தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் (coconut oil) என்பது சமையலின்போது பயன்படுத்தப்படக்கூடிய ஒரு வகை எண்ணெயாகும். இந்த எண்ணெய் முற்றிய தேங்காயில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. தேங்காயில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதன் காரணமாக தேங்காய் 24° செல்சியசில் (75° பாரன்கீட்) இருக்கும் போது ஆறு மாதங்கள் வரை தேங்காய் கெட்டுப் போகாமல் தடுக்கப்படுகிறது.

தேங்காய் மூடிகளும் தேங்காயெண்ணெய் குப்பியும்
தேங்காய்

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகியவை செறிவூட்டப்பட்டக் கொழுப்பு அதிக அளவு உள்ளதால் தேங்காய் எண்ணெயை உணவில் அதிகமாகச் சேர்ப்பதைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றன.[1][2][3][4][5][6][7][8].

தயாரிக்கும் முறை

இரு வகைகளில் தேங்காயிலிருந்து எண்ணெயை பிரித்து எடுக்கலாம். ஒன்று உலர் செயல்முறை மற்றொன்று ஈரத் தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கும் முறை.

உலர் தேங்காயிலிருந்து பிரிக்கும் முறை

சீசெல்சு நாட்டில் எருதுகளால் இயக்கப்படும் செக்கில் மரபுவழியில் தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுதல்
தேங்காயை உலரவைத்தல்

தேங்காய்களில் நன்றாக விளைந்த முற்றிய காய்களின் பருப்புகளை எடுத்து 10லிருந்து 15 நாட்களுக்கு வெய்யிலில் அல்லது நெருப்பில் உலர்த்த வேண்டும்.[9] தேங்காய் பருப்புகளை எண்ணெய் ஆட்டி எடுக்கும் செக்கில் இட்டு சில கரைப்பான்களின் உதவியுடன் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி எண்ணெய் பிரித்தெடுக்கப்படும். இம்முறையின் மூலம் தேங்காய் எண்ணெய் மற்றும் புண்ணாக்கு கிடைக்கும். இந்தப் புண்ணாக்கில் மிகக்கூடிய-புரதமும், மிகக்கூடிய-நார்ச்சத்தும் உள்ளன; மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்ற இவை ஆடு மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும். புண்ணாக்கிலிருந்து புரதத்தைப் பிரித்தெடுக்க செயல்முறை ஏதுமில்லை.

ஈரத் தேங்காயிலிருந்து பிரிக்கும் முறை

ஈரத் தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிக்கும் முறையில் காய்ந்த கொப்பரைத் தேங்காய்களுக்குப் பதிலாக இளம் ஈரத் தேங்காய்கள் பயன்படுத்தப்படும். ஈரத் தேங்காயிலிருக்கும் புரதம் எண்ணெயும் தண்ணீரும் கலந்த ஒரு திரவத்தை உருவாக்கும்.[10] அந்த திரவத்திலிருந்து எண்ணெயை மட்டும் பிரிப்பதே இம்முறையாகும். திரவத்திலிருந்து எண்ணெயை பிரிப்பது மிகவும் கடினமான முறையாகக் கருதப்படுகிறது. திரவத்தை அதிக நேரம் சூடாக்கி அதிலிருந்து எண்ணெய் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் எண்ணெய் மங்கலான நிறத்தில் இருப்பதுடன் இச்செயல்முறை சிக்கனமானதுமல்ல. தற்கால தொழில்நுட்பங்கள் மைய விலக்கு விசைப் பொறிகளைப் பயன்படுத்தியும் அமிலங்கள், வேதிப்பொருட்கள், நொதியங்கள் மின்னாற்பகுப்பு, அதிர்வலைகள், கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு, அல்லது இவற்றின் சில இணைவுகளால் முன்னேற்பாடாக பதப்படுத்தியும் தூய எண்ணெயை குறைந்த செலவில் தயாரிக்கின்றன. இருப்பினும் உலர் தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிப்பதைவிட ஈரத் தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிப்பது 10 முதல் 15 சதவிகிதம் குறைவான எண்ணெயைப் பெற்று தரும் முறையாகும். மேலும் ஈரப்பதசெயல்முறையில் முதலீடு மற்றும் நடைமுறைச் செயல் செலவினங்கள் மிகக் கூடுதலாகும்.[11] அதனால் பெரும்பாலும் இம்முறையில் யாரும் எண்ணெய் பிரிப்பதில்லை.

நவீன செக்கு மூலம் தேங்காய் எண்ணெய் பிழிதல்

தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் சரியான சமயத்தில் (2 மாதத்திலிருந்து 20 மாதங்கள்) தேங்காயை அறுவடை செய்வதும் அவசியம் ஆகும். அதிகம் வளர்ச்சியடையாத தேங்காய்க் கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுப்பது கடினமாகும். .[12]

தேங்காயில் பல வகையான செறிவூட்டப்பட்ட அமிலங்கள் உள்ளது. அவற்றில் அதிகப்படியாக இருப்பது செறிவூட்டப்பட்ட லாரிக் கொழுப்பு அமிலமாகும். இது 48 சதவிகிதம் தேங்காய் எண்ணெயில் உள்ளது.

தற்போது எக்சேன் கரைப்பான்களைக் கொண்டு தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறார்கள். இதன் மூலம் சாதாரணமாக கிடைக்கும் எண்ணெயைவிட 10 மடங்கு அதிக எண்ணெய் பிழியப்படுகிறது. இதன்பிறகு சில வகையான கொழுப்பு அமிலங்களை நீக்க பிழியப்பட்ட எண்ணெய் சுத்திகரிக்கப்படும். இதனால் மக்கல் நெடி வராது தடுக்கப்படுகிறது. தவிர தேங்காயெண்ணெயின் இருப்புநாளை கூட்டிட மேலும் சில நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீண்ட நாள் கெடாமல் பண்படுத்துவதற்காக எண்ணெயில் உள்ள ஈரத்தன்மை 0.2 க்கும் கீழே குறைக்கப்பட்டு சிலவகையான உப்புகளும், சிட்ரிக் அமிலமும் சேர்க்கப்படும்.[13].

நன்றாக வளர்ந்த ஆயிரம் தேங்காய்கள் தோராயமாக 1440 கிலோ எடை இருக்கும். அவை காய்ந்த பிறகு கொப்பரையாக ஏறத்தாள 170 கிலோ எடை இருக்கும் இவற்றிலிருந்து 70 லிட்டர் வரை எண்ணெய் பெறலாம்.[14]

தூய்மித்த எண்ணெய்

பொதுவாக சூடாக்கப்பட்ட நீரியலழுத்தியில் நசுக்கி கொப்பரையிலிருந்து தூய்மித்த, நிறநீக்கிய, நாற்றநீக்கிய எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் தேங்காயின் எடையில் 60% விடக் கூடுதலான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது நேரடியாக உணவாகக் கொள்ளவியலாது. இதிலுள்ள கலப்படங்களை நீக்க மேலும் சூடாக்கி வடிக்கட்டப்படுகிறது.[15]

நீர்த்த தேங்காய் கூழை அல்ஃபா அமைலேசு போன்ற சில நொதியங்களைப் பயன்படுத்தியும் தூய தேங்காயெண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.[16]

பண்படுத்தாத தேங்காயெண்ணெய் போலன்றி தூய்மித்த எண்ணெயில் தேங்காயின் சுவையோ நெடியோ இராது. இது வீட்டுச்சமையலிலும் வணிகமயமாக்கப்பட்ட உணவுப் பண்படுத்தலிலும் பயன்படுத்தப்படுகின்றது. தவிரவும் அழகுசாதனங்கள், தொழிற்சாலைகள், மருந்து தயாரிப்பு போன்ற துறைகளிலும் பயனாகின்றது.

ஐதரசனேற்றம்

தூய்மித்த நிறநீக்கிய நாற்றமில்லா தேங்காயெண்ணெய் மேலும் முழுவதுமாகவோ பகுதியாகவோ ஐதரசனேற்றம் செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகின்றது. ஐதரசனேற்றம் மூலம் உருகுநிலை ஏற்றப்படுகின்றது. பொதுவாக பதப்படாத தேங்காயெண்ணெயோ பதப்படுத்தப்பட்ட தேங்காயெண்ணெயோ 24 °C (76 °F) வெப்பநிலையில் உருகும். இதனால் தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வெப்ப வானிலைகளில் உருகக்கூடியவையாக உள்ளன. ஐதரசனேற்றப்பட்ட தேங்காயெண்ணெய் பொதுவாக 36–40 °C (97–104 °F) வெப்பநிலையில் உருகும்.

ஐதரசனேற்றத்தின் போது வினையூக்கும் செயல்பாடுகள் மூலம் நிறைவுறா கொழுப்புகள் (ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு மற்றும் பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்) ஐதரசனுடன் இணைந்து நிறைவுற்ற கொழுப்புகளாக மாற்றப்படுகின்றன. தேங்காய் எண்ணெயில் ஒற்றைநிறைவுறாக் கொழுப்புகள் 6% உம் பல்நிறைவுறா கொழுப்புகள் 2%உம் மட்டுமே உள்ளன. பகுதிநிலை ஐதரசனேற்றத்தின்போது இவற்றில் சில மாறுபக்க கொழுப்பாக மாற்றப்படுகின்றன.[17]

பகுதிப்பிரிகை

பிரித்தெடுத்த தேங்காய் எண்ணெயிலிருந்து தேங்காய் எண்ணெயிலுள்ள வெவ்வேறான கொழுப்பு அமிலங்கள் தனியாக பெறப்படுகின்றன. பெரும்பாலும் 12 கரிமச் சங்கிலி கொண்ட கொழுப்பு அமிலமான இலாரிக் அமிலம் அதன் தொழில்துறை, மருத்துவ பயன்பாடுகளுக்காக பிரித்தெடுக்கப்படுகிறது.[18] தவிரவும் மத்திமச் சங்கிலி டிரைகிளிசரைடுகளான கேப்ரிலிக் அமிலமும் கேப்ரிக் அமிலமும் மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் சிறப்பு உணவுமுறைகளுக்காகவும் பயனாகின்றன. இவை நறுமண தெளிப்பான்களின் எண்ணெய் ஊடகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[19]

உலக உற்பத்தி

2005 - 2006 காலகட்டத்தில் தேங்காய் எண்ணெயின் உற்பத்தி ஐம்பத்து எட்டு லட்சத்து நாற்பது ஆயிரம் டன்னாக இருந்தது. இது 2009 2010 ஆண்டுகளில் 6.6 மில்லியன் டன்களாக உயர்ந்தது. பின் படிப்படியாக குறைந்து 2015 -2016 காலகட்டத்தில் 5.40 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. உலக காய்கறி எண்ணெய் உற்பத்தியில் இரண்டறை சதவிகிதம் தேங்காய் எண்ணெய் ஆகும். ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள பதினெட்டு நாடுகளில் இருந்து மட்டும் உலகத் தேவைகளில் தொண்ணூறு சதவிகித எண்ணெய் பெறப்படுகிறது.

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பமிலங்கள்

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்களின் பங்கீடு கீழ்வருமாறு உள்ளது:

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலம்
கொழுப்பு அமில வகைவிழுக்காடு
காப்ரிலிக் அமிலம் நிறைவுற்ற C8
7%
காப்ரிக் அமிலம் நிறைவுற்ற C10
8%
இலாரிக் அமிலம் நிறைவுற்ற C12
48%
மிரிஸ்டிக் அமிலம் நிறைவுற்ற C14
16%
பாமிட்டிக் அமிலம் நிறைவுற்ற C16
9.5%
ஓலிக் அமிலம் ஒற்றைநிறைவுறா C18:1
6.5%
பிற
5%
கருப்பு: நிறைவுற்ற; வெளிர்கருப்பு: ஒற்றைநிறைவுறா; நீலம்: பல்நிறைவுறா

பயன்பாடு

தேங்காய் எண்ணெய் சமைக்கவும், சருமங்களின் மீது தடவிக் கொள்ளவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கேரள மாநிலத்தில் தேங்காய் எண்ணெய் அதிக அளவில் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பலன்கள்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெயின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

உடல்நலன் குறித்தக் கவலைகள்

தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு மிகுதியாக உள்ளதால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்[1], உலக சுகாதார அமைப்பு,[2] போன்ற மருத்துவ அமைப்புகள் தேங்காய் எண்ணெயை உணவில்் எடுப்பதை தவிர்க்க பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் தேங்காய் எண்ணெய் பாரம்பரியமாக இந்தியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்சு போன்ற ஆசிய நாடுகளில் உணவாகவும் மருந்துக் கூறுகளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பண்படுத்தப்படாத தேங்காயெண்ணெயில் (செக்கிலாட்டிய நேரடியான எண்ணெய்) 70 முதல் 85 விழுக்காடு வரை நடுமைநீள சங்கிலி கொழுப்பமிலங்களே உள்ளன. மிகநீள் சங்கிலி கொழுப்புக்களைப் போலன்றி இவ்வகை நடுநீள் கொழுப்புகள் மிக எளிதாக ஆக்சிசனேற்றமடைவதால் கொழுப்பிழையங்களில் சேகரிக்கப்படுவதில்லை. இதனால் கொழுப்பு உண்டாலும் எடை கூடுவதில்லை. மேலும் தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆபிரிக்க, தென்பசிபிக் மக்களிடையே உடற்பருமனோ கூடியகொழுப்பு நோய்க்குறிகளோ இல்லை என்பதும் நோய்தோன்றுவழி ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.[20][21] மேலும் இதைக் குறித்த மற்றொரு ஆய்வு தேங்காய் எண்ணெய் எடை குறைப்பிற்கு வழி வகுப்பதுடன் உடல்நலன் சார்ந்த உயிரிக்குறியீடுகளை பாதிப்பதில்லை எனவும் கண்டறிந்துள்ளது.[22]

தேங்காயெண்ணெயில் கூடுதலாக உள்ள இலாரிக் அமிலம் ஓர் நிறைவுற்ற கொழுப்பு அமிலமாகும். இது உயரடர்த்தி கொழுமியப்புரதம் (HDL) மற்றும் குறையடர்த்தி கொழுமியப்புரதங்களை (LDL) உயர்த்துகிறது.[23] இதனால் மொத்த குருதிக் கொழுமிய அளவுகள் நல்ல நிலைக்கு மேம்பட்டாலும் தொடர்ந்து தேங்காயெண்ணெய் உண்பது மற்ற காரணங்களால் இதயக் குழலிய நோய் வருவதற்கான வாய்ப்பைக் கூட்டுகின்றன.[23] தேங்காய் எண்ணெயில் இலாரிக் அமிலம் மிகுந்துள்ளதால்[23] மற்ற ஐதரனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களை விட மேலானதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[24]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தேங்காய்_எண்ணெய்&oldid=3559248" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை