உருமியா ஏரி

ஈரானின் உப்பு ஏரி

உருமியா ஏரி (பாரசீக: دریاچه ارومیه, தாரியாசே-யே உருமியே) ஈரானில் உள்ள நீர்வெளியேற்றுப் பாதையில்லா ஒரு உப்பு ஏரி.[2][3] இந்த ஏரி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், காஸ்பியன் கடலின் தென்பகுதியின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 5,200 சதுர கிமீ (2,000 சதுர மைல்), நீளம் 140 கிமீ (87 மைல்), அகலம் 55 கிமீ (34 மைல்), மற்றும் அதிகபட்ச ஆழம் 16 மீ (52 அடி). இந்த ஏரி முழு அளவாக இருந்தபோது மையக்கிழக்கின் மிகப்பெரிய ஏரியாகவும், பூமியின் ஆறாவது பெரிய உப்பு நீர் ஏரியாகவும் இருந்தது. இந்த ஏரியில் பாயும் ஆறுகள் அணைகளால் தடுக்கப்படுவதாலும், சுற்றியுள்ள பகுதியிலிருந்து நிலத்தடி நீர் பெருமளவில் எடுக்கப்படுவதாலும் அதன் முந்தைய அளவிலிருந்து 10% ஆக சுருங்கிவிட்டது.

உருமியா ஏரி
வின்வெளியிலிருந்து ஏரி உருமியா 1984-ல்
ஆள்கூறுகள்37°42′N 45°19′E / 37.700°N 45.317°E / 37.700; 45.317
வகைஉப்புநீர் ஏரி
முதன்மை வெளியேற்றம்இல்லை ஆவியாதல் மூலமாக மட்டுமே நீர் வெளியேறுகின்றது
வடிநில நாடுகள்ஈரான்
அதிகபட்ச நீளம்140 km (87 mi)
அதிகபட்ச அகலம்55 km (34 mi)
மேற்பரப்பளவு5,200 km2 (2,000 sq mi)
அதிகபட்ச ஆழம்16 m (52 அடி)
உவர்ப்புத் தன்மை217–235 g L−1 Na–(Mg)–Cl–(SO4) உப்பு 8–11% வசந்தகாலம், 26-28% பின்குளிர்காலம்[1]
Islands102
உருமியா ஏரியின் சுருங்கும் பரப்பு
உருமியா ஏரி, வடமேற்கு ஈரான், செப்டம்பர் 2015
உருமியா ஏரி இரவில், மேற்கு அஜர்பைஜான், ஈரான்
உருமியா ஏரி இரவில், மேற்கு அஜர்பைஜான், ஈரான்

உருமியா ஏரி
உருமியா ஏரி

உருமியா ஏரி அதிலுள்ள சுமார் 102 தீவுகளடன் ஈரானிய சுற்றுச்சூழல் துறையால் ஒரு தேசியப் பூங்காவாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது.[4]

பெயர்கள் மற்றும் சொற்பிறப்பியல்

ரிச்சர்ட் நெல்சன் ஃப்ரை இந்த ஏரியின் பெயர் உரார்சிய வம்சாவளியிலிருந்து வந்திருக்கலாம் என்றுரைத்தார், தாமசு பறோ இந்தோ-ஈரானியச் சொல்லான அலை எனப் பொருள்தரும் உருமி அல்லது சலனம், அலை எனப் பொருள்தரும் உரும்யா என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கண்டுரைத்தார்.[5]

இந்த ஏரி பாரசீக மொழியில் தாரியாசே-யே உருமியே (دریاچه ارومیه) என்றும், அஜர்பைஜானியில் உர்மு கோலூ என்றும், குர்தி மொழியில் ஜெரிவர்-ஈ வெர்மி என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன் பாரம்பரிய ஆர்மீனியப் பெயர் கபுட்டான் த்சோவ் (Կապուտան ծով), அதாவது "நீல கடல்". ஷாஹி தீவில் வசிப்பவர்கள் அஜர்பைஜானியில் உள்ள ஏரியைக் கடல் என்று பொருள்படும் தாரியா என்று குறிப்பிடுகின்றனர்.[6][7][8]

அதன் பழைய பாரசீக பெயர் "மிளிர்வது" என்று பொருள்படும் சிக்காஸ்ட், இது ஏரியின் நீரில் படிந்தவாறும் அதன் கரையோரங்களிலும் காணப்படும் மிளிரும் தாதுத் துகள்களைக் குறிக்கிறது. இடைக்காலத்தில் இது பாரசீக மொழியில் "வான்நீலம்" எனப் பொருள்தரும் சொல்லிருந்து கபுடா ஏரி (கபோடன்) என அறியப்பட்டது. அதன் லத்தீன் பெயர் லாகுஸ் மத்தியானுஸ், எனவே இது சில நூல்களில் மத்தியானுஸ் ஏரி அல்லது மேட்டீன் ஏரி என குறிப்பிடப்படுகிறது.

தொல்லியல் மற்றும் வரலாறு

உருமியா ஏரி, புதிய கற்காலத்தைச் சேரந்த பல தொல்லியல் தளங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள குடியேற்றங்களின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் கிமு 7,000 மற்றும் அதற்குப் பிறகான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உருமியா ஏரியின் தென்மேற்கே உள்ள டெப்பே ஹசன்லு தொல்லியல் தளத்து அகழ்வாராய்ச்சிகள் கிமு ஆறாம் ஆயிரமாண்டைச் சேர்ந்த வாழ்விடங்களை வெளிப்படுத்தியுள்ளன. இதற்குத் தொடர்புடைய மற்றொரு தளம் உருமியா ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள யானிக் டெப் ஆகும், இது 1950 கள் மற்றும் 60 களில் சி. ஏ. பர்னியால் அகழாய்வு செய்யப்பட்டது.[9]

இப்பகுதியில் உள்ள மற்றொரு முக்கியமான தளம், ஹஜ்ஜி ஃபிரூஸ் டெப் ஆகும், அங்கு திராட்சை ஒயின் பற்றிய பழமையான தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குல் டெப் ஜோல்பா என்பது அராக்ஸஸ் ஆற்றிலிருந்து 10 கி.மீ தெற்கே ஜொல்பா வட்டத்திலுள்ள ஒரு தளமாகும். இது செப்புக் காலத்தைச் (கிமு 5000-4500) சேர்ந்தது.

சே கிர்தான் குர்கன்கள் உருமியா ஏரியின் தென் கரையில் அமைந்துள்ளன. அவற்றில் சில 1968 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் ஓ. மஸ்கரெல்லாவால் அகழாய்வு செய்யப்பட்டன. முதலில் மிகவும் அண்மைக்காலத்தவை என கருதப்பட்ட அவை இப்போது நான்காவது ஆயிரமாண்டின் இரண்டாம் பாதியைச் சேர்ந்தவையென அறியப்பட்டுள்ளன,[10]

உருமியா ஏரியைப்பற்றிய ஆரம்ப குறிப்புகளில் ஒன்று கி.மு 9 ஆம் நூற்றாண்டின் அசிரியப் பதிவுகளாகும். அங்கு, ஷால்மனேசர் III (கிமு 858–824) ஆட்சியின் பதிவுகளில், உருமியா ஏரியின் பகுதி இரண்டு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது: பார்சுவாஸ் (அதாவது பாரசீகர்கள்) மற்றும் மாத்தாய் (அதாவது மித்தானி). இவை இடங்களா அல்லது பழங்குடியினரைக் குறிக்கின்றனவா என்பதும் தனிப்பட்ட பெயர்கள் மற்றும் "மன்னர்கள்" பட்டியலுடன் அவர்களின் உறவு என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மாத்தாய் என்பது மேதியர்கள் என்பதும் மேலும் மொழியியல் வழியாக பார்சுவாஸ் என்ற பெயர் பழைய பாரசீக சொல்லான பார்சாவுடனும் பொருந்துகிறது.[11]

இந்த ஏரி மன்னேயன் அரசின் மையமாக இருந்துள்ளது. ஏரியின் தெற்கே ஹசன்லுவின் இடிபாடுகளின்படி அது ஒரு மன்னே குடியேற்றமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. சிதியர்கள், சகர்கள், சர்மாட்டியன் அல்லது சிம்மேரியன் என பல்வேறு விதமாக அடையாளம் காணப்பட்ட ஈரானிய மக்களான மாத்தியானி அல்லது மாத்தியேனியால் மன்னே கைப்பற்றப்பட்டது. அதன் பெயர் மக்களிடமிருந்து ஏரிக்கு வழங்கப்பட்டதா அல்லது ஏரியிடமிருந்து மக்களுக்கு வழங்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அந்த நாடு மேட்டீன் அல்லது மேட்டியன் என்று அழைக்கப்பட்டு, ஏரிக்கு அதன் லத்தீன் பெயரைக் கொடுத்தது.

1603-1618 ஆம் ஆண்டு ஒட்டோமான்-சஃபாவிட் போரின் போது உருமியா போர் 1604 இல் ஏரிக்கு அருகில் நடந்தது. கடந்த ஐநூறு ஆண்டுகளில் உருமியா ஏரியைச் சுற்றியுள்ள பகுதி ஈரானியர்கள், அசீரியர்கள் மற்றும் ஆர்மீனியர்கள் வசிக்கும் இடமாக உள்ளது.

வேதியியல்

இந்த ஏர்யின் Na+ மற்றும் Cl செறிவு இயற்கை கடல் நீரின் செறிவைவிட சுமார் நான்கு மடங்கு அதிகமாகும். ஏரியின் வடக்குப்பகுதியை ஒப்பிடும்போது சோடியம் அயனிகள் தெற்கில் சற்றே அதிகச்செறிவில் உள்ளன. தெற்குப்பகுதியின் குறைவான ஆழம் மற்றும் அதிக நிகர ஆவியாதல் இதன் காரணிகள்.

இந்த ஏரி, 2008 இல் நிறைவடைந்த உருமியா ஏரிப்பாலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரைப்பாலங்களால் வடக்கு தெற்காக பிரிக்கப்பட்டுள்ளது, இந்த பாலம் 1.5 கிலோமீட்டர் (0.93 மைல்) இடைவெளியை மட்டுமே வழங்குகிறது, இது இரண்டு பிரிவுகளுக்கிடையில் குறைவானநீர் பரிமாற்றத்தை மட்டுமே ஏற்பட வழிவகைசெய்கின்றது. வறட்சி மற்றும் ஏரியின் படுகையில் விவசாய நீருக்கான அதிகரித்த தேவைகள் காரணமாக, அண்மைய ஆண்டுகளில் ஏரியின் உப்புத்தன்மை 300 கிராம்/லிக்கு மேல் உயர்ந்துள்ளது.[12]

நவீன சூழலியல்

2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் உருமியா ஏரியில் பல்லுயிர் பெருக்கத்தின் சமீபத்திய சரிபார்ப்பு பட்டியல்களின் அடிப்படையில், இது 62 வகையான ஆர்க்கிபாக்டீரியா மற்றும் பாக்டீரியாக்கள், 42 வகையான நுண்ணுயிர்பூஞ்சான்கள், 20 வகையான மிதவைத் தாவரங்கள், 311 வகையான தாவரங்கள், ஐந்து வகையான மெல்லுடலிகள், 226 வகையான பறவைகள், 27 வகையான நீர்நில வாழ்விகள் மற்றும் ஊர்வன மற்றும் 24 வகையான பாலூட்டிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 47 புதைபடிவங்கள் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[13][14]

உருமியா ஏரி யுனெஸ்கோ உயிர்க்கோளக் கூலம் மற்றும் ராம்சார் தளம் என பன்னாட்டளவில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதி.[15] ஈரானிய சுற்றுச்சூழல் துறை, ஏரியின் பெரும்பகுதியை ஒரு தேசியப் பூங்காவாக அறிவித்துள்ளது.[16]

இந்த ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பாறைகளாலான தீவுகள் உள்ளன, அவை பூநாரை, கூழைக்கடா, துடுப்பு வாயன், அரிவாள் மூக்கன், பெரிய நாரை, கடல் புறா உள்ளிட்ட பல பறவை இனங்களின் இடம்பெயர்வுகளின் போது நிறுத்துமிடங்களாக திகழ்கின்றன. அண்மைய வறட்சி ஏரிக்கு ஆண்டுதோறும் வரும் நீரின் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இது ஏரியின் நீரின் உப்புத்தன்மையை அதிகரித்துள்ளது, இதனால் ஒரு பெரிய பூநாரைக் கூட்டம் போன்ற ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் தங்குமிடமாக இருந்த அதன் சூழல் மாறியுள்ளது. உருமியா ஏரிப்பாலத்தின் வடக்கேயுள்ள ஏரியின் பாதியிலும் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது.

அதிக உப்புத்தன்மையின் காரணமாக, ஏரி இனி எந்த மீனினத்தையும் நிலைநிறுத்தாது. ஆயினும், உருமியா ஏரி ஆர்ட்டெமியா எனப்படும் கூனிறாட்களின் குறிப்பிடத்தக்க இயற்கை வாழ்விடமாக கருதப்படுகிறது.[17] இது பூநாரைகள் போன்ற புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உணவாகும். 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஈரானிய ஆர்ட்டெமியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் உப்புத்தன்மை கடுமையாக அதிகரித்ததால் ஆர்ட்டெமியா உருமியானா அழிந்துவிட்டதாக கூறினார். இருப்பினும் இந்த மதிப்பீடு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.[18] ஏனெனில் இந்த இனத்தின் மற்றொரு கூட்டம் சமீபத்தில் கிரிமியா மூவலந்தீவில் உள்ள கயாஷ்கய் உப்பு ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[19]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உருமியா_ஏரி&oldid=3849662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை