இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி அல்லது இடை அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி அல்லது மெசோ-அமெரிக்கா (Mesoamerica அல்லது Meso-America) என்பது அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி ஆகும். இது நடு மெக்சிக்கோவில் இருந்து பெலீசு, குவாதமாலா, எல் சல்வடோர், ஒண்டூராசு, நிக்கராகுவா, கொசுத்தாரிக்கா ஆகிய நாடுகள் வரை பரந்துள்ளது. 16 ஆம் , 17 ஆம் நூற்றாண்டுகளில் எசுப்பானியக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இப் பகுதியில் பல கொலம்பசுக்கு முற்பட்ட சமுதாயங்கள் செழிப்புற வாழ்ந்துள்ளன.[1][2][3]

இடையமெரிக்காவில் கொலம்பசுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்த மாயன் நாகரிகத் தொல்லியல் களமான திக்கல். இது இடைஅமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொல்லியல் களங்களுள் ஒன்று.
எல் சல்வடோர் நாட்டில் உள்ள, முன்-இசுப்பானியக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் களமான சான் ஆன்டிரெசு.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இப்பகுதியில், பல வேளாண்மை ஊர்களும், பெரிய, சடங்குசார்ந்த அரசியல்-சமயத் தலைநகரங்களும் இருந்தன. இந்தப்பகுதி, அமெரிக்காக் கண்டத்தின் மிகச் சிக்கலானதும், உயர் முன்னேற்றம் அடைந்ததுமான பல பண்பாடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள், ஒல்மெக், சப்போட்டெக், தியோத்திவாக்கன், மாயன், மிக்சுட்டெக், டோட்டோனாக், அசுட்டெக் போன்றவை அடங்கும்.[4]

சொற்பிறப்பும் வரைவிலக்கணமும்

இடையமெரிக்கா என்னும் சொல் மெசோஅமெரிக்கா (Mesoamerica) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல். அமெரிக்காவின் ஒரு பகுதியை ஒருங்கே குறிப்பதற்காக, செருமானிய இனப்பண்பாட்டியலாளர் பால் கெர்ச்சோஃப் என்பவர் இச்சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.[5] இன்றைய தென் மெக்சிக்கோ, குவாத்தமாலா, பெலீசு, எல் சல்வடோர், மேற்கு ஒண்டூராசு, நிக்கராகுவாவின் பசுபிக் தாழ்நிலப் பகுதிகள், வடமேற்குக் கொசுத்தாரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் நிலவிய பல்வேறு கொலம்பசுக்கு முந்திய பண்பாடுகள் இடையே ஒத்ததன்மைகள் இருப்பதைக் கெர்ச்சோஃப் கவனித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய தொல்லியல் கோட்பாடுகளுக்கு அமையவும், ஏறக்குறைய ஓராயிரம் ஆண்டுகளாக இப்பகுதிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்து இடம்பெற்ற தொடர்புகளினால் ஏற்பட்ட பண்பாட்டு ஒப்புமைகளை அடிப்படையாகக் கொண்டும், இப் பகுதியை அவர் ஒரு பண்பாட்டுப் பகுதி என வரையறுத்தார்.

இப் பண்பாட்டு ஒப்புமைகளுள், நிலையான வாழ்க்கை முறைக்கான மாற்றம், வேளாண்மை, இருவித காலக்கணிப்பு முறைகள், 20 ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை, படவெழுத்து முறை, பல்வேறு வகையான பலி கொடுத்தல் செயற்பாடுகள், சிக்கலான பொதுக் கருத்தியல்சார் கருத்துருக்கள் என்பனவும் அடங்கும். இப்பகுதியில் வழங்கும் மொழிகளிடையே உள்ள இலக்கணக் கூறுகளின் ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு மொழியியல் பகுதி எனவும் காட்டப்பட்டுள்ளது.

தொல்லியல், இனவரலாற்றியல் துறைகளுக்கு அப்பால், இச் சொல் தற்காலத்தில், நடு அமெரிக்க நாடுகளையும், மெக்சிக்கோவின் ஒன்பது தென்கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய இடையமெரிக்கப் பகுதி என்னும் பொருளாதாரப் பகுதியையும் குறிக்கும்.

புவியியல்

அமெரிக்காவில் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் அமைவிடம்.

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி, 10°, 22° குறுக்குக் கோடுகளுக்கு இடையே காணப்படுவதும், வட அமெரிக்காவையும், தென்னமெரிக்காவையும் இணைப்பதுமான நிலத்தொடுப்புப் பகுதியில் அமைந்துள்ளது. நடுவமெரிக்கா, சூழல்மண்டலங்கள், இடக்கிடப்பு வலயங்கள், சூழல் அமைவு என்பவற்றை உள்ளடக்கிய சிக்கலான ஒரு சேர்க்கையாக அமைந்துள்ளது. தொல்லியலாளரும், மானிடவியலாளருமான மைக்கேல், டி. கோ என்பவர் இவ்வாறான சூழ்நிலைக் கூறுகளைத் தாழ்நிலங்கள், உயர்நிலங்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இவ்வகைப்பாட்டில் கடல் மட்டத்துக்கும் அதிலிருந்து 1000 மீட்டர் உயரத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் தாழ்நிலங்கள் எனவும், கடல்மட்டத்தில் இருந்து 1000 மீட்டர்களுக்கும், 2000 மீட்டர்களுக்கும் இடையில் உள்ளவை உயர்நிலங்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில்; பசிபிக் கடல், மெக்சிக்கோ குடா, கரிபியக் கடல் ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் காணப்படுவது போலவே; தாழ்வெப்பமண்டலக் காலநிலையும், வெப்பமண்டலக் காலநிலையும் நிலவுகின்றன. உயர்நிலப் பகுதியில் இதைவிடக் கூடிய அளவில் காலநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. உலர் வெப்பமண்டலக் காலநிலை தொடக்கம், குளிரான மலைப்பகுதிக் காலநிலை வரை இப்பகுதியில் காலநிலைகள் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனினும், முதன்மையாகக் காணப்படுவது, மிதமான மழைவீழ்ச்சியுடனும் இதமான வெப்பநிலையுடனும் கூடிய மிதவெப்பமண்டலக் காலநிலையாகும். மழை வீழ்ச்சியும் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஒவக்சாக்கா, வட யுக்கட்டான் பகுதிகள் உலர்வானவையாகவும், தெற்கே பசிபிக், கரிபியக் கரையோரமாக அமைந்த பகுதிகள் ஈரவலயப் பகுதிகளாகவும் உள்ளன.

இடக்கிடப்பு

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் இடக்கிடப்பு பெருமளவுக்கு வேறுபாடுகளை உடையதாக உள்ளது. மெக்சிக்கோப் பள்ளத்தாக்கைச் சூழ அமைந்துள்ள உயரமான மலைச் சிகரங்கள், மத்தியில் அமைந்த சியெரா மாட்ரே மலைகள் என்பவை தொடக்கம், வட யுகடான் தீபகற்பத்தில் உள்ள தாழ்வான சமவெளிகள் வரை பல இடக்கிடப்பு வகைகளை இங்கே காணலாம். இடையமெரிக்காவில் உள்ள மிக உயரமான மலை பிக்கோ டி ஒரிசாபா ஆகும். ஒரு உறங்கு எரிமலையான இது, புவேப்லாவுக்கும் வேராக்குரூசுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 5,636 மீட்டர் (18,490 அடி).

நடுவமெரிக்க உயர்நிலப்பகுதி நிலத்தோற்றம்

பல சிறிய தொடர்களைக் கொண்ட சியெரா மாட்ரே மலைத்தொடர் வடக்கு நடு அமெரிக்காவில் இருந்து கொசுத்தாரிக்கா ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்கிறது. இத்தொடர் எரிமலைகளைக் கொண்டது. சியெரா மாட்ரே தொடரில் செயற்பாடு அற்றனவும், செயற்படுவனவும் ஆகிய 83 எரிமலைகள் உள்ளன. இவற்றுள் 13 மெக்சிக்கோவிலும், 37 குவாத்தமாலாவிலும், 23 எல் சல்வடோரிலும், 25 நிக்கராகுவாவிலும், 3 வடமேற்குக் கொசுத்தாரிக்காவிலும் உள்ளன. இவற்றில் 16 இன்னும் செயற்பாடு உள்ளவையாக இருப்பதாக மிச்சிகன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கூறுகிறது. செயற்பாடுள்ள எரிமலைகளில், 5,452 மீட்டர் (17,887 அடி) உயரமான "போப்போகட்டெப்பெட்டில்" என்னும் எரிமலையே மிகவும் உயரமானது. நகுவாட்டில் மொழிப் பெயரையே இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த எரிமலை மெக்சிக்கோ நகரில் இருந்து தென்கிழக்கே 70 கிலோ மீட்டர் (43 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மெக்சிக்கோ - குவாத்தமாலா எல்லையில் அமைந்துள்ள "தக்கானா எரிமலை]]"; குவாத்தமாலாவில் உள்ள "தசுமுல்க்கோ எரிமலை", "சாந்தமரியா எரிமலை"; எல் சல்வடோரில் அமைந்துள்ள "இசால்கோ எரிமலை"; நிக்கராகுவாவில் உள்ள "மொமோட்டோம்போ எரிமலை"; கொசுத்தாரிக்காவில் உள்ள "அரேனல் எரிமலை" என்பன நடுஅமெரிக்காவில் உள்ள பிற குறிப்பிடத்தக்க எரிமலைகள்.

தெகுவாந்தப்பெக் நிலத்தொடுப்பு இங்குள்ள முக்கியமான ஒரு இடக்கிடப்பு அம்சமாக விளங்குகிறது. தாழ்வான சமநிலமான இது, சியெரா மாட்ரே டெல் சூர், சியெரா மாட்ரே டி சியாப்பாசு என்பவற்றுக்கிடையே, சியெரா மாட்ரே மலைத்தொடரைப் பிரிக்கிறது. இந்த நிலத்தொடுப்பின் மிக உயரமான பகுதி கடல் மட்டத்தில் இருந்து 224 மீட்டர் (735 அடி) உயரம் கொண்டது. இத் தொடுப்பே மெக்சிக்கோக் குடாவுக்கும், மெக்சிக்கோவில் உள்ள பசுபிக் பெருங்கடல் கரைக்கும் இடையிலான மிகக் குறைந்த தூரமாகவும் உள்ளது. இத்தூரம் ஏறத்தாழ 200 கிமீ (120 மைல்). இத் தொடுப்பின் வடக்குப் பகுதி சதுப்பு நிலமாகவும், அடர்த்தியான காடுகளினால் மூடப்பட்டு இருந்தாலும், சியெரா மாட்ரே தொடருக்குள் இது மிகக்குறைந்த தூரமாக இருப்பதால், இத் தொடுப்பு, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிக்குள் ஒரு முக்கியமான போக்குவரத்து, தொடர்பாடல், பொருளாதாரத் தொடர்பு வழியாக விளங்குகிறது.

ஆறுகளும், ஏரிகளும்

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் மிக நீளமான உசுமக்கிந்தா ஆறு
இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் மிகப் பெரிய ஏரியான நிக்கராகுவா ஏரி

வடக்கு மாயன் தாழ்நிலங்களுக்கு வெளியே, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி முழுதும் ஆறுகள் உள்ளன. பல மிக முக்கியமான ஆறுகளின் வழி நெடுகிலும் பல மனிதக் குடியிருப்புக்கள் உருவாகின. இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் மிக நீளமான ஆறு உசுமக்கிந்தா. குவாத்தமாலாவில் சாலினாசு, பசியன் ஆறு என்பன இணையும் இடத்தில் தொடங்கும் இந்த ஆறு, வடக்கு நோக்கி 970 கிமீ (600 மைல்) ஓடி மெக்சிக்கோ குடாவில் கலக்கின்றது. இவ்வாற்றில் 480 கிமீ (300 மைல்) தூரம் கப்பல்கள் செல்ல முடியும். ரியோ கிரான்டே டி சந்தியாகோ, கிரிசல்வா ஆறு, மோத்தகுவா ஆறு, உலுவா ஆறு, ஒன்டோ ஆறு என்பனவும் இப்பகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க ஆறுகள். வடக்கு மாயன் தாழ்நிலங்களில், சிறப்பாக யுக்கட்டான் தீவக்குறையின் வடக்குப் பகுதியில் ஆறுகள் எதுவும் கிடையா. அத்துடன் ஏரிகளும் இப்பகுதியில் இல்லை. நிலத்தடி நீரே இப்பகுதியின் முக்கியமான நீர் மூலம் ஆகும்.

8,264 ச.கிமீ (3,191 ச.மைல்) பரப்பளவு கொண்ட நிக்கராகுவா ஏரியே இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரி. சப்பாலா ஏரி மெக்சிக்கோவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி. எனினும், அசுட்டெக் பேரரசின் தலைநகரான தெனோச்சித்தித்லானைத் தன் கரையில் கொண்டிருந்த தெக்சுக்கோக்கோ ஏரியே பரவலாக அறியப் பெற்றது. வடக்குக் குவாத்தமாலாவில் பெட்டென் இட்சா ஏரிக் கரையில் அமைந்திருந்த தயாசால் என்னும் நகரமே கடைசிச் சுதந்திர மாயன் நகரமாக 1697 ஆம் ஆண்டுவரை இருந்தது. இதனால், இந்த ஏரியும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அதித்லான் ஏரி, இசபல் ஏரி, குயிசா ஏரி, லெமோவா ஏரி, மனாகுவா ஏரி என்பன பிற முக்கியமான ஏரிகள்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை