பாரதிய ஜனதா கட்சி

இந்திய அரசியல் கட்சி

பாரதிய சனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா. ச. க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.

பாரதிய ஜனதா கட்சி
भारतीय जनता पार्टी
தலைவர்ஜெகத் பிரகாஷ் நட்டா
மக்களவைத் தலைவர்நரேந்திர மோதி (பிரதமர்)
மாநிலங்களவைத் தலைவர்பியூஷ் கோயல்
தொடக்கம்6 ஏப்ரல் 1980
தலைமையகம்11, அசோகா சாலை,
புது தில்லி, 110001
இளைஞர் அமைப்புயுவ மோர்ச்சா
பெண்கள் அமைப்புமகிளா மோர்ச்சா
கொள்கைஒருங்கிணைந்த மனிதநேயம் (அதிகாரப்பூர்வ),இந்துத்துவம், தேசியவாதம், வலது சாரி அரசியல், பழைமைவாதம், தாராளமய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை[1][2][3]
நிறங்கள்காவி மற்றும் பச்சை  
இ.தே.ஆ நிலைதேசிய கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
303 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
83 / 245
இணையதளம்
http://bjp.org
இந்தியா அரசியல்

பாரதிய சனதா கட்சி, தீனதயாள் உபாத்தியாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் [4] என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயச் சார்புக் கொள்கையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.

பா.ச.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாச்சுபாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரசு அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ச.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சி அமைத்த காங்கிரசு அல்லாத முதல் கட்சி ஆனது.

கட்சி அமைப்பு

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பின் வரைபடம்

கட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே செயல்பட முடியும்.[5][6] தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்புகள் வருமாறு[7]:

  1. தேசியத் தலைவர்
  2. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு
  3. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு
  4. பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு

பா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திலிருந்து இருந்தவர்கள். விசுவ இந்து பரிசத், அகில பாரத வித்தியார்த்தி பரிசத், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது.

பா ஜ க அணிகள்

  1. இளைஞர் அணி
  2. மகளிர் அணி
  3. சிறுபான்மையினர் அணி
  4. பட்டியல் சமூகத்தினர் அணி
  5. பட்டியல் பழங்குடியினர் அணி
  6. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி

வரலாறு

பாரதிய ஜன சங்கம்

சியாமா பிரசாத் முகர்ஜி

சியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாத கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது.[8][9]

ஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நடந்த கலவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல்வாதிகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் (உபாத்யாயாவையும் சேர்த்து) ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும் கொண்டவர்களாக விளங்கினர்.

இக்கட்சி 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும் தொடர்ந்து வளர்ந்த இக்கட்சி, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம், பசுவதைத் தடை, ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது, இந்தி மொழியை வளர்ப்பது போன்ற கொள்கைகள் கொண்ட இக்கட்சி,[10] பல வட மாநிலங்களில் காங்கிரசின் அதிகாரத்திற்கு பெறும் சவாலாகத் திகழ்ந்தது.

இக்கட்சி, 1967க்குப் பிறகு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்திரப் பிரதேசம், தில்லி போன்ற சில மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.[11] இந்திரா காந்தியால் 1975 முதல் 1977 வரை அமல் படுத்தப்பட்ட அவசர காலத்தின் போது நடந்த அரசியல் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததினால், இக்கட்சியின் பல தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியும் வேறு சில கட்சிகளும் ஜனதா கட்சியுடன் இணைந்து, 1977 ஆம் ஆண்டு காங்கிரசிற்கு எதிராக களமிறங்கின.[9]

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.[12]

பாரதிய ஜன்தா கட்சி உருவாக்கம் (1980–)

பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.[13] காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.

பா. ஜ. க புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே[14] இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இந்து தேசியவாத கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.

அடல் பிகாரி வாஜ்பாய், பா.ஜ.க விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் (1998–2004)

விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ராம் ஜென்மபூமி மந்திர் இயக்கத்திற்கு உறுதுணையாக பா,ஜ.க விளங்கியதோடு,[14] அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியது. அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் எனவும், வெகு காலத்திற்கு முன் அங்கு ராமர் கோயில் இருந்தது எனவும் ஏராளமான மக்கள் நம்புகின்றனர். எனவே இந்துக்களின் புனித இடமான அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. லால் கிருஷ்ண அத்வானி கட்சியின் தலைவராக இருந்த போது, பல்வேறு ரத யாத்திரைகள் மேற்கொண்டு, இந்துக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

திசம்பர் 6, 1992 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியான போராட்டத்திலிருந்து கலவரத்தில் இறங்கி, பாபர் மசூதியை இடித்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.[15][16] அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கியதாகக் கூறி பலரால் விமர்சனம் செய்யப்பட்டலும், கோடிக் கணக்கான இந்துக்களின் ஆதரவை பா.ஜ.க வென்று தேசிய முக்கியத்துவம் பெற்றது.

தில்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. திசம்பர் 1994 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. மும்பையில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா. ஜ. க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.[17]

தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான சமதா கட்சி, சிரோமனி அகாலி தளம், சிவ சேனா போன்றவற்றோடு சேர்த்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளோடும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும்.[18][19] தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது.[20] ஆனால், அ. இ. அ. தி. மு. க தலைவர் ஜெயலலிதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா. ஜ. க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் யஷ்வந்த் சின்காவை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, பி. வி. நரசிம்ம ராவ் அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது.

இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று, டாக்டர். மன்மோகன் சிங்கைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது.[21][22]

கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா. ஜ. க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா. ஜ. க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.[17] ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது.[23]

பொதுத் தேர்தல்களில்

வருடம்பொதுத் தேர்தல்வென்ற இடங்கள்இடங்களில் மாற்றம்வாக்குகளின் சதவிகிதம்வாக்குகளின் மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 19848வது மக்களவை2 27.74% 7.74
இந்தியப் பொதுத் தேர்தல், 19899வது மக்களவை85 8311.36% 3.62
இந்தியப் பொதுத் தேர்தல், 199110வது மக்களவை120 3720.11% 8.75
இந்தியப் பொதுத் தேர்தல், 199611வது மக்களவை161 4120.29% 0.18
இந்தியப் பொதுத் தேர்தல், 199812வது மக்களவை183 2125.59% 5.30
இந்தியப் பொதுத் தேர்தல், 199913வது மக்களவை189 623.75% 1.84
இந்தியப் பொதுத் தேர்தல், 200414வது மக்களவை144 4522.16% 1.69
இந்தியப் பொதுத் தேர்தல், 200915வது மக்களவை116 2218.80% 3.36
இந்தியப் பொதுத் தேர்தல், 201416வது மக்களவை282 16631.00% 12.2
இந்தியப் பொதுத் தேர்தல், 201917வது மக்களவை303 21

கொள்கையும் அரசியல் நிலையும்

பாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும்.

இந்துத்துவம்

வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான இந்துத்துவத்தை பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா. ஜ. க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா. ஜ. க வின் வாதம்.

காங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா. ஜ. க கூறுகிறது.

அடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய மதசார்பின்மைக் கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். மோகன்தாஸ் காந்தியால் முன்மொழியப்பட்டக் கோட்பாடான சர்வ தர்ம சம்பவ என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா. ஜ. க வின் கருத்து.[24] வாஜ்பாய், இந்திய மதசார்பின்மையைப் பின்வருமாரு விளக்குகிறார்:

அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதே காந்தியின் சர்வ தர்ம சம்பவ கோட்பாடாகும்.[25] இக்கோட்பாடு எந்த மதத்திற்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களையும் சமமானதாகவே பார்க்கிறது. எனவே, இக்கோட்பாடே இந்தியாவிற்குகந்த கொள்கை; இதுவே மேற்கத்தியக் கொள்கைகளைவிட சிறந்தது.

பா.ஜ.க வின் கொள்கைகளுள் "ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப்பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. இக்கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. இக்கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இக்கட்சி, இந்தியாவை வளமான மற்றும் பலமான தேசமாக வளர்க்க உறுதி பூண்டுள்ளது. பண்டைய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன மற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம். சாதி, சமய மற்றும் பாலின வேறுபாடின்றி ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி அதில் அனைவருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சம வாய்ப்பு, கருத்து மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் கிடைக்க இக்கட்சி பாடுபடும். இக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு அதன் கொள்கைகளான மதசார்பின்மை, நேர்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் உரிமைகளைக் காக்கும்.

பா.ஜ.க அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுவைக் கொல்வதையும் உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய கலாசாரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்க வேண்டும் என்றும் பா. ஜ. க கோரி வருகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்லூரி பாடத்திட்டத்தில் வேத சோதிடத்தையும் சேர்க்க உத்தரவிட்டதோடு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் செய்தார்.[26]

பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சி செய்த போது இந்துகளின் புனித நூலான பகவத் கீதையை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பா.ஜ.க மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கும் ஆதரவளிக்கிறது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறினாலும், சில பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.[10][27][28][29] ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றுக் கருத்துடைய கட்சிகளும் அடங்கியுள்ளதால் பா.ஜ.க தனது இந்துத்துவா கொள்கையை தளர்த்தியது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவை பா.ஜ.க, இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கு, கஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதில் செய்த தவறுகள் போன்றவற்றிற்காகக் கடுமையாக விமர்சித்தது.[27] ஆயினும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலை, இந்தியாவை ஒருமைப்படுத்தியதற்காக பா. ஜ. க பாராட்டியுள்ளது.

டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு நாளை பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அனுசரித்தாலும், நரேந்திர மோடி போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், மேல் சாதி இந்துக்களின் கட்சியே பா.ஜ.க என்று விமர்சிக்கப்படுகிறது.[சான்று தேவை]

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் மீது எழுந்த, "இசுலாமியர்களுக்கு எதிரானது", "பாசிசக் கொளகையுடையது", "மதக் கலவரத்தைத் தூண்டுகிறது" போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. வினாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், இந்தியப் பிரிவினைக்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா. ஜ. க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது.

பொருளாதாரக் கொள்கைகள்

பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், மார்க்சிசத்தையும், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் சமூகவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன.[30] சுதேசிக் கொள்கையையும், உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.[30]

பா.ஜ.க தலைமையிலான அரசு, தங்க நாற்கர சாலை முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க கட்டற்ற வர்த்தகத்தையும் அறிமுகப்படுத்தியது. பா. ஜ. க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது.[21][22][31][32]

பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம்

பா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான அணு ஆயுதத் தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் ஜம்மூ கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது.[33]

வாஜ்பாய் அரசின் ஆட்சிக்காலத்தில், பொக்ரான்-II என்ற பெயரில் மே 1998 இல் ஐந்து அணு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்பட்டது மட்டுமின்றி பல முக்கிய ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டது. வாஜ்பாய் அரசு, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை ஆக்கிரமத்த பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற அனைத்து வழிகளையும் கையாள இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டது. இதுவே தற்போது கார்கில் போர் என்று அறியப்படுகிறது. பாகிஸ்தானின் ஊடுருவலை காலதாமதமாகக் கண்டறிந்தமைக்காக அரசின் உளவுப் பிரிவு விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளும் அதில் ராணுவம் கண்ட வெற்றியும் வாஜ்பாய் அரசுக்குப் புகழ் சேர்த்தது.[34] இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 இல் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, வாஜ்பாய் அரசு, ராணுவத்தை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் குவித்தது.[35][36]

திசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, பா.ஜ.க அரசு தீவிரவதத் தடை சட்டம் (POTA) என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் உளவு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதோடு, காவல் துறைக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. இச்சட்டம் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் இசுலாமியர்களுக்கு எதிரான சட்டமாகப் பார்க்கப்பட்டது. இதனால் இந்த மசோதாவை சட்டமாக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசால் இச்சட்டம் நீக்கப்பட்டது.[37]காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

வெளியுறவுக் கொள்கை

முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது.[38] இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனின் இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் அல் காயிதா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது.

இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது.[38][39] வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.[38]

சில வருடங்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக விளங்கிய பர்வேஸ் முஷரஃபை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட போதிலும் அவை எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மீண்டும் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர்கள்

-
எண்பிரதமர்படம்ஆட்சிக்காலம்மொத்த நாட்கள்
1அடல் பிகாரி வாச்பாய் 1996, மார்ச் 1998 - மே 20046 ஆண்டுகள் 80 நாட்கள்
2நரேந்திர மோதி மே 2014 - தற்போது வரை9 ஆண்டுகள், 336 நாட்கள்

மாநிலங்களில் பா.ஜ.க

பா.ஜ.க, டிசம்பர் 2018 நிலவரப்படி 13 மாநிலங்களில் (குஜராத், மகாராட்டிரம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், கோவா, ஜார்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது.

பா.ஜ.க வின் தற்போதைய மாநில முதல்வர்கள்

கட்சித் தலைவர்கள்

பதவிக் காலம்பெயர்பிறப்பிடம்மற்றவை
1980–1986லக்னௌ, உத்தரப் பிரதேசம்
1986–1991 லால் கிருஷ்ண அத்வானிகராச்சி, பிரித்தானிய இந்தியாமுதல் முறையாக
1991–1993 முரளி மனோகர் ஜோஷிபுது தில்லிமுதல் முறை
1993–1998 லால் கிருஷ்ண அத்வானிகராச்சி, பிரித்தானிய இந்தியாஇரண்டாவது முறையாக
1998–2000குஷபாவு தாக்கரேமத்தியப் பிரதேசம்
2000–2001பங்காரு லட்சுமண்ஆந்திரப் பிரதேசம்
2001–2002 ஜனா கிருஷ்ணமூர்த்திதமிழ்நாடு
2002–2004 வெங்கையா நாயுடுநெல்லூர், ஆந்திரப் பிரதேசம்
2004–2006 லால் கிருஷ்ண அத்வானிகராச்சி, பிரித்தானிய இந்தியாமூன்றாவது முறையாக
2006–2009 ராஜ்நாத் சிங்வாரணாசி, உத்தரப் பிரதேசம்முதல் முறையாக
2009–2013 நிதின் கட்காரிநாக்பூர், மகாராட்டிரம்
2013–2014 ராஜ்நாத் சிங்வாரணாசி, உத்தரப் பிரதேசம்இரண்டாவது முறையாக
2014-2020அமித் சாநாரயண்புரா, குஜராத்இரண்டாம் முறை
2020 முதல் ஜெகத் பிரகாஷ் நட்டாபாட்னா, பீகார்முதல் முறை

சர்ச்சைகள்

தெஹல்கா போலி ஆயுத பேரம்

இந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக 100000 கையூட்டு வாங்கியதாக,[40] 2001இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.[41]

லிபேரான் குழுவின் அறிக்கை

மன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி, உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.[16]

முன்னாள் கல்வித் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியின் மீதும் அத்வானியின் மீதும், உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம் சட்டப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானியின் காவலுக்குப் பொறுப்பேற்றிருந்த காவல் துறை அதிகாரியான அஞ்சு குப்தா அவ்வழக்கில் சாட்சி கூறினார்.[42]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாரதிய_ஜனதா_கட்சி&oldid=3849209" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை