கொங்கு நாடு

தென்னிந்தியாவில் மேற்கு தமிழ்நாடு, மற்றும் தென்கிழக்கு கர்நாடகா மற்றும் வடகிழக்கு கேரளாவின்
(கொங்கு மண்டலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொங்குநாடு (Kongu Nadu) என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இதை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. சேரர்களால் ஆளப்பட்ட இப்பகுதியானது, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் மற்றும் தெற்கே பாண்டிய நாடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது தென்கிழக்கு கர்நாடகத்தின் சில பகுதிகளையும், வடகிழக்கு கேரளத்தின் சிறிய பகுதியையும் உள்ளடக்கியது.[2]

கொங்கு நாடு
தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள கொங்கு மண்டலம்
தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள கொங்கு மண்டலம்
ஆள்கூறுகள்: 11°1′48.925″N 77°2′21.544″E / 11.03025694°N 77.03931778°E / 11.03025694; 77.03931778
நாடு India
பிரதேசம்தென்னிந்தியா
பெரிய நகரங்கள்கோயம்புத்தூர்
மாவட்டங்கள்கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், நீலகிரி திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி
அரசு
 • நிர்வாகம்தமிழ்நாடு அரசு
பரப்பளவு
 • மொத்தம்45,493 km2 (17,565 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,07,43,812
 • அடர்த்தி607/km2 (1,570/sq mi)
மொழி
 • அலுவல் மொழிதமிழ்
 • மற்றவைகொங்குத் தமிழ்
நேர வலயம்நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635-642xxx
வாகனப் பதிவுTN 24, TN 27, TN 29 to TN 42, TN 43, TN 47, TN 52, TN 54, TN 66,TN 70, TN 77-78, TN 88, TN 86, TN 94, TN 99
எழுத்தறிவு75.55%

பெயர்க்காரணம்

கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு .தேன் பூந்தாது, குரங்கு என்று பொருள் உண்டு.

கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:[3]

  1. கங்கு என்றால் ஓரம், எல்லை, வரம்பு என்று அர்த்தம். கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது. மேலும், கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்க(கொங்கை) என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது. சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது. அதன்படி, முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு, என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
  2. கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், இப்பகுதி கொங்கு எனவும் கூறுவார் உண்டு.
  3. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மருத நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள். "கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந்தொகை - 1 ) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது.
  4. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும்,"கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார்.
  5. "கொங்கு முதிர்நறு விழை" - (குறிஞ்சிப்படல் 83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது.[4]

வரலாறு

கொங்கு நாடு என்பது சேர, சோழ, பாண்டிய நாட்டைப் போல தனி மரபினரால் ஆளப்பட்ட பகுதியல்ல. மாறாகப் பல சிற்றரசர்களால் ஆளப்பட்டது. அதனால், அந்தப்பகுதிகளை சேர, சோழ, பாண்டியர்கள் தங்கள் நாட்டுடன் அவ்வப்போது இணைத்துக்கொண்டு வந்துள்ளனர். அதன் காரணமாகவே சங்க காலம் முதல் மூவேந்தற்களிடையே அடிக்கடி போரும் நிகழ்ந்துள்ளது. மேலும் இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின் (வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதிக்கு உட்பட்டதாக இருந்துள்ளது.[5] பின்னர் தஞ்சைச் சோழர்களான, இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆட்சியின்கீழ் வந்தது. பின்னர், இப்பகுதி போசளரின் ஆட்சிக் கீழ்சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.[6] கொங்கு நாடு, 17-ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின்கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[6] தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்கு நாடு இருந்து வந்துள்ளது.[7]

ஆவணங்களும் வாழ்வியலும்

குறளைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் கொங்கு நாட்டில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் பிரதான ஆட்சி நூலாகத் திருக்குறள் திகழ்ந்துள்ளது.[8]:779 சேலம் மாவட்டம் மல்லூர் அருகிலுள்ள பொன்சொரிமலையில் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கல்வெட்டு ஒன்றில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்" என்ற புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறட்பா காணப்படுகிறது. இது அக்காலத்து கொங்கு நாட்டு மக்கள் அகிம்சையையும் கொல்லாமையையும் தங்கள் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடித்து வந்ததைக் காட்டுவதாக உள்ளது.[8]:774–779, 783 1617-ஆம் ஆண்டின் கொங்கு நாட்டு பூந்துறை நாட்டார் மேலோலை, 1798-ஆம் ஆண்டின் கொங்கு நாட்டுப் நாரணபுரத்து பல்லடம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேடு, நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சிப் பகுதியில் காணப்படும் 18-ஆம் நூற்றாண்டின் கபிலமலைச் செப்பேடு, பழனி வீரமுடியாளர் மடத்துச் செப்பேடு, கொங்கு நாட்டு காரையூர் செப்பேடு, பழையகோட்டை ஏடு போன்றவை கொங்கு மண்டலத்தில் காணப்படும் திருக்குறளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மேலும் சில வரலாற்று ஆவணங்களாகும்.[8]:774–784

சமயம்

இந்தப் பகுதியில் சைவ சமயம் பிரதானமாக இருந்தது. இருப்பினும், வைணவம், சாக்தம், சமணம்[9] மற்றும் பௌத்தம் ஆகிய இந்து சமயங்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. இந்த பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர்கள் சைவ சித்தாந்தம் அடிப்படையிலான சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள்.[2] பொ.ஊ.மு. 12-ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் கொங்கு நாட்டில் சமண சமயம் கணிசமாக இருந்தது.[10][11]

18 குடிகள்

சங்க காலத்தில் கொங்கு நாட்டின் குடிகள் வேளிர், பூழியர், மழவர், வேடர் ஆகியோர் என்று தொல்காப்பியம் கூறுகிறது. வேளிர் என்பவர்களும், கிழார் என்பவர்களும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள். அவர்கள் கொங்கு நாட்டில் பெரும்பான்மையாகவும் ஆளும் குடியாகவும் இருந்தனர். பூழியர்கள் இடைக்குலமக்கள், மழவர்கள் வீரமிக்கவர்கள் ஓரியின் இனத்தவர்கள் வேடர்கள் வேட்டை ஆடுவோர்.

கொங்கு மண்டல சதகம் மற்றும் பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட பல்வேறு நூல்கள், கொங்கு நாட்டில் வாழும் 18 வகைக் குடிகள் பற்றி கூறுகிறது.[12][13][14]

வேளாளர் மற்றும் வேளாளர் படியளந்த 18 குடிகள்[15]
குடிகள்பொதுவான பெயர்கள்/துணை சாதிகள்
வேளாளர்கொங்கு வேளாளர், கவுண்டர் (தென்திசை/செந்தலை வெள்ளாளர்), நாட்டார் (நாட்டுகவுண்டர்), காணியாளர், குடியானவர்
அந்தணர்பார்ப்பான், ஆதி சைவர், குருக்கள், சிவர்ச்சாரியார், பிராமணர் (ஸ்மார்த்தர்)
செட்டியார்வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி, வாணிகர்
பண்டாரம்கோமானாண்டி, உவச்சாண்டி, பூவாண்டி
புலவர்புலவன், பண்பாடி, தக்கைகொட்டி, கூத்தாடி
கம்மாளர்விஸ்வகர்ம, கொல்லன் (இரும்பு), தச்சன்/ஆசாரி(மரம்), தட்டான் (பொன்னாசாரி, பொற்கொல்லர்), கருமான் (உருக்காசாரி), கல்தச்சன் (சிற்பிகள், ஸ்தபதிகள்), கன்னார் (பித்தளைத் தொழிலாளர்கள்),
குசவர்குலாலர், குயவர்/கொசவர்,
கைக்கோளர்செங்குந்தர், கைக்கோள முதலியார்
மண்ணுடையார்உடையார், கொத்தனார்
சாணான்நாடார்
உப்பிலியர்கற்பூர செட்டியார்
கருணீகர்கணக்குப்பிள்ளை
நாவிதர்நாசுவன், அம்பட்டன், மருத்துவர்
வண்ணான்வண்ணார்
தொண்டன்ஊழியர், தொண்டன், குறவன்
இடையன்இடையன், சிவியர்
வலையன்
மலைக்காரர்வேட்டுவர்
பள்ளர்
போயர்
பறையர்
மாதாரி

புவியியல் வரையறை

இப்பகுதி காவேரி நீர்பிடிப்புப் பகுதி முழுவதும் பரவியது. 17-ஆம் நூற்றாண்டின் கவிஞராக, வளசுந்தர கவிராயர் தனது கொங்குமண்டல சடக்கத்தில் கொங்குநாட்டின் எல்லைகளை குறிப்பிடுகிறார்.

"வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்

களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு

குளித்தண் டலையளவும் கொங்கு”[16][17]

இதிலிருந்து நாம் 17-ஆம் நூற்றாண்டு கொங்குவின் எல்லைகள் என்பதை உறுதி செய்கிறோம்:

வடக்கு: நந்திகிரி (கோலார் மற்றும் தும்கூர் மாவட்டங்களில் உள்ள நந்தி மலைகள். இன்றைய பெங்களூருவின் வடக்கே எழுபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாடகாவில் உள்ளது).

தெற்கு: வராககிரி (பழனி-கொடைக்கானல் மலைத்தொடரில் உள்ள பன்றிமலை மலை, பன்றிமலை அதன் சமஸ்கிருத பெயரில் குறிப்பிடப்படுகிறது).[18]

கிழக்கு: குடகு மற்றும் வெள்ளிகுண்டு (கர்நாடகாவின் மடிகேரி மாவட்டத்தில் உள்ள குடகு மற்றும் கோயம்புத்தூர் அருகே உள்ள வெள்ளிங்கிரி மலைகள், கேரளாவின் எல்லையை உருவாக்குகின்றன).

மேற்கு: குளித்தலை (கரூர் மாவட்டம். கரூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது).

இப்பகுதி பின்வரும் மாநிலங்களின் பின்வரும் இன்றைய மாவட்டங்களை மற்றும் பகுதிகள் உள்ளடக்கியது.

உள்ளடக்க நாடுகள்

கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று [21] குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு.24 நாடுகள்:

கொங்கு மண்டலத்தில் நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் நடக்கும் சடங்குகள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுள்ளது.

இணைநாடுகள்

சங்க நூல்களில் கொங்கர்

"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"-புறநானூறு-பாடல்-373
"கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை"-புறநானூறு-பாடல்-160

'ஆ கெழு கொங்கர்' என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.

சமய இலக்கியங்களில் கொங்கு

"விரவியவீங்கோய் மலைமுதலாக விமலர்தம் பதிபலவணங்கிக்

குரவலர் சோலையணிதிருப்பாண்டிக் கொடு முடியணைந்தனர் கொங்கில்"- பெரிய புராணம்(-ஏயர்கோன்-85)

"காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலசுழியச்
சீரூரும் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்"-பெரிய புராணம்(-சேரமான்-164)

தொல்பொருள் மற்றும் கலாச்சாரம்

பாரம்பரியமாக, கொங்கு நாடு பகுதி மக்கள் திருக்குறளை மிகவும் பயபக்தியுடன் நிலைநாட்டினர்[22]:779.திருக்குறள் இடைக்காலத்தில் இப்பகுதியின் தலைமை நிர்வாக உரையாக இருந்தது.[22]:779கொங்கு நாடு பகுதி முழுவதும் பல குறள் கல்வெட்டுகள் மற்றும் பிற வரலாற்று பதிவுகள் காணப்படுகின்றன. சேலம் மாவட்டம் மல்லூருக்கு அருகிலுள்ள பொன்சோரிமலையில் உள்ள 15-ஆம் நூற்றாண்டு சமண கல்வெட்டுகளில் "புலான்மறுத்தல்" அதிகாரத்திலிருந்து 251-ஆவது திருக்குறள், "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா நெங்ஙன மாளு மருள்" (பிற உயிர்களுடைய கொழுப்பில் தன்னைக் கொழுக்க வைப்போர் எவ்விதம் அருளுடையவராக இருப்பர்?) என்று ஒரு பாறையில் ஐந்து வரிகளில் செதுக்கப்பட்டுள்ளது. கொங்கு நாடு பிராந்திய மக்கள் அஹிம்சா மற்றும் கொலை செய்யாத தர்மங்களை கடைப்பிடித்ததை இது குறிக்கிறது.[22]:774–779, 783[23] பொ.ஊ. 1617 பூந்துறை நாட்டார் நூல்கள், பொ.ஊ. 1798 பல்லடம் நாரணபுரம் அங்காள பரமேஸ்வரி கோடை செப்பு கல்வெட்டுகள், நாமக்கல் மாவட்டம், கபிலமலை 18-ஆம் நூற்றாண்டு செப்பு கல்வெட்டுகள், பழனி வீரமுதியார் மடத்து செப்பு கல்வெட்டுகள், கரையூர் செப்பு கல்வெட்டுகள் மற்றும் பாளையங்கோட்டை பதிவுகள் ஆகியவை கொங்கு நாட்டில் காணப்படும் சில திருக்குறள் கல்வெட்டுகள்.[22]:774–784

சமையல் முறை

கொங்கு நாட்டு உணவு பெரும்பாலும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே அரிசியை அடிப்படையாகக் கொண்டதாக தற்போது உள்ளது.[24] இது வறண்ட பகுதி என்பதால், உணவு வகைகளில் சோளம், கம்பு, கேழ்வரகு, பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் எள் ஆகியவை முக்கிய உணவாக முற்காலத்தில் இருந்துள்ளது. வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. வாழை இலையில் சாப்பிடுவது பழைய வழக்கமாக இருப்பதோடு, உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது மற்றும் ஆரோக்கியமாக கருதப்படுகிறது. இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் ஆகியவை பிரபலமான உணவுகள். சிறந்த தரமான மஞ்சள் இப்பகுதியில் விளைகிறது. இது சமையலில் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். பாரம்பரிய கொங்கு மக்கள் பெரும்பாலும் சமய காரணங்களுக்காக சைவ உணவை உண்பவர்கள். இங்கு சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒப்புட்டு என்பது அரிசி, கொண்டைக்கடலை, கருப்பட்டி அல்லது கரும்பு வெல்லம், ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட இனிப்பு உணவாகும்.[25][26][26][27]

கொங்குநாடு பிராந்தியத்தின் உணவு வகைகளில் இடியாப்பம் (நூடுல்ஸ் வடிவிலான அரிசி உணவு), ஒப்புட்டு (இனிப்பு திணிப்புடன் வெளியே உலர்ந்த ஒரு பீட்சா போன்ற உணவு), கோலா உருண்டை, தேங்காய் பால் (தேங்காய், வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்பு சூடான பால்) உளுந்து காளி (வெல்லம், இஞ்சி எண்ணெய் உளுந்து ஆகியவற்றால் ஆன இனிப்பு), கச்சாயம் (வெல்லம் மற்றும் அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு), அரிசிப்பருப்பு சாதம், ராகி புட்டுமாவு, அரிசிப் புதுமாவு, கம்பு பணியாரம், ராகி பகோடா, தேங்காய் பார்பி, கடலை உருண்டை, எள்ளு உருண்டை மற்றும் பொரி உருண்டை. மைதா அல்லது பிற மாவுடன் செய்யப்பட்ட பரோட்டா, அரிசிபருப்பு சாதம் போன்ற உணவுகள் இப்பகுதியில் தனித்துவமானவை மற்றும் அடிக்கடி வீடுகளில் சமைக்கப்படுபவை.[28] தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படுவதால் கொங்குநாடு உணவு மற்ற தமிழக உணவு வகைகளிலிருந்து சற்று வேறுபட்டது. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றில் இப்பகுதி அதிக உற்பத்தியாகிறது. இது அவர்களின் சமையலில் பிரதிபலிக்கிறது. ஏராளமான எண்ணெய் விதைகள் வளர்ந்து ஆசிர்வதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் எண்ணெயில் ஊறவைத்த பல்வேறு ஊறுகாய்களை செய்கின்றனர். கொங்கு பகுதியில் எலுமிச்சை, பச்சை மா, பச்சை மிளகு, இஞ்சி ஊறுகாய் மிகவும் பொதுவானவை.[29][30][31][32][33]

மதுரை நாயக்கர்களின் பாளையக்காரர்

கொங்கு நாட்டில் 17-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளுமை 1659-இல் தொடங்கி 1672-இல் முடிவடைந்தது.

கொங்கு நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள்

என தமிழகத்தின் 67 சட்டமன்ற தொகுதிகளை இந்த கொங்கு மண்டலம் உள்ளடக்கி உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில், 67/44 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

கொங்கு நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள்

என பதினோறு மக்களவை தொகுதிகளை இந்த கொங்கு மண்டலம் கொண்டுள்ளது.

கொங்குநாட்டில் உள்ள மாவட்டங்கள்

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல்(நிலக்கோட்டை, நத்தம் தவிர) ஆகிய மாவட்டங்களும் திருச்சி(துறையூர், தொட்டியம், முசிறி), திருப்பத்தூர், கல்லங்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் சில எல்லை பகுதிகள் கொங்கு நாட்டிற்கு உட்பட்டதாகும்.[35]

கொங்கு மண்டல ஆறுகள்

  1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
  2. காஞ்சி (நொய்யல்),
  3. வானி (வவ்வானி, பவானி),
  4. பொன்னி (காவிரி ஆறு),
  5. சண்முகநதி
  6. குடவனாறு (கொடவனாறு),
  7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
  8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
  9. மீன்கொல்லிநதி
  10. சரபங்காநதி
  11. உப்பாறு
  12. பாலாறு
  13. கௌசிகா நதி
  14. ஆழியாறு

தனி மாநிலத்துக்கான கோரிக்கை

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கசிலர் கோரிக்கைகளை எழுப்பினர்.[36][37] தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்துவந்த போதிலும், இந்தப் பகுதியை ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சில சாதி அமைப்புகள் குற்றம் சாட்டின. இப்பிரதேசத்தில் கொங்குநாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்குதேச மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் பிரந்திய அளவில் இயங்கி வருகின்றன.[38][39][40][41][42] பிறகு, இந்த கோரிக்கை 2021-இல் பாஜகவால் வலியுறுத்தப்பட்டது.[43][44][45][46][47]

எல்லைகள் குறித்த கருத்து மாறுபாடுகள்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் அனைத்தையும் கொங்கு மாவட்டங்கள் என்ற பொதுப் பெயரில் அழைப்பதில் மாற்றுக் கருத்துகள் உள்ளன. கொங்கு நாட்டின் எல்லைப் பகுதிக்குள் மழநாட்டின் பகுதிகளையும் இணைத்து கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பண்டைய எருமைநாடு வரை (தற்போதைய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு ஆகும்.[48][49][50] மழநாடு மேல்மழநாடு (மேற்கு மழநாடு),[51][52] கீழ்மழநாடு (கிழக்கு மழநாடு) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கீழ்மழநாடு ஒரு காலத்தில் கொல்லி மழவனாலும் அவரது மரபினராலும் ஆளப்பட்டது. கீழ்மழநாடு அதன் நீர் வளத்திற்காக நன்கு அறியப்பட்டதாக ஒரு தமிழ்க் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[53] சங்ககால மன்னர்களான அதியமான், வல்வில் ஓரி, கொல்லி மழவன் ஆகியோர் மழவர் குல மன்னர்களாக இலக்கியங்களால் போற்றப்படுகின்றனர். அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை பொ.ஊ. 17-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டின் ஆட்சியாளர்களாவர்.

மொழி

கொங்கு மண்டலத்தில் தமிழ் மொழி பேசப்படுகிறது. கொங்குத் தமிழ் (கொங்கலம் அல்லது கொங்கப் பேச்சு) என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் ஒரு வட்டார வழக்கு மொழியாகும்[54][55]. மாநில எல்லைப் பகுதிகளில், மக்கள் மலையாளம் மற்றும் கன்னடத்தையும் மிகக் குறைந்த அளவில் பேசுகிறார்கள்.[56] நீலகிரி மாவட்டத்தின் பழங்குடி மக்களால் படுக மொழி, தோடா மொழி, இருளா மொழி, கோட்டா மொழி போன்ற பழங்குடி மொழிகளும் பேசப்படுகின்றன.

கொங்கு நகரங்களும் அடைப்பெயர்களும்

  1. கோயம்புத்தூர் - தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
  2. சேலம் - மாம்பழ நகரம் & இரும்பு நகரம்
  3. திருப்பூர் - பனியன் நகரம்
  4. ஈரோடு - மஞ்சள் நகரம்
  5. நாமக்கல் - முட்டை நகரம்
  6. நீலகிரி - தேயிலை நகரம்
  7. வால்பாறை - மலைகளின் இளவரசி
  8. கொடைக்கானல் - மலைகளின் இராணி
  9. திண்டுக்கல் - பூட்டு நகரம்
  10. காங்கேயம் - காளையின் நகரம் & அரிசி மற்றும் எண்ணெய் நகரம் (rice and oil city)

பொருளாதாரம்

கொங்கு நாட்டில் பல தொழிற்சாலை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இப்பகுதியின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிக்கின்றது.[57] இங்கு பருத்தி ஆடைகள், பின்னலாடை, உள்ளாடைகள் மற்றும் பால், கோழி, மஞ்சள், கரும்பு, அரிசி, வெள்ளை பட்டு, தேங்காய், வாழைப்பழங்கள் போன்ற விவசாய பொருட்களும் மற்றும் காகிதம், வாகன உதிரி பாகங்கள், நீர் விசையியக்கக் குழாய்கள், அரவை இயந்திரம், நகைகள், அலுமினியம்ஆகிய பொருட்கள் தயாரிப்பதில் கொங்கு நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.[58][59][60][61][62][63][64] இங்கு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது.[65][66] திருப்பூருடன், கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் காய்கறி உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாவட்டமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேங்காய் கொப்பரை, தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் காங்கேயம் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மரவல்லிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது.[67] சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம் அதிகளவில் விளைகிறது.

சுற்றுலா தளங்கள்

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஒகேனக்கல், சத்தியமங்கலம், ஆனை மலை மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுலா தளங்களாகும்.

கோவில்கள்

பழனி, பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேசுவரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில், கொடுமுடி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், சிவன்மலை மற்றும் மருதமலை ஆகிய கோவில்கள் கொங்கு நாட்டில் உள்ள முக்கிய கோவில்களாகும். சென்னிமலை முருகன் கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சாமி திருக்கோயில், வெள்ளோடு ராசா கோவில், பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர் பட்டி விநாயகர் கோவில், கோவை தண்டு மாரியம்மன் கோவில், கோவை கோனியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் திருக்கோவில் ஆகியவை குறிப்பிடத்தகுந்த கோவில்கள் ஆகும். கொங்கு நாட்டில் குன்று தோறும் குமரன் என்ற பழமொழிக்கு ஏற்ப கொங்கு நாடு முருகன் சன்னதிகளைக் கொண்ட பல சைவக் கோயில்களைப் பெற்றுள்ளது.[68]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொங்கு_நாடு&oldid=3929260" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை