வாரன் பபெட்

உலகின் பெரும் நன்கொடையாளர்களில் ஒருவர்

வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[5].

வாரன் பபெட்
Warren Buffett
பிறப்புஆகத்து 30, 1930 (1930-08-30) (அகவை 93)
ஒமாகா, நெப்ராஸ்கா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிநிறுவனத் தலைவர், பெர்க்சயர் ஹாதவே
ஊதியம்அமெ$100,000[1]
சொத்து மதிப்பு US$ 87 பில்லியன் (2009)[2]
வாழ்க்கைத்
துணை
சூசன் பபெட் (1952–2004) (இறப்பு),
ஆஸ்ட்ரிட் மென்க்ஸ் (2006–)[3]
பிள்ளைகள்சூசி, ஹேவார்டு, பீட்டர்
வலைத்தளம்
http://www.warrenbuffettreport.com

பஃபெட்டை பொதுவாக ஒமாகாவின் அசரீரி என்றும் [6]"ஒமாகாவின் முனிவர்"[7] (Sage of Omaha) என்றும் குறிப்பிடுவதுண்டு. முதலீட்டு விடயத்தில் இவரது கணிப்பு பெற்றிருக்கும் மதிப்பினாலும், பெரும் பணக்காரர் என்றாலும் எளிமையைப் பின்பற்றுவதினாலும் அவ்வாறு அழைக்கப்பெற்றார்[8].

பிரசித்திபெற்ற கொடையாளரான பபெட் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார். இவர் கிரின்னல் கல்லூரி (Grinnel College) வாரிய அறங்காவலர்களுள் ஒருவராகவும் உள்ளார்.[9]

1999 ஆம் ஆண்டு கார்சன் குழுவினரால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பீட்டர் லின்ச் மற்றும் ஜான் டெம்பிள்டன் ஆகியோரை விட பஃபெட்டே இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நிதி நிர்வாகியாக பெயர் பெற்றிருந்தார்.[10] இவர் 2012 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையின் உலகின் முக்கிய 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.[11]

வாழ்க்கைக் குறிப்பு

ஆரம்பகால வாழ்க்கை

வாரன் பபெட் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாநிலத்தின் ஒமாகா நகரில் ஹோவார்ட் பபெட்டின் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார். ஹோவார்டின் ஒரே ஆண் வாரிசு இவர் தான். இவர் தனது பாட்டனாரின் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார். 1943 ஆம் வருடம் பபெட் முதன் முதலில் வருமான வரி செலுத்தினார். அவ்வருடத்தில் அவர் சைக்கிள் மற்றும் கைக்கடிகாரத்திற்கு ஆன $35 செலவினை செய்தித்தாள் விநியோக வேலை மூலம் ஈட்டினார்.[12] அவரது தந்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட பின், பபெட் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உட்ரோ வில்சன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[13] 1945 ஆம் ஆண்டில் பபெட் தனது உயர்நிலைப் பள்ளியின் முதலாமாண்டில் நண்பருடன் சேர்ந்து $25 செலவில் ஒரு உபயோகப்படுத்தப்பட்ட பின்பால் (pinball)விளையாட்டு இயந்திரத்தை வாங்கி முடி திருத்தும் நிலையத்தில் வைத்தார். சில மாதங்களிலேயே அவர்கள் மூன்று விளையாட்டு இயந்திரங்களை சொந்தமாக்கி வெவ்வேறு இடங்களில் வைத்தனர்.

பபெட் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் தனது கல்லூரி வாழ்க்கையைத் துவக்கினார் (1947–49). இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டில் இவர் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்திற்கு மாற்றிக்கொண்டு சென்று விட்டார். அங்கு பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (B.S. in Economics) பெற்றார்.[14]

பபெட் பிறகு பெஞ்சமின் கிரகாம் (தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டர் புத்தக ஆசிரியர்) மற்றும் டேவிட் டாட் என்ற இரு பிரபலமான பங்குபத்திர முதலீட்டு ஆய்வு ஆலோசகர்கள் பயிற்றுவிக்கும் கொலம்பியா வணிகப்பள்ளியில் சேர்ந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1950 ஆம் வருடம் இவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் (M.S. in Economics) பெற்றார்.

நான் 15% ஃபிஷர் (Fisher) மற்றும் 85% பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham) என்று பபெட் கூறியிருக்கிறார்.[15]

’பங்குகளை வியாபாரமாகக் கருதுவதும், பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை தனக்கு ஒரு பாதகமும் இல்லாமல் சாதமாக்கி கொள்ளுதலும் முதலீட்டின் இரு அடிப்படை நோக்கங்கள் ஆகும். இதைத்தான் பென் கிரகாம் எங்களுக்குக் கற்பித்தார். இன்னும் நூறு வருடங்களுக்குப் பிறகும் இதுவே முதலீட்டின் அடிப்படை விதியாக இருக்கும்’ என்று அவர் கூறினார்.[16]

தொழில் வாழ்க்கை

பபெட் 1951–54 வரை ஒமாகாவில் உள்ள பபெட்-ஃபால்க் & நிறுவனத்தில் முதலீட்டு விற்பனையாளராகவும் 1954–56 வரை நியூயார்க்கில் உள்ள 'கிரகாம்-நியூமேன் கார்ப்' நிறுவனத்தில் பங்கு முதலீட்டு ஆய்வாளராகவும், 1956–1969 வரை ஒமாகாவில் உள்ள பபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட் நிறுவனத்தில் பொதுப் பங்குதாரராகவும் இருந்தார். 1970 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒமாகாவில் உள்ள பெர்க்சயர் ஹாதவே நிறுவனத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் உள்ளார்.

1951 ஆம் வருடம் பபெட் பொருளாதார நிபுணரான பெஞ்சமின் கிரகாம் கெய்கோ காப்புறுதி நிறுவனத்தின் (GEICO Insurance) இயக்குநர் குழுவில் இருப்பதை அறிந்தார். இவர் ஒரு சனிக்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கெய்கோவின் தலைமையகத்திற்குச் சென்று அங்கு கெய்கோவின் நிறுவனத் துணைத் தலைவர் லோரிமர் டேவிட்சனை சந்தித்தார். அவர்கள் இருவரும் மணிக்கணக்காக காப்பீட்டு தொழிலைப் பற்றி விவாதித்தனர். அதன் பிறகு டேவிட்சன் பபெட்டின் நெருங்கிய நண்பராகவும் அவரது கருத்துகளில் செல்வாக்கு செலுத்துபவராகவும் ஆகி விட்டார்.[17] பிறிதொரு சமயம் பபெட்டை பற்றிக் குறிப்பிடுகையில் இவர்களின் முதற் சந்திப்பின் போதே 15 நிமிடங்களிலேயே பபெட் ஒரு அசாதாரண மனிதர் என்று கண்டு கொண்டதாக டேவிட்சன் குறிப்பிட்டார். பபெட் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன் வால் ஸ்ட்ரீட்டில் (Wall Street) வேலையில் அமரவே எண்ணினார். ஆனால் இவரது தந்தையும் பென் கிரகாமும் இதைத் தடுத்து விட்டனர். பபெட் பிறகு கிரகாமுக்காக இலவசமாக வேலை செய்வதாகக் கூறியதை கிரகாம் ஏற்கவில்லை.[18]

பபெட் ஒமாகாவிற்கு திரும்பி பங்குச் சந்தைத் தரகராகப் பணியாற்றினார். மேலும் டேல் கார்னகியின் அவைப் பேச்சுப் பயிற்சியையும் மேற்கொண்டார். [மேற்கோள் தேவை] இவ்வாறு கற்றதைக் கொண்டு நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் "மூலதனக் கொள்கைகளைப்" பற்றி இரவு வகுப்புகளில் பாடம் எடுப்பதில் அவருக்குத் துணிவு பிறந்தது. அவருடைய மாணவர்களின் சராசரி வயது அவருடைய வயதை விட இரு மடங்காக இருந்தது. இது சமயம் அவர் தன் முதலீட்டில் சின்கிளேர் டெக்சாகோ பெட்ரோல் நிலையத்தை வாங்கினார். ஆனால் இந்த வியாபாரம் தழைக்கவில்லை.

1952 ஆம் ஆண்டு பபெட் சூசன் தாம்சன் என்பவரை மணந்தார். அடுத்த வருடத்தில் அவர்களின் முதல் குழந்தையான சூசன் ஆலிஸ் பபெட் பிறந்தார். 1954 ஆம் வருடம் பபெட் பெஞ்சமின் கிரகாம் கூட்டு நிறுவனத்தில் வேலை ஏற்றுக் கொண்டார். அவருடைய ஆரம்ப வருமானம் வருடத்திற்கு $12,000 (2008 டாலர் மதிப்பை ஒப்பிடுகையில் சுமார் $97,000) என இருந்தது. அங்கே அவருக்கு வால்டர் ஸ்க்லோஸ் உடன் நெருங்கிப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. கிரகாமின் கீழ் பணியாற்றுவது கடினமான செயல். பங்குகளில் பொதிந்த மதிப்பிற்கும் அவற்றின் விற்பனை விலைக்கும் இடையிலான சமநிலை எட்டிய பின் அப்பங்குகள் பாதுகாப்பான விரிவான லாப விகிதங்களை அளிக்க முடியும் என்ற சிந்தனையில் கிரகாம் பிடிவாதமாக இருந்தார். இந்த கூற்றின் உண்மையை பபெட் ஏற்றாலும் கறாராய் இந்த விதியைப் பின்பற்றினால் பல வாய்ப்புகளை இழக்க நேரிடுமே என்கிற கேள்வியும் அவருக்கு எழாமலில்லை.[18] அதே வருடம் பபெட் தம்பதியினர் அவர்களின் இரண்டாவது குழந்தையான ஹோவர்டு கிரகாம் பபெட்டைப் பெற்றெடுத்தனர். 1956 ஆம் வருடம் பெஞ்சமின் கிரகாம் வேலையிலிருந்து ஓய்வு பெற்று தன் கூட்டு நிறுவனத்தை மூடினார். இச்சமயம் பபெட்டின் சேமிப்பு $174,000 ஆக இருந்தது. அதைக் கொண்டு அவர் பபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட் நிறுவனம் என்ற மூலதனக் கூட்டு நிறுவனத்தை ஒமாகாவில் உருவாக்கினார்.

1957 ஆம் ஆண்டில் பபெட் மூன்று கூட்டு நிறுவனங்களை இயக்கி வந்தார். ஒமஹாவில் $31,500 விலைக்கு ஐந்து படுக்கையறை கொண்ட ஒரு வீடு வாங்கினார் (அந்த வீட்டில் தான் அவர் இன்றும் வசிக்கிறார்). 1958 ஆம் ஆண்டில், பபெட்டின் மூன்றாவது குழந்தை பீட்டர் ஆண்ட்ரூ பபெட் பிறந்தார். அவ்வருடம் முழுவதும் பபெட் ஐந்து கூட்டு நிறுவனங்களை நடத்தினார். 1959 ஆம் ஆண்டில் ஆறு கூட்டு நிறுவனங்களாக இது வளர்ந்தது. மற்றும் சார்லி மங்கரை (Charlie Munger) சந்திக்கும் வாய்ப்பு இந்த ஆண்டில் இவருக்குக் கிட்டியது. 1960 ஆம் ஆண்டில் பபெட்டின் கீழ் பபெட் அசோசியேட்ஸ், பபெட் ஃபண்ட், டேசீ, எம்டீ, க்லேனாஃப், மோ-பஃப் மற்றும் அண்டர்வுட் ஆகிய ஏழு நிறுவனங்கள் செயல்பட்டன. தன்னுடைய பங்குதாரராக இருந்த ஒரு மருத்துவரிடம் தன்னுடைய நிறுவனத்தில் தலா $10,000 முதலீடு செய்யத்தக்க இன்னும் பத்து மருத்துவர்களைக் கண்டறியுமாறு பபெட் வேண்டினார். பிறகு இவ்வாறு பதினொரு மருத்துவர்கள் சேர்ந்தனர். இந்த பதினொரு பேரின் பணத்துடன் தன்னுடைய வெறும் $100 சொந்தப் பணத்தையும் சேர்த்து முதலீட்டு நிதியை பபெட் உருவாக்கினார். 1961 ஆம் ஆண்டில் பபெட் தனது நிறுவன சொத்துகளில் 35% சேன்பார்ன் மேப் நிறுவனத்தின் பங்குகளாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் 1958 ஆம் ஆண்டில் சேன்பார்ன் பங்குகள் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட $65ஐ விட $45 அளவிலேயே பங்கு முதலீட்டாளர்களால் மதிப்பிடப்பட்டது என்பதை விளக்கினார். பங்கு வாங்குபவர்கள் சேன்பார்ன் பங்குகளின் மதிப்பை "$20 குறைவாக" மதிப்பிட்டதாகவும் அதனால் ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியதாகவும் பபெட் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்ததால் சேன்பார்ன் நிர்வாகக் குழுவில் அவருக்கு ஓர் இடம் அளிக்கப்பட்டது.

செல்வத்துக்கு வழி

1962 ஆம் வருடத்தில் பபெட் ஒரு மில்லியனர் ஆனார். அவரது அனைத்து பங்கு நிறுவனங்களும் இணைந்து $7,178,500 மதிப்பு கொண்டிருந்தன. அதில் இவரது பங்கு $1,025,000 ஆக இருந்தது. பபெட் அவரது அனைத்து பங்கு நிறுவனங்களையும் இணைத்து ஒரே பங்கு நிறுவனமாக மாற்றினார். இச்சமயம் பெர்க்சயர் ஹாதவே என்னும் ஓர் துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் இவர் கண்களில் பட்டது. பபெட்டின் நிறுவனம் இந்நிறுவன பங்குகளை பங்கு ஒன்றிற்கு 7.60 டாலர் என்கிற விலையில் வாங்க ஆரம்பித்தது. 1965 ஆம் ஆண்டில் பபெட் பங்கு நிறுவனம் பெர்க்சயர் ஹாதவேயின் பங்குகளை முனைந்து வாங்கும் போது, ஒரு பங்குக்கு 14.86 டாலர் செலுத்தியது. இது அந்நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனமான 19 டாலரை விட குறைவாக இருந்தது. இதில் அந்நிறுவனத்தின் நிலையான சொத்துகள் (ஆலை மற்றும் இயந்திரங்கள்) இணைக்கப்படவில்லை. பபெட் இவ்வாறு பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் மேல்மட்ட குழுவை தன்னகப்படுத்தி நிறுவனத் தலைவராக கென் சேஸ் என்பவரை புதிதாய் நியமித்தார். 1966 ஆம் ஆண்டில் பபெட் தன் கூட்டு நிறுவனத்திற்கு புதிய முதலீட்டார்களை வரவேற்கவில்லை. ’தற்போதுள்ள நிலை வேறாக மாறினாலே தவிர்த்து (சில வேளைகளில் கூடுதல் முதலீடு மேலான பலன்கள் தரும் நிலை) அல்லது புது பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு வெறும் மூலதனம் மட்டுமல்லாத வேறு சொத்துகளை கொண்டு வருவதாக இருந்தாலேயன்றி கூட்டு தொழில்முயற்சியில் மேலும் பங்குதாரர்களை இணைக்க எனக்கு உடன்பாடில்லை’ என்று பபெட் தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.

அவரது இரண்டாவது கடிதத்தில் பபெட், ஹோச்சைல்டு கோன் அண்டு கம்பெனி எனும் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 1967 ஆம் வருடத்தில் பெர்க்சயர் முதல் முறையாக தனது நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு பத்து சென்டுகளை ஈவுத்தொகையாக வழங்கியது. 1969 ஆம் ஆண்டில் மிகவும் லாபகரமான வருடத்தைத் தொடர்ந்து பபெட் தனது பழைய கூட்டு முயற்சி நிறுவனங்களைக் கலைத்து பங்குதாரர்களுக்கு சொத்துக்களை வழங்கினார். அவ்வாறு அளித்த பங்குகளில் பெர்க்சயர் ஹாதவே பங்குகளும் அடங்கும். 1970 ஆம் ஆண்டில் பெர்க்சயர் ஹாதவேயின் புகழ்மிகு தலைவராக பங்குதாரர்களுக்கு வருடாந்திர கடிதங்களை எழுதினார்.

தனது செல்வநிலை உயர்ந்த போதிலும் அவர் தன் வருட வருமானம் $50,000 மற்றும் வெளிமுதலீட்டு வருமானங்களிலேயே வாழ்ந்து வந்தார். 1979 ஆம் ஆண்டின் துவக்கத்தில் $775 எனத் தொடங்கிய பெர்க்சயர் பங்கின் விலை வருட முடிவில் $1,310 ஆக உயர்ந்தது. இது பபெட் சொத்து மதிப்பை $620 மில்லியனாக உயர்த்தி ஃபோர்ப்ஸ் 400 அட்டவணையில் முதல்முறையாக இடம் பெற வைத்தது.

2006 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் பபெட் தனது செல்வத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தார். இதில் 83 சதவீதம் [[பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு அளிக்கப் பெற்றது.[19]

2007 ஆம் வருடம் அவருடைய பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலீட்டு வணிகத்தை தன் வழியில் பின்தொடர ஓர் இளம் தலைவர் அல்லது குழுவைத் தேடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.[20] இதற்கு முன் பபெட் கெய்கோ நிறுவனத்தின் லோவ் சிம்சனைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் சிம்சனோ பபெட்டை விட ஆறு வயதே இளையவராவார்.

2008 ஆம் வருடம் பில் கேட்சை விட பபெட் உலகின் பணக்கார அதிபராக ஆனார். ஃபோர்ப்ஸ்,[21] நிறுவனக் கணக்கெடுப்பின்படி அவர் சொத்து மதிப்பு $62 பில்லியனாகவும் யாஹூ(Yahoo) கணக்கெடுப்பின் படி $58 பில்லியனாகவும் இருந்தது.[22] பில் கேட்ஸ் தொடர்ந்து 13 வருடங்கள் ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர் வரிசையில் முதலிடம் வகித்தார்.[23] மார்ச் 11, 2009 அன்று திரும்பவும் பில்கேட்ஸ் முதலிடத்தை அடைந்து பபெட்டை இரண்டாம் இடத்திற்கு நகர்த்தியதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கின்றது. அவர்களுடைய சொத்து மதிப்பு 2008/2009 பொருளாதார வீழ்ச்சியினால் $40 பில்லியன் மற்றும் $37 பில்லியனாக தள்ளப்பட்டது.[24]

வியாபாரம்

கையகப்படுத்தியவை

1973 ஆம் ஆண்டில், பெர்க்சயர் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் தொடங்கியது. பபெட் அந்நிறுவனம் மற்றும் அதன் முக்கியமான செய்தித்தாள் ஆகியவற்றை தன் கட்டுக்குள் வைத்திருந்த கேத்தரின் கிரகாமின் நண்பரானார். பிறகு அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவினுள் ஒருவராய் பொறுப்பேற்றார்.

1974 ஆம் வருடத்தில் அமெரிக்காவின் பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEC) வாரன் பபெட் பெர்க்சயரோடு இணைந்து வெஸ்கோ நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள நலன் மோதல் குறித்து சட்ட விசாரணை மேற்கொண்டது. ஆனால் இதில் எந்த குற்றச்சாட்டும் பதியப்படவில்லை.

1977 ஆம் வருடம் பெர்க்சயர் மறைமுகமாக பபலோ ஈவினிங் நியூஸ் (Buffalo Evening News) பத்திரிகையை $32 மில்லியனுக்கு கையகப்படுத்தியது. போட்டிப் பத்திரிகையான பபலோ கொரியர் எக்ஸ்பிரஸ் மூலம் தூண்டப்பட்டு, நம்பிக்கைவிரோத குற்றச்சாட்டு பெர்க்சயர் மீது சுமத்தப்பட்டது. முடிவில் இரண்டு பத்திரிகைகளும் மிகுந்த நஷ்டம் அடைந்த பின்னர் கொரியர் எக்ஸ்பிரஸ் நிறுவனம் 1982 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

1979 ஆம் வருடம் பெர்க்சயர் ஏபிசி (ABC) நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆரம்பித்தது. அது சமயம் காபிடல் சிட்டி என்ற நிறுவனம் ஏபிசி நிறுவனத்தை $3.5 பில்லியனுக்கு கையகப்படுத்துவதாக மார்ச் 18, 1985 அன்று அறிவித்தது. இது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஏனென்றால் அச்சமயம் ஏபிசி நிறுவனம் காபிடல் சிட்டியைப்போல் நான்கு மடங்கு பெரிய நிறுவனமாக இருந்தது. இக்கையகப்படுத்துதல் பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் நிர்வாகத்தலைவரான வாரன் பபெட்டின் நிதி உதவியால் ஏற்பட்டது. இதற்கு பிரதிபலனாக இவர் இணைந்த நிறுவனத்தின் 25% பங்குகளைப் பெற்றார்.[25] இவ்வாறு புதிதாக இணைந்து உருவாகிய கூட்டு நிறுவனமான காபிடல் சிட்டிஸ்/ஏபிசி (அல்லது கேப்சிட்டிஸ்/ஏபிசி) நிறுவனம்சொத்து உச்ச வரம்பு விதிமுறைகளால் சில நிலையங்களை விற்க நேரிட்டது. மேலும் இந்த இரு நிறுவனங்களும் ஒரே சந்தையில் பல வானொலி நிலையங்களையும் கொண்டிருந்தன.[26]

1987 ஆம் வருடத்தில் பெர்க்சயர் ஹாதவே, சாலமன் இன்க்., என்ற நிறுவனத்தின் 12% பங்குகளை வாங்கி அதன் மிகப்பெரிய பங்குதாரர் ஆனதால் பபெட் அதன் இயக்குநர் ஆனார். 1990 ஆம் வருடத்தில் ஜான் குட்ஃபிரயன்ட் (சாலமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரி) சம்பந்தப்பட்ட ஓர் ஊழல் விவகாரம் வெளிப்பட்டது. பால் மோசர் என்ற பங்கு வர்த்தகர் கருவூல விதிகளை மீறி அதிகமான பங்குகளுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார். இது குட்ஃபிரயன்ட்டின் கவனத்திற்கு வந்த போது அவர் பால் மோசர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குட்ஃபிரயன்ட் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.[27] உடனே பபெட் சாலமன் நிறுவனத்தின் தலைவராக இப்பிரச்சனை முடியும் வரை பதவியேற்றார். அவர் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டி வந்தது.[28]

1998 ஆம் ஆண்டில் பபெட் கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆரம்பித்து, கடைசியில் அந்நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை $1.02 பில்லியனுக்குப் பெற்றார். இதுவே இன்று வரை பெர்க்சயர் மேற்கொண்ட மூலதனங்களில் மிகவும் லாபகரமானதாக இருக்கிறது. 2002 ஆம் வருடத்தில் $11 பில்லியன் மதிப்பு கொண்ட (வெளிநாட்டு நாணயங்களுக்கு அமெரிக்க டாலரை வழங்கும்) முன்கூட்டிய ஒப்பந்த வர்த்தகத்த்தில் பபெட் இறங்கினார். 2006 ஆம் வருடம் வரையிலான காலத்தில் இந்த வியாபாரம் வழியாக அவர் $2 பில்லியன் லாபமாகப் பெற்றார். 1998 ஆம் வருடத்தில் பபெட் ஜெனரல் ரீ நிறுவனத்தை வாங்கினார்.[29]

2009 ஆம் ஆண்டில் வாரன் பபெட் $2.6 பில்லியனை சுவிஸ் ரீ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தார்.[30][31] பெர்க்சயர் ஹாதவே ஏற்கனவே இதில் 3% பங்குகளை வைத்திருந்தது. 20% பங்குகளை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருந்தது.[32]

2000 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய பின்னடைவு

2007-2008 அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது, பபெட் விமர்சனத்திற்கு உள்ளானார். 2000த்திற்கு பிந்தைய பின்னடைவின் போது, இவர் முன்பே முதலீடு செய்ததால் சாதகமான சில வணிக வாய்ப்புகள் கிடைத்தன. “அமெரிக்கப் பொருட்களை வாங்கு. நான் வாங்குகிறேன்.” வாரன் பபெட்டின் இந்த மேற்கோள் நியூயார்க் டைம்ஸில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.[33]

2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைப் பற்றி பபெட் குறிப்பிடும் போது "கவிதையான நீதி" "(poetic justice") என்று குறிப்பிட்டுள்ளார்.[34]

பெர்க்சயர் ஹாதவே நிறுவனம் 2008 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 77% வருவாய் இழப்பிறகு உள்ளாகியுள்ளது. மேலும் அவரது பல்வேறு சமீபத்திய வணிகங்கள் சந்தை மதிப்பில் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளன.[35]

பெர்க்சயர் ஹாதவே கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் 10% நிலையான முன்னுரிமைப் பங்குகளை வாங்கியுள்ளது.[36]

2008 அக்டோபரில், வாரன் பபெட் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னுரிமைப் பங்குகளை வாங்க ஒப்புக் கொண்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.[37] 2009 பிப்ரவரியில், வாரன் பபெட் தான் கொண்டிருந்த பிராக்டர் & கேம்பல் நிறுவனம் மற்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனப் பங்குகளில் ஒரு பகுதியை விற்றார்.[38]

உகந்த நேரம் குறித்து அவ்வப்போது கேள்விகள் அவர் மீது எழுப்பப்படுவதுண்டு. 1998 ஆம் ஆண்டில் $86 வரை விலை அதிகரித்த கோகோ-கோலா பங்குகள் போன்ற விலையுயர்ந்த பங்குகளை பராமரிப்பது புத்திசாலித்தனமா என்று வினா எழுப்பப்பட்டது. பபெட் விற்பதற்கான தருணம் குறித்துத் தன் 2004 ஆம் வருட அறிக்கையில் விவாதித்தார். ”பின்பக்கத்தைக் காட்டும் கண்ணாடி வழியாகப் பார்க்கையில் செய்ய வேண்டியது என்ன என்பது எளிதான விடயமாய்த் தோன்றலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதலீட்டாளர்கள் பனிபடர்ந்திருக்கும் காற்றுத் தடுப்பி கண்ணாடி வழியாகத் தான் காண வேண்டியதிருக்கிறது." என அவர் குறிப்பிட்டார்.[39] 2009 மார்ச் மாதத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடும் போது, "பொருளாதாரம் மலை முகட்டிலிருந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது... பொருளாதாரம் பின்னடைவு மட்டும் அடையவில்லை, மக்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்களை இதுவரை நான் கண்டிராத வகையில் மாற்றிக் கொண்டுள்ளனர்" என்றார். மேலும் அவர் இது நம்மை 1970களில் ஏற்பட்ட பண வீக்கத்தைப் போல் கொண்டு சென்று ஒரு வித தேக்க நிலையில் பல வருடங்களுக்கு தள்ளி விடும் எனப் பயந்தார்.[40][41]

சொந்த வாழ்க்கை

பபெட் 1952 ஆம் ஆண்டில் சூசன் தாம்சனை மணந்தார். இந்த தம்பதியினருக்கு சூசி, ஹோவர்ட், பீட்டர் என்ற மூன்று குழந்தைகள் பிறந்தனர். 1977 முதல் இந்த இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால் சூசன் 2004 ஜூலையில் தான் இறக்கும் வரை பபெட்டின் மனைவியாகவே வாழ்ந்தார். அவர்களுடைய பெண் சூசி ஒமகாவில் தங்கி சூசன் ஏ. பபெட் அமைப்பை ஏற்படுத்தி அதன் வழி தொண்டு செய்கிறார். மேலும் அவர் கேர்ல்ஸ், இன்க். அமைப்பின் தேசிய குழு உறுப்பினராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டில் பபெட் தன்னுடைய 76 ஆம் பிறந்த நாளன்று, தனது பலநாள் நண்பரும் அதுவரை திருமணமே செய்துகொள்ளாத ஆச்ட்ரிட் மென்க்சை அவரது 60வது வயதில் மணந்தார். இவர் 1977 ஆம் வருடம் சூசன் சான் பிரான்சிஸ்கோ சென்ற பிறகு பபெட்டுடன் வாழ்ந்து வந்தார்.[42] சூசன் பபெட் ஒமாகாவை விட்டு தனது சங்கீத வாழ்க்கைக்காக சான் பிரான்சிஸ்கோ செல்லுமுன் முன் பபெட்டுக்கு ஆச்ட்ரிட்டை அறிமுகப்படுத்தினார். இம்மூவரும் நெருங்கியவர்களாயிருந்தனர். இது அவர்களுடைய விடுமுறை வாழ்த்து மடல்களில் வாரன், சூசி, மற்றும் ஆச்ட்ரிட் என கையொப்பமிட்டிருந்ததிலிருந்து புலனாகும்.[43] சூசன் பபெட் இவர்களின் உறவைப் பற்றி தொலைக்காட்சியில் சார்லி ரோஸ் நிகழ்ச்சியின் பேட்டியில், அவர் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.[44]

பபெட்டின் 2006 ஆம் ஆண்டு வருமானம் $100,000. ஒத்த மற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஊதியத்தோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது.[45] 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில், அடிப்படை ஊதியமான $100,000 சேர்த்து மொத்த ஊதியமாக $175,000, பெற்றார்.[46][47] ஒமாகாவில் 1958 ஆம் ஆண்டில் $31,500க்கு வாங்கிய வீட்டிலேயே இன்னும் வசித்து வருகிறார். அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு $700,000 ஆகும். கலிபோர்னியாவில் உள்ள லகுனா கடற்கரையில் $4 மில்லியன் மதிப்புள்ள ஒரு வீடும் அவருக்கு உள்ளது.[48] 1989 ஆம் ஆண்டில் பெர்க்சயரின் நிதியில் 10 மில்லியன் டாலரை[49] ஒரு தனி ஜெட் விமானம் வாங்குவதற்கு செலவழித்த இவர் அதற்கு, "தி இன்டிஃபன்சிபில் " எனப் பெயரிட்டுள்ளார். மற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிகம் செலவழிப்பதைப் பற்றிய இவரது கண்டனம் மற்றும் பொது போக்குவரத்துச் சேவையை அதிகம் உபயோகித்து வந்த இவரது பழக்கம் ஆகியவை எழுப்பிய கட்டுமானத்தை இது மாற்றிக் காண்பித்தது.[50]

இவர் ஷரோன் ஆஸ்பெர்க்கிடம் கற்ற பிரிட்ஜ் என்ற சீட்டு விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடியதோடு, அதனை ஷரோனுடனும் பில் கேட்சுடனும் விளையாடுவார்.[51] ஒரு வாரத்தில் பன்னிரண்டு மணி நேரம் இந்த விளையாட்டை விளையாடுவார்.[52] 2006 ஆம் ஆண்டில், பபெட் கோப்பை பிரிட்ஜ் போட்டிக்கு நிதியாதாரம் அளித்தார். கோல்ஃப் விளையாட்டு ரைடர் கோப்பைக்கான போட்டி நடந்த அதே நகரத்தில், அதற்கு முன்னதாக அமெரிக்காவின் பன்னிரண்டு பிரிட்ஜ் விளையாட்டு வீரர்களுக்கும், ஐரோப்பாவின் பன்னிரண்டு வீரர்களுக்குமிடையே இந்த போட்டி நடந்தது.

டிஐசி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான ஆன்டி ஹேவார்டு உடன் இணைந்து ஒரு அசைவூட்டத் தொடருக்காக கிறிஸ்டோபர் வெபருடன் வாரன் பபெட் பணியாற்றினார். மே 6, 2006 அன்று பெர்க்சயர் ஹாதவேயின் வருடாந்திர கூட்டத்தின் போது பபெட் அளித்த தகவலின் படி, இந்த தொடர் பபெட் மற்றும் மங்கரின் பாத்திரங்களை வைத்து குழந்தைகளுக்கு வாழ்க்கையில் நிதியை சரியான முறையில் கையாளும் விதம் பற்றி கற்றுத் தரும் தொடராக இருந்தது. பபெட் மற்றும் மங்கரின் கேலிச்சித்திரங்கள் அந்த நிகழ்ச்சியில் வார இறுதி முழுதும் இடம் பெற்றது. மேலும் ஒரு சிறந்த அசைவூட்டத் திரைப்படத்தை அக்கூட்டம் ஆரம்பிக்கும் முன் ஹேவார்டு காண்பித்தார்.

பபெட் தன்னுடைய மத நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் போது தான் ஒரு அறிவொணாவாதி (கடவுள் அறிய முடியாதவர் என்று கருதுபவர்) எனத் தெரிவிக்கின்றார். 2006 டிசம்பரில் வந்த அவர் பற்றிய செய்திகளில் அவர் கைபேசி வைத்திருப்பதில்லை, தன் மேசை மேல் கணினி வைத்திருப்பதில்லை மற்றும் அவரது மகிழுந்தை [53] அவரே ஓட்டுகிறார் ஆகிய செய்திகள் வெளியாயின.[54]

பபெட் வம்சாவளியை அவரது மரபணு கொண்டு ஆராய்ந்ததில் அவரது தந்தை வட ஸ்கான்டிநேவிய நாடுகளிலிருந்தும் தாய் ஐபீரிய அல்லது எஸ்தோனிய நாடுகளிலிருந்தும் வந்திருக்கலாம் எனத் தெரிய வந்தது.[55] எல்லோரும் நம்புவதற்கு மாறாக இவருக்கும் பிரபல பாடகர் ஜிம்மி பபெட்டிற்கும் குடும்ப ரீதியாக பழக்கம் உண்டே தவிர இருவரும் உறவினர்கள் இல்லை.

அரசியல்

பபெட் இதுவரை பல அரசியல் நன்கொடைகளை வழங்கி உள்ளார். மேலும் பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரத்தில் அவரை ஆதரித்தார். ஜூலை 2, 2008 அன்று சிகாகோவில் நடந்த ஒபாமாவின் தேர்தல் பிரச்சார நிதி திரட்டும் விருந்தில் பபெட் கலந்து கொண்டார். இது பங்கேற்ற ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா $28,500 நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தாகும்.[56] பபெட் ஒபாமாவிற்கு ஆதரவு வழங்கினார். ஜான் மெக்கேனைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவருடைய சமூக நீதி எண்ணங்களில் இவருக்கு உடன்பாடில்லை என்றும் இவர் கருத்து மாற வேண்டுமானால் "மூளை அறுவை சிகிச்சை" (லோபோடோமி) தான் செய்ய வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.[57]2008 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக நடைபெற்ற ஜனாதிபதி பதவிக்கான விவாதத்தின் போது, நடுநிலையாளர் டாம் புரோகா, பபெட்டைப்பற்றி வினா எழுப்புகையில் இரு போட்டியாளர்களுமே அவர் அவர்களாட்சி காலத்தில் கருவூலச் செயலராகத் தகுந்தவர் எனத் தெரிவித்தனர்.[58] மூன்றாவதும் இறுதியுமான விவாதத்தில் ஒபாமா பபெட்டை பொருளாதார ஆலோசகராக ஆக்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்தார்.[59] 2003 ஆம் வருடத்தில் கலிபோர்னியா மாநில குடியரசுக் கட்சி ஆளுநரான அர்னால்டு சுவாஸ்நேகர் அவருடைய அரசியல் பிரசாரத்தின் போது பபெட்டைத் தன் நிதி ஆலோசகராகப் பெற்றிருந்தார்.[60]

எழுத்துப் படைப்புகள்

வாரன் பபெட்டின் படைப்பில் அவருடைய "வருடாந்திர அறிக்கையும்" மற்றும் பல கட்டுரைகளும் அடங்கும்.

பபெட் அவருடைய தி சூப்பர் இன்வெஸ்டர்ஸ் ஆஃப் கிரகாம் அண்டு டாட் ஸ்விலெ (The Super Investors of Graham and Dodd sville) எனற கட்டுரையில் கிரகாம் மற்றும் டாட்டின் மதிப்பு முதலீடு சிறந்தது என்று கூறுபவர்களை மேற்கோள் காட்டியிருந்தார். தன்னையும் சேர்த்து வால்டர் ஜே. சகாலஸ், டாம் நாப், எட் ஆண்டர்சன், பில் ருவான், சார்லஸ் மங்கர்(பபெட்டின் பெர்க்சயர் நிறுவனக் கூட்டாளி), ரிக் குவாரின் மற்றும் ஸ்டான் பெர்ல்மீட்டர் ஆகியோரையும் இதில் குறிப்பிட்டிருந்தார்.[61]

மனித நேயம்

பபெட் ஏன் தனது செல்வத்தைப் பகிர்ந்தளிக்க விரும்புகிறார் என்பது 1988 ஆம் ஆண்டில் அவர் கூறிய மேற்கோள்களைப் பார்த்தால் விளங்கும்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த அவரது கட்டுரையில் ’பரம்பரைச் சொத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று அவர் கூறினார். பணம் கொழிக்கும் சூழலில் வளர்பவர்களைப் பற்றி கூறும் போது ’அதிர்ஷ்ட விந்துக் குழுவைச் சேர்ந்தவர்கள்’ எனக் குறிப்பிடுவார்.[62] பணம் படைத்தவர்கள் அவர்களது திறனுக்கு அதிகமான பலனைப் பெறுகின்றனர் என பபெட் பலமுறை எழுதியுள்ளார்.

ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு வழி வழியாக நடக்கும் சொத்துப் பரிமாற்றத்தை இவர் எதிர்ப்பதை தொடர்ச்சியாக பல்வேறு செயல்கள் மற்றும் எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.[63] பபெட் ஒருமுறை கூறும் போது, ’என் குழந்தைகளுக்கு எதுவும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை ஊட்டுவதற்குத் தேவையான அளவு செல்வத்தை அளிப்பேன்; எதுவும் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தை அளிக்குமாறு அதிக அளவு செல்வத்தை கொடுக்க மாட்டேன்’ என்றார்.[64]

2006 ஆம் ஆண்டில், கேர்ல்ஸ், இன்க் (Girls Inc) அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக தனது 2001 லிங்கன் டவுன் (Lincoln Town) மகிழுந்தை[65] இபே இணையதளத்தில் ஏலத்திற்கு விட்டார்.[66]

2007 ஆம் வருடம் தன்னுடன் உணவருந்தும் விருந்தை ஏலத்தில் விட்டு அதிலிருந்து திரட்டிய $650,100 தொகையை நன்கொடையாக வழங்கினார்.[67]

2006 ஆம் வருடத்தில் இவருடைய சொத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கவிருப்பதாய் அறிவித்தார். இதில் 83% பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு அளிக்க ஒப்புக்கொண்டார்.[68] 2006 ஆம் ஆண்டில் பபெட் தோராயமாக 10 மில்லியன் பெர்க்சயர் ஹாதவே பி பிரிவு பங்குகளை பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி (23 ஜூன் 2006 மதிப்பின்படி தோராயமாக 30.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)[69] உலக வரலாற்றிலேயே மிக அதிகமான செல்வம் தானம் கொடுத்த பெரும்பெயர் பெற்றார். இது பபெட்டை மனிதநேயமுதலாளித்துவப் புரட்சியின் தலைவராகச் சித்தரித்தது.[70] இந்த அறக்கட்டளை பிரதி வருடம் ஜூலை மாதத்தில் மொத்த கொடையில் 5% அளவினைப் பெறும். மேலும் பபெட் கேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார். ஆனால் அந்த அமைப்பின் முதலீடுகளை நிர்ணயிப்பதில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.[71][72][மேற்கோள் தேவை]

பபெட் முதலில் தன் சொத்தின் பெரும்பகுதியை தன் பெயரில் ஏற்பட்ட பபெட் தொண்டு நிறுவனத்திற்கு அளிப்பதாய் இருந்தார்.[139] [73] ஆனால் இதற்கு மாறாக இதனை கேட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார். ஆனால் 2004 ஆம் ஆண்டில் இவரின் மனைவியின் மறைவிற்குப் பின் அவருடைய $2.6 பில்லியன் மதிப்பு கொண்ட பண்ணை வீடு பபெட் தொண்டு நிறுவனத்தை அடைந்தது.[74]

வாஷிங்டனில் பபெட் 2002 முதல் அணு ஆயுத அபாய ஒழிப்பு இயக்கத்தின் ஆலோசகராக இருந்தார். மேலும் இந்த இயக்கத்திற்கு $50 மில்லியன் நன்கொடையாக அளித்தார்.[75]

27 ஜூன் 2008 அன்று ப்யூர் ஹார்ட் சைனா வளர்ச்சி முதலீட்டு நிதி (Pure Heart China GrowthInvestmentFund) நிறுவனத்தின் தலைவரான ஜாவோ டான்யாங் "வாரன் பபெட்டுடன் விருந்து" ஏலத்தில் $2,110,100 தொகைக்கு வென்றார். இந்த ஏலத்தின் மூலம் கிட்டிய பணம் சான் ஃபிரான்சிஸ்கோவின் கிளைடு அறக்கட்டளைக்கு (Glide Foundation) அளிக்கப் பெற்றது.[76][77]

உரை பாணி

பபெட்டின் சொற்பொழிவுகளில் வியாபார விவாதங்களோடு நகைச்சுவையும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு வருடமும் பபெட்டின் தலைமையில் பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டம் ஒமாகாவில் உள்ள கியூவெஸ்ட் சென்டரில் நடக்கும். இதற்கு அமெரிக்காவிலிருந்தும் மற்றும் வேறு நாடுகளிலிருந்தும் 20,000 பேருக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். அக்கூட்டத்தை "முதலாளித்துவத்தின் உட்ஸ்டாக்" என குறிப்பிடுவர்.[78] பெர்க்சயரின் ஆண்டறிக்கை மற்றும் பங்குதாரர்களுக்கு இவர் எழுதும் கடிதங்கள் ஆகியவைகளை நிதி ஊடகங்கள் விவரமாக அலசும். பபெட்டின் உரைகளில் விவிலியத்தில் ஆரம்பித்து கவர்ச்சி நடிகை[79] பற்றிய பேச்சு வரை பலவும் இடம்பெறும். ஏராளமான நகைச்சுவையும் இருக்கும். பல்வேறு இணையதளங்கள் இவருடைய பண்புகளைப் போற்றினாலும் இவரது வர்த்தக மாதிரிகளைக் குறை கூறுபவர்களும் பலர் இருக்கின்றனர்.

பபெட்டும் புகையிலையும்

’சிகரெட் தொழில் சிறந்தது என்று நான் கூறுவதற்குக் காரணம், அதனை உருவாக்க ஒரு பென்னி தான் செலவாகிறது. ஒரு டாலருக்கு அதனை விற்க முடிகிறது. அத்துடன் அப்பழக்கம் எளிதில் விடமுடியாது தொடரும் பழக்கமாகவும் உள்ளது. அத்துடன் வர்த்தகச் சின்னம் மீதான ஒரு விசுவாசமும் உருவாகிறது’ என்று 1987 ஆம் வருடம் ஆர்ஜேஆர் நாபிஸ் கோ, இன்க் (RJR Nabisco Inc ) நிறுவனக் கையகப் பிரச்சினையின் போது பபெட் ஜான் குட்பிரயன்ட்டிடம் கூறினார்.[80]

1994 ஆம் ஆண்டில் புகையிலை வர்த்தகத்தைப் பற்றிய தனது கருத்தில் பபெட் மாற்றம் கொண்டார். 1994 ஆம் ஆண்டில் நடந்த பெர்க்சயர் ஹாதவே வருடாந்தரக் கூட்டத்தில் புகையிலையில் முதலீடு செய்வது குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:”புகையிலை வர்த்தகத்தில் எனது முதலீட்டின் பிரதானமான பகுதியை முதலீடு செய்வதை நான் விரும்ப மாட்டேன். அத்தொழில் இப்போது சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்காக அதன் எதிர்காலம் மிகப் பிரகாசமாய் இருப்பதாய் கூறி விட முடியாது.” [81]}}

பபெட்டும் நிலக்கரியும்

2007 ஆம் ஆண்டில், பபெட்டின் மிட் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனத்தின் (MidAmericanEnergyCompany) துணை நிறுவனமான பசிபிகார்ப் (PacifiCorp ) நிறுவனம் நிலக்கரியால் இயங்கும் 6 மின்னாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டத்தைக் கைவிட்டது. வரன்முறை அமைப்புகளிடம் இருந்தும் மக்கள் குழுக்களிடம் இருந்தும் வந்த எதிர் நெருக்குதலை அடுத்து இது நிகழ்ந்தது. குறிப்பாக வர்த்தகரீதியான நிலத் தரகரான அலெக்சாண்டர் லாஃப்ட் பபெட்டிற்கு எதிரான ஒரு மக்கள் எதிர்ப்பினை ஒழுங்கமைத்தார். தங்களை பொது மக்களாகவும், வியாபாரிகளாகவும், சேவைத் தொழிலாளர்களாகவும், அரசாங்க பணியாளர்களாகவும் நிறுவன பிரதிநிதிகளாகவும் மற்றும் யூடாவிலுள்ள அவரது புது வாடிக்கையாளர்களாகவும் விவரித்துக் கொண்ட சுமார் 1,600 மனுதாரர்கள் இவருக்கு ஒரு கடிதம் எழுதினர். யூடாவில் தற்போது இருப்பதை விட அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும், காற்று மாசுபடும் என்றும், நீர்நிலைகள் சுருங்கி பாதிப்படையும் என்றும் மேலும் பனிக்கட்டிகள் உருகி மறைந்து போகும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இறுதியாக, அப்படி ஓர் நிலை ஏற்பட்டால் அதனால் நாம் வாழும் மற்றும் வேலைபுரியும் இடத்தின் எழில் அழிந்து, பெரிய நகரம் மற்றும் மாநிலமாக பொருளாதாரத்தில் உருவெடுக்கும் நிலை குலையும் என்றும் தற்போது நாம் காணும் சம்பள உயர்வு மற்றும் சொத்து மதிப்புகள் காணாமல் போகும் என்றும் அதில் கூறியிருந்தனர்.[82]

கிளாமத் ஆறு

கிளாமத் ஆற்றின் குறுக்கேயான நான்கு நீர் மின்னாலைகளுக்கான அணைகளை அகற்ற அமெரிக்க இந்திய பழங்குடியினரும் சாலமன் மீனவர்களும் பபெட்டின் ஆதரவை வேண்டினர். கூட்டரசு எரிசக்தி வரன்முறைக் கழகம் (FERC) இந்த பிரச்சினையில் முடிவெடுக்கும் என்கிற பதிலை டேவிட் சோகோலிடம் இருந்து பபெட் பெற்றார்.[83][84]

வர்த்தகப் பற்றாக்குறை

அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையால் அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க சொத்துக்களின் மதிப்பு குறையும் என்று பபெட் கருதினார். பெருவாரியான அமெரிக்க சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பதால் நாளடைவில் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடையும் என அவர் நம்புகிறார்.

வாரன் பபெட் தம் பங்குதாரர்களுக்காக 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எழுதிய கடிதத்தில் அடுத்த 10 வருடங்களுக்குள் வெளிநாட்டவர் அமெரிக்காவில் $11 டிரில்லியன சொத்துக்கள் வைத்திருப்பர் எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கர்கள் ... முடிவில்லாது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சொத்தைப் பெற்றவர்களுக்கும் கடமைப்பட்டவர்களாக ஆகிப் போவார்கள் என்று அவர் தெரிவித்தார். எழுத்தாளர் ஆன் பெட்டிஃபோர் இவர் கருத்தை ஆமோதித்தார். ’பபெட் சொல்வது சரியே. நாம் இப்போது மிகவும் பயப்பட வேண்டியது வங்கிகள் மற்றும் முதலீட்டு பண வீழ்ச்சிக்கோ அல்லது பன்னாட்டு நிதி அமைப்பின் நிலைப்பாடிற்கோ அல்ல. நாம் பங்குஅறுவடை (share cropping) சமுதாயமாவதைப் பற்றித்தான், நாம் வீழ்வதால் ஏற்படும் ஆத்திரத்தைப் பற்றித் தான் நாம் பயப்பட வேண்டியிருக்கிறது’ என்று அவர் எழுதினார்.[85]

டாலரும் தங்கமும்

பபெட் 2002ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பன்னாட்டு நாணயச் சந்தையில் நுழைந்தார். ஆனால் மாறும் லாப விகிதங்களின் காரணமாக அந்நியச் செலாவணி ஒப்பந்தங்களை வைத்திருப்பதன் மீதான செலவினம் அதிகரித்துக் கொண்டு சென்றதை அடுத்து இதில் தனது முதலீட்டை 2005 ஆம் ஆண்டில் பெருமளவில் குறைத்து விட்டார். டாலர் மதிப்பு சரியும் என்பதில் பபெட் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவிற்கு வெளியிலான சந்தைகளில் இருந்து லாபம் ஈட்டும் நிறுவனங்களை வாங்குவதில் தான் ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

1998 ஆம் வருடம் ஹார்வர்டில் பேசும் போது அவர் இவ்வாறு கூறுகிறார்:

“ஆப்பிரிக்காவில், அல்லது வேறொரு இடத்தில் இருந்து இது தோண்டியெடுக்கப்படுகிறது. நாம் அதனை உருக்கி இன்னொரு குழிக்குள் மீண்டும் புதைத்து வைக்கிறோம். அதனைப் பாதுகாக்க சுற்றி ஆட்களை நிறுத்தி அவர்களுக்கும் நாம் தொகை செலவழிக்கிறோம். இதனால் என்ன பயன்? செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒருவர் இதனைப் பார்த்தார் என்றால் அவர் இதனைக் கண்டு நிச்சயம் தலை சொறிந்து யோசிப்பார்.”

பொருத்தமான விலையில் வாங்கப்படும் பங்குகள் தான் பணவீக்க சகாப்தத்தில் அனைத்து சிறந்த மாற்றுகளிலும் சிறந்ததாய் இருப்பதாக 1977 ஆம் ஆண்டில் பேசுகையில் பபெட் கூறியுள்ளார்.[86]}}

வரி

பபெட் 2006 ஆம் வருடத்தில் 19% வருமான வரியே ($48.1 மில்லியன்) மத்திய அரசுக்கு செலுத்தியதாகவும் ஆனால் அவரிடம் வேலை செய்பவர்கள் அவரை விட குறைவான வருமானத்தைப் பெற்றாலும் 33% வரி செலுத்தினர் எனவும் தெரிவித்தார். இவரது வருமானம் ஈவுத்தொகை மற்றும் முதலீட்டுப் பெருக்கத்தில் இருந்து வந்ததாக இருப்பதே இதற்குக் காரணம்.[87] பபெட் பரம்பரைச்சொத்து வரியை ஆதரிப்பவர். அதனை அகற்ற அல்லது மாற்ற நினைப்பது, ’2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் அணியை 2000 ஆம் வருடத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களின் மூத்த மகன்களைக் கொண்டு அமைப்பது போன்றதாகும்" என்று அவர் கூறுகிறார்.[88][89] ஆனால் இவருடைய விமர்சகர்கள் பபெட் தனது காப்பீட்டு நிறுவன ஆதாயம் கருதியே சொத்து வரிக்கு ஆதரவாய்ப் பேசுவதாக வாதிடுகின்றனர்.[90]

பபெட்டின் கருத்துப்படி அரசாங்கம் சூதாட்டங்களை வரன்முறைப்படுத்துவது என்பது அறியாமை மீது செலுத்தப்படும் வரி ஆகும்.[91]

பங்கு வாய்ப்பு செலவினம்

ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பங்கு கொள்முதல் வாய்ப்புகள் நிறுவனத்தின் வருவாய் அறிக்கையில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் பபெட் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தார். நிறுவனம் வழங்கும் சில பங்கு வாய்ப்புகளை மட்டுமே செலவினமாகக் கருதக் கோரும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, தனது 2004 வருடாந்திரக் கூட்டத்தில் அதனைக் கடுமையாக இவர் விமர்சித்தார். கணிதத்தில் பை மதிப்பை 3.14159 என்பதில் இருந்து 3.2 என மாற்றுவதற்கான மசோதாவை இண்டியானா அவைப் பிரதிநிதிகள் ஒரு சட்ட மன்றக் கூட்டம் மூலம் ஏறக்குறைய சட்டமாக்க முயன்ற நிகழ்வுடன் இதனை அவர் ஒப்பிட்டார்.[92]. ’ஒரு நிறுவனம் ஊழியர்கள் செய்யும் சேவைக்காக அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வெகுமதியை பங்கு வாய்ப்புகளாக அளிக்கிறது. இச்செலவை அவர்களுடைய வருவாய் அறிக்கையில் குறிப்பிடவில்லையானால் வேறெங்கே குறிப்பிடுவது’ என்று அவர் வினவினார்.[93]

சீனாவில் முதலீடு

பபெட் பெட்ரோ சைனா நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்நிறுவனம் சூடான் படுகொலையில் பங்கு கொண்டிருந்ததாலும் அந்நிறுவனத்திலிருந்து 2005 ஆம் ஆண்டில் ஹார்வர்டு நிறுவனமும் விலகி விட்டதாலும், பல சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆயினும் அவர் பெர்க்சயர் இணைய தளத்தில் தனது முடிவில் மாற்றம் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் சில நாட்களிலேயே அப்பங்குகளை விற்று விட்டார். இதனால் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியினால் ஏற்படவிருந்த பல பில்லியன் டாலர் நட்டத்திலிருந்தும் தப்பினார்.

2008 ஆம் வருடத்தில் $230 மில்லியன் முதலீட்டில் பிஒய்டி (BYD) நிறுவனத்தின் பங்குகளில் 10 சதவீதத்தை வாங்கியதின் மூலம் பபெட் புதிய எரி பொருள் கொண்டு இயங்கும் வாகன வர்த்தகத்தில் இறங்கினார். இந்நிறுவனம் பிஒய்டி ஆட்டோ என்ற மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் துணை நிறுவனத்தைக் கொண்டிருந்தது. இந்த முதலீடு ஒரு வருடத்திற்கும் குறைந்த காலத்தில் அவருக்கு 500% லாபத்தைப் பெற்றுத் தந்தது.[94].

வாரன் பபெட்டைப் பற்றிய புத்தகங்கள்

வாரன் பபெட்டைப் பற்றியும் அவருடைய முதலீட்டுக் கொள்கைகளைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. 2008 அக்டோபரில் யுஎஸ்ஏ டுடே இதழ் கூறிய கருத்தின் படி குறைந்தது 47 புத்தகங்களாவது பபெட்டின் பெயரை தலைப்பில் கொண்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதிகள், உலக அரசியல் தலைவர்கள் மற்றும் தலாய் லாமா ஆகியோர் மட்டுமே இதுபோன்று இடம்பெற்றிருக்கும் மற்றவர்கள் என்று அக்கட்டுரையில் பார்டர் புத்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜார்ஜ் ஜோன்ஸ் குறிப்பிடுகிறார்.[95] பபெட் அவருடைய விருப்பமாகக் குறிப்பிடும் போது லேரி கன்னிங்காம் தொகுத்த"வாரன் பபெட்டின் கட்டுரைகள்" (The Essays of Warren Buffet)[96] புத்தகத்தை மிகச் சிறந்ததாகக் குறிப்பிடுகிறார். இது அவருடைய கடிதங்களிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் கோர்வையாகத் தொகுக்கப்பட்டவையாகும்.[95]

பபெட்டைப் பற்றிய புத்தகங்களில் அதிகம் விற்பனையாகும் அல்லது குறிப்பிடத்தக்க புத்தகங்கள் வரிசையில் கீழ்கண்டவை அடங்கும்:

  • ரோஜர் லோவன்ஸ்டென், பபெட், மேக்கிங் ஆஃப் அன் அமெரிக்கன் கேபிடலிஸ்ட்
  • ராபர்ட் ஹாக்ஸ்ட்ராம், தி வாரன் பபெட் வே .[97] (2008 கணக்கெடுப்பின்படி, பபெட்டைப் பற்றிய அதிகம் விற்பனையாகும் புத்தகம்)[95]
  • ஆலிஸ் ஷ்ராடர், தி ஸ்னோபால்: வாரன் பபெட் அன் தி பிசினஸ் ஆப் லைஃப் .[98] (பபெட்டின் ஒத்துழைப்புடன் எழுதப்பட்ட புத்தகம்.)[99]
  • மேரி பபெட் மற்றும் டேவிட் கிளார்க், பபெட்டாலஜி [100] மற்றும் 4 புத்தகங்கள் (அனைத்து புத்தகங்களும் 1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது.)[95]
  • ஜேனட் லோ, வாரன் பபெட் ஸ்பீக்ஸ்: விட் அண்ட் விஸ்டம் ஃப்ரம் தி வோர்ல்ட்’ஸ் கிரேட்டஸ்ட் இன்வஸ்டார் .[101]
  • ஜான் ட்ரெய்ன், தி மிடாஸ் டச்: 'அமெரிக்காவின் புகழ்பெற்ற முதலீட்டாளராக' திகழ வாரன் பபெட் பயன்படுத்திய திட்டங்கள் [102]
  • ஆண்ட்ரூ கில்பாட்ரிக், ஆப் பர்மனன்ட் வேல்யூ: தி ஸ்டோரி ஆஃப் வாரன் பபெட் .[103] (இது 330 அத்தியாயங்கள், 1,874 பக்கங்கள் மற்றும் 1,400 புகைப்படங்கள், 10.2 பவுண்டுகள் எடையுள்ள பபெட்டைப் பற்றிய மிகப் பெரிய புத்தகம்.)[95]
  • வாரன் பபெட் லாரன்ஸ் கன்னிங்காம் (பதிப்பாளர்), தி எசேஸ் ஆஃப் வாரன் பபெட் .[104] (இயக்குனரின் கடிதங்களை தலைப்பு வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.)
  • ஜேனட் எம். டவாக்கோலி, டியர் மிஸ்டர் பபெட்: வாட் அன் இன்வஸ்டர் லர்ன்ஸ் 1,269 மைல்ஸ் ப்ரம் வால் ஸ்ட்ரீட் [105]
  • ஜெப் மாத்யூஸ், பில்க்ரிமேஜ் டு வாரன் பபெட் ஒமாகா: எ ஹெட்ஜ் பண்ட் மேனேஜர்ஸ் டிஸ்பாசசஸ் ப்ரம் இன்சைட் தி பெர்க்சயர் ஹாதவே ஆனுவல் மீட்டிங்,"மெக்கிரா-ஹில் புரொபஷனல், 2008 . ஐஎஸ்பிஎன் 978-0071601979
  • செல்லமுத்து குப்புசாமி (2007). வாரன் பஃபட்: பணக் கடவுள். New Horizon Media Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8368-391-3. 
  • Chellamuthu Kuppusamy (2012). Warren Buffett: an Investography. Amazon Digital Services, Inc. 

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாரன்_பபெட்&oldid=3606963" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை