காபுல் மாகாணம்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாகாணம்

காபுல் மாகாணம் (Kābul (பஷ்தூ: کابل, பாரசீக மொழி: کابل‎, romanized: Kābol), என்பது  ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மாகாணத்தின் தலைநகரம் காபூல் நகரம் ஆகும், இது ஆப்கானித்தான் நாட்டின் தலைநகராகவும் உள்ளது. இதன் மக்கள் தொகை 2012 இல் நான்கு மில்லியனாக இருந்தது. மாகாண மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் நகர்பகுதியில் வசிக்கின்றனர். மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஹமீத் அக்ரம் ஆவார்.

காபூல்
Kabul

کابل
மாகாணம்
சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் ஒரு உறுப்பினர் காபூல் மாகாணத்தின் (மார்ச் 1, 2013) பனி மூடப்பட்ட ஒரு மலைத்தொடரை பார்த்தபடி ஒரு மலை உச்சியில் நின்றுள்ளார்.
சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் ஒரு உறுப்பினர் காபூல் மாகாணத்தின் (மார்ச் 1, 2013) பனி மூடப்பட்ட ஒரு மலைத்தொடரை பார்த்தபடி ஒரு மலை உச்சியில் நின்றுள்ளார்.
ஆப்கானித்தானின் வரைபடத்தில் காபூல் உயர்நிலம் அமைந்துள்ள இடம்
ஆப்கானித்தானின் வரைபடத்தில் காபூல் உயர்நிலம் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள் (தலைநகரம்): 34°00′N 69°00′E / 34.00°N 69.00°E / 34.00; 69.00
நாடு Afghanistan
தலைநகரம்காபூல்
அரசு
 • ஆளுநர்அக்ரம் மத்தியில்
பரப்பளவு
 • மொத்தம்4,461.6 km2 (1,722.6 sq mi)
மக்கள்தொகை (2015)[1]
 • மொத்தம்43,72,977
 • அடர்த்தி980/km2 (2,500/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-KAB
மொழிகள்பாஷ்டோ
தாரி

நிலவியல்

காபூல் நகரம், கடல் மட்டத்திலிருந்து 5,900 அடி உயரத்தில், இந்துகுஷ் மலைகளின் இடைவெளியில் உள்ள குறுகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

காபூலானது கடல் மட்டத்திலிருந்து 1800 மீ (6000 அடி) உயரத்தில் அட்சரேகை 34-31 'வடக்கு மற்றும் தீர்க்கரேகை 69-12' கிழக்கு இடையே அமைந்துள்ளது. உலகின் மிக உயரமான பகுதியில் உள்ள தலை நகரங்களில் இது ஒன்றாகும். காபுல் நகரானது வடக்கு-தெற்கவும்,  கிழக்கு-மேற்காகவும் செல்லும் வணிகப்  பாதைகள் சந்திக்கும் இடத்தில்,  மலைகள் சூழ்ந்த  ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.  தென்கிழக்கில் லோங்கர் மற்றும் பாக்மன் மலைகளுக்கு இடையிலும், வடக்கில் சாரிகார் மற்றும் மேற்கில் நங்காய் கர் மலைகள் சூழ்ந்த நிலப்பகுதியிலும் உள்ள காபூலின்  பகுதியானது  ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனிக் கடலாக  மாறி இருந்தது. நகரத்தின் கிழக்குப் பகுதியின் இன்றைய பலி சர்க்கி பகுதியில் உள்ள சில ஆழமான கிணறுகள் இதற்கான சான்றுகளாக உள்ளன. காபூலானது, கிழக்கில் கோ-இ பக்மேன் மலையாலும், தென்கிழக்கில் கோ-இ ஷிர்தார்வாசா மலையாலும், வடகிழக்கில்  கோ-இ க்ர்த் மலைகளாலும்  சூழப்பட்டுள்ளது.  காபூல் ஆறு என்று அழைக்கப்படும் ஒரே ஒரு ஆறு காபூலில் உள்ளது. காபூல் ஆறானது காபூலின் மேற்கில் 70 கிமீ (43 மைல்) தொலைவில் உள்ள பாக்மேன் மலையில் தோன்றுகிறது. பிறகு இந்த ஆறு  காபூல் நகரம், ஜலாலாபாத் நகரம் போன்றவற்றின் வழியாக பாய்ந்து,  பின்னர் பாக்கிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து, இறுதியில் அட்டாக்கில் சிந்து ஆற்றுடன் கலக்கிறது.

காபூல் மாகாணத்தின் காலநிலையானது வறண்ட மற்றும் அரை வறண்ட புல்வெளி நிலப் பகுதியாக கருதப்படுகிறது. ஏனென்றால் இங்கு பெய்யும் மழை அளவு குறைவு,   குறிப்பாக மே முதல் நவம்பர் வரையிலான காலத்தில் காபூல் மிகவும் வறண்டதாகவும், தூசி நிறைந்ததாகவும் இருக்கும். இரவுக்கும் பகலுக்கும் இடையிலும், பருவ பருவத்திற்கு இடையிலும், இடத்திற்கு இடம் இடையில் கடுமையான வெப்பநிலை வேறுபாடு இருக்கும். ஆப்கானிஸ்தானின் காலநிலையின் பிரதான அம்சம் நீல நிற மேகங்களற்ற வானம் ஆகும். இதனால் ஆண்டில் 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி மிக்க காலநிலை இருக்கும். குளிர்காலத்தில், பனிப்பொழிவுக்கு இடையிலும் வானம் தெளிவானதாக இருக்கும், பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 15-30 செ.மீ. (5.9-11.8 அங்குலம்) பனிப்பொழிவு இருக்கும்.  காபூலின் குளிர்கால தினசரி வெப்பநிலையானது  −1 °C (30 °F) என்றும், கோடைக்கால தினசரி வெப்பநிலையானது 24 °C (75 °F) என்றும் இருக்கும். ஆண்டின் குளிரான மாதம் சனவரியாகவும், வெப்பமான மாதமாக சூலையும் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலையாக சூலை மாதத்தில் +42.7 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக சனவரியில் -26.3 ° C  பதிவாகியுள்ளது.

வரலாறு

காபூலின் வரலாறு 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது ஒரு காலத்தில் சொராட்டிரிய நெறியின் மையமாக இருந்த‍து. [2] அதன்பிறகு    பௌத்தர்கள், இந்துக்கள் ஆகியோரின் இருப்பிடமாகவும் ஆனது. 

பிரித்தானிய அருங்காட்சியகத்தின் பதிவுகளின்படி காபூலின் பூர்வ குடிமக்கள் பஷ்தூன்கள் மற்றும் தாஜிக்கள் ஆவர்.

7 ஆம் நூற்றாண்டில் அரபு முஸ்லிம் படையினரால் நகரம் ஆக்கிரமிக்கப்பட்டதன் மூலமாக இங்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மெதுவாக இந்து சாகியால்  காபூல் மீளக் கைப்பற்றப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் சபாரித்துகள் மற்றும் சமானித்துகளால் மறுபடியும் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது, அதன்பிறகு 11 ஆம் நூற்றாண்டில் கஜினி முகமதின் படையெடுப்பைத் தொடர்ந்து, இந்து சாகி மன்னர் ஜெய பாலா தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கஜினி மரபினரால் ஆளப்பட்ட இப்பிரதேசமானது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு குர்திஸின் பகுதியாக மாறியது. அதன் பின்னர் இது செங்கிஸ் கானின் தலைமையிலான மங்கோலியர்களின் படையெடுப்பால் கைப்பற்றப்பட்டது. 

தைமூரிய வம்சத்தின் நிறுவனரான தைமூர், 14 ஆம் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தைக் கைப்பற்றி ஒரு பெரிய வணிக மையமாக உருவாக்கினார்.   1504 ஆம் ஆண்டில், நாட்டின் வடபிரதேசத்திலிருந்த பாபரின் நகரம் வீழ்ந்த‍தையடுத்து, காபூலை அவரது தலைநகராக மாற்றிக்கொண்டார். அவரது பிற்கால முகலாயப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இது ஆனது.    

1747 இல் துராணிப் பேரரசின் ஒரு பகுதியாக மாறும்வரை காபுலானது பெரும்பாலும் சுதந்திரமாக இருந்தது. 1839 ஆம் ஆண்டு முதல் ஆங்கில ஆப்கானிய போரின்போது, பிரித்தானிய இராணுவம் இந்தப் பகுதிக்குள் படையெடுத்தது, ஆனால் 1842 இல் பின்வாங்கியது. பின்வாங்கி  ஜலலாபாத் செல்லும் வழியில் அந்தப் படைகளைப் பதுங்கி இருந்து அதிரடியாக தாக்கியதிலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு பிரித்தானியப் படையானது பிரித்தானிய இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்பு காபூலை எரித்தது.1879 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் ஆங்கில ஆப்கானிய போரின்போது ஆங்கிலேயர் மீண்டும் இந்த நகரத்தைக் கைப்பற்றினர். அவர்களது குடியிருப்பு ஊழியர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் ஒரு ஆண்டிற்குப் பின்னர் தங்கள் ஆதரவு மன்னரை அமர்த்திய பின்னர் திரும்பினர். 

மூன்றாம் ஆங்கில ஆப்கான் போரின்போது ஆப்கானிஸ்தானின் தலைநகர் மற்றும் அதன் கிழக்கு நகரான ஜலாலாபாத், 1919 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானிய ராயல் ஏர் ஃபோர்ஸ் 31 மற்றும் 114 படைவீரர்களால் விமானத் தாக்குதலுக்கு ஆளானது அப்போரையடுத்து அரசர் பதவிக்கு அமனுல்லாகான் உயர்ந்தார்.[3][4]  பிரித்தானியர்களைப் போரில் தோற்கடித்த அமானுல்லா கான் ராவல்பிண்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டை நவீனமயமாக்கினார்.  1920 களின் பிற்பகுதியில், ஜஹிர் ஷா  புதிய இளம் அரசராக  ஆனார்.

1960 கள் மற்றும் 1970 களில் காபூல் மத்திய ஆசியாவின் பாரிஸ் என்று அறியப்படும் விதத்தில், அது ஐரோப்பிய பாணியிலான ஒரு நகரமாக மாறியது. அந்த நாட்களில் காபூலில், நவீன திரையரங்குகள், சிற்றுண்டிச்சாலைகள், சாதாரண பிரஞ்சு தோட்டங்கள், பள்ளிகள், நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், நவநாகரீக ஆடை அங்காடிகள் போன்றவை இருந்தன. காபூலில் "காபூலிஸ்" என்று அறியப்பட்டவர்கள் மிகவும் படித்தவர்களாகவும், முற்போக்கானவர்களாகவும், பெருநோக்க மக்களாகவும் இருந்தனர். பெண்களும், ஆண்களும் துவக்கப் பள்ளி, உயர்நிலை பள்ளி,  பல்கலைக்கழகம் போன்றவற்றில் கல்வி பயின்றனர். 1970களில் குட்டைப் பாவாடையணிவதை சாதாரணாம‍க் காணக்கூடியதாக இருந்த‍து. 1960கள், 1980களில் நன்கு படித்த, கலாச்சார விழிப்புள்ள மக்கள் நிறைந்து இருந்த‍தால்,   தலைமுடியில் முக்காடு அணியாமல் இருப்பதோ, அல்லது ஆடை அணியக்கூடிய முறையோ எந்த ஒரு பிரச்சனையாகவும் இருக்கவில்லை. இந்த முற்போக்குமிக்க அமைதியான சமூகமானது 1970 களின் பிற்பகுதியில் ஆப்கானித்தானில் வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டு  இன்றைய நிலைக்கு நாடு வீழும் காலகட்டமவரை வரை நீடித்தது.  1979 திசம்பரில், ஆப்கானிஸ்தானின் ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை காக்க  சோவியத் இராணுவம் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது.

காபூல் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நேட்டோவின் இராணுவ முனையம்

ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் தங்கியிருந்த சுமார் 10 ஆண்டுகள் சோவியத் அதிகார மையமாக காபூல் மாறியது. 1989 பிப்ரவரியில், முஜாகிதீன்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறின. 1992 வசந்த காலத்தில் முகமது நஜிபுல்லாவின் அரசாங்கத்தைத் தோற்கடித்து, காபூலை முஜாகிதீன் படைகள் கைப்பற்றின. பின்னர் முஜாகிதின்களின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு பல போர்க் குழுக்களாக பிரிந்து, இதனால் ஏற்பட்ட மோதல்களால் அழிவுகள் அதிகரித்து காபூல் மிகவும் சேதமடைந்தது. 1996 ஆம் ஆண்டில்தலிபான்கள் இந்தப் பிராந்தியத்தைக் கைப்பற்றினர். இதன்பிறகு ஆப்கானித்தானில் ஒரு புதிய கண்டிப்பான இஸ்லாமிய ஷரியா ஆட்சியைத் துவக்கினர். இவர்களின் ஆட்சியானது கல்வி, பொழுதுபோக்கு, பெண்கள் பணிக்குச் செல்லுதல், ஆண்கள் தாடியை மழித்தல், மற்றும் பல சாதாரண மனித நடவடிக்கைகள், பொழுதுபோக்கின் பல வடிவங்களைக் கட்டுப்படுத்தினர்.

ஆப்கான் தேசிய காவல் துறையின்  வாகனங்கள்

செப்டம்பர் 11 தாக்குதல் முடிந்த ஒரு மாத‍த்துக்கும் குறைவான காலப்பகுதியில், 2001 அக்டோபரில் பிரித்தானிய ஆயுதப்படைகளின் உதவியுடன் அமெரிக்க ஆயுதப் படைகளானது வடக்குக் கூட்டணி தரைப்படைகளுக்கு ஆதரவாக வான்படை தாக்குதலை மேற்கொண்டன. இதனால் தலிபான்கள் காபூலை விட்டு வெளியேற, வடக்குக் கூட்டணி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 2001 திசம்பரில் காபூலானது ஆப்கான் இடைக்கால  நிர்வாகத்தின் தலைநகரமாக ஆனது. பின்னர் அதனிடம் இருந்துஹமித் கர்சாய் தலைமையில்  தற்போதைய ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்தின் வசம் நகரம் கொண்டுவரப்பட்டது.

2002 ஆம் ஆண்டின் துவக்கத்தில்  நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை (ISAF) காபூலில் பயன்படுத்தப்பட்டது, பின்னர் அங்கிருந்து அவர்கள் நாட்டின் பிற பகுதிகளைத் தங்கள் வசம் கொண்டுவந்தனர். போரினால் சின்னா பின்னமான நகரம் அதன்பிறகு சில சாதகமிக்க வளர்ச்சியைக் காணத் துவங்கியது, மில்லியன் கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பினர்.  இதன் மக்கள்தொகை 2001 இல் சுமார் 500,000 ஆக இருந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு 3 மில்லியனாக உயர்ந்தது. பல வெளிநாட்டு தூதரகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, குறிப்பாக மிகப்பெரிய அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டது. ஆப்கானிய அரசாங்க நிறுவனங்கள் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்டு நவீனமயமாக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டு முதல் புதிதாக பயிற்சி பெற்ற  ஆப்கானிய தேசிய காவல் துறை (ஏஎன்பி) மற்றும் ஆப்கானிய தேசிய இராணுவம் (ஏஎன்ஏ) ஆகியவை இப்பகுதியில் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளன.  நேட்டோ படைகள் மிகுதியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர், ஆனால் தெருக்களில் ரோந்து செல்வது இல்லை.

நகரம் வளர்ந்துவந்தாலும், அக்கானி வலைப்பின்னல், தலிபான்களின் குவெட்டா சூரா, ஹெஸ்-இ இஸ்லாமி, அல்கொய்தா மற்றும் பிற அரசு எதிர்ப்பு சக்திகள் அவ்வப்போது நடத்தும் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் மற்றும் வெடிப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. இவற்றிற்கு பாக்கிஸ்தானின் சேவைகளிடை உளவுத்துறையின் (ஐஎஸ்ஐ) வழிகாட்டல் மற்றும் ஆதரவும் உள்ளது.[5]

அரசியல்

ஆப்கான் பாராளுமன்றம்

1992 இல் நஜிபுல்லாவின் அரசு வீழ்வதற்கு முன்னர் காபூல் பல முஜாஹிதின் கிளர்ச்சியாளர்கள் மற்றும் போர்க் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு தலிபான்களால் கைப்பற்றப்படும் வரை நகரம் மற்றும் மாகாணத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற பல கிளர்ச்சிப் படைகள் போட்டியிட்டன. தலிபான்களால் புதிய கண்டிப்பான  சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்கானித்தானை எப்படி ஆட்சி செய்தார்கள் என்பது பற்றி மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. 2001 அக்டோபர் 7 அன்று அமெரிக்கா நேட்டோவின் படையெடுப்புக்குப் பின்னர் தாலிபான் தலைவரும், நாட்டின் ஒரே தலைவரான முல்லா ஒமர்,  பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டார். அதன்பிறகு தாலிபான் சட்டங்கள் விரைந்து நீக்கப்பட்டன, மேலும் காபூலில் முஜாஹிதீன் மற்றும் தலிபான் படைகளால் ஏற்பட்ட அழிவிலிருந்து நகரம் மீட்க வழி ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கவும் 2002 இல் "லோயா ஜிர்கா" (பாஷ்டோ "பெரும் பேரவை") கூட்டப்பட்டது.

2004 சனவரியில் ஆப்கானிஸ்தான் ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, நாட்டை இஸ்லாமிய குடியரசாக நிறுவப்பட்டது. அரசியலமைப்பின் படி, ஆப்கானிய அரசாங்கமானது ஒரு சனாதிபதி, இரண்டு துணை சனாதிபதிகளையும், ஒரு தேசிய சட்டமன்றம் (நாடாளுமன்றம்) போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. தேசிய சட்டமன்றமானது இரண்டு அவைகளைக் கொண்டதாக உள்ளது. ஒன்று மக்களவை (வொலேஸி ஜிர்கா), மற்றொன்று மூத்தோர் அவை (மெஷ்ரானோ ஜிர்கா) ஆகும்.மேலும்  நீதித்துறையின் சுயாட்சி கொண்ட உச்ச நீதிமன்றம் (ஸ்டாரா மக்காமா) உயர் நீதிமன்றங்கள் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் போன்றவை உள்ளன.  உச்சநீதிமன்ற நீதியரசர்களை மக்களவையின் ஒப்புதலுடன் ஜனாதிபதி நியமனம் செய்கிறார்.

ஆப்கானிஸ்தானின் சனாதிபதித் தேர்தல் 2004 அக்டோபர் இல் நடைபெற்றது. இத் தேர்தலில் எட்டு  மில்லியன் ஆப்கானியர்கள் வாக்களித்தனர். ஆப்கானிஸ்தானின் தேர்தல் நிர்வாகக் குழுவானது,  ஹமித் கர்சாய், இடைக்கால ஜனாதிபதியாக, 55.4% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என அறிவித்து, தேர்தல் சான்றிதழை அளித்தது. கர்சாயை எதிர்த்து வலுவாக போட்டியிட்ட யூனுஸ் குனுனி 16.3% வாக்குகளைப் பெற்றார். தேர்தல்கள் முறைகேடுகள் இல்லாமல் இல்லை; மோசடி மற்றும் வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டுதளைத் திணித்தல் போன்ற குற்றச்சாட்டுகள், குனூனி உட்பட பல சனாதிபதி வேட்பாளர்களால் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தை விசாரிக்க சர்வதேச நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.   தேர்தல் முறைகேடு பற்றிய ஆதாரங்களை இந்த குழு கண்டுபிடித்தது, எனினும் தேர்தலின் விளைவை பாதிக்கும் அளவுக்கு அது இல்லை என்று கூறியது.

பொருளாதாரம்

காபூலில் இயற்கை எரிவாயு, பருத்தி, கம்பளி, தரைவிரிப்புகள், விவசாயம், சில சிறிய உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் நிகழ்கின்றன. காபூலானது இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, தென் கொரியா,துருக்மெனிஸ்தான், கென்யா, உருசியா, பாக்கித்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகளோடு வர்த்தக கூட்டுறவை கொண்டுள்ளது. காபூலின் பொருளாதாரம் 25 ஆண்டுகளாக பாதிப்புக்கு ஆளாகி,  சுருங்கி இருந்த நிலையில் அமெரிக்காவின் செல்வாக்கால் சுமார் 3500% அதிகரித்துள்ளது. ஆப்கானித்தானின் பொருளாதாரத்திற்கு உதவியாக  புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய காபூலில்  பல அமெரிக்க தொழில் நிறுவனங்கள் ஆர்வமுடன் தங்கள் கிளைகளை திறந்துள்ளன. காபூல் சிட்டி சென்டர் மால் கட்டப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 100 கடைகள் உள்ளன.[6]

பொருளாதாரம் வியத்தகு அளவில் அதிகரித்து வருகிறது. பணியாளர்களின் ஊதியம் போன்றவற்றால் வீட்டு விலை அதிகரித்து வருகின்றது. வாழ்க்கை செலவினம் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது, இது கல்வியறிவற்ற  ஆப்கானியருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை ஆப்கானிஸ்தானின் பள்ளிகளுக்கு  உணவு மற்றும் பள்ளி பொருட்களுக்கு உதவுகிறது.  பல சர்வதேச தொண்டு அமைப்புக்கள் ஆப்கானிய பொருளாதாரத்திற்கு உதவுகின்றன.

சுற்றுலா

1960 கள் மற்றும் 70 களில் காபூலின் பொருளாதாரமானது சுற்றுலாவை பெரிதும் சார்ந்து இருந்தது. காபூலின் பொருளாதாரத்தில் ஆடை, பருத்தி உற்பத்தி, வேளாண் உற்பத்தி போன்ற தொழில்கள் இருந்தன, என்றாலும் அதன் பொருளாதார வருவாயானது மிகுதியாக சுற்றுலாவினால் ஈட்டப்பட்டது அவை  போர்களால் அழிந்தன.[சான்று தேவை]

மக்கள்தொகை மற்றும் நிர்வாகம்

காபுல் மாகாணமும் அதன் 14 மாவட்டங்களும்.

காபூல் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 3,950,300,[7][8] இதில் 80 விழுக்காடு நகர்ப்புறங்களில் (முக்கியமாக காபூல் பெருநகரப் பகுதியில்) வாழ்கின்றனர். மீதமுள்ள 20 விழுக்காடு கிராமப்புற மக்களாவர்.[9]

காபூல் நகரமானது பல இனமக்கள் வாழும் நகராகும். 2003 ஆம் ஆண்டு வரை இங்கே 45% தாஜிக், 25% ஹசாரா, 25% பஷ்டூன், 2% உஸ்பெக்ஸ், 1% பாலொச், 1% டர்க்,  1% இந்து போன்ற மக்கள் வாழ்ந்தனர். டாரி மற்றும் பாஷ்டோ மொழிகள் பரவலாக இப்பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், டாரி மொழியானது பொது மொழியாக உள்ளது. பன்ஷூன் மக்களிடையே பன்மொழிப் போக்கு பொதுவாகப் பரவலாக உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காபுல்_மாகாணம்&oldid=3586568" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை