பிட்காயின்

குறியாக்க நாணயம்

பிட்காயின் (Bitcoin) (எண்ணிம நாணயக் குறியீடு: BTC; ฿) அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் (open-source software) இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு (அல்லது கட்டச்சங்கிலி - blockchain) என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.[1]

பிட்காயினை (பொது வழக்கில் உள்ள டாலர், ரூபாய் போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப் படுவது இல்லை; கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி (blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. கட்டச்சங்கிலி என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம். இது இணையர் வலையம் (P2P network) என்ற கணினி வலையத்தில் (computer network) செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும்.[2]

பிட்காயினைக் கண்டு பிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை.[3] அவரால் பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-இல் வெளியிடப் பட்டது.[4]

பிட்காயின், தொடரேடு அல்லது கட்டச்சங்கிலி (blockchain) என்று அழைக்கப் படும் கணினி நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டது. கட்டச்சங்கிலி பல கட்டங்களால் உருவானது. கட்டச்சங்கிலியில் உள்ள கட்டங்களை உருவாக்க சுரங்கமர்கள் (miners) என்பவர்கள் அமர்த்தப் படுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தை உருவாக்க கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப் பட்டது. அந்த பிட்காயினை வைத்துக் கொண்டு, டாலர்,ரூபாய், போன்ற பணத்தை வாங்கலாம்; மற்ற பொருட்களையும் வாங்கலாம்.[5] பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge, இங்கிலாந்து) மேற்கொண்ட ஆய்வின் படி, 2017-இல் 2.9 மில்லியன் முதல் 5.8 மில்லியன் வரையிலான குறியீட்டு நாணயப் பணப்பைகள் (cryptocurrency wallet) பயன்படுத்தப் பட்டன என்றும், அவற்றில் பெரும்பான்மையானவை பிட்காயினைப் பயன்படுத்தியவை என்றும் தெரிய வந்தது.[6] ( குறியீட்டு நாணயம் (cryptocurrency) என்பது குறியாக்கவியல் (Cryptography) முறையைப் பயன்படுத்தி உருவாக்கும் கணினிக் காசுகள் ஆகும்.)

பிட்காயினால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிட்காயினை வைத்து நடத்தப் படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் பிட்காயின் களவுகள் ஆகியன பிட்காயினுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும். மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது.[7] இருந்தாலும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் உண்மை.[8]

பிப்ரவரி 2019-இல் பிட்காயின் எண்ணிக்கை நிலவரம் [9]

  • இப்போது இருக்கும் பிட்காயின்கள்: 17,554,200
  • இனி வெளிவர வேண்டிய பிட்காயின்கள்: 3,445,800
  • பிட்காயின்களின் மொத்த எண்ணிக்கை (17,554,200 + 3,445,800): 21,000,000
  • பிட்காயின் கட்டச்சங்கிலியில், ஒரு கட்டத்தில் இருக்கும் பிட்காயின்கள்: 12.5
  • ஒரு நாளில் உருவாக்கப் படும் கட்டங்கள்: 144
  • ஒரு நாளில் வெளியிடப்படும் பிட்காயின்கள் (144 * 12.5) : 1,800
  • பிட்காயின் கட்டச்சங்கிலியில் ஒரு கட்டம் செய்ய கிடைக்கும் கூலி : 12.5 பிட்காயின்கள்
  • பிட்காயின் மதிப்பு:
    • ฿1 = US$3,815.00 (03 Mar 2019 12:04 am UTC)
    • ฿1 = US$19,650.01 (15 Dec 2017)

வரலாறு

ஆரம்ப கட்டம்

சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) பிட்காயினை “ஒருவருக்கொருவர் நேரடியாக கொடுத்து வாங்கக் கூடிய மின்னணு பணம்” என்று வருணித்தார். இந்த பிட்காயினை ஒருவர் நேரடியாக மற்றவருக்கு பிட்காயின் முகவரி வாயிலாக அனுப்பமுடியும். பயன்படுத்துபவரைப் பொறுத்த அளவில் இதை “இணையப் பயன்பாட்டிற்கான பணம்” என்று கூறலாம். அதே நேரத்தில் இது மூன்றடுக்குப் பதிவேட்டுப் பராமரிப்பு (Triple-entry book keeping system) கொண்ட ஒரு நாணயமும் ஆகும்.

பிட்காயினின் முதல் இணைத்தளம் "bitcoin.org" 18 ஆகத்து 2008-இல் பதிவு செய்யப் பட்டு நடைமுறைக்கு வந்தது.[10] அதன் பிறகு, 31 அக்டோபர் 2008-இல் சத்தோசி நகமோட்டோ எழுதிய பிட்காயின்: இணையர்-இணையர் வலைத்தளம் [11] (Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System ) என்ற கட்டுரை வெளிவந்தது.[12] நகமோட்டோ பிட்காயினுக்கான மென்பொருளை உருவாக்கி, திறந்த மூல மென்பொருளாக சனவரி 2009-இல் வெளியிட்டார்.[13][14][15] இருந்தும், நகமோட்டோ யார் என்று அப்போதும் தெரியாமலேயே இருந்தது.[3]

நகமோட்டோ 3 சனவரி 2009-இல், பிட்காயின் வலையம் (bitcoin network) என்ற கணினி வலையத்தை உருவாக்கி, அதில் கட்டச்சங்கிலியைச் செயல் படுத்தி, கட்டச்சங்கிலியின் முதல் கட்டத்தையும் (genesis block) அதில் இணைத்தார்.[16][17] அந்த முதல் கட்டத்தில், "தி டைம்ஸ் 03/சனவரி/2009 வங்கிகளுக்கான இரண்டாவது பிணை விடுதலையை நிதி அமைச்சர் எந்நேரமும் வெளியிடலாம்," ("The Times 03/Jan/2009 Chancellor on brink of second bailout for banks.") என்று குறிப்பிடப் பட்டது. இந்தக் குறிப்பு தி டைம்ஸ் (The Times) என்ற நாளிதழில் 3 சனவரி 2009-இல் வந்த தலைப்புச் செய்தி ஆகும். இதற்கு இரண்டு அர்த்தங்கள் கற்பிக்கப் படுகின்றன: ஒன்று, பிட்காயின் கட்டச்சங்கிலியில் முதல் கட்டம் தோன்றியதற்கான காலமுத்திரை (timestamp) என்பது. மற்றொன்று, இன்றைய வங்கி முறைகளின் தரம் குறைந்த நிலைமையைப் பற்றிய ஏளனமான விமர்சனம் என்பது.[18]

முதல் பிட்காயின் அமெரிக்காவைச் சேர்ந்த எரால்டு பின்னே (Harold Thomas Finney) என்பவருக்குக் கொடுக்கப் பட்டது. ( இவர் ஏற்கனவே 2004-இல் மீண்டும் பயன்படும் உழைப்புச் சான்று (reusable proof-of-work) என்னும் முறையைச் செயல் படுத்தி இருந்தவர்.) [19] இவர் பிட்காயின் மென்பொருளை வெளியிடப்பட்ட அன்றே பதிவிறக்கம் செய்து, நகமோட்டோவிடம், 12 சனவரி 2009 அன்று பத்து பிட்காயின்களைப் பெற்றார்.[20][21] இவரைத் தவிர்த்து, வேய் டாய் (Wei Dai), நிக் சாபோ ஆகியோரும் பிட்காயினுக்கு ஆதரவு தெரிவித்தனர். (இவர்கள் முறையே பி-காசு(b-money), பிட் தங்கம் (bit gold) என்ற குறியீட்டு நாணயங்களை (cryptocurrencies) ஏற்கனவே உருவாக்கியவர்கள்.) [22] 2010-இல், லாஸ்லோ அன்யீஸ் (Laszlo Hanyecz) என்னும் நிரலர் (software developer) 10,000 பிட்காயின்கள் கொடுத்து இரண்டு பிட்சா (pizza) வாங்கினார்; இதுவே பிட்காயினைப் பயன்படுத்திய முதல் வணிகப் பரிமாற்றம் ஆகும்.[23] (10,000 பிட்காயின்களின் இன்றைய விலை (February 2019) $40 மில்லியன்கள் ஆகும்.)

2010 வரை நகமோட்டோ ஒரு மில்லியன் பிட்காயின்களை உருவாக்கி இருந்தார் என்று சொல்லப் படுகின்றது.[24] 2010-உக்குப் பிறகு நகமோட்டோவைக் காணவில்லை. அவர் காணாமல் போவதற்கு முன் கேவின் ஆன்டர்சன் (Gavin Andresen) என்பவரிடம் பிட்காயின் மென்பொருள் பொறுப்புக்கள் ஒப்படைக்க பட்டன. அன்று முதல் ஆன்டர்சன் பிட்காயின் நிறுவனத்தின் (Bitcoin Foundation) மேம்பாட்டாளராக பணி புரியலானார்.[25][26] அதன்பின், ஆன்டர்சன் பிட்காயினின் மேம்பாட்டுக்கான பொறுப்புக்களைப் பலரிடத்திலும் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். இதனால் பிட்காயின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதில் ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு வரலாயிற்று.[26][27]

2011-2012

பிட்காயினில் உழைப்புச் சான்று நடைமுறைக்கு வந்த பிறகு, பிட்காயினைப் பெரிதும் பயன்படுத்தியவர்கள் கள்ள வாணிபம் செய்தவர்களே. எடுத்துக் காட்டாக, பட்டுப் பாதை சந்தை (Silk Road marketplace) என்ற கள்ள வாணிப இணையத்தில், பிட்காயின் ஏற்றுக் கொள்ளப்பட்டு (போதைப்) பொருட்கள் விற்கப் பட்டன. பிப்ரவரி 2011-இல் தொடங்கி 30 மாதங்கள் இயங்கிய இந்த கள்ள வாணிப நிறுவனம் 9.9 மில்லியன் ($214 மில்லியன்) பிட்காயின்களை பரிமாற்றம் செய்தது.[28]

லைட்காயின் (அதாவது, ஆல்ட்காயின் ) என்ற மற்றுமொரு குறியீட்டு நாணயம் (cryptocurrency) அக்டோபர் 2011-இல் தோன்றியது.[29] அதன் பின்பு பல ஆல்ட்காயின்கள் தோன்றின.[30] இருப்பினும், பிட்காயின் எல்லாவற்றிலும் முதன்மையானதாகவே இருந்தது.

பிட்காயின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. 9 சனவரி 2012-இல் $7.38-ஆக இருந்து 25 சனவரி 2012-இல் $3.80-ஆகச் சரிந்தது. ஆகத்து, 2012-இல் $16.41-ஆக உயர்ந்து பிறகு 30 ஆகத்து 2012-இல் $7.10-ஆக வீழ்ந்தது.[31]

2013-2016

பிட்காயின் மதிப்பு 2013-இல் $13,30-இலிருந்து $770-ஆக ஏறியது.[32]

மார்ச் 2013-இல் பிட்காயின் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டது. பிட்காயினைச் செயல் படுத்திய ப்ளாக்செயின் என்னும் சங்கிலி இரண்டாகப் பிரிந்து ஒவ்வொரு சங்கிலியிலும் வெவ்வேறு விதிமுறைகள் தோன்றின. இந்த இரண்டு சங்கிலிகளும் ஒரே நேரத்தில் தனித்தனியாக இயங்கி பணப் பரிமாற்றத்தில் ஈடு பட்டன. ஆறு மணி நேரங்கள் இவ்வாறு நடந்த பிறகு, பிட்காயின் மென்பொருள் பழைய பதிப்பு 0.7-உக்கு மாற்றப் பட்டது (downgraded ).[33] இதனால் வந்த குழப்பங்களினால், மவுண்ட் காக்ஸ் என்ற சப்பானிய பிட்காயின் பணப் பரிமாற்றக் கூடம் ( Mt.Gox, Bitcoin Exchange, Shibuya, Tokyo,Japan) பிட்காயின் பரிமாற்றங்களை நிறுத்த, பிட்காயின் மதிப்பு $37-ஆக வீழ்ந்தது.[34][35] மீண்டும் ஏப்ரல்,2013-இல் பிட்இன்ஸ்டன்ட் (BitInstant) என்ற அமெரிக்க பிட்காயின் பணப் பரிமாற்றக் கூடம் , மவுண்ட் காக்ஸ் ஆகிய இரண்டிலும் பிட்காயின் பணத் தட்டுப்பாடு உண்டாகவே,[36] அதன் விளைவாக, பிட்காயின் அப்போதைய மதிப்பு $266-இலிருந்து $76-ஆகக் குறைந்தது. இந்நிலையில், அமெரிக்க அரசாங்க நிறுவனமான பின்சென் (FinCEN - Financial Crimes Enforcement Network) பிட்காயின் போன்ற பண நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமுறைகளை வெளியிட்டது.[37][38][39] 10,ஏப்ரல்-இல் பிட்காயின் $259 ஆகி பிறகு மூன்று நாட்களிலேயே $45 ஆயிற்று.[31] இந்நிலையில், 15 மே 2013 அன்று அமெரிக்க அரசு அதிகாரிகள், மவுண்ட் காக்ஸ் தம் பணப் பரிமாற்றங்களை பின்சென் (FinCEN) -உடன் பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, மவுண்ட் காக்ஸ்-இன் வரவு-செலவு கணக்கு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.[40][41] 23 ஜூன் 2013-இல் அமெரிக்க அரசாங்க நிறுவனம் டி.ஈ .ஏ (DEA - US Drug Enforcement Administration) 11.02 பிட்காயின்களைப் (முதன் முதலாக)[42][43] பறிமுதல் செய்ததாக அறிவிக்கப் பட்டது.[44] பின்பு அக்டோபர் 2013-இல் அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான FBI, பட்டுப் பாதை சந்தை-இன் உரிமையாளரான ராஸ் உல்ப்ரிக்ட் (Ross William Ulbricht) என்பவரைச் சிறைப் பிடித்து, 26,000 பிட்காயின்களைக் கைப்பற்றியது.[45] 30 நவம்பர் 2013-இல் பிட்காயின் மதிப்பு $1,163-உக்கு உயர்ந்து, சனவரி 2015-இல் $152-ஆகச் சரிந்தது.[31]

5 திசம்பர் 2013-இல் சீன அரசு வங்கி (People's Bank of China) பிட்காயினைச் சீனாவில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்தது.[46] அதற்குப் பிறகு, பிட்காயினைப் பயன்படுத்தி சீனாவில் எந்த பொருளும் வாங்க இயலாமல் போய் விட்டது.[47]

பிப்ரவரி 2014-இல் மவுண்ட் காக்ஸ் (Mt. Gox) தம் நுகர்வோர்களிடம் (customers) இருந்து 850,000 பிட்காயின்கள் ($500 மில்லியன்) திருடப் பட்டுவிட்டன என்று கூறிய பிறகு, பிட்காயின் அப்போதைய மதிப்பு $867-இலிருந்து $439-ஆக சரிந்தது.

2017-2018

பிட்காயின் மதிப்பு மீண்டும் உயர்ந்து, 2018-இல் $11,480-இலிருந்து $5,848 வரை ஏறியும் இறங்கியுமாக இருந்தது.

வடிவமைப்பு (Design)

கட்டச்சங்கிலி (Blockchain)

மாதம் ஒன்றுக்கு நடைபெறும் பிட்காயின் பரிமாற்றங்கள் (logarithmic scale)
பரிமாற்றங்களில் செலவழிக்காத மீதி பணம்

பிட்காயின், தொடரேடு அல்லது கட்டச்சங்கிலி (blockchain) என்று அழைக்கப் படும் தொழில் நுட்பத்தின் துணைகொண்டு ஒரு பெரிய வரவுப் பதிவேடு (ledger) போன்று கணினி வலையத்தில் (computer network) செயல் படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பதிவேடு ஒரு பொது பதிவேடு ஆகும்; அதாவது, கணினி வலையத்தில் உள்ள ஒவ்வொரு கணினிக்கும் இந்தப் பதிவேடு சொந்தமாகும். இந்தக் கணினிகளுக்கு கணுக்கள் (nodes) என்று பெயர். இதனால், பிட்காயின் வரவுப் பதிவேட்டை, பரவிய வரவுப் பதிவேடு (distributed ledger) என்று கூறுவர். இந்தப் பதிவேட்டில், பிட்காயினில் நடக்கும் எல்லா பரிமாற்றங்களும் பதிவு செய்யப் படும்.[48] எடுத்துக் காட்டாக, "எழிலன், மாறன் என்பவருக்கு ฿100, Mar 16 08:12:04-இல் அனுப்பினார்" என்பது ஒரு பரிமாற்றம். ஒரு கணு, இந்த பரிமாற்றத்தைச் சரி பார்த்து, கட்டம் ஒன்றை உருவாக்கி, அக் கட்டத்தில் இதை எழுதி, பின் தன்னிடம் உள்ள சங்கிலியின் நகலில் இணைத்துக் கொள்ளும். பின் அந்தக் கட்டம் தன்னைச் சுற்றியுள்ள கணுக்களுக்கும் அனுப்ப, அக் கணுக்கள் ஒவ்வொன்றும் அதைச் சரி பார்த்து, பின் அக் கட்டத்தைத் தம்மிடம் உள்ள சங்கிலியின் நகலில் இணைத்துக் கொள்ளும். இவ்வாறாக, அந்தப் பரிமாற்றம் எல்லா கணுக்களையும் அடைந்து, எல்லா கட்டச்சங்கிலிகளிலும் இணைக்கப் படும்.[49] இவ்வாறாக, பிட்காயின் சங்கிலியில் 10 நிமிடங்களுக்கு ஒரு கட்டம் வீதம் உருவாக்கப் பட்டு இணைக்கப் படுகின்றது. இவ்வாறு இணைக்கும்போது, இருமுறைச் செலவு (Double spending) நடவாமல் பார்த்துக் கொள்வது கணுக்களின் இன்றியமையாத பணிகளில் ஒன்று. (இருமுறைச் செலவு யாதெனின், எடுத்துக் காட்டாக, 10 பிட்காயின்கள் என்ற ஒரு தொகையைக் கொடுத்து ஒரு பொருள் வாங்கி விட்டால், இந்த 10 பிட்காயின்கள் செலவழிந்து போனதாகக் கருதப் படும். செலவழிந்த அதே 10 பிட்காயின்களை வைத்து இன்னுமொரு பொருள் வாங்கவிடக் கூடாது. அப்படி வாங்கவிட்டால் அது இருமுறைச் செலவு எனப்படும்.)

பரிமாற்றங்கள் (Transactions)

பிட்காயினில், பரிமாற்றங்கள் போர்த்து (Forth) போன்ற ஒரு கணினி மொழியில் எழுதி செயல் படுத்தப் படுகின்றன.[50] பரிமாற்றத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன: உள்ளீடு(input), வெளியீடு (output). உள்ளீடு என்பது ஒருவருக்குத் தற்போதைய கையிருப்பு எவ்வளவு இருக்கிறது, அது எங்கிருந்து வருகின்றது என்ற குறிப்புகள் கொண்டிருக்கும். வெளியீடு என்பது பணம் எவ்வளவு, யாருக்குப் போகவேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும்.[51] எடுத்துக் காட்டு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

பரிமாற்றம் 1: அமுதன் அண்ணாமலை

  • உள்ளீடு
    • கையிருப்பு: ฿ 800 /*அமுதனிடம் உள்ள பணம் 800; அல்லி என்பவர் அமுதனுக்கு அனுப்பியது என்று வைத்துக் கொள்வோம்.*/
    • பரிமாற்றம் 0-இன் குறுக்க எண்: e5d8ee39a430901c91a5917b9f2dc19d6d1a0e9cea205b009ca73dd04470b9a6 /*இது அல்லி அமுதனுக்கு அனுப்பிய பரிமாற்றத்தின் குறுக்க எண் (hash) */
  • வெளியீடு
    • அனுப்பும் பணம்: ฿ 500 /* அண்ணாமலைக்கு அனுப்பும் பணம் */
    • பெறுநர் முகவரி :
      • அண்ணாமலை
      • அண்ணாமலை பற்றிய ஏனைய குறிப்புகள்

பரிமாற்றம் 2: அண்ணாமலை அழகரசி

  • உள்ளீடு:
    • கையிருப்பு: ฿ 500 /*அண்ணாமலையிடம் உள்ள பணம் 500; அமுதன் அனுப்பியது*/
    • பரிமாற்றம் 1-இன் குறுக்க எண்: f7d8eea93103409c91a5917b9f2dc19d6d1a0e9cea205b00973cadd04470a6b9 /* இது அமுதன் அண்ணாமலைக்கு அனுப்பிய பரிமாற்றத்தின் குறுக்க எண் */
  • வெளியீடு:
    • அனுப்பும் பணம்: ฿ 350 /*฿ 500-இல் ฿ 350 அழகரசிக்கு அனுப்பப் படுகின்றது.*/
    • பெறுநர் முகவரி :
      • அழகரசி
      • அழகரசி பற்றிய ஏனைய குறிப்புகள்

விளக்கம்

ஒருவர் (அண்ணாமலை) மற்றொருவருக்கு (அழகரசி) பணம் (฿ 350) அனுப்பவேண்டுமானால், அவருக்கு முதலில் கையிருப்பு (฿ 500) எவ்வளவு இருக்கிறது என்றும், அது எவ்வாறு இவருக்குக் கிடைத்தது (அதாவது, இதற்கு முன் நடந்த எந்த பரிமாற்றத்திலிருந்து(அல்லிஇடமிருந்து) கிடைத்தது) என்றும் தனது பரிமாற்றத்தின் உள்ளீட்டுப் பகுதியில் குறிப்பிட வேண்டும். (ஒரு பரிமாற்றத்தைக் குறிப்பிட அதன் குறுக்க எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.) வெளியீட்டுப் பகுதியில் எவ்வளவு பணம் அனுப்பப் படுகின்றது எனவும், அப் பணத்தைப் பெறுபவரின் முகவரிக் குறிப்புகளையும் தர வேண்டும்.[52]

அலகுகள் (Units)

பிட்காயினின் அலகு பிட்காயின் என்பதாகும். இதனுடைய குறி (code) BTC , XBT ஆகியன.[53] பொதுவாக எழுதும்போது ฿ என்ற எழுத்து பயன் படுத்தப் படுகின்றது.[54] மேலும்:

1 மில்லிபிட்காயின் (mBTC) = 0.001 பிட்காயின்கள் (BTC) [55]

1 சதோசிஸ் (satoshis) = 0.00000001 பிட்காயின்கள் [56]

பரிமாற்ற கட்டணம் (Transaction fees)

பரிமாற்ற கட்டணம் என்பது பிட்காயின் கட்டச்சங்கிலியில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய (எடுத்துக் காட்டாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பணம் அனுப்ப) ஆகும் கட்டணச் செலவு ஆகும். இன்றைய நிலையில் (22 பிப்ரவரி 2019) ஒரு சுரங்கமர் (miner) பரிமாற்ற கட்டணத்தைத் தான் விரும்பிய அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். சனவரி 2011-இல், இக் கட்டணம் $0.0001 இருந்து, சனவரி 2017-இல் $0.392-உக்கு உயர்ந்து, பின் சனவரி 2018-இல் $52.183-ஆக ஆயிற்று. இன்றைய நிலையில் (17 பிப்ரவரி 2019) இந்தக் கட்டணம் $0.212 என்று குறைந்து விட்டது.[57] ஒரு சுரங்கமர் எடுத்துக் கொள்ளும் கட்டணம் அவர் பயன்படுத்தும் சேமிப்பகம் (storage), பரிமாற்றத்தில் இருக்கும் உள்ளீடு, வெளியீடு ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்து இருக்கும்.[50]

உடைமை (Ownership)

ஒருவர் பிட்காயினைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவர் முதலில் பிட்காயின் கட்டச்சங்கிலியில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, ஒரு முகவரியைப் பெற வேண்டும். முகவரி என்பது 25 முதல் 34 எழுத்துக்கள் கொண்ட ஒரு சொல்லாகும். எடுத்துக் காட்டாக, 1BvBMSEYstWetqTFn5Au4m4GFg7xJaNVN2 என்பது 34-எழுத்துக்கள் கொண்ட ஒரு முகவரி ஆகும்.

இது போன்ற ஒரு முகவரியை அடைய பின்வரும் முறை கடைபிடிக்கப் படுகின்றது: முதலில் ஒரு ஊகிக்கவியலா எண் (random number)-ஐ எடுத்துக் கொண்டு, அதற்கேற்ற ஒரு பொது-திறவி (pulic key) கண்டு பிடிக்கப் படுகின்றது. இந்த பொது-திறவியின் மீது, SHA-256, RIPEMD-160 ஆகிய குறுக்கங்களை (hash functions) செலுத்தி, இறுதியாக முகவரி பெறப் படுகின்றது. அந்த ஊகிக்கவியலா எண்ணை அவர் தனது தனியர்-திறவியாக (private key) கவனத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு வருகின்ற பணமெல்லாம் அவர் முகவரிக்கே வரும். அந்தப் பணத்தை உரிமை கொண்டாட வேண்டுமாயின், அந்தத் தனியர்-திறவி தேவைப் படும். தனியர்-திறவி தொலைந்துவிட்டால், பணம் அவர் கையை விட்டுப் போனது போலத்தான் என எண்ணிக் கொள்ள வேண்டும்.[28] தனியர்-திறவி இல்லாமல், பிட்காயின் வலையம் ஒருவரின் உரிமையை ஏற்றுக் கொள்ளாது.[28]

பிட்காயினில் தனியர்-திறவியைக் கொண்டு முகவரியைக் கணித்தல் மிக எளிது. ஆனால், இந்த முகவரியை வைத்துக் கொண்டு, அதன் தனியர்-திறவியைக் கண்டு பிடித்தல் மிக மிகக் கடினம்.[50]

ஒரு முறை, 2013-இல் ஒருவர் தன் தனியர்-திறவியைத் தொலைத்து விட்டதால், தனக்குச் சேர வேண்டிய ฿ 7,500-ஐயும் (அப்போது $7.5 மில்லியன்) இழந்தார்.[58] ஏறத்தாழ 20% பிட்காயின்கள் ( சூலை 2018-இல், $20 பில்லியன்) இவ்வாறு இழக்கப் பட்டன.[59][60] இது மட்டுமில்லாமல், ஏறத்தாழ ஒரு மில்லியன் பிட்காயின்கள் (சூலை 2018-இல் $7 பில்லியன்) களவும் போயின.[61]

பிட்காயின் சுரங்கம் அகழ்தல் (Mining)

முதன் முதலில் சுரங்க அகழ்வுக்குப் பயன்படுத்திய கணினி: உழைப்புச் சான்று செயல்படுத்த பயன்படுத்தப் பட்டது.[62]
மேம்படுத்தப் பட்ட சுரங்க அகழ்வுக்கான கணினி.
இன்றைய சுரங்க அகழ்வுக்கான கணினி [63]
Semi-log plot of relative mining difficulty

சுரங்கம் அகழ்தல் வேலையைச் சுரங்கமர்கள் (miners) செய்கின்றனர். சுரங்கமர்கள் பரிமாற்றங்களைச் சரி பார்த்து, உழைப்புச் சான்றிதழ் நல்கி, ப்ளாக்செயின் சங்கிலியில் இணைத்து, அதைப் பாதுகாவலான நிலையில் வைக்கின்றனர். கட்டத்தின் நேரம் சராசரியாக 10 நிமிடம் என்று வைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும், 2,016 கட்டங்களைச் சேர்த்தவுடன், உழைப்புச் சான்றிதழின் கணக்கின் கடினத்தன்மை மாற்றப்பட்டு, கட்டத்தின் நேரம் சராசரியாக 10 நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப் படுகின்றது.[50] 1 மார்ச் 2014 முதல் 1 மார்ச் 2015 வரை, புதிய கட்டங்கள் உருவாக்கும்போது சுரங்கமர்கள் பயன்படுத்திய ஒரேமுறை எண்கள் 16.4 குவின்டில்லியன் (quintillion)-இலிருந்து 200.5 குவின்டில்லியன்-உக்கு அதிகரித்தது.[64] புது கட்டங்கள் தொடர்ச்சியாக சேர்த்துக்கொண்டே இருப்பதால், தாக்கு நிரலர்கள் (hackers) பிட்காயினுக்குள் ஊடுருவி ஏதேனும் மாற்ற முயற்சி செய்வது மிகக் கடினமாக ஆகி வருகின்றது.[48]

வழங்கல் (Supply)

புழக்கத்தில் இருக்கும் மொத்த பிட்காயின்கள்

சுரங்கமர் செய்யும் பணிக்கு இரண்டு வழிகளில் அவருக்கு வருமானம் வருகிறது: ஒன்று, புதிய கட்டம் உருவாக்குவதால், அதற்குக் கூலியாக புதிதாக உருவாக்கப் பட்ட பிட்காயின் ฿12.5 (9 சூலை 2016);[65] மற்றொன்று, பரிமாற்றங்கள் செய்யும் போது, அதற்கான பரிமாற்றக் கட்டணம்.[66] பரிமாற்றக் கட்டணத்தைக் கொடுப்பதற்காக, பிட்காயின் பரிமாற்றம் நடக்கும் போது , ஒவ்வொரு முறையும், காசுதளம் (coinbase ) என்னும் சிறப்புப் பரிமாற்றம் ஒன்றும் அத்துடன் சேர்ந்து நடக்கும்.[50] 210,000 கட்டங்கள் செய்து முடிக்கப் படும் ஒவ்வொரு முறையும் (அதாவது நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை) புதிய கட்டம் செய்வதற்கான கூலி பாதியாக்கப் படும். (அதாவது, இப்போதுள்ள ฿12.5, ฿6.25 ஆகி, பிறகு ฿3.125 ஆகி, - இவ்வாறு குறைந்து கொண்டே போகும்.) இறுதியில், கூலி ฿ 0.0 ஆக, 2140-ஆம் ஆண்டில் 21 மில்லியன் பிட்காயின்கள் உருவாக்கப் பட்டுவிடும். அதன் பிறகு, சுரங்கமர் கூலி, பரிமாற்றக் கட்டணத்தில் இருந்து மட்டுமே வரும்.[67]

இந்த கணக்கெல்லாம் நகமோட்டோ போட்டு வைத்தது. அதாவது, அவர் கருத்துக் படி, பிட்காயினில் செயற்கைத் தட்டுப்பாட்டை (artificial scarcity) முதலில் உருவாக்கி, அதன் மொத்த எண்ணிக்கை 21 மில்லியனைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வது. இப்போது, 10 நிமிடத்திற்கு ஒரு முறை, எவ்வளவு பிட்காயின்கள் தற்போது உள்ளன என்று வெளியிடப் படுகின்றது. நான்காண்டுகட்கு ஒரு முறை அதன் உற்பத்தி பாதியாகக் குறைக்கப் பட்டு, கடைசியில் 21 மில்லியனும் புழக்கத்திற்கு வந்த பிறகு, பிட்காயின் உற்பத்தி நிறுத்தப் படும்.[68]

பிட்காயின் பணப்பைகள் (Bitcoin wallets)

Bitcoin Core, நிறை வாங்குநர்
Electrum, குறை வாங்குநர்
தாளில் அச்சடிக்கப் பட்ட பணப்பை.
பித்தளை பிட்காயின்
வன்பொருள் (hardware) பணப்பை

பொதுவாக பணப்பை என்பது பணம் வைக்கும் பையைக் குறிக்கும். ஆனால் பிட்காயின் பணப்பை என்பது திறவி (key) எனப்படும் எண்ணை யும் அதைப் பயன்படுத்தும் மென்பொருளையும் குறிக்கும். குறியீட்டு நாணயத்தைச் சேர்த்து வைக்கும் பணப்பை குறியீட்டு நாணயப் பணப்பை எனப்படும். இது பொது-திறவி குறியீட்டியல் (Public-key cryptography) தனியர்-திறவி குறியீட்டியல் (Private-key cryptography) ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயல்படுத்திய மென்பொருளாகும். பிட்காயின் பரிமாற்றத்திற்குத் தேவையான அனைத்துத் தரவுகளும் பிட்காயின் பணப்பையில் இருக்கும்.[69] இந்த பணப்பையை, வாங்குநர் (client) தம் கணினியில் மிக கவனமாக சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பொது-திறவியும் (public-key) ஒரு தனியர்-திறவியும் (private-key) இல்லாமல் பிட்காயின் பணத்தைத் தொடமுடியாது;[70] பரிமாற்றமும் செய்ய இயலாது. எனவே, குறைந்தது இந்த இரு திறவிகளாவது நுகர்வோரின் பணப்பையில் இருக்க வேண்டும்.

பணப்பை வாங்குநர்களில் பல வகைகள் உண்டு.

நிறை வாங்குநர்கள் (Full clients)

இவர்கள் தங்கள் பணப்பைகளை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்பவர்கள். பிட்காயினின் முழு கட்டச்சங்கிலியையும் பதிவிறக்கம் செய்து, பரிமாற்றங்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். (2018-இன் இறுதியில் இச் சங்கிலியின் அளவு 197 GB-ஆக இருந்தது.) [71] மற்றவர்களை நம்ப இயலாமல் இருக்கும் போது இவ்வாறு செய்வதுதான் பாதுகாப்புக்கு உகந்தது.[72] ஆனால், கட்டச்சங்கிலிகள் பெரிதாவும் சிக்கல் வாய்ந்ததாகவும் இருப்பதால், அதைப் பதிவிறக்கம் செய்து சரி பார்க்க நல்ல கணிப்பொறிகள் தம் வசம் இருக்க வேண்டும். குறிப்பாக, புதிதாக இணைக்கப் படும் கட்டங்களைச் சரி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், இக் கட்டங்கள் சங்கிலியில் கவைகளை உருவாக்கி, பல சங்கிலிகளைத் தோற்றுவிக்கும் இடர் நிலைக்குத் தள்ளப்படாமல் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.

குறை வாங்குநர் (Lightweight clients )

இவர்கள் நிறை வாங்குநர்களைப் போல சங்கிலியைச் சரி பார்ப்பவர்கள் அல்லர். மாறாக, இவர்கள் நிறை வாங்குநர்கள் துணைகொண்டு தங்கள் பரிமாற்றங்களைச் செய்பவர்கள். இதனால், இவர்கள் விரைவாகவும், (கணினி இயங்க) குறைந்த மின்செலவிலும் தங்கள் வேலையை முடித்துக் கொள்ள இயலும். ஆனால், இவர்கள் சேவை வழங்கிகள் (servers) கொடுக்கின்ற தகவல்களை 100% நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள். கட்டச் சங்கிலியில் கவைகள் தோன்றுமாயின், மிக நீளமாக உள்ள சங்கிலியைத் தேர்ந்தெடுத்து, அதில் பரிமாற்றம் செய்து கொண்டு மன நிறைவு அடைபவர்கள்.[73] நிறை வாங்குநர்களைப் போல, இவர்களும் தங்கள் பணப்பைகளைக் கவனமாகத் தங்கள் கணினியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இணையத்தள பணப்பைகள் (online wallets)

இதில் வாங்குநர்களுக்கு இணையத்தளத்திலேயே ஒரு சேவை-வழங்கி (server) -இல், பணப்பைகள் வைத்துக் கொடுக்கப் படும். எனவே, இவர்கள் பணப்பையைத் தங்கள் கணினியில் வைத்துக் கொள்வதைப் பற்றி கவலை பட தேவை இல்லை.[74][75] ஆனால், சேவை-வழங்கி (server)-இலிருந்து பணப்பைகள் களவு போக வாய்ப்பு உண்டு என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 2014-இல், சப்பானிய பிட்காயின் பணப் பரிமாற்றக் கூடமான மவுண்ட் காக்ஸ் (Mt. Gox) (உலகிலேயே மிகப் பெரிய பிட்காயின் பரிமாற்றக் கூடம்) தாக்கப் பட்டு, 740,000 பிட்காயின்கள் திருடப் பட்டன.[76] 2011-இல் தாக்கப் பட்டு 2000 பிட்காயின்கள் திருடப் பட்டன.[77] இந்நேரங்களில், பணப்பைகளும் களவாடப் படலாம். இது நடந்த பிறகு, "[உன்னிடம்] திறவி இல்லையா, [இது] உன் பணம் கிடையாது," என்பது பலரும் அறிந்த படப்பகடி(meme)-ஆக ஆகி விட்டது.[78]

இயற்பொருள் பணப்பை (Physical wallet)

பணப்பை தகவல்கள் அச்சடிக்கப் பட்ட தாள்கள் இந்த வகையைச் சேரும். ஒரு சில நாணயங்களின் பின் பக்கத்திலும் பணப்பை தகவல்கள் பதிக்கப் பட்டிருக்கும்.[79]

வன்பொருள் பணப்பை (Hardware wallet)

இதில், பணப்பை தகவல்கள் ஒரு வன்பொருளின், நுண்கட்டுப்படுத்தி (microcontroller) போன்ற, மின்னியல் பாகத்தில் புதைந்திருக்கும். இதை நச்சுநிரல்கள் (virus) போன்றவை தாக்க இயலாது.[80]

பணப்பை செயலாக்கம் (Implementations)

முதன் முதலில் (2009) செயலாக்கப் பட்ட பணப்பைக்கான செய்நிரல் (program) பிட்காயின் (Bitcoin) என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது; அது சதோசி வாங்குநர் (Satoshi client) என்றும் அழைக்கப் பட்டது.[15] பிறகு இது கியூ.டி (Qt) என்ற மென்பொருள்-கருவித்தொகுதி (software toolkit) -உக்கு மாற்றப்பட்டு பிட்காயின்-கியூ.டி (Bitcoin-Qt) என்று அழைக்கப் பட்டது.[81] பின்னர், இது மறு பதிப்பு செய்யப் பட்டு, பிட்காயின் மையம் (Bitcoin Core) என்ற பெயரில் வெளியிடப் பட்டது.[82][83] பிட்காயின் மையம் மிகச் சிறப்பாக உருவாக்கப் பட்ட பிட்காயின் செயலாக்கம் என்றும் கருதப் படுகின்றது.

கவைகள் (Forks)

பிட்காயின் மையம் (Bitcoin Core) ஒரு சிறந்த வாங்குநர் (client) என்றும் கொள்ளலாம். ஏனைய செயலாக்கங்களான பிட்காயின் எக்ஸ்.டி (Bitcoin XT), பிட்காயின் அன்லிமிடட் (Bitcoin Unlimited), பாரிட்டி பிட்காயின் (Parity Bitcoin) போன்றவை பிட்காயின் மையத்தின் கவைகளாகக் கருதப் படுகின்றன.[27][84]

கவைகள் இரண்டு வகைப் படும்: மென்கவை, கடுங்கவை. 1 ஆகத்து 2017-இல், பிட்காயினில் ஒரு சிலர் சங்கிலியில் உள்ள கட்டத்தின் சேமிப்பு (storage) அளவை 1 MB-இலிருந்து 8 MB-ஆக மாற்ற விரும்பினர். மற்ற ஒரு சிலர் இதை எதிர்க்க, தோன்றிய முரண்பாடு கவையாக உருவெடுத்தது; அதாவது சங்கிலியில் பிரிவு உண்டாகி, புதிய சங்கிலி பிட்காயின் கேஷ் (Bitcoin Cash) என்று அழைக்கப் பட்டது.[85] 24 அக்டோபர் 2017-இல், உழைப்புச் சான்றை மேம்படுத்தி பிட்காயின் கோல்ட் (Bitcoin Gold) என்ற மற்றொரு கடுங்கவை உருவாக்கப் பட்டது.[86]

பரவலாக்கம், மையமாக்கம் (Decentralization and Centralization)

பரவலாக்கம் (Decentralization)

வழக்கில் இருக்கும் நாணயமுறைகளைப் போலன்றி, பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்த நடுவண் அமைப்பு என்று ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

அடையாளம் இல்லாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும். பிட்காயின்களைத் தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ அல்லது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகளிளோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது. பிட்காயின் பரவலாக்கத் தன்மையின் இயல்பைக் கீழ்க் கண்டவாறு பட்டியலிடலாம்:

  • பிட்காயின், தொடரேடு அல்லது கட்டச்சங்கிலி (blockchain) என்று அழைக்கப் படும் தொழில் நுட்பத்தை வைத்து இணையர்-இணையர் (peer-to-peer) என்னும் கணினி வலையத்தில் செயலாக்கப் பட்டுள்ளது.[2]
  • இதை மேற்பார்வை இட்டு மேலாண்மை செய்யும் உரிமை ஒவ்வொரு சுரங்கமருக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது, அந்த உரிமை பரவலாக்கப் பட்டுள்ளது; தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் கொடுக்கப் படவில்லை.[15]
  • பிட்காயின் கட்டச்சங்கிலி ஒரு குறிப்பிட்ட கணினியில் மட்டும் இல்லாமல், இணையர் ஒவ்வொருவரின் கணினியிலும் ஒரு நகல் உள்ளது.[87]
  • எவரும் சுரங்கமராக வரலாம்.[50]
  • புதிய கட்டங்கள் போட்டியின் அடிப்படையில் சேர்க்கப் படுகின்றன. எந்த சுரங்கமருடைய கட்டம் சங்கிலியில் சேர்க்கப் படும் என்று முன்கூட்டியே யாருக்கும் தெரியாது.[50]
  • பிட்காயின் புதிய காசு வெளியிடப்படும் முறையும் பரவலாக்கப் பட்டுள்ளது. புதிய கட்டங்களை உருவாக்கும் சுரங்கமர்களுக்குக் கூலியாகக் கொடுக்க பிட்காயின் புதிய காசு வெளியிடப்படுகின்றது.[65]
  • பிட்காயினில் யார்வேண்டுமானாலும் முகவரியை உருவாக்கிக் கொள்ளலாம்.[50]
  • பிட்காயினில் யார் வேண்டுமானாலும் பரிமாற்றம் நடத்தலாம்.[88]

மையமாக்கம் (Centralization)

பிட்காயின் பரவலாக்க முறையில் செயல் படுத்தப் பட்டிருந்தாலும், நடை முறையில் அது அவ்வாறு முற்றிலுமாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பயனர்கள் (users) பிட்காயின் பணத்தை ஒருவருக்கொருவர் நேரடியாகவே அனுப்பிக் கொள்ள முடியும் எனினும் நடை முறையில் இடைத்தரகர்கள் துணை தேவைப் படுகிறது.[28] தங்கள் செலவைக் குறைக்க, ஒரு சில சுரங்கமர்கள் ஒன்று கூடி, சுரங்கமர் அணி ஒன்றை உருவாக்கி சுரங்க பணிகளைச் செய்வார்கள். (சுரங்கப் பணி என்பது, பரிமாற்றங்களைச் சரி பார்ப்பது, புது கட்டங்களை உருவாக்குவது போன்றவை ஆகும்).[28][89][90] ஆனால் இவ்வாறு செய்யும் போது, சுரங்கமர் அணி மிகவும் அதிக கணித் திறன் (computing power) பெற்று, பிட்காயின் கட்டச்சங்கிலியின் சட்ட திட்டங்களை மீறும் அளவுக்கு வந்து விடும். எடுத்துக் காட்டாக, யாரும் கட்டச்சங்கிலியின் கணித் திறனில் 51% மேல் அடையக் கூடாது என்பது ஒரு சட்டம். ஏனென்றால், ஒருவர் 51% மேல் சென்று விட்டால், அவர் சங்கிலியைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வாய்ப்புக்கள் அதிகமாகும்.[91] 2013-இல் ஆறு சுரங்கமர் அணிகள் சேர்ந்து பிட்காயின் திறனில் 75% அளவு அடைந்து விட்டிருந்தனர். அது போலவே, 2014-இல் காஷ்.ஐஒ (Gash.io) என்ற பிட்காயின் பணப் பரிமாற்றக் கூடம் (exchange) 51% அளவுள்ள ஆற்றலை அடைந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பின், காஷ்.ஐஒ தன் திறனை 39.99%-ஆகக் குறைத்துக் கொண்டது.[92]

மேலும், பணப்பை மேற்பார்வை, வாங்குநர் மென்பொருட்கள் (client software), கட்டணம் சரி பார்த்தல் போன்றவற்றிலும் சிறுபான்மையரின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது பரவலாக்க முறைக்கு முரணானது.[91]

தனிமைக் காப்பு (Privacy)

"பிட்காயினில் நடைபெறும் பரிமாற்றங்கள் எல்லாமே மறைவிலேயே (இரகசியமாக) நடை பெறுகின்றன, எனவே நாம் செய்வது யாருக்குமே தெரியாது," என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், உண்மையில், பிட்காயினைப் போன்று வெளிப்படையான பணப் பரிமாற்றத் தளம் உலகில் வேறு எதுவும் இல்லை எனலாம்.

பிட்காயினில் பணம் எப்பொழுதும் ஒரு முகவரியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இந்த முகவரி யாருடையது என்று தெரியாமல் போனாலும், பரிமாற்றங்கள் அனைத்தும் வெளிப்படையாக எல்லோர் கண்களிலும் படும். பரிமாற்றங்களில் பல உள்ளீடுகள் (inputs) இருக்கும் போது, இந்த உள்ளீடுகள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாக இருக்கும் என பலர் ஊகிக்க வாய்ப்பு உண்டு.[93] மேலும், பணப் பரிமாற்றங்கள் நடக்கும் பொது பல சொந்த தரவுகள் பெறப் பட்டு, கணினியில் சேமித்து வைக்கப் படுகின்றன.[94] இவையெல்லாம் தனிமைக் காப்புக்கு உகந்தவை அல்ல.[95]

ஆனால், அதே நேரத்தில் பிட்காயின் வேண்டிய அளவுக்கு தனிமைக் காப்பையும் நுகர்வோர்களுக்குக் கொடுக்கின்றது. ஒருவரின் தனிமைக்கு காப்பு என்பது அவர் எந்த அளவுக்கு பிட்காயினைக் கவனமாகக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்தே இருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் தம் முகவரிக்குப் பணம் யாரேனும் அனுப்பி இருந்தால், அப் பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன், அவர் தம் முகவரியை உடனே மாற்றி விடுதல் நல்லது.[96] அதாவது, ஒரு முகவரியை ஒரு முறைக்கு மேல் பயன் படுத்தக் கூடாது. மேலும், ஒரு பணப்பைக்குப் பதிலாக, பல பணப்பைகளைப் பயன்படுத்துதல் நல்லது. ஒவ்வொரு பைக்கும் ஒரு முகவரி உண்டு. எனவே, ஒரு பைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மற்ற பைகளைப் பற்றித் தெரியாது. இது தனிமைக் காப்புக்கு நல்லது எனலாம். மேலும், ஒருவர் தன் முகவரியைத் தேவை இல்லாமல் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும் நல்லது.

சகமாற்றத் தன்மை (Fungibility)

ஒவ்வொரு பிட்காயினுக்கும் ஒரு வரலாறு உண்டு; அந்த வரலாற்றைக் கண்டுபிடிக்கவும் முடியும். ஏதேனும் பிட்காயின்கள் சூதாட்டம், போதை பொருள் விற்பனை ஆகியவற்றினோடு தொடர்பு கொண்டு இருக்குமாயின் அதைக் கண்டுபிடிக்க முடியும். ஆயினும், வணிகக் கூடங்கள் ஒரு சில பிட்காயின்களை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். இந்த அச்சத்தைப் போக்க, எல்லா பிட்காயின்களும், யார் வைத்திருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும், ஒரே மதிப்புள்ளவையே என்ற உறுதி கொடுக்கப் பட்டுள்ளது.[97]

பிட்காயினுக்கு பலவகையான நுகர்வு மென்பொருட்களும் பணப்பைகளும் செயலாக்கப் பட்டுள்ளன. அவற்றுள் ஒருசில:[98] பிட்காயின் கோர் (Bitcoin Core), பிட்காயின் வாலட் (Bitcoin Wallet), பிட்காயின் நாட்ஸ் (Bitcoin Knots), எலக்ட்ரம் (Electrum) ஆகிய இன்னும் பல. இவை அனைத்தும் பிட்காயின் மதிப்பை ஒரே அளவிலேயே கணிக்கின்றன.

விரிவாக்கத்தக்கமை (Scalability)

பிட்காயின் கட்டச் சங்கிலியில், கட்டத்தின் அளவு 32 MB வரை போகலாம் என்று முதலில் கூறப் பட்டது. ஆனால், பின்னால் 2010-இல், கட்டத்தின் அளவு 1 MB -ஆகக் குறைக்கப் பட்டது. இதனால், பரிமாற்றக் கட்டணம் மிகுதியானது மட்டுமல்லாமல், பரிமாற்றத்தின் விரைவும் குறைந்தது.[99] கட்டத்தின் அளவை மிகுதியாக்கினால், பிட்காயின் சங்கிலியில் கடுங்கவை தோன்றும் என்ற நிலை உருவானது. இதைத் தடுக்க, 24 ஆகத்து 2017-இல் செக்விட் (SegWit - Segregated Witness ) என்ற மென்பொருள் கடுங்கவையை மென்கவையாக்கி, பரிமாற்றத்தின் விரைவைப் பெரிதும் குறைக்காமல், கட்டத்தின் அளவை 1.8 MB வரை நீட்டித்தது.

பிட்காயின் அடிப்படைக் கொள்கைகள் (Ideology)

"தற்போது வழக்கத்தில் உள்ள (டாலர், ரூபாய், யூரோ போன்ற) பணத்தில் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவை நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது, நடுவண் வங்கி (central bank) போன்ற நிறுவனங்கள் பணத்தின் தரம், இன்றியமையாமை, பணத்தின் மதிப்பு ஆகியனவற்றைச் சிதைக்காமல் இருக்கும் என நாம் நம்புகிறோம். ஆனால், நடைமுறையில் அந்த நம்பிக்கைகள் வீண் போகின்றன," என்று சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) பிட்காயின் தொடக்கத்தில், தம் வெள்ளை அறிக்கையில், கூறி இருந்தார்.[100]

பிட்காயினில் ஆஸ்திரியத் (Austria) தாக்கம்

பரவலாக்கப் பட்ட ஒரு அமைப்பை வைத்து பணப் பரிமாற்றங்களை நடத்தலாம் என்ற கருத்து ஏற்கனவே ஆஸ்திரிய பொருளாதாரக் கோட்பாடுகளில் (Austrian school of economics) பொதிந்துள்ளன; குறிப்பாக, பிரெடெரிக் (Friedrich von Hayek) என்ற ஆஸ்திரிய பொருளாதார வல்லுநர் எழுதிய பண நாட்டுடைமை-நீக்கம் (Denationalisation of Money: The Argument Refined) [101] என்ற நூல், ஆக்கம் (production), பகிர்தல் (distribution), மேலாண்மை(management) ஆகிய மூன்று நிலைகளிலும் பணத்தைப் பற்றிய எந்த இடத்திலும் நடுவண் வங்கியின் தலையீட்டை முழுக்க இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியறுத்துகிறது. இந்த கருத்தினால் உந்தப்பட்டு தான் சத்தோசி நகமோட்டோ பரவலாக்கப் பட்ட பிட்காயின் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார் என்று ஐரோப்பிய நடுவண் வங்கி (European Central Bank) கூறியது.[102]

அரசின்மையர் , மிகை உரிமை வேண்டுநர் கோட்பாடுகள் (Anarchist and Libertarian theories)

பிட்காயின் என்ற கருத்தால் கவரப் பட்டவர்கள் அரசின்மையர் (அரசு இன்மையர் - anarchists) , மிகை உரிமை வேண்டுநர் (libertarians) எனப்படுவோர்களே என்று நியூயார்க் டைம்ஸ் (The New York Times) என்ற நாளிதழ் கூறியது. பிட்காயின் தொடக்க கால ஆதரவாளரான ரோஜர் வெர் (Roger Ver), "முதன் முதலில் பிட்காயினில் ஆர்வம் காட்டியவர்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளின் நிலைப்பாடு காரணங்களுக்காகவே அவ்வாறு செய்தனர். பிட்காயின் என்பது அரசும் பணமும் பிரிந்து இயங்க உதவும் சிறந்த பெரும் நுட்பம்," என்று கூறினார்.[100] தி எக்கனாமிஸ்ட் (The Economist) "மக்களின் பணப் பரிமாற்றத்தை அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்து காப்பாற்றும் தொழில் நுட்ப அரசின்மையருடைய (techno-anarchist) திட்டம்," என்று கூறியது.[103] அரசாங்க, சமூக கட்டுப்பாட்டில் இருந்து பணப் பரிமாற்றத்தை மீட்பதே பிட்காயின் முதல் நோக்கமாகும் என நைசல் டாட் (Nigel Dodd) பிட்காயினின் சமுதாய வாழ்க்கை (The Social Life of Bitcoin) என்னும் நூலில் வாதிட்டுள்ளார்.[104] "பிட்காயின் என்பது அடிப்படையில் நிறுவனங்களுக்கும் (establishment), கட்டகங்களுக்கும் (system) அரசாங்கத்திற்கும் எதிரானது. பிட்காயின் மனிதநேயத்தை அடிப்படியாகக் கொண்டது," என்று "பிட்காயின் விடுதலைப் பறை சாற்றுதல்" (The Declaration of Bitcoin's Independence) என்ற நிகழ்வில் ரோஜர் வெர் முதலியானோர் கூறியதாக டாட் ( Dodd) கூறியுள்ளார்.[105] டேவிட் கொலம்பியா (David Golumbia), பிட்காயின் என்பது வலது சாரிக் கட்சிகளின் ஆதரவில் வளர்வது என்று குறை கூறியுள்ளார்.[106] ஆனால், பிட்காயின் ஆர்வத்திற்கும் மிகை உரிமை வேண்டுமைக்கும் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என ஒரு சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[107]

பொருளியல் (Economics)

சந்தைப் பணம் (Market liquidity) (estimated, USD/year, logarithmic scale).

பொருளியல் வல்லுநர்கள் பணம் என்றால் என்ன என்பதை மூன்று கூறுகளுடன் விளக்குகின்றனர்:

  • சேமிப்பு: பணத்தைச் சேமித்து வைக்கலாம்.
  • பரிமாற்றத்திற்கான ஊடகம்: பணத்தைப் பரிமாறிக் கொள்ளலாம்.
  • அலகு: பணத்தை ஒரு அலகாகப் பயன் படுத்திக் கொள்ளலாம். (அதாவது, $200, உரூபா 200, £200 என்று எழுதலாம்.)[108]

தி எக்கனாமிஸ்ட் (The Economist) என்ற வார இதழ், 2014-இல், பிட்காயின் ஒரு பரிமாற்றத்திற்கான ஊடகம் என்று பதிவிட்டிருந்தது.[108] பிறகு, இதே இதழ் 2018-இல் எந்த குறியீட்டு நாணயமும் மேற்கூறிய எந்த கூற்றையும் நிறைவேற்றவில்லை என்றும் கூறியது.[103]

மேலும், தி எக்கனாமிஸ்ட் "பிட்காயினைச் சம்பாதிப்பது கடினம்; இதன் கையிருப்பு ஒரு வரம்புக்குள் அடக்கப் பட்டுள்ளது; இதைச் சரிபார்ப்பது எளிது."[109] என்று கூறியது. ஒரு சில ஆய்வாளர்கள் கருத்துப் படி, பிட்காயின் ஒரு கணினி வழியாக பணம் போல இயங்கும் ஒரு மதிப்புள்ள பொருள்; பிட்காயின் பணம் என்பதை விட ஒரு வகையான பரிமாற்றப் பொருள் என்பதே பொருத்தம்.[108]

2017-இல் 2.9மில்லியன் முதல் 5.8 மில்லியன் பயனர்கள் வரை குறியீட்டு நாணய பணப்பைகளைப் பயன் படுத்தி உள்ளனர்.[28]

பிட்காயினை வணிகர்கள் ஏற்றுக் கொள்வதில் சிக்கல் (Acceptance by merchants)

பெரும்பாலான பிட்காயின் பரிமாற்றங்கள் மக்களிடையே நடைபெறுவதில்லை; வணிகரிடம், கடைகளில் நடை பெறுவதில்லை. மாறாக, அவை குறியீட்டு நாணயச் சந்தைகளிலேயே (cryptocurrency exchange) நடை பெறுகின்றன.[110] கட்டச்சங்கிலியில் (blockchain) பரிமாற்றம் குறைந்தது பத்து நிமிடங்களாவது எடுப்பதால், கடைகளில் இதைப் பயன் படுத்துவது மிகவும் கடினமாகிறது. விலைகளைக் குறிக்கும் போதும் பிட்காயினில் சொல்லப்படுவதில்லை. பிட்காயினில் இருந்து ஏனைய நாணயங்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மற்ற வேண்டி இருக்கின்றது.[28] பிட்காயினை ஏற்றுக் கொள்ளாத கடைகளில் பிட்காயின் வேறு நாணயங்களுக்கு மாற்றப் பட்டு பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.[111]

2017-2018-இல் இருந்த 500 இணையதள முன்னணி வணிகர்களில் 3 பேர்கள் தாம் பிட்காயினை ஏற்றுக் கொண்டனர். 2016-இல் இதுவே 5 பேர்களாக இருந்தது.[110] இச் சரிவுக்குக் காரணம் பரிமாற்றக் கட்டண உயர்வு, அதற்கான அளவுக்கு மீறிய நேரம் ஆகியனவாகக் கருதப் பட்டன.[112]

செப்டம்பர் 2017-இல் $411 மில்லியன் வருவாய் ஈட்டிய குறியீட்டு நாணய சேவை நிறுவனங்கள், சூன் 2018-இல் வருவாய் $69 மில்லியனாகக் குறைந்து விட்டது எனக் கூறின. பிட்காயினில், பணத்தைத் திருப்பிக் கொடுத்தல் (chargebacks) என்பது கிடையாது. சிறு சிறு வணிக நிறுவனங்கள் பிட்காயின் பரிமாற்றச் செலவு மிக அதிகம் என்று குறை பட்டுக் கொள்கின்றன. எனினும், பெரிய தொகை செலவுக்கும், வெளி நாட்டில் பரிமாற்றம் செய்யவும், குறிப்பாக சாரா வினைஞர் (freelancers) பணிகளுக்குப் பணம் கொடுக்கவும் பிட்காயின்கள் பயன் படுகின்றன.[113]

பண நிறுவனங்கள் (Financial institutions)

பொதுவாக பிட்காயின் எண்ணிம காசுச் சந்தைகளில் (digital currency exchanges) கிடைக்கும். 2014-இல் நேஷனல் ஆஸ்திரேலியா பேங்க் (National Australia Bank) பிட்காயின் தொடர்புடைய எல்லா வங்கி கணக்குகளையும் மூடிவிட்டது.[114] எச்.எஸ்.பி. சி (HSBC) என்ற உலகின் ஏழாவது மிகப் பெரிய வங்கி பிட்காயின் தொடர்பு வைத்திருக்கும் நுகர்வோரிடம் இருந்து இணைப்பைத் துண்டித்தது.[115] பொதுவாகவே, ஆஸ்திரேலிய வங்கிகள் பிட்காயின் தொடர்பான பரிமாற்றங்களை எல்லாம் மூடிக்கொண்டு வருவதாக தெரிகிறது.[116]

சிகாகோ மெர்கன்டைல் எக்ஸ்சேஜ் (Chicago Mercantile Exchange) என்ற பண நிறுவனம் பிட்காயின் எதிர்நோக்கு வணிக ஒப்பந்தத்தை (futures option) 2017-இல் ஏற்றுக் கொண்டுள்ளது.[117] பிட்காயின் பரிமாற்றங்கள் 10 டிசம்பர் 2017-இல் தொடங்கும் எனவும் அறிவித்து,[118] இப்போது (26 பிப்ரவரி 2019) பிட்காயின் வணிகம் நடந்துகொண்டு இருக்கின்றது.[119]

பிட்காயின் முதலீடுகள் (Investment)

விங்க்ல்வாஸ் இரட்டையர் (Winklevoss twins) (புகழ் பெற்ற அமெரிக்க கேமரன்-டைலர் இரட்டையர்கள்) 2013-இல் உலகில் இருக்கும் பிட்காயினில் 1%-ஐ வாங்கி இருப்பதாக தி வாசிங்டன் போஸ்ட் (The Washington Post) தெரிவித்தது.[120] பிட்காயின் வருவாய் (bitcoin funds) என்பதிலும் ஒருவர் முதலீடு செய்யலாம். பிட்காயின் முதன்முதலாக அரசு சட்டமுறைகளால் ஒழுங்கு செய்யப் பட்டு , பின் சூலை 2014-இல் ஜெர்ஸி குழுமத்தால் (Jersey Financial Services Commission) ஏற்றுக் கொள்ளப் பட்டது.[121] 2013-இல் போர்ப்ஸ் (Forbes) நிறுவனம், பிட்காயின் மிகச் சிறந்த முதலீட்டுத் தளம் என்று கூறியது.[122] ஆனால்,2014-இல் ப்ளூம்பர்க் (Bloomberg) பிட்காயின் மிகக் கேடான முதலீட்டுத் தளம் என்று கூறியது.[123] பின் 2015-இல் ப்ளூம்பர்க் நாணய அட்டவணையில் பிட்காயின் முதலாம் இடத்தில் இருந்தது.[124]

புத்தொழில் முதலீடு (Venture capital)

பீட்டர் வருவாய் (Peter Thiel's Founders Fund) , ஆதாம் திரேப்பர் (Adam Draper) ஆகியோர் பிட்காயினில் முதலீடு செய்துள்ளனர். இத்தாலிய பொருளியல் வல்லுனரான பாலோ டாஸ்கா (Paolo Tasca) பிட்காயின் புத்தொழில் முதலீடு, 2012-2015-இல், $1 பில்லியன் அளவுக்கு அதிகரித்து உள்ளது என்று கூறி உள்ளார்.[125]

விலை, விலை மாறும் தன்மை (Price and Volatility)

பிட்காயின் குமிழ் விலை 2011, 2013 and 2017
ஒரு பிட்காயின் விலை (left y-axis, logarithmic scale), விலைமாறும் தன்மை

பிட்காயின் விலை பல முறைகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்திருக்கின்றது; இதைக் குமிழ் என்று குறிப்பிடுவர். (அதாவது, நீரில் எதிர்பாராத முறையில் குமிழ்கள் தோன்றி, பின் எதிர்பாராத முறையில் வெடித்து மறைவதற்கு ஒப்பிடப்படுகின்றது.) [126] எடுத்துக் காட்டாக, 2011-இல், 1 பிட்காயின் $0.30 இருந்து $32 -உக்குத் தாவி, உடனே $2-உக்கு வீழ்ந்தது.[127] 2012-இல், 2012-13 சைப்ரஸ் பணச் சிக்கல் (2012–13 Cypriot financial crisis) ஏற்பட்ட போது, பிட்காயின் விலை $266-ஆக ஏறி, பின் $50-ஆக சரிந்தது.[128][129] பின் 29 நவம்பர் 2013-இல் $1242-ஆக அதிகரித்து, ஆகத்து 2014-இல் $600-ஆகக் குறைந்தது.[130] அந்நேரத்தில், பிட்காயினில் இது போன்ற குமிழ்கள் தோன்றும் என காவின் ஆன்ட்ரேசன் (Gavin Andresen),[131] மைக் ஈர்ன் (Mike Hearn) [132] ஆகியோர் எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தனர்.

மார்க் வில்லியம்ஸ் (Mark T. Williams) கருத்துப் படி, 2014-இல், பிட்காயினின் விலை மாறும் தன்மை தங்கத்தை விட 7 மடங்கும், S&P 500-ஐ (S&P 500 stock-market Index பங்குச் சந்தை சுட்டு எண்) விட 8 மடங்கும், அமெரிக்க டாலரை விட 18 மடங்கும் இருந்தது என்று கணக்கிட்டுக் கூறினார்.[133]

சட்டத் தகுதி நிலை, வரி, நெறி முறை (Legal status, tax and regulation)

Legal status of bitcoin
  சட்டப்படி முழுக்க பயன்படுத்தலாம்.
  ஒருசில கட்டுப்பாடோடு பயன்படுத்தலாம்
  பயன்படுத்தலாம்; ஒருசில சட்டச் சிக்கல்கள் உள்ளன.
  முழுக்க அல்லது கொஞ்சம் தடை செய்யப் பட்டுள்ளது.

பிட்காயின் பரவலாக்க முறையில் செயல் படுத்தப் பட்டிருப்பதாலும், அதன் இணையத்தள பணமாற்றக் கூடங்கள் பல்வேறு நாடுகளிலும் இருப்பதாலும், இந்த நாணயத்தை நெறி படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. இதன் சட்ட தகுதி நிலை நாட்டுக்கு நாடு மாறு படுகின்றது. மற்ற குறியீட்டு நாணயங்களிலும் இது போன்ற சிக்கல்கள் உள்ளன.[125] அமெரிக்கக் காங்கிரசு நூலகம் (Library of Congress) கூற்றுப்படி, பிட்காயின் உலகில் கீழ்க் கண்ட நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளது: அல்ஜீரியா (Algeria), பொலீவியா (Bolivia), எக்வடோர் (Ecuador), பங்களாதேஷ் (Bangladesh), நேபாளம் (Nepal), மாசிடோனியா (Macedonia) , எகிப்து (Egypt), ஈராக் (Iraq), மொராக்கோ (Morocco), பாகிஸ்தான் (Pakistan) ஆகியன. மற்றபடி, இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற 65-உக்கும் மேலான நாடுகள் பிட்காயினை ஏற்றுக் கொண்டுள்ளன.[134]

சட்ட நெறி எச்சரிக்கைகள் (Regulatory warnings)

அமெரிக்க வணிகக் குழுமம் (U.S. Commodity Futures Trading Commission) குறியீட்டு நாணயங்களின் பயன்பாட்டைப் பற்றி கீழ்க் கண்ட கருத்துக்களை வழங்கி இருக்கிறது.

  • இந்த நாணயங்களின் பணமாற்றக் கூடங்களை (exchanges) அரசாங்கம் கண்காணிப்பதோ அல்லது மேற்பார்வை இடுவதோ இல்லை.
  • நுகர்வோர் பாதுகாப்பு கிடையாது.
  • விலை பேரளவில் மேலும் கீழுமாகப் போகலாம்.
  • இதில் பணச் சந்தை கையாளப் படலாம்.
  • பணமாற்றக் கூடங்கள் தாங்களே தங்கள் செயற்பாடுகளைப் பார்த்துக் கொள்கின்றன.[135]

இவ்வகைக் காரணங்களால், அரசாங்கங்கள் பிட்காயினைப் பற்றி எந்த வகை உறுதியும் கொடுக்கவியலாத நிலையில் உள்ளன.

பிட்காயின் விலை கையாளப்படுதல் (Price manipulation investigation)

மே 2018-இல் பிட்காயின் மீது புலன் விசாரணை அறிக்கை வெளியிடப் பட்டது.[136] அமெரிக்க நீதித் துறை (United States Department of Justice) பிட்காயின் விலை கையாளப்படுவதைப் பற்றியும், அதனுடன் தொடர்பு உள்ள மிகைப் படுத்து முறை (spoofing), தானே வாங்கல்-விற்றல் (wash trade) ஆகியன பற்றிய முறையீடுகளைப் (complaints) பற்றியும் ஒரு விசாரணை மேற்கொண்டது.[137][138][139] அமெரிக்கா, யு.கே (UK), தென் கொரியா ஆகிய நாடுகளில் நடக்கும் வணிகர்களிடத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.[136] பணப் பொருளியல் ஆய்விதழ் (Journal of Monetary Economics) என்னும் ஆராய்ச்சி இதழில், மவுண்ட் காக்ஸ் (Mt. Gox) களவு நடந்த போது விலை கையாளப்பட்டது என்று கூறப் பட்டுள்ளது.[140]

பிட்காயின் மீது கருத்துரை (Criticism)

பிகாயினைப் பற்றி பல குறைகள் கூறப் படுகின்றன:

  • அதன் விலை நிலைத்து நிற்பதில்லை.
  • மிகுதியான மின்சாரம் செலவாகிறது.
  • பரிமாற்றக் கட்டணங்கள் மிகுதியாக இருக்கின்றன.
  • போதிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது.
  • கவை (fork) உருவாவதனாலும், சுரங்கமர்கள் (miners) தாக்கத்தினாலும் பிட்காயின் மதிப்பிழக்கலாம்.[141][142][143]

ஆனால், தி எக்கனாமிஸ்ட் (The Economist) என்ற வார இதழ், 2015-இல், இந்தக் கருத்துரை சரியானவை அல்ல, இது போன்ற கருதுரைகளினால், கட்டச்சங்கிலி என்ற தொழில்நுட்பத்தின் வலிமை பயனில்லாமல் போய்விடும் என்றும் கூறியது.[144]

பிட்காயின் என்பது ஒரு "குமிழ்" என்ற குற்றச்சாட்டு (bubble)

பிட்காயின் என்பது பணப் பரிமாற்றத்தில் ஒரு வெறும் "குமிழ்" மட்டுமே என்று பல நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்கள், எடுத்துக் காட்டாக இராபர்ட் சில்லர் (Robert Shiller), ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), ரிச்சர்ட் தேலர் (Richard Thaler) ஆகியோர், கூறி உள்ளனர்.[7][145] குறிப்பாக, பொருளாதார பேரறிஞரான பால் கிரக்மன் (Paul Krugman) பிட்காயின் என்பது ஒரு "குமிழ்" மட்டுமல்ல, இது ஒரு ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார்.[146] பொருளாதார அறிஞரான நௌரியல் ரூபினி (Nouriel Roubini) பிட்காயினை "குமிழ்களுக்கெல்லாம் தாய்" என்று சாடியுள்ளார்.[147]

மின் செலவு (Energy consumption)

பிட்காயின் மிகுதியான மின் சக்தியைச் செலவழிக்கிறது என்பது ஓர் இன்றியமையாத குறையாக உள்ளது. இந்த செலவு குறிப்பாக சுரங்கம் அகழும் போது ஆகிறது. தி எக்கனாமிஸ்ட் (The Economist), 2015-இல், சுரங்கமர்கள் ஒவ்வொருவரும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன் படுத்துவார்களேயானால், மின் செலவு ஆண்டொன்றுக்கு 1.46 இலட்சம் கோடி (தொள்ளுண்) வாட்-மணி (TWh - terawatt-hours) [109] ஆகும் என்று கணித்தது. சனவரி 2019 -இல் ஆன மின் செலவு 46.6 தொள்ளுண் வாட்-மணி. (இதற்கு முன்பு இது 73 தொள்ளுண் வாட்-மணியாக இருந்தது.) [148] பிட்காயின் தொழில்நுட்பம் மற்ற தொழில்நுட்பங்களைப் போல சமுதாயத்தில் பயன்படுத்தப்படுமேயானால், அது சராசரி வெப்ப நிலையை 2 °C கூட்டும் என்று இயற்கை வானிலை மாற்றம் (Nature Climate Change) இதழில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.[149]

மின்சக்தியைக் குறைப்பதற்காக , சுரங்கமர்கள் தங்கள் சேவை-வழங்கும் கணினிகளை (servers), ஐசுலாந்து போன்ற மிகக் குளிரான நாடுகளில் வைத்து இருக்கின்றனர். திபெத் , கியூபெக் , வாசிங்டன் (மாநிலம்), ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மின்சாரம் மலிவான விலைக்குக் கிடைப்பதால், கணினிகள் அங்கும் வைக்கப் படுகின்றன.[150][151][152][153] இப்போது சீனாவில் பிட்காயின் சுரங்கங்கள் பேரளவில் அமைக்கப் பட்டு, அங்கு அகழ்வுகள் நடைபெறுகின்றன.[154]

பிட்காயின் - போன்சி , பிரமிட் திட்டங்கள் (Ponzi and Pyramid schemes)

போன்சி திட்டம் முதலீடு செய்ய வருபர்களிடம் பணத்தை வாங்கி, அதில் ஒரு பகுதியை இதற்கு முன்னால் முதலீடு செய்தவர்களுக்குக் கொடுக்கும் ஒரு "ஏமாற்று" திட்டமாகும்.[155] பிரமிட் திட்டம் (Pyramid scheme) என்பது ஒருவரைத் திட்டத்தில் சேர்த்து, பின் அவரை மற்றவர்களைச் சேர்க்க சொல்வது ஆகும். சேர்ந்த ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சேர்க்க சொல்ல வேண்டும். இதுவும் ஒரு "ஏமாற்று" திட்டமாகும்.[156][157]

பிட்காயின் ஒரு போன்சி திட்டத்தைப் போன்றது என்று பல பொருளாதார வல்லுநர்கள் [158][159], நடுவண் வங்கிகள் (Central Banks) [160][161] செய்தித்தாள் [162] ஆசிரியர்கள் கூறினர். எரிக் போஸ்னர் (Eric Posner) என்னும் பொருளாதார பேராசிரியர் (சிகாகோ பல்கலைக் கழகம்) "பிட்காயின் ஒரு கூட்டு மாயை," என்று கூறினார்.[163] எனினும், இது ஒரு போன்சி திட்டம் இல்லை என உலக வங்கி, சூலை 2014-இல் கூறியது.[164] "பிட்காயினில் ஆதாயம் கிடைக்கும் என்ற உறுதி எதுவும் பேசப் படுவதில்லை. எனவே, இது ஒரு பிரமிட் திட்டமாகாது," என்று சூன் 2014-இல் சுவிஸ் அரசு கவுன்சில் (Federal Council - Switzerland) கூறிவிட்டது. எனினும் 2017-இல் பெரும் பணக்காரரான ஓவர்ட் மார்க்ஸ் (Howard Marks - investor) பிட்காயின் என்பது ஒரு பிரமிட் திட்டம்தான் என்று கூறினார்.

பிட்காயினில் பாதுகாப்பு (Security)

மின்-தூண்டிலிடல் (phishing), ஏமாற்று (scamming), நிரலித் தாக்கம் (hacking) இவற்றின் தாக்குதல்கள் பிட்காயினில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. திசம்பர் 2017 வரை 980,000 பிட்காயின்கள் (இன்றைய கணக்கில் இது US$15 பில்லியன்) குறியீட்டுப் பணமாற்றக் கூடங்களில் இருந்து களவு போயிருக்கின்றன.[165]

சட்டப் புறம்பு பரிமாற்றங்கள் (llegal transactions)

அமெரிக்காவில், புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI - Federal Bureau of Investigation), பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களை (virtual currencies) வைத்து முதலீடு செய்வதை கவனத்தோடு எச்சரித்துள்ளது.[166] அமெரிக்க 2016 தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக பிட்காயின்கள் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.[167] கள்ளச் சரக்குகள் விற்பனை பிட்காயின் வழியாக நடக்கின்றன என்றும், இதை நம்பியே பிட்காயின் இருக்கின்றது என்றும் செய்திகள் கூறுகின்றன.[168][169] நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுனரான ஜோசப் ஸ்டிக்லிட்சு (Joseph Stiglitz), " கள்ளச் சரக்கு விற்பனையைத் தடை செய்து விட்டால், பிட்காயினுக்கு வேலை இல்லாமல் போய்விடும்," என்று கூறி இருக்கிறார்.[170][171] கணினி நிரலர்களும் (programmers), சட்டத்திற்குப் புறம்பாக குற்றம் இழைப்போர்களும் பிட்காயினில் மிகுதியான ஆர்வம் காட்டி வருவதாக ஓர் ஆய்வு கூறுகின்றது.[107] ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட ஆய்வின் படி, 25% பிட்காயின் பயனர்களும், 44% பிட்காயின் பரிமாற்றங்களும் சட்ட விரோதமான செயல்களுக்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. 24 மில்லியன் பிட்காயின் பயனர்கள் இதில் ஈடு பட்டுள்ளனர். இவர்களிடத்தில் $8 பில்லியன் மதிப்புள்ள பிட்காயின்கள் உள்ளன; மற்றும் $72 பில்லியன் மதிப்புள்ள 36 மில்லியன் பரிமாற்றங்கள் செய்துள்ளனர்.[172][173] ஆனால், 2016-இல் நடைபெற்ற ஒரு ஆய்வின் படி, சட்ட விரோத பரிமாற்றங்கள் மிகைப் படுத்திச் சொல்லப் பட்டுள்ளன என்று கூறப் பட்டுள்ளது.[174]

சமுதாயத்தில் பிட்காயின்

இலக்கியம்

சார்ல்ஸ் ஸ்ட்ராஸ் (Charles Stross) 2013-இல் எழுதிய நெப்டியூன் இரத்தம் (Neptune's Brood) என்ற புதினத்தில், வான்வெளியில் நடக்கும் பணப் பரிமாற்றத்திற்கு "பிட்காயின்" என்று பெயர் வைக்கப் பட்டு, அது மறையீட்டு நாணயம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.[175]

திரைப்படங்கள்

2014-இல் வெளியிடப் பட்ட உயர்வும், பிட்காயின் வளர்ச்சியும் (The Rise and Rise of Bitcoin) என்ற ஆவணப் படத்தில், பிட்காயினை மக்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான நோக்கத்திற்காகப் பயன் படுத்துகிறார்கள் என்று காட்டப் பட்டுள்ளது. இதில், நிரலர்கள் (programmers), போதை மருந்து விற்பவர்கள், இவர்கள் இருவரும் அடங்குவர். பிறகு, 2016-இல் பிட்காயினில் வங்கித் தொழில் செய்வது (Banking on Bitcoin) என்ற ஆவணப் படம் பிட்காயின், குறியீட்டு நாணயம் ஆகியன என்றால் என்ன என்று விளக்குகிறது.[176]

ஆராய்ச்சி

செப்டம்பர் 2015-இல், குறியீட்டு நாணயம், கட்டச்சங்கிலி தொழில் நுட்பம் ஆகிய தலைப்புகளில் லெட்ஜர் (Ledger ) என்ற பதிவேடு (journal) வெளியிடப் பட்டது. இப் பதிவேட்டில், கட்டச்சங்கிலி தொடர்பான கணிதம், கணினியியல், பொறியியல், சட்டம், பொருளாதாரம், குறியீட்டு நாணயம் தொடர்பான மெய்யியல் துறைகளின் ஆய்வுக் கட்டுரைகள் போன்றவை வெளியிடப் படுகின்றன. இதில் வெளியிடப் படும் கட்டுரைகள் முதலில் குறுக்க எண் (hash) கணிக்கப் பட்டு, கால முத்திரை (timestamp) இடப்பட்டு, பின் பிட்காயின் கட்டச்சங்கிலியில் இணைக்கப் படுகின்றன. கட்டுரையின் முதல் பக்கத்தில் கட்டுரை ஆசிரியர் தம்முடைய பிட்காயின் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.[177][178]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிட்காயின்&oldid=3891989" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை