இந்திய மூக்குக்கொம்பன்

காண்டாமிருகத்தின் இனங்கள்
இந்திய மூக்குக்கொம்பன்
இந்திய மூக்குக்கொம்பன்கள் (இடமிருந்து வலமாக: பச்சிளம் ஆண் கன்று, வயது வந்த பெண் விலங்கு, பெண் கன்று)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Rhinoceros (genus)
இனம்:
R. unicornis
இருசொற் பெயரீடு
Rhinoceros unicornis
லின்னேயசு, 1758
இந்திய காண்டாமிருகத்தின் பரவல்

'இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன்[2] என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன.[3] நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008-இல் கணக்கிடப்பட்டுள்ளது.[4] இவ்விலங்கு அசாமின் மாநில விலங்காகும்.

ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும். இதனை 1758-ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் "Rhinoceros" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் "rhino" என்றால் மூக்கு என்றும் "ceros"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும்[5]. தமிழில் இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர்.

படிவளர்ச்சியும் பரவலும்

பிலிசுடோசின் காலத்தில் வாழ்ந்து, பின் அற்றுப்போன மூதாதைய மூக்குக் கொம்பன் (Coelodonta)

மூதாதைய மூக்குக்கொம்பன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது.[6] உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[7]

இந்திய மூக்குக்கொம்பனின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டாமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.[8][9] தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டாமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[10] மேலும் கோலோசின் காலத்தில் இம்மூக்குகொம்பன்கள் தற்போதைய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.[5]

முகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.[11] மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.[12]

இந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் மூக்குக்கொம்பன்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்:

நாடுஇடம்காலம்சான்றுகோள்
இந்தியாகங்கா நகர், ராச்சசுத்தான்3500-400 BCபானர்ஜி மற்றும் சக்ரவூர்த்தி (1973)[13]
இந்தியாலங்குனசு, குசராத்பானைக் காலத்திற்கு முன்ஜுனெர் (1952)[14]
இந்தியாகனிவெல் ஏரி, குசராத்8000-1200 BCMomin et al. (1973)[15]
இந்தியாசிவாலிக் மலைகள்கீழ் மயோசீன்பேகர் மற்றும் துரந்த் (1836)[16],Falconer and Cautely (1847)[17], Falconer (1868)[18], Lydekkar (1876)[19].
இந்தியாமிர்சாபூர், உத்திர பிரதேசம்தரவுகள் இல்லைகாக்பர்ன் (1883)[20]
இந்தியாபாண்டா, உத்திர பிரதேசம்தரவுகள் இல்லைகாக்பர்ன் (1883)[20]
இந்தியாசிர்ராண்டு, பீகார்c.1700 BCநாத் 1976)[21]
இந்தியாசென்னை, தமிழ் நாடுதரவுகள் இல்லைலைடேக்கர் (1880)[22]
இந்தியாகோகக், பெல்காம், கர்நாடகாதரவுகள் இல்லைஃபூடே (1874)[23]
பாக்கிசுத்தான்அரப்பா2500-1500 BCப்ரசாத் [24]
பாக்கிசுத்தான்மொகஞ்சுதாரா300 BCமார்ஷல் [25]

வரலாற்றில் உள்ள பதிவுகள்

டியூரேவின் மர அச்சுப்படம் (1515)

மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான். ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ்விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்ததாகும் மற்றும் இப்படிவத்தில் காண்டாமிருகத்தின் ஒரு சில பாகங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன; காண்க தோளின் மீதுள்ள கொம்புகள்.

உடலமைப்பு

காண்டாமிருகத்தின் தோல்

தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும்.[26] தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும்.[27] ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.

காண்டாமிருகத்தின் கொம்பு

நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.[28]. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை.[5].

காண்டாமிருகமும் அதன் வாழ்விடமும்
இந்திய காண்டாமிருகத்தின் கொம்பு வளர்ச்சி நிலைகள்[12]
அகவை(வயது)அளவு
பிறந்தவுடன்கொம்பு இல்லை
6 மாதங்கள்1.1 – 1.65 செ.மீ
ஓர் ஆண்டு3.3 – 5.5 செ.மீ
2 ஆண்டுகள்6.6 – 8.8 செ.மீ, சுற்றளவு 17.6 – 22 செ.மீ
3 ஆண்டுகள்8.8 – 13.2 செ.மீ, சுற்றளவு 17.6 – 44 செ.மீ
3 - 20 ஆண்டுகள்19.8 – 22 செ.மீ, முழுவதும் வளர்ந்த கொம்பு
20 - 30 ஆண்டுகள்பயன்பாட்டால் கொம்பின் நீளம் குறைதல் அல்லது கொம்பு சேதமடைதல்

பழக்கவழக்கங்கள்

சமூகவாழ்க்கை

இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.

அட்டை, தெள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டாமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டாமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டாமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.[5]

டொராண்டோ விலங்கியல் பூங்காவில் இந்திய காண்டாமிருகம் ஒன்று புல் மேயும் காட்சி
இந்திய காண்டாமிருகம் - தாயும் சேயும்

உணவு

இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலாலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.[5]

இனப்பெருக்கம்

இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.

இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்ணை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும்.

தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுகொள்ளும்.[29]

காப்புநிலை

இந்திய காண்டாமிருகத்தை வேட்டையாடுதலைக் காட்டும் முகலாயர் கால ஓவியம்

ஒரு காலத்தில் சிந்து சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்திய காண்டாமிருகம், தற்போது அசாமில் உள்ள பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நேப்பாளத்தில் உள்ள சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டும் தென்படுகிறது.[30] இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய காண்டாமிருகத்தைக் காப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றபோதிலும் கள்ளச்சந்தையில் மிக அதிகமான விலைக்கு விற்கும் காண்டாமிருகத்தின் கொம்பினால், அடிக்கடி இவ்விலங்கு கொல்லப்படுகிறது. கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பரிய வைத்தியங்களில் இக்கொம்பு அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. 1983-ஆம் ஆண்டிலிருந்து 1989-ஆம் ஆண்டிற்குள் அசாமி்ன் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 235 இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. கொம்பை வெட்டி எடுப்பதற்கு முதலில் விலங்கின் மீது மின்சாரம் பாய்ச்சியோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை கொடுத்தோ விலங்கைக் கொன்று பின் கொம்பை அறுத்துவிடுகிறார்கள்.[31]

இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்ட உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க இந்தியா மற்றும் நேபாளத்தில் பல்வேறு மீள்அறிமுகப்படுத்தி விலங்கின் பரவலை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. மீள்அறிமுகப்படுத்திய உயிர்தொகை இந்தியாவில் துவ்வா தேசிய பூங்காகாவிலும், நேபாளத்தில் ராயல் பரிடியா தேசிய பூங்கா மற்றும் ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[32][33][34]

நேபாளத்தின் சிட்வான் தேசிய பூங்காவில் யானை சவாரியின் முலம் காண்டாமிருகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுகிறார்கள்
காசிரங்கா புரவுக்காட்டில் இந்திய காண்டாமிருகம்
இந்தியா மற்றும் நேபாளத்தில் இந்திய காண்டாமிருகத்தின் உயிர்த் தொகை (2004) [12]
பாதுகாக்கப்பட்ட இடத்தின் பெயர்இந்திய காண்டாமிருகத்தின் எண்ணிக்கைபாதுகாக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு
காசிரங்கா தேசிய பூங்கா, அசாம்1600 +430 சதுர கி.மீ
ராயல் சிட்வான் தேசிய பூங்கா, நேபாளம்600 +932 சதுர கி.மீ
போபிதார வனவிலங்கு உய்விடம், அசாம்7816 சதுர கி.மீ
சல்தாபார வனவிலங்கு உய்விடம், மேற்கு வங்காளம்6521 சதுர கி.மீ
ஓரங்கு வனவிலங்கு உய்விடம், அசாம்4678 சதுர கி.மீ
கோருமாரா தேசிய பூங்கா, மேற்கு வங்காளம்328.88 சதுர கி.மீ
மானசா தேசிய பூங்காஇங்கு காண்டாமிருகத்தின் இருப்பு சந்தேகத்திற்குரியது-
லோக்வா வனவிலங்கு உய்விடம்தற்போது காண்டாமிருகம் ஏதுமில்லை-
மீள்அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்திய காண்டாமிருகத்தின் உயிர்த் தொகை[12]
பாதுகாக்கப்பட்ட இடத்தின் பெயர்இந்திய காண்டாமிருகத்தின் எண்ணிக்கை
துவ்வா தேசிய பூங்கா, இந்தியா21
ராயல் பரிடியா தேசிய பூங்கா, நேபாளம்85
ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா, நேபாளம்16

1910-ஆம் ஆண்டு முதல் இந்திய காண்டாமிருகத்தின் உயிர் தொகையியல் புள்ளி விபரத்தின் போக்கு ஆதாரம் : here.

ஆண்டுமொத்தம்இந்தியாநேபாளம்
1910100
195235030050
1958700400300
1963600
1964625440185
1966740575165
1968680
1971630
19831000
19841500
198617111334377
19871700
19901700
19941900
199521351600535
19972095
19982100
20002500
20022500
20052400

சின்னம்

சியட் டயர் நிறுவனத்தின் சின்னம்

இந்திய காண்டாமிருகம் அசாம் மாநிலத்தின் மாநில விலங்காகும். மேலும் அசாம் எண்ணெய் நிறுவனம் மற்றும் சியட் டயர் நிறுவனத்தின் சின்னமும் இந்திய காண்டாமிருகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை