குயுக் கான்

மங்கோலியப் பேரரசின் மூன்றாவது பெரிய கான்

குயுக் (Güyük Khan)[1] என்பவர் மங்கோலியப் பேரரசின் மூன்றாவது ககான் ஆவார். இவர் ஒக்தாயி கானின் மூத்த மகனும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். இவர் 1246 முதல் 1248 வரை ஆட்சி செய்தார்.

குயுக் கான்
மங்கோலியப் பேரரசின் 3வது ககான்
(மங்கோலியர்களின் உயர்வான கான்)
மன்னர்களின் மன்னர்
குயுக்கின் பதினைந்தாம் நூற்றாண்டு சித்தரிப்பு ஓவியம்
மங்கோலியப் பேரரசின் 3வது பெரிய கான்
ஆட்சிக்காலம்24 ஆகஸ்ட் 1246 – 20 ஏப்ரல் 1248
முடிசூட்டுதல்24 ஆகஸ்ட் 1246
முன்னையவர்ஒக்தாயி கான்
பின்னையவர்மோங்கே கான்
பிறப்பு19 மார்ச் 1206
இறப்பு20 ஏப்ரல் 1248 (அகவை 42)
கும்-செங்கிர், சிஞ்சியாங்
துணைவர்ஒகுல் கைமிஸ்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் ஜியான்பிங் (簡平皇帝, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
கோயில் பெயர்
டிங்சோங் (定宗, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
மரபுபோர்சிசின்
தந்தைஒக்தாயி கான்
தாய்தோரேசின் கதுன்
மதம்பௌத்த மதம்

உருவ அமைப்பு

மங்கோலியப் பேரரசின் அரசவைக்குச் சென்ற இத்தாலிய தூதுவரான கியோவன்னி தாபியன் தெல் கார்பைன் என்பவரின் கூற்றுப்படி, குயுக் "நடுத்தர அளவு உயரம் உடையவர், கவனமான மற்றும் கூர்மதியுடையவர், தனது செயல்களில் அசட்டை செய்யாதவர், அடக்கம் உடையவர்."[2]

ஆரம்ப வாழ்க்கை

குயுக்குக்கு இராணுவப் பயிற்சி செங்கிஸ் கான் மற்றும் ஒக்தாயி கான் ஆகியோரின் கீழ் ஒரு அதிகாரியாகக் கிடைத்தது. இவர் மெர்கிடு வம்சத்தின் ஒகுல் கைமிசை மணந்தார். 1233ஆம் ஆண்டில், குயுக் அவரது தாயாரின் உறவினரான அல்சிதை மற்றும் மங்கோலியத் தளபதி தாங்குடு ஆகியோருடன் சேர்ந்து, எதிர்ப்பாளரான சின் அதிகாரி புக்சியன் வன்னுவின் தோங்சியா அரசை சில மாதங்களில் வெற்றிகொண்டார்.[3] டொலுய் இறந்த பிறகு, ஒக்தாயி டொலுயின் விதவையான சோர்காக்டனியை, அவரது மகன் குயுக்கை மணம்புரியுமாறு முன்மொழிந்தார். சோர்காக்டனி தனக்குத் தன் மகன்களேப் பிரதானமானவர்கள் என்று மறுத்துவிட்டார்.[4]

விளாதிமிருக்கு வெளியே மங்கோலியர்கள். அநேகமாக அதைச் சூறையாடுவதற்கு முன்னால் சரணடையுமாறு கோருகின்றனர்.

1236 முதல் 1241 வரை நடைபெற்ற கிழக்கு மற்றும் நடு ஐரோப்பியப் படையெடுப்பில் படு மற்றும் கதான் போன்ற மற்ற மங்கோலிய இளவரசர்களுடன் குயுக் பங்கெடுத்தார். ரியாசன் முற்றுகை, ஆலனியாவின் தலைநகரான மகாசு மீதான நீண்டகால முற்றுகை ஆகியவற்றில் தனது படைப் பிரிவுக்குக் குயுக் தலைமை தாங்கினார். இந்தப் படையெடுப்புக் காலத்தில், ஒரு வெற்றி விருந்தில் படுவுடன் குயுக் வன்மையான விவாதத்தில் ஈடுபட்டார். "படு அம்பறாத் தூணியைக் கொண்டுள்ள ஒரு வெறும் மூதாட்டி" என்று கத்தினார்.[5][6] குயுக் மற்றும் சகதாயியின் பேரனாகிய புரி ஆகியோர் விருந்திலிருந்து இழி சொற்களைப் பயன்படுத்தி வசைபாடியவாறு வேகமாக வெளியேறினர். இதைப் பற்றிய தகவல் ககான் ஒக்தாயியை அடைந்தபோது, மங்கோலியாவிற்குச் சில காலத்திற்கு வருமாறு அவர்கள் அழைக்கப்பட்டனர். ஒக்தாயி குயுக்கைப் பார்க்க மறுத்துவிட்டார். தன் மகன் குயுக்கைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். பிறகு ஒக்தாயி அமைதியானர். இறுதியாகத் தன்னுடைய கெர்ருக்குள் குயுக்கை அனுமதித்தார். குயுக்கை விமர்சித்தார். "நீ உன்னுடைய போர் வீரர்களிடம் எவ்வாறு பெருந்தன்மையற்று நடந்து கொண்டாய் என்பதற்காக உருசியர்கள் சரணடைந்தனர் என நினைக்கிறாயா. ...ஒன்று அல்லது இரண்டு எதிரிப் போர் வீரர்களை நீ பிடித்ததனால் போரை நீயே வென்றுவிட்டது போல நினைக்கிறாயா. நீ ஓர் ஆட்டுக்குட்டியைக் கூடப் பிடிக்கவில்லை." குடும்பத்திற்குள் சண்டையிட்டதற்காகவும், தன் வீரர்களை முறையின்றி நடத்தியதற்காகவும் தனது மகனை ஒக்தாயி கடுமையாகக் கண்டித்தார். பிறகு குயுக் மீண்டும் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இத்தகைய நேரத்தில் ஒக்தாயி 1241ஆம் ஆண்டு இறந்தார். அவரது விதவை தோரேசின் அரசப் பிரதிநிதியாகப் பேரரசைக் கவனித்துக் கொண்டார். மிகுந்த செல்வாக்கு மற்றும் அதிகாரமுடைய இப்பதவியைப் பயன்படுத்தித் தனது மகன் குயுக்கைப் பரிந்துரைத்தார். அடுத்த கான் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் தானும் ஒரு பங்கு முடிவெடுக்கலாம் எனக் கருதி, படு ஐரோப்பாவிலிருந்து பின்வாங்கினார். ஆனால் அவரது தாமதப்படுத்தும் முயற்சிகளைத் தாண்டி, 1246ஆம் ஆண்டு குயுக் கானாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் தோரேசின் வெற்றி கண்டார். செங்கிஸ் கானின் கடைசித் தம்பியான தெமுகே, பெரிய கதுன் தோரேசினுக்கு அரியணையைக் கைப்பற்றுவதற்கு அச்சுறுத்தலாக விளங்கிய போது, எமிலிலிருந்து மங்கோலியாவிற்குக் குயுக் திரும்பினார். தனது பதவியை உடனடியாகப் பாதுகாப்பதற்காக வந்தார்.

முடிசூடல் (1246)

திருத்தந்தை நான்காம் இன்னசென்டை அடிபணியக் கோரி, குயுக் கான் 1246ஆம் ஆண்டு அனுப்பிய பாரசீக மொழி மடல்.

மங்கோலியத் தலைநகரான கரகோரத்திற்கு அருகில் 24 ஆகத்து 1246ஆம் ஆண்டு குயுக் முடிசூட்டிக் கொண்டார். இவ்விழாவில் பெருமளவிலான அயல்நாட்டுத் தூதுவர்கள் கலந்துகொண்டனர். பிரான்சிஸ்கன் சபையின் துறவியும், திருத்தந்தை நான்காம் இன்னசென்ட்டின் தூதுவருமான பிலானோ கார்பினியின் யோவான், போலந்தின் பெனடிக்ட், விளாதிமிரின் மாட்சிமிக்க கோமகனாகிய இரண்டாம் எரோசுலா, சார்சியாவின் ஆட்சியாளர், ஆர்மீனிய மன்னனின் சகோதரனும் வரலாற்றாளருமான காவல் அதிகாரி செம்பத், உரூமின் எதிர்கால செல்யூக் சுல்தானான நான்காம் கிலிஜ் அர்சலான், அப்பாசியக் கலீபகத்தின் கலீபாவான அல்-முஸ்டசீம் மற்றும் தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் மசூத்தின் தூதுவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.[7] பிலானோ கார்பினியின் யோவானின் கூற்றுப்படி, பெரிய குறுல்த்தாயில் குயுக் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வானது, இவரது குழு சிரா ஓர்டா அல்லது மஞ்சள் ஓய்வுக் கூடம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த போது நடைபெற்றது. ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 3,000 முதல் 4,000 வருகையாளர்கள் மரியாதை செலுத்தவும், திறை செலுத்தவும், பரிசுகளைக் கொடுக்கவும் வந்திருந்தனர். பிறகு "தங்க முகாம்" என்று அழைக்கப்பட்ட மற்றொரு முகாமுக்கு அருகில் அதிகாரப்பூர்வ முடிசூட்டும் விழாவை அவர்கள் கண்டுகளித்தனர். இதற்குப் பிறகு பரிசுப் பொருட்கள் பேரரசரிடம் கொடுக்கப்பட்டன. மோசுல் இவரிடம் அடிபணிந்தது. இந்த அரசவைக்குத் தனது தூதுவர்களை அனுப்பியது.

திருத்தந்தையின் தூதரான பிலானோ கார்பினியின் யோவான், ஐரோப்பாவின் கத்தோலிக்க இராச்சியங்கள் மீதான மங்கோலியத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, செங்கிஸ் கான் மற்றும் ஒக்தாயி கானின் காலத்தில் மங்கோலியத் தூதுவர்களை அம்மக்கள் கொன்றதாகக் குயுக் கூறினர். மேலும் "சூரியன் உதிப்பதில் இருந்து, மறையும்வரை அனைத்து நிலப்பரப்புகளும் பெரிய கானின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன" என்று கூறினார். இவ்வாறாக உலகப் படையெடுப்புக் கொள்கையை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.[8] தேவாலயம் மற்றும் மங்கோலியர்களுக்கு இடையிலான உறவுமுறை பற்றி திருத்தந்தை நான்காம் இன்னசென்டிற்காக ஒரு மடலைக் ககான் எழுதினார். "மனமார்ந்து நீங்கள் கூற வேண்டும்: நாங்கள் உங்களது குடிமக்களாவோம், எங்களது பலத்தை உங்களுக்குக் கொடுப்போம்'. நீங்கள் நபராக, உங்களது மன்னர்கள் அனைவருடனும், ஒருவரையும் விட்டுவிடாமல், எங்களுக்குச் சேவையாற்றவும், மரியாதை செலுத்தவும் வரவேண்டும். அதன் பிறகு உங்களுடைய அடிபணிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம். கடவுளின் ஆணையை நீங்கள் பின்பற்றாவிடில், எங்களது ஆணைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், நாங்கள் உங்களை எங்களது எதிரிகளாகக் கருதுவோம்."

இந்த நேரத்தில் குயுக் மற்றும் அவரது தாய் தோரேசினுக்கு இடையிலான உறவுமுறையானது பெருமளவு மோசமானது. குயுக் பதவிக்கு வர தோரேசின் முக்கியப் பங்காற்றியிருந்த போதும் இவ்வாறாக நிகழ்ந்தது. தோரேசினின் விருப்பத்திற்கு எதிராக குயுக், தோரேசினின் தோழியான பாத்திமாவைக் கைது செய்து, சித்திரவதை செய்து, மரண தண்டனைக்கு உட்படுத்தினார். தனது சகோதரன் கோதனுக்கு மாந்திரீகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஊழலுக்காக அப்துர் ரகுமானும் சிரச்சேதம் செய்யப்பட்டார். தோரேசினுக்குக் கீழ் நியமிக்கப்பட்ட மாகாண அதிகாரிகளில் ஒயிரட்டு அதிகாரியான அர்குன் அகா மட்டுமே எஞ்சியிருந்தார். இவரது தாய் தோரேசினும் இறந்தார். அவர் அநேகமாகக் குயுக்கின் ஆணைப்படி இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[9] தெமுகேயின் செயலைப் பற்றி விசாரிக்க ஓர்டா மற்றும் மோங்கேயைக் குயுக் நியமித்தார். பிறகு தெமுகே மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[10] சகதாயி கானரசின் குழந்தைக் கானாகிய காரா குலாகுவைப் பதவியிலிருந்து நீக்கி விட்டுத் தனது விருப்பத்திற்குரிய உறவினரான எசு மோங்கேயைக் குயுக் பதவியில் அமர்த்தினார். தன் பதவியை உறுதிப்படுத்தக் குயுக் இவ்வாறு செய்தார். தன்னுடைய தந்தையின் அதிகாரிகளான மகமுத் எலாவச்சு, மசூத் பெக் மற்றும் சிங்கை ஆகியோரை அவர்களின் மாகாணப் பதவிகளில் மீண்டும் குயுக் அமர்த்தினார்.

ஆட்சி (1246–1248)

ஜமாலல்தீன் மகமுது குத்சந்தியை விசாரிக்கும் குயுக். சுவய்னியின் தரிக்-இ ஜகான்குசாய் நூலிலிருந்து.

அரசப் பிரதிநிதியாகத் தனது தாய் செய்த பிரபலமற்ற பல ஆணைகளைக் குயுக் திரும்பப் பெற்றார். வியப்பூட்டும் வகையில் தகுதிவாய்ந்த கானாகச் செயல்பட்டார். பகுதாது மற்றும் இஸ்மாயிலிகள் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகுவதற்காகப் பாரசீகத்தில் எல்சிகிடையை நியமித்தார். சாங் அரசமரபுக்கு எதிராகப் போரைத் தொடர்ந்தார். எனினும் இவர் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். துரோகத்திற்காக முந்தைய அரசின் பல உயர் அதிகாரிகளை மரண தண்டனைக்கு உட்படுத்தியதற்காக இவரது குடிமக்கள் இவரது செயல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. உரூம் சுல்தானகத்தின் அரியணைக்காகச் செல்யூக் இளவரசர்கள் தொடர்ந்து போராடினர். இசத்தினால் வெறுக்கப்பட்ட உருக்குனல்தீன் நான்காம் கிலிஜ் அர்சலான் மங்கோலியாவிற்கு வருகை புரிந்தார். இசத்தின் இரண்டாம் கய்கவுசின் இடத்தில் உருக்குனல்தீனை அரியணையில் அமர்த்த குயுக் ஆணையிட்டார். இந்த முடிவைச் செயல்படுத்துவதற்காக 2,000 மங்கோலியத் துருப்புகளுடன் ஒரு தருகச்சியை இவர் அனுப்பினார். கரகோரத்தில் குயுக்கின் முன்வருமாறு தாவீது நரின் மற்றும் தாவீது உளு ஆகியோர் அழைக்கப்பட்ட போது, சார்சியா இராச்சியத்தை அவர்களுக்குள் இரண்டாகப் பிரித்துத் தாவீது உளுவை மூத்த மன்னனாகக் குயுக் ஆக்கினார்.[11] 1247ஆம் ஆண்டு மங்கோலியர்கள் மற்றும் சிலிசிய ஆர்மீனியாவுக்கு இடையில் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட பிறகு, மன்னன் முதலாம் கேதேவும் தனது சகோதரர் செம்பத்தைக் கரகோரத்தின் மங்கோலிய அவைக்கு அனுப்பினார். 1247ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் மங்கோலியப் பேரரசின் குத்தகை அரசாக சிலிசிய ஆர்மீனியா கருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்மீனியா தாமாக முன்வந்து சரண் அடைந்த காரணத்தால் செம்பத்திற்கு ஒரு மங்கோலிய மனைவி கொடுக்கப்பட்டார். மங்கோலிய மேற்பார்வையாளர்கள் மற்றும் வரி வசூலிப்பாளர்களில் இருந்து அவரது இராச்சியமானது விடுவிக்கப்பட்டது. அப்பாசியர்கள் மற்றும் இஸ்மாயிலிகளின் முழுமையான அடிபணிவைக் குயுக் கோரினார். அப்பாசியக் கலீபகத்தின் வெறுப்பேற்றக் கூடிய எதிர்ப்புக்குப் பைசுவை குயுக் கான் காரணமாகப் கூறினார்

பேரரசு முழுவதுமான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குக் குயுக் ஆணையிட்டார். 1246ஆம் ஆண்டு குயுக்கின் ஆணைப்படி, அனைத்தின் மீதும் 130 முதல் 110 வரை வரிகள் விதிக்கப்பட்டன. சார்சியா மற்றும் ஆர்மீனியாவில் இருந்த ஆண்களிடம் கடும் தலை வரியாக 60 வெள்ளித் திராம்கள் பெறப்பட்டன.[12] தலைமை எழுத்தர் பணியில் இருந்து, பெரிய தருகச்சி பதவியைக் ககான் பிரித்தார். தனது தந்தையின் கெசிக்கில் பாதிப் பேரைத் தனக்காகக் குயுக் எடுத்துக் கொண்டார். இவரது ஆட்சியின் போது வட சீனர் மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கி உய்குர் அதிகாரிகள் தங்களது ஆதிக்கத்தை அதிகப்படுத்தினர். குயுக் கண்டிப்பான மற்றும் புத்திசாலி மனிதன் ஆவார். இருந்தும் இவர் சிடுசிடுப்பான, பலவீனமான மனிதன் கிடையாது. இவரது ஆரோக்கியத்தை மதுப் பழக்கமானது கெடுத்தது.

குயுக் அம்புகனை கொரியாவுக்கு அனுப்பினார். சூலை 1247ஆம் ஆண்டு இயோம்சு என்ற இடத்திற்கு அருகில் மங்கோலியர்கள் முகாமிட்டனர். கொர்யியோவின் மன்னன் கோசோங்கு தனது தலைநகரத்தை கங்குவா தீவிலிருந்து சோங்குதோவிற்கு மாற்ற மறுத்தபோது, அம்புகனின் படைகள் கொரியத் தீபகற்பத்தை 1250ஆம் ஆண்டு வரை சூறையாடின.

விருந்தில் குயுக். சுவய்னியின் தரிக்-இ ஜகான்குஷாய் நூலிலிருந்து.

குயுக்கின் தேர்வைப் படு ஆதரிக்காத போதும் ஒரு பாரம்பரியவாதியாகக் குயுக்கைப் படு மதித்தார். படு ஆந்திரே மற்றும் அலெக்சாந்தர் நெவ்சுகி ஆகியோரை அவர்களது தந்தையின் இறப்பிற்குப் பிறகு 1247ஆம் ஆண்டு மங்கோலியாவின் கரகோரத்திற்கு அனுப்பி வைத்தார். ஆந்திரேவை விளாதிமிர்-சுசுதாலின் மாட்சிமிக்க இளவரசனாகவும், அலெக்சாந்தரைக் கீவின் இளவரசனாகவும் குயுக் நியமித்தார்.[13] 1248ஆம் ஆண்டு படுவை மங்கோலியாவிற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு குயுக் கோரினார். அக்கால வரலாற்றாளர்கள் இந்நகர்வைப் படுவைக் கைது செய்வதற்கான முன்னோட்டமாகக் கருதினர். ஆணைப்படி நடப்பதற்காக படு ஒரு பெரிய இராணுவத்துடன் வந்தார். குயுக் மேற்கு நோக்கி நகர்ந்தபோது குயுக்கின் இலக்காகச் சூச்சி வழித்தோன்றல்கள் இருக்கலாம் எனப் படுவை சோர்காக்டனி எச்சரித்தார்.

இருவருக்குமிடையிலான மோதலானது என்றுமே நடைபெறவில்லை. பயணம் செல்லும் வழியில் தற்போதைய சீனாவின் சிஞ்சியாங்கில் சிங்கே மாகாணத்தில் குயுக் உயிரிழந்தார். குயுக்குக்கு அநேகமாக விடம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சில நவீன வரலாற்றாளர்கள் அவருடைய உடல் நலம் குன்றி இயற்கைக் காரணங்களால் மரணமடைந்து இருக்கலாம் என நம்புகின்றனர்.[14] உரூப்ரக்கின் வில்லியமின் கூற்றுப்படி, சிபனுடன் நடந்த ஒரு வன்முறையான சண்டையில் இவர் கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு இவரது விதவையான ஒகுல் கைமிஸ் அரசப் பிரதிநிதியாக பேரரசைக் கவனித்துக் கொண்டார். ஆனால் எதிர்கால ஆட்சியாளர்கள் தன் குடும்பத்தின் பிரிவிலிருந்து வருமாற் செய்ய அவரால் முடியவில்லை. 1251ஆம் ஆண்டு கானாக மோங்கே கான் பதவிக்கு வந்தார்.

மனைவிகளும், குழந்தைகளும்

சக்தி வாய்ந்த மங்கோலிய ஆண்கள் பல மனைவிகளைக் கொண்டிருப்பது என்பது பொதுவான ஒன்றாகும். ஆனால் குயுக்குக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர் எனத் தெரியவில்லை.[15][16]

  • முதன்மை மனைவி உவுவேரெயிமிசி, மெர்கிடு பழங்குடியினம்
  • பேரரசி நைமன்சன், நைமன்சன் பழங்குடியினம்
  • பேரரசி கின்சு (இறப்பு 1251), மெர்கிடு பழங்குடியினம்
    • கோசா, முதல் மகன்
    • நகு, இரண்டாம் மகன்
  • தெரியாத மனைவி:
    • கோக்கூ, மூன்றாவது மகன்
    • பாபாகயேர், முதல் மகள்
    • எளிமிசி, இரண்டாவது மகள்

மரபு

குயுக்கின் இறப்பு உலக வரலாற்றில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மங்கோலிய சக்தியை ஐரோப்பாவிற்கு எதிராகத் திருப்பி விட குயுக் விரும்பினார். ஆனால் இவரது எதிர்பாராத மரணமானது மேலும் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குள் மங்கோலியப் படைகள் நகரும் முயற்சியைத் தடுத்தது. குயுக்கின் இறப்பிற்குப் பிறகு, இறுதியாக, மங்கோலியக் குடும்ப அரசியல் நிகழ்வுகள் மங்கோலியர்களின் முயற்சியைத் தென் சீனாவிற்கு எதிராகத் திருப்பி விட்டன. தென் சீனாவானது குப்லாய் கானின் ஆட்சியின்போது இறுதியாக வெல்லப்பட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குயுக்_கான்&oldid=3882641" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை