கிரிமியா மூவலந்தீவு

கிரிமியா மூவலந்தீவு அல்லது கிரிமியா (Crimea) கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடல் வடக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள மூவலந்தீவு. இதன் மூன்றுபுறமும் கருங்கடலும் வடகிழக்கில் சிறிய அசோவ் கடலும் சூழ்ந்துள்ளன. இது உக்ரைனின் கேர்சன் ஓப்லாஸ்த்தின் தெற்கே அமைந்துள்ளது. கேர்சனுடன் பெரேகோப் குறுநிலத்தால் இணைந்துள்ளது. மேற்கிலுள்ள உருசிய மண்டலமான கூபனிலிருந்து கெர்ச் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீரிணையில் கிரைமியன் பாலம் கட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. அராபத் இசுபிட் வடகிழக்கில் உள்ளது. இந்த குறுகிய நிலப்பகுதி அசோவ் கடலிலிருந்து சிவாஷ் எனப்படும் கடற்கரைக் காயல்களின் அமைப்பைப் பிரிக்கிறது. கருங்கடலுக்கு அப்பால் மேற்கே உருமேனியாவும் தெற்கில் துருக்கியும் உள்ளன.

கிரிமியா மூவலந்தீவின் நிலப்படம்

கிரிமியா (அல்லது தொன்மைக் காலத்தில் தாரிக் மூவலந்தீவு) வரலாற்றில் செவ்வியல் உலகிற்கும் பான்டிக்-காசுபியன் புல்வெளிகளுக்குமான எல்லையில் அமைந்துள்ளது. இதன் தெற்கு விளிம்புகள் கிரேக்கர்களாலும் பெர்சியர்களாலும், உரோமானியர்களாலும் பைசாண்டின் பேரரசாலும் கிரிமியன் கோத்தியர்களும் செனோவாக்களாலும் உதுமானியப் பேரரசாலும் குடிமைப்படுத்தப்பட்டிருந்தன. அதே காலங்களில் மூவலந்தீவின் உட்புறங்கள் புல்வெளி நாடோடிகளாலும் சிம்மேரியர், சிதியர்கள், சர்மாதியர், கோத்தியர், ஆலன்கள், பல்கர்கள், ஹன்சு, கசார்கள், கிப்சாக்கியர், மங்கோலியர் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. கிரிமியா, அடுத்தப் பகுதிகளுடன் கிரிமிய கான் மரபால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை இணைக்கப்பட்டிருந்தது.

1783இல் உருசிய-துருக்கியப் போரை தொடர்ந்து கிரிமியா உருசியப் பேரரசின் அங்கமாயிற்று. உருசியப் புரட்சியைத் தொடர்ந்து 1917இல் தன்னாட்சிக் குடியரசாக சோவியத் ஒன்றியத்தின் உருசிய சோவியத் சோசலிச குடியரசின் அங்கமாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது, கிரிமியாவின் நிலை கீழிறக்கப்பட்டு கிரிமியன் ஓப்லாஸ்த்து ஆகியது. பின்னர் 1954இல் நிக்கிட்டா குருசேவ் காலத்தில் இது உக்ரைன் சோவியத் சோசலிச குடியரசிற்கு மாற்றப்பட்டது.[1]

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது, 1991இல் உக்ரைன் விடுதலை பெற்ற தனிநாடாகியது. கிரிமிய மூவலந்தீவின் பெரும்பகுதியும் கிரிமியா தன்னாட்சிக் குடியரசானது. செவஸ்டொபோல் நகரம் மட்டும் சிறப்புநிலையுடன் உக்ரைனுடன் இருந்தது. 1997இல் உருசியா தனது கடற்படையின் கப்பல்களை கருங்கடலில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. உக்ரைன் கடற்படையின் தலைமையகமும் உருசியன் கடற்படையின் கருங்கடல் பிரிவின் தலைமையகமும் செவெஸ்டொபோலில் வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்த குத்தகையை உக்ரைன் 1010இல் நீட்டித்து இதற்கு மாற்றாக மலிவு விலையில் இயற்கை எரிவளியைப் பெற்றது.

மார்ச் 2014இல் உக்ரைனியப் புரட்சிக்குப் பின்னர் உருசியா உக்ரைனில் உருசிய ஆதரவாளர்களுக்கு உதவியாக படைகளை அனுப்பி உக்ரைனைக் கைப்பற்றியது.[2] 2014இல் நடத்தப்பெற்ற உருசியாவுடனான "மீளிணைப்பிற்கான" பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான கிரிமியர்கள் உருசியாவுடன் இணைய விரும்பினர்.[3] இந்தப் பொது வாக்கெடுப்பை உக்ரானிய அரசியலமைப்பு நீதிமன்றம் சட்டவிரோதமானதாக அறிவித்தது.[4][5][6]

உருசியா கிரிமியாவை சேர்த்துக்கொண்டு கிரிமியா குடியரசை உருவாக்கியது. கூட்டரசு நகரான செவஸ்டொபோலை உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகளில் ஒன்றாக்கியது.[7] உருசியாவும் பத்து ஐ.நா. நாடுகளும் கிரிமியாவை உருசியக் கூட்டமைப்பின் அங்கமாக ஏற்றக்கொண்டபோதும் உக்ரைன் தொடர்ந்து கிரிமியாவை தனது நாட்டின் அங்கமாகவே கருதுகிறது. பெரும்பாலான வெளிநாட்டு அரசுகளும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் 68/262உம் உக்ரைனை ஆதரிக்கின்றன.[8]

புவியியல்

கருங்கடலின் வடக்குக் கடலோரமாகவும் அசோவ் கடலின் மேற்கிலும் 27,000 கிமீ2 (10,425 சது மை) பரப்பில் கிரிமியா அமைந்துள்ளது. இதன் ஒரே நில எல்லை வடக்கில் உக்ரைனுடன் உள்ளது.

கிரிமியா மூவலந்தீவிற்கும் உக்ரைன் பெருநிலப்பகுதிக்குமான இயற்கையான எல்லை சிவேஷ் அல்லது அழுகிய கடல் எனப்படும் ஆழமற்ற கடற்காயல்களின் பெரும் தொகுப்பால் அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவு கேர்சன் ஓப்லாஸ்த்துக்கு எனிசெஸ்க் ரையோனால் இணைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பெருநிலப்பகுதிக்கு பெரெகோப் குறுநிலத்தால் ([Isthmus of Perekop) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதி 5-7 கி.மீ (3.1–4.3 மைல்) அகலமேயுள்ளது; குறுகிய சொங்கார், எனுசெஸ்க் நீரிணைகள் மீதும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அராபத் ஸ்பிட்டின் வடக்குப் பகுதி கேர்சன் ஓப்லாத்தின் நிர்வாகத்தில் உள்ளது. மூவலந்தீவின் கிழக்கு முனை கெர்ச்சு மூவலந்தீவாகும். இது உருசிய பெருநிலத்தின் தமன் மூவலந்தீவிலிருந்து கெர்ச்சு நீரிணையால் பிரிபட்டுள்ளது. இந்த நீரிணைதான் கருங்கடலையும் அசோவ் கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையின் அகலம் 3–13 கிமீ (1.9–8.1 மைல்) ஆகும்.

புவியியலின்படி, இந்த மூவலந்தீவை மூன்று வலயங்களாகப் பிரிக்கலாம்: இசுடெப்பி புல்வெளிகள், மலைகள், தென்கடலோரம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை