உருமேனியா

ஐரோப்பாவின் தென்கிழக்கு மற்றும நடுப் பகுதியிலுள்ள ஒரு நாடு.

உருமேனியா, ரொமானியா அல்லது ரொமேனியா (România, /rˈmniə/ ()) என்பது ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக, தெற்கே பல்காரியா, வடக்கே உக்ரைன், மேற்கே அங்கேரி, தென்மேற்கே செர்பியா, கிழக்கே மல்தோவா ஆகிய நாடுகளும் தென்கிழக்கே கருங்கடலும் அமைந்துள்ளன. இது முக்கியமாக மிதவெப்ப-கண்டக் காலநிலையையும், 238,397 சதுர கிமீ பரப்பளவையும் கொண்டுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்[3]. உருமேனியா ஐரோப்பாவின் 12-ஆவது பெரிய நாடும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடும் ஆகும். புக்கரெஸ்ட் இதன் தலைநகரும், மிகப் பெரிய நகரமும் ஆகும், உருமேனியா ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐரோப்பியப் பேரவை, உலக வணிக அமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது.

உருமேனியா
România
கொடி of ருமேனியா
கொடி
சின்னம் of ருமேனியா
சின்னம்
நாட்டுப்பண்: "Deșteaptă-te, române!"
("எழுந்திரு, உருமானியனே!")
அமைவிடம்: உருமேனியா  (dark green) – ஐரோப்பியக் கண்டத்தில்  (light green & dark grey) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (light green)  —  [Legend]
அமைவிடம்: உருமேனியா  (dark green)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (light green & dark grey)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (light green)  —  [Legend]

தலைநகரம்புக்கரெஸ்ட்
44°25′N 26°06′E / 44.417°N 26.100°E / 44.417; 26.100
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)உருமேனியம்[1]
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழிகள்[2]
இனக் குழுகள்
(2022)[3]
  • 89.3% உருமேனியர்
  • 6.0% அங்கேரியர்
  • 3.4% உரோமானி
  • 1.2% ஏனையோர்
சமயம்
(2022)[3]
  • 0.5% ஏனையோர்
  • 0.5% இறைமறுப்பு, அறியவியலாமை
  • 0.4% சமயமற்றோர்
மக்கள்உருமேனியன்
அரசாங்கம்ஒருமுக அரை-சனாதிபதி குடியரசு
• அரசுத்தலைவர்
கிளாசு யோகன்னிசு
• பிரதமர்
நிக்கொலாய் சியூக்கா
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
பிரதிநிதிகள் சபை
நிறுவிய வரலாறு
• உரொமான் தாக்கியா
106
1330
• மல்தாவியா
1346
1570
• இணைப்பு
24 சனவரி 1859
• உதுமானியப் பேரரசில் இருந்து விடுதலை
9 மே 1877/1878
• பாரிய உருமேனியா
1918/1920
• இராணுவ சர்வாதிகாரம்
1941
• கம்யூனிச உருமேனியா
30 திசம்பர் 1947
• இன்றைய அரசு
27 திசம்பர் 1989[4][5][6]
• அரசமைப்பு
8 திசம்பர் 1991
1 சனவரி 2007
பரப்பு
• மொத்தம்
238,397 km2 (92,046 sq mi) (81-வது)
• நீர் (%)
3
மக்கள் தொகை
• 2022 கணக்கெடுப்பு
Neutral decrease 19,053,815[3]
• அடர்த்தி
79.9/km2 (206.9/sq mi) (136-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
$731.466 பில்.[7] (36-ஆவது)
• தலைவிகிதம்
$38,097[7] (48-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
$299.885 பில்.[7] (46-ஆவது)
• தலைவிகிதம்
$15,619[7] (61-ஆவது)
ஜினி (2021)negative increase 34.3[8]
மத்திமம்
மமேசு (2022) 0.834[9]
அதியுயர் · 49-ஆவது
நாணயம்ரொமேனிய லியு (RON)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கோடை கி.ஐ.நே)
திகதி அமைப்புநாநா.மாமா.ஆஆஆஆ (கிபி)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+40
ஐ.எசு.ஓ 3166 குறியீடுRO
இணையக் குறி.roa
  1. .eu, ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிர்வு.

ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு தனியூப், செருமனியின் கறுப்புக் காட்டுப் பகுதியில் உருவாகி தென்கிழக்கே 1,857 கிமீ பாய்ந்து உருமேனியாவின் தன்யூப் டெல்ட்டா பகுதியில் கலக்கிறது. 2,544 மீ (8,346 அடி) உயரத்தில் உள்ள மால்டோவேனு சிகரத்தை உள்ளடக்கிய கார்பேத்திய மலைகள் உருமேனியாவை வடக்கிலிருந்து தென்மேற்காகக் கடக்கிறது.[10]

இப்போதுள்ள உருமேனியாவின் குடியேற்றம் டாச்சியா இராச்சியத்தைக் கைப்பற்றல், உரோமைப் பேரரசால் இலத்தீன்-மயமாக்கல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் எழுத்துப் பதிவுகளுடன், பழைய கற்காலப் பகுதியில் தொடங்கியது. நவீன உருமேனிய அரசு 1859-இல் மால்தாவியா, வலாச்சியா ஆகியவற்றின் தனூபிய ஆட்சியாளர்களின் விரும்பிய ஒன்றிணைப்புடன் உருவாக்கப்பட்டது. 1866 முதல் உருமேனியா என்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்ட புதிய நாடு, உதுமானியப் பேரரசிடம் இருந்து 1877 இல் விடுதலை பெற்றது. முதலாம் உலகப் போர்க் காலத்தில், 1914 இல் நடுநிலையை அறிவித்த உருமேனியா, 1916 முதல் நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டது. போருக்குப் பின், புக்கோவினா, பெசராபியா, திரான்சில்வேனியா, பனாத்தின் சில பகுதிகள், கிறிசானா போன்ற பகுதிகள் உருமேனியா இராச்சியத்தின் பகுதிகளாயின.[11] 1940 சூன்-ஆகத்து காலப் பகுதியில், மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் படி பெசராபியா, வடக்கு புக்கோவினா ஆகியவை சோவியத் ஒன்றியத்திடமும், வடக்கு திரான்சில்வானியாவை அங்கேரிக்கும் கொடுக்க வேண்டி வந்தது. 1940 நவம்பரில், உருமேனியா முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1941 சூனில் இரண்டாம் உலகப் போரில் இறங்கி அச்சு நாடுகளுடன் இணைந்து 1944 ஆகத்து வரை சோவியதிற்கு எதிராகப் போரிட்டது. 1944 இல் அது நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டு, வடக்கு திரான்சில்வேனியாவை மீண்டும் தனதாக்கிக் கொண்டது. போரின் முடிவில், செஞ்சேனை உருமேனியாவை ஆக்கிரமித்ததை அடுத்து, அது சோசலிசக் குடியரசாகத் தன்னை அறிவித்து, வார்சா உடன்பாட்டின் ஓர் உறுப்பு நாடாகியது. 1989 புரட்சியை அடுத்து, அது மக்களாட்சிக்கும், சந்தைப் பொருளாதாரத்திற்கும் மாற்றமடையத் தொடங்கியது.

உருமேனியா அதிக வருமானப் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு வளரும் நாடு ஆகும்.[12] மனித வளர்ச்சிக் குறியீட்டில் 53வது இடத்தில் உள்ளது. இது பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் 47வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 2000களின் முற்பகுதியில் உருமேனியா விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது; இதன் பொருளாதாரம் இப்போது முக்கியமாக சேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். டாச்சியா தானுந்து, பெட்ரொம் எண்ணெய் கம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம், இயந்திரங்கள், மற்றும் மின்னாற்றலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. உருமேனியா 1955 முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பிலும், 2004 முதல் நேட்டோவிலும், 2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. உருமேனியாவின் பெரும்பான்மை மக்கள் உருமேனிய இனத்தைச் சேர்ந்த, கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர். அவர்கள் உரோமானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உருமானிய மொழியைப் பேசுகின்றனர்.

பெயர் வரலாறு

உருமேனியா (România) என்ற பெயர் (român) இலத்தீன் Romanus (ரொமானுசு, ருமேனிய மக்கள் என்று பொருள்) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.[13] உருமேனியர்கள் ரோமாநசினுடைய வம்சாவளிகள் என்பதை 16-ஆம் நூற்றாண்டில் திரான்சில்வேனியா, மொல்தாவியா, வலாச்சியா போன்ற நாடுகளுக்குச் சென்றிருந்த இத்தாலிய மனிதநேயர்கள் எழுதியிருக்கின்றனர்.[14][15][16][17]

பழைய உருமேனிய மொழியில் 1521 இல் எழுதப்பட்ட நியாசுக்குவின் கடிதம்.

உருமேனியன் மொழியில் எழுதிய மிகப்பழமையான ஆவணம் 1521 ஆம் ஆண்டில் எழுதிய கடிதமான "நியாசுக்குவின் கடிதம்" ஆகும்.[18] இந்த ஆவணம் முதன்முதலாக "உருமேனியன்" என்ற சொல்லை எழுத்துவடிவில் கொண்டுள்ளது, வலாச்சியா என்ற நிலம் உருமேனியர்களின் நிலமாக என்று உரிமை கொண்டாடியுள்ளது. அதற்குப்பின் வந்த நூற்றாண்டுகளில், உருமானியன் ஆவணங்கள் ஒன்றுக்கொன்று மாற்றத்தக்க இரு விதமான எழுத்துக்கோர்வையினை பயன்படுத்துவதைக் காணலாம்: Român மற்றும் Rumân.[19] 1746 ஆம் ஆண்டில், பண்ணையடிமையை ஒழித்த பிறகு, "rumân" என்ற சொல் மெதுவாக மறைந்து, "român", "românesc" என்ற சொற்கள் நிலைபெற்றன. ஆங்கில மொழியில் "Rumania" அல்லது "Roumania" என்ற பிரெஞ்சு மொழியில் இருக்கும் "Roumanie" என்ற சொல்லின் அடிப்படையில் உலகப்போர் II வரை பயன்படுத்திவந்தனர்,[20] ஆனால் அதற்குப்பிறகு மிகையாக அதிகாரபூர்வமான "ருமேனியா" என்ற [21] எழுத்துக்கோர்வையினை மாற்றி பயன்படுத்துகிறார்கள்.

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய காலம்

பெசுத்தெரா கு ஓசேயில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சம்.[22]

ரேடியோகார்பன் காலம் 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் பெசுத்தெரா கு ஓசே (எலும்புகளுடன் கூடிய குகை) என்ர இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது ஐரோப்பாவில் அறியப்பட்ட மிகப் பழமையான மனித இனம் ஆகும்.[22] கிமு 6 ஆம் மிலேனியத்தில் தெசலியில் இருந்து ஒரு கலப்புக் குழுவின் வருகைக்குப் பிறகு புதிய கற்கால வேளாண்மை பரவியது.[23][24] லுன்காவில் உப்பு நீரூற்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் ஐரோப்பாவில் உப்பு சுரண்டலுக்கான ஆரம்பகால சான்றுகளை அளித்தன; இங்கு உப்பு உற்பத்தி கிமு 5 மற்றும் 4 ஆம் மிலேனியம் காலத்தில் தொடங்கியது.[25] முதலாவது நிரந்தரக் குடியேற்றங்கள் 320 எக்டேர் (800 ஏக்கர்) பரப்பளவை விட அதிகமாக இருந்த "பண்டைய-நகரங்களாக"[26] வளர்ந்தன.[27][28] பழைய ஐரோப்பாவின் சிறந்த அறியப்பட்ட தொல்பொருள் கலாச்சாரமான குக்குத்தெனி-திரைப்பிலியா பண்பாடு கிமு 3வது மிலேனியத்தில் முந்தேனியா, தென்கிழக்கு திரான்சில்வேனியா, வடகிழக்கு மொல்தாவியாவில் செழித்தது.[28] கிமு 1800 முதல் வலுவூட்டப்பட்ட குடியேற்றங்கள் தோன்றின, இது வெண்கலக் கால சமூகங்களின் போர்க்குணத்தைக் காட்டுகிறது.[28]

உலகப் போர்கள்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடு ஐரோப்பாவின் இன வரைபடம் நீல நிறத்தில் முக்கியமாக உருமேனியர்கள் வசிக்கும் பகுதிகளை சித்தரிக்கிறது. அங்கேரியர்கள் மஞ்சள் நிறத்திலும், செருமானியர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளனர்.

உருசிய விரிவாக்கத்திற்கு பயந்து, உருமேனியா 1883-இல் செருமனி, ஆத்திரியா-அங்கேரி, இத்தாலி ஆகியவற்றுடனான முத்தரப்புக் கூட்டணியில் இரகசியமாக இணைந்தது, ஆனால் பொதுக் கருத்து ஆத்திரியா-அங்கேரிக்கு விரோதமாகவே இருந்தது.[29][30] 1913 இல் இரண்டாம் பால்கன் போரில் பல்காரியாவிலிருந்து தெற்கு தோப்ருச்சாவை உருமேனியா கைப்பற்றியது.[31] செருமானிய, ஆத்திரிய-அங்கேரியக் கூட்டு போரின் போது பல்காரியாவை ஆதரித்தது, இது உருமேனியாவிற்கும் பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியத்தின் முத்தரப்புக் கூட்டுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தியது.[31] 1914-இல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது நாடு நடுநிலை வகித்தது, ஆனால் பிரதமர் இயன் பிராத்தியானு பிரான்சு-உருசியா-பிரித்தானியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.[32] 1916 புக்கரெஸ்ட் உடன்படிக்கையில் உருமேனியாவிற்கு பெரும்பான்மையான உருமேனிய மக்கள்தொகை கொண்ட ஆத்திரிய-அங்கேரியப் பிரதேசங்கள் வழங்கப்படும் என உறுதியளித்த பிறகு, உருமேனியா 1916 இல் மைய சக்திகளுக்கு எதிரான போரில் இறங்கியது.[32][33] செருமனி, ஆத்திரிய-அங்கேரியப் படைகள் உருமேனிய இராணுவத்தை தோற்கடித்து, 1917 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் முக்கால்வாசிப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.[34] அக்டோபர் புரட்சி உருசியாவை ஒரு எதிரியாக மாற்றிய பிறகு, உருமேனியா மே 1918 இல் மைய சக்திகளுடன் கடுமையான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,[35] ஆனால் உருசியாவின் சரிவு பெசராபியாவை உருமேனியாவுடன் இணைக்க உதவியது.[36] 1918 நவம்பர் 11 இல் செருமனி சரணடைவதற்கு ஒரு நாள் முன்பு மன்னர் பெர்டினாண்ட் மீண்டும் உருமேனிய இராணுவத்தை பிரான்சு-உருசியா-பிரித்தானியக் கூட்டணி சார்பாக அணிதிரட்டினார்.[35]

போருக்குப் பிறகு ஆத்திரியா-அங்கேரி விரைவாகச் சிதறியது.[35] புக்கோவினா மாகாணத்தின் பொது காங்கிரசு 1918 நவம்பர் 28 அன்று உருமேனியாவுடன் மாகாணத்தின் ஒன்றியத்தை அறிவித்தது, மேலும் திரான்சில்வேனியா, பனாட், கிரிசானா, மரமுரேசு ஆகிய நாடுகள் உருமேனிய இராச்சியத்துடன் 1918 திசம்பர் 1 இணைந்தன.[37][38] ஆத்திரியா, பல்காரியா, அங்கேரியுடனான அமைதி ஒப்பந்தங்கள் 1919, 1920 இல் புதிய எல்லைகளை வரையறுத்தன, ஆனால் சோவியத் ஒன்றியம் பெசராபியாவின் இழப்பை ஒப்புக்கொள்ளவில்லை.[39] போருக்கு முந்தைய 137,000 சதுரகிமீ இலிருந்து 295,000 சதுரகிமீ வரை விரிவடைந்து, உருமேனியா அதன் மிகப்பெரிய பிராந்திய அளவை அடைந்தது.[40] ஒரு புதிய தேர்தல் முறை அனைத்து வயது வந்த ஆண் குடிமக்களுக்கும் வாக்குரிமையை வழங்கியது, அத்துடன் தீவிரமான வேளாண்மைச் சீர்திருத்தங்கள் 1918-1921 காலப்பகுதியில் நாட்டை "சிறு நில உரிமையாளர்களின் தேசமாக" மாற்றியது.[41] பாலின சமத்துவம் ஒரு கொள்கையாக இயற்றப்பட்டது, ஆனால் பெண்கள் வாக்களிக்கவோ அல்லது வேட்பாளர்களாகவோ முடியவில்லை.[42] பெண்ணியக் கருத்துக்களை மேம்படுத்துவதற்காக உருமேனியப் பெண்களுக்கான தேசியப் பேரவை உருவாக்கப்பட்டது.[42] உருமேனியா ஒரு பல்லின நாடாக இருந்தது, சிறுபான்மையினர் மக்கள் தொகையில் சுமார் 30% இருந்தனர், ஆனால் புதிய 1923 அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சி தேசிய அரசாக அறிவித்தது.[40][43][44] சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பள்ளிகளை நிறுவ முடியும் என்றாலும், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை உருமேனிய மொழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டன.[45]

வேளாண்மை பொருளாதாரத்தின் முக்கியத் துறையாக இருந்தது, ஆனால் தொழிற்துறையின் பல கிளைகள்-குறிப்பாக நிலக்கரி, எண்ணெய், உலோகங்கள், செயற்கை இரப்பர், வெடிமருந்துகள், அழகியற் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி போரிடைக் காலத்தில் வளர்ச்சியடைந்தது.[46][47] 1930 இல் 5.8 மில்லியன் தொன் எண்ணெய் உற்பத்தியுடன், உருமேனியா உலகில் ஆறாவது இடத்தைப் பிடித்தது.[48] ஆனால் நாட்டில் ஏற்பட்ட பெரும் மந்தநிலை 1930களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது.[49][50] சனநாயகக் கட்சிகள் பாசிச, யூத-எதிர்ப்புவாதிகளுடனான மோதல்கள், இரண்டாம் கரோல் மன்னரின் சர்வாதிகாரப் போக்குகளுக்கு இடையே நசுக்கப்பட்டன.[51] அரசர் ஒரு புதிய அரசியலமைப்பை வெளியிட்டு, 1938 இல் அரசியல் கட்சிகளைக் கலைத்தார், நாடாளுமன்ற அமைப்பை அரச சர்வாதிகாரத்திற்கு மாற்றினார்.[52][53]

உருமேனிய மன்னர் முதலாம் கரோல், அவரது மருமகன் முதலாம் பெர்டினாண்டுடனும், அவரது உடன்பிறந்தாரின் பேரன் இரண்டாம் கரோலுடனும்.

1938 மூனிச் உடன்படிக்கை, பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் உருமேனிய நலன்களைப் பாதுகாக்க முடியாது என்று மன்னர் இரண்டாம் கரோலை நம்பவைத்தது.[54] ஒரு புதிய போருக்கான செருமானியத் தயாரிப்புகளுக்காக உருமேனிய எண்ணெய் மற்றும் வேளாண்மைப் பொருட்களைத் தொடர்ந்து வழங்க வேண்டியிருந்தது.[54] இரு நாடுகளும் 1939 இல் தங்கள் பொருளாதாரக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, ஆனால் உருமேனியாவின் எல்லைகளுக்கு உத்தரவாதம் அளிக்க இட்லரை மன்னரால் வற்புறுத்த முடியவில்லை.[55] உருமேனியா பெசராபியா மற்றும் வடக்கு புக்கோவினாவை 1940 சூன் 26 அன்று சோவியத் ஒன்றியத்திற்கும், 1940 ஆகத்து 30 அன்று வடக்கு திரான்சில்வேனியாவை அங்கேரிக்கும், செப்டம்பரில் தெற்கு தொப்ருச்சாவை பல்காரியாவிற்கும் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[56] இவ்வாறான இழப்புகளுக்குப் பிறகு, 1940 செப்டம்பர் 6 அன்று மன்னர் தனது வயதிற்கு வராத மகன் முதலாம் மைக்கேலிற்கு ஆதரவாகப் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் உருமேனியா இராணுவத் தலைவர் இயன் அந்தனெசுக்குவின் தலைமையில் ஒரு தேசிய-இராணுவ நாடாக மாற்றப்பட்டது.[57] அந்தனெசுக்கு செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய நாடுகளுடன் ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் 1940 நவம்பர் 23 அன்று கையெழுத்திட்டார்.[58] அந்தெனெசுக்குவிற்கு எதிராக இரும்புக் காவலர் எனப்படும் பாசிசவாதிகள் ஒரு சதியை நடத்தினர், ஆனால் அவர் செருமனியின் உதவியுடன் கலகத்தை நசுக்கி, 1941 இன் ஆரம்பத்தில் இராணுவ சர்வாதிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.[59]

1941 சூனில் சோவியத் மீதான செருமனியப் படையெடுப்பிற்குப் பிறகு உருமேனியா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது.[60] பெசராபியா மற்றும் வடக்கு புக்கோவினாவை மீண்டும் கைப்பற்றியது, அத்துடன் செருமானியர்கள் திரான்சுனிஸ்திரியாவை (தினேசுத்தர், தினேப்பர் ஆறுகளுக்கு இடையே உள்ள பகுதி) உருமேனிய நிர்வாகத்தின் கீழ் வந்தது.[61] உருமேனிய, செருமானியப் படைகள் இந்தப் பிரதேசங்களில் குறைந்தது 160,000 உள்ளூர் யூதர்களைப் படுகொலை செய்தன. 105,000 க்கும் மேற்பட்ட யூதர்களும், 11,000 இற்கும் மேற்பட்ட உரோமானி ஜிப்சிகளும் பெசராபியாவிலிருந்து திரான்சுனிஸ்திரியாவிற்கு நாடுகடத்தப்பட்ட போது இறந்தனர்.[62] மோல்தாவியா, வாலாச்சியா, பனாட் மற்றும் தெற்கு திரான்சில்வேனியாவின் பெரும்பாலான யூத மக்கள் தப்பிப்பிழைத்தனர்.[63] மார்ச் 1944 இல் செருமனி அங்கேரியை ஆக்கிரமித்ததற்குப் பிறகு, சுமார் 132,000 யூதர்கள் - முக்கியமாக அங்கேரிய மொழி பேசுபவர்கள் - அங்கேரிய அதிகாரிகளின் ஆதரவுடன் வடக்கு திரான்சில்வேனியாவிலிருந்து அழிப்பு முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[62][64]

1943 இல் சுடாலின்கிராட் சண்டையில் சோவியத்தின் வெற்றிக்குப் பிறகு, அந்தனெசுக்கிற்கு எதிரான இயூலியு மணியு என்ற எதிர்க்கட்சித் தலைவர், பிரித்தானிய அதிகாரிகளுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார், அவர்கள் உருமேனியா சோவியத் ஒன்றியத்துடன் சமரசம் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தினர்.[65] அந்தனெசுக்குவின் ஆட்சிக்கு எதிரான அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு வசதியாக, தேசிய தாராளவாத மற்றும் தேசிய விவசாயிகள் கட்சிகள், சமூக சனநாயக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடங்கிய தேசிய சனநாயகக் கூட்டணி நிறுவப்பட்டது.[66] வெற்றிகரமான சோவியத் தாக்குதலுக்குப் பிறகு, இளம் மன்னர் முதலாம் மைக்கேல், அந்தனேசுக்குவைக் கைது செய்ய உத்தரவிட்டார், 1944 ஆகத்து 23 அன்று தேசிய சனநாயகக் கூட்டில் இலிருந்து புதிய அரசாங்கத்தை அமைக்க அரசியல்வாதிகளை நியமித்தார்.[67] இதன் பின்னர், கிட்டத்தட்ட 250,000 உருமேனியப் படைகள் அங்கேரி, செருமனிக்கு எதிரான செம்படையின் இராணுவ நடவடிக்கையில் சேர்ந்தனர், ஆனால் ஜோசப் ஸ்டாலின் சோவியத் செல்வாக்கு மண்டலத்திற்குள் நாட்டை ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகக் கருதினார்.[68] மார்ச் 1945 இல் கம்யூனிஸ்டுகளின் வேட்பாளரான பெத்ரூ குரோசாவை பிரதமராக்குமாறு சோவியத் ஒன்றியம் மன்னருக்கு அறிவுறுத்தியது.[69][70] வடக்கு திரான்சில்வேனியாவில் உருமேனிய நிர்வாகம் விரைவில் மீட்டெடுக்கப்பட்டது, குரோசாவின் அரசு விவசாய சீர்திருத்தத்தை மேற்கொண்டது.[70] பிப்ரவரி 1947 இல், பாரிசு அமைதி ஒப்பந்தங்கள் வடக்கு திரான்சில்வேனியா உருமேனியாவுக்குத் திரும்புவதை உறுதி செய்தன, ஆனால் அவை நாட்டில் செம்படையின் பிரிவுகள் இருப்பதையும் சட்டப்பூர்வமாக்கியது.[71][72]

கம்யூனிசம்

உருமேனிய மன்னர் முதலாம் மைக்கேல் 1947 திசம்பரின் பிற்பகுதியில் கம்யூனிசத் தலைவர்களினால் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உருமேனியாவின் சோவியத் ஆக்கிரமிப்பின் போது, கம்யூனிச ஆதிக்க அரசாங்கம் 1946 இல் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தது, அவர்கள் 70% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.[73] இதனால், அவர்கள் மேலாதிக்க அரசியல் சக்தியாக விரைவாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர்.[74] 1933 இல் சிறை வைக்கப்பட்ட கம்யூனிசத் தலைவர் கியோர்கி கியோர்கியூ-தேச் என்பவர், 1944 இல் உமேனியாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவராக ஆனார். பிப்ரவரி 1947 இல், அவரும் அவரது சகாக்களும் மன்னர் முதலாம் மைக்கேலைப் பதவி விலகவும் நாட்டை விட்டு வெளியேறவும் வைத்து, உருமேனியாவை மக்கள் குடியரசாக அறிவித்தனர்.[75][76] ஆனாலும், உருமேனியா 1950களின் பிற்பகுதி வரை சோவியத் ஒன்றியத்தின் நேரடி இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.[77][78][79]

1965 இல், நிக்கலாய் சவுசெசுக்கு பதவிக்கு வந்து, சோவியத் ஒன்றியத்தில் தங்கியிராத நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நடத்தத் தொடங்கினார். சோவியத் தலைமையிலான 1968 செக்கோஸ்லோவாக்கியா படையெடுப்பில் பங்கேற்க மறுத்த ஒரே வார்சா ஒப்பந்த நாடு கம்யூனிச உருமேனியா மட்டுமே. அவர் இந்த நடவடிக்கையை "ஒரு பெரிய தவறு, ஐரோப்பாவில் அமைதி மற்றும் உலகில் கம்யூனிசத்தின் தலைவிதிக்கு ஒரு கடுமையான ஆபத்து" என்று பகிரங்கமாகக் கண்டனம் செய்தார்.[80] 1967 இன் ஆறு நாள் போருக்குப் பிறகு இசுரேலுடன் தூதர்வழித் தொடர்பைப் பேணிய ஒரே கம்யூனிச அரசு இதுவாகும், அதே ஆண்டில் மேற்கு செருமனியுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தியது.[81] அதே வேளையில், அரபு நாடுகள், பலத்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றுடனான நெருங்கிய உறவுகள், இசுரேல்-எகிப்து மற்றும் இசுரேல்-பலத்தீன அமைதிப் பேச்சுக்களில் உருமேனியாவை முக்கிய பங்கு வகிக்க அனுமதித்தது.[82]

கம்யூனிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த இரும்புத் திரையில் நடந்த சில வன்முறைப் புரட்சிகளில் 1989 உருமேனியப் புரட்சியும் ஒன்றாகும்.

உருமேனியாவின் வெளிநாட்டுக் கடன் 1977, 1981-களில் ($3 பில்லியனில் இருந்து $10 பில்லியனாக) கடுமையாக அதிகரித்ததால்,[83] அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி ஆகிய பன்னாட்டு நிதி அமைப்புகளின் செல்வாக்கு படிப்படியாக சௌசெசுக்குவின் தனிவல்லாண்மை ஆட்சியுடன் முரண்பட்டன. அவர் இறுதியில் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் வெளிநாட்டுக் கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் கொள்கையைத் தொடங்கினார். இதன் மூலம் 1989 இல் உருமேனியாவின் அனைத்து வெளிநாட்டு அரசாங்கக் கடனையும் திருப்பிச் செலுத்துவதில் இந்த செயல்முறை வெற்றி பெற்றது. அதே வேளை, சௌசெசுக்கு இரகசியக் காவல்துறைக்கு அதிகாரத்தைப் பெரிதும் விரிவுபடுத்தியமை, கடுமையான ஆளுமை வழிபாட்டைத் திணித்தமை போன்ற சர்வாதிகாரப் போக்கு அவரது செல்வாக்கைப் பெரிதும் குறைத்தது. திசம்பர் 1989 இல் வன்முறையுடன் கூடிய உருமேனியப் புரட்சியில் அவர் தூக்கியெறியப்பட்டார், இப்புரட்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். சௌசெசுக்கு மீதான விசாரணையின் பிறகு, 1989 திசம்பர் 25 அன்று புக்கரெஸ்ட்டுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவத் தளத்தில் படையினரால் சௌசெசுக்குவும் அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.[84][85]

புரட்சிக்குப் பிந்தைய காலம்

1989 புரட்சிக்குப் பிறகு, இயன் இலியெசுக்கு தலைமையிலான தேசிய இரட்சணிய முன்னணி (தே.இ.மு), ஒரு இடைக்கால ஆளும் அமைப்பாக அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், பல-கட்சி சனநாயக அரசியல், சுதந்திர சந்தை நடவடிக்கைகளை எடுத்தது.[86][87] 1990 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும், இலியெசுக்குவின் கட்சிக்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.[88][89][90][91] 1990 முதல் 1996 வரை இயன் இலியெசுக்குவின் தலைமையில் பல கூட்டணிகளும், அரசுகளும் ஆட்சி செய்தன. அதன் பின்னர், அரசாங்கத்தில் பல சனநாயக மாற்றங்கள் ஏற்பட்டன: 1996 இல் எமில் கான்சுத்தன்தீனெசுக்கு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2000 இல் இலியெசுக்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தார், 2004 இலும் பின்னர் 2009 இலும் திரையன் பாசெசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[92]

2009 இல், ஐரோப்பாவில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையின் பின்விளைவாக அனைத்துலக நாணய நிதியத்தால் நாடு பிணை எடுக்கப்பட்டது.[93] நவம்பர் 2014 இல், கிளாசு யோகன்னிசு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[94] 2019 இல், முன்னாள் பிரதமர் வியோரிக்கா தான்சிலாவை எதிர்த்து யோகான்னிசு மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[95]

நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு

பனிப்போர் முடிந்த பிறகு, உருமேனியா மேற்கு ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டது, இறுதியில் 2004 இல் நேட்டோவில் இணைந்து, அதன் 2008 உச்சிமாநாட்டை புக்கரெஸ்ட்டில் நடத்தியது.[96] சூன் 1993 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக விண்ணப்பித்தது. 1995 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்த மாநிலமாகவும், 2004 இல் ஒரு சேரும் நாடாகவும், 2006 சனவரி 1 முதல் முழு உறுப்பினராகவும் ஆனது.[97]

2000களில், உருமேனியா ஐரோப்பாவில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாக இருந்தது, அத்துடன் அது சில சமயங்களில் "கிழக்கு ஐரோப்பாவின் புலி" என்றும் குறிப்பிடப்பட்டது.[98] இருப்பினும், 2000களின் பிற்பகுதியில் ஏற்பட்ட மந்தநிலையின் போது உருமேனியாவின் வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது, இது ஒரு பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கத்திற்கும், 2009 இல் பாதீட்டுப் பற்றாக்குறைக்கும் வழிவகுத்தது.[99] இது உருமேனியா பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க வழிவகுத்தது.[100]

2013 இன் இறுதியில், உருமேனியா அந்த ஆண்டில் "வளர்ந்து வரும்" பொருளாதார வளர்ச்சி4.1% என்றும், ஊதியங்கள் வேகமாக உயர்ந்து, பிரித்தானியாவை விடக் குறைந்த வேலையின்மை என்றும் தி எக்கனாமிஸ்ட் அறிவித்தது.[101] 2016 இல், மனித மேம்பாட்டுச் சுட்டெண் உருமேனியாவை "மிக உயர்ந்த மனித வளர்ச்சி" நாடாகத் தரவரிசைப்படுத்தியது.[102]

1990கள் முழுவதும் பொருளாதார மந்த அனுபவத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலவசப் பயண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதில், அதிக எண்ணிக்கையிலான உருமேனியர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தனர், குறிப்பாக இத்தாலி, செருமனி, எசுப்பானியாவில் பெரிய உருமேனிய சமூகங்கள் உள்ளன. 2016 இல், உருமேனிய புலம்பெயர்ந்தோர் 3.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் ஐந்தாவது-அதிக புலம்பெயர்ந்த மக்கள்தொகை ஆகும்.[103]

காலநிலை

திறந்த கடலில் இருந்து அதன் தூரம் மற்றும் ஐரோப்பியக் கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அதன் நிலை காரணமாக உருமேனியா மிதமான காலநிலையையும், நான்கு வெவ்வேறு பருவங்களையும் கொண்டுள்ளது. சராசரி ஆண்டு வெப்பநிலை தெற்கில் 11°செ (52°ப), வடக்கில் 8°செ (46°ப) ஆகும்.[104] கோடையில், புக்கரெஸ்டில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 28°C (82°F) ஆக உயர்கிறது. 35°C (95°F) க்கும் அதிகமான வெப்பநிலைகள் நாட்டின் தாழ்வான பகுதிகளில் மிகவும் பொதுவானது.[105] குளிர்காலத்தில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 2°C (36°F) இற்கும் குறைவாக இருக்கும்.[105] மழைப்பொழிவு சராசரியாக உள்ளது, ஆண்டுக்கு 750மிமீ (30 அங்குலம்) மிக உயர்ந்த மேற்கு மலைப்பகுதிகளில் மட்டுமே உள்ளது.[106]

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உருமேனியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அரசு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உருமேனியா&oldid=3706078" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை