மரபணு மாற்று உணவு

மரபணு மாற்று உணவு (Genetically modified foods, அல்லது GM foods), சில நேரங்களில் மரபணுவிலிருந்து உருவாக்கிய உணவுகள் (genetically engineered foods) என்பன மரபணுப் பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரினங்களின் டி. என். ஏ.வில் மாற்றங்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளைக் குறிக்கும். மரபணுப் பொறியியல் நுட்பங்கள் மூலமாக புதிய பண்புக்கூறுகளை அறிமுகப்படுத்தவும் ஏற்கெனவே உள்ள பண்புக் கூறுகளை கட்டுப்படுத்துவதில் மேம்பட்ட கட்டுப்பாட்டை கையாளவும் இயலும்; வழமையான தெரிவு இனப்பெருக்கம், சடுதிமாற்றத் தேர்வு இனப்பெருக்கம் போன்ற நுட்பங்களை விட இம்முறையில் பண்புக்கூறுகளை மேம்பட்ட விதத்தில் கட்டுப்படுத்த முடியும்.[1]

வணிகத்திற்கான மரபணு மாற்று உணவு 1994இல் மொன்சன்ரொ நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது; நாள்பட்டு பழுக்கும் தக்காளியை (பிளவர் சவர்) அது விற்பனைக்கு விட்டது.[2] பெரும்பாலான மரபணு மாற்றங்கள் பணப்பயிர்களிலேயே செய்யப்பட்டன; விவசாயிகளிடம் பெரிதும் தேவையாயிருந்த சோயாபீன்சு, சோளம், காட்டுக்கடுகு (கனோலா), பருத்திவிதை எண்ணெய் போன்றவை துவக்கத்தில் மரபணு மாற்றப்பட்டன. நோய்தாக்கு உயிரிகளையும் களைக்கொல்லிகளையும் எதிர்க்கக்கூடிய வகையிலும் மேம்பட்ட ஊட்டச்சத்து தரும் வகையிலும் மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்பட்டன. மரபணு மாற்றப்பட்ட கால்நடைகளும் உருவாக்கப்பட்டன; ஆனால் இவை நவம்பர் 2013 நிலவரப்படி சந்தைக்கு வரவில்லை.[3]

பாக்டீரியாக்கள் பாலாடைக்கட்டியை உருவாக்குவதை விரைவுபடுத்த ஆய்வுகள் நடத்தப்பெறுகின்றன. குறைந்த கலோரிகள் கொண்ட பியர் உருவாக்க மரபணு மாற்றப்பட்ட மதுவம் பயன்படுத்தக்கூடும்.[4]

வழமையான உணவை விட மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் மனிதர் நலனுக்கு தீவாய்ப்புகள் நிகழாது என அறிவியல் உலகில் கருத்து நிலவுகின்றது.[5][6][7][8][9][10] இருப்பினும், இவ்வகை உணவுகளின் பாதுகாப்பு, கட்டுப்பாடு,அடையாளப்படுத்துதல், சூழலியல் தாக்கம், ஆய்வியல் நெறிமுறைகள் குறித்தும் மரபணு மாற்று உணவுகளின் அறிவுசார் சொத்துரிமை உருவாக்கும் நிறுவனங்களுக்கே உள்ளதையும் குறித்தும் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.[11]

கட்டுப்பாடு

மரபணு மாற்று உயிரினங்களின் உருவாக்கம் மற்றும் வெளியிடலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. இந்தியாவில் இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் (BRAI) ஒன்றை நிறுவிட இந்திய அரசு ஒரு வரைவு மசோதாவை 2013இல் மக்களவையில் அறிமுகப்படுத்தியது; இந்த சட்ட வரைவு மரபு மாற்றப் பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளதாக எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.[12]

ஐக்கிய அமெரிக்காவில் உயிரித் தொழில்நுட்ப கட்டுப்பாட்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு இந்தக் கொள்கையை மேற்கொள்கிறது.[13] இக்கொள்கையில் மூன்று முதன்மை முன்மொழிவுகளை கொண்டுள்ளன:

  1. அமெரிக்க கொள்கை மரபணு மாற்றத் தொழினுட்பத்தின் மூலமான பொருளை மட்டுமே குவியப்படுத்தும்; செய்முறை மீதல்ல
  2. சரிபார்க்கத்தக்க அறிவியல்ரீதியான தீவாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்,
  3. மரபணு மாற்று உணவுகள் வழமையான உணவைப் போன்றே ஏற்கெனவே உள்ள சட்டங்களின்படி கட்டுப்படுத்தக்கூடும்.[14]

ஐரோப்பிய ஒன்றியம் வேறுபட்ட கட்டுப்பாட்டு நெறியை கொண்டுள்ளது; உலகின் மிகவும் கண்டிப்பான விதிமுறைகளாக இவை கருதப்படுகின்றன.[15] அனைத்து மரபணு மாற்று உயிரினங்களும், கதிர்வீச்சுக்குட்பட்ட உணவுகளும் "புதிய உணவாக" கருதப்படுகின்றன; ஒவ்வொரு உணவும் ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தினால் (EFSA) விரிவான அறிவியல் சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நான்கு பகுப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன: "பாதுகாப்பானது," "தனிநபர் விருப்பத்தேர்வுக்குரியது," "அடையாளப்படுத்துதல்," மற்றும் "மூலவழி கண்டுபிடிக்கக்கூடியது".[16]

அடையாளப்படுத்துதல்

மரபணு மாற்றுணவுகளில் ஒரு முக்கியமான கவலை அவற்றை அடையாளப்பட்டுத்துவது குறித்ததாகும். தென் ஆபிரிக்காவில் தன்னார்வலராக அடையாளப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் மரபணு மாற்றில்லாதது என அடையாளப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் 31%இல் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கூறு 1.0%க்கு மேலாக இருந்தது.[17]

கனடாவிலும் அமெரிக்காவிலும் மரபணு மாற்றுணவை அடையாளப்படுத்துவது கட்டாயமில்லை.[18] ஐரோப்பாவில் அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்று உயிரினம் 0.9%க்கு மேற்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களும் (பதப்படுத்தப்பட்ட உணவு உட்பட) மற்றும் மாட்டுத் தீவனங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.[15]

ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, ஆத்திரேலியா நாடுகளில் பொதுமக்கள், மரபணு மாற்று உணவா, சாதாரண உணவா அல்லது இயற்கை வேளாண் உணவா என அறிய இயலும் வகையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.[19]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மரபணு_மாற்று_உணவு&oldid=3566557" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை