கட்டச்சங்கிலி

கட்டச்சங்கிலி (blockchain, பிளாக்செயின், புளொக்செயின்[1]) அல்லது தொடரேடு என்பது பல ஏடுகளால் அல்லது கட்டங்களால் ஆனது. தகவல்கள் ஒவ்வொரு ஏட்டிலும் (கட்டத்திலும்) எழுதப்பட்டு, அவை சங்கிலிபோல இணைக்கப் பட்டிருக்கும்.[2] சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம், போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். ஏதாவதொரு தகவலை அழிப்பதோ, அல்லது மாற்றுவதோ இதில் கடினமானது. ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் கணுக்கள் (network nodes) மூலமாகவும், பராமரிப்பாளர்கள் வாயிலாகவும் சரிபார்க்கப்படும்.

பிட்காயின் கட்டச்சங்கிலிக் கட்டமைப்பு

எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம் தருகிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம் சென்றுவிடும். இதனை கணுக்களும், பராமரிப்பாளர்களும் உறுதி செய்வார்கள். இடம் யாருக்கு சொந்தம், எப்போது பரிமாற்றம் நடந்தது, போன்றவற்றை அதிநவீன கணினி மூலமாக, கணித கோட்பாடுகளையும், சமன்பாடுகளையும் சமாளித்து விடையாக அந்த உறுதி அமையும். இவ்வாறு பரிமாற்றம் உறுதிசெய்த பின், மறுமுறை அதே இடத்தை வேறொருவருக்குக் கொடுக்க இயலாது.[3]

கட்டச்சங்கிலி என்னும் இந்த தொழில்நுட்பத்தை (2008-இல்) கண்டுபிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரால் அழைக்கப்படுபவர். (கண்டுபிடித்தவர் உண்மை பெயர் வெளியிடப்படவில்லை.) [4] தாம் ஏற்கனவே கண்டுபிடித்திருந்த நுண்மிக்காசு (பிட்காயின் - bitcoin) என்ற பணத்திற்கு வரவு செலவு கணக்குகளை எழுதி வைக்க ஒரு பொது கணக்குப் புத்தகத்திற்குப் பயன்படும் என்று எண்ணி கட்டச்சங்கிலி என்ற இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார். கட்டச்சங்கிலி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நுண்மிக்காசு மீது ஏற்பட்ட தாக்குதல்கள் குறைந்து போயின.[4][5] இப்போது இந்தத் தொழில் நுட்பம் மற்ற வகையான மின்காசுகளுக்கும் பயன்படுத்தப் படுகின்றது.

வரலாறு

ஆபர் (Stuart Haber), சுடோர்னேட்டா (W. Scott Stornetta) ஆகிய இருவரும் 1991-இல் கட்டங்களால் (blocks) ஆன தொடர் சங்கிலியைக் குறியாக்கவியல் (Cryptography) முறையில் காப்புறுதி செய்ய (secure) முற்பட்டனர்.[6][7] அதாவது, கட்டங்களில் எழுதப்பட்டுள்ள காலமுத்திரைகளை (timestamp) யாரும் அழிக்கா வண்ணம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பது அவர்கள் குறிக்கோள். பின், 1992-இல் பாயர் (Bayer), ஆபர்(Stuart Haber), சுடோர்னேட்டா (W. Scott Stornetta) ஆகியோர் மெர்கல் தருக்கள் (Merkle trees) என்னும் தரவுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி இயங்கு திறனை (efficiency) மேம்படுத்தினர்[6][8]

சத்தோசி நகமோட்டோ , குறுக்க எண் காசு (Hash cash) என்ற முறையைப் பயன்படுத்தி ஒரு கட்டச்சங்கிலியில் மேலும் கட்டங்களை எவ்வாறு இணைப்பது என்று செய்து காட்டினார். பொதுவாக, வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களில் இது போன்ற செயல்களைச் செய்ய வேண்டுமாயின், நம்பிக்கையுள்ள மூன்றாம் நபர் ஒருவர் வேண்டியிருக்கும். ஆனால், நகமோட்டோ அவ்வாறு மூன்றாம் நபர் ஒருவர் இல்லாமலேயே அதைச் செய்ய முடியும் என வாதிட்டார்.[6] இந்தக் கருத்தைப் பயன்படுத்தி, பிட்காயின் என்ற பொது வரவுப் பதிவேடு (public ledger) ஒன்றை உருவாக்கிக் காட்டினார்.[4]

ஆகஸ்டு, 2014-இல் பிட்காயின் வரவு செலவு பதிவுகள் 20 GB எனும் அளவுக்கு வளர்ந்தன.[9] பிறகு, 2015-2017 -இல் அது 100 GB என்ற அளவுக்கு வளர்ந்தது. (நகமோட்டோ முதலில் கட்டச் சங்கிலியை block chain என்று தனித் தனியாகத்தான் எழுதினார். பின், 2016-இல் அது blockchain என்று ஒரே சொல்லாக ஆகி விட்டது.)

சிங்கப்பூரில், 2016-இல், கணினி நிறுவனமான ஐ.பி.எம் (IBM) கட்டச் சங்கிலிக்காக ஓர் ஆய்வுக் கூடத்தை நிறுவியது.[10] உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) என்ற அமைப்பு நவம்பர், 2016-இல் கட்டச்சங்கிலியை வைத்து ஆளுகை ஒப்புரு (governance models) எவ்வாறு அமைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தது. ஆளுகை (governance) தொடர்பான அறிவுரைகள் வழங்கும் நிறுவனமான ஆக்சன்சுர் (Accenture) கருத்துப்படி, 2016 வரை, நிதி சார்ந்த சேவையில் (financial services), கட்டச்சங்கிலி 13.5% அளவுக்குப் பயன்பட்டுள்ளது. பின், 2016-இல், பல தொழில் குழுமங்கள் (Industry trade groups) ஒன்று சேர்ந்து, பொது கட்டச்சங்கிலி மன்றம் (Global Blockchain Forum) என்ற அமைப்பைத் தோற்றுவித்தன. ஆனால், மே 2018-இல், கார்ட்னர் (Gartner) ஆய்வில் 1% நிறுவனத் தலைவர்களே (CIO) தங்கள் நிறுவனத்தில் கட்டச்சங்கிலி பயன்படுத்தப்படுகின்றது என்று கூறி உள்ளனர்; 8% நிறுவனத் தலைவர்கள் தாங்கள் கட்டச்சங்கிலி பயன்படுத்தப் போவதாக மட்டுமே கூறினர். நவம்பர், 2018-இல், எம்மா மெக்கிளர்க்கின் (Emma McClarkin) (இவர் கனடா நாட்டில் Conservative MEP ஆவார்) கட்டச்சங்கிலி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வணிகத்தை நவீன மயமாக்க வேண்டும் என்று கூறிய கூற்றை நாடாளுமன்ற வணிகச் செயர்க் குழு (Parliament’s Trade Committee) வரவேற்று இருக்கின்றது.[11]

கட்டச்சங்கிலியின் அமைப்பு

கட்டச்சங்கிலி

கட்டச்சங்கிலி என்பது ஒரு வரவுப் பதிவேடு (ledger). வரவுப் பதிவேடு என்பது வரவு செலவு (financial transactions) கணக்குகளை எழுதி வைக்கப் பயன்படுத்தப் படும் ஒரு கணக்குப் புத்தகமாகும். இது ஒரு பொதுவான கணக்கு ஏடு; இதைக் கண்காணிக்கும் உரிமை பலருக்கும் பரவலாக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமும் அதன் பக்கத்தில் உள்ள கட்டத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். எனவே, ஒன்றில் ஏதேனும் மாற்றினால், மற்ற எல்லா கட்டங்களிலும் அதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும்.[4][11] கட்டச்சங்கிலி இணையர் வளையம் (P2P- peer-to-peer network) என்ற அமைப்பைப் பயன்படுத்தி செயல்படுத்தப் பட்டுள்ளது. அதாவது, கட்டச்சங்கிலியின் நகல்கள் பலரிடத்திலும் இருக்கும். எனவே, எந்த ஒரு மாற்றம் செய்ய வேண்டுமாயினும், அதற்குப் பலரும் இசைவு தர வேண்டும்.[12] இதனால், கட்டச்சங்கிலியில் உள்ள தரவுகள் நன்கு பாதுகாக்கப் படுகின்றன. கட்டச்சங்கிலியில் எந்த ஒரு வரவும் அல்லது செலவும் ஒரே ஒரு முறை தான் பதிவு செய்யப்படும். (பல முறை செய்யப்படுவதற்கு இடம் கொடுக்காது.)

குறுக்க எண்கள் (Hash values)

குறுக்கம் என்பது கொடுக்கப் பட்ட ஒரு நீளமான (எவ்வளவு நீளமாயினும்) அளவுள்ள ஒரு தரவுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு நீளமுள்ள எண்ணைக் கொடுக்கும் ஒரு சார்பு (function) ஆகும்.[13] எடுத்துக் காட்டாக, கீழே f(.) என்ற சார்பு ஒரு குறுக்கம் ஆகும். இது "apple" என்ற தரவுக்கு, 24316453 என்ற எண்ணைக் கொடுத்துள்ளது. இந்த எண் "apple" என்ற தரவின் குறுக்க எண் எனப்படும். மேலும் எடுத்துக் காட்டுக்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

  • f("apple") = 24316453
  • f ("செந்தாழை") = 34523896
  • f("செந்தாழை மெல்ல சிரித்தாள்.") = 75892435

கட்டச் சங்கிலியில், கட்டத்தில் உள்ள தரவுகளை SHA256 என்ற படிமுறையைப் (algorithm) பயன்படுத்தி, குறுக்க எண்கள் கணிக்கப்படுகின்றன. இதில், தரவின் நீளம் இருமிகள் (bits) வரை இருக்கலாம். இது தரும் குறுக்க எண் 256 இருமிகளாக இருக்கும். எடுத்துக் காட்டாக:[14]

  • தரவு: apple
    • குறுக்க எண்: 3a7bd3e2360a3d29eea436fcfb7e44c735d117c42d1c1835420b6b9942dd4f1b
  • தரவு: செந்தாழை
    • குறுக்க எண்: 8b2ae03bd84dd612090524faac038447e3b5c96721e23d1b0e2bc15d40b868be
  • தரவு: செந்தாழை மெல்ல சிரித்தாள்.
    • குறுக்க எண்: d60425f776471fe5dd8cf1669750a9ab37af887bea30fb03309af588b6b07731

கட்டங்கள்

கட்டச்சங்கிலியில் ஒரு கட்டம்

கட்டங்கள் சங்கிலி போன்று பிணைக்கப் பட்டதே கட்டச்சங்கிலியாகும். ஒவ்வொரு கட்டத்திலும் கீழ்க்கண்ட தரவுகள் சேமித்து வைக்கப் படுகின்றன:

  1. இந்தக் கட்டத்தில் சேமித்து வைக்கப் படும் தரவு
  2. இந்தக் கட்டத்தில் உள்ள தரவுக்கான குறுக்க எண்
  3. இந்தக் கட்டத்திற்கு முன்னால் உள்ள கட்டத்தின் குறுக்க எண்
  4. ஒரேமுறை எண் (nonce)

கட்டங்களைச் சேர்க்கும் முறை

ஒருவர் ஒரு கட்டத்தைச் சேர்க்க விழைகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

  1. அவர் தம் விருப்பத்தை கட்டசங்கிலிக்குத் தெரிவிப்பார்.
  2. அவர் விருப்பம் இணையர் வலையத்தில் (P2P network) அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும்.
  3. அக் கட்டத்தில் உள்ள தரவுகள் அனைத்தும் ஒவ்வொருவராலும் சரி பார்க்கப்படும்.
  4. பிறகு, அக் கட்டம் ஓவ்வொருவரிடத்தில் உள்ள கட்டச்சங்கிலியில் கடைசி கட்டமாக இணைக்கப்படும்.

அந்த "ஒருவர்" சுரங்கமர் (miner) என்று அழைக்கப்படுகிறார்.

சுரங்கமர் (Miner)

ஒரு சுரங்கமர் கீழ்க்கண்ட இரு பணிகளைச் செய்ய வேண்டும்.

  1. ஒரு மெகா எண்ணுன்மி (1 MB ) அளவுள்ள பரிமாற்றத்தைச் (transaction) சரி பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரே பணம் இருமுறை செலவழிக்கப் பட்டுள்ளதா (Double spending) என்று பார்க்க வேண்டும்.
  2. அவருக்கு ஒரு கணக்கு கொடுக்கப்படும். கொடுக்கப்பட்ட அந்த கணக்கைப் போட்டு முதலாமவராக வரவேண்டும். (இது நேரம் எடுக்கும். இதை உழைப்புக்குச் சான்று (proof-of-work) என்று அழைப்பர்.)

இவ்வாறு ஒருவர் வெற்றிகரமாகச் செய்தால், அவருக்கு 12.5 பிட்காயின் கூலியாக வழங்கப் படும்.[15] இவ்வாறு சரிபார்த்த கட்டம் கட்டச்சங்கிலியில் இணைக்கப்படும்.[16]

இருமுறைச் செலவு (Double spending)

நடை முறையில், நம் கையில் உள்ள பணம் ஒரு முறைக்கு மேல் செலவழிக்க முடியாது. ஆனால், கவனமாக இல்லையென்றால், மறையீட்டு நாணயத்தை ஒரு முறைக்கு மேல் செலவழிக்க முடியும். இது இருமுறைச் செலவு என்று கூறப்படும். ஒருவரின் பணம் ஒரு முறை செலவழித்த பிறகு, மீண்டும் ஒருமுறை, செலவழித்த அதே பணம், செலவழிக்கப்பட்டுள்ளதா (Double spending) என்று சுரங்கமர் பார்க்க வேண்டும்.[16]

உழைப்புக்குச் சான்று (Proof-of-work)[17]

தாக்கு நிரலர்கள் (hackers) ஒரு கட்டச்சங்கிலியில் ஊடுருவி, ஒரு கட்டத்தில் ( எடுத்துக் காட்டாக, கட்டம் 3 என்று வைத்துக் கொள்வோம்) உள்ள தரவுகளை மாற்றினால், அக்கட்டத்தின் குறுக்க எண் மாறும். இந்த மாறிய குறுக்க எண்ணைப் பின்வரும் கட்டத்தில் (கட்டம் 4) சேமிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது , அக்கட்டத்தின் குறுக்க எண் மாறும்; அதை அடுத்த கட்டத்தில் (கட்டம் 5) சேமிக்க, அதன் குறுக்க எண் மாறும். இவ்வாறு, சங்கிலியில், ஒரு கட்டத்தில் ஏற்படும் மாற்றம், பல கட்டங்களுக்கும் பரவுகின்றது. எல்லா கட்டங்களுக்கும் சென்று மாற்றத்தை ஏற்படுத்த நேரம் எடுக்கும். இதனால், தாக்கு நிரலர்கள் சங்கிலியைத் தாக்க சற்றுத் தயங்குகின்றனர். எனினும், மிக விரைவான கணினி வைத்திருக்கும் தாக்கு நிரலர்களால் சங்கிலியில் உள்ள எல்லா கட்டங்களிலும் வேண்டிய மாற்றத்தை விரைவாக செய்து கொள்ள முடியும். இதைத் தடுக்க, உழைப்புக்குச் சான்று என்ற முறை பயன்படுத்தப்படுகின்றது. இதன் நோக்கம், சங்கிலியில் இணைக்க ஒரு புதிய கட்டம் உருவாக்கப்படும்போது , உருவாக்கப்படும் வேகத்தைக் குறைப்பது ஆகும். அதாவது, ஒரு புதிய கட்டத்தை ஒரு சுரங்கமர் (இவர் தாக்கு நிரலராகவும் இருக்கலாம்) உருவாக்கும்போது, அதற்கான வரவு செலவு கணக்கைச் சரி பார்ப்பதுடன், கொடுக்கப்படும் ஒரு கணக்கையும் அவர் போட்டு விடை அளிக்க வேண்டும். கணக்கு விடை காணக் கடினமானதாகவும் (அதிக நேரம் எடுக்கக் கூடியதாகவும்), ஆனால் கண்ட விடை எளிதாகச் சரி பார்க்கும் தன்மை உள்ளதாகவும் இருக்கும். பிட்காயின் கட்டச்சங்கிலியில் கொடுக்கப்படும் கணக்கு சராசரி 10 நிமிடம் எடுக்கக் கூடியதாக இருக்கும். எத்தேரியம் (Ethereum) கட்டச்சங்கிலியில் இந்த நேர அளவு 12 நொடிகளாக அமைக்கப்பட்டுள்ளது.[18] இதனால், கட்டச்சங்கிலிக்குள் ஊடுருவுதல் மிகக் கடினம். (2019-இல் பிட்காயின் கட்டச்சங்கிலியின் அளவு, ஏறத்தாழ, 200 GB ஆகும்.[19])

உழைப்புக்குச் சான்றில் கொடுக்கப்படும் கணக்குகள் பல உள்ளன. எடுத்துக் காட்டாக, பிட்காயினில், சங்கிலியில் இணைக்க, சுரங்கமர்கள் புது கட்டங்களை உருவாக்குவார்கள். ஆனால் எல்லா கட்டங்களும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஒரு சுரங்கமர் தான் உருவாக்கிய கட்டத்துக்குக் குறுக்கு எண் (hash) ஒன்றையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த குறுக்க எண் முற்பகுதியில் குறைந்தது 32 சுழியங்கள் (zero) இருக்க வேண்டும். இது போன்ற குறுக்க எண்ணை அடைய, சுரங்கமர் தன் கட்டத்தில் ஒரேமுறை எண் (nonce - number only used once) எனப்படும் ஊகிக்கவியலா எண்ணைப் (random number) பயன்படுத்துவார். அவ்வாறு 32 சுழியங்கள் வரவில்லையென்றால், எண்ணைச் சிறிது மாற்றி மீண்டும் முயற்சி செய்வார். 32 சுழியங்கள் வர நீண்ட நேரம் (அதாவது, 10 நிமிடங்கள்) ஆகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரேமுறை ஒரு புதிய எண் பயன்படுத்தப்படும். (அதாவது, ஒரு கட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட எண், மீண்டும் வேறு கட்டத்திற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது. அதனால், அந்த எண்ணுக்கு ஒரேமுறை எண் என்று பெயரிடப்பட்டுள்ளது.)[20]

கருத்து இணக்க உரைமுறை (Consensus Protocol)

கருத்து இணக்க உரைமுறை (consensus protocol) என்ற முறையைப் பயன் படுத்தி, உழைப்புக்குச் சான்று செயல் படுத்தப் படுகின்றது.

உழைப்புக்குச் சான்று என்ற கருத்தைச் செயல் படுத்த, கருத்து இணக்க உரைமுறை என்ற முறை பயன் படுத்தப் படுகின்றது. இதில் ஏழு படிகள் (steps) காட்டப் பட்டுள்ளன. ஒரு கட்டத்தைச் சங்கிலியில் சேர்க்க, இந்த உரைமுறையை ஒவ்வொரு சுரங்கமரும் செயலாற்ற வேண்டும்.

கட்ட நேரம்

கட்ட நேரம் (block time) என்பது ஒரு கட்டத்தை உருவாக்க ஆகும் நேரமாகும்.[6] ஒரு சில சங்கிலிகளில், 5 நொடிகளில் ஒரு கட்டம் செய்யப் படுகின்றது.[21] கட்ட நேரம் குறைவாக இருக்குமாயின், வரவு-செலவு கணக்குகள் விரைவாக நடக்கும். ஈத்தரீயம் என்ற மின் காசின் கட்ட நேரம் 15 நொடியாகவும், பிட்காயின் (bitcoin) என்ற மின் காசின் கட்ட நேரம் 10 நிமையங்களாகவும் அமைக்கப் பட்டுள்ளன .[22]

பரவலாக்கம் (decentralization)

இணையர் வலையம் - இதில் பல இணையர்கள் வலையத்தின் வழியாக செய்திகளையும், தரவுகளையும் பரிமாறிக் கொள்கின்றனர்.
பரவிய இணையர் வலையம் - ஓவ்வொரு இணையரிடத்திலும் கட்டச் சங்கிலியின் நகல் ஒன்று இருக்கும்.

ஒரு பொருளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பதற்குப் (centralized) பதிலாக, பல இடங்களில் பரவலாக வைப்பதை (distributed) பரவலாக்கம் (decentralization) என்கிறோம். கட்டச்சங்கிலியை ஒரே ஒரு கணிப்பொறியியல் வைத்து இயக்குவதற்குப் பதிலாக, இணையர் வலையம் (P2P - peer-to-peer network) என்ற பல கணினிகள் கொண்ட கணினி வலையத்தில் பரவலாக வைக்கப் பட்டு, இயக்கப் படுகின்றது. எனவே, தரவுகள் ஓர் இடத்திலேயே வைக்கப் படுவதில்லை.[23] ஒவ்வொரு இணையரிடத்திலும் சங்கிலியின் ஒரு நகல் இருக்கும். இதனால், தாக்கு நிரலர்கள் (hackers) சங்கிலியைத் தாக்கி தரவுகளை மாற்றுவது மிகக் கடினம்.[4]

இணையரில் யாரேனும் ஒரு சிலர் சுரங்கமராக இருப்பர். இவர்கள் தாம் புதுக் கட்டங்களை உருவாக்குபவர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு சுரங்கமர் வரவு செலவு கணக்குகளைச் சரிபார்த்து[24], பின் புது கட்டத்தை உருவாக்கி, உழைப்புக்குச் சான்று நல்கி, பின் தங்கள் சங்கிலியில் கட்டத்தை இணைத்துக் கொண்ட பிறகு, கட்டத்தின் நகலை அனைத்து இணையர்களுக்கும் அனுப்பி வைப்பார்.[25]

இது போன்ற மாற்றங்கள் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கும் போது, கட்டங்களை வரிசை படுத்த வேண்டும். கட்டச்சங்கிலியில், கால முத்திரையைப் (timestamp) பயன் படுத்தி கட்டங்கள் வரிசை படுத்தப் படுகின்றன.[26] (கால முத்திரை என்பது ஒரு நிகழ்வு எப்பொழுது நடந்தது என்று குறிப்பிடும் கால அளவாகும். எடுத்துக் காட்டாக, Tue 01-01-2009 6:00, 1985-W15-5 T 10:15 UTC (day 5 of week 15 of year 1985 = 12 April 1985) ஆகியன கால முத்திரைகள் ஆகும்.) சங்கிலியின் அளவு மிகும் போது, (அதாவது, மிக அதிகமான கட்டங்கள் சேரும்போது) வலயத்தில் உள்ள கணினிகளில் ஒரு சில, தரவுகளை விரைவாக செயல்முறையாக்க வலிமை இல்லாதனவாக இருக்கலாம்; அப்போது, ஒரு சில கணினிகள் மட்டுமே வலிமையுள்ளவையாக இருக்கும். இவ்வாறு நிகழும்போது, பரவலாக்கம் என்பது மையலாக்கமாகச் (centralized) சுருங்கிவிடும்.[27]

கட்டச்சங்கிலியில் உள்ள தரவுகள் பாதுகாப்புக்காக இருக்க பொதுத்-திறவி மறையீட்டியல் (public-key cryptography)[23] என்னும் குறியீடு பயன்படுத்தப் படுகின்றது. தனியர்-திறவி (Private key) என்பது கடவுச்சொல் (password) போன்ற ஒரு சொல். இதை வைத்து ஒருவர் சங்கிலியில் உள்ள தரவுகளைப் பார்க்கலாம். இவ்வாறு பல வழிகளில் கட்டச்சங்கிலி காக்கப் படுவதால், சங்கிலியில் உள்ள தரவுகள் மிகப் பாதுகாப்பாக இருக்குமென நம்பலாம்.[4]

கவைகள்

ஒரு சங்கிலி வளரும் போது, அதில் கிளைகள் பிரிந்து போகுமாயின், அப் பிரிவுகள் தோன்றுமிடம் கவை (fork) எனப்படும்.[28] கட்டச்சங்கிலியில் புதிய கட்டங்களைச் சேர்க்கும் போது, கவைகள் தோன்ற வாய்ப்புக்கள் உருவாகின்றன. இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. தற்காலிகக் கவை (Temporary Fork)
  2. மென் கவை (Soft Fork)
  3. கடுங் கவை (Hard Fork)

தற்காலிகக் கவை

கட்டச்சங்கிலியில் தற்காலிகக் கவைகள் உருவாதல்: முதன்மையான சங்கிலி (பச்சை - கருப்பு). ஏதிலி கட்டங்கள் (கருஞ்சிவப்பு நிறம்)

ஒன்றுக்கும் மேற்பட்ட சுரங்கமர்கள் ஒரே நேரத்தில் ஒரே கட்டத்தை உருவாக்குவார்களேயானால், இருக்கின்ற சங்கிலியில், அது இரண்டாகப் பிரியும் கவையை உண்டாகும். இதற்கு தற்காலிகக் கவை (Temporary Fork) என்று பெயர். அதாவது, இரண்டு சங்கிலிகள் தோன்றும். இவற்றில் எந்த சங்கிலியை வைத்துக் கொள்வது, எதனைப் புறக்கணித்து விடுவது என்ற சிக்கல் எழுகின்றது. இதற்கு , நீளமான சங்கிலியை வைத்துக் கொண்டு, மற்றதை அழித்து விடு என்ற உத்தி பயன்படுத்தப் படுகின்றது. இதுபோன்ற கவைகள் தோன்றி விரைவில் மறைந்து விடுவதால், இவை தற்காலிகக் கவைகள் எனப்படும். இவ்வாறு செய்யும் போது, ஒரு சில கட்டங்கள் சங்கிலியில் சேராமல், ஏதிலிகள் போல ஒதுக்கப்பட வாய்ப்பு உண்டாகும். அவ்வாறு ஒதுக்கப் பட்ட கட்டங்கள் ஏதிலிக் கட்டங்கள் (orphan blocks) என அழைக்கப் படும்.[24] ஒவ்வொரு இணையரும் (peer) தங்கள் சங்கிலிக்குத் தகுந்தாற்போல ஒரு வரலாற்றை வைத்திருப்பர். அவர் எந்த நேரத்திலும், மிக அதிகமான மதிப்பளவு அளவு கொண்டுள்ள சங்கிலியையே வைத்துக் கொள்ள முயற்சி செய்வார். மற்ற இணையர்களிடமிருந்து ஒரு புது சங்கிலி கிடைக்குமாயின், அந்தச் சங்கிலியின் மதிப்பளவு தம்முடையதை விட அதிகமாக இருக்குமாயின், அவர் தம் சங்கிலியை ஒன்று மாற்றி அமைப்பார்; அல்லது, அதை அழித்து விட்டு, புது சங்கிலியை வைத்துக் கொள்வார். மற்றும், அந்தப் புது சங்கிலியை, மற்ற இணையர்களிடமும் பகிர்ந்து கொள்வார். கட்டச்சங்கிலி தொழில் நுட்பத்தில், ஒரு இணையர் தம் பழைய சங்கிலியை அழிப்பதற்குப் பதிலாக, அதை மாற்றி அமைக்கவே ஊக்குவிக்கப் படுவார்.[4][25][29]

மென்கவை

கட்டச்சங்கிலியில் மென்கவை

மென் கவை (Soft fork) என்பது வேறு காரணங்களுக்காக உண்டாகின்றது:

  1. மென்பொருளில் மாற்றங்கள் செய்வதால் மென்கவை உண்டாகும்.
  2. உரைமுறை (protocol) விதிகள் மாறும் போது மென்கவை உண்டாகும்.

மென்கவைகள் , தற்காலிகக் கவைகள் போலன்றி, கட்டச்சங்கிலியில் நிலைத்து நிற்கும் கவைகளாகும். இவற்றைச் சங்கிலியில் இருந்து நீக்க வேண்டுமாயின், இயங்குகின்ற மென்பொருளைத் திருத்தி அமைக்க வேண்டும். (இந்த திருத்தங்கட்குக் கணினி வலயத்தில் உள்ள ஏனைய இணையர்களிடம் கருத்து கேட்க தேவை இல்லை.) எடுத்துக் காட்டாக, ஒரு கட்டச்சங்கிலி வளர்ந்து வரும் போது, அதில் உள்ள ஒவ்வொரு கட்டமும் (க1, க2, க3 போன்றவை), பயன்படுத்தப் படும் மென்பொருளின் சட்ட முறைகளப் பின்பற்றி இருக்கும். இப்போது மென்பொருளில் சிறு மாற்றம் ஏற்பட்டு புதிய மென்பொருள் வெளியிடப்படுமானால், அதை இணையர்கள் கணினியில் பொருத்தி ஓட்டும் போது, அப்போது உருவாகும் கட்டங்கள் (க4, க5, க6 போன்றவை) புதிய மென்பொருளின் சட்ட முறைகளைப் பின்பற்றி இருக்கும். ஆனால், அப் புதிய மென்பொருள் பயன் படுத்தப் படாத கணினிகளில் தோன்றும் கட்டங்கள் (ங1,ங2,ங3 போன்றவை) பழைய சட்டமுறைகளைப் பின் பற்றியே இருக்கும். இந்நேரத்தில், மொத்தமாகப் பார்கையில், கட்டச்சங்கிலியில் ஒரு கவை தோன்றும். இது மென் கவை எனப்படும். ங1,ங2,ங3 போன்ற கட்டங்கள் புதிய மென்பொருளின் சட்டமுறைகளுக்கு முரணாக இருக்க வாய்ப்புண்டு. அந்நேரத்தில், அவற்றைக் களைவது இன்றியமையாததாக ஆகின்றது. அவ்வாறு களைய, பழைய விதிகளை எடுத்துவிட்டு புதிய விதிகளைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது, முரணான கட்டங்கள் (ங1,ங2,ங3 போன்றவை) சங்கிலியை விட்டு மறைய, கவையும் மறையும்.

கடுங் கவை

கட்டச்சங்கிலியில் கடுங் கவைகள் உருவாகும் விதம் - மென்பொருளைப் புதுப்பிக்கும்போது நிகழ்வது.

மென் பொருளில் பெரிய அளவு மற்றம் ஏற்படும் போது கட்டச்சங்கிலியில் தோன்றுகின்ற கவை கடுங் கவை (Hard fork) ஆகும். இந்த மாற்றங்கள், அடிப்படையிலேயே பழைய கணினி வலையத்துடன் (netwok) முரண்பாடு கொண்டதாக இருக்கும். இதைத் தவிர்க்க, P2P-இல் உள்ள அனைத்து இணையர்களுடன் கலந்து புதிய கருத்து இணக்க விதிகள் (consensus rules) உருவாக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு இணையரும் தங்கள் மென்பொருள்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கும். (மென்கவையில் செய்தது போல் வெறும் மென்பொருளை மாற்றினால் மட்டும் போதாது.) இவ்வாறு செய்த பிறகு, ஒரு புது கட்டம் உருவாக்கும் பொது, அனைத்து இணையர்களும் அக்கட்டத்தைச் சரி பார்த்து பின் தங்கள் சங்கிலியில் இணைத்துக் கொள்ள வேண்டும். யாரேனும் தங்கள் மென் பொருளைப் புதுப்பிக்கத் தவறினால், அவர்களுடைய சங்கிலி மற்றவர்களால் புறக்கணிக்கப்படும். கடுங் கவை இரண்டு வகைப் படும்: திட்டமிடப்பட்டு உருவாகும் கடுங் கவை; வாதத்திற்குரிய (contentious) கடுங்கவை.

திட்டமிடப்பட்ட கடுங்கவை

ஒரு சில நேரங்களில், மென் பொருட்களின் அடுத்த பதிப்பு எப்போது வரும் என்று முன் கூட்டியே சொல்லப்படும். குறிப்பாக, தொடர்பு வரைமுறையில் (communications protocol) என்னென்ன மாறுதல்கள் இருக்கும் என முன்கூட்டியே கூறப்பட்டிருக்கும். இவ்வாறான பதிப்பு வெளியிடும் போது உருவாகும் கவை திட்டமிடப்பட்ட கடுங் கவை (planned hard fork) எனப்படும்.

வாதத்திற்குரிய கடுங் கவை

மென்பொருள், தொடர்பு வரைமுறை (communications protocol) ஆகியன பற்றி பலவகையான கருத்து வேறுபாடுகள் இருக்கும் போது கட்டச்சங்கிலியில் உருவாகும் கவைக்கு வாதத்திற்குரிய கடுங்கவை (Contentious hard fork) என்று பெயர். குறிப்பாக, இணையரில் ஒரு பிரிவினர், சங்கிலியின் தரத்தை மேம்படுத்த, மென்பொருள், தொடர்பு வரைமுறை ஆகியனவற்றில் மாற்றங்கள் தேவை எனக் கருதும்போது வாதத்திற்குரிய கடுங்கவை தோன்றும். ஆகஸ்டு 1, 2017-இல் நடந்த பிட்காயின் கடுங் கவை (Bitcoin Cash hard fork) ஓர் எடுத்துக் காட்டு.[30] இதில் உரோசர் வேர் (Roger Ver)[31] என்பவர், ஒரு சிலருடன் சேர்ந்து, பிட்காயின் அளவை 1MB-இலிருந்து 8MB-இக்கு மாற்றினால், சங்கிலியில் நடக்கும் வரவு-செலவு கணக்குகளை இன்னும் மிக விரைவாக நடத்தலாம் என்று வாதிட்டார். ஆனால் இந்த வாதத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, சங்கிலியில் கவை உருவானது. கடுங் கவை படத்தில், இடது பக்கமுள்ள சங்கிலிக் கிளை உரோசர் வேர் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுடையது; உரோசர் வேர் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுடையது வலது புறம் அமைந்துள்ளது.[32]

வெளிப்படைத்தன்மை

கட்டச்சங்கிலி மற்ற தரவு அமைப்புகளைவிட (databases) வெளிப்படையான ஒரு அமைப்பே என்று கருதப் படுகின்றது. முதலில் தோன்றிய கட்டச்சங்கிலியில் வெளிப்படைத்தன்மை (Openness) இல்லாமல் போகவே, கட்டச்சங்கிலிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதாவது, கட்டச்சங்கிலி செய்யும் அனைத்துப் பணிகளையும் மையமாக்கி (centralize) ஒரே இடத்தில் செய்தால், அதைக் கட்டச்சங்கிலி என்று கூறலாமா என்ற வினாவும் எழுப்பப் பட்டது.[33][34][35][36][37]

இசைவு கேளாமை

இசைவு கேளாமை (permissionless) என்பது கட்டச்சங்கிலியைப் பயன்படுத்த யாரிடமும் இசைவு கேட்கத் தேவை இல்லை என்று பொருள் படும். இதனால் ஏற்படும் நன்மை யாதெனின், தாக்கு நிரலர்கள் (hackers) சங்கிலியைத் தாக்கவியலாது; மற்றும், நாம் தரவுகளைப் பார்க்க வேண்டுமாயின், யாரிடமும் இசைவு கேட்கத் தேவை இல்லை. நாம் நமக்கு வேண்டிய பயன்பாட்டு நிரல்களை (apps) எழுதிக் கொள்ளலாம்.[38] எனினும், பிட்காயின் போன்ற மறையீட்டு நாணயங்கள், தங்கள் சங்கிலியைக் காத்துக் கொள்ள, புது கட்டத்தை இணைக்கும் சுரங்கமரிடம் இருந்து உழைப்புக்குச் சான்றை (proof-of-work) எதிர்பார்க்கின்றன.

பிட்காயின் வெளிப்படையான திறந்த சங்கிலிகளைப் பயன்படுத்துகின்றன. 2018-இல், பிட்காயின் மிக அதிக அளவு முதலீட்டு வருமானம் தரும் மறையீட்டு நாணயமாக இருந்தது. 2016-இல், கட்டச்சங்கிலி உருவாக்கும் திட்டங்கள் அமெரிக்காவில் குறையும் போது, சீனாவில் வளரத் தொடங்கியது.[39] எனினும் இன்றுவரை, பல பண நிறுவனங்கள் பரவலாக்கம் கொண்ட கட்டச்சங்கிலியைப் பெருமளவில் பயன் படுத்த முன் வரவில்லை.[40]

இசைவு கோரும் கட்டச்சங்கிலி

இசைவு கோரும் கட்டச்சங்கிலி (permissioned blockchain) -ஐ அணுகி ஏதேனும் வினை ஆற்ற வேண்டுமாயின், சங்கிலியின் இசைவு (permission) தேவைப் படும்.[41] சங்கிலியின் உரிமையாளர், ஒரு வல்லுநர் துணை கொண்டு சங்கிலியைச் சரி பார்த்து, பின் இசைவு தெரிவிக்க செய்வர். போதிய அனுபவம் இல்லாத சுரங்கமார்களை இது போன்ற சரி பார்க்கும் வேலைகளைச் செய்ய விடுவதில்லை.[42] இசைவு கோரும் கட்டச்சங்கிலியைச் சேர்த்தியம் (consortium) அல்லது கலப்புச் சங்கிலி (hybrid blockchain) எனவும் அழைக்கப் படும்.[43] நியூ யார்க் டைம்சு (New York Times) எனும் நாளிதழ், 2016-2017-இல் பல குழுமங்கள்(corporations), கட்டச்சங்கிலி வலையத்தை தனியார் சங்கிலி போன்றே பயன்படுத்துகின்றன என்று குறிப்பிட்டிருந்தது.[44][45]

தனியார் கட்டச்சங்கிலியின் குறைபாடுகள்

"தனியார் கட்டச்சங்கிலிகள் பெரும்பாலும் மையமாக்கப் பட்டிருப்பதால், தாக்கு நிரலர்கள் (hackers) 51%-தாக்குதல் (51 percent attack) போன்ற எதையும் செய்யத் தேவை இல்லை; மாறாக, மையத்தில் இருக்கும் சேவை வழங்கியைத் (server) தாக்கினாலே போதுமானது; சங்கிலியை 100% கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்," என்று ஆம்டன் (Nikolai Hampton) கம்பியூட்டர்உலகம் (Computerworld) என்னும் மாத இதழில் குறிப்பிட்டுள்ளார்.[46] (51%-தாக்குதல் என்பது ஒரு கணினி வலயத்தில் 51% கணினிகளைத் தாக்கி செயலிழக்கச் செய்வது ஆகும்.) குறிப்பாக, நடைமுறையில் பிரச்சினைகள் வரும்போது தனியார் சங்கிலிகளை யார் பாதுகாப்பர் என்பது ஒரு பெரிய கேள்வியே. 2007-08 நிதி நெருக்கடி (financial crisis of 2007–08) போன்ற சிக்கல்கள் தோன்றும் போது, அரசியல் பெரும் புள்ளிகள் எனப் படுவோர், யார் பக்கம் வேண்டுமானாலும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவார்கள்.[47][48] அந்நேரங்களில், பிட்காயின் போன்ற முறையீட்டு நாணயங்கள் பல சுரங்கமர்களின் கடின உழைப்பினால் பாதுகாக்காப் படுகின்றன. ஆனால், "இந்நிலையில், ஒரு தனியார், கோடிக்கணக்கான வாட்சு மின்சக்தியைச் செலவழித்து, தம் கட்டச்சங்கிலியில் உள்ள அனைத்துத் தரவுகளையும் பாதுகாப்பாரா, என்பது ஐயமே. இதனால் பணமும் காலமும் தான் பெருமளவில் செலவாகும்," என்றும் ஆம்டன் குறிப்பிட்டுள்ளார்.[49] "மேலும், தனியார் சங்கிலி நிறுவனங்களில் போட்டி (race) என்று ஒன்றும் இல்லை. இதனால், கட்டங்களை விரைவாக உருவாக்க வேண்டும் என்றோ அல்லது திறமையாகச் செயல் பட வேண்டும் என்றோ கட்டாயத் தேவை இல்லாமல் இருக்கின்றது. இதன் விளைவு என்னவென்றால், தனியார் கட்டச்சங்கிலி வெறும் சிக்கல் நிறைந்த தரவுதளம் (database) போல செயல் படும்," என்றும் ஆம்டன் கூறியுள்ளார்.[49]

கட்டச்சங்கிலியின் பயன்கள்

கட்டச்சங்கிலியைப் பல தொழில் துறைகளில் பயன்படுத்தலாம். மறையீட்டு நாணயங்களுக்குப் (Cryptocurrencies) பரவலாக்கப்பட்ட வரவு-செலவு கணக்குப் புத்தகம் (distributed ledger) உருவாக்க இது முதன் முதலில் பயன் படுத்தப் பட்டது. எனினும், கான்ஸ்டலேஷன் ரிசர்ச் (Constellation Research) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவ் வில்சன் (Steve Wilson), கட்டச்சங்கிலி தேவை இல்லாமல் பெருமை படுத்தப் பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.[50] தங்கள் தொழிலின் கருவாக தொழில் வல்லுநர்கள் இதுவரை கட்டச்சங்கிலியைப் பயன்படுத்த தயங்குகிறார்கள்.[51]

மறையீட்டு நாணயங்களில் கட்டச்சங்கிலிகள்

மறையீட்டியல் முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நாணயம் மறையீட்டு நாணயம் (cryptocurrency) எனப்படும். மறையீட்டியல் (cryptography) என்பது எவ்வாறு தகவலை மறைத்து, பரிமாறி, மீட்டெடுப்பது என்பன பற்றிய துறை ஆகும். பெரும்பாலான மறையீட்டு நாணயங்கள் தங்கள் வரவு-செலவுகளைக் கட்டச்சங்கிலியாகவே வைத்துள்ளன. எடுத்துக் காட்டாக, பிட்காயின் வலயம் (Bitcoin network), எத்தேரியம் வலையம் (Ethereum network) ஆகிய இரண்டும் கட்டச்சங்கிலியை வைத்தே அமைக்கப் பட்டன. மே, 2018-இல் முகநூல் (Facebook) நிறுவனம், கட்டச்சங்கிலி குழு என்ற ஒரு குழுவை அமைத்துள்ளது.[52] முகநூல் தனக்கென்று ஒரு மறையீட்டு நாணயத்தை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டது.[53]

திறன் ஒப்பந்தங்களில் கட்டச்சங்கிலிகள்

திறன் ஒப்பந்தங்கள் (Smart contracts) என்பது கணினிகள் துணைகொண்டு ஒப்பந்தங்களைச் செயலாற்றும் முறையாகும். இதில் கணினிகள், (மனிதர்களின் துணைகொண்டு) ஒப்பந்தங்களின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ செயலாற்றும்.[54] மூன்றாந் தரப்பு பண வரவுக் கணக்கு (escrow) என்னும் ஒப்பந்த முறையை முற்றிலுமாக கணினியாலேயே செயல்படுத்த வேண்டும் என்பது திறன் ஒப்பந்தத்தின் நோக்கமாகும். கட்டச்சங்கிலி தொழில் நுட்பத்தை வைத்து திறன் ஒப்பந்தங்களைச் செயல் படுத்தினால், ஒப்பந்தங்கள் சிறப்பாகச் செயல்படுவதோடு, ஒழுகலாறு இடர்பாடுகள் (moral hazards) போன்றவை குறையும் என அனைத்துலக நாணய நிதியம் கருதுகின்றது. ஆனால், இதுவரை சொல்லுமளவிற்குத் திறன் ஒப்பந்தங்கள் பயன்பாட்டில் வரவில்லை. இதனால், அவற்றின் சட்டத் தகுதிநிலை (legal status) தெளிவாக வரையறுக்கப் படாமலேயே இருக்கின்றது.[55]

பண மேலாண்மை நிறுவனங்களில் கட்டச்சங்கிலிகள் (Financial Services)

பல பண மேலாண்மை நிறுவனங்கள் பரவலான வரவுப் பதிவேடுகளைக் (distributed ledgers) கட்டச்சங்கிலி துணை கொண்டு உருவாக்கி வருகின்றன.[56][57][58] . இவை பிறகு வங்கிகளில் பயன் படுத்தப் படும். மேலும், இது எதிர்பார்த்த அளவை விட விரைவாகவே நடந்து கொண்டு வருகின்றது என்று ஐ.பி.எம் (IBM) ஆய்வு கூறுகின்றது.[59] வங்கி நிறுவனங்கள் கட்டச்சங்கிலியில் பெரும் ஆர்வம் காட்டுகின்றன. இதற்குக் காரணம், வங்கிகளின் பின்-அலுவலகங்களில் (back office) நடக்கும் வேலைகள் சங்கிலியின் வரவினால் பெரிதும் மேம்பாடு அடையும் என நிறுவனர்கள் நம்புகின்றனர். (வங்கிகளின் வரவேற்புக் கூடத்திற்குத் தேவையான எல்லா வேலைகளும் நடக்கும் இடம் தான் பின்-அலுவலகங்கள் என அழைக்கப் படுபவை.)[60]

UBS (சுவிசர்லாந்து UBS Group AG) போன்ற வங்கிகள் கட்டச்சங்கிலி ஆய்வுக்கூடங்களை அமைத்து எவ்வாறு பணத்தை மிச்சப் படுத்தலாம் என முயற்சி செய்து வருகின்றன.[61][62] ஆனால், செருமானிய வங்கி பெரன்பெர்க் (Berenberg) போன்றவை "கட்டச்சங்கிலி என்பது தேவையில்லாமல் மிகைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம்" எனவும், "இதுவரை கோட்பாட்டு மெய்ப்பித்தல் (proof-of-concept) மட்டுமே காட்டப் பட்டுள்ளன, நடைமுறையில் எந்த அளவுக்கு வெற்றி அளிக்கும் எனக் கூறுவதற்கில்லை" என்றும் ஐயம் தெரிவித்து உள்ளது.[63]

எ.என்.இசர்ட் (ANZ - Australian and New Zealand Bank), பாங்க் ஆப் அமெரிக்கா, பாங்க் ஆப் இந்தோனேசியா (Bank Of Indonesia) ஆகிய இருநூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகள் கட்டச்சங்கிலியைக் கூடிய விரைவில் பயன்படுத்த எண்ணியுள்ளன.[64] இந்தியாவில், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI Bank), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஆகியன கட்டச்சங்கிலி தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்டியுள்ளன.[65]

காணொளி விளையாட்டில் கட்டச்சங்கிலிகள்

காணொளி விளையாட்டுத் துறையிலும் (video games) கட்டச்சங்கிலி கருத்துக்கள் கையாளப் பட்டுள்ளன. பிப்ரவரி, 2014-இல் வெளியிடப் பட்ட அன்டர்காயின் (Huntercoin) என்ற காணொளி விளையாட்டு முதன் முதலில் கட்டச்சங்கிலியை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டது.[66] மற்றுமொரு காணொளி விளையாட்டு, நவம்பர் 2017-இல் வெளிவந்த கிரிப்டோகிட்டிஸ் (CryptoKitties).[67] இந்த ஆட்டத்தில் வரும் ஒரு வளர்ப்பு விலங்கு US$100,000-உக்கு விலை போனது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.[68] எத்தேரியம் வலையத்தில் 30% அளவு போக்கு வரத்து நிகழும் போது, அதனால் உண்டாகும் வலையப் போக்குவரத்து நெரிசல் (Ethereum network congestion) எத்தகைய விளைவுகளை உண்டாகும் என கிரிப்டோகிட்டிஸ் விளக்கிக் காட்டி இருந்தது.[69] மேலும் இந்த காணொளி ஆட்டத்தில், எண்ணிம உடைமை (digital asset) என்ற கட்டச்சங்கிலி கோட்பாட்டை வைத்து, ஆட்டத்தில் வரும் உடைமைகளை எவ்வாறு பட்டியல் இடுவது என்றும் விளக்கி இருந்தது.[70]

செப்டம்பர், 2018-இல் உபிசாப்ட் (UBISOFT), பிக் (FIG ) போன்ற நிறுவனங்களின் மென்பொருட்களைக் கட்டச்சங்கிலியுடன் பயன்படுத்தி, புதிய ஆட்டங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற நோக்கத்தோடு கட்டச்சங்கிலி ஆட்ட ஒப்பந்தம் (Blockchain Game Alliance) என்ற நிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது.[71]

கட்டச்சங்கிலியின் ஏனைய பயன்கள்

கட்டச்சங்கிலியை வேறு பல துறைகளிலும் பயன்படுத்தலாம். பொருள் விற்பனை, கைபேசி சந்தா, இசைக் கலைஞர்கள் பற்றிய தரவுகள் என்பன போன்ற பல வகையான தரவுகளைக் கட்டச்சங்கிலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.[72][73] ஐ.பி.எம். (IBM) 2017- இல், ASCAP (American Society of Composers, Authors and Publishers), PRSM ( PRS for Music) ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து கட்டச்சங்கிலியைப் பயன்படுத்தி, இசைப் பதிவுகளை பரவலாக்கும் முயற்சியை மேற்கொண்டது.[74] இமோஜன் ஹீப் ( ஆங்கிலப் பாடகி Imogen Heap, இலண்டன்) தோற்றுவித்த மைசீலியா (Mycelia), கட்டச்சங்கிலியைப் பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப் பட்டது.[75][76] மைசீலியா என்பது கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களைப் பகிரவும், எத்தேரியம் (Ethereum) போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, திறன் ஒப்பந்தங்கள் (Smart contracts) செய்து கொள்ளவும் ஏற்படுத்தப் பட்ட முறையாகும். ஐ.பி.எம் (IBM) குழுமத்தின் எவர் லெட்ஜர் (Everledger - என்றென்றும் வரவுப் பதிவேடு) என்ற முயற்சி கட்டச்சங்கிலியில் செய்யப்பட்டது.[77]

வால்மார்ட் (Walmart) , ஐ.பி.எம் (IBM) ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து கட்டச்சங்கிலி நுட்பத்தைப் பயன்படுத்தி, எவ்வாறு வழங்கல் தொடர்களை (supply chain) மேற்பார்வையிடலாம் என்று ஆய்வு செய்து வருகின்றன.[78] கட்டச்சங்கிலியின் கட்டங்கள் அனைத்தும் ஐ.பி.எம் முகில் வலையத்தில் (cloud) சேமிக்கப் பட்டு, வால்மார்ட்டினால் செயற்படுத்தப் படும்.[78] இணையர்-இணையர் காப்பீடு (peer-to-peer insurance), அளபுரு காப்பீடு (parametric insurance), நுண்காப்பீடு (micro insurance) ஆகியன கட்டச்சங்கிலியைப் பயன்படுத்துகின்றன.[79][80]

பகிர்வுப் பொருளாதாரம் (sharing economy), ஐ.ஒ.டி (IOT - Internet of Things) ஆகிய அமைப்புகள், கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இணையர்களைக் (peers) கொண்டிருப்பதால், கட்டச்சங்கிலி இவற்றுக்கும் துணையாக இருக்கின்றன.[81] இணையத்தள ஒப்போலையில் (Online voting) கட்டச்சங்கிலி பயனுள்ளதாக இருக்கின்றது.[82][83]

கட்டச்சங்கிலி வகைகள் (Types of blockchains)

தற்சமயம் மூன்று வகையான கட்டச்சங்கிலிகள் உள்ளன: பொது கட்டச்சங்கிலி, தனியார் கட்டச்சங்கிலி, கூட்டமைப்புக் கட்டச்சங்கிலி.

பொது கட்டச்சங்கிலி (Public blockchains)

பொது கட்டச்சங்கிலியை அணுக யாருக்கும் எந்தத் தடையும் இல்லை. யாரும் இதில் வரவு-செலவு கணக்கை வைத்துக் கொள்ளலாம்; சரி-பார்ப்பவராக (validator) ஆகலாம். (அதாவது,கருத்து இணக்க உரைமுறையில் பங்கு கொள்ளலாம்.)[84] பல நேரங்களில், இவ்வாறு வரும் சரி-பார்ப்பவர்களை பொருள் ஊக்கம் (economic incentives) கொடுத்து, அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது உண்டு. (ஆனால், அவர்கள் உழைப்புக்குச் சான்று என்ற பணியைச் செய்ய வேண்டி இருக்கும்.) பிட்காயின், எத்தேரியம் போன்றவை பொது கட்டச்சங்கிலி பிரிவில் வரும்.

தனியார் கட்டச்சங்கிலி (Private blockchains)

தனியார் கட்டச்சங்கிலிப் பயன்படுத்த இசைவு (permission) வேண்டி இருக்கும்.[41] இதில் சேருவதற்கு முதலில் கணினி வலை ஆட்சிப்பொறுப்பாளர்களிடம் (network administrators) இருந்து அழைப்பு வர வேண்டும். அதன் பிறகு, பயனர் ஆவதிலும், தரவுகள் சரி பார்ப்பவராக ஆவதிலும் கூட பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

இந்த வகையான கட்டச்சங்கிலி, தொழில் நிறுவனங்களுக்கும், ஏனைய குழுமங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில், பொது கட்டச்சங்கிலியில், கட்டுப்பாடு (control) அனைவருக்கும் பரவலாக்கப் பட்டுள்ளது, அது தொழில் நிறுவனங்களுக்கு ஏற்புடையது அல்ல. தொழில் நிறுவனங்கள் விரும்புவது: கணக்கு வைப்பு (accounting and record-keeping) செவ்வனே நடக்க வேண்டும்; அதே நேரத்தில், தன்னாளுமையும் (autonomy) வேண்டும்; மற்றும், தங்களுடைய மறைமுகத் தரவுகளும் (sensitive data) காக்கப்பட வேண்டும். இவ்வாறான காரணங்களால் தொழில் நிறுவனங்கள் தனியார் கட்டச்சங்கிலியையே பயன் படுத்த விரும்புகின்றன.

கூட்டமைப்புக் கட்டச்சங்கிலி (Consortium blockchains)

கூட்டமைப்புக் கட்டச்சங்கிலி ஓர் அரை-குறையாக பரலவலாக்கப் பட்ட (semi-decentralized) கட்டச்சங்கிலியாகும். இதில் உள்ள கட்டங்களை அணுக, தனியார் கட்டச்சங்கிலியைப் போல, இசைவு (permission) வாங்க வேண்டி இருக்கும். ஆனால், இந்தச் சங்கிலி பல குழுமங்களின் கட்டுப் பாட்டில் இருக்கும். தரவுகளை படிப்பதிலும், கருத்து இணக்க உரைமுறை (consensus protocol) செயலாற்றுவதிலும் ஒரு சிலரே அனுமதிக்கப்படுவர்.

கட்டச்சங்கிலி ஆய்வுகள் (Academic research)

கட்டச்சங்கிலியைப் பற்றிய கலந்துரையாடல், முதலாம் IEEE கம்பியூட்டர் சொசைட்டி டெக்இக்னைட் மாநாடு (IEEE Computer Society TechIgnite conference)

அக்டோபர், 2014-இல், எம்.ஐ.டி பிட்காயின் கிளப் (MIT Bitcoin Club) என்ற அமைப்பு, எம்.ஐ.டி-இன் முன்னாள் மாணவர் அமைப்பிடமிருந்து (MIT alumni) பண உதவி பெற்று, ஒரு சிறு ஆய்வு நடத்தியது. அதில் எம்.ஐ.டி-இல் உள்ள இளங்கலை மாணவர்களிடத்தில் தலா $100 மதிப்புள்ள பிட்காயின் கொடுக்கப்பட்டது. கேட்டலினி, மற்றும் டக்கர் ( Catalini and Tucker, 2016) இந்த ஆய்வின் முடிவை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது: "புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தும்போது, அதைப் பயன்படுத்த கொடுக்கப் படும் இசைவு தாமதம் ஆகும்போது, பயனர்கள் அந்த தொழில் நுட்பங்களை புறக்கணிக்கிறார்கள்," என்பது.[85]

கட்டச்சங்கிலியில் மின்னாற்றல் செலவு

கட்டச்சங்கிலியில் உழைப்புக்குச் சான்று காட்ட வேண்டும் எனும்போது, அதற்கான மின்சாரக் கட்டணம் மிக அதிகமாகப் போகிறது என பன்னாட்டு நிதித்தீர்வு வங்கி (Bank for International Settlements) குறை கூறியுள்ளது.[86][87][88] பன்னாட்டு கணினி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிகொலாசு வீவர் (Nicholas Weaver,University of California) என்பவர் கட்டச்சங்கிலியின் பாதுகாப்புத் தன்மைக்கு, உழைப்புக்குச் சான்று, பொது கட்டச்சங்கிலியின் மின் ஆற்றல் பயன் திறன் (efficiency) ஆகியவற்றை ஆராய்ந்துவிட்டு, இரண்டுமே நடைமுறைக்குப் போதுமானதாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.[89][90]

பதிவேடுகள் (Journals)

செப்டம்பர் 2015-இல், மறையீட்டு நாணயம் , கட்டச்சங்கிலி தொழில் நுட்பம் ஆகிய தலைப்புகளில் லெட்ஜர் (Ledger ) என்ற பதிவேடு வெளியிடப் பட்டது.[91] இப் பதிவேட்டில், கட்டச்சங்கிலி தொடர்பான கணிதம், கணினியியல், பொறியியல், சட்டம், பொருளாதாரம், மறையீட்டு நாணயம் தொடர்பான மெய்யியல் துறைகளின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப் படுகிறது.[92][93] இதில் வெளியிடப் படும் கட்டுரைகள் முதலில் குறுக்க எண் கணிக்கப் பட்டு, கால முத்திரை இடப்பட்டு, பிட்காயின் கட்டச்சங்கிலியில் இணைக்கப் படுகின்றது. கட்டுரையின் முதல் பக்கத்தில் கட்டுரை ஆசிரியர் தம்முடைய பிட்காயின் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.[94]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கட்டச்சங்கிலி&oldid=3711595" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை