிதர்களின் இறப்பு - பொதுவாக சோகமான அல்லது விரும்பத்தகாத நிகழ்வாகக் கருதப்படுகிறது, இறந்திருப்பவருடனான பாசம் மற்றும் இறந்தவருடன் சமூக மற்றும் குடும்ப உறவுகளை தொடர முடியாமை போன்ற இழப்புகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இதைத்தவிர மரணபயம் (Death Anxiety), மரணம் தொடர்பான பயம் (Necrophobia), பதகளிப்பு, துயரம், துக்கம் (Grief), மனவலி உணர்வு (Emotional Pain), மனத்தளர்ச்சி, மன அழுத்தம், பரிவு, இரக்கம் (Compassion), தனிமை (Solitude) போன்ற இயல்பற்ற நிகழ்வுகளும் இறந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்படுகின்றன.

பல மதங்களும், அவை சார்ந்த மெய்யியலும்; உயிரும், உடலும் வெவ்வேறானவை என்றும் வாழும் உயிரினத்தின் உடலுக்குள் இருக்கும் உயிர் உடலைவிட்டு நீங்கும் போது இறப்பு ஏற்படுவதாகவும் கூறுகின்றன. இறப்பின் போது உடலைவிட்டு நீங்கும் உயிர்கள் மீண்டும் இன்னொரு உடலுடன் பிறப்பதாகச் சில மதங்கள் நம்புகின்றன. இது மறுபிறப்பு எனப்படுகின்றது.

சொற்பிறப்பியல்

இறப்பு என்ற சொல் பழைய ஆங்கில மொழியில் (dēaþ) இருந்து வருகிறது. எளிய செருமானிய மொழியில், சொற்பிறப்பியல் பகுப்பாய்வு மூலம் புனரமைக்கப்பட்ட (dauþuz) . என்ற செல்லில் இருந்தும் வருகிறது. எளிய இண்டோ-ஐரோப்பிய வேர்ச் சொல்லில் (*dheu-) இருந்து இறப்பு என்ற சொல் பிறந்திருப்பதாக கருதப்படுகிறது. இதன் பொருள் "செயல்பாடு, நடவடிக்கை செயல், இறக்கும் நிலை" என்பதாகும்[2].

தொடர்புடைய சொற்கள்

இறப்பும் அதற்கான அறிகுறிகளும் சமூகக் கலந்துரையாடலில் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தி வெளிப்படுத்தப்படுகின்றன, இச்சொற்கள் யாவும் பல விஞ்ஞான, சட்டபூர்வ மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சொற்களாக உருவாக்கியுள்ளன. ஒரு நபர் இறந்துவிட்டால் அந்நிகழ்வை மரணமடைந்தார், காலம் கடந்துவிட்டார், போய்விட்டார், சிவலோக பதவியடைந்தார், செத்துட்டார், இயற்கை எய்தினார், காலாவதியாகிவிட்டார் என்று பலவறாக கூறுகிறார்கள். இவ்வெளிப்பாடுகள் யாவும் சமூக ரீதியாக, சமய ரீதியான, சொற்பிரயோகங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் உடல் பிணம் அல்லது சவம் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறது. இறந்த உடலை அப்புறப்படுத்துவதற்காக புதைத்தல், எரித்தல், இறுதிச்சடங்கு,நல்லடக்கம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மூப்படைதல்

மூப்படைதல் என்பது உயிரின் எல்லாவிதமான அம்சங்களையும் தக்கவைத்துக் கொள்ள முடிகின்ற ஒரு நிலையைக் குறிக்கிறது. ஆனால் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிருடன் தொடர்புடைய அம்சங்கள் யாவும் செயற்பட இயலாமல் இறுதியில் இறக்கின்றன.

விலங்கு மற்றும் தாவர செல்கள் பொதுவாக இயற்கையில் உயிருடன் இருக்கின்ற காலம் முழுவதும் இனப்பெருக்கம் செய்து செயல்படுகின்றன, ஆனால் வயதான பிறகு இச்செயல்முறை, செல்களின் செயல்பாட்டுச் சரிவால் வழக்கமான செயல்பாடுகள் படிப்படியாகக் குறைந்து இறுதியாக ஒருநாளில் நின்றுவிடுகிறது. உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்தாலும் படிப்படியாக செல்களின் சீரழிவுதான் வயது மூப்பின் காரணத்தால் ஏற்படும் இறப்புக்கு காரணமாகிறது. உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் தினசரி நடக்கும் அனைத்து இறப்புக்களில் பத்தில் ஒன்பது மூப்படைதலுடன் தொடர்புடையது ஆகும். அதே நேரத்தில் உலகெங்கிலும் நிகழும் 150,000 இறப்புகளில் மூன்றில் இரண்டு பாகம் வயது மூப்பினால் ஏற்படும் இறப்பாகவே உள்ளன,

ஒரு யுரேசியப் பறவையின் இறப்பு

வெளிப்புற ஆபத்துக்களைத் தாண்டி வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளும் கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் வயதான பின்னர் ஒருநாள் இறந்துவிடுகின்றன, ஐதரா, பிளனேரியன், சொரிமீன் [3] போன்ற சில உயிரினங்கள் குறைந்த அளவிலான வயதுமூப்பு மரணத்தை அனுபவிக்கின்றன. இயல்புக்கு மாறான மரணம், தற்கொலை அல்லது கொலையால் நிகழ்கிறது. எல்லா வகையான இறப்புகளையும் கணக்கில் கொண்டால் உலகெங்கிலும் ஒரு நாளைக்கு 150000 இறப்புகள் தினசரி நிகழ்கின்றன. இவற்றில் மூன்றில் இரண்டு பாகம் வயது மூப்படைதலால் நிகழ்கிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகள் எனக் கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, செரும்னி போன்ற நாடுகளில் இத்தகைய வயது முதிர்வு மரணம் 90% அளவில் உள்ளது [4].

ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலம் நீட்டிக்கப்படுவதால் மூப்படைதல் என்பதும் இறப்பு என்பதும் தாமதப்படுத்தப்படுகிறது. பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்ந்தார் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் சராசரி ஆயுட்காலம் கணக்கிடப்பட்டுகிறது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற பாலின வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்புற்ற நாடுகளில் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருப்பதை இயல்பாகவே நாம் அறியமுடியும்.

உடற்கூறியல் மரணம் என்பது ஒரு திடீர் நிகழ்வு என்பதைக் கடந்து ஒரு நிகழ்வு முறை என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. முற்காலத்தில் மரணத்தின் அறிகுறியாகக் கருதப்பட்ட நிலைகள் இப்பொழுது மீண்டும் தலைகீழாக மாறி வருகின்றன. வாழ்க்கை மற்றும் இறப்பு இரண்டிற்குமிடையிலான பிளவுக்கு உரிய காரணங்கள் முன்னறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகளற்றோ நிகழ்கின்றன. பொதுவாக மருத்துவமனை இறப்புகள் சட்டப்பூர்வமான இறப்புகள் என்பதை உறுதிப்படுத்த போதுமான வழிவகைகள் வரையறுக்கப்படவில்லை. இதயமும் நுரையீரலும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி மூளைச் சாவு அடைந்துவிட்டதாக உறுதிபடுத்தப்படுகிறது. விஞ்ஞானத்தின் அறிவும் உயர் ஆற்றல் மருந்துகளும் மரணம் என்பதற்கான துல்லியமான வரையறைகளை கொடுக்க முடியவில்லை[5].

இறப்பை அறுதியிடல்

ஓர் உயிரினம் இறந்து விட்டது என்பதை அறிய பின்வரும் செயல்கள் உதவுகின்றன.

  1. . சுவாசம் நின்றுவிடுதல்
  2. . நாடித்துடிப்பு இல்லாமல் இருத்தல்
  3. . உடல் தோல் நிறமிழத்தல்
  4. . உடலின் வெப்பம் குறைந்து சில்லிடுதல்
  5. . உடல் விரைத்துப் போதல்
  6. . இரத்தம் உறைந்து விடுதல்
  7. . உடல் சிதைவு அடைதல்

இறப்பிற்கான வரையறைகள்

மரணத்தை மனிதன் புரிந்து கொள்வது ஒரு முக்கியமான தத்துவ அம்சமாகும். இதைப் புரிந்து கொள்ள பல அறிவியல் அணுகுமுறைகள் உள்ளன. உதாரணமாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் மூளைச்சாவு என்ற நிகழ்வு மூளை எந்த நேரத்தில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்கிறதோ அந்த நேரத்தை. இறப்பு என வரையறுக்கிறது[6][7][8][9]

வாழ்க்கையிடமிருந்து மரணத்தை வேறுபடுத்திக் காட்ட முயல்வது மரணத்தை வரையறுப்பதில் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

இறப்பு வகைகள்

மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போவதே மரணம் என்று கூறப்படும். மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள். அது மருத்துவச் சாவு (Clinical death) என்றும், மூளைச் சாவு (Cerebral death) என்றும் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவச் சாவு

மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்போது இதயத் துடிப்பு சிறிதும் இல்லாதிருக்கும். எலெக்ட்ரோ கார்டியோ கிராமில் (electro cardiogram) பதிவு செய்ய இதயத்தின் இயக்கம் தொடர்பான சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை.

மூளைச் சாவு

மனித மரணத்தை ஆய்வு செய்த உடற்கூறு வல்லுனர்கள், இதயம் நின்று விட்டாலும் மூளை இதயத்தோடு நின்று விடுவதில்லை.[10] இதயம் நின்று போய்விட்டாலும், அரை மணியிலிருந்து 2 மணி நேரம் வரை இந்த மூளை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடைக்காலத்தில் மூளையின் இயக்கத்தை பதிவு செய்யும் எலெக்ட்ரோ என்சிபலோகிராம் (electro encephalogram ) மூளை இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் காட்டியிருக்கிறது.[11] இக் கால வரம்பிற்குப் பிறகு மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுவதால், மூளையிலிருந்து சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை. இதையே மூளைச் சாவு என்கிறோம்.[12][13] மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும்.[14] ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.

உடல் உறுப்புகளை கொடையளித்தல்

மருத்துவச் சாவிற்கும், மூளைச் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு நோயாளி இரு வேறு சாவு நிலைகளுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறலாம். இக் காலத்தில் இதயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து அதன் இயக்க நிலையைத் திரும்பப் பெறமுடியும் வாய்ப்பிருப்பதால் மருத்துவச் சாவை அடைந்தவர் உயிரை மீட்டுப் பெற முடியும். அதற்கான வாய்ப்பில்லாத போது, உடலுறுப்புக்கள் அனைத்தும் செயலற்ற நிலையைப் படிப்படியாக அடையும். அதனால், இக்கால கட்டத்தில் சிறு நீரகம், கண்கள் போன்ற உடலுறுப்புக்களைத் தானமாகப் பெற்று மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்துவர். மூளைச் சாவிற்குப் பிறகு அகற்றப்படும் உடலுறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுவதில்லை.

இதய ஓய்வு

இதயம் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலை உறுப்புகளுக்கு வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. அது நின்று விட்டால், ஆற்றல் பகிர்மானம் உடனடியாக நின்று விடுவதில்லை.[15] இதையே lagging என்று அறிவியலில் குறிப்பிடுகின்றனர். இதயம் ஓய்ந்த பிறகே, பிற உடலுறுப்புக்கள் படிப்படியாக அடுக்குச்சரிவில் (exponential) ஓய்வடைகின்றன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இறப்பு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இறப்பு&oldid=3788149" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை