ஐக்கிய அமெரிக்க வரலாறு

ஐக்கிய அமெரிக்க வரலாறு என்பது பொதுவாக கொலம்பசின் 1492 அமெரிக்கப் பயணத்துடனோ அல்லது தொல்குடி மக்களின் முன்வரலாற்றுடனோ கற்பிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் பிந்தைய முறைமை பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் வழமையாகி வருகிறது.[1]

ஆட்புல விரிவாக்கம்; வெண்மையில் லூசியானா வாங்கல்.

தற்போது ஐக்கிய அமெரிக்கா என அறியப்படும் நிலப்பகுதிகளில் ஐரோப்பிய குடியேற்றவாதிகள் வருவதற்கு முன்னமேயே உள்நாட்டுத் தொல்குடியினர் வாழ்ந்து வந்தனர். 1600க்குப் பிறகு ஐரோப்பிய குடியேற்றங்கள் உருவாகத் தொடங்கின. 1770களில் பதின்மூன்று பிரித்தானியக் குடியேற்றங்களில் இரண்டரை மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் வளமாகவும் தங்களுக்கான தனிப்பட்ட அரசியல் மற்றும் சட்ட முறைமைகளைக் கொண்டிருந்தனர். பிரித்தானிய நாடாளுமன்றம் இந்தக் குடியேற்றங்கள் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டி புதிய வரிகளை விதித்தது. தங்களுக்கு சார்பாண்மை இல்லாத பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இச்செய்கை சட்டவிரோதமானது என இதனை அமெரிக்கர்கள் எதிர்த்தனர். சிறுசிறு கிளர்ச்சிகள் பெரிதாகி ஏப்ரல் 1775இல் முழுமையானப் போராக உருவானது. சூலை 4, 1776இல் இக்குடியேற்றங்கள் தங்களை பெரிய பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற தனிநாடாக அறிவித்தன; தாமஸ் ஜெஃவ்வர்சன் இயற்றிய அரசியலைப்புச் சட்டத்தின்படி அமெரிக்க ஐக்கிய இராச்சியம் உருவானது.

பெரிதளவில் பிரான்சின் இராணுவ, நிதி உதவியுடன் தளபதி சியார்ச் வாசிங்டன் தலைமையிலும் நாட்டுப்பற்றாளர்கள் புரட்சிப் போரில் வென்று 1783இல் அமைதி நிலவியது. இந்தப் போரின்போதும் இதற்குப் பிறகும் 13 மாநிலங்களும் ஓர் வலிவற்ற கூட்டரசின் கீழ் ஒன்றுபட்டிருந்தன. இந்த கூட்டாட்சி அமைப்பு சரிவராத நிலையில் 1789இல் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது; இதுவே ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. பின்னதாக உரிமைகள் சட்டத்திலும் இடம் பெற்றது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக வாசிங்டனும் அலெக்சாண்டர் ஆமில்டன் அவரது முதன்மை நிதி ஆலோசகராகவும் ஓர் வலுவான தேசிய அரசு உருவானது. இரு தேசியக் கட்சிகள் ஆமில்டன் கருதுகோள்களை ஆதரித்தும் எதிர்த்தும் உருவாயின. தாமஸ் ஜெஃவ்வர்சன் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் பிரான்சிடமிருந்து லூசியானாவை வாங்கி அமெரிக்க ஆட்சிப் பகுதியை இருமடங்காக விரிவாக்கினார். பிரித்தானியாவுடன் இரண்டாவதும் கடைசியுமான போர் 1812இல் நிகழ்ந்தது. இதன் விளைவாக மேற்கத்திய குடியேற்றங்கள் மீது உள்நாட்டுத் தொல்குடியினர் (அமெரிக்க இந்தியர்) தொடுத்த தாக்குதல்களுக்கு ஐரோப்பிய ஆதரவு முடிவுற்றது.

ஜெஃவ்வர்சன் மற்றும் ஜாக்சனின் அரசியல் கொள்கைகளால் நாடு விரிவாக்கப்பட்டது; லூசியானா வாங்கல் மூலமாகவும் பிறவழிகளாலும் கலிபோர்னியா, ஓரேகான் வரையும் பரவியது. சிறு விவசாயிகள் மற்றும் அடிமை முதலாளிகளின் அரசாக விளங்கிய இந்த அரசுகள் அவர்களுக்கு விலைமலிவான நிலத்தைப் பெற முயன்றன. ஐரோப்பிய பண்பாடும் வன்முறையும் வெறுக்கப்பட்டன. இந்த விரிவாக்கத்தை விக் கட்சி எதிர்த்தது. அவர்கள் நிலப்பரப்பு விரிவாக்கலை விட பொருளியலை வலுப்படுத்தி சமூகத்தை நவீனமயமாக்க விரும்பினர். 1804 வாக்கில் மேசன்-டிக்சன் கோட்டிற்கு வடக்கே இருந்த அனைத்து மாநிலங்களிலும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது; ஆனால் தெற்கத்திய மாநிலங்களில் அடிமைத்தனம் தழைத்தோங்கியது.

1820க்குப் பிறகு, அடிமைத்தனம் குறித்த பிரச்சினை பல்வேறு உடன்பாடுகளால் தள்ளிப் போடப்பட்டு வந்தது. 1850களின் மத்தியில் அமெரிக்கக் குடியரசுக் கட்சியில் புதிய தலைவர்கள் உருவாகி வடக்கில் செல்வாக்குப் பெறலாயினர். இவர்கள் அடிமைத்தன விரிவாக்கலை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதிமொழி கொடுத்தனர். 1860ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் இத்தகையக் குடியரசுக் கட்சித் தலைவர் ஆபிரகாம் லிங்கன் வெற்றி பெற்றார்.இது உடனடியாக அடிமைத்தனத்தை பேணிய 11 மாநிலங்களும் பிரிந்து 1861இல் கூட்டமைப்பு உருவாக்க காரணமாக அமைந்தது. இதனையடுத்த அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-1865) அமெரிக்க வரலாற்றில் ஓர் முதன்மை அங்கமாக விளங்குகிறது. குருதிதோய்ந்த நான்காண்டுப் போருக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் லிங்கனின் தலைமையிலும் தளபதி யுலிசீஸ் கிராண்ட் கீழும் ஒன்றியம் எனப்பட்ட வடக்கு மாநிலங்கள் ராபர்ட் ஈ. லீ தலைமையேற்ற தெற்கத்திய மாநிலங்களின் படையை தோற்கடித்தது. அடிமைத்தனம் அழிக்கப்பட்டது. அமெரிக்க மறுசீரமைப்பு ஆண்டுகளில் (1863–77), ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனம் அழிக்கப்பட்டதுடன் விடுதலை பெற்றவர்களுக்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டது. தேசிய அரசு வலுவடைந்தது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தத்தின்படி தனிநபர் உரிமைகளைக் காத்திடும் கடமை ஐயமற தேசிய அரசுக்கு கிடைத்தது. 1890களிலிருந்து 1960கள் வரை ஜிம் குரோ அமைப்பின்படி கறுப்பினத்தவர் தனிமைப்படுத்தப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தெற்கு மாநிலங்கள் வறுமையில் ஆழ்ந்திருக்க வடக்கும் மேற்கும் தழைத்தோங்கின. 1945 வரை தெற்கின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் பாதியிலும் குறைவாக இருந்தது.[2]இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா உலகின் முதன்மையான தொழில்மயமான நாடாக விளங்கியது. வடக்கில் புதியதாக தோன்றிய தொழில்முனைவர்களாலும் ஐரோப்பாவிலிருந்து வந்தடைந்த பல்லாயிரக்கணக்கான வந்தேறிகளாலும் இது சாத்தியப்பட்டது. தேசிய இருப்புப்பாதை பிணையம் கட்டமைக்கப்பட்டதன் விளைவாக வடகிழக்கிலும் மத்திய மேற்கிலும் பெருமளவிலான சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் உருவாகின. ஊழல், திறனின்மை மற்றும் வழமையான அரசியலுக்கு எதிரான வெறுப்பு 1890களிலிருந்து 1920கள் வரை முற்போக்கு இயக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்தது. இந்தக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை, மதுவிலக்கு ஆகியன செயலாக்கத்திற்கு வந்தன. துவக்கத்தில் முதலாம் உலகப் போரில் நடுநிலையாக இருந்தாலும் 1917இல் அமெரிக்கா செருமனி மீது போர் தொடுத்தது. அடுத்த ஆண்டு நேசநாட்டு வெற்றிக்கு நிதி வழங்கியது. மிகவும் வளமான 1920களுக்குப் பின்னதாக நிகழ்ந்த 1929 வால் வீதி வீழ்ச்சி பத்தாண்டுகளுக்கு நீடித்த பெரும் தொய்விற்கு வித்திட்டது. குடியரசுத் தலைவரான மக்களாட்சிக் கட்சியின் பிராங்க்ளின் ரூசவெல்ட் தற்கால அமெரிக்க தாராளமயத்தை வரையறுக்கும் பல நிவாரண, மீட்பு மற்றும் சீராக்கத் திட்டங்களை மேற்கொண்டார். திசம்பர் 7, 1941இல் சப்பானியர்கள் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கிய பின்னர் ஐக்கிய அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேசநாடுகளுடன் இணைந்து போரிட்டது; சப்பானியப் பேரரசின் மீது புதியதாக கண்டுபிடித்திருந்த அணு குண்டுகளை வெடித்து ஐரோப்பாவில் நாட்சி ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு உதவியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் எதிரெதிரான இரு அதிகார மையங்களாக விளங்கின. இருவருக்கும் இடையே நடந்த பனிப்போரினால், ஆயுதப் போட்டியும் விண்வெளிப் போட்டியும் நடந்தன. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பொதுவுடமைப் பரவலை தடுக்கும் முகமாகவே இருந்தது. கொரியாவிலும் வியத்நாமிலும் இதற்காகவே போரில் ஈடுபட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் பனிப்போர் முடிவடைந்து ஐக்கிய அமெரிக்க தனிப்பெரும் வல்லரசானது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பன்னாட்டு சண்டைகள் மத்திய கிழக்கு நாடுகளை ஒட்டியே எழுந்தன. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் மற்றும் எதிர்வினையாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முக்கிய வரலாற்று நிகழ்வுகளாக அமைந்தன.

மேற்சான்றுகள்

பாட நூல்கள்

மேற்தகவல்களைப் பெற

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை